Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |ஏப்ரல் 2018|
Share:
பிரிட்டனில் இருந்த ரஷ்யாவின் இரட்டை உளவாளியான செர்கை ஸ்க்ரிபலும் அவரது மகள் யூலியாவும் நரம்பு வாயு கொண்டு (Nerve Gas) தாக்கப்பட்டது உலக அளவில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக பிரிட்டன் 23 ரஷ்யர்களையும், NATO அமைப்பு 7 ரஷ்யர்களையும், அமெரிக்கா 60 ரஷ்யர்களையும் வெளியேற்றியுள்ளது. மொத்தத்தில் 27 நாடுகள் 140 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளன. இவர்கள் யாவரும் தூதரக அலுவலர் என்ற போர்வையில் உளவாளிகளாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் கண்டிராத எதிர்வினைச் சுனாமி என்பதில் ஐயமில்லை.

இந்த ரசாயனத் தாக்குதலில் தனக்குப் பங்கில்லை என்று ரஷ்யா கூறியுள்ள போதும், இந்த மறுப்பு ஒரு சடங்குதான் என்று எண்ண வேண்டியுள்ளது. ஏனென்றால், பிரிட்டன் பதிலடியை அறிவித்த உடனேயே, 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல ஒரு சிறப்பு விமானத்தை அனுப்பியது ரஷ்யா.

இப்படிப்பட்ட நரம்பு வாயுத் தாக்குதல் வேறெந்த வகை வன்முறைத் தாக்குதலுக்கும் எவ்விதத்திலும் குறைவானதல்ல. இதனைக் கண்டிக்கும் விதமாக இத்தனை நாடுகள் வலுவாக எதிர்வினை ஆற்றுவதும் ரஷ்யாவுக்கு ஒரு பாடத்தைப் போதிக்கும் என்று நம்புவோமாக.

*****


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 'C40 Cities' அமைப்புடன் ஒரு ஒப்பந்தந்தைக் கையெழுத்திட்டுள்ளார். இந்தியாவிலேயே சென்னைதான் இதனைச் செய்யும் முதல் நகரம் என்கிற பெருமையைப் பெறுகிறது. இதன்மூலம் கேஸ்/டீசல் பேருந்துகளை விடக் குறைந்த விலையில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளை வாங்கமுடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கான 'Bus Declaration Act' ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள உலகின் 25 நகரங்களில் பெய்ஜிங், லண்டன், கோபன்ஹேகன் ஆகியவையும் அடங்கும். பசுமையில்ல வாயுக்களைக் (Greenhouse gases) கட்டுக்குள் கொண்டுவர முயலும் உலகின் 90 மிகப்பெரிய மாநகரங்களின் ஒன்றியமான 'Climate Leadership Group' இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கிறது. சென்னை நகரம் இதில் சேரும் முதல் இந்திய நகரம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

*****
அறுபது ஆண்டுகளாகக் குழந்தை இலக்கியப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வானொலி, தொலைக்காட்சி, அச்சிதழ்கள் என எல்லா ஊடகங்கள் வழியேயும், வளரும் தலைமுறைக்கு நல்லவற்றைக் கற்பனை வளத்தோடு கொண்டுசெல்லும் சுறுசுறுப்பான 78 வயது இளைஞர் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் அவர்களின் நேர்காணல் இந்த இதழின் சிகரம். வாள்வீச்சு வீரர் பவானிதேவி, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, கோமல் சுவாமிநாதன், ருக்மணி லட்சுமிபதி எனப் பல்வேறு அற்புத மனிதர்களைப் பற்றிய தகவல்களையும் இவ்விதழ் தாங்கி வருகிறது. ஹார்வர்டு தமிழிருக்கை நிறுவத் தேவையான 6 மில்லியன் டாலர் இலக்கை எட்டிவிட்ட நற்செய்தி மற்றும் விவரங்களை உள்ளே காணலாம். இவற்றோடு, சிறுகதைகள், கவிதைகள் என்று இன்னுமொரு தமிழ்ப் பொக்கிஷம் உங்கள் கையில்.

வாசகர்களுக்கு அன்பான தமிழ்ப் புத்தாண்டு, ஈஸ்டர் தின, புத்த பூர்ணிமை வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஏப்ரல் 2018
Share: 




© Copyright 2020 Tamilonline