Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | சமயம்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சபதங்களின் வரிசை
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2018||(1 Comment)
Share:
துரியோதனன் திரெளபதிக்குத் தன் ஆடையை விலக்கி இடதுதொடையைக் காட்டி அதில் வந்து அமருமாறு சொன்னதற்குச் சற்று முன்னால்தான் அவளைப் பந்தயத்தில் வென்றது 'கனவிலே ஒன்றை வென்றுவிட்டு அது தனக்கே உரியது என்று நனவிலும் கருதவற்குச் சமம்' என்று விதுரர் நயம்படச் சொல்லியிருந்தார். "சூதாடுகிறவன் தன்னைத் தோற்பதற்கு முன்னே இவளைப் பந்தயம் வைத்திருப்பானாயின் இவளுக்கு அதிகாரியாக இருந்திருப்பான். சுதந்திரமில்லாதவன் எதை வைத்தாடுகிறானோ அதை ஜயித்தது கனவில் ஜயித்த தனம்போலத்தான் ஆகுமென்று நினைக்கிறேன். கௌரவர்களே! சகுனி சொல்லைக் கேட்டு இந்தத் தர்மத்தைவிட்டு விலகிப் போகாதீர்கள்" என்றார் விதுரர். (ஸபா பர்வம், த்யூத பர்வம் அத்: 92; பக்: 300) கர்ணனால் எப்போதும்போல சும்மா இருக்க முடியவில்லை. குறுக்கிட்டான். 'தர்மபுத்திரன் இவளை வைத்துச் சூதாட அதிகாரமற்றவன் என்று பீமனோ அர்ச்சுனனோ சொன்னால் திரெளபதியை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துவிடலாம்' என்றான். அப்போது அர்ச்சுனன் எழுந்து "குந்தி புத்திரரும் மகாத்மாவுமான தர்மராஜர் முதலில் எங்களைப் பந்தயம் வைத்தபோது அதிகாரமுள்ளவராய் இருந்தார். அவர் தம்மைத் தோற்ற பிறகு யாருக்கு அதிகாரி என்பதைக் கௌரவர்கள் அனைவரும் அறியுங்கள்" என்று விடையளித்தான். இப்படி மாறிமாறிப் பேச்சுகள் எழுந்துகொண்டே இருக்கையில் கர்ணன் மீண்டும் குறுக்கிட்டு, "துச்சாஸனா! நான் சொல்வதைத் தெரிந்துகொள். வெகுநேரம் இவனோடு என்ன பேச்சு? வீரனே! நீ திரெளபதியை அழைத்துப் போ. துரியோதனா! நீ அவளைத் தாஸியாக வைத்து உன் இஷ்டப்படி அனுபவி என்று சொன்னான்". (மேற்படி, பக்: 300) இதை சகுனி மெச்சினான்.

இப்படி ஆடையைக் களைந்தும் வார்த்தைகளை இறைத்தும் திரெளபதியை மாறிமாறி அவமதித்துக் கொண்டிருக்கையில்தான் துரியோதனன் தன் ஆடையை விலக்கி அவளுக்குத் தன் இடதுதொடையை மீண்டும் மீண்டும் காட்டியவண்ணமாக இருந்தான். பீமனால் இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இரண்டு அத்தியாயங்களுக்கு முன்னர் துச்சாதனனுடைய மார்பைப் பிளந்து ரத்தத்தைக் குடிப்பேன் என்று சபதம் செய்திருந்தான். இப்போது மீண்டும் ஒரு சபதத்தைச் செய்தான். "நான் துரியோதனனைக் கொல்வேன். தனஞ்சயன் கர்ணனைக் கொல்வான். சூதில் தேர்ந்தவனாகிய சகுனியைச் சகதேவன் கொல்வான். இந்தச் சபை நடுவில் மறுபடியும் இந்தப் பெரிய சொல்லைச் சொல்வேன். நமக்கு யுத்தம் நேரும்போது தேவர்கள் இதைச் சத்தியமாகச் செய்வார்கள். இந்தப் பாபியான துரியோதனனை யுத்தத்தில் கதையினால் கொல்வேன். தரையில் விழுந்த இவன் தலையைக் காலால் மிதிப்பேன். சூரனும் கொடியவனும் துராத்மாவுமான துச்சாஸனனுடைய மார்பைப் பிளந்து சிங்கம்போல ரத்தத்தைக் குடிப்பேன்' என்று சொன்னான்" (மேற்படி, பக்: 301-302). பீமன் செய்த சபதத்திலேயே அர்ச்சுனன், சகதேவன் ஆகியோருடைய சபதங்களும் அடங்கிவிடுகின்றன. அதாவது அவர்களின் சார்பாக பீமனே அந்தச் சபதங்களைச் செய்துவிடுகிறான். இதற்குப் பிறகு நகுலன், சகுனியின் மகனான உலூகனை யுத்தத்தில் கொல்லப்போவதாகச் சபதம் செய்கிறான்.

இந்தத் தருணத்தில்தான் வட இந்தியப் பதிப்புகளில் இல்லாத—தென்னிந்தியப் பதிப்பில் இருக்கிற—பாஞ்சாலி சபதம் இடம்பெறுகிறது. "பாபிஷ்டா! நீ தொடையை எனக்குக் காண்பித்து நீயும் பார்த்துக்கொண்டதனால் உனக்கு மரணம் தொடையிலேயே வரப்போகிறது. துராத்மாவான உன் சகோதரன் என்னை இப்படிப் பீடிப்பதனால் இவனது ரத்தத்தை விருகோதரர் குடிக்கவே போகிறார். மிகக் கெடுநினைவுள்ள இந்தக் கர்ணனைப் பிள்ளைகள் பந்துக்கள் மந்திரிகள் சேனைகள் முதலியவர்களோடு தனஞ்சயர் கொல்லப் போகிறார். அற்பத்தனம் உள்ளவனும் மோசக்காரனும் பாபத்தில் மனமுள்ளவனுமாகிய சகுனியையும் அவன் சுற்றத்தாரையும் சகதேவர் கோபித்து யுத்தத்தில் கொல்லப் போகிறார் என்று சொன்னாள்" (மேற்படி, பக்: 303)

ஆகவே, 'தொடையைப் பிளந்து உயிர் மாய்ப்பேன்' என்று பீமன் சபதம் செய்தது துரியோதனுடைய செய்கையால்; அடுத்ததாக பாஞ்சாலி அந்தச் சபதத்தை மீண்டும் எடுத்துச்சொல்லி துரியோதனுடைய மரணம் தொடையால்தான் நேரும் என்று சொன்னதால் என்று இரண்டாகப் பிரிந்தாலும், இப்படித் தொடையைப் பிளப்பதற்கு இன்னொரு காரணமும் உத்தியோக பர்வத்தில் நிகழ்கிறது. யுத்தம் வேண்டாம் என்று நல்லுரை சொல்வதற்காக வந்திருந்த கண்வ மகரிஷி பேசிக் கொண்டிருக்கையில் துரியோதனன் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துத் தன் தொடையில் பலமாக அறைந்துகொண்டபடி, 'இறைவன் என்னை எப்படிப் படைத்தானோ அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். உம்முடைய பிதற்றலால் என்ன பயன்' என்று கேட்க, கண்வருக்குக் கோபம் ஏற்படுகிறது. "பிறகு கண்வர் சினமுற்று அறிவிலியான துரியோதனனை நோக்கி, 'நீ தொடையில் அடித்துக் கொண்டபடியால் (உனக்குத்) தொடையில் மரணம் ஏற்படும்' என்று சொன்னார்". (உத்தியோக பர்வம், பகவத்யாந பர்வம் அத்: 105, பக். 370)
வட இந்தியப் பதிப்புகளில் பாஞ்சாலி சபதம் இடம் பெறாவிட்டாலும் தென்னிந்தியப் பதிப்பில் இடம் பெற்றிருக்கிறது என்பதைப் பார்த்தோம். இதில்கூட, பாரதியின் படைப்பில் இடம்பெறுவதைப் போல 'துரியோதனன், துச்சாதனன் இருவருடைய ரத்தத்தையும் கலந்து பூசிக்கொண்ட பிறகுதான் கூந்தலை முடிப்பேன்' என்பது இடம்பெறவில்லை. இது வேணி ஸம்ஹாரத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று என்பதைச் சென்றமுறை சொல்லியிருந்தோம். இப்போது அந்த வேணி ஸம்ஹாரத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்ப்போம். ஆறு அங்கங்களை (Acts) கொண்ட இந்த வடமொழி நாடகத்தை இயற்றியவர் பட்டநாராயணர். இதை 'கண்ட காவ்யம்' அல்லது காவியத் துணுக்கு என்பார்கள். இதன் ஆறாவது அங்கத்தில் பீமன் துரியோதனனைக் கொன்றுவிட்டு அரண்மனைக்குள் நுழைகிறான். தன்னை எதிர்கொள்ளும் தர்மபுத்திரரிடம் உரையாடுகிறான். இனி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பார்ப்போம்:

Bhima: Revered brother, a good deal is yet to be done. In the first place I will tie up the tresses of Draupadi pulled by Dussasana, with my hand bathed in Duryodhana's blood.

Yudhishthira: Quickly you should go then. Let the poor woman enjoy the pleasure of having her braid tied up.

Bhima: (Approaching Draupadi) Queen, daughter of the Panchala king, good forture smiles upon you Now that race of your enemies is destroyed. Away, away with feeling disgust at this my sight. Touch this coagulated blood, my dear, on my hands, the residue of what I drank of that Dussasana, the human brute by whom you were dragged into the assembly of kings and this blood also of the king of the Kurus, having his thighs crushed by my mace, which is fresh and is sticking to each and every part of my body that the burning fire of insult offered to you should be extinguished.

துரியோதனனுடைய தொடையைப் பிளந்த கையோடு திரும்புகிற பீமன், மாளிகையில் திரெளபதியிடம் சென்று 'என் கையிலும் உடலிலும் துரியோதனுடைய ரத்தம் உறைநிலையில் இருக்கிறது. நேற்று (17ம் நாள் போரில்) குடித்த துச்சாதனனுடைய ரத்தமும் என் கையில் உறைந்த நிலையில் இருக்கிறது. அருகில் வா. உன் கூந்தலில் இந்த ரத்தக் கலவையைத் தடவி விரிந்துகிடக்கும் அந்தக் கூந்தலை முடிக்கிறேன்' என்று சொல்லி அவள் தலையில் இந்த ரத்தக்கலவையைத் தடவிக் கூந்தலை முடிக்கிறான். பாரதியின் பாஞ்சாலி செய்யும் சபதம் இந்தப் பகுதியை அப்படியே ஒட்டி நடக்கிறது. இந்தப் பகுதி பாரதியின் ஆழமான கல்விக்குச் சான்றாக நிற்கிறது.

வழிநூலாசிரியன் தன் கற்பனையால் மூலநூலில் சொல்லப்பட்டிருக்கும் செய்திக்கு மெருகேற்றலாம், வீரியத்தைக் கூட்டலாம், மேலும் உணர்ச்சியைத் தொடும்படியாகப் படைக்கலாம். வில்லியும் பாரதியும் இந்த வகையில்தால் மூலநூலிலிருந்து வேறுபட்டிருக்கிறார்கள். இருந்தாலும் சம்பவக் கோவையைப் பார்க்கும்போது மூலநூலில் சொல்லப்பட்டிருப்பதே முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் அது முழுநூல்; பாரதியுடையது காவியத் துணுக்கு; வில்லியுடையது பல சம்பவங்களை விட்டுவிட்டு ஏதோ ஓரளவுக்குச் சொல்லப்பட்டுள்ள நூல். பாரதத்தைவிடவும் சிறியதான ராமாயணத்தைச் சொல்வதற்கே கம்பனுக்குப் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் தேவைப்பட்டன என்னும்போது, சுமார் 4000 பாடல்களால் அமைக்கப்பட்டுள்ள வில்லி பாரதத்தில் சம்பவங்கள் சுருங்காமல் என்ன செய்யும்!

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு இவற்றின் உக்கிரத்தைத் தாங்க முடியாதவனான திருதிராட்டிரன் பாஞ்சாலிக்கு வரம் கொடுக்கிறான். வரங்களைப் பெறும்போதும் பாஞ்சாலியின் மிடுக்கும் கம்பீரமும் 'திமிர்ந்த ஞானச் செருக்கும்' ஆச்சரியப்படுத்துகின்றன. அவற்றைப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline