Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | சமயம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
வாழப்பிறந்தவர்கள்
- சூர்யகாந்தன்|ஜனவரி 2018|
Share:
வடகோயமுத்தூர் ரயில்வே ஸ்டேசனுக்குக் கிழக்குப்புறமாய் ஒதுங்கியிருந்த பூவரச மரத்தடியில்தான் அவர்களின் குடியிருப்பு.

பனி பெய்து கொண்டிருந்தது.

"காத்தாலையே அவனெ எடுத்து வெச்சுக் கொஞ்சீட்டிருந்தா பொழப்புத்தனத்தெ எப்பொக் கவுனிக்கிறது? ஆறு மணிக்கு வர்ற 'புளூமண்டு' ரயிலுக்கூட தெக்கே போயாச்சு. சுடியா எந்துரிச்சு சாமானுகளெ எடுத்து வெய். போ."

சரசா சொன்னதைக் கேட்டுவிட்டு, "அவங்கூடக் கொஞ்சுறதுக்கு எனக்கு இப்ப வுட்டா வேறெ நேரமேது? ச்செரி. ச்செரி போடா ராசா! உங்க அம்மா கூப்புடுறா போ". இப்படிச் சொல்லியபடி குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான் ரங்கசாமி.

ரோட்டோரப் புழுதியும் ஒர்க்‌ஷாப் புகையும் படிந்து அழுக்கேறிப் போன தோல்பையைப் பிரித்து, அதற்குள்ளிருந்த சாமான்களை வெளியே எடுத்தான்.

"வெள்ளாளன் வவுத்துலெ பொறந்து, தெசை மாறி இப்ப இந்தச் செருப்புத் தெய்க்கிற தொழிலுக்கு வந்தாச்சு! ச்செரி அதுக்கென்ன? இதுக்கு மிந்திக் கொஞ்ச நாளு பிச்சை எடுத்துட்டுத் திரிஞ்சனே! அதுக்கு இதென்ன மோசமாவா போச்சு.?"

அந்தப் பழைய நாட்கள் இவன் நெஞ்சுக்குள் நினைவு அலைகளாய்ப் புரண்டன.

கோயமுத்தூர் பெரியாஸ்பத்திரிக்கு முன்னாலேயும், டவுன்ஹால் பக்கத்திலேயும், ரயில்வே ஸ்டேஷன் கேட் ஓரங்களிலேயும், காந்திபுரம் பஸ் ஸ்டாப்பிங்களிலேயும் அப்போது ரங்கசாமி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

இரண்டு கால்களும் முழங்கால் முட்டுக்குக் கீழே மெலிந்து குச்சிபோல் சூம்பிப்போய் உபயோகமில்லாத பிண்டமாய்ப் போனதால் சக்கர வண்டியில் உட்கார்ந்து, காண்போரையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு யாசகத்தில் வயிற்றைக் கழுவி...

...ச்சீ! ஒவ்வொருத்தங்கிட்டேயும் கெஞ்சி அழுது கூக்குரல் போட்டு இந்த ஒரு சாண் வயித்துக்காக ஈனப்பொழப்பு பொழச்சிட்டிருந்தமே, எத்தனெ அசிங்கம்!

இதிலிருந்து எப்படி மீண்டோம் என்பதையும் இவனது நெஞ்சே ஞாபகப்படுத்தியது. தனக்கு இந்தச் செருப்புத் தைக்கிற தொழிலை அக்கறையோடு சொல்லிக் கொடுத்த சரசாவை நன்றி வழிய ஈரத்தோடு நினைத்துக் கொண்டான்.

கலெக்டர் ஆபீஸ் காம்பவுண்டின் வெளிப்புறப் பிளாட்பாரத்தில் செருப்புத் தைத்துக்கொண்டிருந்தவர்களிடம் பீடி வாங்குவதற்காக இவன் அணுகுவதுண்டு. அங்கிருந்த எல்லோரோடும் பழக்கமும் பண்ணிக் கொண்டிருந்தான்.

லாரி நசுக்கி, தன் கணவனைக் கொன்றுவிட்டதால் கைக்குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு செருப்புத் தைக்கிற வேலையில் ஈடுபட்டிருந்தாள் சரசா!

அப்படித்தான் அவளைச் சந்தித்தான் ரங்கசாமி. இளவயதோடு, பச்சை மண்ணான அந்தப் பிஞ்சையும் வைத்துக்கொண்டு அவள் சிரமப்படுவதைக் கண்டு, மனமிரங்கி, கூடயிருந்து உதவவும் செய்தான் இவன்! அந்தப் பரிவுணர்ச்சியில் இருந்த சுத்தத்தைப் பார்த்துவிட்டு அவளாகவே கேட்டாள்.

"பிச்சை எடுத்துட்டிருக்கிற தொழிலை வுட்டுத் தொலைச்சுட்டு வேறெ எதுனாலும் தொழிலுக்குப் போயி கஞ்சி குடிக்கலாம் இல்லே."

சில நிமிட மெளனத்திற்குப் பின், அவளே தொடர்ந்தாள்.

"ச்செரி காலுகதா சூப்பையா ஒண்ணுக்கும் ஒதவாமப் போயிடுச்சு. கைகளாச்சும் நல்லா இருக்குதேன்னு மனசெத் தேத்தியிட்டு எங்க தொழிலுக்கே வந்துரு. நா வேணும்னா உனக்குக் கத்துக் குடுக்கறேன்."

"எனக்கும் பிச்சையெடுத்துக் காலந் தள்ளுறதை விட சாகறது மேலுன்னு கூடத் தோணுது பசி தாளாமத்தான் இதுலெ போயி வுழுந்து கெடக்குறேன். இப்ப நீ குடுக்குற தைரியத்தில்தா எனக்கு மறுக்கவும் நம்பிக்கையே வருது"

"நாஞ்சொல்லிக் குடுக்குறேன். நீ வந்துரு."

அவளின் அழைப்புக்குச் சம்மதித்தான். மறுநாளே வந்தும் விட்டான்.

இருட்டுக் கட்டும்வரை, கூட இருந்து செய்து பழகிவிட்டு ராத்திரிப் படுக்கைக்கு மேம்பாலத்துப் பக்கமோ. சென்ட்ரல் பஸ் ஸ்டேண்ட் பக்கமோ போய்விடுவான்.

காலையிலும், மத்தியானமும் வருகிற வருமானத்தில் பாதியை இவனுக்குக் கொடுத்து சாப்பிட வைத்தாள் அவள்! எப்படியோ அன்றைய பசிக்குச் சோறு கிடைக்க வழி பண்ணினாள்.

நாட்கள் நகரவும், குழந்தையும் வளர்ந்தது! ரங்கசாமியும் உடனிருந்து அந்தத் தொழிலை இன்னும் கஷ்டப்பட்டுச் செய்து சம்பாத்தியத்தை அதிகம் பண்ண வேண்டுமென்று அவளுக்கு மெத்தவும் ஆசைதான்! என்ன செய்வது? நேரம்தான் போதவில்லை.

வருகிற காசையெல்லாம் சரசாவிடமே கொடுத்து விடுகிறான். வெளியே, வார்த்தைகளில் தெரிவித்துக்கொள்ள முடியாதபடி இவன்மீது அவளுக்குப் பிரியம் உருவாகி விட்டிருந்தது.

கடைக்குப் போய் இட்லியும், டீயும் வாங்கிக் கொண்டு வந்து பொட்டலத்தைப் பிரித்து வைத்துச் சாப்பிடச் சொன்னாள் சரசா.

"இந்தா. நீயும் தின்னு."

"நா அங்கெயே தின்னுட்டுத்தா உனக்கும் வாங்கியாந்தே. மிச்சம் வெய்க்காமெ பூராத்தையும் தின்னுடு"

டீயைக் குடித்துக்கொண்டே பூவரச மரத்தை, அண்ணாந்து பார்த்த இவனைப் பார்த்து அவள் கேட்டாள்.

"இன்னிக்கு ராத்திரிக்கு சினிமாவுக்குப் போகுலாமா.?"

"என்ன அதும்பேர்ல அப்பிடி ஆசை."

"இல்லே! படம் பார்த்து வெகு நாளாகிப் போச்சு! அதுதாங் கேட்டேன்! போகலாம்னாப் போகுலாம். நீ வேண்டாம்னினா வேண்டாம். என்ன சொல்றே.?"

"ச்செரி, போனாத்தாம் போவுது."

அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. எங்கே சம்மதிக்க மாட்டானோ என்றல்லவா எண்ணினாள்! இவன் ஒத்துக்கொண்டது ரெட்டிப்புத் தித்திப்பாக இருந்தது.

சினிமா முடிந்து இருப்பிடம் திரும்பினார்கள்.

"இனிமே அங்கெயிங்கெயின்னு ராத்திரித் தங்கலுக்கு எடந்தேடி நீ அலையாதே. எங்கூடவே தங்கிக்க. எனக்கும் ஒரு பாதுகாப்பா இருக்குமேன்னுதா சொல்றேன்."

"ச்செரி. உன்ர இஷ்டம்."

பூவரச மரத்தையடுத்து ஒட்டியிருந்த கம்பி வேலியில் சேர்ந்தாற்போல் கோணிப்பைகளையும், பழைய காகிதங்களையும் கூரையாகப் போட்டுச் சின்ன இருப்பிடமொன்றை தனக்காக ஏற்படுத்தி, அதில்தான் அவள் தங்கி வந்தாள். அதற்கும் பறம்புப் பாயில் ஒரு தடுப்பு வைத்துக் கதவுபோல் ஓரளவுக்குப் பாதுகாப்பும் செய்திருந்தாள்.

அதைத் திறந்துகொண்டு உள்ளே போய்க் குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தாள். தனது தோல்பையையே தலையணையாக வைத்து வெளியில் படுத்திருந்தான் ரங்கசாமி. ஆகாயத்தைப் பார்த்தபடி இருந்த இவனைக் கேட்டாள்.

"இன்னமு தூக்கம் வருலையா.?"

"ம்ஹூம். இப்படி தூக்க நேரத்தைத் தாண்டி வந்துச்சுனா, அப்பறம் தூக்கம் வர எனக்குத் தாமுசப்படும்."

"அப்பிடியா.?"

"ஆமா! நீ போய்த் தூங்கு."

போர்வையை இழுத்துத் தலை வரையிலும் மூடிக்கொண்டு புரண்டு படுத்தான்.

உள்ளே போனவள், அரை மணி நேரங் கழித்து மீண்டும் வெளியே வந்து இவனை எழுப்பினாள்.

"ஒரே பனியா இருக்குது. ஒடம்புக்கு என்னாச்சும் ஆயிடும். நீயும் உள்ளாறவே வந்து படுத்துக்க வா."

அவளின் வார்த்தைகளைத் தட்ட இவனால் இயலவில்லை.

"பிச்சையெடுத்துக் கொண்டிருந்த தன்னை மாற்றி இந்த அளவுக்கு அனுசரணை கொடுத்து வயிறாறச் சாப்பிட வழி பண்ணியது எல்லாம் இவள்தானே! முடமாய்ப் போன தன்மேல் இவள் காட்டும் அன்பும் பிரியமும் சாமானியமானதா?"

இவள் சொல்வதை மறுக்கவோ இவள் கேட்பதைத் தராமல் இருக்கவோ தன்னால் இனி எப்பவும் முடியாதே. இவள் சொல்படி நடந்து கொள்வதுதான் தான் காட்டும் நன்றியாயிருக்கும் என்கிற எண்ணமெல்லாம் அந்தச் சில வினாடிகளில் ரங்கசாமிக்கு வந்து போயின.

தங்களைப் போலவே செருப்புத் தைக்கிற மற்றக் குடியிருப்புக்களெல்லாம் சிறிது தூரத்தில் திட்டுத் திட்டாகத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தன. மேலே நட்சத்திரக் கங்குகள் மட்டும் அந்நேரத்திற்கு விழித்திருந்தன. இவன் எழுந்து, தலையைக் குனிந்து உள்ளே போனான். அந்த ராத்திரியில் இவனது உடற்சூட்டில் அவள் தஞ்சம் புகுந்ததை இரண்டு மனசுகளுமே மறுதலிக்க முடியாமல் போனது.

"இனிமே என்னெ நீ பேரு சொல்லியே கூப்புடு" சரசா சொன்னாள்.

"அப்படியா?" என்றான்.
இரவு முடிந்துவிட்டிருந்தது! காலையில் புதிய உற்சாகத்தோடு தன் பணியில் ஈடுபட்டிருந்த ரங்கசாமியிடம் வந்து "வடவள்ளில இருக்குற எங்க சின்னாத்தா வூட்டுக்குப் போயிட்டு வர்றே! வேலையை முடிச்சுட்டு மறக்காமெ இங்கியே படுத்துக்க", சொல்லிவிட்டு, குழந்தையை எடுத்துக்கொண்டு அவள் போய்விட்டாள்.

அன்றைக்குச் சாயங்காலமாய் வந்தான் ஒருவன். அந்த வரிசையில் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தவர்களிடம் வந்து சொந்தக்காரனைப் போல் உறவுமுறை வைத்துப் பேசிக் கொண்டிருந்தான்.

கடைசியாய் ரங்கசாமியிடம் வந்தான். என்னவோ கேட்டான். அது இவன் காதில் விழவில்லை.

"யேய்.! உன்னெத்தானெ கேக்கறே? எவன்டா நீ.? இந்த ஏரியாவுக்கே புது ஆளாத் தெரியிற இந்த எடம் என்ர அண்ணன் பொண்டாட்டி செருப்புத் தெக்கிற எடண்டா! நீ யார்டா இங்கெ வந்து உக்காந்திட்டிருக்கறே.?"

இதற்கும் ரங்கசாமி பதில் சொல்லவில்லை. அறுந்த செருப்பைத் தைத்து ஆணி அடித்துக் கொண்டிருந்தான். ரோட்டோர முனையில் உட்கார்ந்திருந்த ஒருவன், வந்த அந்த ஆளைக் கூப்பிட்டு என்னவோ சொல்லி அனுப்பி வைத்தான்.

"ஒ.ஹோ.! அப்பிடியா நடக்குது! அதுதானெ பார்த்தே.! உப்பவே போயி அவனெ ஒதச்சு ஒழுங்கா இருக்குற அந்த ரெண்டு கைகளையும் முறிச்சுப் போடுறேன்."

எக்குத் தப்பாய்ப் பேசிக்கொண்டு வந்தான்.

"ஏண்டா மொடவாண்டிப் பயலே! உன்ர மொகறைக்கு வெப்பாட்டி கேக்குதாடா?"

அவனின் அந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு ரங்கசாமி ஆவேசமாய்ச் சுத்தியலோடு நிமிர்ந்து பார்த்தான்.

"என்ரா மொறப்பாப் பாக்குறே! எட்டியொதச்சன்னா ஏழு குட்டியாக்கரணம் போட்டுட்டு டிச்சுலெ வுழுந்திருவே....! மருவாதியா எந்துரிச்சு ஒடிப்போயிடு..."

ரங்கசாமியால் தாள முடியவில்லை

"ய்யோவ் உனிமே வாய் தொறந்தே! அப்பறம் நாசும்மா இருக்க மாட்டேன். நீ யாரு என்னெ இந்த எடத்தை வுட்டுப் போகச் சொல்றதுக்கு?. என்னமோ கெரயம் பண்ணி கையில் புரோநோட்டோட வந்தவனாட்டம் எகத்தாளம் பேசறயே. நா இங்கெதா இருப்பே நீ வேணும்னா பண்றதைப் பண்ணிக்க"

எதையும் புரிந்து கொள்கிற நிதானத்தில் அவன் வரவில்லை. முக்கால் போதை தலைக்கேறியிருந்தது! திமிரோடு ஓடிவந்து ரங்கசாமியின் முதுகில் ரெண்டு மூணு உதை விட்டான்.

குப்புறச் சாய்ந்த இவன், தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுவதற்குள், செருப்புத் தைத்துக் கொண்டிருந்த சுப்பமாதாரி ஒடி வந்து அவனைத் திட்டி இழுத்துக்கொண்டு போனான்.

"உட்டுரு! அந்த மொண்டியெக் கண்டதுண்டமா வெட்டி எறிஞ்சர்றே."

"வேண்டாண்டா, பாவம் ரெண்டு காலுகளும் வெலங்காதவன். அவங்கிட்டப் போயி உங் கைவரிசையெக் காட்டாதே.! நல்லதில்லெ."

அதைத் தொடர்ந்து காதில் கேட்க முடியாத வசவுகளை எல்லாம் வீசிக்கொண்டு அவன் போவதை ரங்கசாமியும் பார்த்துக் கொண்டுதானிருந்தான்.

சிறிதுநேரங் கழித்துச் சுப்பமாதாரி இவனிடம் வந்து "அப்போவ் ரங்கசாமி, இன்னமு ரெண்டு மூணு நாளைக்கு நீ எங்கியாச்சும் போயிடு. அந்தப் போக்கிரி நாயி லொள்ளு எச்சாகி வந்திருக்கிறான்! உன்னெ அடிச்சு என்னாச்சும் பண்ணிட்டுத்தா போவம்னு வெறி புடுச்சு நிக்கிறான். இங்கெ இருந்து நீ இப்பவே போயிட்டீனாத்தான் உனக்கு நல்லது" என்றான்.

அதன்பின், அங்கேயிருக்க ரங்கசாமிக்கு மனசு இடங் கொடுக்கவில்லை.

திமிரோடு தன்னை அடிக்க வந்தவனை எதிர்த்து நாலு சாத்து சாத்தத் தனக்கு வக்கில்லாமல் உடல் நிலைமை இப்படிப் போய்விட்டதே எனத் தன்மீதேதான் வருத்தம் கொண்டான். நெஞ்சு பொரும சக்கர வண்டியில் உட்கார்ந்து நகர்ந்து அந்த இடத்தைவிட்டே போய்விட்டான்.

பொழுது விழுகிற நேரத்திற்கு சரசா வந்து சேர்ந்தாள். அக்கம் பக்கத்தார் மூலமாய் நடந்து முடிந்த சங்கதிகளைக் கேள்விப்பட்ட அவள் மனசு வெகுவாகப் பதற்றமுற்றது. கதறியழுதது.

"எங்கெ போயி எப்பிடித் தடுமாறுதோ" என்று சஞ்சலத்தோடு பரக்கப் பரக்கத் திரிந்தாள்.

"சொந்த பந்தமுங்கறது உப்ப வந்த சூடு சொரணையில்லாத குடிகார நாய்களுக்கு அப்பொ எங்கெ போச்சு? அண்ணன் ஊடு அது இதுன்னு இங்கெ இருக்குறதை எல்லாம் சுருட்டிட்டு ஒடுன திருட்டு மொகறைக இங்கெ மறுக்காவும் எதுக்காமா வருதுக.? நானில்லாமப் போயிட்டனே. செருப்புத் தெக்கிற ஊசியாலயே அவங்கண்ணுக ரெண்டையும் தோண்டி இந்த மரத்துல காக்காய்க்கு விருந்து வெச்சிருப்பனே."

சத்தம் போட்டவளுக்கு மனசு ஆறுதல் கொள்ளவில்லை. சுற்றியிருந்த பீழைகாஞ்ச ஜென்மங்களில் ஏதேனும் ஒண்ணுதா பொச்சிருப்பும், பொறாமையும் எச்சாகி இப்படி ஆளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பண்ணியிருக்கிறது எனவும் புரிந்துகொண்டு அதுகளுக்கு ஒறைக்கட்டும் என்றேதான் அப்படித் திட்டினாள்.

இருட்டாகி விட்டது. தனது உடைமைகளைச் சிறுமூட்டையாகக் கட்டித் தோளில் போட்டுக்கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றாள். மனசில் இறுக்கம், நெகிழ்வு ஆகிய இரண்டுமே மாறி மாறி ஓடின. ராத்திரி ஏழரை மணிக்கு வடக்கெ போற 'புளூமண்ட் ரயிலு' வேகமாகச் சத்தமிட்டுக் கொண்டு போவதைப் பார்த்தாள்.

"எங்கே போயி அலையுதோ என்னமோ இன்னிக்குப் பாத்து வடவள்ளிக்குப் போயித் தொலஞ்சேன் பாரு, அது என்ர தப்பு."

அவள் நடந்தாள். உடலின் நரம்புகளிலெல்லாம் அவசரம். தண்டவாளத்தைத் தாண்டி ரோட்டுக்கு வந்தாள். காந்தி பார்க் வழியே போனதாக யாரோ சொல்ல அங்கே தேடிப்போனாள். ஆனால் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.

டவுன்ஹால் பக்கம், பெரிய ஆஸ்பத்திரிப் பக்கம், சிந்தாமணி மார்க்கெட் ஒரம் இப்படியாக அலைந்து, கடைசியாகக் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வடக்குப்புறமாய் சுவரை ஒட்டி கூதல்காற்றுக்கு துண்டைப் போர்த்துக் கொண்டு, ஒரு சின்னத் துணிமூட்டையைப் போல் ரங்கசாமி படுத்துக் கிடப்பதைப் பார்த்துவிட்டாள்.

மனசுக்கு மீண்டும் உயிர்வர, ஒடிச்சென்று தாவியெடுத்து தூக்கி உட்கார வைத்தாள்.

"யாரு வந்திருக்கிறேன்னு பாரு சரசாதான் வந்திருக்கிறேன்."

கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு, அவளைக் கலக்கத்தோடு பார்த்தான்.

"...எங்கெயெல்லாம் சுத்தியலஞ்சுட்டு வர்றேந் தெரியுமா? செத்தாலும் நாம் ஒண்ணாவே சாவோம்! அந்த நீசப்படவா உன்னெக் கை வெச்சப்போ நானில்லாமப் போயிட்டனே..."

குமைந்து, குமுறி இவன் கைகளைப் பற்றித் தனது கண்களில் ஒற்றிக்கொண்டு அழுகையை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பிப் பொருமினாள்.

"ஆமாஞ் சரசு அவனென்னெ அடிச்சுத்தான் போட்டான். நா ஆம்பளையா இருந்துங்கூட எந்துரிச்சு அவனெ அடிக்க முடியிலே! என்ர பாழாப்போன காலுக இப்படியாகிப் போனதால என்னோட கோபத்தையெல்லாம் மனசுக்குள்ளேயே அடக்கிட்டு ஊமையாட்ட உக்காந்துட்டேன்" சொல்லியவாறு இவனும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் குமுறினான்.

"செரி போனதுகெல்லாந் தொலையுது. இனிமே நாம அந்த எடத்துக்கே போக வேண்டாம். இங்கெ எங்கெயாச்சு நமக்கொரு எடம் ஒண்டிக்கிறதுக்கு அகப்படாமலா போயிடும்.?"

"...வேண்டாஞ்சரசு, என்னாலெ உனக்கெதுக்கு இத்தனெ கஷ்டங்க. நா எம்பாட்டுக்கு எங்கியோ தொலஞ்சர்றேன். வுட்டுரு."

"இங்கெ பாரு. இதுக்கொசரந்தா இத்தான அவதியும் பெருமூச்சுமா உன்னெத் தேடீட்டு ஒடியாந்தனா..? உன்னெ வுட்டுட்டு நாங்கஞ்சி குடிச்சேன்னா அது என்ர தொண்டைக்குள்ளெதா எறங்குமா..?"

ரங்கசாமிக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளோ அவனை விடவில்லை.

"உனக்குப் பசிச்சா வேறயா? எனக்குப் பசிச்சா வேறயா? உனக்கு வுழுந்த அடி, எனக்கு வுழுந்த அடியேதான்! இனிமே உன்னெ வுட்டுட்டு ஒரு அடிகூட நகரமாட்டேன்."

சரசாவின் மன அழுத்தம், இவன் உடலைப் புல்லரிக்க வைத்தது.

"இந்தக் கொழந்தெகிட்டெ எத்தனெ வாட்டி உன்னை 'மாமா' ன்னு கூப்புடு கண்ணுன்னு சொல்லிக் குடுத்திருப்பேன். ஆனா இது உன்னெ அப்பிடிக் கூப்புட்டுருக்குமா..? 'அப்பா அப்பா'ன்னுதானெ கையெ நீட்டி எடுத்துக்கச் சொல்லுது. இதையுமா மறந்துடுவே, உனக்கு எம்பேர்ல பாசம் இருக்குதா. இல்லியா, சொல்லு."

"இருக்குது சரசு. இருக்குது."

சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகராமலே இருந்த இவனிடம் உருக்கமாகச் சொன்னாள்.

"சரி, போவுலாமா..?"

"நீ போ சரசு... நா இன்னோரு நாளைக்கு வர்றேன்."

"அந்தச் சாக்குப் போக்கெல்லாம் எனக்கு வேண்டா. முடிவாச் சொல்லு. நீ வர்லீனா ரயில்லெ தலையெக் குடுத்து நானும் இந்தக் கொழந்தையும் வெடியறதுக்குள்ளெ உசுரெ வுட்டுருவோம்.! அப்பறம் நீ வந்து எங்களெப் பாத்து பிரயோசனமில்லே."

"அய்யோ அப்பிடி என்னாச்சும் பண்ணிடாதே! இப்பப் பட்டுச் சீரழியிறமே. இது பத்தாதா? கடசி முட்டுலும் தனிக்கட்டையாவே உருண்டுட்டுப் போயிடலாம்னு முடிவு பண்ணிட்டிருந்தவனெ நீ வந்து எடுத்து உக்கார வெச்சு கண்ணீரெத் தொடச்சே! இனிமே உங்கண்ணுல கண்ணீரெ நா பார்க்கக் கூடாதம்மா, சரசு."

அவளுடைய கைகளைப் பற்றிய ரங்கசாமி, குழந்தையை வாங்கி வாஞ்சையோடு முத்தமிட்டான்.

நம்பிக்கை சிதையாத அவர்களின் கண்களில் அந்த ராத்திரியிலும் பிரகாசம் மின்னியது.

சூர்யகாந்தன்
Share: 




© Copyright 2020 Tamilonline