Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | சமயம்
Tamil Unicode / English Search
சிறுகதை
தங்கத்தின் தேன்கூடு
- என். துளசி அண்ணாமலை|ஜனவரி 2018|
Share:
"தாத்தா!" என்று கூவிக்கொண்டே பாலர்பள்ளி வாசலில் இருந்து வெளிப்பட்ட பேரப்பிள்ளையை ஆவலுடன் கையில் ஏந்தி அணைத்துக் கொண்டார் திருமூர்த்தி. ஐந்து வயதே நிரம்பிய பேரன் கார்த்திகேயன், இன்னும் மழலை மாறாமல் "தாத்தா, இன்னிக்கு ஐயை என்ன சொன்னாங்க, தெரியுமா?" என வினவினான்.

அவனை முத்தமிட்டார் திருமூர்த்தி. "என்ன சொன்னாங்க என் செல்லக்குட்டியை?" என்றவர், அவனுடைய தோளில் இருந்த புத்தகப்பையை வாங்கிக்கொண்டு, காரை நோக்கி நடந்தார். பேரனுக்குத் தாத்தாவின் அணைப்பில் தோளளவு உயர்ந்து, நரைமுடியை உராய்சியவாறு நடப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் அவருடைய கன்னத்தில் துளிர்க்கும் வியர்வை, பொடிவைரங்களாக மின்னுவதைப் பார்க்கப் பிடிக்கும். அந்தப் பொடிகளைத் தொட்டு உடைத்து, கன்னத்தில் கோலம்போடப் பிடிக்கும். அந்த வியர்வையின் வாசம் பிடிக்கும். கரடு முரடாக இல்லாமல் மென்மையாக இருக்கும் அவருடைய சருமம் மிகவும் பிடிக்கும்.

பேரனை வெள்ளை அவான்ஸாவின் முன்னிருக்கையில் அமர்த்தி, பாதுகாப்புப் பட்டையைப் பொருத்தினார். பின்னர், புத்தகப்பையைப் பின் இருக்கையில் வைத்துவிட்டு, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துகொண்டு, பாதுகாப்புப் பட்டையை அணிந்து கொண்டார். மறக்காமல் 'குழந்தைகள் பூட்டையும்' அழுத்திவிட்டு பேரனைப் பார்த்துச் சிரித்தார்.

"போலாமா?" என வினவ, பேரனும், 'சரி' என்பதுபோல, நான்கு விரல்களை மடக்கி, கட்டை விரலை உயர்த்திக் காட்டிச் சிரித்தான். காரை இயக்கி, வேகத்தைக் கூட்டினார்.

"இப்ப சொல்லு, ஐயை என்ன சொன்னாங்க?"

"நானு ரொம்ப நல்ல பிள்ளைன்னு சொன்னாங்க!" பேரன் பெருமையாகச் சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அவனுடைய கேசத்தை அன்புடன் தடவிக் கொடுத்தார் திருமூர்த்தி. பேரனின் சிரிப்பும் பேச்சும் அவருடைய மன இறுக்கத்தைத் தளர்த்தியது. மனம் லேசானது. பேரனின் பாலர்பள்ளியின் அருகிலேயே இருந்த ஆரம்பத் தமிழ்ப்பள்ளி வாசலில் காரைத் தேக்கினார். காரைவிட்டு இறங்கி, கதவுகளைத் திறந்து வைத்த பத்தாவது நிமிடத்தில், மூத்தமகன் குணாளனின் இரு பிள்ளைகளும், இரண்டாமவன் சுந்தரத்தின் பெண்ணும் பிள்ளையும் மூன்றாவது மகன் பரதனின் பெண்ணும் ஓடிவந்தனர். அனைவரையும் காருக்குள் பத்திரமாக அமரச் செய்தபின்னர், காரைச் செலுத்தினார் திருமூர்த்தி.

"தாத்தா, எல்லார் வீட்டுலயும் முறுக்கு, பிஸ்கட்டு செஞ்சிட்டாங்களாம். நம்ம வீட்டுல மட்டும் ஒண்ணுமே செய்யலையே, ஏன் தாத்தா?"

பேரப்பிள்ளைகளின் கேள்விக்கு உடனே பதில் சொல்லமுடியாமல் யோசித்தார். பின்னர், "அதனால் என்ன? இன்னைக்குப் பாட்டியிடம் சொல்லி, முறுக்கு சுட ஆரம்பிச்சிடலாமே?" என்றார். உடனே "ஹாய்ய்யா!" என்ற கூச்சல் எழுந்தது.

வீட்டை நெருங்கும்போது மூத்தமகனின் மகளும் இரண்டாவது மகனின் மகளும் பள்ளிப் பேருந்தில் வந்து இறங்கினர். அவர்கள் இடைநிலைப்பள்ளியில் பயில்பவர்கள். அவர்களும் தாத்தாவைப் பார்த்து மகிழ்ச்சியுடன் சிரித்தனர். "என்னம்மா, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம்?" வினவியவாறே, கார்த்திகேயனைக் கீழே இறக்கிவிட்டார்.

"தாத்தா, நாளையிலிருந்து பள்ளிக்கூடம் விடுமுறை. அதனால் இன்றைக்கு சீக்கிரமே அனுப்பிட்டாங்க." சொல்லிவிட்டு அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் செல்ல, திருமூர்த்தி மட்டும் வாசலிலேயே சற்றுத் தயங்கி நின்றார். காலையில்கூட மனைவி தங்கம் அவரிடம் சரிவரப் பேசவில்லை என்பது மனதை நெருட, வீட்டுக்குள் வந்தார். கூடத்தில் யாரையும் காணவில்லை. உணவுக்கூடத்தில் கூச்சலாக இருந்தது. உடையை மாற்றி, கைலியும் பனியனும் அணிந்து கொண்டு வந்தார். கையில் நாளிதழை எடுத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தார்.

அவரை உணவு உண்ண அழைக்க வந்த தங்கம், பட்டென்று நாளிதழைப் பறித்து அருகிலிருந்த மேசையின் மீது வைத்தாள். முகத்தில் கடுமை தெரிந்தது. "உங்களுக்குப் பசிக்கலையா? வந்து சாப்பிடுங்கள்!" என்று கட்டளையிட்டுவிட்டு நகர்ந்தாள். அவள் சுபாவம் அறிந்ததுதானே? மௌனமாக அவளைப் பின் தொடர்ந்தார். உணவுக்கூடத்தில் பிள்ளைகள் சலசலத்துக் கொண்டிருந்தனர். பெரிய பெண்பிள்ளைகள் அனைவருக்கும் தட்டு வைத்து உணவு பரிமாறினர். திருமூர்த்தியும் மெல்ல உண்ணத் தொடங்கினார்.

ஆனாலும் பேரப்பிள்ளைகள் விடுவதாக இல்லை. மெதுவாக அவரிடம் "தாத்தா, முறுக்கு, பிஸ்கட் செய்ய பாட்டிகிட்ட சொல்லுங்க" என்று கிசுகிசுத்தனர். திருமூர்த்தி பதில் சொல்லுமுன்பே, "இந்த வருசம் எப்படி முறுக்கு சுடுவாங்கன்னு நானும் பார்க்கிறேன். பேசாம சாப்பிடுங்க!" என்று அதட்டினாள் தங்கம். பாட்டியின் குணாதிசயம் பேரப்பிள்ளைகளுக்கு அத்துப்படி. அவர்கள் பாட்டியின் கோபத்தை லட்சியம் செய்யாமல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தனர்.

"செய்யலாம்பா…கொஞ்சம் பொறுமையா இருங்க!" திருமூர்த்தி அவர்களை சமாதானம் செய்தார்.

இதுவரையில் கட்டுக்கோப்பாக இருந்த குடும்ப உறவுகளில் இப்போது ஏன் விரிசல்? ஒரு வேளை உணவையாவது அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்ணவேண்டும் என்ற கொள்கையை திருமூர்த்தி சிறுவயது முதலே கடைப்பிடித்து வருகின்றார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகத்தான் அந்தக் கொள்கை ஆட்டங்கண்டு விட்டது.

தங்கத்தின் தள்ளாமை, எந்த உணவையும் பாரம்பரிய முறையில் தயாரிக்க வேண்டும் என்ற அவருடைய பிடிவாதத்தை உடைத்தெறிந்து விட்டது. அவளைக் குறை சொல்ல முடியாது. ஆரோக்கியமாக இருந்தவரையிலும், அவர் விரும்பிய உணவு வகைகளை எல்லாம் தட்டாமல் சமைத்துத் தந்தாள். ஆனால் குடல்புண் அறுவை சிகிச்சை செய்தபின்னர், அவளால் முன்போல் ஓடியாடி வீட்டுப்பணிகளைச் செய்ய முடியவில்லை. அதனால் அவளைக் கடிந்து கொள்ளாமல், கூடுமானவரையிலும் அவளுக்கு ஆதரவாகவே இருந்து வந்தார் திருமூர்த்தி. ஆயினும் இந்த நாக்குக்கு அது புரியாமல், சில சமயங்களில் போராட்டத்தில் இறங்கிவிடுகிறதே, என்ன செய்ய?

அவள் உள்ளத்தில் விளைந்துள்ள கோபத்தை அறியாத திருமூர்த்தி 'தக்க நேரத்தில், தக்க முடிவெடுத்து, இந்தப் பிரச்னையைக் களையவேண்டும்.' என்று எண்ணிக்கொண்டார்.

திருமூர்த்தி இளவயதிலேயே ஏழு ஏக்கர் திட்டத்தில் நிலத்தை வாங்கி, அதில் தென்னை, வாழை, பப்பாளி மரங்களை ஐந்து ஏக்கரிலும், கத்தரி, மிளகாய், பயற்றங்காய், தக்காளி, கீரை முதலான காய்கறிகளை மீதமுள்ள இரண்டு ஏக்கரிலும் பயிர் செய்திருந்தார். ஆரம்பத்தில் அவருடைய உழைப்புக்கு தங்கமும் அவருடைய சகோதரியும் மட்டுமே உறுதுணையாக இருந்தனர். பிள்ளைகள் வளர்ந்து கைகொடுக்கும் வரை, அவர் கடுமையாகத்தான் உழைக்க வேண்டி இருந்தது. ஆனால், அந்த உழைப்பு வீண் போகவில்லை.

அருகிலேயே இரண்டு ஏக்கர் தரிசுநிலம் மிகக் குறைந்த விலைக்கு வந்தது. அதையும் தவணை முறையில் வாங்கி, இந்த வீட்டைக் கட்டினார். ராகினியையும் ரேவதியையும் தவிர மற்ற அனைவருக்குமே இங்குதான் திருமணமானது. காலையில் பேரப்பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு திருமூர்த்தி அவர்களோடு காய்கறித் தோட்டத்தில் வேலை செய்வார். அவருக்கு வயதாகிவிட்டது என்று பிள்ளைகள் தடுத்தாலும், அவர் சுறுசுறுப்பாகத்தான் இருந்தார்.

இரண்டு நாட்கள் கழிந்து ஒரு பௌர்ணமி இரவு. வீட்டுக்கு வெளியே இருந்த தோட்டத்தில் பெரிய பாய்கள் போடப்பட்டிருந்தன. பேரப்பிள்ளைகள் தமது தாய்மார்களுக்கு உதவியாக, பாயின் நடுவில் உணவுப் பதார்த்தங்கள் அடங்கிய பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்தனர். தட்டுகளும், குடிநீர் கொண்ட நெகிழி பாட்டில்களும், தம்ளர்களும் வரிசையாக வைக்கப்பட்டன.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அந்த இல்லத்தில் தவறாது நடைபெறும் இனிய நிகழ்ச்சி 'நிலாச்சோறு'! ஆரம்பத்தில் மருமகள்களுக்கு என்னவோ போலிருந்தாலும், பின்னர் அவர்களும் அந்த நாளை வெகுவாக எதிர்பார்த்து, அதற்காகவே ஒன்றிரண்டு பதார்த்தங்களைக் கூடுதலாகச் சமைப்பார்கள்.

எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது - இளையமகன் பாரதி, கீதாவைத் திருமணம் செய்துகொண்டு வரும்வரை! அதற்குப் பிறகுதான் இந்த முறைப்பு, கோபம் எல்லாமே. பொறாமையா? அல்லது அவள் தங்களைப்போல் அல்லாமல் தொழிற்சாலையில் சொகுசாக வேலை செய்கின்றாள் என்ற தாழ்வு மனப்பான்மையா?

திருமூர்த்தியைச் சுற்றிப் பேரப்பிள்ளைகள் அமர்ந்து கொண்டனர். வழக்கமாக, தங்கமும் அவரோடுதான் அமர்வாள். இன்று ஏனோ தயங்கி, தவித்து, ஒதுங்கி நிற்கிறாள்.
மூத்தமருமகள் ராதா, பெரியவர்கள் அனைவருக்கும் வட்டமான பெரிய தட்டை வைத்து, கதம்பசாம்பார் சாதத்தைப் பரிமாற, இரண்டாவது மருமகள் காயத்ரி, புடலங்காய் கூட்டும் அப்பளமும் பரிமாறினாள். மூன்றாவது மருமகள் சியாமளா நெல்லிக்காய், மாங்காய், இஞ்சி ஊறுகாய்கள், இனிப்புத் தக்காளிப் பழக்கூழ், வாழைப்பூ உசிலி எல்லாம் பரிமாறினாள். பெண்பேரக்குழந்தைகள் கார உருளைக்கிழங்கு சீவல் பொரியல்களைப் பரிமாறினர். சிறுவர்களின் கைகளில் அவை நொறுங்கிக் கலகலத்தன.

திருமூர்த்தி, தன் மகள்கள் ராகினியையும் ரேவதியையும் பார்த்தார். அவருடைய பார்வையின் பொருளை உணர்ந்தவள் போல, "அப்பா, நாங்கள் அம்மாவுடன் அமர்ந்து கொள்கிறோம்" என்றாள் ரேவதி.

திருமூர்த்திக்கு அந்த பதில் அதிருப்தியை உண்டு பண்ணினாலும், அதை வெளிக்காட்டாமல் தன்னுடைய மூன்று பிள்ளைகளைப் பார்த்தார். அவர்களும் தங்களுடைய தகப்பனின் பார்வையின் பொருள் உணர்ந்தவர்களாக, "அப்பா, நாங்கள் இப்படியே அமர்ந்து கொள்கிறோம்." என்று காலியாக இருந்த பாயைக் காட்டினார்கள். அவர்களுடைய பதிலைப் பெரிதும் ரசித்தவராக, பேரப்பிள்ளைகளைப் பார்த்து, "கண்ணுங்களா! நாம் உண்ண ஆரம்பிக்கலாமா?" என வினவினார்.

"ஓஓஓஓ…." என்று பெரிதாக அவர்கள் சத்தமிட்டனர்.

"எல்லோரும் கைகளை நெஞ்சுக்கு நேராகக் குவித்து, இந்த இனிய உணவைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். எங்கே, பாடுங்கள்!"

திருமூர்த்தியின் அன்புக் கட்டளைக்கு இணங்க, பிள்ளைகள் அனைவரும் விழிகளை மூடி,கைகளைக் குவித்து, "அன்னம் பாலிக்கும்…" என்னும் திருமுறையைப் பாடினர். பெரியவர்களும் சேர்ந்துகொண்டனர்.

பாடல் முடிந்தது. "நல்லது… இப்போது உண்ணலாம்!"

திருமூர்த்தியின் முன்னால் இருந்த தட்டில் சாம்பார் சாதம் சற்று அதிகமாக இருந்தது. அவர் சாதத்துடன் உசிலியையும் கூட்டையும் சேர்த்துப் பிசைந்து முதலில் கடைசிப்பேரன் கார்த்திகேயனுக்கு ஊட்டிவிட்டார். பின்னர் தன்முன்னால் நீண்ட ஒவ்வொரு பேரப்பிளையின் உள்ளங்கையிலும் சாதத்தை உருட்டி வைக்க அவர்களும் ரசித்து உண்டனர்.

தங்கத்துக்குக்கூட மன இறுக்கம் சற்றுத் தளர்ந்தது. நல்ல நிலவொளியில் மனங்கள் லேசாகிவிடும் என்பார்களே, அது மிகவும் சரியே!

தங்கம் தன் தட்டை எடுத்துக்கொண்டு எழுந்து வந்தாள். முதலில் தனது மூன்று பிள்ளைகளுக்கும் தன் கையால் ஊட்டிவிட்டாள். பேரப்பிள்ளைகள் அவள் மனதை நோகடிக்காமல் சிறிதளவு உணவை வாங்கிக்கொண்டனர்.

அந்த வேளையில், தன் செல்லப்பிள்ளையான கடைக்குட்டி பாரதி அங்கில்லையே என இதயம் ஏங்கியது. திருமணம் முடித்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு கீதாவின் தந்தைக்கு உடல் நலமில்லை என்று வந்த சேதியைத் தொடர்ந்து, பாரதியும் கீதாவும் அங்கே போய்விட்டார்கள். சம்பந்தியின் நிலை அபாயத்தைக் கடந்துவிட்டாலும், "ஓரிரண்டு நாட்கள் அருகில் இருந்து பார்த்துவிட்டு வாருங்கள்!" என்று திருமூர்த்தி கூறியிருந்தார். அது தங்கத்துக்கு முற்றாகப் பிடிக்கவில்லை. அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மகனையும் மருமகளையும் 'போகவேண்டாம்' என்று தடுக்கமுடியுமா?

மருமகள்களைப் பார்த்தார். அவர்கள் தமது கணவன்மாரோடு மகிழ்வாக உணவருந்திக் கொண்டிருந்தனர். இதில் தனித்து நின்றது இரண்டு மகள்கள் மட்டுமே! இதை இப்படியே விட்டுவிட முடியாது. முதலில் மருமகள்களை அழைப்போமே!

"அம்மா ராதா! இன்றைக்கு யாருடைய சமையல்? வெகு சுவையாக இருக்கிறது. காய்கறிகளைக் கொஞ்சம் அதிகமாகச் சேர்த்திருக்கலாம்!" என்றார்.

"அத்தைதான் சமைச்சாங்க மாமா. எல்லாம் நம்ம தோட்டத்துக் காய்கறிகள்தாம். கத்தரிக்காய், வெள்ளரி, கேரட், உருளைக்கிழங்கு, அவரைக்காய் என்று ஐந்து வகையான காய்களையும் உருளைக்கிழங்கையும் சேர்த்திருக்கிறோம்" என்றாள் ராதா கலகலப்பான குரலில்.

"மாமா, என்னுடைய சமையல் வாழைப்பூ, கடலைப்பருப்பு உசிலி. சியாமளா இனிப்பு தக்காளி பழக்கூழ் செய்தாள். மத்ததெல்லாம் அத்தைதான் செஞ்சாங்க!" என்றாள் காயத்ரி.

"ஏம்மா, உங்க அத்தையை ஏன் தொந்தரவு செய்தீர்கள்? அவளே உடம்புக்கு முடியாதவளாச்சே!" திருமூர்த்தியின் விழிகள் பரிதாபத்துடன் மனைவியை நோக்கின. அதற்கு மருமகள்களிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, தங்கம் குரல் கொடுத்தாள். "எனக்கு உடம்பு நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் நாலுவீட்டுக் கல்யாண விருந்துக்கு சமைப்பேனாக்கும்!"

அவளுடைய பதிலால் திருமூர்த்தி சமாதானமடைந்தார். மனம் ஒரு முடிவுக்கு வந்தது. இதுவே நல்ல தருணம்.

"தங்கம்! இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார். ராகினி, ரேவதி! இப்படி நெருங்கி வாங்க!" என்று அவர்களை அருகில் அமரவைத்துக் கொண்டார். தங்கத்துக்கு ஒருவாய் சாதம் ஊட்டிவிட, பேரப்பிள்ளகள் "ஹோ…" என்று சிரித்தனர். தங்கம் நாணத்துடன் சிரித்தாள்.

"தீபாவளி நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், நீ இன்னும் பலகாரம் செய்யவோ, துணிமணி வாங்கவோ, வீட்டைச் சுத்தம் செய்யவோ எந்த முயற்சியும் எடுக்கவே இல்லையே. நீதானே எல்லாவற்றையும் முடிவு செய்வாய்? ஏன் எதையும் காணாமல் இருக்கின்றாய்?"

தங்கம் பதில் சொல்லும் முன்பே, "புது மருமகளை தீபாவளிக்குத் தாய்வீட்டு விருந்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதற்குப் பலகாரம், பட்சணம் எதுவும் செய்தமாதிரி தெரியவில்லை. துணிமணி எடுக்கவில்லை. தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரந்தானே இருக்கிறது? என்னதான் முடிவு செய்திருக்கின்றீர்கள் மாமியாரும் மருமகள்களும்?" என்றார் மேலும்.

தங்கம் இந்தக் கேள்வியை எதிர்பார்த்தே இருந்தாள். சற்றே நிதானித்தாள். சில நாட்களாகவே சொல்லமுடியாத சலிப்பு. 'எதற்காக இந்தப் பாடுபடவேண்டும்? நான் மட்டுந்தான் வீட்டுவேலைகளைச் செய்யவேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த அக்கறை இல்லையா? பெற்ற பெண்களும் சரி, மருமகள்களும் சரி, யாராலும் எனக்கு உதவி இல்லை! சே! என்ன வாழ்க்கை இது? மூன்று மருமக்களையும் குறையேதும் சொல்லமுடியாது. குடும்பத்துக்குச் சொந்தமான காய்கறித் தோட்டத்தில்தான் பிள்ளைகளும் மருமக்களும் வேலை செய்கின்றார்கள். அவர்களோடு இன்னும் ஐந்து வேலையாட்கள் வேலை செய்கிறார்கள். மருமக்கள் பலகாரம் செய்வதில் தனக்கு உதவவில்லை என்று கோபப்படமுடியவில்லை. அந்த இயலாமையே சலிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

திருமூர்த்தி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். மூன்று மருமக்களும் உன்னிப்பாகக் கவனித்தனர். அவர்களையும் ஒரு பார்வையால் நனைத்த தங்கம், சற்று நிதானித்து, பதில் சொன்னாள். "ஏங்க, புதுமருமகள் தலைதீபாவளிக்கு அவளோட தாய்வீட்டுக்குத்தானே போகப் போகிறாள்? அதற்காக நாம் எதற்கு பலகாரம், பட்சணம் செய்து கொடுக்கணும்? தேவையில்லைங்க!" என்றாள் அழுத்தமாக.

அதைக் கேட்டதும் மூன்று மருமக்களும் அர்த்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களுடைய கணவன்மார்களோ இந்த பதிலைக் காதில் வாங்காதது போல உணவில் கவனமாக இருந்தனர், திருமூர்த்திக்கு மனைவியின் பதில் லேசாகக் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவரும் நிதானித்தார்.

"தங்கம், நீ என்ன பேசுகிறாய்? நமக்கு நாலு ஆண்மக்கள், இரண்டு பெண்பிள்ளைகள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இல்லம்மா! நமக்கு ஆறு பெண்பிள்ளைகள்! நம் வீட்டுக்கு என்றைக்கு அவர்கள் மருமக்களாக வந்தார்களோ, அன்றைக்கே அவர்கள் நம்முடைய மகள்களாகி விட்டார்கள். ஒரு தகப்பன் தன் பெண்ணை இன்னொருவனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட்டால், அந்தக் கன்னியைத் தானமாக வணங்கிக் கொண்ட மாப்பிள்ளை, அந்தக் கன்னியின் தகப்பனைத் தன்னுடைய தகப்பனாக நினைத்து, அவருக்கு மரியாதை செய்து வணங்கவேண்டும். நம்ம பாரதியும் அந்த நியதிப்படிதான் தன்னோட மாமனாரைப் பார்க்கப் போயிருக்கிறான். நமக்கும் அதுதான் நியதி. நாளைக்கு உன்னுடைய பெண்கள் திருமணமாகிப் புகுந்தவீட்டுக்குச் சென்றால், இதையெல்லாம் ஒரு சம்பந்தியாக நீ எதிர்பார்க்கமாட்டாயா? சொல்லு!"

தங்கம் வாயடைத்துப் போனாள். மருமக்களோ கண்களில் நீர் கசிய மாமனாரைப் பார்த்தார்கள். அவர் தங்களை மகளாகப் பாவிக்கும் மாண்பு, அவர்களுடைய மனதை நெகிழச்செய்தது! யாரும் எதுவும் பேசுமுன்பே திருமூர்த்தி தொடர்ந்தார்.

"அம்மா ராதா! உன்னுடைய தலைதீபாவளிக்கும் பலகாரம், பட்சணம், நெக்லஸ், பட்டுத் துணிமணி எல்லாம் சீர்வரிசையாக் கொடுத்துத்தானே உன் தாய்வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்? உனக்கு மறந்துபோச்சா? அம்மா சியாமளா, காயத்ரி! நீங்களும் சொல்லுங்களேன்! உங்களுக்கும் அதே சிறப்புதானே செய்தோம்? இப்போது அதையெல்லாம் புதுமருமகளுக்கு நீங்கள்தானே எடுத்துச் செய்யவேண்டும்? இந்தப் பாரம்பரியம் உங்களிடம் இருந்துதானே உங்களுடைய பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் செல்லவேண்டும்? அதை ஏனம்மா மறந்தீர்கள்? மாதம் ஒருமுறை நாம் எல்லோரும் இப்படி ஒன்றாக அமர்ந்து உண்ணவேண்டும் என்று வலியுறுத்துவது எதற்காக அம்மா? சிந்தித்துப் பாருங்க! நாள் முழுவதும் காய்கறித் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, அலுத்துப் போய்வரும் உங்களுக்கு, உங்களுடைய பிள்ளைகளோடும் கணவரோடும் மகிழ்ச்சியோடு கழிக்க ஒரு பொழுது இது. இதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா? மகிழ்ச்சி இல்லையா? இந்தப் பாரம்பரியத்தை நீங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டாமா? தங்கம்! பாரதி மட்டும்தான் உன் பிள்ளையா? மற்றவர்கள் உனக்குச் சொந்தமில்லையா? நீ உன்னுடைய அன்பைப் பரவலா எல்லோருக்கும் கொடுக்கணும். உன்னுடைய கோபம் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் காயப்படுத்துவதை நீ உணர்ந்தாயா?

"இது உன்னுடைய அழகான தேன்கூடு இல்லையா? இதைக் கலையாமல் பாதுகாக்கவேண்டியது உன்னுடைய கடமை என்பது மறந்துபோச்சா?"

தங்கம் திடீரென்று ஆழ்ந்த தூக்கத்தினின்று விழித்தாற்போல அவரைப் பார்த்தாள். சொல்ல வார்த்தையின்றி ஊமையாகிப் போனாள்.

மருமக்களும் அவருக்கு நல்ல சொற்களைத் தேடத்தொடங்கிய வேளை, மகள்களிடமிருந்து வாய் திறந்தனர். "அப்பா, தீபாவளிக்கு எங்களுக்கு நெக்லஸ் வாங்கித் தருவதாகச் சொன்னீர்கள்? மறந்து விட்டீர்களா?" இது ராகினி.

"அப்பா மருமகளைப்பற்றி மட்டுந்தான் கவலைப்படுகிறார். எங்களைப்பற்றி நினைக்கவே இல்லை!" என்றாள் ரேவதி.

தங்கம் அவர்கள் இருவரையும் வெடுக்கென்று முறைத்தாள். அவள் பதில் சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் திருமூர்த்தி இடைமறித்தார்.

"இரு தங்கம். அவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கையைத் தானே முன்வைக்கிறார்கள்? அம்மா ராகினி, ரேவதி! தீபாவளிக்கு உங்களுக்குக் கட்டாயம் நெக்லஸ் வாங்கித் தர்றேம்மா. ஆனால், நீங்களும் உங்களுடைய கடமையைச் செய்யவேண்டும், இல்லையா? முதல்ல, உங்களை ஆட்டிப் படைச்சிக்கிட்டு இருக்கிறதே, அந்தக் கையளவு குட்டிச்சாத்தான்! அதைத் தூக்கி எறிஞ்சுட்டு வாங்க! தினமும் வீட்டு வேலைகளில் அல்லாடிக் கொண்டிருக்கிற அம்மாவுக்கு சமையலில் உதவி செய்யுங்க. பலகாரம் செய்ய உதவுங்க. உங்க மூன்று அண்ணிமார்களும் காலையில் காய்கறித் தோட்டத்துக்குப் போனால், பொழுதுபோய்த்தானே வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஒத்தாசையா தேத்தண்ணி கலக்கிக் கொடுங்க. சாப்பிட ஏதாவது பலகாரம் செய்து கொடுங்க. உங்க மூன்று அண்ணன்மார்களும் தினமும் காய்கறித் தோட்டத்திலும் தென்னந்தோப்பிலும் வாழைத்தோப்பிலும் கஷ்டப்படுகிறார்களே! அவர்களுக்கு உதவுங்க.

"தினமும் பறிக்கிற காய்கறிகளை துணியால் துடைத்து சுத்தம் பண்ணி, மூட்டையாகக் கட்ட உதவி செய்யுங்க. பேரப்பிள்ளைகளை சாயுங்காலம் குளிக்க வைத்து, புதுத்துணி மாற்றிச் சாப்பிட வையுங்க. அவங்களுக்கு பாடத்தில் உண்டாகும் சந்தேகங்களைச் சரிசெய்யுங்க. எல்லாத்துக்கும் மேலா, குடும்ப உறவுகளை பாசமா அணைக்கக் கற்றுக்கொள்ளுங்க. அப்புறம் பாருங்க! நீங்க கேட்காமலே நெக்லஸ் என்ன, காப்பு, மோதிரம் எல்லாமே வாங்கித் தரேன்! தீபாவளி மட்டுமல்ல! எல்லாப் பண்டிகை நாட்களுமே நம்முடைய உறவுகளை அடையாளங்கண்டு, அன்பு செலுத்தவேண்டிய நாள்தான்! அதற்கு நீங்கள் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்க. நீங்க வாழப்போகும் இடம் மகிழ்ச்சியாவும் ஒற்றுமையாவும் இருக்கும்."

முதன்முறையாக தந்தை சற்று வித்தியாசமாகப் பேசுவதாக உணர்ந்தனர் பெண்கள். தாயிடம் திரும்பினர். அவளோ அவர்களைக் கண்டு கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சூழ்நிலை சற்று இறுக்கமாக மாறிக்கொண்டிருந்த போது, பேரன் கார்த்திகேயன் எழுந்து தாத்தாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

"தாத்தா! அத்தைக்கு மட்டுந்தான் நெக்லஸா? எனக்கு இல்லையா?" என்று கேட்க, அனைவருமே கொல்லென்று சிரித்து விட்டனர். பேரனுக்கு ஒன்றும் புரியவில்லை. தாத்தாவிடமே திரும்பினான்.

அங்கே சிரிப்பொலி அலையலையாகப் பரவியது. திருமூர்த்தியின் உள்ளத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் மத்தாப்பாகச் சிதறின.

என். துளசி அண்ணாமலை,
செனவாங், மலேசியா
Share: 




© Copyright 2020 Tamilonline