Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்
அஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 18)
- சந்திரமௌலி|அக்டோபர் 2015|
Share:
Click Here Enlargeகேந்திரா அறிந்த உண்மை

இதுவரை: திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல் கல்வி இல்லாததால், சட்டப்படிப்பை முடித்து குமாஸ்தா வேலைக்கு முயற்சிக்கிறான். அதிர்ஷ்டவசத்தால் "கேந்திரா மோட்டார்ஸ்" நிறுவனர் விஷ்வனாத்தின் மகள் கேந்திராவுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்து, அவள் மனதில் இடம்பிடிக்கிறான். உலகைப் புரட்டிப்போடும் எரிபொருள் தேவையில்லா வாகன எஞ்சின் தயாரிக்கும் ப்ராஜெக்டைத் துவங்கிய விஷ்வனாத், தன் குழுவில் பரத்தை இணைத்துக்கொள்கிறார். கேந்திரா மோட்டார்ஸின் போட்டிக்கம்பெனியான வெளிநாட்டு நிறுவனம் கே.டி.கே. மோட்டார்ஸ் உரிமையாளர்கள் விஷ்வனாத்தின் முயற்சியைக் குலைக்கும் சதியில் பல வழிகளில் ஈடுபடுகிறார்கள். அவற்றுள் ஒன்று பரத்தைத் தீர்த்துக்கட்டிவிட்டு, அவன் இடத்தில் தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை அமர்த்தி, விஷ்வனாத்தின் ரகசியங்களைத் திருடுவது. இந்தச் சதியில் தற்செயலாக பரத்தின் நண்பன் மனோகரின் தந்தை கனகராஜ் உயிரிழக்கிறார். விடுப்புமுடித்து அலுவலகம் திரும்பும் பரத்தைத் தன் குழுவிலிருந்து நீக்கிவிட்டதாக விஷ்வனாத் கூறுகிறார். அதற்கான உண்மைக்காரணம் அறியாத பரத் வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தன் பாட்டி வள்ளியம்மாளை சந்திக்கச் செல்கிறான். இனி…

*****


ஒரு வினாடி திகைத்தாலும், தன்னை சுதாரித்துக்கொண்டு, "நான் சென்னைலேருந்து வரேன். என் பேர் பரத். சொல்லிக்கிறாப்போலே ஒரு ஆளா இன்னும் ஆகலை. உங்க பேட்டிய இந்தப் பத்திரிகைல பாத்தேன். உடனே உங்களை நேர்ல பாக்கணும்னு ஒரு ஈர்ப்பு. அத்தோட சென்னைல நான் பாத்துவந்த வேலையிலயும் மனசு நிலைக்கலை. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா இங்க உங்ககூட கிராமத்துல கொஞ்சநாள் தங்கி என்னால முடிஞ்ச வேலை செய்யலாம்னு பாக்கறேன். தங்கறதுக்கும், திங்கிறதுக்கும் மட்டும் நீங்க வழி பண்ணினா ஒத்தாசையா இருப்பனே தவிர உபத்திரவமா இருக்கமாட்டேன்" என்று மூச்சுவிடாமல் பேசிமுடித்தான் பரத். அவன் பேசி முடிக்கும்வரை அவனைக் கண்கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்த வள்ளியம்மாள், "தண்ணில போட்ட பட்டாசுக்காய் மாதிரி படபடனு பேசுற? பட்டணத்துக்காரங்களுக்கு இவ்வளவு பேசத்தெரியும்னு இப்பத்தான் பாக்கறேன். எங்க கிராமத்து மனுஷங்க மாதிரியே மனசுல உள்ளதை அப்படியே கொட்டிட்டியே. ஆனா, உன் பேச்சுல ஒரு வெசனம் பொலப்படுது. வீட்டுல ஏதாச்சும் ப்ரச்சனையா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல என்னைப்பத்தி வேற வெவரம் எதுவும் கேக்காதீங்க ஆத்தா... உங்கள நான் ஆத்தான்னு கூப்பிடலாமா?" தயங்கியவாறே கேட்டான்.

தன்னுள்ளே பொங்கிவந்த "எலேய் நீ என் பேரண்டா. என் சாமிடா" என்ற எண்ணங்களுக்கு வேறு வார்த்தைகளால் வடிகால் வெட்டினாள். "இங்க எல்லாரும் என்ன அப்படித்தான் கூப்பிடுறாங்க. நீயும் கூப்டுக்க. சரி நான் ஒரு வெவரமும் உன்னைப்பத்தி கேக்கலை. உனக்கா எப்ப சொல்லணும்னு தோணுதோ அப்ப சொன்னாப் போதும். அதென்னவோ தெரியலை, நீ எது கேட்டாலும் மறுக்காம செய்துறணும்னு ஒரு எண்ணம், வாஞ்சை… எந்த ஜென்மத்து பந்தமோ. உள்ளாற வா, இதோ இந்த அறையில தங்கிக்க. மத்த விவரமெல்லாம் சிரமபரிகாரம் பண்ணப்பறம் பாத்துக்கலாம்" என்று உள்ளே பரத்தை அழைத்துப் போனாள்.

தான் வந்தகாரியம் இவ்வளவு எளிதாக முன்னேறும் என்று பரத் நினைக்கவில்லை. ஆனாலும் இந்தக் கிழவி மகா அழுத்தம், தன்னைத் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லையே என்று நினைத்தான். அதேநேரம், ஒருவேளை அவளுக்குத் தன்னை நிஜமாகவே யாரென்று தெரியவில்லையோ என்று குழம்பினான். எதுவானாலும், அவளாக தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாதவரை ஒரு மூன்றாவது மனிதன் போலவே நடந்துகொள்வது என்று தீர்மானித்தான். அந்த அறை பத்துக்குப் பத்து என்ற அளவில் சிறியதாயிருந்தாலும், நேர்த்தியாக இருந்தது. சாணம்போட்டு மெழுகப்பட்ட தரை சொறசொறப்பாயிருந்தாலும், காலுக்கு இதமாயிருந்தது. அறையின் நாலுபுறமும் அளவுபிடித்து வரைந்தாற்போல், மாக்கோலமிட்டிருந்தது. ஒரு மூலையில் கயிற்றுக்கட்டிலும், அதன் தலைமாட்டில் வெளியே வேப்பமரங்களைப் பார்த்தவண்ணம் குளுகுளு காற்றை உள்வாங்கும் ஜன்னலும், தலையை இடிக்காமல் சற்றே ஏற்றி வேயப்பட்ட மங்களூர் ஓடுகளும் பரத்தை ஒரு புது உலகத்துக்குக் கூட்டிப்போயின.

பிரயாண அலுப்புத்தீர குளித்துவிட்டு ஓய்வெடுக்கத் தீர்மானித்தான். அப்போதுதான், அந்த அறையில் ஓரமாக மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளை புகைப்படத்தைப் பார்த்தான். ஒருகணம் அந்த புகைப்படத்தில், ராணுவ உடையில் சிரித்துக்கொண்டிருக்கும் உருவத்தைப் பார்த்து, "அட எப்போது நாம் இப்படி ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்" என்று ஆச்சர்யப்பட்டான். பிறகு உற்றுப்பார்த்து, அது 1940ல் எடுத்த படம் என்று தெரிந்துகொண்டான். "இது நம்ம தாத்தாவாயிருக்கலாம், நம்மளோட ஜெராக்ஸ் காப்பியா இருக்காரே. அவரை மாதிரியே நாம இருக்கறதாலே வள்ளியம்மாளுக்கு நிச்சயம் நாம் இவள் பேரன் என்பது தெரிந்துதான் இருக்கவேண்டும். அதுதான் நம்மைப் பார்த்ததும் அவ்வளவு ஆச்சரியப்பட்டாள். அப்புறம் ஏன் இவள் தான் யார் என்று காட்டிக்கொள்ளவில்லை. இதற்குப் பின்னால் ஏதோ கதை இருக்கிறது. அது தெரிந்தால், ஏன் இவள் எந்த ஒட்டு உறவும் இல்லாமல் இங்கே கிடக்கிறாள் என்பதும் தெரிந்துவிடும். இதை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும்" என்று தீர்மானம் செய்துகொண்டு, உடனே அந்த ஃபோட்டோவைக் கழட்டித் தன் பெட்டிக்குள் பதுக்கிக்கொண்டான்.
கிட்டத்தட்ட அதே நேரம், வள்ளியம்மாள் அந்த ஃபோட்டோ அந்த அறையில் இருப்பது நினைவுக்கு வந்தவளாக, எப்படியாவது பரத்தின் கண்ணில் படும்முன் எடுத்து வைத்துவிட வேண்டும் என்று உள்ளே கிடுகிடுவென நுழைந்தாள்.

"என்ன ஆத்தா அரக்கப்பரக்க வரீங்க."

"உனக்கு வென்னித்தண்ணி குளிக்க எடுத்து வச்சிருக்கேன். பட்டணத்துக்காரங்களுக்கு பச்சத்தண்ணி ஒத்துக்காதுனு தெரியும். நீ போயி குளிச்சிட்டு வா, சாப்பிடலாம். அப்புறம் உனக்கு இங்க கூட்டுப் பண்ணைய சுத்திக்காட்டச் சொல்லியிருக்கேன். ஒரு நட போயிட்டு வந்துடலாம்" என்று சொல்லிக்கொண்டே அந்த புகைப்படம் மாட்டியிருந்த சுவரை நோக்கினாள். அங்கு அந்த புகைப்படம் காணாமல் வெற்று ஆணி மட்டும் தென்பட்டதும், கொஞ்சம் குழம்பிப்போய் வேறெங்காவது எடுத்து வைத்துவிட்டோமோ என்று நினைவறையில் துழாவினாள். போன ராத்திரி கனவும் அதை அடுத்து தான் அந்த புகைப்படத்தை அணைத்துக்கொண்டு அழுததும் நினைவு வந்தது. ஒருவேளை அப்படியே கைமறதியாக எங்கோ வைத்திருப்போம் தேடிப் பார்க்கலாம் என்று நினைத்தாள்.

அவளைக் கொஞ்சம் சீண்டும் நோக்கத்தோடு, "என்ன ஆத்தா? ஏதோ தேடறா மாதிரி இருக்கு? ரொம்ப முக்கியமான எதயோ தொலைச்சுட்டாப்ல தெரியுது" என்று கொக்கி போட்டான். "என்னனு சொல்லுங்க, நான் வேணா தேடித்தறேன்".

"இல்லை, இல்லை. அதெல்லாம் ஒண்ணுமில்லை" விடுவிடுவென அந்த அறையை விட்டு வெளியேறினாள் வள்ளியம்மாள்.

பரத் இப்படி நிம்மதியாக வலவனூரில் யாருக்கும் சொல்லாமல் வந்து மறைந்திருக்க, அவனைத் தேடும் முயற்சியில் கேந்திராவும், வினயும் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார்கள். விஷ்வனாத் எப்படியாவது பரத்தை ஓரிரு நாளில் தேடிக் கொண்டு வந்துவிடுவார்கள், அவனை மறுபடி உதவியாக வைத்துக்கொண்டு முப்பது நாளில் வெள்ளோட்டத்தை முடித்துவிடலாம் என்று நம்பிக்கையாயிருந்தவர், பரத்தைப்பற்றி எந்தத் தகவலும் எவரிடமும் இல்லை என்று அறிந்து நம்பிக்கை இழக்க ஆரம்பித்தார். வாணியும், டாக்டர் மித்ரனும் தங்களால் முடிந்தவரை அவர் நம்பிக்கை இழக்காமல் வெள்ளோட்டத்துக்கான ஏற்பாடுகளில் முனைய உழைத்துக்கொண்டிருந்தனர். கேந்திரா, பரத்தைத் தேடும் முயற்சியை நம்பிக்கையான அதே நேரம் முழுநேரமாக யாரிடமாவது ஒப்படைக்க நினைத்து, கடைசியில் மனோகர்தான் அதற்கு சரியான ஆள் என்று தீர்மானித்தாள். மனோகரை உடனே பார்க்கவேண்டும், அதுவும் தானே நேரில் போனால் தான் பரத்தைத் தேடும் முயற்சிக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் என்று நினைத்து, காலம் தாழ்த்தாமல் மனோகரின் அலுவலகத்துக்கே போனாள்.

போகும் வழியில் மனோகருக்கு ஃபோன் செய்து, தான் அவனை அவசரமாகப் பார்க்க வருவதாகவும், தனக்காக அலுவலகத்தில் காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டாள். கதிரேசன் விடுப்பில் போய்விட்டதால் தானே ட்ராஃபிக்கை சபித்துக்கொண்டு நகரின் பரபரப்பான பகுதியில் இருந்த அந்த அலுவலக வளாகத்தை வந்தடைந்தாள். அலுவலகம் விடும் நேரமானதால், மணிக்கணக்கான ட்ராஃபிக்கைக் கடந்து வருவதற்குள் சூரியன் தன் அன்றைய டூட்டியை முடித்துக்கொண்டு மேற்கே டாட்டா காட்டிவிட்டான். மெல்ல சாயங்கால சிவப்பு வானத்தில் வெற்றிலைக்கரை போல கருக்கத் தொடங்கியது. மனோகர் அலுவலகத்தை விட்டுக் கிளம்புமுன் அவனைப் பிடித்துவிட வேண்டும் என்று கேந்திரா கார்க் கதவைக்கூடப் பூட்டாமல் விடுவிடுவென லிஃப்டை அடைந்தாள்.

"எங்கங்க போகணும்?" வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருந்த ஒரு நீலச்சட்டை, அந்த இடத்துக்கு அன்னியமான பளபளப்பில் இருந்த கேந்திராவைக் கேட்டது.

"ஏழாவது மாடி" என்று லிஃப்டின் பொத்தானை பொறுமையில்லாமல் அழுத்தியவாறே பதில் சொன்னாள்.

"அஞ்சு மாடிவரைக்கும் தான் வேலை பண்ணும். அப்புறம், ரெண்டு மாடி நடக்கணும். மெயின்டனன்ஸுக்கு சொல்லிச்சொல்லி காதுலயே போட்டுக்க மாட்டேங்கிறாங்க. பாத்துப் போங்க" கேந்திராவை மனதில் சுமந்துகொண்டு நீலச்சட்டை 21ம் நம்பர் பஸ்ஸைப் பிடிக்க ஓடியது.

ஐந்தாவது மாடியிலிருந்து சற்றே இருளான, பான்பராக் கோலம் போட்ட சுவர்களையும், குறுகலான மாடிப்படிகளையும் நிதானமாகக் கால்வைத்துக் கடந்தாள் கேந்திரா. மனதுக்குள் இதற்கெல்லாம் பரத்தை சபித்தாள். ஏழாவது மாடிக்கான முதல்படியில் கால்வைக்கும் போது அவளுக்குப் பரிச்சயமான குரல் கேட்டது.

மாடிப்படிகளுக்கும், அலுவலகம் மற்றும் லிஃப்ட் இருந்த பகுதிகளையும் இணைக்கும் குறுகிய காரிடோரில்,இரண்டு உருவங்கள் புகைபிடித்தவாறே பேசிக்கொண்டிருந்தது, மாடிப்படியின் வளைவில் இருளில் இருந்த கேந்திராவுக்குத் தெரிந்தது. கீற்றான வெளிச்சத்தில் இப்போது அந்த இரண்டு பேரில் ஒருவர் சக்கரவர்த்தி என்பது தெரிந்தது. இவர் எங்கே இங்கு? மற்றவர் பேசுவதை ஒட்டுக் கேட்கக்கூடாது என்று தனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட நாகரிகம் உறுத்தினாலும், உள்ளுணர்வு அவர்கள் பேச்சை மறைந்து நின்று கேட்கத் தூண்டியது.

"சக்கி, மறுபடி கேந்திரா மோட்டார்ஸ் ஷேர் விலை ஏறிடுச்சு பாத்தீங்களா? ரெண்டே நாள்ல அந்த விஷ்வனாத் புது ப்ராடக்ட் ரிலீஸ்பத்தி அறிவிச்ச உடனே காட்டுத்தீ மாதிரி மார்க்கெட்டே பத்திக்கிச்சு. அவன் சொன்ன மாதிரி இன்னும் முப்பது நாள்ல ப்ராடக்ட சக்ஸஸ்ஃபுல்லா கொண்டு வந்துட்டா நாம பட்ட எந்தப் பாட்டுக்கும் பிரயோஜனமில்லாம போயிடும்."

"கைலாஷ் உனக்கு எப்பவும் அவசரம்தான். இந்த முப்பது நாள் சேலஞ்ச, சங்கடத்த விஷ்வனாத்துக்கு ஏற்படுத்தினவனே நாந்தான். எல்லாம் நான் ப்ளான் பண்ணினா மாதிரி தான் போயிட்டிருக்கு."

இந்த வார்த்தைகளைக் கேட்டு கேந்திரா அதிர்ந்தாள். "அடப்பாவி, நீ நம்பிக்கையானவன் இல்லைன்னு தெரியும். ஆனா இப்படி எதிரி கம்பெனியோட கையாளா இருந்து, உள்வேலை பாக்கறவன்னு எங்களுக்குத் தெரியாம போச்சே. இதை அப்படியே அப்பாகிட்ட சொல்லணும். அது மட்டுமில்லை, இதை அப்படியே ரிக்கார்ட் பண்ணி ஆதாரம் கிரியேட் பண்ணனும்" என்று நினைத்து, செல்போனில் மறைவிலிருந்தவாறு ரிகார்ட் பண்ணத் தொடங்கினாள்.

கைலாஷ் சக்கரவர்த்தியிடம் எகிறினான் "என்ன ப்ளான் பண்ணினா மாதிரி போச்சு. எல்லாம் ஃப்ளாப். மொதல்ல, நம்ம ஆளை அந்த புது ப்ராடக்ட் டீம்ல சேத்து, எல்லா ரகசியத்தையும் ஈசியா கைப்பத்தலாம்னு சொன்னீங்க. விஷ்வனாத் உஷாரா அவன் ஆளுங்களை போட்டு, நாமத்தைச் சாத்துனான். அப்புறம், அந்த புதுப்பையன் பரத்தை தீத்துக்கட்டி நம்ம ஆளைக் கொண்டுவரலாம்னு ப்ளான் பண்ண கடசி நிமிஷத்துல அதைப் பண்ணாதேனு சொன்னீங்க. அதுல அந்த வீட்டுக்காரக் கெழவன் பலியானான். அப்புறம் கொக்கு தலையில வெண்ணை வெக்கிறா மாதிரி அந்த கனகராஜோட பையனுக்கு இந்த ஆபீசுல தண்டத்துக்கு வேலை கொடுத்து வச்சீங்க. இவனை வச்சு பரத்கிட்டேயிருந்து ரகசியங்களை கறக்கலாம்னா அந்த பரத்தே எங்கியோ போயிட்டான்."

சக்கரவர்த்தி அவனை வெறுப்பேற்றுவதைப் போல், "அப்புறம்?" என்று ஒரு மெல்லிய புன்னகை உதிர்த்தார்.

"வெறுப்பேத்தாதீங்க சக்கி, அப்புறம் கேந்திரா மோட்டார்ஸ் ஷேரெல்லாம் வாங்கச் சொன்னீங்க. அந்த கோபாலை வழிக்கு கொண்டுவந்து அவனோட ஷேர்சோட நம்மளுதைச் சேத்து மொத்தக் கம்பெனியயும், அத்தோட இந்த புது ப்ராடக்டையும் நம்ம கைல போட்டுக்கலாம்னு சொன்னீங்க. அந்த கோபால் இப்ப விஷ்வனாத்துக்கு சம்பந்தியாயிட்டான். எங்க அவங்களைப் பிரிக்கிறது!"

"கைலாஷ் நீ சொன்ன எதையும் நான் மறுக்கலை. ஆனா, நாம போட்ட எந்த ப்ளானும் இதுவரை ஒர்க் அவுட் ஆகாதது நமக்குதான் நல்லதா முடிஞ்சிருக்கு. இப்ப, இந்த ப்ராடக்ட் இன்னும் முப்பது நாளைக்குள்ள தயாராயிடும். அப்ப அதோட ப்ரோடொடைப், மேக் சீக்ரெட் எல்லாம் தயாராயிடும். இதுக்கு முன்ன நாம கேந்திரா மோட்டார்சைக் கைப்பத்தியிருந்தா விஷ்வனாத் இந்த ப்ராடக்டை உருவாக்கறதையே நிறுத்தியிருப்பான். எனக்கு இந்த ப்ராடக்ட் வேணும். கே.டி.கே.வுக்கும் இது வேணும். இதை உருவாக்கி, சக்ஸஸ்ஃபுல்லா லான்ச் பண்ணினவுடனே கைப்பத்தறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்."

"என்ன என்ன சொல்லுங்க?"

"அது சீக்ரெட்டாவே இருக்கட்டும். அதுதான் நம்மோட லாஸ்ட் சான்ஸ். யாராலும் எதிர்பார்க்கமுடியாத வகையில, இதை நான் முடிக்கிறேன். இனிமே நாம சந்திக்கறதை தவிர்க்கணும். அடுத்தமுறை நான் அந்த ப்ராடக்ட் சீக்ரெட்டோட உன்னையும், ரிச்சர்டையும் துபாய்ல மீட் பண்றேன்".

இதை அவ்வளவையும், மூச்சைப் பிடித்துக்கொண்டு கேந்திரா தன் செல்ஃபோனில் ரிகார்ட் செய்து விட்டாள். அதேநேரம், கேந்திரா வரத் தாமதமானதால் அவள் எப்போது வருவாள் என்று தெரிந்துகொள்ள மனோகர் அவள் செல்ஃபோனை அழைத்தான். சக்கரவர்த்திக்கும், கைலாஷுக்கும் தெரியாமல் ஓசைப்படாமல் அந்த இருட்டு மாடிப்படிகளின் வழியே மெல்ல நழுவிக்கொண்டிருந்த கேந்திராவின் செல்ஃபோன் சமய சந்தர்ப்பம் தெரியாமல் பெரிதாக அலறியது. மேலே காரிடாரில் நின்றுகொண்டிருந்த சக்கரவர்த்திக்கும், கைலாஷுக்கும் இது கேட்கவே அவர்கள் சத்தம்வந்த திசையை நோக்கித் தடதடவென ஓடத்தொடங்கினர். அவர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்று கேந்திராவும் இப்போது வேகமாக ஓடத்தொடங்கினாள்.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline