Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
கண்ணகியும் வாசுகியும்
குசேலரும் நானும்
ராகுதசை
- அழகப்பன் அண்ணாமலை|செப்டம்பர் 2015|
Share:
சூரியன் பூமியையே ஆக்கிரமித்துவிட்ட போதிலும் இன்னும் என் போர்வைக்குள் வர முடியவில்லை என்ற ஆணவந்தான் எனக்கு! அந்த ஆணவத்தை உடைத்தெறிய ஆண்டவனால் அனுப்பப்பட்ட வீராங்கனைபோல கர்ஜித்தாள் என் மனைவி. "என்னங்க! பசங்கள எழுப்புங்க! ஸ்கூலுக்கு நேரமாச்சு! ராத்திரி பூரா தூங்காம டி.வி.ல படத்தைப் போட்டுப் பாக்கவேண்டியது. காலைல நல்லாத் தூங்கவேண்டியது. ஏந்தான் என் உயிர வாங்குறீங்களோ?" இதற்குமேலும் நித்திரையில் நீடிக்க முடியாது என்பதால் நானும் "பசங்களா, எழுந்திருங்க! ஸ்கூலுக்கு நேரமாச்சாம்! அம்மா கூப்புடுறா!" என்று கூக்குரலிட்டுவிட்டு எனது கடமையைத் தொடர்ந்தேன். படுக்கையைவிட்டு எழ மனமில்லாமல் பக்கத்து மேசையில் இருந்த ஐபேடை எடுத்துச் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தேன்! கச்சா எண்ணெய் விலை சரிந்தது, பங்குச் சந்தை ஏறுமுகம், விபத்திற்குள்ளான ஆசிய விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது போன்ற செய்திகளுக்குப் பின்னால் ஒரு செய்தி என் நித்திரையை முழுவதுமாகக் கலைத்துவிட்டது. அதற்குள் மனைவி, "என்ன, இன்னுமா எந்திரிக்கலை?" என்றாள்.

"ஆஃபிஸ் மெயில் செக் பண்றேன்மா" என்றவுடன் அவள் அமைதியானாள். நான் மீண்டும் அந்தச் செய்தியில்...

கலிஃபோர்னியா லாட்டரியில் ஒருவருக்கு வருமானவரி நீக்கி நூற்றைம்பது மில்லியன் டாலர் பரிசாக விழுந்துள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. "என்னது! நூற்றைம்பது மில்லியன் டாலரா?" என்று வடிவேலு பாணியில் அப்படியே ஷாக்காயிட்டேன். இந்தியாவிலிருந்து வந்ததிலிருந்து ரெண்டு டாலர் டீ வாங்கினாக்கூட இந்திய ரூபாய்ல சொன்னாதான் எனக்குப் புரியும். முதல் வேலையா இந்திய ரூபாய்ல எவ்வளவுன்னு பார்க்கணும். மனக்கணக்கா போடலாம்னு இரண்டுதடவை முயற்சி செய்து தோற்றபிறகு கால்குலேட்டரை எடுத்துப் பார்த்தேன். தொள்ளாயிரம் கோடி காட்டிற்று. நம்ப முடியவில்லை. சே! சே! தொள்ளாயிரம் கோடியெல்லாம் கொடுக்க வாய்ப்பே இல்லை! லாட்டரிக்காரன் ஏதோ தில்லுமுல்லு பண்றான் என்று மேலும் ஆராய்ந்தேன். ஆனால் லாட்டரிக் கம்பெனியின் இணையதளத்தில் குலுக்கலுக்கான விதிமுறைகள், குலுக்கல் நிகழ்ச்சியின் நேரலைக் காணொளி, பரிசு பெற்றவர்களின் பேட்டி எல்லாம் இருந்தது. எல்லாவற்றையும் ஆராய்ந்துவிட்டு வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதோட அமெரிக்காவில் எல்லாம் சட்டப்படிதான் நடக்குமென்று எனக்கு நானே தேற்றிக்கொண்டேன்.

சீட்டு விலை ஒன்றும் அதிகமில்லை, நான் ஏன் இந்தச் சீட்டு வாங்கக் கூடாது? ஒருவேளை எனக்கு அது விழுந்தா எப்படியிருக்கும் என்ற நினைவே இனித்தது. இறக்கை இல்லாமலே பறக்க ஆரம்பித்தேன். பணம் இல்லாமலே அதனை வைத்து என்னென்ன செய்வது என்று திட்டம் தீட்டினேன்.

அதற்குள் மனைவி பொறுமையிழந்தாள். வேறு வழியின்றி வேகவேகமாகப் பல் துலக்கிவிட்டு மாடியிலிருந்து கீழே இறங்கினேன். அவள் முறைப்பைக் கண்டுகொள்ளாமல், அவள் கவனத்தைத் திருப்ப இந்தச் செய்தியை விவரித்தேன். "ஏம்பா உனக்கு விஷயம் தெரியுமா? கலிஃபோர்னியா லாட்டரில ஒருத்தருக்கு நூத்தம்பது மில்லியன் பரிசாக் கிடைச்சிருக்காம்"

"அப்படின்னா எவ்வளவு இருக்கும்?" அவளும் ஆச்சரியமானாள்.

"இந்தக் கேள்வி கேட்பேன்னு தெரியும். தொள்ளாயிரம் கோடி! நீ சவுத்பேயில (Southbay) ஒரு மில்லியனுக்கு ஒருவீடு பார்த்தியே. அதுபோல நூத்தம்பது வீடு வாங்கி வாடகைக்கு விடலாம்" என்று அவள் மொழியில் பேசினேன். பணம்னா பொணம்கூட வாயத் திறக்கும்போது என் மனைவிமட்டும் விதிவிலக்கா என்ன?

"நூத்தம்பது வீடா? அதெல்லாம் நமக்கெங்க விழப்போகுது? பேசாம குளிச்சிட்டு வேலைக்குப் போற வழியப் பாருங்க!" என்று சட்டென்று என் கற்பனைத் தீயில் தண்ணீர்விட்டு அணைத்தாள். வேறு வழியின்றி காஃபியைக் குடித்துவிட்டுக் குளிக்கப் போனேன்.

குளிக்கையில் அழுக்குத்தான் போனது! லாட்டரி நினைவு போகவில்லை. 'தொள்ளாயிரம் கோடின்னா சும்மாவா? நமக்கு இந்தப் பரிசு கிடைச்சா எல்லாத்தையும் நான்மட்டும் வச்சுக்கக்கூடாது. கூடப்பொறந்தவங்க. சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லோருக்கும் கொடுக்கணும். எல்லோருக்கும் கொடுக்கணும்னா எப்படி? எதா இருந்தாலும் ஒரு கணக்கு வேணும். சரி! எனக்கு ஒரு நூறுகோடி, மனைவிக்கு ஒரு நூறுகோடி, பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு நூறுகோடி வீதம் மொத்தம் நானூறுகோடி. மீதம் ஐநூறுகோடி இருக்குமே? அதுல எப்படியாவது கான்கார்ட் முருகன் கோவில் கட்டுறதுக்குக் கொஞ்சம் கொடுத்திடணும். அப்புறம் சொந்தக்காரங்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒருகோடி. ஆக நன்கொடையா நூறுகோடி. மிச்சம் இருக்கிற நானூறுகோடிய ஏதாவது முதலீடு செய்யணும். ஓ... மறந்தேபோயிட்டேன். ஊருல ஒரு முதியோர் இல்லமும், எல்லா வசதியும் உள்ள ஒரு இலவசப் பள்ளிக்கூடமும் கட்டணும்.'

"என்னங்க குளிச்சாச்சா?" என்று மனைவி கனவைக் கலைத்தாள்.

லாட்டரிதான் சரியான வழிபோல என்று தேற்றிக்கொண்டு வேகவேகமாக அலுவலகத்திற்குப் புறப்பட்டேன்.

போகும்வழியிலேயே "பரிசு வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான். குறைந்தபட்சம் லாட்டரிச் சீட்டையாவது வாங்கவேண்டும்" என்ற விளம்பரம் நினைவுக்கு வந்தது. இன்று எப்படியும் வாங்கிவிடும் முடிவுடன் தொடர்ந்தேன். ஆனால் லாட்டரிச் சீட்டுக்காக ரொம்பவும் செலவழிக்கக் கூடாது. ஆத்துல போட்டாலும் அளந்துபோடணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதனால வாரம் பத்து டாலருக்கு வாங்கலாம். விழுந்தா விழுது. இல்லாட்டி ஒண்ணும் நட்டமில்லை. பெரிய ஐந்தாண்டு திட்டத்தைப் போட்ட திருப்தியில் தொடர்ந்தேன். அன்று மாலையே லாட்டரி டிக்கெட்டை வாங்கிப் பூஜையறையில் வைத்தேன். வைத்ததோடு அல்லாமல் மனைவியிடம், எப்படிப் பரிசைப் பங்கு வைக்கவேண்டும் என்றும் விளக்கினேன்.

"ஏன் இதெல்லாம் பரிசு விழறதுக்கு முன்னாலேயே யோசிக்கிறீங்க?" என்றாள்.

"இல்லம்மா! பரிசுவிழுந்த அதிர்ச்சியில் எனக்கு ஏதாவது ஆயிட்டா நீ என்ன பண்றதுன்னு முழிக்கக்கூடாது பாரு, அதுக்குத்தான்" என்று இழுத்தேன்.

"ஐயோ.. ஐயோ..." என்று தலையில் அடித்துக்கொண்டு போய்விட்டாள்.

'இவளுக்குக் கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லை. எப்பப் பாரு விளையாட்டுத்தனம்தான்' என்று நினைத்துக்கொண்டேன்.

வாரங்கள் கடந்தன. வாராவாரம் லாட்டரிக் கடைக்குப் படையெடுத்தேன். ஒரு டாலர்கூட விழவில்லை. ஏன் நமக்கு விழவில்லை என்று யோசித்தபோதுதான் அந்த யோசனை பளிச்சிட்டது. போனமுறை இந்தியா போனபோது ஜோசியக்காரர் மனைவிக்குத்தான் அதிர்ஷ்டம் இருப்பதாகவும் பல தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பீங்கன்னும் சொன்னார். அவளுக்குத்தான் சுக்ரதசை நடக்குதாம். அவள் வாங்கினா விழுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கு என்ற நம்பிக்கையில் அவளைச் சீட்டு வாங்கச் சொன்னேன். அவளோ, "உங்களுக்கு உருப்படியா வேலை ஒண்ணும் இல்லையா? எனக்கு தலைக்குமேல வேலை கிடக்குது" என்று எரிந்து விழுந்தாள்.

இதற்குமேல் லாட்டரி பற்றி அவளிடம் ரொம்பப் பேசக்கூடாதுன்னு முடிவெடுத்தேன். ஆனாலும் ஆகாசத்தில் கோட்டைகட்டும் நினைவுகள் தொடரத்தான் செய்தன.
மாதங்கள் கடந்தபின்னும் பரிசு விழுந்தபாடில்லை. ஏன் விழவில்லை என்ற கவலையில் இணையதளத்தில் துழாவிக் கொண்டிருந்தபோதுதான் அந்தக் காணொளி கண்ணில் பட்டது. லாட்டரியில் பரிசு விழ வேண்டுமானால் இரவு படுக்கைக்குப் போகுமுன்பு மனத்திரையில் பரிசு நமக்கே விழுந்து விட்டதாகக் கற்பனை செய்யவேண்டும்" என்ற காணொளி அது. படிக்கிற வயதில் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்களென்று சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் முழுமையாகப் புரிந்தது. 'இவ்வளவு நாளா இது தெரியாமப் போச்சே' என்று விரைவாக இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றேன்.

எனது மனைவியோ நான் சொல்லாவிட்டாலும் நான் செய்வதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டாள். "ஏன்தான் இப்படிப் பண்றீங்களோ? நான் உங்க அம்மாவிடம் சொல்லப்போறேன்" என்றாள்.

அம்மாவிடம் சொன்னால் பிரச்சனைதான். இதுவரை அவர்கள் வருத்தம்படும்படி நான் ஒன்றும் செய்ததில்லை. நான் இப்படி லாட்டரிச் சீட்டின் பின்னால் போகிறேன் என்றால் வருத்தப்படக் கூடும். இருந்தாலும் நாம பொய் சொல்லலை! திருடலை என்று மனதைத் தேற்றிக்கொண்டு கனவுகாணத் துவங்கினேன்.

கனவு பலிக்கவில்லை. என்னிடம் மிச்சம் இருந்த ஒரே மார்க்கம் ஆண்டவனடிதான். 'ஏன் கடவுளே! என்னைமட்டும் இப்படிச் சோதிக்கிறாய்? நான் ஒருவருக்கும் கெடுதல் செய்யலியே!' என்று புலம்ப ஆரம்பித்தேன். ஒருவேளை இந்தப் பரிசைவைத்து உறவுக்காரங்க, நண்பர்கள் எல்லாரையும் காப்பாத்துவோம்னு சொன்னது கடவுளுக்குப் பிடிக்கவில்லையோ? நாம யாரு கடவுளோட வேலையைச் செய்யறதுக்கு? வேணும்னா எல்லாரும் லாட்டரிச் சீட்டு வாங்கிக் கடவுளை வேண்டிக்கட்டும். என்னை மன்னித்துவிடு கடவுளே! நான் யாருக்கும் பரிசைக் கொடுக்கமாட்டேன். எல்லாவற்றையும் நானே வச்சுக்கிறேன்' என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.

ஆனாலும் கடவுளின் காதில் என் பிரார்த்தனை விழுந்ததாகத் தெரியவில்லை. எப்ப இந்தக் கடவுள் எனது பிரார்த்தனையைக் கேட்பது, எப்ப லாட்டரி விழுந்து, பணம் கைக்கு வருவது! சற்றே சோர்ந்து விட்டேன். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தொலைபேசி அடித்தது. அம்மாவிடமிருந்து வந்துள்ளதாக மனைவி சொன்னாள். என் மனைவி அம்மாகிட்ட சொல்லியிருப்பான்னுதான் நினைக்கிறேன். அம்மா எதுவும் தெரியாததுபோல நலம் விசாரித்தார்.

கடைசியாக "தம்பி, நானும் அப்பாவும் எல்லார் ஜாதகத்தையும் எடுத்துட்டுப் போய் நம்ம ஜோசியர் கிட்டக் காட்டினோம்" என்றார்.

"அப்படியாம்மா? எனக்கு எப்படி இருக்கு?" என்று கேட்டேன்.

"தம்பி உனக்கு ராகுதசை நடக்குதாம். உழைக்காமப் பணம் பண்ண என்னென்ன வழியிருக்குமோ அவ்வளவையும் யோசிக்குமாம். பார்த்து கவனமாஇருந்துக்கப்பா" என்றார் கரிசனத்துடன்.

எனக்குச் சுருக்கென்றது. ஒருவேளை அம்மா இதை முன்பே சொல்லியிருந்தால் கேட்டிருக்கமாட்டேன். இத்தனை மாதமாய் முயற்சியெடுத்துத் தோற்றபின் அம்மா சொன்னதில் ஏதோ உண்மை இருப்பதுபோலத் தெரிந்தது. மனதும் விலகிக்கொண்டு புத்திக்குச் சற்றே வழிவிட்டது. 'லாட்டரியில் பரிசு கிடைக்கிற வாய்ப்பு முப்பத்தஞ்சு பில்லியன்ஸ்ல ஒண்ணுதான். அது நாம சாலை விபத்துல சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பைவிட மிகக் குறைவு. இப்ப நாம ஒரு குறையுமில்லாம நல்லாதான் இருக்கோம். எதுக்கு இந்தப் பேராசையும் தேவையில்லாத மன உளைச்சலும்' என்று முற்றும் தெளிந்தேன். மனைவி என் மனத்தெளிவைப் புரிந்துகொண்டு லேசாகப் புன்னகைத்தாள்.

அவள் புன்னகை முற்றுப் பெறுவதற்குள் தொலைபேசி மீண்டும் அடித்தது. எனது நண்பன் மறுமுனையில்.

"மச்சி.. விஷயம் தெரியுமா? கலிஃபோர்னியாவில ஒருத்தருக்கு லாட்டரில நூற்றைம்பது மில்லியன் விழுந்திருக்காம். நானும் வாங்கலாமான்னு இருக்கேன்" என்றான்.

பள்ளிக்கூட காலத்திலிருந்து அவன் எதையும் தாமதமாகத்தான் தெரிந்துகொள்வான் என்பதை மீண்டும் நிரூபித்தான். பதிலுக்கு நானும், "ராகு கட்டம் மாறிட்டாருன்னு நினைக்கிறேன்" என்றேன்.

ஒன்றும் புரியாமல் அவன் "என்ன சொல்றேன்னே புரியல மச்சி" என்றான்.

"எல்லாம் போகப்போகப் புரியும். எதுக்கும் உங்க அம்மாகிட்ட உன் ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லுடா" என்று தொலைபேசியைத் துண்டித்தேன்.

அழகப்பன் அண்ணாமலை,
பெடலூமா, கலிஃபோர்னியா
More

கண்ணகியும் வாசுகியும்
குசேலரும் நானும்
Share: 




© Copyright 2020 Tamilonline