Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ஏ.எஸ். ராகவன்
- அரவிந்த்|ஜூன் 2015||(1 Comment)
Share:
"எழுத்து என்பது தவம். அதன் பயன் சமூகமேம்பாடாக இருக்கவேண்டும்" என்ற கொள்கையோடு எழுதியவர் ஏ.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஏ.எஸ். ராகவன். இவர் 1928ல் கரூரில் பிறந்தார். இளவயதிலேயே எழுத்தார்வம் கொண்டு விளங்கிய இவர் நண்பர்களுடன் இணைந்து "விநாயகா கலைக்கழகம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து, 'விநாயகா' என்ற கையெழுத்து இதழையும் நடத்தினார். உயர்நிலைக்கல்வியை முடித்த இவருக்கு தென்னக ரயில்வேயில் வேலை கிடைத்தது. வாழ்க்கை அனுபவங்களும், சூழல்களும் எழுதத்தூண்டவே சிறுகதை எழுதத் துவங்கினார். முதல் சிறுகதை 'சலீமா பேகம்' இவரது 22ம் வயதில் ஆனந்தவிகடனில் வெளியானது. விகடன் தந்த ஊக்குவிப்பால் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். கல்கி, கலைமகள், தினமணி கதிர், அமுதசுரபி, கதைக்கதிர் என பல இதழ்கள் இவரை அரவணைத்தன. இவரது 'மனிதன்' புதினம் ஆனந்தவிகடன் வெள்ளிவிழாப் போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. விகடனின் சிறந்த நாடகத்துக்கான விருதும், சிறந்த சிறுகதைக்கான விருதும் அதே ஆண்டில் இவருக்குக் கிடைத்தன. அப்படைப்புகள் இவரது எழுத்துத் திறனைப் பறைசாற்றின. தொடர்ந்து எழுதப் பல வாய்ப்புகள் வந்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், தொடர்கதை, வானொலி நாடகம், குறுந்தொடர்கள் என படைப்பின் பலதளங்களிலும் முத்திரையைப் பதித்தார்.

'மலர்ந்த மனம்', 'உயிர்நோன்பு', 'தீர்த்தக் கரையினிலே', 'சுயம்வரம்' போன்ற நாவல்களும், 'அன்பின் வழி', 'உணர்வின் விழிப்பு' போன்ற இவரது சிறுகதைத் தொகுதிகளும் முக்கியமானவை. பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்கள், மூன்று மேடைநாடகங்கள் எனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் வழங்கிய பங்களிப்பு மெச்சத்தக்கது.

சிறுகதைகளுக்காக இலக்கியச் சிந்தனை விருது உட்பட கலைமகள் இலக்கியப் பரிசு, அமுதசுரபி சிறுகதைப் போட்டிப் பரிசு எனப் பல பரிசுகளை இவர் பெற்றிருக்கிறார். இவரது 'பின்னணி' சிறுகதை, 'இலக்கியச் சிந்தனை'யின் பரிசுக்குரியதாய் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிற்காலத்தில் அதே அமைப்பின் தேர்வாளராக இயங்கும் வாய்ப்புக் கிடைத்த ராகவன், பேராசிரியர் இந்திராபார்த்தசாரதியின் 'அற்றது பற்றெனில்' என்ற சிறுகதையைத் தேர்ந்தெடுத்தார்.
தெளிந்த நீரோட்டம் போன்ற ஆற்றொழுக்கான நடை ராகவனுடையது. வாசகர்களைக் குழப்பும் உத்திகள், வார்த்தை ஜாலங்கள் ஏதும் இவரது படைப்புகளில் இருக்காது. யதார்த்தத்தை நேரடியாக மனதில் தைப்பதுபோல், அதேசமயம் மென்மையாக, சொல்வது இவரது பாணி. இவரது படைப்பின் அடிநாதமாக விளங்குவது 'அன்பு'தான்.

கவிஞர். திருலோக சீதாராமின் அன்பிற்குகந்தவராக விளங்கிய ராகவன் பாரதியின்மீதும் காந்தியின்மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். திருலோக சீதாராம், துறைவன், மீ.ப. சோமு, சுகி.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியோருடன் இணைந்து திருச்சி எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்த ராகவன், அதன் செயலாளராகவும் சீரிய முறையில் பணிபுரிந்தார். பல மாநாடுகளை நடத்தினார். இவரது தம்பியின் மகன்தான் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். ஏ.எஸ். ராகவனின் 'ஒன்றின் நிறம் இரண்டு' என்ற சிறுகதையே தானும் எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தைச் சிறுவயதில் தன்னில் தோற்றுவித்ததாகக் குறிப்பிடுகிறார் இந்திரா சௌந்தர்ராஜன்.

பிறரை நேசிப்பவனே உயர்ந்தமனிதன் என்பதையே தனது கொள்கையாக வைத்திருந்த ராகவன், இறுதிவரை புகழ் மாலைகளை அதிகம் விரும்பாமல் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே வாழ்ந்தார். தமிழ், ஆங்கிலம் இருமொழியிலும் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்த இவர், 85ம் வயதில், ஜூலை 8, 2012 அன்று காலமானார். எழுத்தாளர்கள் ஷைலஜா, ராஜரிஷி உட்பட இவருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். வெகுஜன இலக்கிய உலகில் ஆரவாரமின்றிப் பல சாதனைகளைச் செய்தவர் ஏ.எஸ். ராகவன்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline