Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
மேகலா இராமமூர்த்தி
நா. முத்துக்குமார்
- அரவிந்த்|மே 2014||(2 Comments)
Share:
தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியர் நா. முத்துக்குமார். சங்கத் தமிழும் சந்தத் தமிழும் கொஞ்சி விளையாடும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர். 'வீரநடை' தொடங்கி விரைவில் வெளியாக இருக்கும் 'சைவம்' வரை தொடர்ந்து 13 ஆண்டுகளாகத் தமது கவித்துவத்தால் ரசிகர்களைக் கட்டிப் போடுகிறவர். "வெயிலோடு விளையாடி" (வெயில்), "பறவையே எங்கு இருக்கிறாய்", "உனக்கென இருப்பேன்", "தேவதையை கண்டேன்", "நினைத்து நினைத்து பார்த்தேன்", "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை", "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" போன்ற எழில் கொஞ்சும் வரிகளால் கேட்போரின் இதயம் வருடியவர். கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக படங்களுக்கு அதிகப் பாடல்கள் எழுதியவர் என்ற வகையில் முன்னணிப் பாடலாசிரியர். அப்படி எழுதியவை பலவும் ஹிட் பாடல்கள். கலைமாமணி, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர், விஜய் டி.வி. சிறந்த பாடலாசிரியர், ஃபிலிம்ஃபேர் விருது (இரண்டு முறை), சிறந்த பாடலுக்கான தேசிய விருது, உட்படப் பல கௌரவங்களைப் பெற்றவர். இவரது கவிதைகளையும் பாடல்களையும் சிங்கப்பூர் பல்கலை உட்படப் பல கல்லூரிகளில் பாடமாக வைத்துள்ளனர். இவற்றை ஆய்ந்து பலர் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளனர். 2000 பாடல்கள் எழுதியிருக்கும் நா. முத்துக்குமார், இந்த ஆண்டு மட்டுமே 93 படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் (இந்த ஏப்ரல் வரை). ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் அவருடன் உரையாடியதிலிருந்து....

*****


கே: தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். அதுபற்றிச் சொல்ல முடியுமா?
ப: பேசும் படம் காலம் தொடங்கி கி.பி. 2000 வரையிலான தமிழ் திரைப்படப் பாடல்கள் பற்றிய ஆய்வை நான் முனைவர் பட்டத்துக்காகச் செய்தேன். பேசும்பட காலம், புராண காலம், சமூக காலம், தற்காலம் என பல்வேறு காலகட்டங்கள் அதில் அடங்கும். மதுரகவி பாஸ்கரதாஸ் முதல் பழநிபாரதி வரையிலான பாடலாசிரியர்களின் பாடல்களை அலசினேன். பாடல்கள் எப்படிப் பயன்பட்டன, சமூகத்தின் மீது அவற்றின் தாக்கம், பாடல்களுக்கு இருந்த முக்கியத்துவம், சமூகப் பங்களிப்பு என்பது பற்றியெல்லாம் அதில் விரிவாக ஆராய்ந்திருக்கிறேன். தமிழின் முதல் திரைப்பாடல் ஆசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ். அவர் ஆரம்பித்து வைத்த பாட்டுப் பயணம் கிட்டத்தட்ட 800, 900 பாடலாசிரியர்களால் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் அந்த ஆய்வேட்டைப் புத்தகமாக வெளியிட இருக்கிறேன்.

கே: உங்களது தந்தைதான் உங்களைச் செதுக்கியவர் என்று சொல்லலாமா?
ப: நிச்சயமாக. என் தந்தை ஒரு தமிழாசிரியர். ஒரு லட்சம் புத்தகங்களை அவர் சேமித்து வைத்திருந்தார். அவர் இரவு முழுதும் படித்துக்கொண்டே இருப்பார். சிறுவயதுமுதலே அதைப் பார்த்துப் பார்த்துப் படிக்க, எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு என் வாழ்வில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் படிக்க வேண்டியது எது என்பதை அவர் அறிமுகப்படுத்தினார். எழுத்து, வாசிப்பு என்று ஊக்குவித்தார். நான் பத்தாவது படிக்கும்போது என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவர அவரும் ஒரு முக்கிய காரணம். எனக்குப் பொறியியல் படிக்க வாய்ப்பு வந்தபோது, நான் மேற்கொண்டு தமிழ் படிக்கப்போகிறேன் என்று சொன்னபோதும் கூட அவர் தடை சொல்லவில்லை. என்னைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டார். இன்றைக்கு நான் ஒரு படைப்பாளி என்று சொல்லிக்கொள்வதை விட ஒரு வாசகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன், விரும்புகிறேன் என்றால் அதற்கு என் அப்பாவும் ஒரு மிக முக்கியக் காரணம்.

கே: உங்களைப் பாதித்த மிகப் பெரிய கவி ஆளுமைகள், பாடலாசிரியர்கள் யார், யார்?
ப: கவி ஆளுமைகள் என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. சங்க காலம் தொடங்கி பாரதி, பாரதிதாசன் பின்னர் கலாப்ரியா, விக்ரமாதித்தன், பசுவய்யா, கல்யாண்ஜி, ஆத்மாநாம், நகுலன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பாடலாசிரியர்களில் என் மனதுக்கு மிக நெருக்கமானவராக, ஒரு பல்கலைக்கழகமாக, தினந்தோறும் பூஜிக்கத் தகுந்தவராக நினைப்பது கவியரசு கண்ணதாசன் அவர்களைத்தான்.



கே: இன்றைக்கும் ஹிட் பாடல்கள் வரிசையில் இருக்கும் கேள்வியும் பதிலுமாக அமைந்த "நினைத்து நினைத்து பார்த்தேன்..." பாடலும் சூழலும் குறித்துச் சொல்லுங்களேன்...
ப: நண்பர் செல்வராகவன் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் இடம்பெற்ற பாடல் அது. இறந்து போன காதலியை நினைத்து காதலன் பாடுவதாக ஒரு பாடல் இருக்கும். அந்தக் காதலனுக்கு ஆறுதல் கூறி காதலி பாடுவதாக மற்றொரு பாடல் இருக்கும். இந்தப் பாடலுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. நான் பல பாடல்கள் எழுதியிருந்தாலும் இதற்கு இருக்கும் வரவேற்புக்குக் காரணம், இதிலிருக்கும் மெல்லிய சோகம்தான். (பாடலைக் கேட்க)

கே: உச்சரிப்புப் பிழையோடு பாடுவதைச் சிலர் 'ஸ்டைல்' என்கிறார்கள். சிலர் அதைக் 'காலமாற்றம்' என்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: என் பாடல்களில் கூடுமானவரை இவ்வாறு நேர்வதை நான் தவிர்க்கவே முயல்கிறேன். இப்போது தமிழை நன்கு அறிந்த பாடகர்கள் நிறையப் பேர் வந்திருக்கின்றனர். நன்றாக உச்சரிக்கின்றனர். அந்த 'ஸ்டைல்' பல வருடங்களுக்கு முன்னால் இருந்தது. தற்போது வழக்கொழிந்து போய்விட்டது. என் பாடல்களைப் பொருத்தவரையில் பாடகர்கள் பொருளுணர்ந்து சரியாகவே பாடுகிறார்கள்.

கே: குத்துப் பாடல்கள் தேவை தானா?
ப: குத்துப் பாடல்கள் என்பது ஒன்றும் ஒதுக்கப்பட வேண்டியதல்ல. காட்டுக்கு நடுவில் நெருப்பு மூட்டி, பறையடித்து ஆனந்தமாக ஆடிப்பாடிய சமூகம்தான் நம்முடையது. மூதாதையர்கள் ஆதிகாலத்தில் அப்படித்தான் வாழ்ந்தனர். அதனுடைய தொடர்ச்சி அல்லது நீட்சிதான் இந்தவகை துள்ளலோசைப் பாடல்கள் என்று சொல்லலாம். ஆகவே மெல்லிசைப் பாடல்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இவற்றுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

கே: ஆங்கிலம் கலந்து பாடல்கள் எழுதுவது அவசியம் தானா?
ப: இது இன்றைக்கு வந்தது என்று சொல்ல முடியாது. தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் என்று பல முன்னோடிப் பாடலாசிரியர்கள் கூட ஆங்கிலம் கலந்த பாடல்களை எழுதியிருக்கிறார்கள். தேவையானால், தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை. திணித்தால்தான் அது தவறு.

கே: காஞ்சிபுரத்தை மையமாக வைத்து நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் நூல் பற்றி...
ப: 'Silk City' என்ற தலைப்பில், ஏழெட்டு தலைமுறைகளின் வாழ்க்கை பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். காஞ்சிபுரத்தின் சமூகப் பின்னணி வரலாற்றை ஒரு குடும்பத்தின் வாயிலாகச் சொல்ல இருக்கிறேன். பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் அந்த நாவலை விரைவில் வெளியிட வேண்டும்.
கே: யுவன்ஷங்கர் ராஜாவுடனான உங்கள் பாடல்கள் எல்லாமே 'ஹிட்.' இதற்குக் காரணம் என்ன?
ப: யுவன் இப்போது நூறு படங்கள் செய்திருக்கிறார். அதில் கிட்டத்தட்ட 75 படங்களில் முழுப் பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் அதிகம் வேலை செய்தது யுவனுடன்தான். தொடர்ந்து ஒரு கவிஞரும் இசையமைப்பாளரும் இணைந்து பணிபுரியும் போது இருவருக்குமிடையே ஒரு புரிதல் ஏற்படுவது இயல்புதான். மேலும் யுவன் எப்போதும் நான் செய்வதில் குறுக்கிட மாட்டார். பாட்டை எழுதி முடித்தவுடனேயே "அதை பாடகரிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொல்லிவிடுவார். அந்த சுதந்திரமும், நம்பிக்கையும் பொறுப்புமே மீண்டும் மீண்டும் தரமான பாடல்களைக் கொடுக்க உந்துதலாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் யுவன் மட்டுமல்ல; நான் ராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ்குமார் எனப் பலருடனும் இணைந்து பணிபுரிந்திருக்கிறேன். ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறேன். யுவனுடன் இருவருமே பல காலமாக இணைந்து பணியாற்றி வருவதால், அந்த காம்பினேஷனில் நிறைய பாடல்கள் ஹிட் ஆகியிருப்பதால் "இவர்கள் இருவரும் இணைந்தால் பாடல்கள் சூப்பர் ஹிட்" என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு யுவனுக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. அடுத்த ஆண்டு நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

கே: "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடல் சூழல் குறித்தும், அதற்குக் கிடைத்த தேசிய விருது குறித்தும் சொல்லுங்கள்...
ப: தாய்-மகன் உறவைக் காட்ட தமிழில் எத்தனையோ படங்கள் இருக்கின்றன. பாடல்கள் இருக்கின்றன. ஆனால்; தந்தை-மகள் உறவைக் கூறும் படங்களும் குறைவு. பாடல்களும் மிகமிகக் குறைவு. தந்தை-மகள் உறவின் சிறப்பை எடுத்துக்காட்டுவதற்காக ராம் எடுத்த தங்க மீன்கள் படத்தில் அந்த உணர்வை, உறவைப் பாடலில் கொண்டு வந்ததற்காக இந்த விருது கிடைத்திருக்கிறது. இன்னும் தரமான பாடல்களைத் தமிழ்மக்களுக்குத் தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது தந்திருக்கிறது. இந்த விருதை என் குருநாதரும், எப்போதும் என் ஞானத்தந்தையாக நான் போற்றுபவரும், 'உன் நல்ல மனதுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்' என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் வாழ்த்தியவருமான இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது கிடைத்த சமயத்தில் அவர் இல்லையே என்பதை நினைக்கும்போது மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அதே சமயம் அவர் நடித்து இயக்கிய 'தலைமுறைகள்' படத்திற்கும் விருது கிடைத்திருப்பது வருத்தத்திலும் ஒரு சிறு மகிழ்ச்சியைத் தருகிறது. இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி, என் தந்தை நாகராஜன், ஞானத்தந்தை பாலுமகேந்திரா, இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதி, என் மகன் ஆதவன் நாகராஜன், இந்தப் பாடலுக்காக என்னைச் சந்திக்கும் போதெல்லாம் என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர்விட்ட பெற்றோர்கள் என அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

கே: இன்றைய திரைப்பாடல்கள், கவிஞர்கள் குறித்து...
ப: இன்றைக்குப் பல தரமான கவிஞர்கள் தரமான கவிதைகளைத் தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணதாசன் செய்ததுபோல் தத்துவம் கலந்த உறவுகள் கலந்த பாடல்களை அமைக்கும் வாய்ப்புகள் தற்போது கிடைப்பதில்லை. அந்தக் காலகட்டம் வேறு; தற்போதுள்ள காலகட்டம் வேறு. அவ்வகை வாய்ப்பு அமையும்போது, அது மாதிரியான கதைகளுக்கான களமாக தமிழ் சினிமா அமையும்போது நிச்சயம் இன்னமும் தரமான கவிதைகளும், பாடல்களும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார், யார்?
ப: நிறைய இருக்கிறார்கள். ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, மௌனி, எம்.வி. வெங்கட்ராம், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், ப. சிங்காரம், ஜி. நாகராஜன் துவங்கி இன்றைய ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என்று அது ஒரு மிகப்பெரிய லிஸ்ட். தமிழில் உலகத்தரத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிற குறைந்த பட்சம் ஒரு நூறு எழுத்தாளர்களை என்னால் இனம் கண்டு பட்டியலிட முடியும். தமிழ் உரைநடை என்பது இன்றைக்கு உலகத் தரத்தில் இருக்கிறது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

கே: இன்றைக்கு பெரும்பாலும் இல்லாமலே போய்விட்ட கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலியுறுத்துவது உங்களது "அணிலாடும் முன்றில்" தொடர். அதைப் பற்றிச் சொல்லுங்கள்...
ப: நான் 'அணிலாடும் முன்றில்' தொடர் எழுதியதே அது அடுத்த தலைமுறைக்கு, நம் தொப்புள்கொடி உறவுகளின் மேன்மைகளையும் அதன் பெருமைகளையும் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். அதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் அது பத்து பதிப்புகளையும் தாண்டி இன்றைக்கும் விற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான். தமிழர்கள் தங்களின் திருமணங்களிலும், பிறந்தநாள் போன்ற வீட்டு விசேஷங்களிலும் அந்த நூலைத் தாம்பூலப் பையில் போட்டுக் கொடுக்கின்றனர் என்பதை அறியும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாசகர்கள் முன்னெடுத்துச் செல்லும்போது நமது உறவுகளின் அருமை பிடிபடும். தேவை புரியவரும். அது நிச்சயம் சிதைந்த மனங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும்.

கே: எது உங்களை எழுத வைக்கிறது, உங்கள் கவிதா சக்தியை உயிர்ப்போடு வைத்திருக்கிறது?
ப: தொடர்ந்த வாசிப்பும் வாழ்க்கை பற்றிய அவதானிப்புமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கே: உங்கள் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை எப்போது எதிர்பார்க்கலாம்?
ப: இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து.



கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: எனது தாய் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். தந்தையும் சில ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்து விட்டார். மூன்று தம்பிகள். இரண்டு பேர் ஐ.டி. துறையில். ஒருவர் பிபிசியில் இருக்கிறார். மனைவி ஜீவலட்சுமி. மகன் ஆதவன் நாகராஜன் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அவர்மூலமாக என் தந்தையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: அப்படி ஏதும் திட்டங்கள் இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளவே விரும்புகிறேன்.

கே: புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் தமிழ் மொழிதான் உங்களுக்கும் தமிழ்நாட்டிற்குமான தொப்புள் கொடி உறவு. அந்தத் தொப்புள் கொடி உறவை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்துங்கள். வீட்டில் கூடுமானவரை குழந்தைகளிடம் தமிழிலேயே பேசுங்கள். தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அதன் பெருமையையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். நீங்கள்தான் அடுத்த நூற்றாண்டுத் தமிழை உலகெங்கும் கொண்டு செல்லப் போகிறீர்கள்.

இந்த மே மாதத்தில் நடக்க இருக்கும் TNFன் அமெரிக்கத் தமிழச்சங்கங்களின் கூட்டமைப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் கவிஞர் நா. முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த்

*****


நா. முத்துக்குமார்: முன் க(வி)தைச் சுருக்கம்
* பள்ளியில் படிக்கும்போதே துவங்கி விட்டது நா.முத்துக்குமாரின் கவிதை ஆர்வம். காஞ்சியில் நடக்கும் இலக்கிய விழாக்களில் பள்ளிச் சீருடையுடன் மேடை ஏறிக் கவிதை படித்தவர்.
* முதல் கவிதைத் தொகுப்பு (தூசிகள்) வெளியாகும்போது வயது 15.
* கணையாழி ஆண்டு விழாவில் சுஜாதா மேடையில் படித்துப் பாராட்டிய கவிதை "தூர்", முத்துக்குமாருக்கு இலக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கணையாழியின் கடைசி பக்கக் கட்டுரைகளில் முத்துக்குமாரின் கவிதைகளைப் பற்றி எழுதி பரவலான வாசக கவனத்தை ஏற்படுத்தினார் சுஜாதா. சுஜாதாவால் அடையாளம் காட்டப்பட்ட கவிஞர்களில் திரைப் பாடலாசிரியராக இன்று முதலிடத்தில் இருப்பவர் நா. முத்துக்குமார்.
* நாடறிந்த கவிஞராக அடையாளம் காட்டியது "பட்டாம்பூச்சிகள் விற்பவன்" கவிதைத் தொகுப்பு. வெளியிட்டு ஊக்குவித்தவர் கவிஞர் அறிவுமதி.
* மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையை கவிஞர் அறிவுமதியிடமிருந்தும், திரைப்பட இயக்க நுட்பத்தை இயக்குநர் பாலுமகேந்திராவிடமிருந்தும் கற்றுக் கொண்டார்.
* அஜித் நடித்த 'கிரீடம்' படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
* கவிஞராக மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்தவர். "பட்டாம் பூச்சி விற்பவன்", "நியூட்டனின் மூன்றாம் விதி", "ஆனா ஆவன்னா", "பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்", "குழந்தைகள் நிறைந்த வீடு" (கவிதைத் தொகுப்புகள்), "என்னைச் சந்திக்க கனவில் வராதே" (ஜப்பான் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு), "கண்பேசும் வார்த்தைகள்", "கிராமம் நகரம் மாநகரம்", "பால காண்டம்", "அணிலாடும் முன்றில்" போன்ற கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.
* தற்போது "வேடிக்கை பார்ப்பவன்" என்னும் சுயவரலாற்று அனுபவத்தொடரை ஆனந்தவிகடனில் எழுதி வருகிறார்.

*****


தூர்
"வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!

'சேறுடா சேறுடா' வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!"

(கணையாழி ஆண்டு விழாவில் சுஜாதா மேடையில் படித்துப் பாராட்டிய, நா. முத்துக்குமாருக்கு அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த கவிதை)

*****


தாத்தா-பேரன்
அப்பா-மகன் உறவுக்கும் தாத்தா-பேரன் உறவுக்கும் என்ன வித்தியாசம்?

அப்பா-மகன் உறவில் ஒரு ப்ரியம்; ஒரு வாஞ்சை; ஒரு தோழமை; ஒரு கண்டிப்பு; ஒரு கவனம்; ஒரு கவலை; ஒரு பதற்றம்; எல்லாவற்றிற்கும் மேல் ஓர் எதிர்பார்ப்பு எங்கோ அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கிறது. மாறாக, தாத்தா-பேரன் உறவில் ப்ரியமும், வாஞ்சையும், தோழமையும் தாண்டி இருவருக்குள்ளும் ஒரு குழந்தைமை ஆயிரமாயிரம் வண்ணங்களுடன் தலைகாட்டுகிறது. கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் குழந்தைகளும் முதியவர்களும் மட்டுமே. ஆகவே, அந்த உறவில் ஒரு தெய்வீகத் தன்மையைத் தரிசிக்க முடிகிறது.

ஒவ்வொரு மனிதனும் முதுமையின் கடைசிப் படிக்கட்டில் கால் வைக்கும் அதே நேரம், காலச் சக்கரத்தில் திரும்பி வந்து, குழந்தைமையின் முதல் படிக்கட்டிலும் கால் வைக்கிறான். பால்யத்தின் கண்கள் வழியாகப் பார்க்கையில் பிரமிப்புடன் தெரிந்த இந்தப் பிரபஞ்சம், முதுமையின் கண்கள் வழியாகப் பார்க்கையில், அதே பிரமிப்பு அடங்காமல் வடிவம் காட்டுகிறது. புள்ளியாகி வளர்ந்து தேய்ந்து மீண்டும் புள்ளியாகி இணையும் புள்ளிதான் தாத்தா-பேரன் உறவோ?

தன் கிளையில் தன் வண்ணத்தையும் வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த பூவைப் பற்றிய செடியின் பெருமிதம் அப்பா-மகன் உறவு எனில், தன் காலடியில் தன் விழுதும் தரைதொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும் அமைதியின் பெருநிலையே தாத்தா-பேரன் உறவோ?

நா. முத்துக்குமார் எழுதிய அணிலாடும் முன்றில் (விகடன் பிரசுரம்) நூலில் இருந்து...

*****


கிணறு தொலைத்த நிலா
ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வேலை இருந்தாலும் மகனுக்காக ஒதுக்கிவிடுவான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மகனிடம் இவன் சொன்னான், "நான்தான் பிஸ்கட் பாய்".

மகன் கேட்டான், "ஏம்பா நீங்க பிஸ்கட் பாய்?"

"ஏன்னா... நான் வாசனையா இருப்பேன்."

"அப்ப நான் யாருப்பா?"

"நீயா... ம்... நீ சாக்லேட் பாய்."

"சூப்பர்ப்பா."

"எங்கப்பா வந்து டைகர் பாய்."

"எதுக்குப்பா தாத்தா மட்டும் டைகர் பாய்?"

"ஏன்னா, அவரு வீரமா இருப்பாரு."

"அது சரி. உங்க அம்மா எந்த கேர்ள்னு சொல்லவே இல்லியே."

"அதுவா... அவங்க வந்து ஃப்ரூட்டி கேர்ள். ஏன்னா ஸ்வீட்டாப் பேசுவாங்க."

"அப்ப எங்கம்மா?" என்று மகன் கேட்க, இவன் மனைவியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, "உங்கம்மாவா? ம்... உங்கம்மா வந்து சில்லி கேர்ள்" என்றான்.

"சில்லி கேர்ள்னா என்னப்பா?" என்று மகன் கேட்க, "சில்லி கேர்ள்னா எப்பவுமே கோபமா, காரமா இருப்பாங்க" என்று இவன் பதில் சொன்னான்.

"உங்கம்மா மட்டும் ஃப்ரூட்டி கேர்ள், எங்கம்மா மட்டும் சில்லி கேர்ளா?" என்று மகன் தாவி வந்து கழுத்தைப் பிடித்துக் கேட்கவும், இவன் மூச்சுத் திணறியபடி "இல்லடா ராஜா, தெரியாம சொல்லிட்டேன்" என்றான்.

"அப்ப எங்கம்மாவை ஐஸ்க்ரீம் கேர்ள்னு சொல்லுங்க. அப்பத்தான் கைய எடுப்பேன்" என்று மகன் மிரட்டவும், "சரிடா உங்கம்மா ஐஸ்க்ரீம் கேர்ள்தான்" என்று இவன் ஒப்புக்கொண்டான். பின்பு கணிப்பொறியில் வீடியோ கேம்ஸ் விளையாடிவிட்டு, "அப்பா... ஏதாவது விடுகதை சொல்லுப்பா" என்று திரும்பி வந்தான்.

"எங்க வீட்டுக் கிணத்துல வெள்ளிக் கிண்ணம் மிதக்குது! அது என்ன?" என்று இவன் கேட்டதும்,

"என்னப்பா அது?" என்றான் மகன்.

"நிலாடா" என்றான்.

"அது எப்பிடிப்பா கிணத்துல மிதக்கும்?" என்று மகன் ஆச்சரியப்பட, "அடுத்த வாரம் காஞ்சிபுரம் போகும்போது நேர்ல காட்டுறேன்" என்று அப்போதைக்கு சமாதானப்படுத்தினான்.

கிணறே இல்லாத மாநகரத்தில் நிலவின் பிம்பத்துக்கு இவன் எங்கே போவான்?

நா. முத்துக்குமார் ஆனந்தவிகடனில் எழுதிவரும் "வேடிக்கை பார்ப்பவன்" தொடரிலிருந்து
More

மேகலா இராமமூர்த்தி
Share: 




© Copyright 2020 Tamilonline