Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
குற்றம் பார்க்கின்....
யாருக்கு நன்றி!
- லக்ஷ்மி சங்கர்|மே 2014||(2 Comments)
Share:
முரளியின் வீட்டில் தேங்க்ஸ்கிவிங் டே அன்று பார்ட்டி. ஆண், பெண், குழந்தை, குட்டி என ஒரு 30 பேர் கூடியிருந்தோம்.

முரளியின் மனைவி மாலினி நன்றாகச் சமைப்பாள். எல்லோரும் பஜ்ஜி, பக்கோடா என்று ஒரு வெட்டு வெட்டிவிட்டுக் கையில் கோக், ஸ்பிரைட் என்று வைத்துக்கொண்டு சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.

திடீரென்று ஓர் எவர்சில்வர் தட்டைக் கரண்டிக் காம்பினால் தட்டினான் முரளி. "எல்லாரும் நல்லா கவனியுங்க. இப்போ இங்க வந்திருக்கறவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா எழுந்து வந்து எல்லார் முன்னாடியும் நின்னு தாங்க வாழ்க்கைல எதுக்கு, யாருக்கு நன்றி சொல்ல விரும்பறாங்கனு சொல்லணும்" என்றான்.

"என்னப்பா இது! ஒரே அமெரிக்கன் ஸ்டைலா இருக்கு?"

"முன்னாடியே நோட்டீஸ் குடுத்திருக்கக் கூடாது? இப்படி டக்குனு எழுந்து எதையாவது சொல்லுனா எப்படி?" இப்படிப் பல குரல்கள்.

"நா முன்னாடியே சொல்லியிருந்தா, நீங்கள்ளாம் எதையாவது ரெடி பண்ணிட்டு வந்து சொல்லுவீங்க. அது சினிமா டயலாக் மாதிரி இருக்கும்னுதான் சொல்லல. இப்பவும் யாருக்கும் யோசிக்க டைம் கிடையாது. எல்லாரும் சொல்றத ஒடனே ஆரம்பிக்கணும். எல்லாரும் சொல்லணும், குழந்தைகள் கூட. நோ எக்ஸப்ஷன்."

குழந்தைகள் சொன்னது வேடிக்கையாக இருந்தது.

5 வயது ரம்யா "தேங்க் யூ ஃபார் த கோக், மாலினி ஆன்டி" என்றது.

என் முறை வந்தது. எழுந்து போய் எல்லோர் முன்னும் நின்று கொண்டேன். ஒருநொடி கண்களை மூடிக்கொண்டேன். அம்மாவின் முகம் மனத்திரையில் நிழலாடியது. எனக்குச் சிறு வயதிலிருந்தே ஆஸ்துமா தொந்தரவு உண்டு. இந்தியாவில் இருக்கும்பொழுது அடிக்கடி இழுப்பு வந்துவிடும். நான் மூச்சுவிட முடியாமல் திணறும்போது அம்மா பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பாள். நெஞ்சை நீவிவிடுவாள். நான் அசந்து தூங்கும்வரை அந்தண்டை இந்தண்டை போகமாட்டாள். அம்மா ராத்திரிபூரா முழித்துக் கொண்டிருந்தாலும், அலுப்பைப் பாராட்டாமல், வழக்கம்போல் காலை ஐந்து மணிக்குக் குளித்துவிட்டு நடமாடுவாள்.

"நான் என் அம்மாவிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அலுக்காமல் சலிக்காமல் இழுப்பு வந்தபோதெல்லாம் என்னைப் பார்த்துக்கொண்டதற்கு" என்றேன். என் மனைவி சாந்தா, தனக்கு வாழ்வில் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி என்று ஏதோ சொன்னாள்.

எல்லோரும் சொல்லி முடித்த பிறகு சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப மணி பத்தரையாகிவிட்டது.

காரில் ஏறியவுடனேயே பெண்ணும் பிள்ளையும் ஹெட்ஃபோனைக் காதில் மாட்டிக்கொண்டு எதையோ கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

கார் ஒட்டிக்கொண்டிருந்த நான், சாந்தாவைப் பார்த்து "ஏய்! என்ன ரொம்ப கொயட்டா இருக்கே? என்ன ஸ்கூப்? யார் வீட்டில் என்ன நடக்கறது? நீங்க லேடீஸ்லாஞ் சேந்து யார் மண்டய உருட்டுனீங்க?" என்றேன்.

அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

"என்ன சாந்தா? உடம்பு கிடம்பு சரியில்லியா?" என்று கேட்டுவிட்டு வலது கையால் அவளைத் தொடப் பார்த்தேன். என் கையைக் கோபமாகத் தட்டிவிட்டாள்.

"எதுக்குக் கோவம்னு சொல்லிட்டுக் கோச்சுக்கோ. நா என்ன இட்சிணியா? தேவதையா? உம்மனசுல என்ன இருக்குனு நீ சொல்லாமயே தெரிஞ்சுக்கறதுக்கு?"

"நீங்க யாருக்கு நன்றி சொன்னீங்க?"

"ஏன்? என் அம்மாவுக்குத்தான்."

அதில் என்ன தவறு இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை.
"நாம அமெரிக்காவுக்கு வந்த புதுசுல 5, 6 வருஷம் அட்லாண்டாவுல இருந்தோமே, ஞாபகம் இருக்கா? அப்பல்லாம் பூக்கற சீசன் வந்தாச்சுன்னாலே உங்குளுக்கு மூச்சு இழுக்க ஆரம்பிச்சுடும். சில சமயம் உங்களுக்கு ரொம்ப முடியாமப் போய், சின்னப் பொண்ணா இருந்த மாலாவ உலுக்கி எழுப்பிண்டு, கைக்குழந்த ராமக் கையில இடுக்கிண்டு எமர்ஜன்சிக்கு நடுராத்திரில உங்கள நிறய தடவ அழச்சுண்டு போயிருக்கேன். அதெல்லாம் உங்களுக்கு மறந்து போச்சா? எனக்கு உடம்பு சரியில்லாத போதெல்லாம் என்னைப் பார்த்துக்கொண்ட என் அம்மாவுக்கும், என் மனைவிக்கும் நன்றின்னு நீங்க சொல்லியிருக்கலாமே?"

"ஐயோ, சாந்தா? நீ செஞ்சதெல்லாம் நிஜந்தான். நான் இல்லங்கல. திடீர்னு யாருக்காவது நன்றி சொல்லுன்ன உடனே என் சின்ன வயசு ஞாபகம் வந்துது. நீ என்னை, எப்பவுமே நல்லாதான் பாத்துக்கற. இப்ப வேணா நன்றினு சொல்லட்டுமா?"

"முகுந்த் சொன்னதக் கவனிச்சீங்களா? ராதாவை என்னிடம் கொண்டு வந்து சேத்த கடவுளுக்கு நன்றின்னார். இத்தனைக்கும் ராதாவுக்கு முகுந்த் ஹெல்ப் பண்ற மாதிரி யாரும் மனைவிக்குப் பண்றதில்ல. கிச்சன்லயா, லாண்டிரி பண்றதுலயா, கொழந்தைகள ரெடி பண்றதுலயா - எதுவுமே ரெண்டு பேரும் சேந்து சேந்து பண்றாங்க. நீங்க மாசத்துல பாதி நா ஊர்ல இருக்கறதில்ல. எல்லாத்தையும் நாந்தான் பாத்துக்க வேண்டியிருக்கு. ஊர்ல இருக்கற நாள்லயும் எந்த ஹெல்பும் கிடயாது. கேட்டா, எனக்கு வீட்டு வேல செஞ்சு பழக்கம் இல்ல. கூட்டுக்குடும்பத்துல இருந்ததுனால வீட்ல நிறய பெண்கள். வேல பண்ண வேண்டிய அவசியமே இல்லாமப் போச்சு. எனக்கு எதுவுந் தெரியாதுங்க வேண்டியது. தெரியாட்டா என்ன? கத்துக்க வேண்டியதுதான். எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சுண்டா பொறக்கறாங்க?"

நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

"என்ன ஸ்கூப்னு கேட்டீங்க இல்ல முதல்ல? போன வாரம் முகுந்த் வாழப்பூ வாங்கிண்டு வந்தாராம். நீங்களும் என்னோட உக்காந்து ஆயணும். ஒவ்வொரு பூவுலேந்தும் கள்ளன்லாம் எடுத்துப் போடணும்னு ராதா சொன்னாளாம். அவரும் பண்ணினாராம். வாழப்பூ பருப்பு உசிலியல எப்பவுமே ஒரு கை பாப்பேன். ஆயறதுல இவ்வளவு கஷ்டம் இருக்கா? லேடீஸ்லாம் எவ்வளவு வேல பண்றீங்க என்றாராம். எல்லாத்துக்கும் வாழ்க்கைல கொடுத்து வச்சிருக்கணும்," பொரிந்து தள்ளினாள் சாந்தா.

நான் சமயம் தெரியாமல் "ஏன் சாந்தா, அடுத்த நாள் முகுந்த் வேலைக்குப் போகும்போது கைக்கறைக்கு என்ன பண்ணானாந் தெரியுமா?" என்றேன்.

"பேசாதீங்க. என் கோவத்தக் கிளறாதீங்க" சாந்தா சீறினாள்.

பின்னர் வீடு திரும்பும் வரையில் காரில் நிசப்தம். அவரவர் உடையை மாற்றிக்கொண்டு படுக்கையில் தொப்பென்று விழுந்தோம்.

வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களும் நானும் சாந்தாவும் சகஜமாக ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஏதோ நிழற்படம்போல் நாட்களை ஓட்டினோம்.

திங்கட்கிழமை எனக்கு ஜெர்மனிக்குப் போக வேண்டியிருந்தது. கிளம்பும்பொழுது சாந்தா இருக்குமிடம் தேடிப்போனேன்.

"சனிக்கிழம சாயந்திரம் வந்துடுவேன். எல்லாஞ் சரியாப் போச்சுன்னா டின்னர் டைமுக்கு வீட்ல இருக்கணும்".

"சரி. ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க. முடிஞ்சா ஃபோன் பண்ணுங்க" என்றாள்.

ஊர் திரும்பியவுடன் எதுவுமே நடக்காத மாதிரி நாங்கள் சகஜமாகப் பேச ஆரம்பித்தோம். எப்படியோ, சிறு சிறு சச்சரவுகள், சந்தோஷங்கள் என்று நாட்கள் ஒடி அடுத்த தேங்ஸ்கிவிங் டே வந்துவிட்டது.

முரளி நேற்று ஃபோன் பண்ணி "அடுத்த வாரம் தேங்க்ஸ்கிவிங் டே பார்ட்டிக்கு எங்க வீட்டுக்கு வர்றியா?" என்று கேட்டான்.

நான் வரமுடியாது, வேலையிருக்கிறது என்று சொன்னது சாந்தாவுக்குத் தெரியாது.

லக்ஷ்மி சங்கர்
More

குற்றம் பார்க்கின்....
Share: 




© Copyright 2020 Tamilonline