Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | பயணம் | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | சமயம் | Events Calendar
Tamil Unicode / English Search
நேர்காணல்
தமிழ் மொழியை கற்றுத்தரும் தமிழிணையப் பல்கலைக் கழகம் - முனைவர் மு. பொன்னவைக்கோ
பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்
- மணி மு.மணிவண்ணன்|மார்ச் 2002|
Share:
Click Here Enlargeபேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர். புறநானூற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Four Hundred Poems of War and Wisdom’ என்ற இவருடைய நூலுக்கு ‘ஏ.கே.ராமானுஜன் பரிசு’ வழங்கப்பட்டுள்ளது. கணினியில் தமிழில் எழுத மென்பொருள் செய்தவர்களில் முன்னோடி.

இவருடைய முயற்சியால் ‘தமிழ்ப் பீடம்’ (Tamil Chair) ஒன்று இந்தப் பல்கலைக் கழகத்தில் 1996இல் நிறுவப்பட்டது. ஹார்வார்டு பல் கலைக் கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்ற இவர் ருஷியன், பிரென்ச்சு, ஜெர்மன், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளைப் பயின்று அவற்றின் இலக்கிய இலக்கணங்களைத் தேர்ந்திருக்கிறார். 1969இல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிற்றியிருக்கிறார். இவர் இந்திய மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்ப்பின் மூலம் ஆழ்ந்து கற்றவர். புறநானூறு, கம்பராமாயணம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தெளிவாகத் தமிழ் பேசும் இவர் கவுசல்யா அவர்களை மணந்துகொண்டிருக்கிறார். திருமதி கவுசல்யா ஹார்ட்டும்கூட பெர்க்கிலியில் தமிழ்த்துறையில் பணிசெய்கிறார். இதோ இவர்களுடன் ஒரு நேர்காணல்:

உங்களுடைய ‘The Poems of Ancient Tamil’ நூல் வெளிவந்து இப்போது 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்குத் திருத்திய பதிப்பு வெளியிடும் எண்ணம் உண்டா?

மறுபதிப்பு - ஆனால் திருத்திய பதிப்பல்ல - இந்தியாவில் வெளிவந்துவிட்டது. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இதைப் பதிப்பித்திருக்கிறது.

அதை எழுதும்போது நீங்கள் ஓர் இளைஞர், தமிழில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியிருந்தீர்கள். இந்த இடைப் பட்ட காலத்தில் நீங்கள் வெகுதூரம் வந்திருக் கலாம். சொன்ன கருத்துகளில் ஏதாவது மாறுபாடு உண்டா?

இல்லை. அதில் சொல்லப்பட்டவை இன்னும் எனக்கு ஒப்புடையனதாம். சில கருத்துகள் சர்ச்சைக்குரியனவாக இருக்கலாம். அதில் தவறில்லை. சில எண்ணங்களில் சற்றே அதிகத் தெளிவேற்பட்டிருக்கலாம், ஆனால் திருத்திய பதிப்பு வெளியிடுமளவுக்கல்ல.

சிறிய வயதில் செய்ததனால் அத்தனை துணிச்சலுடன் எழுதிவிட்டேன். வயதாக ஆக அவ்வளவு தைரியம் இருப்பதில்லை. "உதாரணமாக வடமொழி மற்றும் பிராகிருத இலக்கியங்களுக்கும் தமிழுக்கும் இடையே யான தொடர்பைப் பற்றிய என் கருத்து மாறவே இல்லை." பார்த்தாலே தெரிவதுதானே அது. சர்ச்சைக்கு உரியதானால் என்ன?

மிகவும் விவாதிக்கப் பட்டதல்லவா...

மகாராஷ்டிரத்திலிருந்து தென்னிந்தியாவரை ஒரு நாட்டுப்புறக் கலாச்சாரம் இருந்ததையும் அதிலிருந்து தமிழ், மராட்டி மற்றும் இதர இலக்கியங்களாக உருவாகியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதில் மிகப் பரவலான திராவிட அடித்தளத்தைப் பார்க்கமுடிகிறது. தெற்காசியா முழுவதும் இந்த திராவிட அடித்தளம் பரவிக்கிடந்தது அக்காலத்தில். திராவிடச் சொற்றொடர் அமைப்பை (syntax) வடமொழி உட்படப் பல வடவிந்திய மொழிகளில் காணமுடிகிறது.

உங்கள் புத்தகம் இத்தனை பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தீர்களா?

நல்லதுதானே. சரியோ தவறோ, ஒரு புதிய கோணத்தில் எல்லாவற்றையும் பார்க்கத் தூண்டியது என் புத்தகம். உதாரணமாகப் பழந்தமிழ்நாட்டில் ஜாதியைப் பற்றி நான் சொல்லியிருப்பது இன்னும் விவாதிக்கப் படுகிறது. விவாதம் நல்லதுதான்.

நீங்களோ மற்றவர்களோ இதுவரையில் ஆராயாத கூறுகள் ஏதேனும் தமிழ்ப் பண்பாட்டில் உள்ளனவா?

ஆமாம். பழந்தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிப் பேசும்போதே தமிழர்கள் ஓர் இலட்சிய (ideal) உலகம் போலப் பேசுகிறார்கள். அந்தக் கலாச்சாரம் செழுமையானதாகவும் சுவையான தாவும் இருந்தது. அதே நேரத்தில் வன்முறை மிகுந்ததாக இருந்தது. சங்கப் பாடல்கள் ஒரு வீரியமான சமுதாயத்தைச் சித்தரிக்கின்றன. பாடல்களில் ஒரு சக்தி மிளிர்கிறது. வடமொழிக் கலாச்சாரம் வருவதற்கு முந்தையது அது. அம்மக்கள் குடிப்பதைப் பற்றியோ, அசைவம் உண்பதைப் பற்றியோ குறைத்து எண்ண வில்லை. ஆனால் தெய்வ நம்பிக்கை இருந்தது. படை மறமும் மிகுத்திருந்தது. இப்படி சுவை யானதொரு கலவை வாழ்க்கையைச் சங்க இலக்கியம் கண்முன் நிறுத்துகிறது. வடமொழி யில் இதைப் பார்க்க முடிவதில்லை.

மக்கள் சாதாரணமாக நினைப்பதைவிட சங்க இலக்கியம் மகத்தானது. புறநானூறு சொல்லும் செய்திகளைப் பயின்றே வாழ்நாள் முழுவதும் கழித்துவிடலாம். அப்பொழுதும் புதிய புதிய செய்திகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

புறநானூறு மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றத்தில் பேசும்போது நீங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்தக் காலகட்டத்தில் பிறமொழி களில் கடவுளரைப் பற்றி அல்லது புராணப் பாத்திரங்களைப் பற்றிப் பாடியிருக்கும். தமிழ் இலக்கியம் சாதாரண மனிதரின் இன்பதுன்பங் களைப் பாடுகிறது என்று கூறினீர்கள்.

ஆமாம். புறநானூறை எடுத்துக்கொள்ளுங்கள். அது அரசரைப் பற்றி இருக்கும். அப்படி அரசனைப் பாடுகையிலும் சமூகத்தின் அடி மட்டத்தில் இருக்கும் பாணர், கிணையர், விறலியர் போன்றவரின் வாழ்க்கையைக் கூறும். உண்மையான பழைய இந்தியா புறநானூறு காட்டுவதுதான். கிராமங்களில் மக்கள் வாழ்ந்த முறையை அதுதான் காட்டுகிறது. பண்டிதர் களோ வடமொழி இலக்கியங்களைப் படித்து விட்டு மேல்தட்டு வாழ்முறையே பழங்கால வாழ்முறையாகக் காட்டிவிடுகிறார்கள். அதற்குச் சரியான மாற்று இலக்கியம் தமிழில்தான் உள்ளது.

“இந்தியாவின் கிரேக்கர்கள் தமிழர்” என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள்...

ஐயோ, அப்படிச் சொன்னேனா?(சிரிக்கிறார்). அது ஓரளவு உண்மைதானே. கிரேக்க இலக் கியம் மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் இலக்கியத்தின் விரிவு அதற்குக் கிடையாது. காளிதாசனை எடுத்துக் கொள்ளுங்களேன், எதைப் பற்றி எழுதுகிறான். பிற உலகிலுள்ளோரைப் பற்றியல்லவா? அதுவே கம்பன் கடவுள் அவதாரத்தைப் பற்றிப் பேசும் போதுகூட எத்தனை நன்றாக மானிட உலகை விவரிக்கிறான். வெகு அழகாக ஒரு கோழிச் சண்டையைப் பற்றிப் பாடியிருக்கிறான். தமிழ் இலக்கியத்தின் வீரியம் அதில்தான் இருக்கிறது.

இலக்கிய அன்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் குதிரை ஓடுகிற சந்தத்தை ருஷிய மொழியிலும், கம்பராமாயணத்திலும், பிரெஞ்சிலும் சொல்லிக் காட்டினீர்கள்.

அத்தகைய சந்த ஒலி மரபைப் பல மொழி களிலும் காணலாம். ஆனால் யாப்பிலக்கணம் தமிழில்தான் மிகவும் சிக்கலானது. ரமண மகரிஷி வடமொழியிலும் தமிழிலும் கவிதை எழுதுவார். வெண்பாதான் எழுதுவதற்கே மிகச் சிக்கலானது என்று அவர் சொல்வது வழக்கம். தமிழ்ச் சந்தம் மிக மேனிலையடைந்தது. கம்பனைப் பாருங்கள், அவன் சொல்லும் இடத்திற்கேற்ப எப்படிப் பாடல்களில் சந்தம் வந்து விழுகிறதென்பது மிக வியப்பூட்டுவது.

கம்பராமாயணம், ஒரு மொழிபெயர்ப்பு நூலானாலும், உலகின் மிகச்சிறந்ததென நீங்கள் கூறக் காரணம்?

மொழிபெயர்ப்பா? இல்லவே இல்லை. வட மொழிக் கதையை எடுத்துக் கொண்டு மறுபடைப்புச் செய்திருக்கிறான் கம்பன். அவனுடைய ராமாயணம் மறத்துக்கும் அறத்துக்கும் இடையிலான போராட்டத்தைச் சித்தரிக்கிறது. அறம் என்பது வடமொழி ‘தர்மம்’ என்பதைவிடப் பொருளாழம் மிகுந்தது. ராமன் அறத்திற்கும் ராவணன் மறத்திற்கும் பிரதிநிதி களாக வருகிறார்கள். நிறையப் பேருக்கு ராவணன் ஓர் அந்தணன் என்பது தெரியாது. ஆகவே, சிலர் நம்புவதுபோல ராமாயணம் வடக்குக்கும் தெற்குக்குமான சண்டையல்ல.

கம்பனுடைய பேராற்றலைப் பாருங்கள் - அவன் படைத்த எல்லாப் பாத்திரங்களுமே ரசிக்கத்தக்கவை. வால்மீகி, துளசிதாசரை யெல்லாம் படித்தால் ராவணனைப் பிடிக்காது. ஆனால் கம்பன் யாரைப்பற்றிப் பேசினாலும் சுவையாகச் செய்வான். அவனுடைய பார்வை நகர்ந்துகொண்டே இருக்கும். வெறும் நல்லதுக் கும் கெட்டதுக்குமான சண்டைமட்டுமல்ல அவன் காவியம்.

கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தோடு ஒப்பிடமுடியுமா?

சிலம்பு ஒரு மிகச்சிறந்த நூல். நல்ல நயமான கவிதைகள் அதில் உள்ளன. ஆனால் இரண்டும் வித்தியாசமானவை. கம்பராமாயணத்தில் இருக்கும் ஆழம் அதில் கிடையாது என்பது என் கருத்து.

சங்ககாலத்துக்கும் பக்தி இலக்கியக் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தை சிலம்பு சித்திரிக்கிறது, இல்லையா?

நீங்கள் சொல்வது சரிதான். எல்லாமே அவரவர் பார்வையைப் பொறுத்ததுதான் அல்லவா? எனக்கு கம்பராமாயணம் அதிகம் பிடிக்கும். மணிமேகலை, குண்டலகேசி (அதில் கிடைத்தவரை) ஆகியவை கூட நல்ல நூல்கள் தாம். ஆனாலும் கம்பராமாயணத்தைப் போலச் சிறந்த இலக்கியம் எனக் கூற மாட்டேன்.

கடமைக்கும் நியாயத்துக்குமான போராட்டத்தைப் பற்றி ஒருமுறை நீங்கள் இவ்வாறு கூறினீர்கள்: “பகவத்கீதை ஒரு பழைய வட இந்திய வழியைத் தருகிறது. ஒருவன் கடமையைச் செய்யவேண்டும், பலனைக் கடவுளுக்கு அர்ப்பணித்துவிடவேண்டுமென்று. தென்னிந்தியத் தீர்வு அத்தனை எளிதானதல்ல. கடமையையும் செய்யவேண்டும், அது நெறிவழுவாமலும் இருக்கவேண்டும்”. ஆரண்ய காண்டத்தைப் பற்றிப் பேசுகையில் நீங்கள் சொன்னது இது.

ஓ, நான் சொன்னேனா? (பலத்த சிரிப்பு). திருக்குறளை யோசித்துப் பாருங்கள். ஆலபர்ட் சுவைட்சர், நல்ல கிறித்தவர் (நான் கிறித்த வனல்ல), திருக்குறளில் பைபிளின் நீதிகளைக் கண்டார். அந்நூலை மிகப் போற்றினார். அவருக் குக் கீதை பிடிக்காது. ஏனென்றால் அது அறநெறியை வலியுறுத்தவில்லை. குறளோ அன்பு, கடமை இரண்டையும் வலியுறுத்தியது. சங்க நூலில் பாருங்கள்: நன்னன் என்னும் அரசன் ஒரு அபூர்வமான கனியைப் பறித்துத் தின்றுவிட்ட இளம்பெண்ணைக் கொன்றுவிடுகிறான். அவன் நரகத்துக்குப் போகிறான். ஆனால் அவன் அரசன் என்ற முறையில் கடமையைத்தானே செய்திருக்கிறான்.

அதேபோல “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” பாடலைப் பாருங்கள். அது ஒரு சிறப்பான, தமிழருக்கே உரிய ஒரு பார்வையைச் சொல் கிறது. அங்கேதான் சிலம்பு முரண்படுகிறது. அது ஊழ்வினை விஞ்சிநிற்கும் என எந்திரமயமான நீதி பேசுகிறது. ஆனால் யாதும் ஊரே பாடலோ பெரியோரைப் புகழ்வதோ,அதைவிடச் சிறியோ ரை இகழ்வதோ செய்யோம் எனப் பேசுகிறது. மேன்மையும் கீழ்மையும் வருவது ஊழ்வினையா லானாலும் அது எமக்குப் பொருட்டல்ல என்பது சிறப்பல்லவா? வடமொழி மரபில் இந்தப் பார்வையைக் காணமுடியாது.

நீங்கள் பெர்க்கிலியில் தமிழ் இருக்கையை (Tamil Chair) ஏற்படுத்தி அதை நிர்வகிக்கும் பேராசிரியர். அதனை ஏற்படுத்தியதன் நோக்கங்களைக் கூறமுடியுமா?

தமிழ் மேதைமையைப் பரப்புவது நோக்கம். இந்த இருக்கைக்கான நிதிமூலம் மாணவர்கள் தமிழ் ஆராய்ச்சிக்கு உதவுவது ஒரு வழி. நான் ஒருவன் ஐந்து தமிழறிஞர்களை உருவாக்கினால் அவர்கள் இன்னும் பலரை உருவாக்குவர். அப்படித்தான் வட அமெரிக்க மண்ணில் தமிழைப் பரப்பமுடியும். இது முதல் படிதான், முக்கியமான முதல்படி. அதே சமயத்தில் இந்தியாவிலிருந்து தமிழறிஞர்களை அழைத்து மாணவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்விக் கவும் இந்த நிதியைப் பயன்படுத்துகிறோம்.

தவிரவும் வருடந்தோறும் தமிழ்விழா நடத்து கிறோம். மாணவர்களின் பெற்றோர்கள் அங்கு வந்து பார்த்து தம் மக்கள் இவ்வளவு நன்றாகத் தமிழ் பயின்றிருக்கிறார்களே என்று தெரிந்து மகிழ்வார்கள்.

உங்கள் நோக்கம் எவ்வளவு தூரம் நிறைவேறியிருக்கிறது?

ஐந்து வருட காலம் மிகைக்குறைவானது. ஆனாலும் என் மாணவர்கள் உலகின் பல பகுதிகளில் தமிழ் அல்லது மதம் பயிற்றுவிக் கிறார்கள். தமிழல்லாத பாடங்களை இவர்கள் பயிற்றுவித்தாலும் நிறையத் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவார்கள். தமிழ் பரவ இது ஒரு நல்ல வழி அல்லவா? டெக்ஸாஸில் தமிழ்க் கல்வி தொடங்கியிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் ஏராளமாக இருக்கும் டொராண் டோவில் ஏன் தமிழ்த்துறை தொடங்கவில்லை என்பது எனக்கு வியப்பளிக்கிறது. தலைக்கு 5 டாலர் கொடுத்தால்கூட பெரும் பணம் சேரும். இங்கிருக்கும் தமிழர் தம்மை இம்மண்ணோடு சேர்த்துப் பார்ப்பதில்லை. ஒருநாள் ஊர் திரும்பிவிடுவோம் என்றுதான் நம்புகிறார்கள். அது நடவாது. பெரும்பாலோர் இங்குதான் இருக்கப்போகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் இம்மண்ணில் தம் சந்ததியினருக்காகவாவது தமிழ்க் கல்விக்கான வசதிகளை நிறுவி ஆதரிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைகள் கல்லூரிக்குப் போனால் முழுக்கமுழுக்க ஐரோப்பியரைப் பற்றித்தான் படிப்பார்கள். தன் மொழிப்பாரம்பரியத்தை எப்படித் தெரிந்துகொள்வார்கள்?

பெர்க்கிலியில் பிரெஞ்சுத்துறை மிகப் பெரியது. உலகின் மூன்றிலொரு பகுதியான தெற்காசிய, தென்கிழக்காசியத் துறையோ அதில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கும்!

நீங்கள் தமிழ் பயிலத்தொடங்கியது பற்றி...?

ஹார்வார்டில் பட்டப்படிப்புக்கு நான் எடுத்துக் கொண்டது இயற்பியல்தான். என் அறைத் துணைவர் வடமொழி படித்தார். உலகின் மிகப் பழமையான ஒரு மொழியை அவர் படிப்பதாகச் சொன்னதும் அந்த வகுப்புக்குப் போனேன். போன இடத்தில் அதைவிடவும் தொன்மை யானது தமிழ் என்று தெரிந்ததும் தமிழுக்கு ஈர்க்கப்பட்டேன். தமிழ்க் கல்வி ஹார்வார்டில் இல்லாததால் விஸ்கான்ஸினுக்குச் சென்றேன்.

அங்கே பேராசிரியர் ஏ.கே. ராமானுஜம் இருந்தார். அவரிடம் படித்தேன். மைசூரில் பிறந்து ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய அவருக்கு இங்கு வந்தபின் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் செய்யப்பட்ட முதல் நல்ல மொழிபெயர்ப்பு அவருடைய ‘Interior Landscapes’ (குறுந் தொகை) என்றுதான் சொல்லவேண்டும்.

என்னுடைய ‘Four Hundred Songs of War andWisdom’ என்ற புறநானூறு மொழிபெயர்ப்பு நூலுக்கு ‘ஏ.கே. ராமானுஜம் பரிசு’ அண்மையில் கொடுக்கப்பட்டுள்ளது. (இவருடைய நூல்களின் பட்டியலுக்கு பெட்டிச் செய்தி பார்க்க).

நீங்கள் பழகிய தமிழ் அறிஞர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

பேரா. க. கைலாசபதி, பேரா. மறைமலை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு வந்துவிட்டுத் திரும்பியதும் கைலாசபதி மறைந்துபோனது தமிழுக்குப் பேரிழப்பு.

நீங்கள் தமிழ் மென்பொருள் எழுதியிருக்கிறீர்கள் என்பது பலருக்குத் தெரியாது.

ஆமாம். நான்தான் முதன்முதல் தமிழில் எழுத மென்பொருள் செய்தவன் என நினைக்கிறேன். தான் செய்ததாக முத்து நெடுமாறன் சொல் கிறார். எப்படியும் எழுபதுகளிலே செய்திருக்கிறேன்.

எப்பொழுது நீங்கள் கவுசல்யாவைச் சந்தித்தீர்கள்?

வின்கான்சினில்.

******


இனிவரும் கேள்விகளுக்கு பதில் சொன்னவர் திருமதி கவுசல்யா ஹார்ட்.

அதைப்பற்றி நீங்கள் ஏதேனும் சொல்லுங்களேன்.

நான் ஏ.கே. ராமானுஜம் அவர்களுக்கு சில உதவிகள் செய்துகொண்டிருந்தேன். அவரு டைய மனைவிமக்கள் சிகாகோவில் இருந்ததால் வார இறுதியில் அங்கு சென்றுவிடுவார். அப் போது என்னை வகுப்பு எடுக்கச் சொன்னார். அங்கு ஹார்ட் மாணவராக இருந்தார். அப்போது தான் சந்தித்தேன்.

நீங்கள் நிறையக் கோவில் திருப்பணி செய்கிறீர்கள் அல்லவா?

எனக்கு கான்கார்டு முருகன் ஆலயப்பணி மிகமுக்கியம். கோவில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. கலைகள், கலாச்சரம் வளர்க்கு மிடம், நம் நாட்டினர் வந்து கூடுமிடம், மன அமைதி தேடும் இடம் என்று. நமது குழந்தைகள் அங்கு வந்து நமது உணவு, பண்பாடு, மொழி, வழிபாட்டுமுறை என்று பலவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். அநேகமாக ஞாயிறு முழுவதும் அங்குதான் செலவிடுகிறேன்.

சுமார் 20 இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு வளைகுடாப்பகுதி தமிழ்மன்றத்தை நிறுவியதில் உங்கள் இருவருக்கும் பங்கு உண்டு. அந்தச் சமயத்தைப் பற்றி நினைவு கூர விரும்புகிறீர்களா?

அப்போது தமிழர் எண்ணிக்கை இங்கே மிகக் குறைவு. ஆனாலும் துவக்க நிகழ்ச்சிக்கு சுமார் 150 பேர் வந்திருந்தார்கள். மிகத் தமிழார்வம் மிகுந்தவர்களாக இருந்தார்கள். இப்போது வருபவர்களுக்கு தமிழிலோ அல்லது எதிலுமோ ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.

இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்கு ஒரு பண்பாட்டுக் குழப்பம் இருக்கும். அதை எப்படித் தவிர்ப்பது?

இனிமேல் குறைந்துவிடும் என நினைக்கிறேன். ஏனென்றால் முன்னெப் போதுமில்லாத எண்ணிக் கையில் இங்கே தமிழர்கள் வந்திருக்கிறார்கள். எங்கள் தமிழ் வகுப்புகளை எடுத் துக்கொண்டால் கூட முன்பெல்லாம் அமெரிக் கர்கள்தான் முழுவதும் இருப்பார்கள். இப்போது சுமர் 80 விழுக்காடு தென்னிந்தியர்கள் இருக் கிறார்கள். ஆர்வமும் வசதியும் இங்கே பெருகி விட்டன.

வளைகுடாப் பகுதித் தமிழர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது ஏதாவது உண்டா?

ஒரு முக்கியமான விஷயம். அதாவது குறைந்த பட்சம் 20 மாணவர்களாவது இல்லாவிட்டால் ஒரு மொழியைக் கற்பிக்க பல்கலைக்கழகம் தயங்கலாம். நமது பெர்க்கிலியில் அந்நிலை வந்துவிடாமல் இங்கிருக்கும் தமிழர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். மிக அதிக வரு மானமுள்ள வட்டத்தில் தமிழர்கள் இருக் கிறார்கள். அவர்கள் நமது அறக்கட்டளைக்கு நன்கொடை தந்தும், மாணவர்களை ஊக்கு வித்தும் தமிழ்க் கல்வியைப் பெருக்கினால் நாம் எல்லோரும் பயன்பெறலாம். பெருமையும் கூட.

******


ஏன் தமிழ் படிக்க வேண்டும்?

தமிழ் இலக்கியத்தைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகள் எனலாம். பழைய, வளமான இலக்கியத்தைப் படிப்பவர் களுக்குப் பிறர் மதிக்கக்கூடிய நுட்பமான திறன் வளரும். தற்காலத்தில் பெரும்பாலான தமிழர்கள் தமிழைப் படிக்காமல் ஆங்கிலத்தை மட்டுமே படிக்கிறார்கள். அவர்களில், ஆழமான கருத்துகளை ஆங்கிலத்தில் சொல்லக் கூடியவர்கள் வெகு சிலரே. அதனால் நுட்ப மான கருத்துகளை எந்த மொழியிலும் சொல்லும் திறனைத் தமிழர்கள் இழந்து வருகிறார்கள்.

தற்காலத் தமிழர்கள் பலர் ‘கிச்சன்’ தமிழ் மட்டுமே பேசுகிறார்கள். அடுப்பறையில் ‘கிச்சன்’ தமிழ் பேசுவதில் தவறில்லை. ஆனால், சிக்கலான விஷயங்களை நல்ல தமிழில் எழுதக் கூடியவர்கள் வெகு சிலரே. நுட்பமான விஷயங்களை, ஆராய்ந்து, அறிந்து, தெரிந்து சொல்லும் திறன் பழைய இலக்கியங்களைப் படிப்பதால் மிகும்.

முரசு அஞ்சல் வெளியீட்டு விழா, மலேசியா, 1999. (விழியத் தொடர்பு வழியாக - Via video conference)

******


பெர்க்கிலியில் தமிழ் இருக்கை

வட அமெரிக்காவிலும் தமிழ் கல்வி பயில வாய்ப்பளிக்கும் முறையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலியில் (University of California, Berkeley - UCB) தமிழ் இருக்கை (Tamil Chair) அறக்கட்டளையை நிறுவ 1991ல் தீர்மானித்தார்கள். அதற்கு தேவைப்பட்ட அமெரிக்க டாலர் 400,000த்தை திரட்ட ஒரு நிதிக்குழு அமைக்கப்பட்டது. செல்வம் நிறைந்த சிலிகான் பள்ளத்தாக்கில் 400 தமிழர்களிடம் தலா 1000 டாலர் வசூலிப்பது பெரிய காரியமல்ல என்று போட்ட கணக்கு சற்றே தவறானது. அதைத் திரட்ட நான்கு வருடங்களானது. கிட்டதட்ட $425,000 வெள்ளி திரட்டிய பிறகு UCBயின் தலை மையில், தமிழ் அறக்கட்டளையைச் செயல் படுத்த ஓராண்டுக் காலம் பிடித்தது. தமிழ் அறக்கட்டளை, நவம்பர் 1996லிருந்து

பேரா. ஜார்ஜ் ஹார்ட் தலைமையில் செயல் பட்டு வருகின்றது.

ஆண்டொண்டிற்கு சராசரியாக 30 பேர் போல் தமிழ் கற்க, ஆராய்ச்சியில் ஈடுபட வழிவகுத்துள்ள இந்த அறக்கட்டளை, மற்றும் பல முயற்சிகளையும் மேற்கொண்டது. 1997ல், அறக்கட்டளையின் முதல் ஆண்டு விழாவில், கணினியில் தமிழ் கணிப்பிற்கான தகுதர முயற்சிகளில் ஒரு முன்னோடியாக விளங்கியது. அடுத்த ஆண்டில் முனைவர் தாமஸ் மால்டனின் சங்க இலக்கியங்களை கணினியில் ஏற்றிக் குறுந்தகடுகளில் வெளி யிடும் முயற்சிகளுக்கு பொருளுதவி செய்தது. பிறகு தமிழகத்திலிருந்து தமிழறிஞர் களையும், எழுத்தாளர்களையும் பகுதிநேரப் பேராசிரியர்களாகத் தருவித்தது. மற்றும் பல வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற தமிழ் அறக்கட்டளைகள் உண்டாகித் தமிழோசை பரப்பட்டும்.

குமார் குமரப்பன்

******


பேராசிரியர் ஹார்ட்டின் சில நூல்கள்

  • Hart, George L. 1975. The Poems of Ancient Tamil: Their Milieu and their Sanskrit Counterparts. Berkeley: University of California Press.


  • Hart, George L. 1976. The relation between Tamil and classical Sanskrit Literature, Wiesbaden, Harrassowitz


  • Hart, George L. 1979. Poets of the Tamil Anthologies: Ancient Poems of Love and War. Princeton, N.J. : Princeton University Press.


  • Hart, George L. 1988. The Forest Book of the Ramayana by Kampan (with H. Heifetz), Univ. of California Press


  • Hart, George L. 1999. The Four Hundred Songs of War and Wisdom - An anthology of poems from Classical Tamil “The PuranAnURu” - Translated and Edited by George L. Hart and Hank Heifetz, Columbia University Press, New York.


******
ஆங்கிலத்தில் புறநானூறு

இந்த நூலுக்கு ‘ஏ.கே. ராமானுஜம் மொழி பெயர்ப்புப் பரிசு’ கொடுக்கப்பட்டுள்ளது.

புறம் 218: சான்றோர் சான்றோரையே சார்பு கொள்வர் கோப்பெருஞ்சோழனோடு

பிசிராந்தையாரும் சேர்ந்து வடக்கிருந்து உயிர்விடுதலைக் கண்டு புலவர் கண்ணகனார் பாடியது:

பொன்னும், துகிரும் முத்தும் மன்னிய
மாமல பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப,
சாலார் சாலார் பாலர் ஆகுபவவே!

Though they arise far away from one another, gold and coral
And pearls and the lovely sapphires generated on a great
And immovable mountain form a fine ornament that has
Inestimable value once they have been all fastened
Together in a single place - and so are noble men
Always found in the company of other men
Who are noble and vile men are set next to vile men!

(From the Four Hundred Songs of War and Wisdom - An anthology of poems from Classical Tamil “The PuranAnURu” - Translated and Edited by George L. Hart and Hank Heifetz Columbia University Press, New York, 1999)

******


தமிழ் இலக்கியங்களைப் படிப்பது எப்படி?

பார்வையாளர் கேள்வி (கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம்): டாமில் பொயட் ஸோட போயம்ஸ் எல்லாமே ரொம்ப டி·பிகல்டாயிருக்குதுன்னு நான் ·பீல் பண்றேன். புதுக்கவிதை ஓரளவுக்கு ஈஸியா யிருக்குது. ஆனா, ஓல்டு போயம்ஸை எப்படி ஸ்டடி பண்ண முடியும்?

பேராசிரியர் ஹார்ட் (செந்தமிழில்): நான் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை. குழந்தை யிலேயே தமிழ் பேசவில்லை. தமிழ் பேசுபவர் களோடு வாழவில்லை. எனக்கு 23 வயதில் தான் தமிழ் கற்றுக் கொள்ள ஆர்வம் வந்தது. புத்தகங்களை வைத்துத் தமிழ் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். என்னால் தமிழைக் கற்றுக் கொண்டு, பழைய தமிழ் இலக்கியங் களைப் படிக்க முடியும் என்றால், தமிழ் நாட்டி லே பிறந்து வளர்ந்த எந்தத் தமிழனாலும் முடியும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால் போதும்.

சிற்பி பாலசுப்ரமணியம் நிகழ்ச்சி, மே 1997, வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்.

பேராசிரியர் ஹார்ட்டுடன் தொடர்பு கொள்ள:

Prof. George Hart
Email: ghart@socrates.berkeley.edu

Center for South Asia Studies
University of California, Berkeley
10 Stephens Hall
Berkeley, CA 94720-2310

Tel: (510) 642-3608
Email: csas@uclink4.berkeley.edu
http://www.ias.berkeley.edu/southasia/

நிகழ்த்தியவர்: மணி மு. மணிவண்ணன்
தொகுப்பு: மதுரபாரதி
படங்கள்: ஆஷா மணிவண்ணன்
More

தமிழ் மொழியை கற்றுத்தரும் தமிழிணையப் பல்கலைக் கழகம் - முனைவர் மு. பொன்னவைக்கோ
Share: 




© Copyright 2020 Tamilonline