Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
- பா.சு. ரமணன்|மார்ச் 2013|
Share:
"லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி" என்றால் தெரியாதவர்களுக்குக் கூட, "வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி" என்று சொன்னால் உடனே ஞாபகத்துக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு 'வாசகர் வட்டம்' என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன்மூலம் பல தரமான புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் நூல் வாசிப்பு வளர்ச்சிக்கு வளம் சேர்த்தவர் இவர். தீரர் சத்தியமூர்த்தி தம்பதியினருக்கு 1925, ஜூலையில் மகளாகப் பிறந்தார். தந்தை சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் பள்ளியில் படிக்கும்போதே லக்ஷ்மிக்கு சுதந்திர தாகம் வந்துவிட்டது. ஒருமுறை மகாத்மா காந்தி சமூகப் பணிக்கு நிதியுதவி கோரியபோது தம் கைவளையல்களைக் கழற்றிக் கொடுத்துவிட்டார். பின் அவை வெள்ளி என்பது தெரியவரவே, தந்தையிடம் சொல்லி, குடும்பச் சொத்தாக இருந்த தங்க வளையலைக் கொண்டுவந்து காந்திஜியிடம் அளித்தார். காந்திஜி மட்டுமல்லாமல், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத் எனப் பலரது அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர் லக்ஷ்மி. இளவயதிலேயே தந்தையுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சத்தியமூர்த்தி மகளை ஒரு ஆணுக்குரிய போர்க்குணத்தோடு வளர்த்தார். வீணை வாசிக்கத் தெரிந்த லக்ஷ்மிக்குக் குதிரையேற்றமும் தெரியும். ஓவியம், இசையிலும் மிகுந்த நாட்டம். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தந்தை 'அருமைப் புதல்விக்கு' என்று எழுதிய புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவார். அது இலக்கிய தாகத்துக்கு வித்திட்டது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பிறமொழி இலக்கியங்களை தேடித்தேடிப் படித்தார். இந்நிலையில் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார். உடல் நலிவுற்றும் அவரை ஆங்கில அரசு விடுதலை செய்யவில்லை. வேலூர், மத்தியப் பிரதேசம் எனச் சிறை விட்டுச் சிறை மாற்றியது. மகளைப் பார்க்கவும் அனுமதியில்லை.

கேரளத்தைச் சேர்ந்தவரும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் படித்து தங்கப் பதக்கம் பெற்றவருமான கிருஷ்ணமூர்த்தியுடன் லக்ஷ்மிக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. சிறையில் இருந்தபடியே, ஏப்ரல் 23, 1943 அன்று திருமணம் நிகழவேண்டும் என்று நாள் குறித்துக் கொடுத்தார் சத்தியமூர்த்தி. எக்காரணத்தைக் கொண்டும் அந்த நாளை மாற்றக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அவர் குறிப்பிட்ட அந்த நாளிலேயே திருமணம் நிகழ்ந்தது. ஆனால் அதைப் பார்க்க சத்தியமூர்த்தி இல்லை. மகளின் திருமணத்திற்கு நாள் குறித்ததவர், அதற்கு முன்னரே உடல் நலிவுற்றுக் காலமானார். ஆனால், தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றினார் லக்ஷ்மி. மணமானபின் கணவருடன் கேரளத்துக்குச் சென்றார். அங்கும் அவரது சமூகப் பணி தொடர்ந்தது. தமது இல்லத்திலேயே பெண்களுக்கான இலவச மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். தவிர, பெண்கள் நலன், கல்வி, சமூகம், குழந்தை வளர்ப்பு என்று பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டார். பின் தமிழகம் வந்தார்.

கிருஷ்ணமூர்த்தி. மலையாளம், ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகள் அறிந்தவர். சட்டம் பயின்றவர். எழுத்தாளரும் கூட. காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மனைவியின் அரசியல், சமூகப் பணிகளை ஊக்குவிப்பவராக இருந்தார். லக்ஷ்மி, 1964 மற்றும் 1970 தேர்தல்களில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினரானார். ஆனால் காங்கிரஸ் தன் கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டதால் வெறுப்புக் கொண்ட இவர், மாற்றுக் கட்சியாக ஜனதா கட்சி தோற்றுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். தந்தை சத்தியமூர்த்தி எப்படி ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக இருந்து போராடினாரோ அவ்வாறே லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியும் நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடினார். 1977ல் ஜனதா கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின் அரசியலிலிருந்து ஒதுங்கி, தீவிர சமூக, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். 'சத்தியமூர்த்தி ஜனநாயக உரிமைகள் மையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கருத்தரங்குகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்.
ஏற்கனவே கல்கி, சுதேசமித்திரன், ஹிந்து என பிரபல இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதியவர் இவர். நூலும் எழுதியிருக்கிறார். இவரது 'ஐந்தாவது சுதந்திரம்' என்ற கட்டுரைத் தொகுப்பை அக்காலத்தில் புகழ்பெற்ற பதிப்புத்துறை முன்னோடி சக்தி. வை.கோவிந்தன் வெளியிட்டிருக்கிறார். இவரது கணவரும் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு கே.எம். பணிக்கரின் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இந்தப் பின்னணியோடு, 1964-65களில் இருவரும் 'வாசகர் வட்டம்' என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கினர். நல்ல எழுத்தாளர்களின் தரமான நூல்களை வெளியிட்டு வாசகர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கம். அதற்காக 'புக்வெஞ்சர் பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பகத்தைத் துவக்கினர். சந்தாதாரர்களைச் சேர்த்து, வருடத்திற்கு 25 ரூபாய் கொடுப்பவர்களுக்குச் சலுகை விலையில் நூல்கள் வழங்கப்பட்டன. வாசகர் வட்டத்தின் முதல் வெளியீடு ராஜாஜி எழுதிய 'சோக்ரதர்: ஆத்ம சிந்தனைகள்' என்னும் நூல். அது 1965ல் வெளியானது. ராஜாஜியே அதை வெளியிட்டார்.

தரமான தாள், நேர்த்தியான அச்சு, உயர்தர பைண்டிங், முகப்போவியம், வடிவமைப்பு என எல்லாவற்றிலும் வாசகர் வட்ட நூல்கள் தனித்து விளங்கின. முதல் நூலில் கலாசாகரம் ராஜகோபாலின் கோட்டோவியம் இடம்பெற்றது. அதையே வாசகர் வட்ட வெளியீடுகள் அனைத்திற்கும் பயன்படுத்தினார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. வாசகர் வட்ட நூல்களைத் தனித்து அடையாளங் காட்டின அவை. இலக்கிய வாசகர்களிடம், குறிப்பாக, இலங்கைத் தமிழரிடையே, அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து புது நூல்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் தொடராக வெளிவந்த நாவல்களை நூலாகப் பிரசுரிப்பதை அவர் தவிர்த்தார். சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைத் தேடியெடுத்து வெளியிட்டார். தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', எம்.வி. வெங்கட்ராமின் 'வேள்வித் தீ', ஆ. மாதவனின் 'புனலும் மணலும்', நீல. பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்', லா.ச. ராமாமிர்தத்தின் 'அபிதா' போன்றவை வாசகர் வட்டத்திற்கென்றே எழுதப்பெற்றன. திறமை வாய்ந்த எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களது முதல் படைப்பு வெளியாகவும் உதவியாக இருந்தார். நரசய்யாவின் 'கடலோடி', சா. கந்தசாமியின் 'சாயாவனம்' போன்றவை அப்படி வெளியானவைதாம். அதிலும் 'சாயாவனம்' கந்தசாமியின் முதல் நாவலாகும். அதுபோல 'புனலும் மணலும்' மாதவனின் முதல் நாவல். ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதியான 'குயிலின் சுருதி' வாசகர் வட்டம் மூலம் வெளியானதே! லா.ச.ராவின் 'புத்ர' நாவல், கிருத்திகாவின் 'நேற்றிருந்தோம்', நா. பார்த்தசாரதியின் 'ஆத்மாவின் ராகங்கள்', கி.ரா.வின் 'கோபல்ல கிராமம்', க.சுப்பிரமணியனின் 'வேரும் விழுதும்', ஆர். சண்முக சுந்தரத்தின் 'மாயத்தாகம்' போன்றவை வாசகர் வட்டம் மூலம் வெளியாகிப் புகழ் பெற்றவையே.

தன் இல்லத்தில் எழுத்தாளர்களை வரழைத்து வாசகர்-எழுத்தாளர் சந்திப்புக்களையும் நடத்தினார். 'புக் கிளப்' என்ற கருத்தைத் தமிழில் நனவாக்கிய முன்னோடி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திதான். வை.மு. கோதைநாயகி, தன் பதிப்பகம் மூலம் தனது நூல்களை மட்டுமே வெளியிட்டார். ஆனால் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பிறரது நூல்களைத் தயாரித்து, வெளியிட்டு, விற்பனை செய்ததனால், தமிழின் முதல் பெண் பதிப்பாளராகக் கருதப்படுகிறார். 'வாசகர் செய்தி' என்ற செய்தி மடல் ஒன்றையும் நடத்தினார். 'நூலகம்' என்ற நூலகங்களுக்கான மாத இதழையும் வெளியிட்டார். இவற்றில்முக்கியமானதொரு நூல் 'நடந்தாய்; வாழி, காவேரி' என்னும் கட்டுரை நூலாகும். காவிரி ஆற்றின் கதையோடு சமூக வாழ்க்கையும் கலந்து சொல்லப்பட்ட அந்தப் படைப்பு தி. ஜானகிராமன், சிட்டி இருவரும் இணைந்து எழுதி 1971ல் வெளியானது. காவிரி தோன்றுமிடம் தொடங்கி அது கடலில் கலக்கும் இடம்வரை உள்ள இடங்களைப்பற்றி மிக விரிவாகச் சொல்கிறது அந்நூல். ஜானகிராமன், ஓவியர் கலாசாகரம் ராஜகோபால் ஆகியோர் நேரில் சென்று தங்கள் அனுபவங்களைத் தீட்ட, நூலானது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியாக 'பிளாக்' செய்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. வரலாற்று ஆவணமாகத் திகழும் அந்நூலைத் தற்போது 'காலச்சுவடு பதிப்பகம்' மீண்டும் வெளியிட்டுள்ளது.

இலக்கியம் தவிர, தொழில்நுட்பம், விஞ்ஞானம், மானுடவியல், வரலாறு எனப் பல்துறை நூல்கள் வாசகர் வட்டம் மூலம் வெளியாகின. லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூல் தமிழில் 'அறிவின் அறுவடை' என்று வெளியானது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தமிழர் பண்பாடும் வரலாறும்' சிட்டியின் மொழிபெயர்ப்பில் வெளியானது. டாக்டர் ராதாகிருஷ்ணனின் 'வாழ்க்கை', 'இந்துமத நோக்கு' போன்றவையும் முக்கியமானவையே. பி.ஜி.எல். சாமி எழுதிய 'போதையின் பாதையில்' நூல் மனிதர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதைப் பற்றிக் கூறுவது. 'எட்வின் கண்ட பழங்குடிகள்' மனித இன வரைவியல் நூலாகும். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். பி. கேசவதேவின் 'அயல்க்கார்' (மலையாளம்); விசுவநாத சாஸ்திரியின் 'அற்பஜீவி' (தெலுங்கு); திரிவேணியின் 'பூனைக்கண்' (கன்னடம்); ஆலுவாலியாவின் 'மன்னும் இமயமலை' (ஆங்கிலம்); மோஹன் ராகேஷின் 'அரையும் குறையும்' (ஹிந்தி); டாக்டர் இரா. நாகசாமியின் 'யாவரும் கேளிர்' போன்றவை குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்பு நூல்களாகும். 'அக்கரை இலக்கியம்' என்ற தலைப்பில் இலங்கை, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 'விஞ்ஞானத்தின் புதிய எல்லைகள்', 'இன்றைய தமிழ் இலக்கியம்' போன்ற கட்டுரை நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. சுஜாதா கணினித் துறை பற்றி எழுதிய 'காசளவில் ஓர் உலகம்' என்ற நூல்தான் வாசகர் வட்டம் வெளியிட்ட கடைசி நூல்.

வாசகர் வட்டம் வெளியிட்ட மொத்த நூல்கள் 45. நாளாவட்டத்தில் சந்தாதாரர்கள் குறைந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பதிப்பு நிறுத்தப்பட்டது. பதிப்புத்துறையிலிருந்து விலகிய லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, சமூகப் பணிகளில் அக்கறை காட்டினார். சத்தியமூர்த்தி நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார். ஆங்கிலத்தில் சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார். சத்தியமூர்த்தியின் கடிதங்களை இரு பெரும் தொகுப்புகளாகக் கொண்டு வந்தார். அக்கால அரசியல், சமூகம் பற்றி அறிந்து கொள்ள உதவும் மிகச்சிறந்த ஆவணங்களாகத் திகழும் அவை, பின்னர் சாருகேசியின் மொழிபெயர்ப்பில் விகடன் பிரசுரமாகத் தமிழில் வெளியாகின.

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தமது 83ம் வயதில் ஜூன் 12, 2009 அன்று சென்னையில் காலமானார். சில மாதங்களிலேயே மார்ச் 06, 2011 அன்று கணவர் கிருஷ்ணமூர்த்தியும் காலமானார். லக்ஷ்மி-கிருஷ்ணமூர்த்தி தம்பதியருக்கு மூன்று மகன்கள். நாட்டு விடுதலைக்காகவும், இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட சாதனையாளர்களில் மறக்கக்கூடாத முன்னோடி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline