Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஹரீஷ் ராகவேந்திரா
கலைமாமணி வீ.கே.டி.பாலன்
ராதா சுப்ரமணியம்
- ரூபா ரங்கநாதன்|நவம்பர் 2012||(1 Comment)
Share:
கிளியர் சேனல் மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்டின் நிர்வாகத் துணைத் தலைவர் (EVP) ராதா சுப்ரமணியம். டெல்லியில் படித்த காலத்திலேயே ஊடகந்தான் தனக்கேற்ற துறை என்பதில் தெளிவாக இருந்தவர். இன்று 200 மில்லியன் நேயர்களைக் கொண்டு உலகிலேயே முதலிடம் வகிக்கும் இந்தக் கேளிக்கை மற்றும் மீடியா நிறுவனத்தின் மிகவுயர்ந்த இடமொன்றை எட்டியிருக்கும் தமிழ்/ஆசிய அமெரிக்கப் பெண்மணி இவர். டெல்லி பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிடியில் ரேடியோ, டி.வி., ஃபிலிம் துறையில் பட்டமும், பிஎச்.டி.யும் பெற்றார். அமெரிக்காவின் பல முன்னோடி நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகித்தபின் (பெட்டிச்செய்தி பார்க்க) 2012 மார்ச்சில் கிளியர் சேனலில் சேர்ந்தார். ஊடக ஆய்வு இவரது களம். ஊடகம், விளம்பரம், சந்தைப்படுத்தல் நுகர்வோர் குறித்த ஆய்வுப் புள்ளி விவரங்களைச் செயல்படத் தகுந்த திட்டங்களாக வகுப்பது இவருக்கேயுரிய தனித்திறன். MTVயை நிறுவியவரும், AOLன் முன்னாள் CEOவுமான பாப் பிட்மன் (பெட்டிச் செய்தி பார்க்க) கிளியர் சேனலின் CEO ஆவார். இவரிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் ராதா, தற்போது அனைத்துவகை ஊடகங்கள் (ரேடியோ, டி.வி., டிஜிடல் ரேடியோ, பில்போர்டுகள்) குறித்த ஆய்வுகளுக்கும் பொறுப்பு வகிக்கிறார். மின்னல்வேகத்தில் மாறிவரும் மீடியா உலகின் நாடித்துடிப்பைச் சரியாக அறிந்து வைத்திருக்கும் இவர், இவை குறித்த கருத்தரங்குகளில் புதிய பார்வைகளை முன்வைக்கும் தவிர்க்க முடியாத பேச்சாளரும் ஆவார். தென்றலுக்காக அவருடன் உரையாடினார் ரூபா ரங்கநாதன். அதிலிருந்து......

*****


ரூபா: வணக்கம். மீடியா உலகில் உங்களைப் போன்ற துடிப்பான ஒருவருடன் பேச எனக்கு மிக உற்சாகமாக இருக்கிறது.
ராதா: வணக்கம்.

ரூபா: நான் விளம்பரத்துறையில் நெடுநாட்கள் பணி செய்திருக்கிறேன். ARF மற்றும் பிற தொழில்முறை அரங்குகளில் நீங்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டுள்ளேன். உங்களது எண்ணங்கள் நுகர்வோரை மையமாகக் கொண்டவை என்பதைப் பார்க்கிறேன். தற்சமயம் மீடியா உலகின் மிகப் பெரிய நிகழ்வு எது?
ராதா: நுகர்வோருக்கு இது மிகவும் பரபரப்பான காலகட்டம். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மீடியா நிறுவனங்களுக்கும் நுகர்வோருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிய விளம்பர ஊடகங்கள் வழியே நுகர்வோரை நாள் முழுவதும் சென்றடைய முடிகிறது. விளம்பரம் என்பது வழக்கமான உத்திதான் என்றாலும் தற்சமயம் அவற்றில் தடாலடி மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. மீடியா நிறுவனங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் விளம்பரதாரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு இம்மாற்றத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

"நீங்கள் பிரச்சனைகளைக் கொண்டு வாருங்கள். நாங்கள் தீர்வு காண்கிறோம்", இதுதான் நாங்கள் வாடிக்கையாளருக்குச் சொல்வது. நான் மக்கள் விரும்பும் பிராண்டுகளைக் கையாள்வதால், அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. நுகர்வோருடன் தினமும் பேசும் வாய்ப்பு உள்ளது.

மீடியா உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. தேங்கி நிற்பதில்லை. சிலர் மட்டுமே இச்சூழலில் தழைக்கிறார்கள். நான் மாற்றங்களைச் சவால்களாகப் பார்க்கிறேன்.அன்றாட விஷயங்களைக் கூட புதுப்புது வழிகளில் செய்வதை விரும்புகிறேன். அது எல்லோராலும் முடிவதில்லை எனப் புரிகிறது. எனவே நான் சொல்வது என்னவென்றால் "ஒவ்வொரு நாளும் புதியது. எனவே அதை fun ride என நினைத்து அனுபவியுங்கள்," இதைத்தான் என் குழந்தைகளுக்கும் சொல்கிறேன்.

ரூபா: இது நல்ல தத்துவம். Fun ride என நினைத்தால் சலிப்பு ஏற்படாது. பிரச்சனைகள் பெரிதாகத் தெரியாது. வேலைப்பளுவும் தெரியாது.
ராதா: என் கணிப்பில் இப்பொழுது 'போரடிக்கிறது’ என்று அலுவலகங்களில் யாரும் சொல்வதில்லை. நான் கேட்பதெல்லாம் சவால், வாய்ப்பு, அவசரம் போன்ற வார்த்தைகளைத்தான். இன்றைக்குச் செழிப்படையும் எல்லாத் தொழில் நிறுவனங்களிலும் யாரும் சலிப்படைய வாய்ப்பு இல்லைதான். சில வருடங்களுக்கு முன் அப்படி இருந்திருக்கலாம். குறிப்பாக 2008க்குப் பின், அதாவது பொருளாதாரத் தேக்கநிலைக்குப் பின் சலிப்பு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.

ரூபா: உண்மைதான். ஊடக நிறுவனங்களும் பிராண்டுகளும் நுகர்வோரின் தேவைக்கேற்ப வேகமாகச் செயல்பட வேண்டும் என்கிறீர்கள். இதில் நிறைய ஆராய்ச்சியும் செய்துள்ளீர்கள். பிரபலமான ரேடியோ நிலையங்கள் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருக்கின்றன என்பது உங்கள் கணிப்பு, அல்லவா?
ராதா: ஆமாம். iHeart ரேடியோ, Z100 போன்றவை.

ரூபா: மார்க்கெடிங் துறையினரிடமிருந்து நுகர்வோர் எதை எதிர்பார்க்கிறார்கள்?
ராதா: மார்க்கெடிங்கில் உள்ள நமக்கு இது சுவாரஸ்யமான விஷயம். ஏனென்றால் முதலில் புதிய தொழில் நுட்பங்களின் சவால்களையும், புதிர்களையும் அவிழ்க்கவேண்டும். பின் இவ்வூடகங்களின் வழியாக நுகர்வோரை எப்படிச் சென்றடைவது எனப் பார்க்கவேண்டும். ஆனால் இன்று யாரும் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டு பயப்படுவதில்லை. என் 3 வயது மகனோ அல்லது என் 65 வயது அத்தையோ, யாராக இருந்தாலும் சரி. மல்டை-டாஸ்கிங் அவர்களுக்கு இயல்பாக இருக்கிறது. வண்டியில் போய்க்கொண்டே ஒன்றைப் பார்ப்பதும் மற்றொன்றைக் கேட்பதும் சகஜமாகிவிட்டது. அதனால் நமக்கு மீடியா சூழல் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. இதற்கேற்பச் சந்தைப்படுத்தலை மாற்றியமைத்துக் கொள்ள முயல்வதுதான் சவால்.

ராதா: டிவி. பார்ப்பவர், இசை கேட்பவர், தாயார், வலையில் பொருள் வாங்குபவர் என்று இவர்கள் யாரோ தனித்தனியானவர்கள் அல்லர். ஒரே நபரே இவையெல்லாமாகவும் இருக்கிறார். உதாரணமாக, ஓர் இந்தியர் தமிழ் பேசுவார், ஆங்கிலத்தில், ஹிந்தியிலும் பேசுவார். ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்வதில்லை.

ரூபா: உண்மைதான்.
ராதா: அதேபோலத்தான். நுகர்வோர் ஒருவரைப் பகுதிகளாகப் பிரிக்க முடியாது. ஒருவருக்குள்ளே பலரும் உள்ளனர். இதைப் புரிந்துகொண்டால் எல்லாம் எளிதாகிவிடுகிறது.

ரூபா: நீங்கள் மீடியாக்கள் குறித்து பிஎச்.டி. செய்திருக்கிறீர்கள். இந்தத் துறையில் எது உங்களைக் கவர்கிறது?
ராதா: நமக்கேற்ற ஒன்றை நாம் இறுதியில் செய்யத் தொடங்கிவிடுவோம். ஏனென்று தெரியாது, பத்துப் பதினோரு வயதிலிருந்தே எனக்கு மீடியாவில் ஆர்வம். பத்திரிகையாளராக, டி.வி. தயாரிப்பாளராக விரும்பினேன். சிறிது காலம் பேராசிரியராகவும் இருந்தேன். ஆனால், மீடியா கம்பெனியில் வேலை செய்வது, அதில் வளர்ச்சிநிலைப் பிரச்சனைகளை எதிர்கொள்வது, மார்க்கெடிங் செய்வதிலுள்ள இடையூறுகளுக்குத் தீர்வு காணுவது, இவையே எனக்கு மிகவும் நிறைவைத் தருகிறது.

ரூபா: இந்தச் சவால்களைச் சந்திக்கப் பழகினால், வளர்ச்சிக்கு வானமே எல்லை. நுகர்வோர் என்பவர் ஒரு சோஃபாவில் உட்கார்ந்து வெறுமனே பார்க்கிறவர் அல்ல. அவரும் பங்கேற்கிறார், படைக்கிறார். இணைய நிறுவனங்களிலும், சமூக மீடியாவிலும் நீங்கள் பணி செய்திருக்கிறீர்கள்....
ராதா: சோஷியல் மீடியா குறித்துச் சில வார்த்தைகள். எனது பாஸ் பாப் பிட்மன் (CEO of Clear Channel Communications and Founder of MTV Networks and AOL) சொல்வார் "மக்கள் தமது குடும்பத்தைப்பற்றி, நண்பர்கள் பற்றி, வாழ்க்கை பற்றி எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். அது புதிதல்ல. ஆனால் சோஷியல் மீடியா அந்தப் பேச்சை விரைவுபடுத்துகிறது, அதிகத் திறம்படச் செய்ய வைக்கிறது" என்று.

இன்னொன்று, வாய்ப்புக் குறித்துக் கூறினீர்கள். அமெரிக்கா ஒரு வாய்ப்புகளின் சொர்க்கம். அதனால்தான் நாம் இங்கே இருக்கிறோம். இங்கே நம்மை நாமே மீண்டும் கண்டறிய முடிகிறது. இங்கு வந்து குடியேறியவர்கள் இதற்கான சிறப்புத் தகுதி கொண்டிருக்கிறோம். சவாலான சூழலில் தளிர்ப்பது, தழைப்பது எப்படி என்று நமக்குத்தெரியும், அல்லவா?

ரூபா: உண்மைதான். இந்தியாவில் எங்கே வளர்ந்தீர்கள்?
ராதா: புது டெல்லியில். பிறகு நார்த் வெஸ்டர்ன் பல்கலையில் மேற்கொண்டு படிக்க அமெரிக்கா வந்தேன்.

ரூபா: ஓ, அதனால்தான் நீங்கள் இந்தி, தமிழ் இரண்டும் பேசுகிறீர்கள்!
ராதா: ஆமாம்.

ரூபா: நீங்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்ததுண்டா?
ராதா: இல்லை. நானும் என் தம்பியும் அமெரிக்காவுக்கு வந்துவிடவே என் குடும்பத்தினர் தென்னிந்தியாவுக்குப் போய்விட்டனர்.

ரூபா: அடிக்கடி இந்தியாவுக்குப் போவதுண்டா?
ராதா: நானும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை போவேன். அங்கிருக்கும் என் குடும்பத்தினரும் வருவார்கள்.
ரூபா: இந்தியாவில் மீடியா சூழல் எப்படி இருக்கிறது?
ராதா: நான் கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனாலும் அங்கே மிக வளமாக இருக்கிறது. மொபைல் ஃபோன்கள், டிஜிடல் டி.வி.கள், நிறைய டி.வி. சேனல்கள் என்று நல்ல வளர்ச்சி. உலகம் முழுவதும் இந்திய சினிமா ஏற்றுமதி ஆகிறது. இப்போது இசைத் துறையிலும் நல்ல வளர்ச்சி. சற்றே குழப்பமான ஜனநாயகம் என்றாலும், மக்கள் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, அதன் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அங்கே தொழில்முனைவோராக இருக்க இது சரியான நேரம்.

ரூபா: மடோனாவின் தொகுப்பு ஐட்யூன்ஸில் ஒரே நேரத்தில் 50 நாடுகளில் டாப்பில் இருந்தது. உங்கள் டீம் அவரது ஆல்பத்தை ப்ரமோட் பண்ணிய வகை பிரமாதம். அதேபோல ஒரு இந்தியக் கலைஞரை அல்லது ஆல்பத்தை நீங்கள் சந்தைப்படுத்தும் திட்டம் இருக்கிறதா?
ராதா: அடுத்து என்ன என்பதை நான் சொல்ல முடியாது. ஆனால், நாங்கள் கலைஞர்களோடு மிக நெருக்கமாகச் செயல்படுகிறோம், அவர்களுடைய ஆல்பம் வெளியீடு முதலியவற்றில் உதவுகிறோம். அதைச் செய்வதில் எங்களுக்கென்று ஒரு வழி இருக்கிறது, அது வெற்றிகரமானதாக இருக்கிறது.

ரூபா: எனக்குப் புரிகிறது. ஒருவேளை அடுத்தவர் ஒரு இந்தியக் கலைஞராக இருக்கலாமோ என்பதற்காகக் கேட்டேன்.
ராதா: ஏன் கூடாது. ஏ.ஆர். ரஹ்மான் இப்போது உலகப் பிரசித்தி பெற்றவர். எங்கள் கம்பெனி தற்போது அவரோடு பணிபுரிகிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், ஷகீராவைப் பாருங்கள், எங்கிருந்தோ வந்து பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். ஐஷ்வர்யா ராய் இப்போது உலகத் திரை நடிகை. தென்கொரிய பாப்-ஸ்டார் PSY கங்க்னம் ஸ்டைல் என்று கலக்குகிறார். ஏன் அடுத்த பாப் ஸ்டார் இந்தியாவிலிருந்து தோன்றக்கூடாது!

ரூபா: நான் இங்கே படித்தவளல்ல. 45 வயதில் இங்கே வந்து இங்கிருக்கும் பன்முகக் கலாசாரத்தோடு வளரத் தொடங்கினேன். ஹிஸ்பானியர்கள் போன்ற பிற கலாசாரத்தினரின் ஏஜன்சிகளுக்கும் பிரதான மொழி ஏஜன்சிகளுக்கும் நடுவே ஒரு இடைவெளி இருப்பதைப் பார்த்தேன். இந்தியாவில் ஹிந்தி விளம்பர ஏஜன்சி, பஞ்சாபி விளம்பர ஏஜன்சி என்று தனித்தனியே கிடையாது. பிரதான ஏஜன்சிகளுக்குப் பிற மொழி/கலாசார மக்களோடு உறவாடத் தெரியும்.
ராதா: மிகச்சரி. 2020ம் ஆண்டு வாக்கில் இருக்கும் குழந்தைகளில் பாதிக்குமேல் பன்முக-கலாசாரக் குடும்பங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. மார்க்கெடிங் துறையில் இருப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஹிஸ்பானியர்கள், நகர்ப்புற இந்தியர்கள் என்றெல்லாம் ஒரு சிமிழுக்குள் அடைக்க முடியாத வகைக் குடும்பத்தினரின் தொகை பெருகி வருவது உண்மைதான்.

ரூபா: இந்தியாவிலுமா?
ராதா: ஆமாம். என் குடும்பத்தையே எடுத்துக் கொண்டால் இரண்டு இனங்கள் கலந்த, பன்முக கலாசாரக் குடும்பம்; இந்தப் புதிய யதார்த்தத்துக்குப் பழக வேண்டும். அமெரிக்காவில் இருக்கும் நாம் இதற்கு அஞ்சக் கூடாது. ஒரு காலத்தில் இங்கே இத்தாலியர்கள் வந்தனர், பின்னர் யூதர்கள். வேறொரு சமயம் ஐரிஷ்காரர்கள். இப்படியே போகிறது.

ரூபா: உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
ராதா: பட்ட வகுப்பில் படிக்கும்போது என் கணவர் ஜோஸஃபைச் சந்தித்தேன். அவர் மிட்-வெஸ்டைச் சேர்ந்தவர். நாங்கள் 1996ல் மணந்து கொண்டோம். அவர் ஒரு பேராசிரியர். எனக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் மகளும் இருக்கிறார்கள். அவர்கள்தாம் என் வாழ்க்கையின் ஆனந்தம்.

மகன் ரோஹனும் மகள் தாராவும் நியூ யார்க் சிடியில் படிக்கிறார்கள். அவர்களோடு வகுப்புகளில் ஐரோப்பிய, ஆசிய, ஹிஸ்பானிய, கருப்பினப் பின்னணி என்று வகைவகையானவர்கள் இருக்கிறார்கள். யார், இன்னார் என்ற பாகுபாடே அவர்களுக்குக் கிடையாது.

ரூபா: பியூடிஃபுல்!
ராதா: தம்மோடு இருப்பவர்கள் வழியே அவர்கள் உலகையே அறிகிறார்கள். எகிப்தியப் பெண் ஒருத்தி இருக்கிறாள், ஆகவே எகிப்தைத் தெரியும். அதேபோல சீனாவைப் பற்றிய கதைகளை அறிவார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே நூறு சதவீதம் அமெரிக்கர்கள். என் மகள் "நான் இந்தியனா? அமெரிக்கனா?" என்று கேட்டால் நான், "நீ இரண்டுமேதான். உன்னில் அமெரிக்கனோ இந்தியனோ கூடவோ குறையவோ கிடையாது" என்று சொல்வேன். நான் இந்தியன் என்பதே அமெரிக்கனாக இருப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

ரூபா: 'கண்டது கற்றவன் பண்டிதனாவான்’ என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். இன்றைக்குப் புதிது புதிதாகக் கற்பதற்குப் பல வழிகள் உள்ளன.
ராதா: ஆமாம். இணையத் தொடர்பு நாளுக்கு நாள் உலகத்தைக் குறுக்கி வருகிறது. என் குழந்தைகள் நியூ யார்க் சிடியின் கதம்பக் கலாசாரத்தில் வளரலாம். ஆனால், அவர்கள் எங்கே பணிக்குச் செல்வார்கள் என்பது யாருக்குத் தெரியும்? சீனாவாகவோ, லத்தீன் அமெரிக்காவாகவோ இருக்கலாம். ஆனால் இங்கே வளர்வதால் அவர்கள் பன்முக கலாசார அனுபவத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள்.

ரூபா: சரி, அடுத்த பெரிய விஷயம் அல்லது அடுத்த பெரிய ஐடியா என்ன?
ராதா: எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்று தோன்றவில்லை. ஆனால், வரும் நாளுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். முதலில், மாற்றத்துக்கு. மாற்றம்தான் இயல்பு. ஆனால் மாற்றம் நிகழும் வேகம் நம்பற்கரியது. என்னுடைய வாழ்நாளில் இத்தனை தொழில்நுட்பப் புதுமைகள் வரும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஐஃபோனும் ஐபேடும் வருமென்று யாரால் முன்கூட்டிச் சொல்லியிருக்க முடியும்? புதிதாக, ஆச்சரியமானதாக ஏதாவது வரும் என்பதில் சந்தேகமில்லை. It will be fun.

ரூபா: மனதைத் திறந்து வைத்திருக்க வேண்டும். காலத்தோடு ஓட வேண்டும். நம்மையே கட்டிப் போட்டுக்கொள்ளக் கூடாது....
ராதா: அதற்கு கிரியேடிவிடி முக்கியம் இல்லையா?

ரூபா: ஆமாம். தென்றலையே எடுத்துக் கொள்ளலாம். அதை இங்கிருக்கும் தமிழ்ச் சமுதாயம் பெரிதும் படிக்கிறது. தெற்காசிய, தென்னிந்திய சமூகங்கள் குறித்த உங்கள் பார்வை என்ன?
ராதா: நான் ஒரு ஹிந்து, என் கணவர் பௌத்தர். ஒரு ப்ரெஸ்பிடீரியனாகப் பிறந்தவர் அவர். எங்கள் குடும்பத்தில் தீபாவளி, கணேஷ் சதுர்த்தி, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டுகள் இவற்றைக் கொண்டாடுகிறோம். நியூ யார்க்கில் ஜனவரி இந்திய ஜனவரியை விட வித்தியாசமானது. அப்படியும், பொங்கல் கொண்டாட முயற்சிக்கிறோம்.

குவீன்ஸில் வெகுநாளாக கணேசர் கோவில் இருக்கிறது. அங்கேதான் என் குழந்தைகளுக்கு நமது கலாசாரம் பற்றியும், சமீபத்திய நிகழ்வுகள் பற்றியும் தெரிய வருகிறது. ஏனென்றால் நியூ யார்க்கில் நான் இருக்கும் இடத்தில் இந்தியர்களைப் பார்ப்பதே அரிது. இது நியூ ஜெர்சி அல்லது விரிகுடாப் பகுதி போல நெருக்கமான சமுதாயம் கொண்டதல்ல.

ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு பெண்மணி 'பார்க் ஸ்லோப் பேரண்ட்ஸ்’ என்ற மின்னஞ்சல் குழுவில், 'இந்திய வம்சாவளி அல்லது பெற்றோரில் ஒருவரை இந்தியராகக் கொண்ட குடும்பம், அல்லது இந்தியக் குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்ட குடும்பத்தினர் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று அழைத்தார். சற்றே வயதில் பெரிய குழந்தைகளுக்குச் சமுதாய உணர்வை அவர் தர விரும்பினார். டஜன் கணக்கில் தொடர்பு கொண்டார்கள். மன்ஹாட்டன் உட்படப் பல பகுதிகளிலிருந்தும் வந்தனர். அப்படித்தான் 'ப்ரூக்லின் மிக்ஸட் மசாலா’ என்ற குழு உருவானது. இந்தியப் பண்டிகைகளை சேர்ந்து கொண்டாடினோம். 'ப்ராஸ்பெக்ட் பார்க்’கில் நாங்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடியபோது அதில் பீச்சாங்குழல், வண்ணப் பொடிகள் உட்பட எல்லாக் கோலாகலங்களும் இருந்தன.

ரூபா: வாவ்!
ராதா: ஆனால் ஒரு வித்தியாசம். இங்கே நாங்கள் தீங்குதராத, கரிம (ஆர்கானிக்), உயிரியாற் சிதைவுறும் (biodegradable) வண்ணங்களைப் பயன்படுத்தினோம்.

ரூபா: இதையெல்லாம் செய்யாவிட்டால் நாம் நமது வேர்களை மெல்ல இழந்துவிடுவோம். அப்படி அது நழுவுவதை அறியக்கூட மாட்டோம்.
ராதா: இவர்களெல்லாம் அறிமுகமானதால் இப்போது என் குழந்தைகளுக்கு ஹிந்தி எழுதப் படிக்கச் சொல்லித் தர ஒருவர் வருகிறார். தமிழ் சொல்லித் தர வழி தேடி கொண்டிருக்கிறோம். சிரமம்தான். ஆனால் செய்தாக வேண்டும்.

ரூபா: இது முக்கியமான தகவல். தென்றல் வாசகர்கள் பலருக்கு இது உதவும். நல்லது, மீடியாத் துறையில் நுழைய விரும்பும் இளையோருக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?
ராதா: திறந்த மனதோடு இருங்கள். வாய்ப்பு வரும்போது கெட்டியாகப் பிடியுங்கள். மற்றொன்று, பெற்றோர் சொல்வது தவறல்ல, முதலில் நல்ல கல்வி தேவை. அதில் மாற்றம் கிடையாது. என் குழந்தைகளுக்கும் அதையேதான் சொல்வேன். கல்வி கற்றபின் வாய்ப்புகளைத் திறந்த மனதோடு ஏற்க வேண்டும். மனிதர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் முன்னேற முடியாது.

என் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். என் கணவரின் பெயரை என் பெயரோடு சேர்த்துக் கொண்டால் இங்கே ஐக்கியமாவது எளிதாகும். நான் அதைப்பற்றி மிகவும் யோசித்தேன். ஆனால் நான் என் அடையாளத்தையோ கலாசாரத்தையோ இழக்க விரும்பவில்லை. எனது நீண்ட, சொல்லக் கஷ்டமான இரண்டாவது பெயர் என் தொழில் வாழ்வில் ஒரு தடையாக இருந்ததேயில்லை. ஆக, கொஞ்சம் அங்குமிங்கும் அலைந்தாலும் தவறில்லை; தான் அடைய வேண்டிய இலக்கு எது என்பதில் இளைஞர்கள் தெளிவாக இருக்க வேண்டும். இறுதியில் நிச்சயம் அடைவார்கள்.

ரூபா: ஒரு தெற்காசிய மீடியா மற்றும் மார்க்கெடிங் அசோசியேஷன் இப்போது இங்கே இருக்கிறது. இந்தத் துறைசார் இளைஞர்களை அது மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. இந்தியர்களோ தெற்காசியர்களோ நுழைய இயலாத துறை என்று ஒன்று இங்கே கிடையாது.
ராதா: உண்மைதான். முதலில் இங்கு வந்தேறியவர்களை முத்திரை குத்திச் சிமிழில் அடைத்தனர். இப்போது நாம் இருப்பது ஒரு புதிய உலகம். ஒருவர் போகவேண்டிய இடம் எதுவென்பதில் தெளிவாக இருந்தால் அவரை எந்தச் சிமிழிலும் அடைக்க முடியாது.

ரூபா: கிளியர் சேனல் நிறுவனத்தில் நீங்கள் வகிக்கும் பொறுப்புகளில் உங்களுக்கு வெற்றி குவியட்டும்! கல்வி, சுற்றுச்சூழல், பிராணிகள் நலம் என்று வேறு பல ஈடுபாடுகளும் உங்களுக்கு இருப்பதாக அறிகிறேன். அவற்றைக் குறித்து எங்களோடு ஏதேனும் பகிர விரும்புகிறீர்களா?
ராதா: சமூகத்துக்கு நாம் திரும்பத் தருவது மிக அவசியம் என்று நினைக்கிறேன். நமது சந்தோஷம் நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதால் அளக்கப்படுவதில்லை. வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும். நான் நினைப்பவற்றை எல்லாம் என்னால் செய்ய முடியாவிட்டாலும், எனக்குப் பலவகை அக்கறைகள் உண்டு. தன் வாழ்க்கையில் நூறு சதவீத நேரத்தையும் சமூகத்துக்குச் செலவிடுபவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, என் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவர் கேரளத்தில் அழியும் நிலையில் இருந்த மழைக்காடுகளை வாங்கி, முற்றிலுமாகப் புத்துயிரூட்டியிருக்கிறார். இவர் போன்றவர்களைப் பார்த்து எனக்கு ஊக்கம் பிறக்கிறது. நமது குழந்தைகளுக்கு நாமிருப்பதை விடச் சிறந்த உலகத்தைத் தர வேண்டும். அவர்களுக்கு வங்கியில் பணம் மட்டும் இருந்தால் போதாது, சுவாசிக்க நல்ல காற்று, அதைத் தர நல்ல மரங்கள் கொண்ட மகிழ்ச்சியான உலகம் இருக்க வேண்டும். பொருளாதார வளத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது போதாது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதாக நமது வாழ்முறை அமைய வேண்டும்.

ரூபா: நல்ல கருத்து. நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம்!
ராதா: என்னுடைய உரைகல் இதுதான் - நான் மரணத் தறுவாயில் என்ன நினைப்பேன்? இவ்வளவு பணம் எனது சேமிப்பு வங்கியில் உள்ளது, என்னுடைய சொத்து மதிப்பு இவ்வளவு என்றெல்லாம் அல்ல. என் குடும்பத்துக்கு, என் நண்பர்களுக்கு, என் சமுதாயத்துக்கு, அதையும் தாண்டி இந்த பூமிக்கு எனது பங்களிப்பாக எதை விட்டுச் செல்கிறேன் என்று யோசிக்கவே விரும்புகிறேன். அது டாலர், சென்ட்களால் அளவிட முடியாததாக இருக்கவேண்டும்.

ரூபா: மிக நல்லது. நீங்கள் சினிமா பார்ப்பீர்களா? நீங்கள் ரசிக்கும் கலைஞர்கள் யார்?
ராதா: எனக்கு பாப்-இசையும் பாப்-கல்ச்சரும் பிடிக்கும். நான் எப்போதுமே 15 வயது போல பாப்-கலாசாரத்தை ரசிப்பவள். எனக்கு இப்போது 'One Direction' பிடித்திருக்கிறது. ஆறு மாதம் முன்னால் அதைப்பற்றிக் கேள்விப்பட்டது கூட இல்லை. சினிமாவிலும் அப்படித்தான். எனக்கு ரொமாண்டிக்-காமெடி, ஆக்‌ஷன் படங்கள் பிடிக்கும் - எந்த கலாசாரப் பின்னணி கொண்டதானாலும் பரவாயில்லை. நுகர்வோருக்கு எது பிடிக்கும் என்று நாடி பிடித்து அறிய இது உதவுகிறது. சோஷியல் மீடியாவில் இருக்க விரும்புகிறேன், சும்மா அதைப்பற்றி எழுத மட்டும் அல்ல. இசையை நேசிக்கிறேன், அதற்காக வேலை செய்வதை மட்டும் அல்ல. சினிமாவிலேயே முழுகியிருக்க விரும்புகிறேன், அதன்மூலம் மீடியாவில் என் பங்கு பொருளுள்ளதாகிறது.

ரூபா: உங்கள் பணி உங்கள் நேரத்தையும் சிந்தனையையும் ஆக்கிரமிப்பதாக இருக்கிறதென்று எனக்குத் தெரியும். தனிப்பட்ட முறையில் உங்களுக்கென்றும், உங்கள் குடும்பத்துக்கென்றும் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?
ராதா: எனக்கு என் குழந்தைகள் மிகவும் முக்கியம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரத்தை அவர்களின் தேவைக்கேற்ப ஒதுக்குகிறேன். அதே நேரத்தில் திறமிக்க நிர்வாகியாகவும் பணியாற்ற விரும்புகிறேன். அதற்கேற்பக் குடும்பப் பணிகள் சிலவற்றுக்கு வேறு நபர்களை வைத்திருக்கிறேன்.

(இந்த உரையாடலை நிகழ்த்திய ரூபா ரங்கநாதன் நியூ யார்க்கிலுள்ள நியூ சில்க் ரூட் நிறுவனத்தில் முதலீட்டாளர் தொடர்பு மற்றும் மார்க்கெடிங் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கிறார். பன்மைக் கலாசார உத்தியாளரும் எக்ஸிகியூடிவ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் இன்டர்நேஷனல் என்பதன் நிறுவனர் தலைவரும் ஆவார். சென்னையில் பயின்று, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் மற்றும் பல பிரபல விளம்பர நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தபின் அமெரிக்காவுக்குப் பெயர்ந்தவர்.)

உரையாடல்: ரூபா ரங்கநாதன்

*****


படிக்கட்டுகள்
* மேனேஜர், என்.பி.சி. யுனிவர்சல்
* மேனேஜர், என்.பி.சி. கேபிள்
* டிரெக்டர், காமெடி சென்ட்ரல்
* துணைத்தலைவர், எம்.டி.வி. நெட்வர்க்ஸ்
* துணைத்தலைவர், பன்னாட்டுத் தலைமை, கார்ப்பரேட் மற்றும் மீடியா ஆய்வு, யாஹூ!
* முதுநிலை துணைத் தலைவர், ஆய்வும் உட்பொருளும், தி நீல்சன் கம்பெனி அண்ட் என் எம் இன்சைட் (ஒரு நீல்சன் மெக்கின்ஸி கம்பெனி)

*****


பாப் பிட்மன்
MTVயின் நிறுவனரும் அமெரிக்கா ஆன்லைனின் (AOL) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாப் பிட்மன், ஏஓஎல் டைம் வார்னரின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியுமாவார். அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து வழி நடத்தும் கிளியர் சேனல் மீடியா & அட்வர்டைசிங் உலகின் மிகப்பெரிய அவுட்டோர் விளம்பர நிறுவனம். இதன் பில்போர்டுகளை நியூ யார்க் நகரின் பிரபல டைம்ஸ் ஸ்குவேர் தொடங்கி விமான நிலையங்கள், வணிக வளாகங்கள் உட்பட மக்கள் திரளும் எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். இதன் வானொலி மற்றும் டி.வி. சேனல்களுக்கு உலகெங்கிலும் 200 மில்லியன் நேயர்கள் உள்ளனர். ராதா சுப்ரமணியம் இவருடன் எம்.டி.வி.யில் பணியாற்றுகையிலேயே தமது கூர்த்த அறிவினாலும், மீடியா, பிராண்டுகள், நுகர்வோர் குறித்த நுணுகிய புரிதலாலும் பாப் பிட்மனின் கவனத்தை ஈர்த்தார். அதுவே ராதாவின் அனுபவத்தையும் செயலூக்கத்தையும் கிளியர் சேனலுக்கு பாப் கொண்டுவரக் காரணமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படங்களுக்கு
More

ஹரீஷ் ராகவேந்திரா
கலைமாமணி வீ.கே.டி.பாலன்
Share: 




© Copyright 2020 Tamilonline