Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
ஏரிகாத்த ராமர்
- சீதா துரைராஜ்|செப்டம்பர் 2012|
Share:
சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளது ஏரிகாத்த ராமர் ஆலயம். ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபாண்டக மஹரிஷியின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். மஹரிஷியின் வேண்டுதல்படி அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாணக் கோலத்தில் காட்சி தந்தார். இங்கே புஷ்பகவிமானத்துடன் கோதண்டராமர் ஆலயம் எழும்பியது. கோயிலின் கருவறையில் சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமர் நிற்கிறார். தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரை தரிசிக்கின்றனர். விபாண்டக மஹரிஷியும் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. ஜனகராஜாவின் மகளாக வளர்ந்ததால் இப்பெயர்.

கோயிலுக்குப் பின்புறம் ஏரி உள்ளது. ஆங்கிலேயர் அரசாண்ட காலத்தில், ஏரி நிரம்பிக் கரை உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அவதிக்குள்ளானார்கள். லயோனல் பிளேஸ் அப்போது கலெக்டராக இருந்தார். கரையை பலப்படுத்த அவர் செய்த முயற்சிகள் பலன் தரவில்லை. ஒரு சமயம் அவர் ஆலயத்துக்கு வந்தபோது அர்ச்சகர்கள் அவரை தாயார் சன்னதியைத் திருப்பணி செய்து தரும்படிக் கேட்டனர். நீங்கள் வணங்கும் ராமருக்குச் சக்தியிருந்தால் இவ்வருடம் மழை பெய்யும்போது ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால் நான் திருப்பணியைச் செய்து தருகிறேன் என்றார் அவர்.

மழைக்காலம் துவங்கி நீரால் நிரம்பி ஏரி உடையும் நிலை ஏற்பட்டது. என்ன செய்தும் ஏரி உடைவதைத் தவிர்க்க முடியாத நிலை. திகைத்த கலெக்டர் ப்ளேஸ், இரவு நேரத்தில் ஏரியைப் பார்வையிடச் சென்றார். அங்கே மின்னல் ஒளியில் இரண்டு இளைஞர்களைக் கண்டார். அவர்கள் கையில் வில்லும், அம்பும் வைத்திருந்தனர். அதிலிருந்து ஒளி கிளம்பியது. அதன் பின்னர் ஏரி உடையவில்லை. ராம, லட்சுமணர்களே இளைஞர்களாக வந்து ஏரி உடைவதைக் காத்தனர் என்பதை அறிந்த ப்ளேஸ் மகிழ்ந்தார். தன் வாக்குப்படி தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். இதைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்பு தாயார் சன்னதியில் உள்ளது. ஏரி உடையாமல் காத்ததால் இவர் 'ஏரி காத்த ராமர்' என அழைக்கப்படுகிறார். ராமர் ஆலயம் என்றாலும் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் கருணாகரப் பெருமாள் பிரதான தெய்வமாகக் காட்சி தருகிறார். விபாண்டகரால் பூஜிக்கப்பட்ட இவருக்கே விழா நடக்கிறது. சீதையைத் தேடிய ராமர் இவரை பூஜித்ததாக ஐதீகம். ராமருக்கும் உற்சவ மூர்த்தி உண்டு.
ராமாயணம் எழுதிய கம்பர், அதை அரங்கேற்றுவதற்கு முன் ராமர் தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தலத்திற்கு அவர் வந்த சமயம், ஓரிடத்தில் சிங்கம் உறுமுகிற சப்தம் கேட்டது. பயந்து போன கம்பர் அங்கே உற்றுப் பார்த்தபோது நரசிம்மர் லக்ஷ்மி தேவியுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் சிங்க முகமில்லாமல் மனித முகத்துடன் சாந்த நரசிம்மர் சிலை வடிக்கப்பட்டது. உற்சவரான இவர் 'பிரகலாத வரதன்' என்று அழைக்கப்படுகிறார். சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ ஆராதனைகள் நடக்கின்றன. 16 கரங்களுடன் அக்னி கிரீடம் அணிந்த சக்கரத்தாழ்வார் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இவருக்குக் கிழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பின்புறமுள்ள யோகநரசிம்மர் நாகத்தின்மீது காட்சி தருகிறார். இராமானுஜருக்குப் பெரிய நம்பி 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து வைத்த தலம் இதுதான். இருவரும் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர். ராமானுஜர் தீட்சை செய்த நிலையில் வணங்கியபடியும், பெரிய நம்பி ஞானமுத்திரை காட்டியபடியும் இருக்கின்றனர். குழந்தைகள் கல்வியில் சிறக்க இவர்களை வணங்குகின்றனர். பெரிய நம்பி பூஜித்த கண்ணன் சிலையும் இங்கே உள்ளது. குழந்தைப் பேறு வேண்டி இவரை வழிபடுகின்றனர். ராமானுஜருக்கு தீட்சை கொடுக்கப் பயன்படுத்திய சங்கு, சக்கர முத்திரைகள் இக்கோயிலில் உள்ளன. 1935ல் நடந்த ஆலயத் திருப்பணியின் போது இவை கிடைத்தன. ராமநவமி விசேஷமாக, ஒரே நாளில் ஐந்து வித அலங்காரங்களுடன் கொண்டாடப்படுகிறது. தேர்த்திருவிழாவும் நடக்கிறது.

ராமானுஜர் இத்தலத்தில் வெண்ணிற ஆடையில் காட்சி தருகிறார். காரணம், இல்வாழ்க்கையில் இருந்த ராமானுஜர் துறவு மேற்கொள்ளும் முன் இங்கு தீக்ஷை பெற்றதால். மூலவர், உற்சவர் இருவருக்குமே வெண்ணிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. ஆனிமாத ப்ரமோற்சவத்தில் ராமர் புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட ஒரு தேரிலும், கருணாகரப் பெருமாள் மற்றொரு தேரிலும் உலா வருவது கண்கொள்ளாக் காட்சி.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline