Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
தமிழ்வாணன்
- அரவிந்த்|செப்டம்பர் 2012||(1 Comment)
Share:
ஆர்தர் கானன் டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸைப் போலச் சாகாவரம் படைத்த 'சங்கர்லால்' பாத்திரத்தை உருவாக்கியவர் தமிழ்வாணன். இவர் மே 5, 1926 அன்று, தேவகோட்டையில், லெ.லெட்சுமணன் செட்டியார் - பிச்சையம்மை ஆச்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் லட்சுமணன். பிற்காலத்தில் திரு.வி.க. இவருக்கு 'தமிழ்வாணன்' என்ற பெயரைச் சூட்டினார். நகரத்தார் பலர் சிறந்த பதிப்பாளர்களாக, பத்திரிகையாளர்களாக விளங்கினர். தந்தையும் ஒரு சிறந்த வாசகர். எனவே தமிழ்வாணனுக்குச் சிறுவயதிலிருந்தே எழுத்திலும் பதிப்பிலும் ஈடுபாடு. உயர்கல்வியைத் திருச்சியில் முடித்தபின், கிருஷ்ணசாமி ரெட்டியார் நடத்திய 'கிராம ஊழியன்' இதழில் உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அதன் ஆசிரியர் வல்லிக்கண்ணன். பிழை திருத்தம் முதல் பதிப்பக வேலை அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் தமிழ்வாணன். கிராம ஊழியன் பத்திரிகை பிரபலமானதென்பதால் அதை நாடி வந்த பல எழுத்தாளர்களுடன் நட்பு ஏற்பட்டது. சில மாதங்களிலேயே தமிழ்வாணன் அதன் ஆசிரியராக உயர்ந்தார்.

செட்டிநாட்டைச் சேர்ந்த சக்தி வை.கோவிந்தன் சென்னையின் சிறந்த பதிப்பாளர்களுள் ஒருவராக இருந்தார். 'பாரதியார் கவிதைகள்' உட்படப் பல நல்ல நூல்களை மலிவு விலைப் பதிப்பில் விற்று வந்தார். தமிழ்வாணன் அவரைச் சந்தித்தார். சக்தி. கோவிந்தன் 'அணில்' என்ற வார இதழைத் தமிழ்வாணனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கினார். 'அணில்' சிறப்பாக வளர்ந்தது. தமிழ்வாணன் "அணில் அண்ணா" என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளும், தலையங்கமும், கேள்வி-பதிலும் சிறுவர்களின் அறிவு வளர உதவின. குழந்தைகளிடையே வாசிப்பார்வத்தைத் தூண்டிய இதழ்களுள் அணிலுக்கு மிக முக்கிய இடமுண்டு. இந்தக் காலகட்டத்தில் 'சக்தி' அலுவலகத்தில் உடன் பணியாற்றிய ரா.கி.ரங்கராஜன், கண்ணதாசன், வலம்புரி சோமநாதன் போன்றோருடன் தமிழ்வாணனுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது இறுதிவரை தொடர்ந்தது.

அணிலைத் தொடர்ந்து வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து 'ஜில்ஜில்' பதிப்பகம் உருவாகத் துணை நின்றார். அதன்மூலம் தமிழ்வாணன் எழுதிய 'சிரிக்காதே', 'அல்வாத் துண்டு', 'சுட்டுத் தள்ளு', 'பயமா இருக்கே' போன்ற சிறுவர் நாவல்கள் அமோகமாக விற்பனை கண்டன. இவற்றோடு நேருஜியின் வாழ்க்கை வரலாறை அவர் எழுதி வெளியிட்டார். தமிழ்வாணன் உருவாக்கிய துப்பறியும் சிறுவன் 'கத்திரிக்காய்' சங்கர்லாலைப் போலவே புகழ்பெற்ற பாத்திரமாகும். தமிழ்வாணனின் ஆற்றலைக் கண்ட குமுதம் பத்திரிகை நிறுவனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை கல்கண்டு இதழைத் தொடங்கி, பொறுப்பாசிரியராகத் தமிழ்வாணனை நியமித்தார். சின்னச் சின்ன துணுக்குச் செய்திகள், செய்திக் கட்டுரைகள், பொது அறிவுச் செய்திகள், விமர்சனங்கள், கேள்வி-பதில், சிறுவர் கதைகள், கட்டுரைகள் எனப் பல்சுவை இதழாக வெளிவந்தது. எல்லா வயதினரும் விரும்பிப் படிக்கும் இதழாக அது இருந்தது.

இக்காலகட்டத்தில் துப்பறியும் நாவல்கள் எழுதத் தொடங்கினார் தமிழ்வாணன். சங்கர்லால்-இந்திரா தம்பதியினரை உருவாக்கி அவர்களை உயிருள்ள பாத்திரங்களாக உலவவிட்டார். கல்கண்டு இதழில் மட்டுமல்லாமல் பிற்காலத்தில் ஆனந்த விகடன், அமுதசுரபி போன்ற இதழ்களிலும் நாவல்கள் எழுதினார். "துணிவே துணை" என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட தமிழ்வாணன், கொள்கைப் பிடிப்பும் லட்சிய வேட்கையும் உடையவராக இருந்தார். தமது மனைவி மணிமேகலையின் பெயரில் 'மணிமேகலை பிரசுரம்' என்ற பதிப்பகம் மற்றும் விற்பனை நிலையத்தைத் துவங்கினார். கறுப்புக்கண்ணாடி + தொப்பியை தனது தனித்த அடையாளமாகக் கொண்டிருந்தார். அஞ்சலட்டையின் முகவரிப் பகுதியில் இவற்றை வரைந்து அனுப்பினால், தமிழகத்தின் எந்த இடத்திலிருந்தும் அது அவரது பதிப்பகத்தை அடைந்துவிடும்.
தமிழ்வாணன் எழுத்தாளர், பதிப்பாளர் மட்டுமல்ல; சிறந்த ஆராய்ச்சியாளரும் கூட. பல்துறை ஆர்வம் மிக்கவர். ஜோசியம், கைரேகை, எண்கணிதம், சித்த மருத்துவம், ரெய்கி, தத்துவம், சமயம், உளவியல் எனப் பல கலைகளில் தேர்ந்தவர். அதனாலேயே அவர் "Master of All Subjects" என்று போற்றப்பட்டார். பிற்காலத்தில் தமிழில் வெளியான சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றுக்கு முன்னோடி தமிழ்வாணன்தான். 'வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?', 'நோயில்லாமல் வாழ்வது எப்படி?', 'சிகரெட் பழக்கத்தை விடுவது எப்படி?', 'நீங்கள் உயரமாக வளர வேண்டுமா?' என்பதில் ஆரம்பித்துப் பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் நூற்றுக்கணக்காண நூல்களை எழுதிப் பதிப்பித்தார். எளிய மொழியில், முக்கியமான விஷயம் எதையும் தவற விடாதவையாக அவரது நூல்கள் அமைந்திருந்தன. துப்பறியும் நாவல்களிலும் அவர் புதுமையைப் புகுத்தினார். 'பாரிஸில் சங்கர்லால்', 'ஹாங்காங்கில் சங்கர்லால்', 'பெர்லினில் சங்கர்லால்' போன்ற நூல்கள் மட்டுமல்ல; 'மணிமொழி நீ என்னை மறந்து விடு', 'மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி?', 'ஷாக்', 'பேய் பேய்தான்', 'பேய் மழை', 'இன்னுமா உயிரோடு இருக்கிறாய்?', 'இன்னொரு செருப்பு எங்கே?' என்றெல்லாம் மிக வித்தியாசமான தலைப்புகளில் நாவல்கள் எழுதிய முன்னோடி எழுத்தாளர் அவர். தன்னுடைய கதைகளைத் தனித்தமிழில் பாமரரும் வாசிக்கத் தகுந்த வகையில் எளிமையாக எழுதினார். மறைமலை, கயல்விழி, மான்விழி, மணிமொழி, மலர்க்கொடி, சொல்லழகன், இருங்கோ வேள், தமிழ் வேள் எனத் தனது கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டுவதிலும் வழிகாட்டி அவர். தமிழ்வாணன் பாதிப்பால் எழுத வந்தவர்கள் அநேகம்.

தமிழ்வாணன் பல வெளிநாடுகள் சென்றவர். அங்குச் சென்ற தமது அனுபவத்தை கற்பனையில் கலந்து பல நாவல்களை உருவாக்கினார். பின்னர் தம்மையே ஒரு பாத்திரமாக்கியும் தம் நாவல்களில் உலவ விட்டார். அந்தப் புதுமையைச் செய்த முதல் எழுத்தாளரும் அவர்தான். (பண்டை இலக்கியத்தில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தம்மையும் ஒரு பாத்திரமாக அமைத்திருந்தார்.) தமிழ்வாணன் எழுதிய 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' ஆய்வு நூல் அக்காலகட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒன்று. "ஒரு தனிமனிதர் தன் சொந்த முயற்சியால் எந்த அளவுக்கு முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழ்வாணன்" என்கிறார் அவரது பள்ளித் தோழர் வானதி திருநாவுக்கரசு. "நான் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த காலத்தில் கல்கண்டு இதழில் என்னை எழுத வைத்து இருபது ரூபாய், முப்பது ரூபாய் என்று அன்பளிப்பு வாங்கித் தந்ததை மறக்கவே முடியாது" என்கிறார் நண்பரான ரா.கி.ரங்கராஜன். "என்னைச் சீண்டி, என்னை எழுத வைத்து என் முதல் இரு கதைகளையும் கல்கண்டில் வெளியிட்டு என்னை எழுத்தாளர் ஆக்கியதே தமிழ்வாணன்தான்" - இது புனிதனின் கருத்து.

தமிழக அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் பலரும் தமிழ்வாணனின் நெருங்கிய நண்பர்கள். புரட்சி நடிகர் எம்ஜி. ராமச்சந்திரனுக்கு "மக்கள் திலகம்" என்ற பட்டத்தைச் சூட்டியவர் தமிழ்வாணன்தான். ஜெய்சங்கரைக் கதாநாயகனாக வைத்து 'காதலிக்க வாங்க' என்ற திரைப்படத்தைத் தொடங்கினார். ஆனால் அத்துறை அவருக்கு வெற்றியைத் தரவில்லை என்பதால் புத்தக உலகிலேயே மீண்டும் தம் கவனத்தைச் செலுத்தினார். கடுமையான உழைப்பு, போதிய ஓய்வு கொள்ளாமை காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. 1971ம் ஆண்டு நவம்பர் 10 அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் தமிழ்வாணன். அவர் உருவாக்கிய மணிமேகலைப் பிரசுரத்தை அவரது மூத்த மகன் ரவி தமிழ்வாணனும், கல்கண்டு இதழை லேனா தமிழ்வாணனும் நடத்தி வருகிறார்கள். வாசக நெஞ்சங்களில் நிலைத்து வாழும் தமிழ்வாணன் பல கிரைம் எழுத்தாளர்களுக்கு முன்னோடி.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline