Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (மாற்றம் 13)
- சந்திரமௌலி|ஜூலை 2012||(1 Comment)
Share:
Click Here Enlargeஇதுவரை...
பிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்சியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்ததும் ஸ்ரீயின் மனம் மாறுகிறது. பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இது எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயைச் சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ராஜை அழைத்து வர தினேஷ், ஸ்ரீயுடன் கிளம்புகிறான். ஸ்ரீ தனக்கு ஏற்பட்ட காயத்தை மேலும் நினைவு கூர்ந்தவாறே ராஜைப் பழி தீர்க்கும் எண்ணத்தில் காரை செலுத்துகிறான். தினேஷ் வீட்டை நெருங்கியதும் குழந்தை நித்யாவுக்கு வலிப்புக்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. ஸ்ரீ என்ன செய்தான்? ராஜின் துன்பம் தீர்ந்ததா?

*****


ஸ்ரீ உடனடியாக நித்யாவின் நிலைமையைப் புரிந்து கொண்டான். ரங்கனைப் பழிவாங்குவது, மறுநாள் அதிகாலையில் ஊருக்குக் கிளம்ப வேண்டியது போன்ற எல்லாவற்றையும் நினைவிலிருந்து அழித்து விட்டவன் போல் அந்தக் குழந்தையைக் கையாளத் தொடங்கினான். முதலில் நித்யாவை பேசினெட்டிலிருந்து அகற்றி தரையில் சுற்றி எந்தத் தடையும் இல்லாமல், அதே நேரம் உறுத்தாமலிருக்க மெத்தென ஒரு துணியை விரித்துக் கிடத்தினான். பிறகு குழந்தையின் ரப்பர் டீத்தரை கவனமாக அவளுடையை பற்களுக்கிடையில் வைத்து, நாக்கு கடிபடாமலும் அதே நேரம் உள்வாங்கி விடாமலும் பிடித்துக்கொண்டான். அதன்மீது இருந்த போர்வையை மெல்ல எடுத்து, குழந்தையின் போராட்டத்தில் அது கழுத்தையோ கைகால்களையோ சுற்றி இறுக்கிவிடமால் பார்த்துக்கொண்டான். பக்கத்தில் எதுவும் கூர்மையான விஷயங்களோ, குழந்தைக்குக் காயம் ஏற்படுத்தக்கூடிய வஸ்துவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

நித்யாவின் கண்கள் சொருகி, வாயோரத்தில் சற்றே கொழகொழப்பான வெள்ளைத் திரவம் கொஞ்சமாக எட்டிப் பார்த்தது. ஸ்ரீ இப்போது முற்றிலும் வேறொரு மனிதனைப் போல இயங்கிக்கொண்டிருந்தான். கண் கொட்டாமல் அந்தக் குழந்தை படும் அவஸ்தையைப் பார்த்தபோது அவனுக்குள் தன்னைப் பற்றிய சுய இரக்கம் சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டது.

குழந்தைக்கு உதறல் எடுக்கத்தொடங்கிய போது மாடியிலிருந்து வேகமாக இறங்கி வந்த ராஜ், நித்யாவை ஸ்ரீ எந்தப் பதற்றமும் இல்லாமல், இதில் மிகவும் தேர்ச்சி அடைந்தவன் போல நிதானமாக ஆனால் பொறுப்பாக ஒன்றொன்றாகச் செய்வதைப் பார்த்து, "அய்யோ நித்யா.. மறுபடியுமா?" என்று கத்த வாயைத் திறந்தவன், செயலற்று வாய் மூடாமல் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, நித்யா ஒருவித சோர்ந்த மயக்க நிலைக்குப் போகத் தொடங்கியது. மறுபடியும் சுயநினைவுக்கு வந்தவனாக ரங்கன் கீழே இறங்கி ஸ்ரீயின் அருகில் வந்தான். ஸ்ரீயை முதன்முறையாக வெகு நெருக்கத்தில், நல்ல விளக்கு வெளிச்சத்தில் ரங்கன் பார்த்தான். காரில் ஏறியது முதல் மூளையின் நினைவறைகளில் இவனை எப்போதோ வாழ்க்கையில் சந்தித்திருக்கிறோம், எங்கே? யார்? தன்னிச்சையாகத் தேடிக்கொண்டே இருந்ததற்கு, பளீரென்று வெளிச்சம் போட்டது போல விடை கிடைத்துவிட்டது.

சீனு, சீனு.. கண்ணனூர் சீனு, சந்தேகமே இல்லை. இது என்னால் காயப்படுத்தப்பட்ட சீனுவேதான்..- ராஜை அதுவரை கவனிக்காமல் நித்யாவையே கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ தனக்கு மிக அருகில் ஒரு கேவல் சப்தம் பெரிதாகக் கேட்கவே கவனம் கலைந்தவனாக சப்தம் வந்த பக்கம் திரும்பினான்.

"அய்யோ…சீனு.. என்னை மன்னிச்சிடுடா" என்று தடால் என்று ராஜ், ஸ்ரீயின் கால்களில் விழுந்து அவற்றைப் பிடித்துக் கொண்டு தன் கண்ணீரால் நனைத்தான். "ஸ்ரீ... சீனு.. நான் யாருன்னு உனக்கு... உங்களுக்குத் தெரியுதா. நான்தான் ரங்கராஜ். ரங்கன். கண்ணனூர் ரங்கன். யாருக்காவது எப்பவாவது பெரிய தப்பு பண்ணியிருப்பே, அதைப் பத்தி யோசின்னு சொன்னியே, நான் வாழ்க்கையிலே பண்ணின பெரிய தப்பு உனக்கு அந்தப் பத்தாம் கிளாஸ் பரீட்சை ஹாலிலே பண்ணினது தான். அதுக்குப் பிறகு நான் அதை நினைச்சு வருத்தப்படாத நாளே இல்லை. எப்படியாவது உன்னை மறுபடி பார்க்க மாட்டோமா, உன் காலில் இப்படி விழுந்து மன்னிப்பு கேக்க மாட்டோமான்னு ஏங்கிக்கிட்டேயிருந்தேன். அதுக்கப்புறம் வாழ்க்கையிலே நிறைய கஷ்டப்பட்டுட்டேன். எல்லாமே எனக்குக் கிடைச்ச தண்டனைனு நெனைச்சுப்பேன். அது எதுவும் என்னை அவ்வளவு கஷ்டப்படுத்தலை. ஆனா நான் பண்ணினது தப்புன்னு உணர்ந்ததும், அதை உன்கிட்ட சொல்லி மன்னிப்பு கேக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்காம பட்ட வேதனை தான் என்னை ரொம்ப கஷ்டப்படுத்திருச்சு. இன்னிக்கு அதுக்கு விமோசனம் கிடைச்சிடுச்சு."

"டேய் ரங்கா..உன் ரெசுமேவைப் பார்த்ததுமே நீ யாருன்னு தெரிஞ்சிகிட்டேன். காலை விடுடா. எழுந்திரு."

"இல்லை சீனு, இது என்னோட இருபது வருஷ மனப்போராட்டம். உன்னுடைய ஆத்மார்த்தமான மன்னிப்பு கிடைக்காம என் வேதனை தீராது. உன் அப்பா, அம்மா எப்படி உன் நிலைமையைப் பார்த்து வேதனைப் பட்டிருப்பாங்கனு நல்லா உணர்ந்துட்டேன். நான்தான் ரங்கன்னு தெரிஞ்சும் என் குழந்தை கஷ்டப்படறதப் பார்த்ததும் எவ்வளவு அனுசரணையா நீ அதை கவனிச்சிக்கிட்ட. உனக்கு என்னிக்குமே நல்ல மனசு. அதான் எல்லாக் குறையையும் மீறி நீ நல்லாயிருக்க" கண்களைத் துடைத்துக் கொண்டு, மனநிறைவோடு சொன்னான் ராஜ்.
"ரங்கா, நீ நினைக்கிற மாதிரி நான் நல்ல மனசுக்காரன் இல்லை. நீதான் ரங்கன்னு உன் ரெசுமேவைப் பார்த்ததும் தெரிஞ்சிகிட்டேன். உனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம்னு தினேஷ் சொன்னான். உனக்கு நம்பிக்கையை நல்லா குடுத்துட்டு, கடைசியிலே வேலை இல்லைனு சொல்லி உன்னை நோகடிச்சிட்டு அத்தோட நான் யாருங்கிற உண்மையை உனக்கு சொல்லணும்னு நினைச்சிருந்தேன். என் மனசு முழுக்க பழிவாங்கணும்கிற வெறி கரும்புகை மாதிரி மண்டிக்கிடந்தது. இவ்வளவு வருஷம் நீ உன் பாவத்தை நினைச்சு வேதனைப்பட்டு, தினமும் மனசுக்குள்ள மன்னிப்பு கேட்டே உன் மனசை சுத்தமாக்கிட்டிருந்த. ஆனா, நான் இவ்வளவு வருஷம் எப்படியாவது உன்னை ஒருமுறையாவது திரும்ப சந்திக்கணும், பழிவாங்கணும்னு நினைச்சு, நினைச்சு என் மனசை மேல மேல அழுக்காக்கிட்டேயிருந்தேன். இந்த சில நிமிஷங்கள் உன் குழந்தை பட்ட வேதனையைப் பார்த்ததும் என் மனசு சுத்தமாயிடுச்சு. எனக்குத் தெளிவு வந்துருச்சு."

"சீனு, நீ எனக்கு இந்த வேலை குடுக்கலேனா பரவாயில்லை. அது உனக்கு மனசுக்கு திருப்தி குடுக்கும்னா பரவாயில்லை. நீ யாருன்னு தெரிஞ்சிருக்கிலைனா, நீ வேலை குடுத்துதான் தீரணும்னு போராடியிருப்பேன். என் நிலைமை அப்படி. ஆனா, இப்ப நீ யாருனு தெரிஞ்சதும் நீ எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்கத் தயாராயிட்டேன்."

"தண்டனை, பழி வாங்குறது எல்லாம் மட்டமான எண்ணங்கள்னு நான் நல்லா புரிஞ்சிகிட்டேன். நீ எனக்கு பண்ணினதுக்கு தண்டனையா தான் உன் குழந்தைக்கு இந்த வலிப்பு நோய் வந்திருக்குனு நீ நினைக்கிறே. ஆனால், அந்தக் குழந்தை வேதனைப்படும்போது நான் இதையே யோசிச்சபோது எனக்கு ஒரு தெளிவு வந்தது. இந்த மாதிரி குழந்தைகளுக்கு நல்ல மனசுள்ள, அரவணைப்பும், அக்கறையும் காட்டக்கூடிய அப்பா, அம்மா தேவை. அது உன்கிட்டேயும், உன் மனைவிகிட்டேயும் இருக்கறதாலே தான் கடவுள் இந்த பொக்கிஷத்தை உங்ககிட்டே ஒப்படைச்சிருக்கார். இது தண்டனை இல்லை, தகுதிக்கு கிடைச்ச வெகுமதி. அதேபோல இவ்வளவு வருஷம் சந்திக்க வாய்ப்பே இல்லாமல் இருந்துட்டு இப்ப நாம இந்த எதிர்பாராத இடத்துலே சந்திச்சதும், என்னுடைய வலிப்பு நோய் அனுபவமும் இந்தக் குழந்தை நித்யாவை நல்லபடியா இனி கவனிக்க உதவணும்கிற ஒரே காரணத்துக்காகத் தான்னு நான் புரிஞ்சிகிட்டேன். உன் தகுதிக்கு இந்த வேலை உனக்குக் கிடைக்க ஏற்பாடு பண்றேன். நித்யாவுக்கு எவ்வளவு நாளா இப்படி இருக்கு? என்ன ட்ரீட்மெண்ட் இதுவரை குடுத்தீங்க எல்லா விவரமும் எனக்குக் குடு. இனி நித்யாவுக்கு என்ன ட்ரீட்மெண்ட் தரணும், எப்படி பார்த்துக்கணும் எல்லாம் நான் சொல்லித் தரேன். கண்ணைத் துடை. குழந்தையை கவனிக்கலாம் வா."

குழந்தை நித்யா இப்போது ஆழ்ந்த மயக்கம் கலந்த தூக்கத்தில் நிச்சலனமாக இருந்தது. அதைக் கைகளில் எடுத்து அதன் வாயைத் துடைத்தவாறே, "என்ன இருந்தாலும் இது என் குழந்தைக்குப் பெரிய குறைதானே. எப்படி இந்தப் பிஞ்சு உடல் இதைத் தாங்கும்!" என்று வேதனையாகச் சொன்னான் ராஜ்.

"இது ஒரு குறையேயில்லை. இதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு, எப்டாயின், டெக்ரடாலிலிருந்து நியூரோ சர்ஜரி வரை இதை குணப்படுத்த எவ்வளவோ மெடிகல் அட்வான்ஸ்மெண்ட் வந்தாச்சு. இந்த மெடிகல் அட்வான்ஸ்மெண்ட் எல்லாம் வர்ரதுக்கு முன்னாடியே எத்தனையோ பேர் இந்த நோயோட, எத்தனையோ சாதனை பண்ணியிருக்காங்க. இதெல்லாம் பெரிய நோய் இல்லை. என் அனுபவத்துலே மனக்குறைங்கிறது தான் பெரிய நோய் புரிஞ்சுகிட்டேன். நான் இன்னிக்குதான் அதுலேருந்து குணமாகியிருக்கேன். நீ அதுக்கு பலி ஆயிடாதே."

"நீ சொன்னா சரிதான். தேங்க்ஸ்னு சொல்லி உன்னை அன்னியாமாக்க விரும்பலை. இந்த நோய் இருந்தும் அதைமீறி சாதனை பண்ணின ஒருத்தர் மட்டும் எனக்குத் தெரியும். அதனாலே மனசைத் தேத்திக்கிறேன்."

"யாரு? ஜான்டி ரோட்ஸா? அலெக்சாண்டர்?"

ஸ்ரீயை நோக்கிக் கையைக் காட்டி "நீ தானப்பா அந்த சாதனையாளன். எனக்குத் தெரிஞ்ச சாதனையாளன்" என்றான் ராஜ்.

"அதான் வேலை நிச்சயம்னு சொல்லிட்டேனில்லை. அப்புறம் எதுக்கு ஐஸ் வெக்கிறே". இருவரும் மனம் விட்டு எல்லாக் கவலையும் மறந்து சிரித்தார்கள்.

யாரோ பலமாகக் கைகளைத் தட்டும் சப்தம் கேட்டது. சப்தம் வந்த திசையில் ஒரே நேரத்தில் இருவரும் திரும்பினார்கள். தினேஷ் பளபளவென நன்கு குளித்துவிட்டு ஃப்ரெஷாக நின்று கொண்டிருந்தான். "ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துட்டு, இதுக்கு ரெண்டு நாளா பாடுபட்ட என்னை மறந்துட்டீங்களேபா" என்று பொய்க் கோபத்தோடு, ஆனால் வாயெல்லாம் சிரிப்பாகச் சொன்னான் தினேஷ்.

"டேய் அப்ப உனக்கு நாங்க யாருனு நல்லா தெரியுமா? தெரிஞ்சுதான் இப்படி நாங்க தனியா சந்திக்க ஏற்பாடு பண்ணினியா?"

"ஆமா, நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிக்கணும். ஸ்ரீ, எனக்கு உன்னுடைய பழைய கதை நீ சொல்லித் தெரியும். ராஜ் சில மாசங்களுக்கு முன்ன அவனோட பழைய வாழ்க்கையைப் பத்தி சொன்னபோது அவனாலே பாதிக்கப்பட்டது நீதான்னு புரிஞ்சுகிட்டேன். ஆனால் அப்ப அவங்கிட்ட அதை சொல்லலை. நீ அமெரிக்கா வரும்போது உங்களைச் சந்திக்க ஏற்பாடு பண்ணி உங்க ரெண்டு பேர் மனசுலே இருக்கிற குறையைப் போக்கணும்னு நெனைச்சேன். ஆனால் அதுக்குள்ள, நித்யாவுக்கு இப்படி திடீர்னு வலிப்பு வரத் தொடங்கினது, ராஜுக்கு வேலை போனது எல்லாம் நீ அமெரிக்கா வர்ரதுக்குள்ள நடந்துருச்சு. ராஜோட ரெசுமேவைப் பார்த்ததுமே உன் முகம் போன போக்கைப் பார்த்து நீ அவனை அடையாளம் தெரிஞ்சுகிட்டேனு புரிஞ்சுகிட்டேன். எப்படியாவது நீ ராஜைத் தனியா சந்திக்கணும், ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிக்கணும்; யாருடைய குறுக்கீடும் இல்லாம நீங்க சந்திச்சால் சண்டை போட்டுகிட்டா கூட கடைசிலே சமாதனாகிடுவீங்க, உங்க மனசுலே இவ்வளவு வருஷம் தேக்கி வெச்சிருக்கிற கோபம், வருத்தமெல்லாம் தீர்ந்துடும்னு கணக்கு போட்டேன்."

"பெரிய ஆளப்பா நீ. ஒண்ணுமே தெரியாத மாதிரி முகத்தை வெச்சுகிட்டு இவ்வளவு காரியம் பண்ணியிருக்கே. உன்கூட நிச்சயம் போக்கர் வெளையாட மாட்டேன்" என்றான் ராஜ்.

"ஓஹோ அப்ப நீ தண்ணி அடிச்சாப்போல இருந்தது, மயங்கினது எல்லாம் நடிப்புதானா?" என்றான் ஸ்ரீ.

"ஆமாம்பா.. அப்பதான் நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிக்க முடியும்னு… ஆனா, நித்யாவுக்கு இப்படி இந்த நேரத்துலே ஆனது, கவிதாவுக்கு வேலை போனதெல்லாம் என் வேலையில்லை. எல்லாம் அவன் செயல்" என்று மேலே கை காட்டினான் தினேஷ்.

அப்போது வாசலில் ஒரு டாக்ஸியில் கவிதா வந்து இறங்கினாள். இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் கவிதா தினேஷ் வீட்டு கிச்சனில் உப்புமா செய்ததும், ஸ்ரீயும், ராஜும் பழைய சீனு, ரங்கனாக மாறி கண்ணனூர் கதையை விடியும் வரை பேசியதும், நித்யாவின் ட்ரீட்மெண்டுக்கு என்ன செய்யலாம் என்று தீர்மானித்ததும் விவரிக்க வேண்டிய விஷயங்கள் இல்லை.

மறுநாள் காலை தினேஷின் உடைகளை போட்டுக்கொண்டு, ராஜ் நியூயார்க்குக்கு ஸ்ரீயோடு கிளம்பினான். தினேஷின் காரில் எல்லாரும் ரயில் ஸ்டேஷனுக்குப் போனார்கள். ராஜும், ஸ்ரீயும் அருகருகே அமர்ந்தவாறு கம்பெனியைப் பற்றியும், வேலையைப் பற்றியும் பேசிக்கொள்ள ஆரம்பித்தபோது வண்டி புறப்பட்டது. ஒரு நிம்மதிப் பெருமூச்சோடு "தினேஷ் எவ்வளவு பெரிய ஹெல்ப் நீங்க பண்ணியிருக்கீங்கனு உங்களுக்குத் தெரியாது. இட் ஈஸ் ஏ பிக் ரிலீஃப். தாங்க்யூ வெரி மச். இவ்வளவு பெரிய விஷயங்களுக்கு நடுவிலே உங்களுக்குத் தாங்க்ஸ் கூட சொல்ல மறந்துட்டோம். சாரி. உங்களுக்கு பதிலுக்கு நாங்க என்ன செய்யிறதுனு தெரியலை" என்றாள் கவிதா.

"கமான், டோண்ட் பீ டூ ஃபார்மல். பதிலுக்கு எப்ப உங்க வீட்டுக்கு வந்தாலும் நல்ல சாப்பாடு போடுங்க அது போதும். இல்லை, எனக்கு ஏத்த மாதிரி நல்ல பொண்ணா பாத்து சொல்லுங்க, வீட்ல பாத்து பாத்து அலுத்துப் போயிட்டாங்க" என்றான் ஸ்ரீ.

"ஆமா, நீங்க பொண்ணைப் பாத்தா ஏதோ ஃபீலிங்க் வரணும்னு சொல்றீங்க. அப்படி ஒருத்தி எங்க இருக்கானு தெரியலை!"

தினேஷ் கவிதாவையும், நித்யாவையும் அவர்கள் அபார்ட்மெண்டில் தன் காரில் கொண்டு விட்டான். "ஏதாவது தேவைப்பட்டால் எனக்கு ஃபோன் பண்ணுங்க. ராஜ் நாளை மதியம் வந்துருவான்" என்று சொல்லிவிட்டு "நித்யா குட்டி, அங்கிளுக்கு பை சொல்லு" என்று செல்லமாக அதன் கன்னத்தைக் கிள்ளிவிட்டுக் கிளம்பும் போது, பெரிய பெட்டிகளோடு ஒரு நடுத்தர வயதுப் பெண் பக்கத்து அபார்ட்மெண்டின் கதவைத் திறக்க சிரமப்படுவதை கவனித்தான். அப்போது தான் வந்திருக்க வேண்டும். அவனே சுவாதீனமாக "லெட் மீ ஹெல்ப் யூ" என்று சொல்லி கதவைத் திறந்தான். இதற்குள் கவிதா அந்தப் பெண்ணோடு அறிமுகம் செய்துகொண்டு, அவள் மெடிகல் ரிசர்ச் மேல்படிப்புக்காக இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டாள்.

தினேஷ் கதவைத் திறந்துவிட்டு "வெல்கம் டு அமெரிக்கா. ஆல் தி பெஸ்ட் வித் யுவர் ரிசர்ச் ஸ்டடீஸ்" என்று சொல்லி சாவியைக் கொடுத்தான். "தேங்க்ஸ்" என்று மந்தகாசமாகச் சிரித்தவாறு அவள் சாவியை வாங்கிக்கொள்ளும் போது அவள் கைகளில் மருதாணியை கவனித்தான். சற்றே மாநிறமான அவள் முகத்தைப் பார்த்தான். அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. நிச்சயம் இது லவ் ஃபீல்ங்க்தான். தன்னை அறியாமல் கையை நீட்டி "ஐ ஆம் தினேஷ், தேர் ஃபேமிலி ஃப்ரெண்ட்." என்றான்.

நாசூக்காக அவள் மெலிதாகக் கை கொடுத்து "ஐ ஆம் தனலஷ்மி,. நான் தமிழ் நாடுதான். தமிழ்லேயே பேசலாம்" என்று சொன்னவாறு உள்ளே போனாள்.
கவிதா தினேஷிடம் "அடிக்கடி வீட்டுக்கு வாங்க. பார்க்கலாம்" என்றாள். அவள் பக்கமே திரும்பாமல் தனலஷ்மி போவதையே பார்த்துக்கொண்டு, "கண்டிப்பா இனிமே அடிக்கடி வருவேன்" என்று சொல்லிக்கொண்டு, கனவுலகில் பறப்பதுபோல தினேஷ் மெதுவாக நடந்து போனான்.

(முற்றும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline