Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை
சுதந்திர தாகம்
தீபா
- R. சந்திரசேகரன்|ஜனவரி 2012||(1 Comment)
Share:
ரகுராம் காரை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். காரில் ஏதோ பாட்டு மெல்லிசாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் கைகள் ஸ்டீரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தனவே தவிர மனம் என்னவோ எப்பொழுது இந்தப் பாட்டு முடியும் என்று எண்ணிக்கொண்டிருந்தது. ஆம்! அப்போதுதான் அவளது அந்த இனிய குரல் ஒலிக்கும்.

"ஹலோ! யார் பேசறீங்க?" வானொலியில் அந்த இனிய குரல் இழைந்தது.

"நான்தான் பூவேந்தன் பேசறேன் தீபா மேடம்!"

"பூவேந்தன்! நல்ல தமிழ்ப் பெயர் வெச்சிருக்கீங்க! எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன் மேடம், நீங்க எப்படி இருக்கீங்க?"

"நானும் நல்லா இருக்கேன். நீங்க என்ன பண்றீங்க பூவேந்தன்?"

"மேடம்! நான் ஆட்டோ ஓட்டறேன்!"

"ஓ! ஆட்டோக்காரங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்."

"தாங்க்யூ மேடம்! நான் ஆட்டோ ஓட்டும்போது ஒங்க பாட்டுங்களக் கேட்டுகிட்டுதான் ஓட்டுவேன்! எனக்கு ஒங்க குரல்னா ரொம்ப பிடிக்கும்."

"ரொம்ப நன்றி பூவேந்தன்! நீங்க மீட்டர்படி பணம் வாங்குவீங்களா அல்லது மீட்டர்க்கு மேல பணம் கேப்பீங்களா?"

"ஐயோ மேடம்! நான் ஒங்க ரசிகன். மீட்டர்க்கு மேல பத்து பைசாகூட வாங்க மாட்டேன்!"

"ரொம்ப சந்தோஷம்! இன்னிக்கி ஒரு நல்ல ஆட்டோக்கார நண்பரை சந்திச்சோம்! இதோ ஒங்களுக்கு பிடிச்ச பாட்டப் போடறோம்! கேளுங்க!" தீபாவின் கிண்கிணிக் குரலைத் தொடர்ந்து பாடல் ஒலித்தது. ரகுராமன் பெருமூச்சு விட்டான். அவன் மனதில் தீபா நிலைத்து பல நாட்களாகி விட்டன. என்ன இனிமையான பேச்சு! என்ன ஒரு இங்கிதம்! குரலில்தான் என்ன இளமை! மனத்தைக் கிறங்க வைக்கும் மந்திரக் குரல்!

தீபா வானொலி நிலையத்தின் பெரும் பொக்கிஷம். இளைஞர்களை தினந்தினம் ஏங்க வைக்கும் வெண்கலச் சிரிப்பு. உரையாடலில் ஒரு குழந்தைத்தனம். தீபாவுக்காகவே காலை பத்து மணிவரை வானொலியை அலறவிடும் வாலிபர் கூட்டம். அலுவலகம் வந்துவிட்டது. ரகு காரைவிட்டு இறங்கினான். அவன் அந்தப் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியின் தொழில்நுட்பக் குழுவின் தலைவன். ஐந்திலக்க ஊதியம் பெறுபவன். இருபத்தேட்டே வயது நிரம்பிய அந்தக் கட்டிளம் இளைஞனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அம்மா அப்பா பார்க்கும் எல்லாப் பெண்களையும் அவன் நிராகரித்து விட்டான். அவன் மனதில் முழுக்க முழுக்க தீபா அமர்ந்திருந்தாள்.

*****


"என்ன சார்! அங்கேயே நின்னுட்டீங்க?" செக்யூரிட்டியின் குரலைக் கேட்டுத் தன் நிலைக்கு வந்தான் ரகுராம். காரின் முன்சீட்டிலிருந்து தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு செக்யூரிட்டியிடம் பின் சீட்டிலிருந்து சாப்பாட்டுப் பையை எடுத்து வரச் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

"என்ன ரகு! நியூஸ் கேட்டியா?" அவன் நண்பன் கோபி அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். என்ன என்பதுபோல் தலையை நிமிர்த்தினான் ரகு. ஆனால் அவன் மனது அவனிடம் இல்லை. அந்த இனியவளிடம் தூது சென்றிருந்தது.

"நம்ம மோகனை சிகாகோவுக்கு அனுப்பறாங்களாம்."

"ஓ!" ரகுராமின் பதில் கோபிக்கு திருப்தியாக இல்லை.
"அவனுக்கு அடுத்த மாசம் நிச்சயம் பண்ணப் போறாங்க! இப்பப் போய் அவன அனுப்பறது ரொம்ப வருத்தமாயிருக்கு."

ரகுவிடமிருந்து பதில் ஏதும் இல்லை. அவன் ஏதோ ஃபைலைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

"டேய் ரகு! என்ன ஆச்சு உனக்கு?"

"ஒண்ணுமில்லடா! லேசா தலைய வலிக்கறது. சரியாப் போய்டும்."

"சரி! நான் ஒரு பத்து நிமிஷம் கழிச்சி வரேன். காபி சொல்றேன்! ஏதாவது மாத்திரயோட எடுத்துக்கோ."

கோபி வெளியேறி விட்டான். ரகு ஃபைலை மூடி வைத்தான். எப்படியாவது ரெண்டு நாள்ல தீபாவை சந்திக்கணும்.

*****


ரகுவின் கார் வீட்டை அடைந்தபோது இருட்டி விட்டது. அம்மா வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். "வாடா ரகு! ஒனக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன். நீயே வந்துட்டே!"

ரகுவுக்குத் தெரியும் அம்மா என்ன பேசப் போகிறாள் என்று. காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தான். "இன்னிக்கி அந்த மேட்ரிமோனியல் சைட்லேருந்து மூணு ஜாதகம் அனுப்பியிருக்காங்க. அதுல ஒண்ணு ரொம்ப பொருத்தமா இருக்கு. ஃபோன் பண்ணி பொண்ணோட அம்மா அப்பாகிட்டே பேசிட்டோம். பொண்ணு கம்ப்யூட்டர் இஞ்சினிரிங் முடிச்சிட்டு ஏதோ சாஃப்ட்வேர் கம்பனில வேல செய்யறாளாம். போட்டோவையும் ஆன்லைன்ல பாத்துட்டோம். ரொம்ப அழகாயிருக்கா! ஒனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்!"

அம்மா பேசிக்கொண்டே போனாள். அப்பா அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். ரகு லேப்டாப்பை சோபாவில் போட்டுவிட்டு முகம் கழுவப் போய்விட்டான். அவனுக்கு இதெல்லாம் கேட்டுக் கேட்டு புளித்துப் போய்விட்டது. அவனது எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி எந்தப் பெண்ணும் அமையவில்லை. அவன் மனம் முழுக்க தீபா அமர்ந்திருந்தாள்.

"ஏண்டா! நாம்பாட்டுக்குப் பேசிண்டிருக்கேன்! நீ எதுவும் பேசாம போயிண்டிருக்கே. ஓம் மனசுல என்ன தான் நெனச்சிண்டிருக்கே?"

"அவனுக்கு ஏதாவது லவர் இருக்காளோ என்னமோ! எதுவாயிருந்தாலும் சொல்லித் தொலையேண்டா! ஒன்னால எனக்கும் லைன் கிளியர் ஆக மாட்டேன்றது!" எங்கிருந்தோ நுழைந்தாள் அவனது தங்கை ராதிகா. இப்பொழுதுதான் காலேஜ் முடித்திருக்கிறாள் என்பதை அவளது கலகலப்பே காட்டிக் கொடுத்துவிடும்.

"ஒண்ணுமில்லே! எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னா விட்டுடுங்களேன்! இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும்!" கூட்டம் கலைந்தது. ஆனால் ராதிகாவின் காலேஜ் மூளை வேலை செய்தது. அண்ணனைத் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தாள்.

"வாவ்! அந்த தீபாவா!"

"ஏய்! கத்தாதே! இது நான் போட்டிருக்கற கணக்கு! அவோ மனசுல என்ன இருக்குன்னு தெரியணுமில்லே!"

"அட நீ ஒண்ணுண்ணா! ஒன்னக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு என்ன கசக்கப் போறதா? நீ விஷயத்த எங்கிட்ட விடு! நான் கவனிச்சிக்கறேன்."

அடுத்த மூன்றாவது நாள் எங்கெங்கோ விசாரித்து தீபாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள் ராதிகா. அண்ணனையும் பேச வைத்தாள். ரகுவிடம் சுமார் அரைமணி நேரம் பேசிய தீபா முதலில் மறுத்தாலும் கடைசியில் மறுநாள் சந்திக்கச் சம்மதித்தாள்.

'என் கனவுக் கன்னியைச் சந்திக்க இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் இருக்கிறதே!' அந்த நினைப்பிலேயே உறங்கிப் போனான் ரகு.

*****


மாலை மணி ஐந்து. வானொலி நிலையத்தின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர் ரகுராமும் ராதிகாவும். ஊழியர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. ராதிகா மெதுவாக வரவேற்பாளரிடம் விசாரித்தாள். "மேடம் இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க! வந்தா நானே சொல்றேன்! ஒக்காருங்க!"

பத்து நிமிடம் பதினைந்து நிமிடமாகி பதினைந்து, இருபது நிமிடமாகியது. தூரத்தில் உள்ளிருந்து யாரோ வருவது தெரிந்தது. வரவேற்பாளர் ராதிகாவை அழைத்தார்.

"அதோ வராங்க பாருங்கம்மா! அவங்கதான் தீபா!"

ரகுவுக்குத் தன் காதலியை காணப் போகிறோம் என்ற நெகிழ்ச்சி.. ராதிகாவுக்குத் தன் அண்ணியைப் பார்க்கப்போகிறோம் என்ற சிலிர்ப்பு.. தொலைவில் இளைஞர்களின் உள்ளத்தைப் பிழிந்தெடுக்கும் ரசிகர்களின் கனவுக்கன்னி வந்து கொண்டிருந்தாள். தன் குழந்தைக் குரலால் கோடானு கோடி மக்களுக்குக் குதூகலத்தை அள்ளித் தந்து கொண்டிருக்கும் குரலரசி வந்து கொண்டிருந்தாள். அண்ணனும் தங்கையும் ஆவலுடன் எழுந்து நின்றனர்.

விஜி என்கின்ற விஜயலட்சுமி அவர்களை நெருங்கிவிட்டார். குள்ளமான, சுமாரான உருவம். அம்மைத் தழும்புகள் நிரம்பிய முகம். கட்டைகள் தாங்கிய கால்கள். அவள் கட்டியிருந்த புடவை அவளைவிட அழகாக இருந்தது. கைகளில் ஏதோ தீப்பட்ட காயம் வடுவாகப் பதிந்திருந்தது.

"வணக்கம்" கட்டைகளைச் சுவற்றில் சாய்த்துவிட்டு அமர்ந்தார் விஜயலட்சுமி. ராதிகாவுக்குத் தலை சுற்றியது. 'அய்யய்யோ மோசம் போய்ட்டோமே!' மெதுவாக ரகுவைத் திரும்பிப் பார்த்தாள். ரகு புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

"வணக்கம் தீபா! எப்படி இருக்கீங்க?"

"இது வானொலி நிகழ்ச்சி இல்லை! நமக்குள்ள நோ ஃபார்மாலிடிஸ். நேத்து நம்ம ரெண்டு பெரும் போன்ல பேசினத ராத்திரி பூரா யோசிச்சி பார்த்தேன். அடுத்த வாரமே உங்க அம்மா அப்பாவைக் கூட்டிண்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க! ஹலோ மை டியர் சிஸ்டர் இன் லா! எப்படி இருக்கீங்க?"

ராதிகா அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. ரகுராம் தன் கொள்கைக்கேற்ற மனைவியைத் தேர்ந்தெடுத்த திருப்தியுடன் தீபாவிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தான்.

R. சந்திரசேகரன்,
லண்டன்
More

மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை
சுதந்திர தாகம்
Share: 




© Copyright 2020 Tamilonline