Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
எஸ்.ராமகிருஷ்ணன்
- அரவிந்த் சுவாமிநாதன்|டிசம்பர் 2011|
Share:
தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன். வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து...

கே: உங்களது எழுத்துக்கான விதை விழுந்தது எப்போது, எப்படி?
ப: என்னுடைய ஊர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு. பூர்வீகமாக விவசாயக் குடும்பம். இருந்தாலும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாகவே கல்வியைப் பிரதானமாக எடுத்துக் கொண்ட குடும்பம். அப்பா, அம்மா இரண்டு வழியிலும் எல்லோருமே படித்தவர்கள். அப்பா கால்நடை மருத்துவர். சித்தப்பா எஞ்சினியர். அந்தச் சின்ன கிராமத்தில் எல்லா நாளிதழ்களும், பத்திரிகைகளும் எங்கள் வீட்டுக்கு வரும். வீட்டில் ஒரு நூலகமும் இருந்தது. எனக்கு இரண்டு விதமான பாதிப்புகள் இருந்தன. ஒன்று, அம்மா வழி தாத்தா மூலம் வந்தது. அவர் சைவ சித்தாந்தத்தில் மிகப்பெரிய அறிஞர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர். அவர் எல்லாத் தமிழ் இலக்கியங்களையும் கற்று வைத்திருந்தார். அப்பா வழித் தாத்தா பெரியார்வழிச் சிந்தனை உடையவர். தாத்தா வீட்டுக்கே 'பெரியார் இல்லம்' என்றுதான் பெயர். திராவிட இயக்கத்தின் ஆரம்பகால பாதிப்பு எங்கள் குடும்பத்தில் இருந்தது. சீர்திருத்தத் திருமணங்கள், அரசியல் விவாதங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் வீட்டிற்குள் அறிமுகமாயின . ஆகவே என்னுடைய சிறுவயது வாழ்க்கை இந்த இரண்டு எதிர்துருவங்களுக்குள் இருந்தது. ஆனாலும் அவர்கள் எல்லோருமே படிப்பதை, விவாதிப்பதை, பேசுவதை, எழுதுவதை நேசிப்பவர்களாக இருந்தார்கள். என்னுடைய அண்ணன், மாமா சித்தப்பா என எல்லோரும் இலக்கியம், எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். எழுத்துக்கான ஒரு களம் என் வீட்டில் இருந்தது.

எனது சித்தப்பாவுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால் நிறைய ரஷ்ய நூல்கள், சஞ்சிகைகளை அவர் வாங்குவார். வீட்டிலும், நூலகத்திலும், நண்பர்கள் சொல்லும் நூல்களைப் படித்தும் எனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டேன். கல்லூரிப் பருவத்திலேயே நான் எழுத்தாளர் ஆவதென்று முடிவு செய்துவிட்டேன். ஆங்கில இலக்கியம் படித்தேன். காலிகட் யூனிவர்சிடியில் நாட்டுப்புற இலக்கியத்தில் பிஎச்.டி. செய்தேன். ஆனால் கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தால் போதும். அதை வைத்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறானோ அப்படி எதிர்கொள்ள நினைத்தேன். அதற்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். ஐந்தாண்டுகள் இந்தியாவின் எல்லா முக்கியமான நூலகங்களுக்கும் சென்று படித்தேன். இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறையப் பயணம் செய்தேன். படித்த புத்தகங்களை விட, நான் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் விட, நேரடி வாழ்க்கை மிகப் பெரியது; அது கற்றுத்தரும் பாடம் மிகப்பெரிது என்பதை என் பயணங்களில் தெரிந்து கொண்டேன். ஒரு தேசாந்திரியாக என்னைக் கருதிப் பயணம் செய்துகொண்டே இருந்தேன். அந்தப் பயண அனுபவங்களும், படித்த விஷயங்களும், எனக்கு வழிகாட்டியவர்களும், நான் படித்து வியந்த உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களும்தான் நான் எழுதுவதற்குக் காரணம். இப்போதும் அதே மனநிலையில் கற்றுக்கொள்வது, பயணம் செய்வது, தேடிப்போவது என்ற ஆர்வங்களுடன்தான் இருக்கிறேன். எழுத்து, பயணம் இரண்டும் மாறி மாறி நடந்துகொண்டு இருக்கிறது.

கே: உங்களது முதல் கதை குறித்து...
ப: என்னுடைய முதல் கதை 'கபாடபுரம்'. கபாடபுரம் என்னும் அழிந்து போன நகரைப் பற்றிப் படித்தபோது எனக்குள் ஒரு கற்பனை தோன்றியது. அதைக் கதையாக எழுதினேன். அந்தப் பிரதி பின்னால் தொலைந்து போய் விட்டது. அச்சில் வெளியான என்னுடைய முதல் கதை 'பழைய தண்டவாளம்'. கணையாழியில் வெளியானது. அந்தக் கதைக்கே எனக்கு 'இலக்கியச் சிந்தனை' பரிசு கிடைத்தது. என்னுடைய முதல் புத்தகத்துக்குச் சிறந்த புத்தகம் விருது கிடைத்தது. ஆக, நான் எழுதத் தொடங்கும் போதே அடையாளம் காணப்பட்ட ஒரு எழுத்தாளன்தான். அதற்கு முக்கியமான காரணம், நான் எழுதத் தொடங்குவதற்கு முன்னால் பத்தாண்டுக் காலம் அதற்காகத் தயார் ஆனேன். ஆங்கில இலக்கியம், உலக இலக்கியம் என நிறையப் படித்தேன். விடுமுறை நாட்களில் நிறைய நேரம் படித்துக் கொண்டேயிருப்பேன். காலை, மாலை நண்பர்களுடன் விளையாடும் நேரம் தவிர்த்து வேப்ப மரத்து அடியில் அல்லது கிணற்றுப் படிக்கட்டுகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது எனது இயல்பு. புத்தகங்களுடன் பயணம் செய்வது எனக்கு மிக விருப்பமானது. எனது குடும்பச் சூழலும் எனது படிப்பிற்குத் தடை சொல்லாத ஒன்றாக இருந்ததால் இது சாத்தியமானது.

கே: எழுத்தாளர் கோணங்கியுடன் சேர்ந்து நிறைய இலக்கியப் பயணங்கள் செய்திருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆம். கோணங்கி எனக்கு முன்பாக என் அண்ணனின் நண்பர். பயண விருப்பமே எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது, பயண ஆர்வம் உடையவர்கள் என்பதால் இணந்தே ஊர் சுற்றுவோம் ஆனால் ஒருவரையொருவர் சுமையாக நினைப்பதேயில்லை, அவரவர் விருப்பத்தின்படி பயணம் செய்வோம். ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டோம். ஒரே ஊரில் ஒரே இடத்தைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பார்வையும் அவருக்கு ஒரு பார்வையும் இருக்கும். அப்படிப் பயணத்திற்கான ஒரு நண்பர் கிடைப்பது அபூர்வம். கோணங்கியும் நானும் இரண்டு பறவைகள் போல. ஒரே வானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் எங்களின் இயல்புகள் வேறு. ஒரே மரத்தில் அந்தப் பறவைகள் அமரலாம். ஆனால் எந்தப் பறவை எப்போது பறக்கும் என்பது அதனதன் சுதந்திரம் சார்ந்தது. இப்போதும் நாங்கள் சந்திக்கிறோம். பயணம் செய்கிறோம். ஆனால் அவரவர்க்கான வழியில் செய்கிறோம். ஆனால் அந்தப் பயணங்களைப் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. காரணம், அவை எழுதுவதற்கான விஷயமில்லை. வாழ்வதற்கான விஷயம்.
கே: வாசகனைக் கட்டிப்போடும் தனித்துவமான மொழி உங்களுடையது. இந்த மொழி ஆளுமை, எளிமை எப்படி வசப்பட்டது?
ப: மொழியில் எளிமை அவ்வளவு எளிதில் கைவந்து விடாது. நீங்கள் எழுதும் விஷயம் பற்றி எவ்வளவிற்குத் தெளிவாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு மொழியும் தெளிவாக, எளிமையாக இருக்கும். இதற்கு நல்ல மொழிப்பயிற்சி வேண்டும். அது ஒரு குதிரையை பழக்குவது போல. குதிரையை நீங்கள் தொடர்ந்து பழக்கிவிட்டால், அதற்கு நீங்கள் உத்தரவு போட வேண்டியதில்லை. உங்களுடைய தொடுதலே போதும். அது போலத்தான் மொழியும். நிறையப் படிக்க வேண்டும். தமிழில் சமகால இலக்கியங்களைப் போலவே செவ்வியல் இலக்கியங்களும் மிக முக்கியமானவை. நான் சங்க இலக்கியத்தில் இருந்து தனிப்பாடல்கள் வரை அவ்வளவையும் படித்திருக்கிறேன். என்னுடைய மொழிக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தது நான் படித்த ரஷ்ய இலக்கியம். அதற்குப் பிறகு நான் உலக இலக்கியங்களைத் தேடிப் படித்தேன். லத்தீன் அமெரிக்க, பிரெஞ்சு, ஐரோப்பிய இலக்கியங்கள், ஆசிய இலக்கியம் என்று நிறையப் படித்தேன். இப்போதும் சமகால உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மொழியைப் பொறுத்தவரை சொல்பவரின் குரல் மிக முக்கியமான ஒன்று. அது நம்பகத்தன்மை உள்ளதாக, பொறுப்புணர்ச்சி மிக்கதாக, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாததாக இருக்க வேண்டும். இப்படி எனக்கென்று சில வழிகளை நான் உருவாக்கிக் கொண்டேன். வண்ணநிலவன் ஆகட்டும், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன் ஆகட்டும்; நான் வியக்கும் இவர்கள் அனைவருமே தமக்கே உரிய தனித்துவமான ஒரு மொழியை வைத்திருக்கிறார்கள். ஜானகிராமன், புதுமைப்பித்தன் மாதிரி சில சொற்பமான எழுத்தாளர்களுக்கு மட்டுமே தனித்துவமான மொழி வசப்பட்டிருக்கிறது. அது ஆளுமையோடு சம்பந்தப்பட்டது. அவர்கள் இதற்காகவே வாழ்ந்திருக்கிறார்கள். நான் இப்போதும் கூட ஒரு கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து விட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் படித்துப் பார்க்கிறேன். அவர்கள் போன தூரம் அதிகம் என்றுதான் படுகிறது.

கே: வணிக எழுத்து, தீவிர எழுத்து, என்பதாக ஒரு படைப்பை அடையாளப்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: நான் இந்தப் பிரிவினையை ஏற்றுக் கொள்வதில்லை. பத்திரிகையின் தரத்தை முடிவு செய்வது அதில் வெளியாகும் படைப்புகள்தாம். சிறு பத்திரிகைகளுக்கு ஒரு படைப்புச் சுதந்திரம் இருக்கிறது. எந்தத் துறை சார்ந்ததாக இருந்தாலும், எத்தனை பக்கம் உடையதாக இருந்தாலும் ஒரு படைப்பை அவற்றில் வெளியிட இயலும். ஒரு சிற்றிதழில் 'ஏன் புத்த மதம் இந்தியாவில் அழிந்தது' என்பதைப் படிக்க முடியும். ஆனால் வணிக இதழில் சாத்தியமல்ல. மொழி, பண்பாடு, கலை, கலாசாரம், சமூகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென்றால் அது சிற்றிதழ்களில் மட்டுமே சாத்தியம். வெகுஜன இதழ்கள் நாட்டு நடப்பையும், சமகாலத்தையும், கேளிக்கையையுமே அதிகம் முன்னிறுத்துகின்றன. அது வெகுஜன வாசகனுக்கானது என்றாலும் அதில் எழுத வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது எழுத்தாளன். அது அவனுடைய சுதந்திரம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நோக்கத்துக்காக அதைத் தேர்வு செய்தேன். அதை நான் அடைந்து விட்டேன் என்றும் சொல்லலாம்.

சிற்றிதழ்களில் மோசமான படைப்பும் வெகுஜன இதழ்களில் நல்ல படைப்பும் வரத்தான் செய்கின்றது. வெகுஜன இதழ்களை விலக்க வேண்டியதில்லை. நான் அதிகம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது அதில்தான். எனது 16 வயதுவரை எந்தச் சிற்றிதழைப் படித்தேன்? விகடனும், குமுதமும், துக்ளக்கும், அம்புலிமாமாவும் படித்துத்தான் வளர்ந்தேன். பிறகு நான் என் பாதையைத் தேர்வு செய்து கொண்டபின் எனக்கு டால்ஸ்டாயும், செக்காவும், சத்யஜித் ரேயும் அறிமுகமானார்கள். அந்த வயதில் வெகுஜன இதழில் படித்த ஜெயகாந்தனும், சுஜாதாவும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். எழுத்து என்பது வெகுஜன வாசக வட்டத்தை அடைய வேண்டும் என நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடி. ஒரு எழுத்தாளனின் புகழ்பெற்ற புத்தகம் 2000 பிரதி விற்றால் அதிகம். ஏழு கோடிப் பேரைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு லட்சம் பிரதிகளாவது விற்க வேண்டும். விற்கிறதா? தமிழ்நாட்டிலேயே அதிகம் விற்றது என்று பார்த்தால் பொன்னியின் செல்வனைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் பெஸ்ட் செல்லர்ஸே ஆயிரம், இரண்டாயிரம் தான். நாம் சின்ன வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் ஏன் இத்தனை பாகுபாடு என்பதுதான் என் கேள்வி.

எனக்கு வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பேதம் இல்லை. இப்போதும் நான் எந்தச் சிற்றிதழ் படைப்பு கேட்டாலும் கொடுப்பேன். ஆனால் என் எழுத்தை வெளியிடப் போவது யார் என்பதைப் பார்ப்பேன். அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. கேட்பவர்கள் மதம் சார்ந்தவர்களாகவோ, அடிப்படை விஷயங்களில் சார்புநிலை எடுக்கிறவர்களாகவோ இருந்தால், அவர்கள் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்தப் பத்திரிகையில் நான் எழுதமாட்டேன்.

கே: சிற்றிதழ்களால் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறதே!
ப: இல்லை. நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த எல்லோரும் இலக்கியத்தை நோக்கி வந்ததற்குக் காரணமே சிற்றிதழ்கள்தாம். நான் உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் படித்துக் கொள்வேன். ஆங்கிலம் அறியாதவர்கள் என்ன செய்வர்? இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களில் பலர் உலக இலக்கியங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றால், காரணம் சிற்றிதழ்கள்தாம். மற்றுமொரு முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் மிகவும் பேசப்பட்ட கதைகள் எதுவுமே வணிக இதழ்களில் வெளியானவை அல்ல. சிற்றிதழ்க்காரர்கள் ஒருமுனைப்புடன், கைக்காசைச் செலவு செய்து, எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்கத் தன்னார்வத்தினால் நடத்துகிறார்கள். வெகுஜன இதழ்களில் எழுத வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு சிற்றிதழ்கள் களமாக இருக்கின்றன. நானே ஒரு சிற்றிதழ் நடத்தியிருக்கிறேன். எனக்கு அதன் சுமை, கஷ்டம் என்னவென்று தெரியும். இன்றைக்குச் சிற்றிதழ்களின் வடிவம் மாறியிருக்கிறது. சிற்றிதழ்களின் பணிகளை ஓரளவுக்கு இன்று இணையம் செய்ய ஆரம்பித்து விட்டது என்றாலும் சிற்றிதழ்களுக்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல; உலக மொழிகள் பலவற்றிலும் சிற்றிதழ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. விற்பனை எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாமே தவிர, அவற்றுக்கான தேவை, முக்கியத்துவம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுஜன இலக்கியம், சிற்றிலக்கியம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டி இல்லை. இரண்டுமே வேறுபட்ட நீரோட்டம் கொண்டவை.

கே: குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி வருகிறீர்கள். முன்பிருந்த அளவுக்கு தற்போது சிறுவர் இதழ்கள் இல்லை, சிறுவர்களின் வாசிப்பார்வமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?
ப: முதல் காரணம் நமது கல்வி முறை. இரண்டாவது காரணம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். நான் சிறுவனாக இருக்கும்போது நீதிபோதனை (Moral Studies) வகுப்பு இருந்தது. பள்ளியில் நூலகம் இருந்தது. அங்கே கதைகளைப் கேட்க, படிக்க வாய்ப்பு இருந்தது. எனது ஆசிரியர்கள் பல நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால் தற்போது பிரமாண்டமான கல்விக் கூடங்கள் வந்து விட்டன. ஆனால் எங்கும் நீதிபோதனை வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூலகமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை பராமரிக்கப்படாமல் மாணவர்களுக்குப் பயனற்றதாய் இருக்கிறது. ஆசிரியர்கள் பாடத்தை நடத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். கல்வி தற்போது முழுக்க வணிகமாக மாறிவிட்டது. பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றால் போதும்; அதற்குப் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர குழந்தையின் அறிவு, சிந்தனை மேம்பட வேண்டும் என்று நினைப்பதில்லை.

மேலும், காட்சி ஊடகங்கள் செல்வாக்குப் பெற்ற தற்காலத்தில் சிறார்கள் படிப்பதைவிடப் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இன்றைய குழந்தைகளின் பொது அறிவும் புரிதலும் அதிகம். படித்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். கணினி இருக்கிறது. இணையம் இருக்கிறது. அன்றைக்கு அமெரிக்காவை நாங்கள் உலக உருண்டையில்தான் (Globe) பார்த்தோம். ஆனால் இன்றைக்கு இணையத்தின் மூலம் அமெரிக்காவை முழுமையாகப் பார்க்க முடியும். விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குக் குழந்தை இலக்கியங்கள் வளரவில்லை. ஆசிரியர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று கேளிக்கைக்குச் செலவழிக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள், குழந்தையின் அறிவு வளர்ச்சிக்குச் செலவு செய்யத் தயாராக இல்லை. ஆதரிப்பவர் இல்லாததால் சிறுவர் பத்திரிகைகள் குறைந்துவிட்டன. குழந்தைகளுக்கான எழுத்தாளர்களும் அதிகம் இல்லை. குழந்தை இலக்கியம் எப்படி வளரும்?

கே: ஆனால் ஹாரி பாட்டர் அதிகம் விற்கிறதே!
ப: உண்மை. என் வீட்டுக் குழந்தைகள்கூட ஹாரி பாட்டரை விரும்பி வாசிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். ஏனென்றால் அந்த மாதிரி தமிழில் எழுதுங்கள், படிக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் சிறுவயதில் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன். ஆனால் அந்த காமிக்ஸ் என் குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் விரும்புவது 'மாங்கா' மாதிரி, இன்றைக்குக் கிடைக்கும் நவீன கிராபிக்ஸ் நாவல்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அது மாதிரி ஏன் தமிழில் இல்லை என்று கேட்கின்றனர். இருக்கின்ற புத்தகங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிடித்தமான புத்தகங்கள் அதிகம் வெளிவருவதில்லை. இதுதான் இன்றைய நிலை. நான் இதற்காகவே கதைப் பயிலரங்குகள் நடத்தி வருகிறேன். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பல ஆசிரியர்கள் டி.வி.யில் யாரோ சொன்ன கதைகளைச் சொல்கிறார்களே தவிர தாமாகக் கதை சொல்வதில்லை. கேட்பதுமில்லை. ஆக, கதை கேட்காத, கதை சொல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக நான் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். இன்றைய சிறுவர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கேற்ற மாதிரி எழுத வேண்டும் என்பதற்காக நான்காம் வகுப்பு படிக்கும் என் மகன் ஆகாஷுடன் இணைந்து ஏழு நூல்களை எழுதியிருக்கிறேன்.

இது தவிர பல பள்ளிகளுக்குச் சென்று அதன் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடத்தைத் தவிர என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கலாம், அதை எப்படிக் கற்றுக் கொடுக்கலாம் என்று தனியாக ஒரு பணிப்பட்டறை நடத்தி வருகிறேன். மாணவர்ளுக்குக் கதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு மட்டுமே சுமார் ஆயிரம் ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புகளில் எனக்குத் தெரிவது என்னவென்றால் படிக்க வைக்கப்பட வேண்டியது மாணவர்கள் அல்ல; ஆசிரியர்கள்தான் என்பது. ஆசிரியர்கள் படிப்பதில்லை; கேட்கவும் மாட்டார்கள். ஆக, குழந்தை இலக்கியம் வளர வேண்டும் என்றால் மாற்றம் முதலில் வர வேண்டியது ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் தான். இதுதவிர அரசு, பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதோடு மாணவர்கள் கதைகள் படிக்க, இணையத்தில் கிடைக்கும் மின்-நூல்களை (E.Book) வாசிக்கச் சொல்லித் தரலாமே! இன்றைக்கு குழந்தைகள் விளையாட எத்தனையோ நவீனமான பூங்காங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்றிலாவது ஒரு வாசகசாலை இருக்கிறதா? கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த செயல்பாடுகள் எதற்காவது இடமுண்டா? எதுவும் இல்லை. உடல் வளர்ந்தால் போதும் மனம் வளர வேண்டாம் என்று நினைத்தால் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைதான் பாதிப்படையும். வளர வளர வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சலிப்பும், வெறுப்பும், அச்சமுமே அவனைச் சூழும். ஆனால் புத்தகங்களும் இலக்கியங்களும் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கற்றுத் தருகின்றன.

கே: இலக்கியவாதியான உங்களால் திரையுலகில் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா?
ப: எந்தத் துறையிலுமே நாம் முழுதும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. சினிமாவும் அப்படித்தான். அது ஒரு கூட்டு முயற்சி. பலரது பங்களிப்புச் சேர்ந்துதான் ஒரு சினிமா உருவாகிறது. நான் எழுதியது நூறு சதவீதம் அப்படியே வெளிவராது. தயாரிப்புச் செலவுக்கேற்ப, நடிகர்களின் மனோநிலைக்கேற்ப, பல பொருளாதார பின்னணிக் காரணிகளுக்கேற்ப அது மாறும். சினிமாவுக்குத் தேவை ஒரு எழுத்தாளர்தான். இலக்கியவாதியாக இருப்பதன் அனுகூலம் என்னவென்றால் பல நுட்பங்களை நாம் அதில் செய்து பார்க்க முடிகிறது. ஒவ்வொரு படத்திலும் என்னுடைய இந்த முயற்சி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் நினைத்ததை நூறு சதவீதம் அடைந்து விட்டேனா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம். சினிமா, அதன் உருவாக்கம், பின்னணி என்று நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கற்றுக் கொண்டதை வைத்து, சினிமாத் துறை சார்ந்து பின்னால் ஏதாவது செய்யும் எண்ணம் இருக்கிறது.

(ஆன்மீகம், நாத்திகம், கடவுள், இந்தியா, இன்றைய பதிப்புச்சூழல்கள், விருதுகள், இளம் படைப்பாளிகள், எழுத்தாளர்களுக்கிடையே எழும் சர்ச்சைகள், மொழிபெயர்ப்புகளின் அவசியம் இவை பற்றி அடுத்த இதழில்....)

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


எனது பயணங்கள்
பயணம் என்பது வெறும் ஊர் சுற்றுவதல்ல. அது ஒரு தேடுதல். அந்தத் தேடுதலைப் பலரும் ஓர் எல்லைக்குள் வைத்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மட்டுமே வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பது என்று. என் தந்தை என்னைவிட அதிகம் பயணம் செய்தவர். வீடுதான் உலகம் என நாம் நம்புகிறோம். வீட்டுக்குள் இருந்து கொண்டு உலகத்தைப் பார்க்கும்போது அது அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் நடந்து, பயணம் செய்து பார்த்தால் உலகம் இதமான ஒன்றாக இருக்கும். பயணங்களில் என்னுடைய தேடுதல், கதை எழுதுவதற்காக அல்ல. எல்லா மனித வெளிப்பாடுகளுக்குப் பின்பும் மனித மனம் எப்படி இயங்குகிறது, எப்படி அது கற்பனை செய்து கொள்கிறது, எப்படி உருவகப்படுத்திக் கொள்கிறது, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு மனிதன் எந்தெந்தத் துறையில் என்னவெல்லாம் செய்கிறான், அதற்குள் இலக்கியத்திற்கு என்ன இடம் இருக்கிறது - இதுதான் எனது தேடல். நான் வெறும் சிறுகதை, நாவல்கள் எழுதும் எழுத்தாளன் அல்ல. எனக்கு நிறைய கிளை வழிகள் உள்ளன. இவற்றின் வழியே எனது அடிப்படைத் தேடல் ஒன்றுதான். நம்முடைய வாழ்க்கையை, காலத்தை, முன்னோடிகளை எப்படிப் புரிந்து கொள்கிறோம், எப்படிப் பதிவு செய்கிறோம், எப்படி அடுத்து எடுத்துச் செல்லப் போகிறோம் என்பதுதான். நான் ஒரு தனிநபராக என்னை ஒருபோதும் உணருவதேயில்லை. நான் ஒரு வரலாற்றின், கலாசாரத்தின், இலக்கியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறேன். மானிட குலம் என்பதன் தொடர்ச்சியாகவும் இருக்கிறேன். இப்படி எனக்கு நானேதான் ஒரு வரலாற்றுச் சின்னமாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே அப்படித்தான். மூதாதையரின் வரலாறு அவனுள் இருக்கிறது. இதை ஒருவன் பிரித்துப் பார்த்து அறிந்து கொள்ள முடியாது என்பதால் மொத்தமாக இவற்றுக்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். கடந்த காலத்துக்கும் சரி, எதிர்காலத்துக்கும் சரி, நிகழ்காலத்துக்கும் சரி. பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் எனது எழுத்துக்களில் முதன்மைப்படுத்தி வருகிறேன்.

எஸ். ராமகிருஷ்ணன்

*****


நானும் ரஷ்ய இலக்கியமும்
நான் எளிய மொழியில் என் கருத்தைச் சொல்கிறேன். என்னுடைய முன்மாதிரிகளாக டால்ஸ்டாயையும், தஸ்தாவெஸ்கியையும், செகாவையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன். உலகத்துக்கே ரஷ்ய இலக்கியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவர்கள்தான் முதன் முதலில் காட்சி இலக்கியங்களை எழுதியவர்கள். மனதின் நுட்பங்களை எழுதியவர்கள். ஒவ்வொரு நிமிடமும் மனம் எப்படிச் செயல்படுகிறது என்று கிட்டத்தட்ட உளவியல் பார்வையில் பார்ப்பதுபோல் மனிதனை அணுகக்கூடிய அந்த எழுத்து முறை ரஷ்யாவில்தான் வந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று என்னவென்றால் ரஷ்ய இலக்கியத்தில் சொல்லப்பட்டவர்கள் எல்லாமே சாமான்ய மக்கள். குதிரை வண்டி ஓட்டுபவன், எளிய மனிதர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், நோயாளிகள் என்று சாதாரண மனிதர்களைத்தான் அது கொண்டாடுகிறதே தவிர ஜார் மன்னனையோ, வணிக முதலாளிகளையோ அது பேசுவதில்லை. ரஷ்ய இலக்கியத்திலிருந்து நான் இதை எடுத்துக் கொண்டேன். மனித மனம் எப்படியெல்லாம் இயங்குகிறது, தடுமாற்றம் கொள்கிறது, என்னென்ன அக, புற மாறுதல்களைச் சந்திக்கிறது என்பதை எழுதலாம். அவை மனிதனின் ஆதாரப் பிரச்சனைகளைத் தொடர்ந்து பேசுகின்றன. பசி, துயரம், மரணம், வெற்றி, தோல்விகள், மனிதனுக்குக் கடவுள் தேவையா, விஞ்ஞானத்தை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் மிக விரிவாக அவை பேசுகின்றன. இப்படி ஆதாரமான மனிதத் துறைகளை இலக்கியமே பேசுகிறது. என் எழுத்தில் ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் இருக்கும். அதை ரஷ்யப் பாணி எழுத்து என்றே சொல்லலாம். எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமாகும் முன்பே செகாவும், டால்ஸ்டாயும் அறிமுகமாகி விட்டார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்
மேலும் படங்களுக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline