Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அஞ்சலி | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஆப்பிள் பயணங்கள்
தொடரும் பயணங்கள்
- ஜயலக்ஷ்மி கணேசன்|அக்டோபர் 2011||(1 Comment)
Share:
ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள் ரேவதி. மழை நின்றபாடில்லை. இன்று அபிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் செல்ல முடியாது. பேஸ்மெண்டிலேயே போய் விளையாட வேண்டியதுதான்.

"அப்பாடா..." என்று பெருமூச்சு விட்டபடியே வலிக்கும் முழங்கால்களைத் தடவி விட்டுக்கொண்டாள். மசாலாத் தூள் ஜொலிக்கும் வாசனை மூக்கைத் துளைத்தது. நான் ஸ்டிக் பேனில் காலிஃப்ளவர் ஃப்ரை தயாராகிக் கொண்டிருந்தது. ரைஸ் குக்கரில் சாதம் வைத்து சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்தாள். மைக்ரோ அவனில் டைம் பார்த்தாள். மதியம் நான்கு மணி. இன்னும் சிறிது நேரத்தில் பேத்தி அபிராமி எழுந்து விடுவாள். அதற்குள் மற்ற வேலைகளை முடிக்க வேண்டும்.

ரேவதி அமெரிக்கா வந்து இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. மனம் பின்னோக்கி ஓடியது. இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென்று மருமகன் மகேஷிடமிருந்து போன். "ஆன்டி. மகதிக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. டாக்டர் ரெண்டு வாரம் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்கிறார். எனக்குப் பத்து நாள்தான் லீவு இருக்கிறது. நான் உடனே 'ஈ-டிக்கெட்' அனுப்பி விடுகிறேன். உங்களால் ஒரு வாரத்தில் கிளம்பி வர முடியுமா? ப்ளீஸ் ஆன்டி..."

"அதற்கில்லை மாப்பிள்ளை - இங்கே மகதியின் தங்கை மேகலாவிற்கு மும்முரமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மருமகளின் இரண்டாம் டெலிவரிக்கு உதவ வேண்டும். அதனால்தான்..." என்று இழுத்தாள்.

"ஆன்டி ஒரு மூன்று மாதம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு வந்தீர்களானால் மிகவும் உதவியாக இருக்கும். மகதிக்கு அடுத்த மாதம் நல்ல வேலை கிடைக்கும்போல் உள்ளது. பிறகு உங்கள் இஷ்டம். ஒரு நிமிடம்... மகதி பேசுகிறாள் ஆன்டி" என்றான் மகேஷ்.

மகதியும் அதே பல்லவியைத்தான் பாடினாள். "சரி மகதி. எனக்கு யோசிக்க ஒருநாள் டயம் கொடு. நாளை இந்நேரம் நானே கால் செய்கிறேன்" என்று போனை வைத்தாள் ரேவதி.

தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்தவள்தான். மன உளைச்சல் காரணமாக அப்படியே கண் அயர்ந்தாள். காலிங் பெல் விடாது அடித்தது. மகன் மோகனும், மருமகள் கலாவும்தான் ஆபிஸ் முடிந்து வந்து விட்டார்கள்.

"அம்மா.. என்ன ஆச்சு... ப்ரணவ் ஏன் அழுதுகிட்டிருக்கான்? ஏன் டல்லா இருக்கிறாய் அம்மா?" என்று கேட்டுப் பரிவுடன் அருகில் உட்கார்ந்தான். மருமகள் அவசரமாக டீ தயாரிக்கச் சென்றாள். ரேவதி நடந்தவற்றை விவரித்தாள்.

"அம்மா, இதற்குப் போய் ஏன் இப்படிக் கலங்குகிறாய்? முதலில் டீ குடி" என்றான். மருமகள் அதற்குள் சூடாக டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்தாள்.

"பாட்டீ... எனக்கு பிஸ்கட்" என்று பேரன் ப்ரணவ் ஓடி வந்தான். பிஸ்கெட்டும் காம்ப்ளானும் குடித்துவிட்டு மீண்டும் விளையாட ஓடினான். அதன்பிறகு பேச்சு தொடர்ந்தது.

மோகன்தான் நிலைமையைச் சமாளித்தான். "அம்மா... நாம் இருப்பது ஒன்றும் கிராமம் இல்லை. ஸ்டீல் சிடி ஜாம்ஷெட்பூர். இங்கு வேண்டிய வசதிகள் செய்து கொள்ளலாம். நீ உடனே மகதிக்குப் போன் செய்து ஒரு வாரத்தில் கிளம்பி வருகிறேன் என்று சொல்லிவிடு" என்றான். "நான் எல்லாம் சமாளித்துக் கொள்கிறேன்" என்று உற்சாகப்படுத்தினான்.

அவனுக்குத் தங்கை மகதியின்மேல் கொள்ளைப் பிரியம். மகதியை அமெரிக்க மாப்பிள்ளைக்குக் கொடுக்க மோகனுக்கு இஷ்டமே இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு மதராஸி சம்மேளனியில் நடந்த கோலப்போட்டியில் முதலிடம் பெற்ற மகதியைப் பார்த்து நடுவர்களில் ஒருவரான மகேஷின் அம்மா வந்து பெண் கேட்டதின் பேரில் நடந்த கல்யாணம் இது. பையனுக்கு இன்னும் ஐந்து வருடங்களில் ப்ராஜெக்ட் முடிந்து இந்தியா திரும்பும் வாய்ப்பு உள்ளது என்பதல் அரை மனதுடன் மோகன் சம்மதித்தான். ஆனால் இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. மகேஷின் திறமையாலும் மகதியின் அதிர்ஷ்டத்தாலும் அவனுக்கு மேலும் ப்ராஜெக்ட்கள் கிடைத்து வெகு சீக்கிரம் கிரீன் கார்டும் கிடைத்துவிடவே அவர்கள் இந்தியா திரும்பும் வாய்ப்பு இல்லை என்றாகிவிட்டது.

இப்போது ட்ராயில் சொந்த வீடு, இரண்டு கார்கள் என்று மிக வசதியாக இருக்கிறார்கள்.
மகதியின் முதல் பிரசவத்தின்போது ரேவதி அமெரிக்கா போய் ஆறுமாதம் இருந்தாள். அவள் இந்தியா திரும்பும்போது பேத்தி அபிராமி நான்குமாதக் குழந்தை. பிறகு அபிக்குட்டியின் ஆண்டு நிறைவுக்கு எல்லாரும் இந்தியா வந்தார்கள். மகேஷ் தந்தையின் குலதெய்வமான வைத்தீஸ்வரன் கோவிலில் குழந்தைக்கு காதுகுத்தல், ஆயுஷ்ய ஹோமம், முடி இறக்குதல் எல்லாம் முடிந்து அமெரிக்கா திரும்பும்போது ரேவதியையும் அழைத்துச் சென்றார்கள்.

அபிராமி பிறப்பதற்கு முன்பு மகதி மேல்படிப்பில் சேர்ந்து பாதிப்படிப்பு முடித்திருந்தாள். இன்னும் மூன்று கோர்ஸ் முடித்தால் மாஸ்டர்ஸ் முடிந்துவிடும். பிறகு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று மகேஷ் கேட்டுக்கொண்டதின் பேரில் ரேவதி வீட்டையும் குழந்தையையும் பராமரிக்கச் சென்றாள்.

இரண்டாம் முறையும் அமெரிக்காவில் ஆறு மாதங்கள் இருக்கும்படி ஆயிற்று. மகதி படிப்பை முடித்து ஏ+ கிரேட் வாங்கவே மகேஷுக்கு ஏக சந்தோஷம். ஆனால் வேலை கிடைக்கவில்லை. ரேவதி இந்தியா திரும்பினாள்.

இரண்டாம் முறை மகதி கருவுற்ற பிறகு எட்டாம் மாதம் போனால் போதும், அதற்குள் இரண்டாம் பெண்ணின் திருமணம், மருமகளின் பிரசவம் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தாள் ரேவதி. ஆனால் இப்போது கரு கலைந்துவிட்டதால் இந்த திடீர் அழைப்பு.

பத்து வருடங்களுக்கு முன்பு வேலை நிமித்தம் துபாய் சென்று அங்கேயே இருக்கும் தன் கணவரை நினைத்துக் கொண்டாள். இப்போது அவர் இங்கிருந்தால் மிகவும் உதவியாக இருப்பார். நல்ல சம்பளம் கிடைப்பதால் ரிடையர் ஆகும்வரை அங்கேயே இருப்பதாக உத்தேசம். வருடம் ஒருமுறை பத்து நாள் லீவில் வந்து போவார்.

மோகன்தான் மிகவும் கச்சிதமாக எல்லா ஏற்பாடுகளும் செய்தான். அடுத்த வாரமே கொல்கத்தா வந்து அம்மாவை ப்ளேன் ஏற்றி விட்டான். ரேவதிக்கு இதுதான் முதல் முறை தனி அமெரிக்கப் பயணம். கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது. எப்படியோ சமாளித்து டெட்ராய்ட் விமான நிலையம் வந்து ட்ராலியில் பெட்டிகளை ஏற்றி வெளியே வந்து மாப்பிள்ளையையும் அபிக்குட்டியையும் பார்த்த பிறகுதான் நிம்மதியானது.

அமெரிக்கா வந்த நாள் முதல் ரேவதி வீட்டின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாள். ஜெட்லாக் போகவில்லைதான். என்ன செய்வது? அபார்ஷன் ஆகிப் பிழிந்த துணியாகக் கிடந்த பெண் மகதியைப் பார்த்துத் தன் கஷ்டங்களைப் பாராட்டாமல் வேலைகளைச் செய்யத் துவங்கினாள்.

ஒருமாதம் கழித்து உடல் தேறிய பிறகு மகதிக்கு நல்ல வேலை கிடைத்தது. ரொம்பச் செல்லமாக வளர்ந்தாலும், இயற்கையாகவே கொஞ்சம் பலகீனமாக உடல் வாகினாலும் அம்மா வந்தவுடன் மகதி வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் சொகுசு கொண்டாடினாள். மாப்பிள்ளையும் ஆபீஸ் விட்டு வந்ததும் ஹெல்த் கிளப், மாரத்தான் ரேஸ், உடற்பயிற்சி என்று படு பிஸி. அபிக்குட்டியும் "பாட்டீ.. பாட்டீ.." என்று ஒட்டிக்கொண்டது.

காலை ஏழரை மணிக்குள் பெண், மாப்பிள்ளைக்கு காபி, சிற்றுண்டி தயாரித்துக் கொடுத்து அபிக்குட்டியை ஸ்கூலுக்குத் தயார் செய்து அனுப்புவதற்குள் இடுப்பு விட்டுப் போகும். பகல் பதினோரு மணிக்குப் பக்கத்து வீட்டு ஆனந்தி ஆன்டியுடன் அபி திரும்பி வருவதற்குள் ஏகப்பட்ட வேலைகளை முடிக்க வேண்டும்.

எல்லா ரூம்களிலும் போட்டது போட்டபடி கிடக்கும் பொருட்களை ஒழுங்கு செய்து, வீடு பூராவும் வேக்வம் க்ளீன் செய்து, மூன்று பாத்ரூம்கள், பாத் டப்கள் சுத்தம் செய்து துணிகளை பேஸ்மெண்டில் உள்ள வாஷிங் மெஷினில் போட்டு என்று பரபர என வேலைகள்.

அபிக்குட்டி வருவதற்குள் அவளுக்கு லஞ்ச் தயார் செய்துவிட்டு, முதல்நாள் இரவு செய்த சாப்பாட்டைச் சுடவைத்து தன் மதிய உணவை முடித்துக் கொள்வாள். அபிக்குட்டி வந்தவுடன் அவளுக்குச் சாப்பாடு கொடுத்து தூங்கச் செய்வதற்கு மணி ஒன்று ஆகிவிடும்.

அவள் தூங்கிய பிறகு தனக்கென்று சிறிது நேரம் ஒதுக்குவாள் ரேவதி. ஸ்ரீராமஜெயம் எழுதுவது, 'தென்றல்' படிப்பது, ஸ்வெட்டர் பின்னுவது இப்படியாகப் பொழுது போகும். மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்தால், அபிக்குட்டி தூங்கி எழுவதற்குள் மற்ற வீட்டுவேலைகள் சமையல் எல்லாம் முடிக்கச் சரியாக இருக்கும். இதுதான் ரேவதியின் தினசரி வேலைகள்.

ஆயிற்று, இன்றோடு அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் இரண்டு வாரத்தில் கிளம்ப வேண்டும். அபிக்குட்டியை டே கேரில் விடுவார்களாம். சமையல், வீட்டு வேலைகளை பெண், மாப்பிள்ளை இருவருமாகச் செய்வார்களாம். வீடு க்ளீன் செய்ய, தோட்டம் பராமரிக்க, மாதம் ஒருமுறை க்ளீனர் வருவாராம்.

போன் விடாது அடிக்கவே சிந்தனையிலிருந்து விடுபட்டாள் ரேவதி.
மோகன் தான் பேசினான் - "அம்மா இங்கே ஏகப்பட்ட குட் நியூஸ். மோகனாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தாச்சு. மேகலாவிற்கு நாம் பார்த்த ஆஸ்திரேலியா வரன் நிச்சயம் ஆயிடுச்சு. எனக்கு சிங்கப்பூரில் வேறு நல்ல வேலை கிடைச்சிருக்கு. அடுத்த மாதம் மேகலா திருமணம் ஆனவுடன் நான் வேலையில் சேர வேண்டும். மோகனாவும் குழந்தைகளும் இன்னும் ஆறுமாதம் கழித்து வரலாம். நீ திரும்பி வரும் ஃப்ளைட் விவரங்களை எனக்கு மெயில் பண்ணச் சொல்" என்றான்.

ரேவதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மறுபக்கம் அலுப்பாகவும் இருந்தது. இந்தியா சென்ற பிறகும் மீண்டும் இதே வீட்டு வேலை, குழந்தைகள், பராமரிப்புதான். என்ன - அங்கே வேலை கொஞ்சம் வேறு விதமாக இருக்கும். கல்யாண வேலை வேறு. மேகலா திருமணம் ஆகி ஆஸ்திரேலியா போய்விட்டால் சில நாள் கழித்து அவளும் உதவிக்கு அழைப்பாள். பிறகு சிங்கப்பூரில் மோகன் தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வா என்பான். இதற்கிடையே துபாயில் தனியாக இருக்கும் கணவருக்கு உதவியாகப் போகவேண்டும். இப்படியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் என்று கடமையும், பாசமும் ஒரு பக்கம் இழுத்தாலும் இந்தத் தொடரும் பயணங்களுக்கு என் உடல்நிலை இடம் கொடுக்குமா? கடவுளே... கூட்டுக் குடும்பத்தில் இருந்துகொண்டு இத்தனை வருடம் வேலைக்கும் போய்க்கொண்டு மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் சென்றுவிட்டது. தனக்கென்று ஒன்றும் செய்துகொள்ள வாய்ப்பும் பொழுதும் கிடைக்கவில்லை. அம்மா தாயே பராசக்தி! எனக்கு ரிடையர்மெண்டே கிடையாதா?. இந்த வருடமும் புட்டபர்த்திக்கு சேவை செய்யப் போகமுடியாது. பாதியில் விட்ட 'கீ போர்ட்' வகுப்பைத் தொடர முடியாது. கார் டிரைவிங் கத்துக்கொள்ளும் ஆசையும் நிறைவேறாது. கடவுளே இதுதான் உன் விருப்பம் என்றால் நான் தயார்தான். என் குழந்தைகள், பேரக் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உதவும் உடல்நிலையையும் சக்தியையும் எனக்குக் கொடு தாயே" என்று மனதின் ஆழத்திலிருந்து வேண்டிக்கொண்டாள் ரேவதி.

ஜயலக்ஷ்மி கணேசன்,
மிச்சிகன்
More

ஆப்பிள் பயணங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline