Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அமரர் கதைகள்
செய்கை
- பாரதியார்|செப்டம்பர் 2011|
Share:
Click Here Enlarge(செப்டம்பர் 11, பாரதியின் 90வது மறைவுநாளை நினைவு கூரும் விதத்தில் இந்தக்கதை வெளியிடப்படுகிறது)

வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது. அன்று காலையில் ஸ்வாமிக்குப் பலவிதமான அபிஷேகங்கள் நடந்தன. சந்தனாபிஷேகம் நடக்கும் சமயத்தில் நான் ஸந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தேன். எனக்கு முன்னாகவே என்னுடைய சிநேகிதர் பிரமராய அய்யர் அங்கு வந்து தரிசனம் பண்ணிக்கொண்டிருந்தார்.

"சூரபத்மனை அடித்த உஷ்ணம் அமரும் பொருட்டாக எம்பெருமான் சந்தனாபிஷேகம் செய்து கொள்ளுகிறான்" என்று பிரமராய அய்யர் சொன்னார். அங்கே ஒரு பிச்சி (பித்துப் பிடித்துக் கொண்டவள் போலே காணப்பட்ட பெண்) வந்து கந்தர் சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டு ஸந்நிதியிலே நின்று நர்த்தனம் செய்தாள். இந்த வினோதமெல்லாம் கண்டு பிறகு தீபாராதனை சேவித்துவிட்டு நானும் பிரமராய அய்யரும் திருக்குளத்துக்கரை மண்டபத்திலே போய் உட்கார்ந்தோம். அங்கே விடுதலையைப் பற்றி பிரமராய அய்யர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். பிறகு நாட்டியத்தைப்பற்றிக் கொஞ்சம் சம்பாஷணை நடந்தது. சங்கீதத்தில் நம்மவர் தற்காலத்தில் சோக ரஸம், சிங்கார ரஸம் என்ற இரண்டு மாத்திரம் வைத்துக் கொண்டு மற்ற ஏழையும் மறந்து போய்விட்டது போல, நாட்டியத்திலும் சோகம், சிங்காரம் இரண்டுதான் வைத்திருக்கிறார்கள். மற்ற ஏழும் ஏறக்குறைய கிருஷ்ணார்ப்பணம் என்று பலவிதமாகப் பேசினார். "நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாஸிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன் சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம். கணபதி, முருகன், சக்தி முதலிய தெய்வங்களுக்கெல்லாம் தனித்தனியே பிரத்தியேகமான கூத்துவகைகள் சாஸ்திரங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. கவலையை வெல்லுதல் குறி. கவலை நீங்கினால் ஆட்டமும் பாட்டமும் இயற்கையிலே பிறக்கும். பூர்வீக ராஜாக்கள் அனுபவித்த சுகமும் அடைந்த மேன்மையும் இக்காலத்தில் இல்லை. ராஜயோகியானால் அவனுக்கு நாட்டியம் முதலிய தெய்வக் கலைகள் இயற்கையிலே சித்தியாகும்."

இங்ஙனம் பிரமராய அய்யர் பேசிக்கொண்டிருக்கையில் அவ்விடத்துக்கு மேற்படி கோயில் தர்மகர்த்தாவாகிய வீரப்ப முதலியாரும் வந்து சேர்ந்தார். வீரப்ப முதலியார் நல்ல தீரன்; பல பெரிய காரியங்களை எடுத்துச் சாதித்தவர். இவருடைய குமாரன் மகா வீரனென்று போர்க்களத்தில் கீர்த்தியடைந்திருக்கிறான். இவர் வந்தவுடனே சம்பாஷணை கொஞ்சம் மாறுபட்டது. ஏதேதோ விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோவில் பணிவிடைக்காரன் ஒருவன் கையிலே மஞ்சள் காயிதங்கள் கொண்டு வந்து ஆளுக்கொன்று வீதம் கொடுத்தான். அதென்ன காகிதமென்றால், அன்று மாலை கோயிலில் நடக்கப்போகிற பெரிய பாளையம் மடாதிபதியின் உபந்நியாசத்துக்கு எல்லாரும் வந்து "சிறப்பிக்கவேண்டும்" என்ற அழைப்புக் காயிதம். அந்தக் காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் பின் வருமாறு:

"தோகை மேல் உலவும் கந்தன் சுடர்க் கரத்திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை வணங்குவ தெமக்கு வேலை."

(மயிலின் மேலே உலவுகின்ற கந்தனுடைய கையில் வெற்றி மாலை சூடி நிற்கும் வேலாயுதத்தை வணங்குவதே நம்முடைய தொழில்.)

இவ்விரண்டு பாதங்களையும் படித்துப் பார்த்துவிட்டு பிரமராய அய்யர் "நல்ல பாட்டு" என்றார். வீரப்ப முதலியார் பின்வருமாறு பிரசங்கம் செய்யலானார்:

"கேளும் காளிதாஸரே, பிரமராய அய்யரே, நீரும் கேளும். தெய்வத்தைப் போற்றுவதே நம்முடைய வேலையென்றும், அதைத் தவிர நமக்கு வேறு எவ்விதமான தொழிலும் கிடையாதென்றும் சொல்லிக் கொண்டிருப்போர் சோம்பரில் முழுகிப்போய்த் தம்முடைய வாணாளையும் வீணாகச் செய்து பிறரையும் கெடுக்கிறார்கள். செய்கை பிரதானம். செய்கையை விடுதல் பாவம். கடவுள் நமக்கு ஐம்புலன்களையும், அறிவையும் கொடுத்து எப்போதும் உழைப்பினாலேயே தனக்கும் பிறர்க்கும் நன்மை தேடும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு மாறாகச் செய்கையற்றுச் சும்மா இருப்பதை இன்பமென்று நினைப்போர் நாசத்தை அடைவார்கள். தெய்வம், கிய்வம் எல்லாம் வீண் பேச்சு. வேலை செய்தவன் பிழைப்பான் வேலை செய்யாதவன் செத்துப்போவான்" என்றார்.

அப்போது பிரமராய அய்யர், "சோம்பேறி தெய்வத்தின் பெயரை ஒரு முகாந்தரமாகக் காட்டித் தன்னுடைய சோம்பரை ஆதரிப்பதாகச் சொன்னீர்கள்; இருக்கலாம். அதனாலே தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையிலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களை யெல்லாம் நடத்துகிறான். இது மறுக்க முடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி; இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லை யென்றும் தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்துகொண்டு நடக்கும் பெரியோர் சோம்பரிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்நியைப் போலே தொழில் செய்வார்கள். எப்போதும் ஆனந்தத்திலே இருப்பதனால் அவர்களிடம் அற்புதமான சக்திகள் பிறக்கும். அந்த சக்திகளைக் கொண்டு அவர்கள் செய்யும் தொழில் உலகத்தாருக்குக் கணக்கிட முடியாத நன்மைகளைச் செய்யும். பகவான் கீதையிலே என்ன சொல்லுகிறார்? தெய்வமே செய்கிறது. தான் செய்வதாக நினைப்பவன் மூடன். ஆதலாலே முன்பின் யோசனை செய்யாமல் அப்போதப்போது நேரிடும் தர்மத்தை அனல்போலே செய்ய வேண்டும். ஆதலால், ஹே அர்ஜுனா!
"வில்லினை யெடடா - கையில
வில்லினை யெடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!

வாடி நில்லாதே - மனம்
வாடி நில்லாதே - வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே!

ஒன்றுள துண்மை - என்றும்
ஒன்றுள துண்மை - அதைக்
கொன்றி டொணாது குறைத்தலொண்ணாது

துன்பமுமில்லை - கொடுந்
துன்பமுமில்லை - அதில்
இன்பமுமில்லை பிற பிறப் பில்லை!

படைகளுந் தீண்டா - அதைப்
படைகளுந் தீண்டா - அனல்
சுடவு மொண்ணாது புனல் நனையாது!

செய்தலுன் கடனே - அறம்
செய்தலுன் கடனே - அதில்
எய்தறும் விளைவினில் எண்ணம் வைக்காதே

வில்லினை யெடடா"

என்று பகவான் சொன்னார். ஆதலால் பகவானுக்குத் தொழிலே பொறுப்பில்லை. ஆனால் தொழிலுண்டு. அது தெய்வத்தாலே கொடுக்கப்படும். உண்மையான தெய்வபக்தி யுடையவர்கள் செய்யும் செய்கையினால் கிருதயுகம் விளையும். அவர்கள் எவ்விதமான செய்கையும் தமக்கு வேண்டியதில்லை யென்று உதறி விட்டவுடனே பகவான் அவர்களைக் கருவியாகக் கொண்டு மகத்தான செய்கைகளைச் செய்வான்" என்று பிரமராய அய்யர் சொன்னார்.

அப்போது வீரப்ப முதலியார் என்னை நோக்கி "உமது கருத்தென்ன?" என்று கேட்டார். நான் "எனக்கெனச் செயல் யாதொன்று மில்லை" என்ற முன்னோர் பாடலை எடுத்துச் சொல்லி சக்தி நாமத்தைக் கூறி "நான் செய்கையற்று நிற்கின்றேன். பராசக்தி என்மூலமாக எது செய்வித்தாலும் அவளுடைய இஷ்டமேயன்றி என்னுடைய இஷ்டமில்லை" என்றேன்.

இந்தச் சமயத்தில் தண்டபாணிக்குப் பூஜை நடந்து தீபாராதனையாய்க் கொண்டிருப்பதாக ஒருவன் வந்து சொன்னான். எல்லாரும் எழுந்து சேவிக்கப் புறப்பட்டோம். சபை கலைந்தது.

மகாகவி சுப்ரமண்ய பாரதியார்
Share: 




© Copyright 2020 Tamilonline