Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
கொத்தமங்கலம் சீனு
- பா.சு. ரமணன்|ஆகஸ்டு 2011||(1 Comment)
Share:
இசை, நாடகம், சினிமா என மூன்று கலைத் துறைகளிலும் முத்திரை பதித்த தொடக்க கால ஜாம்பவான்களில் ஒருவர் கொத்தமங்கலம் சீனு. சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மார்ச் 10, 1910 அன்று சோழவந்தான் சுப்ரமண்ய ஐயருக்கும் நாராயணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். சுப்ரமண்ய ஐயர் கலெக்டர் அலுவலகத்தில் நகல் எடுப்பவர். இசைஞானம் மிக்க அவர் கல்லிடைகுறிச்சி வேதாந்த பாகவதரிடம் இசை பயின்றவர். சிறந்த பாடகரும் கூட. ஓய்வு நேரத்தில் மதுரை மற்றும் சுற்றுப்புறங்களில் நடக்கும் கச்சேரி, நாடகங்களுக்குச் செல்வது வழக்கம். மகன் சீனிவாசனையும் கூட அழைத்துச் செல்வார். தந்தையின் ஆர்வமும், திறமையும் மகனுக்கும் வந்தது. சிறுவன் சீனிவாசன் அழகாகப் பாடுவான். தாத்தாவின் ஊரான வற்றாயிருப்பில் சீனிவாசன் பள்ளியில் படித்தான். பத்து வயதில் திடீரெனத் தந்தை காலமாகவே கல்வி தடைப்பட்டது. பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாவது ஃபாரம் படித்தார். பின்னர் குடும்பச் சூழ்நிலையால் கல்வியைத் தொடரமுடியாத நிலை. உறவினர் ஒருவரிடம் உதவி வேண்ட, அவர் மதுரையில், அக்காலத்துச் சிறுவர்களின் புகலிடமாக இருந்த 'பாய்ஸ் கம்பெனி' நாடகக் குழுவில் சேர்த்து விட்டார். நல்ல குரல்வளமும், அழகான முக பாவமும் கொண்ட சீனிவாசனுக்குத் தொடக்கத்தில் சிறுசிறு வேடங்களே கிடைத்தன. பின்னர் தனது தனித்திறமையால் 'ஸ்த்ரீ பார்ட்' ஆக உயர்ந்தார். 'ஞான சௌந்தரி', 'சத்தியவான் சாவித்திரி' போன்ற நாடகங்கள் நல்ல புகழைத் தேடிக் கொடுத்தன. தொடர்ந்து நாடக வாய்ப்புகள் வரத் துவங்கின. அவருக்கு 'வள்ளி திருமணம்', 'பவளக் கொடி', 'அரிச்சந்திர மயான காண்டம்' எனப் பல நாடகங்களில் ராஜபார்ட் ஆக நடிக்கத் துவங்கினார். தாமே சொந்தமாக நாடகங்களுக்குக் கதை எழுதுவதிலும், பாடல்கள் புனைவதிலும் திறமை பெற்றிருந்தார். வற்றாயிருப்பு சாமா ஐயங்காரிடம் முறையாகக் கர்நாடக இசை பயின்று தேர்ச்சி பெற்றார்.

பல இடங்களுக்கும் சென்று சீனிவாசன் நாடகம் நடத்தி வரும் வேளையில் கொத்தமங்கலம் சுப்புவின் தொடர்பு ஏற்பட்டது. சுப்பு, கொத்தமங்கலத்தில் உள்ள மரக்கிடங்கு ஒன்றில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். இசையார்வமிக்க அவர் நண்பர்களுடன் இணைந்து சபா ஒன்றை நிறுவி நாடகங்களை நடத்தி வந்தார். 'வள்ளி திருமணம்' ஸ்பெஷல் நாடகத்தில் நடிப்பதற்காக சீனிவாசனை கொத்தமங்கலத்திற்கு வரவழைத்தார் சுப்பு. தனது கந்தர்வ கானக் குரலால் வேடனாகவும், வேலனாகவும், விருத்தனாகவும் வந்து ரசிகர்களைக் கவர்ந்தார் சீனு. நாடகம் மகத்தான வெற்றி பெற்றது. தொடர்ந்து பல இடங்களிலிருந்தும் நாடகம் நடத்த அழைப்பு வந்தது. செட்டிநாட்டுப் பகுதியில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சுப்பு, சீனிவாசனை கொத்தமங்கலத்திலேயே தங்கிக் கொள்ளுமாறும், தம்முடன் இணைந்து நாடகங்கள் போடுமாறும் கேட்டுக் கொண்டார். சீனிவாசனும் ஒப்புக் கொண்டார். அதுமுதல் வற்றாயிருப்பு சீனிவாசன், கொத்தமங்கலம் சீனு ஆனார். சுப்பு, சீனிவாசன் இருவரது புகழும் பரவியது. நாடகத்தில் நடித்ததோடு மேடைக் கச்சேரிகளும் செய்தார் சீனு. அவற்றிற்கும் வரவேற்பு நிறைய இருந்தது. நாடகம் இல்லாத நாட்களில் கொத்தமங்கலத்தில் மாணவர்களுக்கு இசை சொல்லித்தரும் பணியை மேற்கொண்டார்.

ஒருமுறை நாடகம் ஒன்றில் நடிப்பதற்காகத் திருவனந்தபுரம் சென்றிருந்தார் சீனு. அங்கு சரஸ்வதி பாயின் கதாகாலட்சேபம் நடைபெற இருந்தது. ஆனால் பின்பாட்டு பாடுவதற்கான நபர் அன்று வரவில்லை. அதனால் விழா அமைப்பாளர்கள் சிறந்த பாடகராக விளங்கிய கொத்தமங்கலம் சீனுவிடம் பின்பாட்டு பாடுமாறு வேண்டிக் கொண்டனர். சரஸ்வதி பாய் சிறந்த வித்வம்சினி என்பதால் சீனுவும் பாட ஒப்புக் கொண்டார். சரஸ்வதி பாய் கதை சொல்ல, சீனு பின்பாட்டு பாட அன்றைய நிகழ்ச்சி களை கட்டியது. சீனுவின் குரலால் கவரப்பட்ட சரஸ்வதி பாய், தான் சொல்லும் கதையைப் பெரிதும் குறைத்து, அதைப் பாடல்களாகப் பாடும் வாய்ப்பைச் சீனுவுக்கு வழங்கினார். அந்த நிகழ்ச்சி சீனுவின் வாழ்வில் திருப்புமுனை ஆனது. ஏவி.மெய்யப்பச் செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர்ஸ் கிராமபோன் கம்பெனி மூலம் இசைத்தட்டு ஒன்றை வெளியிட விரும்பினார். அதற்காக அவர் சரஸ்வதி பாயை அணுகினார். சரஸ்வதி பாய் அவரிடம் சீனுவின் இசையாற்றல் பற்றியும், சங்கீத ஞானம் பற்றியும் விரிவாகக் கூறி, அவரைப் போன்ற இளைஞர்களுக்கு ஏவி.எம். வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே ஏவி.எம். சீனுவை சென்னைக்கு வரவழைத்தார். அவரைப் பாடச் சொல்லிக் கேட்டார். சீனுவின் ஆற்றலை உணர்ந்து கொண்ட அவர், முழுக்க முழுக்கக் கொத்தமங்கலம் சீனுவைப் பாடச் சொல்லி ஓடியன் இசைத்தட்டில் பதிவு செய்து வெளியிட்டார். 1932ம் ஆண்டில் அந்த இசைத்தட்டு வெளியானது. அப்போது சீனுவுக்கு வயது 22. அதுவரை தமிழகத்தின் தென்பகுதியில் மட்டுமே பரவியிருந்த சீனுவின் புகழ் அதன்மூலம் தமிழகம் முழுவதும் பரவியது. தொடர்ந்து கொத்தமங்கலம் சீனு பாடி பல இசைத்தட்டுகள் வெளிவரத் தொடங்கின.

சீனுவின் திறமையை அறிந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பிரபல மிருதங்க வித்வானான தனது நண்பர் திண்ணியம் வெங்கட்ராம ஐயரிடம் அதுபற்றி எடுத்துக் கூறி, கொத்தமங்கலம் சீனுவையே மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ளுமாறு பணித்தார். சீனுவுக்கும் வெங்கட்ராம ஐயங்காரின் மகளான ஆனந்தவள்ளிக்கும் திருமணம் நடந்தது. மனைவி வந்த வேளை சீனுவுக்குத் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் வரத் துவங்கின. அக்காலத்தில் மும்பையில்தான் திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கப்பட்டன. லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 1934ல் 'சாரங்கதாரா' என்ற திரைப்படத்தைத் தயாரித்தது. எஸ்.ஜி.கிட்டப்பா அதை ஏற்கனவே நாடகமாக நடத்தி வெற்றி பெற்றிருந்தார். கிட்டப்பாவைப் போலவே பாடல், இசை, நடிப்பு என்று பூரண ஆற்றல் பெற்றிருந்த சீனு அப்படத்தின் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.எம்.சாரதாம்பாள் என்பவர் கதாநாயகியாக நடித்தார். படம் 1935ல் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது. (சீனுவின் சமகாலத்தவரான எம்.கே. தியாகராஜ பாகவதரும் 'சாரங்கதாரா' என்ற பெயர் கொண்ட படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அது 'நவீன சாரங்கதாரா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) சாரங்கதாராவில் சீனு பாடிய, "கோடையிலே...", "விதியை வென்றவர் யார்... " போன்ற பாடல்கள் மகத்தான ஹிட் ஆகின.

முதல் பட வெற்றி மூலம் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. வசீகரமான முகம்; 3 ஸ்தாயிகளிலும் எளிதாக சஞ்சரிக்கும் ஆற்றல்; தெளிவான கம்பீரமான குரல் மற்றும் உச்சரிப்பு. இவை அக்கால ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. 'பட்டினத்தார்' (1935), 'மீராபாய்' (1936) போன்ற படங்கள் சீனுவின் திறமையைப் பறை சாற்றின. 1937ல் வெளியான 'விப்ரநாராயணா' பாடல்களுக்காகப் பெரிதும் பேசப்பட்டது. அதில் தொண்டரடிப்பொடி ஆழ்வாராக நடித்து பாடல்களை மிக உருக்கமாகப் பாடியிருந்தார் சீனு. 'சாந்த சக்குபாய்' (1939), 'திருமங்கை ஆழ்வார்' (1940) திரைப்படங்களும் பெயர் சொல்லும் படங்களாயின. 1940ம் ஆண்டில் வெளியான 'மணிமேகலை' படத்தில் கே.பி.சுந்தராம்பாள் மணிமேகலையாக நடிக்க, சீனு உதயகுமாரனாக நடித்திருந்தார். அப்படம் பெரிதும் பேசப்பட்டது. 1941ல் இயக்குநர் கே. சுப்ரமண்யத்தின் 'கச்ச தேவயானி' வெளியானது. அதில் கதாநாயகியாக நடித்த T.R. ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் முதல் 'கனவுக்கன்னி' என்று பெயர் பெற்றார். உடன் நாயகனாக நடித்தவர் கொத்தமங்கலம் சீனு. தொடர்ந்து எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த 'சூரியபுத்ரி' என்ற படத்திலும் இந்த ஜோடியே நடித்துப் புகழ் பெற்றது. 'கிருஷ்ணப் பிடாரன்' (1942), 'பக்த நாரதர்' (1942), 'சோகாமேளர்' (1942), 'தாசி அபரஞ்சி' (1944), 'சகடயோகம்' (1946), 'துளசி பிருந்தா (1946) போன்ற படங்கள் தொடர்ந்து வெளியாகின. அனைத்துமே புராண மற்றும் பக்திப் படங்கள்.

1947ல் கொத்தமங்கலம் சீனு, பி.யூ.சின்னப்பா நடித்த 'துளசி ஜலந்தர்' வெளியானது. இப்படத்தில் சீனுவும், சின்னப்பாவும் இணைந்து பாடும் பாடல் ஒன்று இடம்பெற வேண்டுமென விரும்பினார் இயக்குநர் நாகபூஷணம். ஆனால் சின்னப்பா, "அண்ணனுக்கு இணையாக நான் கூடப் பாடுவது அவ்வளவு சரியாக, மரியாதையாக இருக்காது" என்று கூறி மறுத்து விட்டார். அந்த அளவுக்குச் சீனுவின் மீது மதிப்பு வைத்திருந்தார் பி.யூ.சின்னப்பா. சின்னப்பா மட்டுமல்ல ஜி.ராமநாதன், அவரது சகோதரர் சுந்தர பாகவதர், பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி போன்றோரும் சீனுவுக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தனர். மதுரை சோமு, ஜி.என்.பி. உட்படப் பலரது அன்பைப் பெற்றிருந்தார் சீனு. உடுமலை நாராயணகவி சீனுவுக்கு மிக நெருக்கமானவர். சீனுவின்மீது அவர் காவடிச் சிந்தில் ஒரு பாடலே இயற்றியிருக்கிறார். அதில் அவர்,

"இளம் கோதைமார் மையல் கொண்டிடும் சிலை மாரன்
தரும் கொடைக்கு மேல் அதிகாரன்
திரு கொத்தமங்கலம் ஊரன்"

என்று பாராட்டியிருக்கிறார். பிரபல எழுத்தாளர் கல்கி, "கர்நாடக சங்கீத உலகம் இரண்டு சீனிவாச அய்யர்களைத் தாங்காது என்று ஒருவர் சினிமாவுக்குப் போய்விட்டார்" என்று கூறியிருக்கிறார்.
1947ல் நாடு விடுதலை பெற்றது. திரைப்படங்களின் போக்கு மாறத் தொடங்கியது. புராண, இதிகாசப் படங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்து சமூகக் கதையம்சம் உள்ள படங்கள் அதிகம் வெளியாகத் துவங்கின. இதனால் பாதிக்கப்பட்ட நடிகர்களில் சீனுவும் ஒருவர். அதுவரை புராணக் கதாபாத்திரங்களிலேயே நடித்துப் புகழ்பெற்றிருந்த சீனு, சமூகப் படங்களில் சோபிப்பாரா என்ற ஐயம் இயக்குநர்களுக்கு எழுந்தது. அவர்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முன்வரவில்லை. 'சுகுண சரசா' என்ற சமூகப் படத்தில் எம்.எஸ்.விஜயாளுடன் நடித்தார் சீனு. 1947ன் இறுதியில் 'பொன்னருவி', 'ஏகம்பவாணன்', 'மகாத்மா உதங்கர்' ஆகிய படங்கள் வெளியாகின. அதன் பிறகு அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. வாய்ப்புக்காக யாரிடமும் கெஞ்சுவதை விரும்பாத அவர், நாடக உலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 'வள்ளி திருமணம்', 'அரிச்சந்திர மயான காண்டம்', 'பவளக்கொடி' போன்ற நாடகங்களில் மீண்டும் நடித்தார்.

இந்நிலையில் பாடகர் திருச்சி லோகநாதனின் மூத்த சகோதரரான எம்.எம். மாரியப்பா, சீனுவைச் சந்தித்தார். 'நாடக வேந்தர்' என்று புகழப்பெற்ற அவர், தம்முடன் இணைந்து 'நந்தனார்' நாடகத்தில் நடிக்குமாறு சீனுவை அழைத்தார். சீனு ஒப்புக்கொண்டார். நந்தனாராக மாரியப்பாவும், வேதியராகச் சீனுவும் நடிக்க, திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகம் நடைபெற்றபோது, அமர இடம் இல்லாத பலர் நின்றுகொண்டே நாடகம் பார்த்தனர். அந்த நாடகம் அவருக்கு மறுவாழ்வு அளித்தது. தமிழ் நாடெங்கும் பயணம் செய்து அந்நாடகத்தில் நடித்தார். நாடக வாய்ப்பில்லாத காலங்களில் சென்னை சபாக்களில் கச்சேரிகள் செய்தும், வானொலியில் பாடியும் வந்தார். ஜி.ராமநாதன் உட்படப் பலரது தனிப்பாடல்களைப் பாடி இசைத்தட்டுக்களை வெளியிட்டார். ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆண்டாள் உற்சவத்தில் தவறாது கலந்துகொண்டு பாடினார். இவர் பாடிய தோடியைக் கேட்ட திருவெண்காடு சுப்ரமண்ய ஐயர் இவரை வியந்து பாராட்டியிருக்கிறார்.

1934ம் ஆண்டில் திரையுலகில் நுழைந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படங்கள் 14. அதே ஆண்டு திரையுலகில் கால்பதித்த கொத்தமங்கலம் சீனு நடித்த படங்கள் 20. 1936ல் திரையுலகில் நுழைந்த பி.யூ.சின்னப்பா நடித்த படங்கள் 25. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர் இருவருக்கும் இணையான திறமையைக் கொத்தமங்கலம் சீனு பெற்றிருந்தாலும் பி.யூ.சின்னப்பா அடைந்த உயர்வையோ, எம்,கே.டி. பெற்ற புகழையோ சீனுவால் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் சீனு நடித்த பல படங்கள் மற்ற இருவர் நடித்த படங்களைப் போல் அதிகம் வெற்றி பெறாததும், ஜி.ராமநாதன், பாபநாசம் சிவன் போன்ற சிறப்பான வெற்றிக் கூட்டணி அமையாததும் தான்.

சீனுவுக்கு நான்கு மகன்கள். ஐந்து மகள்கள். அதனால் அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகளைக் குடும்பம் சந்தித்தது. தந்தையைப் போலத் தன் குழந்தைகளும் சிரமப்படுவதை விரும்பாத தாயார் ஆனந்தவள்ளி, கலைத்துறையில் ஈடுபடுவதை விட, நிரந்தர வருமானம் தரும் வேலையில் அமர்வதே அவர்களுக்கு நல்லது என வலியுறுத்தினார். அதன்படி சீனுவின் மூத்தமகனான எஸ்.வி.எஸ். மணியன் வங்கிப் பணியில் சேர்ந்தார். அதுமுதல் குடும்பம் தலை நிமிர்ந்தது. 1985ல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சீனுவுக்குக் கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது. 90 வயதைக் கடந்தும் குரலில் எந்தவித நடுக்கமும் இல்லாது மிகச் சிறப்பான சாரீரத்துடன் பாடிவந்த கொத்தமங்கலம் சீனு, ஆகஸ்ட் 30, 2001 அன்று 91வது வயதில் காலமானார்.

சீனுவின் மூத்தமகனான எஸ்.வி.எஸ். மணியன் இசையார்வம் மிக்கவர். வங்கியில் அதிகாரியாகப் பணியாகி ஓய்வு பெற்றுள்ளார். சோ உட்படப் பலரின் நெருங்கிய நண்பர். தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கூட. இளைய மகன் ரமணியும் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரே. கடைசி மகன் கணேசன் தம்புராக் கலைஞர். மூத்த மகள் கோமதி ஆரம்ப காலத்தில் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்தார் பின்னர் டாக்டர். பத்மா சுப்ரமண்யத்திற்கு பின்பாட்டுப் பாடினார். மணமான பின் நிறுத்தி விட்டார். மற்றப்படி சீனுவின் வாரிசுகளில் யாரும் கலைத்துறையில் இல்லை.

கொத்தமங்கலம் சீனுவின் நூற்றாண்டு மிக எளிய முறையில் கடந்த ஆண்டு அவரது குடும்பத்தாரால் கொண்டாடப்பட்டது. கறங்கு போற் சுழலும் காலம் எத்தனையோ முன்னோடிகளின் பெருமையை, புகழை மறைத்து விட்டது. அவர்களுள் என்றும் நினைக்கத் தக்க ஒருவர் கொத்தமங்கலம் சீனு.

பா.சு.ரமணன்

[தகவல் உதவி: ரமணி சீனிவாசன் (கொத்தமங்கலம் சீனுவின் புதல்வர்) மற்றும் வாமனன், திரை இசைச் சாதனையாளர்கள்]
Share: 




© Copyright 2020 Tamilonline