Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
அஞ்சலி
காற்றில் கலந்த குரல்: மலேசியா வாசுதேவன்
- சிசுபாலன்|ஏப்ரல் 2011|
Share:
'ஆயிரம் மலர்களே...,' 'கோடை காலக் காற்றே...', 'பட்டு வண்ண ரோசாவாம்...', 'வான் மேகங்களே,' 'அடி ஆத்தாடி...', 'பூங்காத்து திரும்புமா...' - இந்தப் பாடல்கள் வெளிவந்த நாட்களில் தான் பாட முடியாவிட்டாலும் முணுமுணுக்காமல் இருந்தவர்கள் கிடையாது. அழுத்தமான குரலாலும் பாவத்தாலும் இவற்றுக்கு ஜீவன் அளித்தவர் மலேசியா வாசுதேவன். மலேசியாவிலிருந்து திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வந்து, பல கஷ்டங்களை எதிர்கொண்டு, தான் கனவு கண்டதைச் சாதித்தவர்.

ஜூன் 15, 1944ல் சத்து நாயர்-அம்மாளு அம்மாள் தம்பதியருக்கு, மலேசியாவில் மகனாகப் பிறந்தார் வாசுதேவன். இளம்வயதிலிருந்த திரைப்பட ஆர்வம், வளர வளர பாடல், இசை, நடிப்பு என விரிவடைந்தது. படிப்புக்குப் பின் மலேசியாவின் புகழ்பெற்ற இசைக் குழு ஒன்றில் சேர்ந்தார். குழுவின் பிரதான பாடகராக, டி.எம்.எஸ்.ஸின் பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றார். நாடகங்களில் நடித்தார். தமிழ்த் திரைப்படத்தில் பாட, நடிக்க ஆர்வம் மிகுந்தது. இந்நிலையில் மலேசியத் தமிழர்கள் தயாரித்த 'இரத்தப் பேய்' என்ற தமிழ்ப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதற்காகச் சென்னைக்கு வந்தார். படப்பிடிப்பு முடிந்தது. ஆனால் வாசுதேவன் மலேசியாவுக்குத் திரும்பவில்லை. சென்னையிலேயே தங்கி வாய்ப்புத் தேட ஆரம்பித்தார். "ஊருக்குப் போ!" என்று அறிவுரை; புறக்கணிப்பு; வேதனை; அவமானங்கள். அனைத்தையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். ஆ.ர்.டி. பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் சகோதரர்கள் இணைந்து நடத்திய பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவின் மேடைக் கச்சேரிகளில் பாடினார். விளம்பரங்களுக்குக் குரல் கொடுத்தார். இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா இவர்களுடன் நட்பு பலப்பட்டது. இளையராஜா அப்போது இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷிடம் உதவியாளர். இவர்கள் மூலம் அறிமுகமான எஸ்.பி.பி.யும் நண்பரானார்.

"டி.எம்.எஸ்., திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் போன்றெல்லாம் குரலை மாற்றிப் பாடும் ஆற்றல் கொண்டவர் மலேசியா வாசுதேவன். எம்.எஸ்.வி., இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார், சங்கர்-கணேஷ், தேவா, ரஹ்மான் என்று பலரின் இசையில் எட்டாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்."
கடும் முயற்சிக்குப் பின் 1972ல் வி.குமார் இசையமைப்பில் 'டெல்லி டு மெட்ராஸ்' என்ற படத்தில் 'பாலு விக்கிற பத்துமா...' என்ற பாடல் மூலம் திரைக்கு அறிமுகமானார். ஸ்வர்ணா உடன் பாடியிருந்தார். படம் வெளிவராததால் பாடல் அறியப்படவில்லை. இந்நிலையில் ஏ.பி. நாகராஜன், 'குமாஸ்தாவின் மகள்' என்னும் படத்தைத் தயாரித்தார். இசை, குன்னக்குடி வைத்தியநாதன். ஏ.பி.என். அப்படத்தில் வாசுதேவனுக்கு வாய்ப்புத் தந்ததுடன், 'மலேசியா வாசு' என்ற அடைமொழியையும் சூட்டி, டைட்டில் கார்டில் வெளிவரச் செய்தார். அது 1974ம் வருடத்தில்.

இளையராஜா தனித்து இசையைமைக்கத் தொடங்கினார். பாரதிராஜா தனது முதல் படமான '16 வயதினிலே' படத்தில் மலேசியா வாசுதேவனைப் பாட வைத்தார். 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' என்ற அப்பாடல், பட்டிதொட்டி எங்கும் ஒலித்து அவரைப் பிரபலமாக்கியது. நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. இளையராஜாவும் தனது படங்களில் வாசுதேவனுக்குப் பாட வாய்ப்புத் தந்தார். எஸ்.பி.பியும் நண்பர் வாசுதேவனின் வளர்ச்சியில் அக்கறை காட்டினார். விரைவிலேயே ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு வாசுதேவன் பின்னணி பாட ஆரம்பித்தார். 'பொதுவாக என் மனசு தங்கம்...', 'ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு', 'எழுகவே, படைகள் எழுகவே', 'என் தாயின் மீது ஆணை' போன்ற கம்பீரக் குரலில் ரஜினிக்காக இவர் பாடிய பாடல்கள் இருவருக்குமே புகழைத் தேடிக் கொடுத்தன. கமலுக்காகப் பாடிய 'இந்த மின்மினிக்கு...', 'காதல் வந்திருச்சி...', 'கட்ட வண்டி.. கட்ட வண்டி..' போன்ற பாடல்களும் பிரபலமாயின. தனக்காக முதல் மரியாதை, வெள்ளை ரோஜா போன்ற படங்களில் மலேசியா வாசுதேவன் பாடியதைக் கேட்ட சிவாஜி கணேசன், இனி தொடர்ந்து தனக்கான பாடல்களை மலேசியா வாசுதேவன்தான் பாடவேண்டும் என்று அறிவித்தார். எம்ஜிஆருக்காக இவர் பாடியிருந்த படம் வெளிவரவில்லை. டி.எம்.எஸ்., திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் போன்றெல்லாம் குரலை மாற்றிப் பாடும் ஆற்றல் கொண்டவர் மலேசியா வாசுதேவன். எம்.எஸ்.வி., இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார், சங்கர்-கணேஷ், தேவா, ரஹ்மான் என்று பலரின் இசையில் எட்டாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
அத்தோடு நடிப்பிலும் முத்திரை பதித்தார். பாரதிராஜாவின் 'ஒரு கைதியின் டைரி' திரைப்படத்தில் இவர் ஏற்ற வித்தியாசமான வேடம் ரசிகர்களைக் கவர்ந்தது. முதல் வசந்தம், ஊமை விழிகள், திருடா திருடா, பூவே உனக்காக உட்படப் பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடமேற்று சிறப்பாக நடித்தார். இசை நுணுக்கம் தெரிந்த மலேசியா வாசுதேவன் சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'மலர்களிலே அவள் மல்லிகை' என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியதுடன், நண்பரும், இயக்குனருமான கங்கை அமரனை அப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக்கினார். ஏ.ஆர். ரஹ்மானின் முதல் ஆல்பம் வெளியாக உறுதுணையாக இருந்தவர் மலேசியா வாசுதேவன்தான். சத்தமில்லாமல், விளமபரப்படுத்தாமல் பலருக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். இளம் பாடகர்கள் பலரை ஊக்குவித்திருக்கிறார். தலைக்கனம் இல்லாமல் அன்போடும், பணிவோடும் அனைவரிடம் பழகுவார். வாய்ப்புக்காக ஒருவரைத் தேவையில்லாமல் புகழ்வதையும், தன்னை முன்னிறுத்திக் கொள்வதையும் அவர் விரும்பவில்லை. போதும் என்ற மனத்துடனேயே வாழ்ந்தார்.

1989ம் ஆண்டு 'நீ சிரித்தால் தீபாவளி' என்ற படத்தை அவர் தயாரித்தார். படம் பெரிய தோல்வியடைந்தது. சொந்த வீடு உட்பட எல்லாவற்றையும் இழந்தார். அது அவரது உடல்நலத்தைப் பெரிதும் பாதித்ததுடன் மிகுந்த மனச்சோர்வையும் ஏற்படுத்தியது. சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கின. நாளடைவில் பக்கவாத நோய் தாக்கியது. படுத்த படுக்கையானார். பல ஆண்டு சிகிச்சைக்குப் பின் சிறிதளவு மீண்டுவர முடிந்தது என்றாலும் முன்போல் அவரால் பாட இயலவில்லை. ஆரம்ப காலம் முதலே தனக்கு நெருக்கமான நண்பர்கள் உட்பட கலைத் துறையினர் யாரும் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற ஏக்கம் அவரை மிகவும் வருத்தியது. உடல் மேலும் நலிவுற்றது. பத்திரிகைச் செய்திகள் மூலம் அவரது நிலை அறியப் பெற்று சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் அதனால் பெருத்த நன்மை ஏதும் விளையவில்லை.

"ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். அதனால் வருத்தங்களோ வழக்குகளோ இல்லை. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவில்லையே என்ற குறை உணர்ச்சி எனக்கில்லை, பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறைதான் இருக்கிறது. அது போதும்" என்ற உயர்ந்த மனப்பான்மையோடு, தன்னிறைவோடு வாழ்ந்த அவரது இசைப்பயணம் பிப்ரவரி 21, 2011 அன்று நிறைவுற்றது.

வாசுதேவனின் மகன் யுகேந்திரன், பின்னணிப்பாடகர், நடிகரும் கூட. மகள் பிரசாந்தினி பின்னணிப் பாடகி. மனைவி உஷா இல்லத்தரசி.

சிசுபாலன்
Share: 




© Copyright 2020 Tamilonline