Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
பொருளோடு நமக்கு உண்டான தொடர்புக்கும் ஆயுள் உண்டு
- சித்ரா வைத்தீஸ்வரன்|நவம்பர் 2010||(1 Comment)
Share:
அன்புள்ள சிநேகிதியே

போன வருடம் நவராத்திரி நேரத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அவமானத்தையும் பற்றி எழுத விரும்பினேன். உடனே திரும்பி இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது. அதனால் எழுத முடியவில்லை. மறுபடியும் இப்போது வந்திருக்கிறேன். அந்தச் சமயம் என் நெஞ்சில் ரொம்ப ஆழமாகப் பதிந்திருந்தது. மக்கள் இப்படியும் இருப்பார்களா என்று தோன்றுகிறது. போன இதழில் யாரோ எழுதியிருந்தார்கள் 'பணம்தான் எல்லா உறவுக்கும் மேலே' என்பது போல. அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

போன வருடம் முதல்முறையாக அமெரிக்காவுக்கு வந்திருந்தேன். என் பையன் மிடில்-ஈஸ்ட்டில் பல வருஷம் வேலை பார்த்துவிட்டு, 2-3 வருஷம் முன்னால் இங்கே செட்டில் ஆகியிருக்கிறான். ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது பெரிய பெரிய வீடுகளாய்ப் பார்த்து அதிசயப்பட்டுக் கொண்டிருந்தேன். 'மைசூர் பேலஸ்' போல இருக்கிறதே ஒவ்வொன்றும் என்று சொல்ல, அடுத்த வாரம் இதே போன்ற பாலஸுக்கு உங்களை அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறேன். ஒரு நவராத்திரி இன்விடேஷன் வந்திருக்கிறது. உள்ளே அப்படி இழைத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல, நானும் அவ்வளவு தெரிந்தவர்கள் கூட இல்லையே என்று தோன்றினாலும், நவராத்திரிதானே என்று கிளம்பிவிட்டேன். மருமகள்தான் அழைத்துக்கொண்டு போனாள். நவராத்திரி என்றால் வெறும் வெற்றிலை, பாக்கு என்பது போல எதிர்பார்த்தால், அங்கே அப்படிஒரு கூட்டம். ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். வீடு கொள்ளை அழகு. எங்கு பார்த்தாலும் பெண்கள் நிரம்பி வழிய, ஆண்கள் ஒரு ஹாலில் கூடியிருந்தார்கள். என் மருமகளுக்கும் நிறைய பேரைத் தெரியவில்லை. அந்த வீட்டைச் சேர்ந்தவர் இவளைப் பார்த்து ஸ்மைல் செய்ய, என்னை அறிமுகம் செய்து வைத்தாள். நானும் ஒரு அசட்டு சிரிப்புச் சிரித்து விட்டு ஓரமாக நின்று கொண்டேன். 'சு....' சின்னவளாக இருந்ததால் மற்றப் பெண்களுடன் கலந்துகொண்டு பேச ஆரம்பித்துவிட்டாள்.

அப்போது ஒரு அம்மாள் அங்கேயும், இங்கேயும் நடமாடிக் கொண்டிருந்தாள். சம வயதாக இருந்ததால் என்னைப் பார்த்துச் சிரித்தார். நானும் கொஞ்சம் கூச்சம் தெளிந்து, "ஏதேனும் உதவி வேண்டுமா?" என்று கேட்டுக் கொண்டே, அவருடன் சமையலறைக்குப் போனேன். அங்கேயும் 4, 5 பேர் நின்று சாப்பாடை சூடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த மாமி உரிமையாக, "காபி சாப்பிடுகிறீர்களா?" என்று என்னை உபசரித்துவிட்டு, இட்லிகளை ஒரு பாத்திரத்தில் பரப்பி வைக்க ஆரம்பித்தார். அந்த மாமியைப் பார்த்தால் அவ்வளவு பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரர் போன்று தெரியவில்லை. மிகவும் சிநேகிதமாக இருந்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியாததால் கொஞ்சம் உரிமையுடன் நானும் அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். அப்புறம் யாரோ பாடுகிறார்கள் என்று சொல்ல சமையலறை, டைனிங்-ஹாலுக்கு கூட்டம் நகர்ந்து போய்விட்டது. நானும் அந்த அம்மாளும் தான் இருந்தோம். " நீங்கள் போய் பாட்டுக் கேளுங்களேன். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றேன். அப்போதுதான் அந்த அம்மாள் சொன்னாள். "எனக்கு இங்கே யாரையும் தெரியாது. என் மாட்டுப் பெண் அவர் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று இந்தியா போயிருக்கிறாள். என் பிள்ளைக்கு ஒத்தாசையாக நான் வந்தேன். மிகவும் போரடித்தது, மனுஷாளைப் பார்க்காமல். என் பிள்ளை கூப்பிட்டுக்கொண்டு வந்தான். நாங்கள் அப்போவே வந்து விட்டோம். இப்போதான் கூப்பிட்டவர்களே வந்து கொண்டிருக்கிறார்கள். என் பிள்ளை என்னை விட்டுவிட்டு என் பேரனை பிக்-அப் பண்ண போயிருக்கிறான்" என்று கதையைச் சொன்னார்.

நாங்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, மறுபடியும் சில பெண்கள் சமையலறைக்கு வந்து எல்லாப் பொருட்களையும் வெளியில் கொண்டு வைக்க ஆரம்பித்தார்கள். சாம்பாரைக் கொட்டிவைக்க ஒரு பெரிய பீங்கான் பாத்திரத்தை எடுத்து வைத்தார்கள். அந்த அம்மாள், கொதிக்கும் சாம்பாரை அந்த பீங்கானில் கொட்ட முயற்சிக்க, அவர் கை வறி, பீங்கான் மேல்பட்டு, கீழே அத்தனை சாம்பாரும் கொட்டி 'டமால்' என்று பாத்திரம் சுக்கு நூறாக உடைந்து.... களேபரம். புயல்போல உள்ளே நுழைந்தாள், அந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. மற்றவர்கள் துடைத்து, தூள்களைப் பொறுக்கிக் கொண்டிருக்க, "அடக்கடவுளே. நான் இத்தாலியிலிருந்து அவ்வளவு விலை கொடுத்து வாங்கிக்கொண்டு வந்தது" என்று ஹிஸ்டெரிகல் ஆகப் போய்விட்டாள். அந்தக் கோபத்தில் அந்த அம்மாளைப் பார்த்து " நீங்கள் யார்?" என்று கேட்டாள். அவர் " நான் ..... அம்மா" என்றாள். "யார் உங்கள் மகன்?" என்று அதற்கும் ஒரு கேள்வி, அந்த அம்மாள் வெலவெலத்துப் போய் விட்டார். எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. ஆனால், நான் ஆதரவாகப் பக்கத்தில் போய் நின்றால், என்னை யார் என்று கேட்டுவிடப் போகிறாளே என்ற பயம் எனக்கு வந்து விட்டது.
நான் மெள்ள அங்கிருந்து நகர்ந்தேன். நல்ல காலம் என் மருமகள் உடனே உள்ளே வந்து எனக்குப் பக்கபலமாகத் துணையிருந்தாள். வெள்ளைவெளேரேன்று, கண்ணைப் பறிப்பது போல இருந்த அந்த சமையல் அறை மஞ்சளும், சிகப்புமாக கறை, கறையாக இருந்தது. அதற்கு வேறு புலம்பல். "இந்த மஞ்சள் கறை வேறு, மார்பிளில் போகாதே" என்று. கொஞ்சம் நேரத்தில் எல்லாம் க்ளியர் செய்து, சாம்பார் இல்லாமலே சாப்பிட ஆரம்பித்தார்கள். அந்த அம்மாள் பாவம், நான் வரும்போது பரபரவென்று வேலை செய்தவர், ஒரு ஓரத்தில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். யாரோ சாப்பிடச் சொன்னார்கள். ஆனால், அவர் எதையும் தொடவில்லை. நானும் மெள்ளச் சென்று கூப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அந்த நிலையில் நான் இருந்தால் எனக்கும் எதையும் தொடப் பிடிக்காது. என் மருமகள் அழகாக ஒரு காரியம் செய்தாள். என்னிடம் ஒரு பிளேட்டில் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, "சீக்கிரம் ஏதோ சாப்பிட்டது போலப் பேர் பண்ணிவிட்டுக் கிளம்பிவிடலாம்" என்றாள்.

அந்த அம்மாள் மெள்ள என்னிடம் ஒரு துண்டுச் சீட்டைக் காட்டி என் மருமகளிடம் சொல்லி தன் பையனுக்குப் போன் செய்ய முடியுமா என்று கேட்டார். நாங்கள் போன் செய்தால் அது வாய்ஸ் மெயிலில் போய்விட்டது. அவர்கள் அட்ரஸ் கேட்டு வீட்டில் கொண்டு போய் விட்டுவிடலாம் என்று பார்த்தாலோ, அவர் மகன் வீட்டில் இல்லாமல் இந்த வீட்டிற்கு வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது?

எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. கிளம்பி வரும்போது, தாம்பூலப் பையை யாரோ நீட்டினார்கள். காரில் வரும்போதுதான் எனக்குத் தெம்பே வந்தது. மருமகளிடம் புலம்பிக்கொண்டே வந்தேன். "எதற்கு இந்த 'ஷோ' எல்லாம். அப்படி என்ன அந்த பீங்கான் பாத்திரத்திற்காக மனிதர்களை துச்சமாக மதிக்க வேண்டும்? ஏன் தெரியாதவர்களையெல்லாம் கூப்பிட்டு மரியாதைக் குறைவாக நடத்த வேண்டும். எல்லாம் பணத்தால் வரும் அகம்பாவம்தான்" என்று கொட்டித் தீர்த்தேன். அந்த அம்மாளை நான் அப்புறம் பார்க்கவில்லை. பாவம். ஒரு பார்ட்டிக்குப் போகும்போது, "நீ யார்?" என்று கேட்கும் அவமானம் யாருக்கும் வரக்கூடாது.

இந்த வருடம் மறுபடி, இங்கே இருக்கும்போது, இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. நாங்கள் இருக்கும் இடத்தில் 'தென்றல்' கிடைப்பதில்லை. இருந்தாலும் ஒரு நப்பாசை. நான் திரும்பி டிசம்பரில் ஊருக்குப் போவதற்குள், என் கடிதத்தைப் பிரசுரிப்பீர்களா என்று.

இப்படிக்கு
.........................

அன்புள்ள சிநேகிதியே,

மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கும் அந்த முகம் தெரியாத பெண்மணியின் அகம் தெரிகிறது. ஆனால், பெரிய வீடு வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும் அந்தப் பணத்திமிர் இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் சொல்லுவது ஒரு மிsஷீறீணீtமீபீ மிஸீநீவீபீமீஸீt. அந்த வீட்டுப் பெண்மணிக்கு மனரீதியாக ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். சிலருக்கு மனிதர்களைவிட, பொருட்கள் மேல் பாசம் அதிகம் இருக்கும். அது விலை உயர்ந்த, எளிதில் கிடைக்க முடியாத பொருளாக இருந்தால், ரியாக்‌ஷன் அதிகமாகவே போகிறது. எப்படியிருந்தாலும், வெளியில் யாரும் அந்த அளவுக்குக் கோபத்தைக் காட்டமாட்டார்கள். பின்னால், குறைப்பட்டுக் கொண்டு, கோபித்துக் கொண்டு இருப்பார்கள். ஆகவே, இந்தச் சம்பவத்தின் பின்னணி எனக்குப் புரியவில்லை. நீங்கள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்தபின் அந்த வீட்டுப் பெண்மணி அந்த அம்மாளைச் சமாதானப் படுத்தினாரா, எப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை.

அந்தச் சம்பவத்தை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, அதற்காகப் பிறர் வீட்டிற்குப் போகாமல் இருப்பதோ அல்லது பிறருக்கு உதவி செய்வதைத் தவிர்ப்பதோ முடியாது. அதேபோல, நம் வீட்டில் ஒரு சந்தர்ப்பம் அப்படி நேர்ந்தால், நாம் எப்படிப் பிறரைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் நினைக்க வைக்கிறது உங்கள் கடிதம். மனிதருக்கு ஆயுட்காலம் இருப்பது போல, நாம் ஆளும் பொருட்களுக்கும் நம்மோடு இருக்கும் தொடர்புக்கு ஒரு ஆயுட்காலம் இருக்கிறது. அந்த விவேகம் நமக்கு இருந்தால், பொருளிழப்பைத் தாங்கிக் கொண்டு, மனித உணர்வுகளை மதிக்கும் பெருந்தன்மை வந்து விடும்.

உங்கள் கடிதம் பிரசுரிக்கப்பட்டு விட்டதே! சந்தோஷமா? பெயரை, ஊரை வெளியிடுவதில்லை. மன்னிக்கவும். வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline