Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
சங்கீத ஞானம்
கனவு வீடு
- தங்கம் ராமசாமி|அக்டோபர் 2010|
Share:
கோமளிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு படுத்தவள் "என்னங்க ஒரு சுவாரஸ்யமான ஐடியா எனக்குத் தோணறது. பின்பக்கம் நம்ப வீட்டில நிறைய இடம் இருக்கே காலாகாலத்தில் விதை போட்டுப் பராமரித்தால் பிரமாதமாய்க் காய்கறி கிடைக்குமே. நம்ப

ரெண்டு பேருக்கும் கவலையே இல்லை. பட்டேல் கடைக்கே போக வேண்டாம். பூசணி, பரங்கின்னு விதவிதமாப் போடலாம் இல்லே" ராகவனை உலுக்கி எழுப்பிச் சொன்னாள் கோமளி.

"உம். ஹாலோவீனுக்குக் கடையே போட்டுடலாம்னு சொல்லு. சரியான மரமண்டை. பாதி ராத்திரியில மனுஷனைத் தூங்கவிடாம தொண தொணன்னுட்டு. உனக்குக் கோமளின்னு யார் பேர் வச்சாங்க? கோமாளின்னு இல்ல வச்சிருக்கணும்" ராகவனுக்கு

எரிச்சல் மண்டிக்கொண்டு வர திரும்பிப் படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் எழுந்து வேலைக்கு ஓட வேண்டுமே. முன்னைப் போல ஆஃபீசுக்கு இருபத்தைந்து நிமிஷத்தில் போக முடியாது. இந்த வீட்டிலிருந்து ஒரு மணி நாற்பது நிமிடம் ஆகிறது. போன வாரம்தான் ராகவனும் கோமளியும் இந்த வீட்டுக்குக்

குடிவந்தனர். ஒரு ஏக்கரில் ஆறு பெட்ரூம், நாலு பாத்ரூம், மூன்று கராஜ். அடேயப்பா, பெரிய மேன்ஷன் மாதிரி வீடு. Costo Styleதான். வீடு கட்டிப் பத்து வருடங்கள்தான் ஆகியிருந்தது. எந்தப் பக்கமானாலும் அடுத்த வீடு ஆறு பர்லாங் தூரத்தில்.

பெண்களுக்கு ஒவ்வொரு விதப் பைத்தியம் இருக்கும். நகைப் பைத்தியம், புடவை, அலங்காரப் பொருள் என விதவிதமாக. ஆனால் கோமளிக்குக் கொஞ்ச நாளாய் பெரிய்ய... வீட்டில் இருக்க வேண்டும் என்று ஒரு விபரீதமான ஆர்வமும் ஆசையும்

தோன்றிவிட்டது. முழு முனைப்புடன் ரியல் எஸ்டேட் அட்டார்னியுடன் நடையாய் நடந்து வீடு இன்ஸ்பெக்‌ஷன், வங்கிக் கடன் டிவிஷனுக்கு ஓடியாடுவது என்று ஓயாமல் சுற்றிக் கொண்டிருந்தாள். டி.வி.யில் இன்ஃபார்மேஷியல் ஷோ ஒன்றைப் பார்த்து

ஃபோர்க்ளோசர் வீடு ஒன்றை எப்படியும் வாங்கிவிட எண்ணி ராகவனைத் துளைத்து எடுத்தாள். மும்முரமாய் இண்டர்நெட்டில் அலசி இந்த வீட்டை முடிவு செய்தாள்.

ராகவனும் கோமளியும் முதலில் இருந்த ஏரியா பிரிட்ஜ்வாட்டர். மிகவும் நல்ல பள்ளிகள். எடிசன் பக்கம். பெருவழி அருகில்தான் இருந்தது. ஆனாலும் சொத்துவரி வருடத்திற்கு 10,000 டாலருக்கு மேல் கட்ட வேண்டி இருந்தது. ராகவன் தம்பதியருக்கு

ரெண்டு மகள்கள். ஒருத்தி மூன்றாவது வருடம் ‘யூ பென்னில்' படிக்கிறாள். இரண்டாமவள் ‘கார்னகி மில்லனில்' முதல் வருடம். எதற்கு இவ்வளவு வரி கொடுத்துக் கொண்டு இங்கே இருக்க வேண்டும். இரண்டு பெண்களுக்கும் கல்யாணத்திற்கும் பணம்

சேர்க்க வேண்டும். ரிடையர்மெண்ட் பற்றிப் பிறகு யோசிக்கலாம். இப்போதே பணம் சேமிக்க வேண்டியதுதான் முக்கியம் என கோமளிக்கு ஐடியா உதயமாகி விட்டது. அதிலிருந்து ராப்பகல் இதே பேச்சுதான். மலிவு விலையில் ஃபோர்க்ளோசர் வீடு, கொஞ்சமாக

வரி கட்டற மாதிரி ஒதுக்குப்புறமாகத் தள்ளி இருந்தாலும் பரவாயில்லை என்று சௌத் ஜெர்சியில் இந்த வீட்டைக் கோமளி கண்டுபிடித்தாள்.

வீட்டின் விலையும் குறைவுதான். பிரிட்ஜ்வாட்டர் வீட்டை விற்றால் எப்படியும் 650,000 டாலர் தேறும். இப்போ பார்த்துள்ள வீடு 220,000 டாலர்தான். பாக்கி கல்யாணத்துக்குச் சேமிப்பாக இருக்கட்டும் என வீட்டை சேலுக்குப் போட்டுப் புது வீட்டையும்

வாங்கி விட்டனர். எல்லாம் கோமளியின் யோசனைதான். ஆசை யாரை விட்டது. ராகவனுக்கும் மனதுக்குள் மகிழ்ச்சிதான். கோமளிக்குத் தலைகால் புரியவில்லை. போகிறவர்கள் வருகிறவர்களிடம் எல்லாம் தன் பெருமையைப் பீற்றிக் கொண்டிருந்தாள்.'

'என்னங்க எலி வளையானாலும் தனி வளைம்பாங்க அக்கம் பக்கம் யாரும் இல்லை. நல்ல வசதியா இருக்கு இல்லே?'

"அது என்ன எலி வளை, உன் கிட்டதான் முத்து வளை, நவரத்ன வளைன்னு இருக்கே"

"ஐய, போறும். ஏதாவது ஏடாகூடமா பேசிக்கிட்டு" இது கோமளி.

புதுமனை புகுவிழா மிகச் சிறப்பாகச் செய்தனர். வந்த நண்பர்கள் வீட்டைச் சுற்றிப் பார்த்துப் புகழ்ந்து, ஆச்சரியமும் அடைந்தனர். "எப்படி இவ்வளவு மலிவா கிடைச்சுது? பெரிய அரண்மனை மதிரியில்ல இருக்கு. நல்ல அதிர்ஷ்டம் தான்" என்று வியந்தனர்.

"எல்லாம் கோமளியோட ஏற்பாடுதான்" எனப் பெருமை பொங்கக் கூறினான் ராகவன்.

"ஆமாம். இண்டியன் ஸ்டோர்ஸ் எல்லாம் வெகுதூரம் தான். எப்படித்தான் க்ராஸரி வாங்கி, இந்த காஸ் விக்கிற விலையில்?" என்று கிண்டலாகக் கேட்டாள் மாலதி.

"ஆமாம். என்ன பெரிய க்ராஸரி. ஒரு வாட்டி நிறைய வாங்கிப் போட்டுவிட்டால் ரெண்டு பேர்தானே' என்று அலட்சியமாய்க் கூறினாள் கோமளி. கோலாகலமாய் கிரகப்ரவேசம் நடந்தது.

ஒருவாரம் ஆயிற்று. ராத்திரி ஏதோ கொரகொரவென்று சப்தம். திடுக்கிட்டு விழித்த கோமளி, "என்னங்க ஏதோ சத்தம் கேக்குதே, முழிச்சிக்குங்க. திருடனோ?"

"சே, சும்மா படு. அதான் அலாரம் போட்டிருக்கே. திருடன் வரமாட்டான் அப்படியே வந்தாலும் உன்னைப் பார்த்தா ஓடியே போயிடுவான். காலையில் பாத்துக்கலாம். பேசாமத் தூங்கு"

"உங்க கேலிக்கு ஒரு விவஸ்தையே கிடையாது" முணுமுணுத்தாள். பொழுது விடிந்தது.

"ஏங்க பேஸ்மெண்டில துவரம் பருப்பு பாக்கெட் இருக்கு. கொஞ்சம் கொண்டு வாங்க"

மனைவியின் கட்டளையை சிரமேற்கொண்டு கீழே போனான் ராகவன். அங்கே அவன் கண்ட காட்சி! பாண்ட்ரியில் வைத்திருந்த பாஸ்மதி அரிசி, சர்க்கரை, வேர்க்கடலை என எல்லா பாக்கெட்டுகளும் பிரிந்து சாமான்களும் பிரிந்து சிதறிக் கிடந்தது.

அதிர்ச்சியில் உறைந்து போனவன் "கோமளி, ஓடி வா. இங்கே பொக்ரான் வெடிகுண்டு போட்ட மாதிரி பேஸ்மெண்டே ரகளையாயிருக்கு" என கூச்சலிட்டான்.

ஓடிவந்து "ஐயையோ" என வீறிட்ட கோமளி, "எலி பெருச்சாளி வந்திருக்குமோ, எலிப் புழுக்கை நிறையக் கிடக்கே கடவுளே!" என்று அழ ஆரம்பித்தாள்.
"நீ எலி வளைன்னாலும் தனி வளைன்னு அடிக்கடி சொல்லுவே, அது பலிச்சிடுச்சி"

"போறும் உங்க ஜோக்கும் உளறலும். சமய சந்தர்ப்பம் புரியாம என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு?"

"வீட்டில் எலி வெளியில் புலின்னு ஒரு சினிமா...." இது ராகவன்.

"கஷ்டம். தத்துபித்துனு பேச்சே வேண்டாம். உடனே பெஸ்ட் கண்ட்ரோலுக்கு போன் பண்ணி கீதா மோஹன் சொன்ன லியோவைக் கூப்பிடுங்க."

இத்தனை சாமானையும் நாம யூஸ் பண்ண முடியாது. எலி வாய் வச்சது பாய்சனா இருக்கும். அள்ளுங்க. மூட்டையா கார்பேஜ்ல கொட்ட வேண்டியதுதான். அடடா எவ்வளவு நஷ்டம். கிரகப்ரவேசம் அன்னிக்கு அந்த விமலா பார்த்த பார்வையிலே நல்லா

திருஷ்டி பட்டிருக்கும்" அழுகையுடன் புலம்பினாள்.

லியோவைப் பிடித்து அவன் வருவதற்கு மூன்று நாளாகி விட்டது. தினமும் இருவருக்கும் தூக்கம் போச்சு. இதற்குள் "என்னங்க ஆட்டிக்ல கூட ஏதோ திடும் திடும்னு சத்தம் வருதே. நீங்க ஆஃபிஸ் போயிடுவீங்க. நான் தனியா பயத்தில நடுங்கிக் கிட்டே

இருக்கேன்."

"சீ..சீ.. உனக்கு வீண் பிரமைதான். நான் வேணா ஆட்டிக்ல ஏறிப் பார்க்கட்டுமா?"

"நீங்க சும்மா இருங்க. இரண்டு மணிக்கு லியோ வரட்டும் பார்க்கலாம்."

"ம். அதுவும் சரிதான். ‘பைட் பைப்பர்னு' ஒரு இங்கிலிலீஷ் போயம் படிச்சது ஞாபகம் வருது. அதுல ஒரே எலிக் கூட்டமா...."

"தலையெழுத்து. என்ன மனுஷரோ நீங்க. எதுக்கும் ஒரு சீரியஸ்னஸ் கிடையாது. விளையாட்டா இருக்கு. தலைக்கு மேல பிரச்சனைய வச்சிகிட்டு."

"கரெக்ட். இது ஒரு பெரிய விஷயம் தான். எலி வர்ற வீடுன்னா யாரும் வாங்கக்கூட மாட்டாங்க."

"..............."

***


"டிங் டிங்" என்றது காலிங் பெல். ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள் கோமளி. லியோவே தான். வந்தவன் குல்லாயைக் கழற்றி மேஜைமேல் வைத்துவிட்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி ஒரு ராஜபார்வை பார்த்தான். ஏணியைப் போட்டு ஆட்டிக்கில் ஏறிப் பார்த்தவன்

‘ஓ மை காட்' என படாரென்று கதவை மூடினான். அங்கே பறக்கும் அணில், வௌவால், எலிகள் என ஒரே கூட்டம்.

"என்ன ஒரு பட்டாளமே இல்ல குடியிருக்கு?" என்று கடகடவெனச் சிரித்தான்.

கோமளிக்கு வயிற்றைச் சங்கடம் செய்தது. "ஆஞ்சநேயா என்னைக் காப்பாத்துப்பா" என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.

"கேளுங்க ராகவன். நீங்க யாரைக் கேட்டு இந்த மாதிரி வீட்டை வாங்கினீங்க? மேலே பேஸ்மெண்ட் எல்லா இடத்திலும் அணிலும், வௌவாலும், எலியும் குடியிருக்கே! தெரியாம வாங்கிட்டிங்க போல"

"ஓ... அணில் சேமியா, அணில் ஆட்டா மாதிரி நம்ம வீடு அணில் வீடுன்னு..." ராகவன் கூறி முடிக்கவில்லை.

கோமளி, "கொஞ்சம் கடிஜோக்கை மூட்டை கட்டி வச்சுட்டு வாயை மூடிட்டு இருங்கோ" என்று பற்களைக் கடித்தாள்.

லியோ "என்னைப் போல ஆளுங்களைக் கேக்காம இப்படிச் செய்யலாமா?"

"நாங்களும் டெர்மைட் கண்ட்ரோலைக் கூப்பிட்டு இன்ஸ்பெக்ட் எல்லாம் செய்தோமே" என அழமாட்டாத குறையாகக் கூறினாள்.

"இது டோர் க்ளோஸ்டு ப்ராப்பர்ட்டி. ரெண்டு வருஷமா யாரும் பராமரிக்காம இருந்திருக்கு. நிறைய ப்ராப்ளம் இருக்கு. முதலாவதாக வயல் சுண்டெலிக் கூட்டமா இருக்கு. அதை விரட்டணும். பேஸ்மெண்டல நிறைய விரிசல். சுவர் பேடிங் எல்லாம் எடுத்து

வேற ஃபிக்ஸ் செய்யணும். பிறகு ஆட்டிக்ல போய் பறக்கிற அணில், வௌவால் எல்லாம் விரட்ட கூரையை ஓபன் செய்து எக்ஸாஸ்ட் ஃபேன் போடணும். இதுக்கெல்லாம் ஆறு மாசம், ஏன் ஒரு வருஷம் கூட ஆகலாம். சுண்டெலிக் கூட்டம் இருக்குறதால

பாம்புகளும் வர வாய்ப்பு இருக்கு. ஆனால் விஷப் பாம்பு இல்ல. உங்க வீட்டைச் சுற்றி இரும்பு வேலி போடணும். பக்கத்தில் வீடுகள் இல்லாததால கரடிகளும் வரும். இது தவிர வருஷா வருஷம் பெஸ்ட் கண்ட்ரோல் செய்யணும். இதை எல்லாம் செய்து

முடிச்சா உங்க வீடு கனவு வீடாக ஜொலிக்கும்' என்று கூறி முடித்தான் லியோ.

"அதுசரி. இதுக்கு என்ன செலவாகும்" ஈன சுரத்தில் கேட்டான் ராகவன்.

"எல்லாம் 45000 டாலர் ஆகும். நீங்க கீதா மோகன்னு தெரிஞ்சவங்க மூலமா வந்தவங்களா இருக்கீங்க. அதுனால ஒரு 40% தள்ளுபடி செய்து 40,500 டாலர் கொடுத்திடுங்க. நான், நல்லா பிரமாதமா முடிச்சுத் தரேன்."

"என்னது 40,500 டாலரா கடவுளே!" என்று வாய்விட்டுக் கூறி அதிர்ச்சி அடைந்த கோமளி, வெடித்து வரும் அழுகையை அடக்கிக் கொண்டாள்.

"வீடு வாங்க வேண்டுமா, உடனடியாக எங்களை அணுகவும்" என்ற விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது டி.வி.யில்.

***


தங்கம் ராமசாமி,
நியூ ஜெர்சி
More

சங்கீத ஞானம்
Share: 




© Copyright 2020 Tamilonline