Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2010
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ
Tamil Unicode / English Search
சிறுகதை
பற்று
சின்னத்திரை
குளத்து மீன்கள்
- சதங்க|ஏப்ரல் 2010||(1 Comment)
Share:
கோவில் குளத்தில் இறங்கி சற்று நிதானித்து, நீர் தொடும் படியில் நின்று கவனித்தாள் வித்யா. நீரின் மேலே சருகாய் மிதந்து கொண்டிருந்துவிட்டு, ஆள் அரவம் கேட்டவுடன், சளக்புளக் என்று நீரினடியில் சென்று பதுங்கிக் கொண்டன விரல் அளவு வரால் குஞ்சுகள்.

குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா. சற்று நேரத்தில், ஆரஞ்சுக் குளத்தில் கம்பளிப் போர்வையாகத் தலைதூக்கின வரால் குஞ்சுகள்.

"டாடி, இங்க வா. ஐ வில் ஷோ யூ சம்திங்..." என்று வித்யா கூவியதில், "ஐயோ, கொழந்தே... இப்படிப் படில இறங்கி அங்கவரை போயிட்டாளே! யாருமே கவனிக்காம, அப்படி என்னதான் பேசறீங்க? மொதல்ல அவளப் போய் பிடிங்க" என்று பதைபதைத்தாள் வித்யாயின் தாய் விமலா.

அக்காவின் படபடப்பில், அடித்துப் பிடித்துப் படியில் இறங்கி ஓட முயன்ற மைத்துனனை நிறுத்தினார் வரதராஜன். "விடுங்க சுப்பு. புள்ளைக்கு ஒன்னும் ஆயிடாது, அதுவா கத்துக்கட்டும்."

நம்ம ஊரிலும் கோவில் இருக்கு. ஆனா, இப்படி ஒரு குளம் இல்லியே? ஏன் டாடி? எனக்கு இந்தக் குளம் பிடிச்சிருக்கு. அதுவும் குட்டிக் குட்டி மீன்கள் ரொம்பப் பிடிச்சிருக்கு.
குளத்தில் அடுக்கடுக்காய் அணிவகுத்த சிற்றலைகள், ஒன்றை ஒன்று முந்த நினைத்து, போட்டியிட்டு உருண்டு கொண்டிருந்தன. இந்த வருடம் கார்த்திகை, மார்கழியில் பெய்த அடைமழையில் நிறைந்த குளம், சித்திரை வைகாசி வரையில் நீர் நிரம்பி நின்றது.

"செல்லம் பார்த்துடா. அதுக்கு மேல இறங்காத. படி வழுக்கும்." என்று கனிவாகச் சொல்லி மகளை நெருங்கினார் வரதராஜன்.

"எப்படிப்பா மேல இறங்க முடியும். கீழேதான இறங்க முடியும்" என்று வியக்க வைத்த மகளைக் கண்டு ஒரு கணம் அதிசயித்தார் தந்தை.

"டாடி, கேன் ஐ ஸ்விம் இன் ஹியர்?" என்று முறையிட்டாள் தந்தையிடம்.

"இல்லடா கண்ணு. இந்தக் குளத்துத் தண்ணி குடிக்கறதுக்கு மட்டும்தான். குளிக்க முடியாது."

"இங்க எப்பவுமே தண்ணி இருக்குமா டாடி?"

"சில நேரம் இல்லாமப் போயிடும். இந்தக் குளத்துக்கு நடுவிலே இரண்டு மூணு கிணறுகள் இருக்கு. குளத்தில இருக்க தண்ணி எல்லாம் வத்திருச்சுனா, அந்த கிணத்துல இருந்து ஊர் மக்கள் தண்ணி எடுத்துப்பாங்க" என்றார்.

"ஹை, நீ பார்த்திருக்கியா டாடி அந்தக் கிணறுகளை" என்று கேட்டாள்.

"ம். நான் சின்னப் பிள்ளையா, வித்யா மாதிரி இருக்கும்போது, பார்த்திருக்கேன். ஒரு கிணறு சதுரமாகக் குளத்தின் நடுவுலயும், ரெண்டு வட்டக் கிணறுகள் குளத்தின் ரெண்டு ஓரங்களிலும் பாத்த மாதிரி ஞாபகம் இருக்கு" என்றார்.

"நானும் கிணறுகளைப் பார்க்கணும்... இப்பவே காட்டு" என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.

மக்குப் பூசாரி... மன்னிக்கவும்... முக்குப் பூசாரி கடையில் இருந்து ஒரு படி பொரி வாங்கி வந்தான் தாய்மாமன் சுப்ரமணியன். ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வீசியவன், பொட்டலத்தை வித்யாவிடம் நீட்டினான்.

கடுகாய்ப் பொறிந்து, நீர்த்திவலைகள் காற்றில் பறக்க, முட்டி மோதிப் பொரியை விழுங்கும் குட்டி விரால்களைக் கண்டு ஆனந்தித்து மகிழ்ந்தாள் வித்யா.

"நம்ம ஊரிலும் (யு.எஸ்.!) கோவில் இருக்கு. ஆனா, இப்படி ஒரு குளம் இல்லியே? ஏன் டாடி? எனக்கு இந்தக் குளம் பிடிச்சிருக்கு. அதுவும் குட்டிக் குட்டி மீன்கள் ரொம்பப் பிடிச்சிருக்கு. அப்படியே இதுல கொஞ்சம் பிடிச்சுத் தர்றியா டாடி?" என்று கெஞ்ச ஆரம்பித்தாள் வித்யா.

"என்னங்க... எனக்குத் தெரியும் இவ எங்க இருக்காளோ அங்க எல்லோரையும் இழுத்துருவான்னு. எல்லோரும் அங்க போய் என்ன பண்றீங்க. எழுந்து வாங்க சீக்கிரம். சுவாமி புறப்பாடு ஆகப்போகுது" என்று மேலிருந்து கத்தினாள் விமலா.

"கிளம்பு கிளம்பு, கோவில் மணி அடிச்சிருச்சு" என்று வித்யாயைத் தூக்கிக் கொண்டு படியேறினார் வரதராஜன். அவரைத் தொடர்ந்தான் சுப்ரமணியன்.

"டாடீ, மீன்" என்று சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டாள் வித்யா.

"இந்தக் குளத்து மீனப் பிடிக்கக் கூடாதும்மா. பிடிச்சா... சாமி கண்ணக் குத்திரும்." என்ற தந்தையின் சொல்லுக்கு, "ம்ம்ம்?" என்று சிறுவிழிகள் உருட்டி மருட்சியோடு கேட்டுக்கொண்டாள்.
சார், உங்க பாப்பாவா இது. நாங்க பொழப்பப் பார்க்கலாம்னு காலங்காத்தால வலையப் போட்டு மீன அள்ள வந்தா, எங்க வேலயப் பார்க்க விடாம தொல்லை பண்ணுது பாப்பா.
"ம்ம்ம்" என்று சொல்லி "நாம் இங்க இருக்க வரைக்கும், உனக்கு எப்போல்லாம் மீனப் பார்க்கணும்னு தோணுதோ சொல்லு. அப்பா உன்னக் கூட்டி வர்றேன். சரியா?" என்றார் வரதராஜன். கண்ணைப் பெரிதாக விழித்துத் தலையை அசைத்தாள் வித்யா.

சில நாள் இடைவெளியில் மீன்கள் எல்லாம் ஓரளவுக்கு வளர்ந்திருக்க, "ஹை, எல்லாம் பெரிசாயிடுச்சு டாடி" என்று படிகளில் நின்று துள்ளிக் குதித்தாள் வித்யா.

"வா, போய் பொரி வாங்கிட்டு வரலாம். பாரு, மீன் எல்லாம் ஆவ் ஆவ்னு வாய் திறந்து உன்கிட்டேயே வருதுங்க" என்றார்.

"ம்ஹும். நான் இங்கேயே இருக்கேன். நீ போய் வாங்கிட்டு வா டாடி" என்று சிணுங்கினாள்.

"தண்ணிக்குள்ள இறங்கக் கூடாது, சரியா?" என்று சொல்லி மேலேறிச் சென்றார் வரதராஜன்.

சற்றைக்கெல்லாம், பொரிப் பொட்டலத்தோடு வந்தவருக்குப் பேரதிர்ச்சி. "இறங்கக்கூடாது" என்று விட்டுச்சென்ற இடத்தில் மகளைக் காணவில்லை.

சுற்றிலும் பார்த்தார். மகளைக் காணவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால் யாருமே இல்லை. வயிற்றுக்கும் வாய்க்கும் உருவமில்லாத உருண்டை உருளத் தொடங்கியது வரதராஜனுக்கு.

'கடவுளே! என்ன இது சோதனை. பிள்ளையைத் தனியே விட்டுச் செல்ல எப்படித் துணிந்தேன். அவள் இருப்பேன் என்று சொன்னாலும், நான் சம்மதித்திருக்கக் கூடாது. இப்பொழுது என்ன செய்வேன்? ஐயோ, யாராவது ஓடி வாங்க, என் பிள்ளை குளத்தினுள் விழுந்துவிட்டாள். காப்பாத்துங்க' என்ற வரதராஜனின் அலறல் குளத்தின் நான்கு மூலைகளிலும் பட்டு எதிரொலிக்க, மயங்கி விழாத குறையாகத் தள்ளாடி நின்றார்.

குளத்தின் அக்கரையில் அவர் கண்ட காட்சி அவரை மேலும் நிலைகுலைய வைத்தது. இங்கிருந்து சரியாகத் தெரியவில்லை. ஒரு சிறு பிள்ளையும், அதனைச் சுற்றிச் சில பெரியவர்களும், இரண்டு மூன்று வாகனங்களும், அதில் சில பொருட்களும் என ஊகிக்க முடியாதபடி இருந்தது.

'அது என் பிள்ளையா இருக்கணும். குளத்தில் விழாமல் கறையில் இருந்தாலே போதும். கடவுளே, உனக்கு நூத்தி எட்டு தேங்காய் உடைக்கிறேன்' என்று வேண்டி அக்கரை நோக்கி விறுவிறு என நடந்தார்.

கிட்டே நெருங்க நெருங்க அது வித்யாவேதான் என்று அறிந்து முகம் பூரிக்க உற்சாகமாக நடையைத் தொடர்ந்தார்.

அயிலு, மாரி, செங்கோடன் மற்றும் சிலர் வித்யாவைச் சூழ்ந்து நிற்க, "சார், உங்க பாப்பாவா இது. நாங்க பொழப்பப் பார்க்கலாம்னு காலங்காத்தால வலையப் போட்டு மீன அள்ள வந்தா, எங்க வேலயப் பார்க்க விடாம தொல்லை பண்ணுது பாப்பா. ஏலத்துக்கு எடுத்த மீன இன்னிக்குள்ள அள்ளிறனும்னு மணியக்காரர் கறாரா சொல்லிட்டாரு. அதுக்கு எது சொன்னாலும் புரியமாட்டிங்குது. எதுனாலும், 'மீனப் புடிக்கக்கூடாது, புடிச்சா, சாமீ கண்ணக் குத்திரும்'னே சொல்லி அடம் பிடிக்குது" என்று புலம்பினர் அனைவரும்.

வித்யாவின் செயலுக்கு விளக்கம் சொல்ல முடியாமல் தவித்தார் வரதராஜன்.

'காலம் காலமாகத் தமக்குத் தம்முன்னோர் சொல்லி வந்த கதையை இனிவரும் சமுதாயம் எவ்வாறு எதிர்கொள்ளும்?' என்ற வினாவும் தொற்றிக் கொள்ள, வித்யாவுக்குக் கதைகள் சொல்லி வீட்டுக்கு அழைத்துச் சென்றார் வரதராஜன்.

சதங்க
More

பற்று
சின்னத்திரை
Share: 




© Copyright 2020 Tamilonline