Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
வரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!
சுபாஷினி ட்ரெம்மல்
- மதுரபாரதி|மார்ச் 2010||(2 Comments)
Share:
மலேசியாவில் பிறந்த தமிழ்ப் பெண்ணான திருமதி. சுபாஷினி ட்ரெம்மல் ஜெர்மனியில் இருந்தபடி தமிழ்த் தொண்டு செய்து வருகிறார். இவருடைய தாயார் ஜனகா 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50க்கும் மேல் குறுங்கதை, கவிதை, தொடர்கதைகள் எழுதிய மலேசியத் தமிழ் எழுத்தாளர். இவருக்குத் தமிழார்வம் ஏற்படக் கேட்க வேண்டுமா! (படத்தில்: டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் கண்ணன், சுபாஷினி)

மலேசிய கிராமப்புறங்களுக்குச் சென்று சமுதாயப் பணி செய்யத் தொடங்கியபோது சுபாவுக்கு வயது 14. அங்கே தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவுவது, ஆலயத் திருப்பணி ஆகியவற்றில் ஈடுபட்டார். ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் பினாங்கில் நண்பர்களோடு சேர்ந்து, பதினைந்து வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ‘சண்டே ஸ்கூல்' தொடங்கித் தமிழ்ப்பாடம், தேவார, திருவாசகம் ஓதுதல், சமுதாய விழிப்புணர்வு, கணினி, பாரம்பரிய இசை, நடனம் ஆகியவற்றைப் பயிற்றுவதில் பங்கு கொண்டார். இந்தப் பள்ளி இன்றளவும் நடந்து வருகிறது. இதைத் தவிர இலக்கப்பாடி என்ற ஒரு திட்டத்தை மாணவர்களுக்காகத் தொடங்கினார். இது தொழில்நுட்பத்தை எவ்வாறு சிந்தனை வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியது. இதைப் பற்றிய சன் டிவி பேட்டியைப் பார்க்க

தமிழ் மொழி மற்றும் மரபு சார்ந்த அனைத்துத் தகவல்களுக்கும் இணையத்தில் விர்ச்சுவல் இல்லமாகத் தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை.
இவற்றையெல்லாம் விடத் தமிழுக்கு இவர் ஆற்றியுள்ள முக்கியமான பணி தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பை டாக்டர் கண்ணன் அவர்களோடு நிறுவியதுதான். அதன் துணைத்தலைவராக இருப்பதோடு வலைகுரு (webmaster) ஆகவும் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் மின்மடற் குழுக்களான இ-சுவடி, மின்தமிழ், roots ஆகியவற்றையும் அறக்கட்டளைத் தலைவர் கண்ணன் அவர்களுடன் நிர்வகித்து வருகிறார்.

பழைய ஓலைச்சுவடிகளைத் தேடிப்பிடித்து, தற்போது புழக்கத்தில் இல்லாத நூல்களை மின்பதிப்பாக்கி வைக்கும் ஆர்வலர் குழுவுக்கு வழி காட்டி வருவதோடு, தானே பங்கேற்றும் வருகிறார். இது தவிர கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி, மானுடவியல் போன்ற துறைகளில் ஈடுபாடு உண்டு.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் சென்று களப்பணி மேற்கொள்கிறார். "வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஆனால் அசட்டை செய்யப்பட்ட கலாசாரச் செழுமை நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தல், அவற்றை வலையகத்தில் வெளியிடுவது, அறிஞர்களைச் சந்திப்பது, தமிழ்க் கணினி பற்றிய பட்டறைகள் நடத்துவது என்று அது மிகவும் செயல் நிரம்பியதாக இருக்கும்" என்கிறார் சுபா. அவற்றைப் பற்றி அவர் இந்த KTV நேர்காணலில் விளக்குகிறார்:
2001ஆம் ஆண்டு தொடங்கி உத்தமம் (INFITT) அமைப்பின் எல்லாக் கருத்தரங்குகளிலும் தமிழ்க் கணினி குறித்துக் கட்டுரை வாசித்துள்ளார். மூன்றாண்டுகள் இதன் செயற்குழுவில் இருந்துள்ளதோடு, தற்போது ஐரோப்பியப் பகுதியின் பொதுக்குழுப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். (படத்தில்: கணவர் ட்ரெம்மலுடன் சுபாஷினி)

மலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் படித்த இவர் தற்போது தொழில்நுட்ப ஆலோசகராக ஹ்யூலெட் பெக்கார்டு நிறுவனத்தில் பணி செய்கிறார். ஜெர்மானியரான இவருடைய கணவர் திரு. ட்ரெம்மலும் அதே நிறுவனத்தில் பணி செய்கிறார். "ஓய்வு கிடைத்தால் கணவரோடு ஊர் சுற்றக் கிளம்பிவிடுவேன். எகிப்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், வட இந்தியா, பெல்ஜியம் ஃபிரான்ஸ், கனேரிய தீவுகள், சுவிட்ஸர்லாந்து, இத்தாலி, துருக்கி, சைப்ரஸ் இன்னும் பல நாடுகளுக்குச் சென்று அங்கு வரலாற்று விஷயங்கள், இயற்கை போன்றவற்றைக் கண்டு ரசித்து லயித்து வருவோம். பயணக் கட்டுரைகளும் எழுதியிருக்கின்றேன்" என்று உற்சாகமாகக் கூறுகிறார் சுபா. கர்நாடக இசையில் ஈடுபாடு உண்டு என்பதோடு, இவருக்கு வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உண்டு.

"தமிழ் மொழி மற்றும் மரபு சார்ந்த அனைத்துத் தகவல்களுக்கும் இணையத்தில் விர்ச்சுவல் இல்லமாகத் தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை. இது சிறப்பாக நடந்து வருகின்றது. தொடர்ந்து பெருமளவில் வரவேண்டும்" என்று தனது விருப்பத்தைக் கூறுகிறார் சுபாஷினி ட்ரெம்மல். கொழுந்து விட்டெரியும் ஆர்வமும் குன்றாத உழைப்பும் கொண்ட சுபாஷினியின் விருப்பம் நிறைவேறும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

மதுரபாரதி
More

வரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!
Share: 




© Copyright 2020 Tamilonline