Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
இந்திரனே சாலும் கரி
- ஹரி கிருஷ்ணன்|நவம்பர் 2009||(3 Comments)
Share:
Click Here Enlarge'பாரும். அதற்குள் உமக்கே பொறுமை போய்விட்டது. விளக்கம் முடியும் வரையில்கூட உம்மால் பொறுமையாக இருக்க முடியவில்லை. இதுதானே மனம் என்னும் கருவி படுத்தும் பாடு' என்று கொக்கி போட்டேன். சிரித்தார் ஆத்மா. 'ஆத்மா, எனக்கு நீரே சொல்லும். மனம் என்பதும் உடல் என்பதும் என்ன?''மனமும் உடலும் ஆத்மாவுக்குக் கிடைத்துள்ள கருவிகள்' என்று பதில் சொன்னார். 'அதாவது ஆத்மாவான உம்முடைய ஆத்மாவையும் உள்ளிட்டு, ஒவ்வொருவருக்கும் மனம் என்பதும் உடல் என்பதும் அவரவருடைய ஆத்மாவுக்கு வினையாற்றக் கிடைத்துள்ள கருவிகள். இதை ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா? இதைப் பார்த்துவிட்டு 'அடல்வேண்டும்' கதைக்குப் போகலாம்' என்றேன். ஆத்மாவின் புன்னகையில் இப்போது சற்று தெளிவு தென்பட்டது.

'ஆத்மா, உடல் என்பது ஒரு கருவி. மனம் என்பது ஒரு கருவி. போராளி அமர்ந்திருக்கும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளையும் அவற்றைச் செலுத்தும் தேர்ப்பாகனையும் ஒத்தவை இவை இரண்டு கருவிகளும். போரில் மிரண்டுபோன குதிரைகள் சாரதிக்குக் கீழ்ப்படியாது. அவைபாட்டுக்கு அவற்றுக்கு இசைந்த திசையில் தேரை இழுத்துக்கொண்டு ஓடிவிடும். இப்படித்தான் உடல் என்ற கருவி, ஒருவேளை மனம் என்ற கருவியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் சிலசமயங்களில் தற்போக்கில் தேரை--புலன்கள் என்ற குதிரைகளால் இழுக்கப்பட்டு--அவை போகும் திசையெல்லாம் செலுத்தப்படும். மனம் என்ற தேர்ப்பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் குதிரைகள் அடங்கி வரும்வரையில் படும்பாடு பெரும்பாடுதான். அப்படியேதான் இன்னொன்றும். உடல் என்ற கருவி ஓய்ந்துவிடும். அதற்குத் தளர்ச்சி வந்துவிடும். ஆனால் அப்போதும் மனம் என்ற கருவி ஓயாது. அதற்கு ஓய்ச்சலும் கிடையாது, தளர்ச்சியும் கிடையாது. சிந்தனைகள் தொடர்ந்து கிளர்ச்சியை ஊட்டியபடி இருக்கும், முறையான பயிற்சிமட்டும் இல்லாவிட்டால். அப்படிப்பட்ட 'ஓரைந்தும் காவாத' தேர்ப்பாகன், தளர்ச்சியடைந்த குதிரைகளைத் தொடர்ந்து விரட்டியபடி இருப்பான். எழுவது வயசிலும் இன்னமும் 'எதையெதையோ' கற்பனை செய்தபடி, உடல் என்ற கருவியால் பெறமுடியாததை எல்லாம் அடையத் துடித்தபடி 'வாலிப வயோதிக அன்பர்களே' என்றழைக்கும் விளம்பரங்களின் பின்னால் ஓடும் மனிதர்களையும் நாம் பார்க்கத்தானே செய்கிறோம்?'

எழுவது வயசிலும் இன்னமும் 'எதையெதையோ' கற்பனை செய்தபடி, உடல் என்ற கருவியால் பெறமுடியாததை எல்லாம் அடையத் துடித்தபடி 'வாலிப வயோதிக அன்பர்களே' என்றழைக்கும் விளம்பரங்களின் பின்னால் ஓடும் மனிதர்களையும் நாம் பார்க்கத்தானே செய்கிறோம்?'
'சரி. எல்லாம் சரி. இப்ப இந்தக் கதைக்குள்ள எதுக்குப் போனீரு' என்றார் ஆத்மா. அவருடைய குரலில் சற்றே சலிப்பு தெரிந்தது. 'விழிப்பு நிலையைப் பற்றிப் பேசவந்தேன் அன்பரே' என்றேன். 'புரியலை' என்றார் ஆத்மா. கொஞ்சம் புரியற மாதிரி சொல்றேன். உடலும் தன்விழைவுத் தேர்வைப் பற்றிய விழிப்புணர்வும் அடக்கமும் கொண்டதாக இருக்கவேண்டும்; அதைச் செலுத்தும் மனமும்--உடல் எவ்வளவு விழித்திருக்கிறதோ அதைக் காட்டிலும் ஆயிரம் பங்கு தீவிரமாகவும் கடுமையாகவும்--விழித்திருக்கப் பழகவேண்டும். ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். நாம டைப் செய்யக் கற்றுக்கொண்டவர்கள்தானே? நிமிஷத்துக்கு 60-70 வார்த்தைகள் வேகத்தில் தட்டுபவர்கள்தானே.' ஆமோதித்த ஆத்மாவின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது. நிமிஷத்துக்கு 60 வார்த்தைகள் என்றால், வினாடிக்கு ஆறு அல்லது ஏழு விசைகளை அல்லவா நம் விரல்கள் இயக்குகின்றன?' தலை அசைத்தார். 'இவ்வளவு வேகத்தில் டைப் செய்தாலும் கைவிரல்கள், வார்த்தைகளின் எழுத்தொழுங்குக்கு இசைய அல்லவா இயங்கவேண்டும்? எங்க அப்பா நிமிஷத்துக்கு 112 வார்த்தைகள் தட்டுவார். வினாடிக்கு சுமார் 9.5 எழுத்துகள் விழும். தட்டச்சுப் பொறி இருந்த காலத்தில் இப்போது கணினியில் அடிப்பதைப்போல் இருந்திருக்கவில்லை. இங்கே தவறு விழுந்தால் உடனே தடம்தெரியாமல் அழித்துச் சரிசெய்துவிடலாம். தட்டச்சுப் பொறியில் நேரடியாகத் தாள்மீது அச்சடிக்க வேண்டும். ஒரே ஒரு வினாடி கையின் இயக்கம் சீர் குலைந்தால் எட்டு முதல் பத்து தவறுகள் காகிதத்தில் பதிந்துவிடும். உண்மைதானே? அப்பா ஒன்று சொல்வாரே நினைவிருக்கிறதா?'

'ஓ...நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை நூறுசதம் பிழையில்லாமல் டைப் செய்துவிட்டால் நீ உச்சத்தை அடைந்துவிட்டாய் என்று பொருளல்ல. முதல்முறை எவ்வளவு தூரம் மனத்தைக் குவித்து, கவனம் சிதறாமல் அமர்கிறாயோ அப்படித்தான் தட்டச்சுப் பொறியின் முன்னால் உட்காரும் ஒவ்வொரு முறையும் உட்கார வேண்டும். எந்தக் கணத்தில் உன் கவனம் சிதறுகிறதோ, அந்தக் கணத்திலேயே வினாடிக்குக் குறைந்தது 5-6 பிழைகள் காகிதத்தில் பதிந்துவிடும்'.

'நல்லா நினைவிருக்கு. ஐந்தவித்தான் ஆற்றலைக் கேட்டால் டைப்படிச்சான் ஆற்றலைப் பேசுகிறீர். என்ன சம்பந்தம் என்று புரியவில்லை' என்றார் ஆத்மா, குரலில் இடக்கு தொனிக்க. 'இப்பத்தான் அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை' குறளுக்குள் அடி எடுத்து வச்சிருக்கோம் நண்பரே. பொறுமை. பொறுமை' என்றேன். இந்திரனே சாலும் கரி என்பதில் என்னதான் குறிப்பு புதைந்து கிடக்கிறது? பார்ப்போமா?
'அறிவிலே தெளிவு; நெஞ்சிலே உறுதி' என்று தொடங்கிய பாரதி, 'பொறிகளின் மீது தனி அரசாணை'யைத்தானே தனிப் பரம்பொருளைக் கேட்கிறான்? ஐம்பொறிகளையும் அவற்றின் கோடிக்கணக்கான நாட்டங்களின் பின்னால் ஓடவிட்டு விடாமல், அவற்றை கவனமாக தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களின்மேல் தன்னுடைய ஆட்சித் திறத்தைச் செலுத்தி அவர்களை உரிய வழியில் வழிநடத்தும் அரசனின் ஆட்சியைப் போன்றதொரு 'தனி அரசாணை'யைக் கேட்டான் பாரதி. அரசாங்கத்தை வழிநடத்துபவன் எப்படி உள்ளே முளைக்கும் கலவரங்களையும், வெளியிலிருந்து வரும் தாக்குதல்களையும் ஒருசேர எதிர்கொண்டு மக்களைப் பாதுகாக்கிறானோ, அப்படி ஐம்புலன்களை 'எந்த வழியில் செலுத்தினால் நல்ல பயன் உண்டோ அந்த வழியில்' செலுத்தும் பொறுப்பை நிர்வகிப்பதைத்தான் பாரதி இந்த இடத்தில் சொல்கிறான் என்பதை விளக்கவேண்டியதில்லை.

ஐந்தவித்தான்' புரிந்தது. 'ஆற்றல்' என்பது, 'அப்படிப் புலன்களைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவனுக்கு உண்டாகும் ஆற்றலைக் குறிக்கிறது என்பதும் புரிந்து. 'இந்திரனே சாலும் கரி'தான் விளங்கவில்லை என்றார் ஆத்மா.
இப்படி 'வெளித் தாக்குதல்களையும், உள்ளுக்குள்ளேயே கிளர்ந்து எழுந்து ஆர்ப்பரித்து, புதிது புதிதான நாட்டங்களை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கும் 'உட்பகைக் குறும்பையும்' ஒரு வினாடிகூட தவறவிட்டுவிடாமல், புலன்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைத்தான் 'ஐந்தவித்தான் ஆற்றல்' என்பதிலுள்ள 'அவித்தான்' என்பது குறிக்கிறது. இதற்கு அணுக்கச் சான்றைத்தான் 'அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை' குறள் அளிக்கிறது. முதலில் சொன்ன கருத்தை இங்கே விரிவாக்குகிறார் வள்ளுவர். 'அப்பா, இது ஒரு போர். இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும் ஒன்று. கணநேரம் கவனம் சிதறினாலும் ஆயிரங்கால முயற்சிகள் அனைத்தும் சிதறிச் சின்னாபின்னமாகப் போய்விடும். அதற்கு வாய்ப்புக் கொடுக்காதே. எப்போதும் விழித்திரு' என்பதைத்தான் 'அடல்வேண்டும்' என்ற தொடர் குறிக்கிறது. பரிமேலழகர் 'புலம் என்றது அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தாலும் பாவத்தாலும் அன்றி வாராத பொருள்கண் மேலல்லது வீட்டுநெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின்' என்று உரைகாண்கிறார். வெளித்தாக்குதலிலிருந்தும் உட்தாக்குதலிலிருந்தும் ஓயாமல் கவனமாக காவல் காத்துக்கொண்டும், ஐம்புலன்களால் ஏற்படக்கூடிய தேவையற்ற விழைவுகளின் வழியில் தான் செல்லாமல், தான் செல்ல நினைக்கும் வழியில் தேரைச் செலுத்தும் சாரதியைப்போல், தேரை இழுக்கும் இந்த ஐந்து குதிரைகளையும் எப்போதும் தன் கட்டுக்குள் வைத்திருத்தல்' என்பதே 'ஐந்து அவித்தான்' என்னுமிடத்திலும் பேசப்படுகிறது, அல்லவா?

'என்னவோ கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு. மேலே சொல்லும்' என்றார் ஆத்மா.

விடுதலையைக் குறித்து ஆங்கிலத்தில் 'Eternal vigilance is the price of liberty' என்று சொல்வார்கள். ஓயாத விழிப்பே விடுதலைக்குக் கொடுக்கப்படும் விலை. இந்த விடுதலை, நாட்டு மக்களால் அனுபவிக்கப்படும் விடுதலையாகவும் இருக்கலாம்; அல்லது முக்தி எனப்படும் இறுதி விடுதலையாகவும் இருக்கலாம். இரண்டையும் ஆங்கிலத்திலும் liberty என்றுதான் குறிக்கிறார்கள்' என்றேன். 'உண்மை' என்று ஆமோதித்த ஆத்மா தொடர்ந்தார். ஐந்தவித்தான்' புரிந்தது. 'ஆற்றல்' என்பது, 'அப்படிப் புலன்களைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவனுக்கு உண்டாகும் ஆற்றலைக் குறிக்கிறது என்பதும் புரிந்து. 'இந்திரனே சாலும் கரி'தான் விளங்கவில்லை என்றார் ஆத்மா.

'ஏன் எதையெதையோ போட்டுக் குழப்பிக்கொள்கிறீர்! பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பாருமேன்' என்றேன். புத்தகத்தைப் புரட்டிய ஆத்மாவின் கண்களில் மகிழ்ச்சி தட்டுப்பட்டது. 'தான் ஐந்தும் அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவன் ஆற்றல் உணர்த்தினான் ஆகலின் இந்திரனே சாலும் கரி' என்றார்' என வாசித்தார். 'ஓகோகோ அப்படியா விஷயம்' என்று முகம்மலர்ந்தார். 'அப்படித்தான் நண்பரே. ஐந்தவித்தான் வரிசையில் முதல் நிலையில் நிற்பவனான இந்திரனை, தான் வலியுறுத்தும் கருத்துக்குத் துணையாக உடனழைத்தார். ஐமபுலன்களை வென்றவர்; அடக்கியவர்; புலன்நாட்டம் ஒழித்தவர்' என்றெல்லாம் கொண்டாடப்படுபவர்களிலேயே மிக உயர்ந்த இடத்தில் நிற்கும் இந்திரனே ஆனாலும் சரி. இந்த ஐம்புலன்களை வெல்வது என்பது ஏதோ one time job மாதிரி, ஒருமுறை வென்றுவிட்டால், பிறகு காலம்முழுக்கக் கண்ணயர்ந்துவிடலாம் என்று நினைக்காதே; அப்படி முற்ற முழுக்க அவிப்பது என்பது இந்திரனாலேயே ஆகாத செயல். ஆகவே, நீயும் விழிப்பாகவே இரு' என்று சொல்லி, 'அப்பேர்ப்பட்ட இந்திரனே ஒரு கண்ணிமைப்போது தன்நிலையில் தவறுவானேயானால், அவனுக்கும் சாபம் பெறுவது, தான் வென்று குவித்திருப்பதாகக் கருதிக்கொண்டிருக்கும் அனைத்தையும் ஒருங்கே, ஒருசேர இழப்பது' என்ற அவங்களெல்லாம் வந்து சேரும். அவ்வளவு பெரிய இந்திரனே ஆனாலும், தன் நிலையில் தவறுவானேயானால், 'தலையில் இழி்ந்த மயிரனையார் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை' என்கிறார் அல்லவா, அப்படி, 'போற்றிப் போற்றி பாதுகாக்கப்பட்டு, எண்ணெய் குழைத்து, சீவி சிங்காரித்து, சாயம் பூசிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரோமம் எந்த வினாடி உதிர்கின்றதோ, அந்த வினாடியிலேயே அது ஏதோ ஓர் அருவருப்பான பொருளாகக் கருதப்பட்டு, விரல் நுனியால் சுண்டி ஒதுக்கப்படுகிறதல்லவா அப்படி, தன் நிலையிலிருந்து கணப்போதேனும் வழுவிவிட்டால், அதுவரை எவற்றையெல்லாம் 'வென்றுவிட்டதாகக் கருதிக்கொண்டிருந்தோமே' அவையே ஒன்றுசேர்ந்து நம்மை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்விடும். ஏனெனில் Eternal Vigilance is the price of liberty.

ஆகவேதான், 'என்னவோ வென்று முடித்தாகிவிட்டது என்று மெத்தனமாக இருந்துவிடாதே. இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் போர். வினாடியேனும் கவனம் சிதறினால், பிறகு இழப்பு நிரந்தரமாகத் தங்கிவிடும். விட்ட இடத்தைப் பிடிப்பது என்பது முடியாத காரியம். அப்பா, அதனால், விழி்த்திரு. எப்பேர்ப்பட்ட இந்திரனாகவே இருந்தாலும்கூட, தன்னுடைய நிலையைத் தவறவிடுவானேயாகில், அதற்கான விளைவை அனுபவித்துத்தான் தீரவேண்டியிருக்கும்' என்று 'ஐந்தவித்தார் வகையில் மிக உயர்ந்த நிலையிலிருப்பவனாகிய இந்திரனை சாட்சிக்கு அழைத்தார். 'ஆரம்ப நிலையில் இருக்கும் நமக்கு மட்டுமல்ல; பூரணத்துவம் அடைந்துவிட்டதாகக் கருதப்படும் இந்திரனுக்கே கூட, தன்னுடைய நிலையிலிருந்து வழுவுவதற்கான சந்தர்ப்பங்களும் (வெளிப்பகை) நாட்டங்களும் (உட்பகை) கிளர்ந்துகொண்டேதான் இருக்கும் எந்த நொடியில் அந்த கவனம் சிதறுகிறதோ, அந்த நொடியிலேயே அதுவரையில் வென்றதாகக் கருதிக்கொண்டிருந்த எல்லாமும் ஒன்றாக இடத்தைக் காலிசெய்துகொண்டு விலகிப் போய்விடும்' என்று சொல்லவந்தார். அதனால் 'இந்திரனை சாட்சிக்கு அழைத்தார். இப்ப சொல்லும் ஆத்மா, இந்த இடத்தில் 'இந்திரன்' பொருத்தமா இல்லையா' என்று கேட்டேன். மௌனமாகப் புன்னகைத்தார் என் உயிர் நண்பர்.

ஹரிகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline