Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
முன்னோடி
கே.என். சிவராஜபிள்ளை
- மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2008|
Share:
Click Here Enlargeஇருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் பெரும் பாலோர் தமிழல்லாத வேறுதுறைக் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அறிவுபூர்வமாக, மெய்மையுடன் அணுகி ஆராய்வது இவர்களுக்கு இயல்பானதாக இருந்தது. இவர்களில் சிலர் தமிழ்த்துதி பாடுவது ஆராய்ச்சி அல்ல என்பதைத் தெளிவாக அறிந்திருந்தனர். இவர்கள் பெரும்பாலும் வழக்குரைஞர், பொறியாளர், அஞ்சல் அதிகாரி என்ற பல்வேறு தொழில்களைப் புரிந்து வந்தவர்கள். பின்னர் தமிழாய்வில் காலடி எடுத்து வைத்துப் பெரும் தாக்கம் செலுத்தினார்கள். இவர்களுள் ஒருவரே கே.என். சிவராஜ பிள்ளை.

நாஞ்சில் நாட்டில் பிறந்து காவல்துறையில் தம் பணியைத் தொடங்கினார். பின்னர் பத்திரிகையாசிரியராக விளங்கி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார். 1927 முதல் 1936ஆம் ஆண்டு வரை இவர் தமிழ்த்துறையில் பணியாற்றி யுள்ளார்.

இன்று கன்னியாகுமரி மாவட்ட வரை படத்தில் கவனமாகத் தேடினாலும் 'வீமன சேரி' எனும் கிராமத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இந்த ஊர் பின்னர் 'வீமநகரி' 'பீமநகரி' என்றும் வழங்கி வந்தது. இந்தக் கிராமத்தில் 1879இல் பிறந்தவர் கே.என். சிவராஜபிள்ளை. சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றபின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார். இலக்கியச் சுவைஞராகவும் கவிஞராகவும் விளங்கினார். இதனால் காவல்துறை அதிகாரி பதவியில் தொடர்ந்திருக்க மனம் விரும்பவில்லை. ஆகவே அப்பதவியைத் துறந்து பத்திரிகை யாளராக மாறினார்.

'நாஞ்சில் நேசன்' என்னும் தமிழ் வாரப் பத்திரிகையை வெளியிட்டு மக்களிடையே அறிவுணர்ச்சியைப் பரப்ப முற்பட்டார். கற்றோர் மத்தியில் சிவராஜபிள்ளை மதிக்கப்பட்ட புலமைமிக்கவராக விளங்கி வந்தார். அப்பொழுது திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவப் பேராசிரி யராக விளங்கி வந்தவர் மனோன்மணீயம் சுந்தரப்பிள்ளை. இவர் 'பீபிள்ஸ் ஒப்பினியன்' என்றும் ஆங்கிலப் பத்திரிகையைத் திருவனந்தபுரத்தில் இருந்து வெளியிட்டு வந்தார். இந்தப் பத்திரிகையின் துணை யாசிரியராய் இருந்து பணிபுரிய ஏற்றவர் சிவராஜபிள்ளை எனக் கண்டார். இவரைச் சுந்தரம்பிள்ளை அழைத்துத் தம் பத்திரிகை யில் பணிபுரிய ஆவன செய்தார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சிவராஜ பிள்ளைக்கு உறவு முறையினர்தாம்.

சிவராஜபிள்ளை திருவனந்தபுரத்தில் சுந்தரம்பிள்ளையோடு பத்திரிகைத் தொழில் புரிந்த காலத்தில் பேராசிரியரது அறிவு நுட்பத்தையும் ஆய்வுத்திறனையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பேராசிரியரிடம் காணப்பட்ட கருத்துநிலைத் தேடல் ஆராய்ச்சிக் கண்ணோட்டம் சிவராஜபிள்ளையிடமும் வெளிப்படத் தொடங்கின. அந்நாளில் சுந்தரம்பிள்ளை 'Directory of Archaeology' என்றும் நூலை எழுதி வந்தார். இதில் சிவராஜபிள்ளையும் பங்கு கொண்டிருந்தார்.

பீப்பிள்ஸ் ஒப்பிணியன், நாஞ்சில் நேசன், மலபார் குவார்டர்லி ரிவ்யூ போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்து பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இவர் மதம் என்னும் பொருள் பற்றிச் சிறந்த கட்டுரைகளை எழுதி பரோடா மன்னரிடம் ஐந்நூறு ரூபாய் பரிசிலும் பாராட்டும் பெற்றார். 'மானிஸ்ட்' என்ற அமெரிக்க மாத இதழில் தத்துவக் கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் சிறப்பான ஆய்வுக் கட்டுரை களை எழுதி மதிப்புப் பெற்றார். 'இந்தியாவின் குறிக்கோள்' என்னும் பொருளில் ஆங்கிலத்தில் இவர் எழுதிய ஐந்து பெரிய கட்டுரைகள் பின்னர் அமெரிக்கப் பதிப்பகம் ஒன்றால் நூலாக வெளியிடப்பட்டது.

சிவராஜபிள்ளை தன்னைப்போலவே தமிழுணர்வும் தமிழாராய்ச்சியும் நிரம்பப் பெற்ற நண்பர்களால் சூழப்பட்டிருந்தார். பேரா.வையாபுரிப்பிள்ளை அப்பொழுது திருவனந்தபுரத்தில் வக்கீல் தொழில் புரிந்து வந்தார். சிவராஜபிள்ளையும் வையாபுரிப் பிள்ளையும் மிகுந்த நட்புக் கொண்டிருந் தார்கள். இவர்களுடன் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பண்டிதர் முத்துசாமிப் பிள்ளை இசையரசு தி. இலக்குமணபிள்ளை முதலியோர் அப்பொழுது அங்கு வாழ்ந்த தமிழறிஞர் களுள் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்வாறு தமிழ் ஆர்வம் உள்ளோர் ஒன்றுகூடித் தமிழாராய்ச்சி செய்யும் பொதுக்களமாக புத்தன் சந்தையிலுள்ள 'சைவப்பிரகாச சபை' விளங்கியது.

திருவனந்தபுரத்தில் 'இலக்கியக் கழகம்' சார்பாகப் பல அறிஞர்கள் ஒன்றுகூடிக் கட்டுரைகள் வாசித்து விவாதித்து வந்தனர். ஒரு சமயம் இக்கழகத்தில் ராஜாஜி தலைமையில் கட்டுரை ஒன்றை சிவராஜ பிள்ளை வாசித்தார். இந்தக் கட்டுரையில் வருணாசார தர்மம் இந்தியாவின் எதிர் காலத்தை எப்படிப் பாதிக்கும், தமிழ் மக்களுக்கும் இதற்குமுள்ள தொடர்பு, இந்தியச் சாதிகளுக்கும் சடங்குகளுக்கும் உள்ள தொடர்பு போன்றவற்றை விளக்கி இருந்தார். அக்கூட்டத்தில் சுப்பிரமணிய அய்யர் M.A அவர்கள் வருணாசார தருமத்தை ஆதரித்துப் பேசினார். இக் கருத்துகளையும் மறுத்து சிவராஜபிள்ளை தருக்க ரீதியில் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். பின்னர் இக்கருத்துகள் யாவற்றையும் தொகுத்து India Social Idol--a Review என்ற தலைப்பில் சுமார் 200 பக்கங்கள் கொண்ட நூலாக எழுதி வெளியிட்டார். சாதியைப் பற்றிய இவரது கணிப்புகள் பிற்காலத்தில் திராவிட இயக்கத்தினரால் எழுத்தாளப்பட்டன.

சிவராஜபிள்ளை 1925ல் யாழ்ப்பாணம் சென்று அங்கு சேர். பொன் இராமநாதன் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கம்பராமாயண ஆய்வுரையைத் திருத்தமுற அமைத்து அச்சிட்டுக் கொடுத்தார்.

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 1926ம் ஆண்டு நவம்பரில் தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியராகச் சென்னைக்கு வந்து சேர்ந்தார். அவர் மூலம் சிவராஜ பிள்ளையின் புலமை சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்குத் தெரிய வந்தது. அப்பொழுது புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழாராய்ச்சித் துறைக்குத் தக்க ஒருவரைப் பல்கலைக்கழகம் நாடியது. சிவராஜபிள்ளையின் பணிகளை அறிந்த அதிகாரிகள் ஆராய்சித்துறையில் பணிபுரிய இவரை அழைத்தனர். 1927 முதல் 1936ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் இவர் தமிழ்த்துறையில் பணியாற்றினார். பல்கலைக்க கழகத்தில் தமிழியல் ஆராய்ச்சிச் செல்நெறிகள் உருவாகச் சாதகமான நிலைமைகளை உருவாக்கி வளர்த்தெடுத்தார்.

சிவராஜபிள்ளை எழுதி வெளிவந்த 9 நூல்கள் கிடைக்கின்றன. இவற்றில் 2 ஆங்கில நூல்கள், 4 கவிதை நூல்கள். கவிதை நூல்களில் ஒன்று கவிதை வடிவில் அமைந்த விமரிசனம். எஞ்சிய இரு நூல்களும் சொல்லாராய்ச்சி குறித்தவை. இவரது நூல்கள் பல அச்சில் வராது கையெழுத்துப் படிகளாகவே நின்று போயின. இவரது புலமை நோக்கு ஆய்வுத்திறன் இன்னும் முழுமையாக ஆராயப்படாமலேயே உள்ளது.

கம்பராமாயணம் கௌஸ்துபம் எனும் விருத்தப் பாவாலான நூல் கவிதையில் அமைந்த விமர்சன நூல். முன்னுரைப் படலம், ஆக்கியோன் படலம், உவமைப் படலம், இயற்கை வருணனைப் படலம், கதை மக்கட் படலம், மெய்ப்பாட்டு வருணனைப் படலம், அறிவுரைப்படலம் என பத்து படலங்களாக பாகுபடுத்தப்பட்டது. 422 செய்யுள்களால் ஆனது. இதன் மூலம் கம்பராமாயணத்தில் சிவராஜபிள்ளைக்கு இருந்த ஈடுபாடும் ஆராய்ச்சியும் புலனாகிறது.
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட திராவிடர்களின் பண்பாட்டை ஆராய்கிறார். சங்க இலக்கியம் பற்றிய அடிப்படைகளை விளக்கிவிட்டு சங்கம் என்னும் அமைப்பு தமிழகத்தில் இருந்திருக்க முடியாதென வாதிடுகிறார்.
'தமிழ் நாட்டில் அகத்தியர்' என்னும் நூல் அகத்தியர் பற்றிய கதைகளுக்கிடையே இருந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அகத்தியர் ஒருவரா பலரா என்பதற்கு விடைகாணும் நிலையில் எழுதப்பட்டதாகும். அகத்தியர் பிறப்பு ஐயப்பாட்டுக்கு உரிய தென்றும் குடமுனி, கலசயன், கலகீசுதன், கும்பயோனி, கும்பசம்பவன், கடோத்பவன் போன்ற அகத்தியரின் மறுபெயர்களை ஆராய்ந்து இவர்தம் பிறப்பு இயற்கைக்கு மாறானது எனக் கூறுகிறார். அகத்தியர் இமயமலையில் வாழ்ந்து ரிக்வேதம் மற்றும் மருத்துவ நூல்களை எழுதினார் என ஆரியரும் பொதிய மலையில் தங்கி தமிழ் இலக்கண மருத்துவ நூல்களை எழுதினார் என திராவிடரும் கூறும் கதைகளை எடுத்துக் காட்டி இவற்றிற்கிடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுவது இவர் தம் ஒப்பியலயறிவையும் வடமொழி அறிவையும் ஒருங்கே புலப்படுத்துவதாக உள்ளது.

சிவராஜபிள்ளை படைத்த மற்றொரு நூல் பண்டைத் தமிழர்களின் காலவரிசை என்பது. பழந்தமிழர்களின் வரலாற்றை எழுதப்புகுவோர் சங்க இலக்கியங்களைச் சான்றாகக் கொள்ளாது தம் மனம்போன போக்கில் வரலாறு எழுதத் துணிகின்றனர் என்று கருதிய ஆசிரியர் சங்க இலக்கியங் களில் கூறப்பட்டுள்ள செய்திகள் உண்மையானவை எனக் கூறி அவற்றைச் சான்றாக வைத்துத் தமிழர் வரலாற்றை ஆய்கிறார். நான்கு பெரும் தலைப்புகளில் 87 உள்தலைப்புகளில், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட திராவிடர்களின் பண்பாட்டை ஆராய்கிறார். சங்க இலக்கியம் பற்றிய அடிப்படைகளை விளக்கிவிட்டு சங்கம் என்னும் அமைப்பு தமிழகத்தில் இருந்திருக்க முடியாதென வாதிடுகிறார். இவற்றில் ஆசிரியர் வெளிப்படுத்தும் நுண்ணறிவு எமது கவனத்திற்குரியது. சங்க நூல்களின் தொகுப்பு பற்றி ஆசிரியர் கூறும் பல கருத்துக்கள் இங்கே ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை மட்டுமல்ல அவை ஏற்புடை யனவாகவும் உள்ளன.

  • இயற்கையைப் பாடும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன உண்மையான சங்க இலக்கியம்.

  • எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு என்னும் ஐந்து தொகுதிகளுக்கு மட்டும் காப்புச்செய்யுள் பாடியுள்ள பாரதம் பாடிய பெருந்தேவனாரே இந்நூல்களைத் தொகுத்திருக்கலாம்.

  • கலித்தொகையை தொகுத்த நல்லந்து வனாரே கலித்தொகையை இயற்றியிருக்க வேண்டும்.

  • பரிபாடல், ஐங்குறுநூறு இரண்டும் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள்.

  • குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்கள் பொருளாலும் பாவாலும் அளவாலும் தொகுக்கப்பட்டிருப்பதால் ஒரே காலத்தில் ஒருவரால் தொகுக்கப் பட்டிருக்க வேண்டும்.


இதுபோன்ற பல்வேறு கருத்துக்களை சிவராஜபிள்ளை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இவற்றின் மூலம் தமிழில் அறிவாராய்ச்சி மரபுச் செல்நெறி ஒன்று இழையோடி வருவதற்கான பின்புலத்தை வழங்கியுள்ளார். சங்க இலக்கியத்தை முதல்தரச் சான்றுகள் இரண்டாம்தரச் சான்றுகள் என பகுத்துக்கொண்டு பழந் தமிழகத்தில் ஆட்சி புரிந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் குறுநில மன்னர்கள் ஆகியோரைப் பற்றியும் இவர் ஆராய்கிறார்.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தொடங்கி பேராசிரியர்கள் வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீ. வரையிலான நீண்ட புலமை, ஆய்வுப் பாரம்பரியமாகவும் அறிதல் மரபாகவும் முனைப்புற்று வளர்ச்சியடைந் துள்ளது. சிவராஜபிள்ளை 1941கள் வரை தமிழியல் ஆய்வு வரலாற்றில் இயக்கம் கொண்டிருந்தார்.

சிவராஜபிள்ளையின் தர்க்க ரீதியான ஆய்வுப் போக்குகளை முனைவர் சி. பால சுப்பிரமணியம் பின்வருமாறு அமைத்துக் கூறுவார்: ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருளைப்பற்றி நன்கு அறிந்து தெளிதல்; ஆய்வுக்குரிய பொருளின் இலக்கியச் சான்றுகள் முழுவதையும், முதல் தரச் சான்றுகள், இரண்டாம் தரச்சான்றுகள் என்று வகைப்படுத்தித் திரட்டித் தருதல்; ஆய்வுக்குரிய பொருளோடு தொடர்புடைய பிறகருத்துக்களை ஆராய்தல்; வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் வரலாற்று ஆசிரியர் களது குறிப்புக்களைப் பயன்படுத்தி ஆராய்தல்; கால ஆராய்ச்சி செய்தல்; தம்முடைய முடிவை முதலிலேயே கூறிவிட்டுப் பின்னர் அதற்குச் சான்றுகள் காட்டி நிறுவுதல்; மாறுபட்ட கருத்துக்களைச் சான்றுகளுடன் மறுத்துத் தம் கருத்துக்களை நிறுவுதல்; இலக்கியங்களில் காணப்படும் குறைகளை ஆழ்ந்து நோக்குதல்; அறிவியல் கண்கொண்டு இலக்கிய ஆராய்ச்சி செய்தல்.

இவ்வாறு இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் 1925-1940கள் வரை சிவராஜபிள்ளையின் பங்களிப்பு விரிவானது. இதுவே பின்னர் பல்கிப் பெருகிய ஆய்வு மரபுக்கு முன்னோடியாகவும் தொடக்கமாகவும் இருந்தது.

தெ. மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline