Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | பொது | சமயம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
பாலகுமாரன்
- சரவணன்|ஜூலை 2001|
Share:
Click Here Enlargeஇன்றைய நிலையில் மத்தியத் தர வாசகர்களின் மந்திரச் சொல் பாலகுமாரன். சமையலறைக்குள்ளும் இவரது நாவல்கள் நுழைந்து சரித்திரம் படைத்திருக்கின்றன. தமிழில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங் களுள் இவரது புத்தகங்களும் அடங்கும். நாவலாசிரியர், திரைக்கதையாசிரியர், வசன கர்த்தா, திரைப்பட இயக்குனர் என சகல துறைகளிலும் கால் பதித்திருக்கிறார். இவரது 'மெர்க்குரிப் பூக்கள்', 'இரும்பு குதிரைகள்' என்ற இரண்டு நாவல்களையும் தமிழின் தலைசிறந்த நாவல்கள் பட்டியலில் வைப்பதற்கு விமர்சகர் கள் துணிந்திருக்கின்றனர்.

ஆரம்பத்தில் எழுத்து, கணையாழி போன்ற பத்திரிகைகளில் சிறு கவிதைகள் எழுதி வந்தவர். சிம்சன் குரூப்பின் ட·பே (Tafe) கம்பெனியின் சேல்ஸ் பிரிவில் பணியாற்றிய பாலகுமாரன், தன்னுடைய நிரந்தர வேலையை உதறி விட்டு வந்தவர்.

சுப்பிரமணிய ராஜூ, மாலன் போன்ற நண்பர்கள் வட்டத்தில் வலம் வந்தவர்.

ஆர்ப்பாட்டமில்லாத, எளிமையாக விளங்க வைக்கக்கூடியது இவரது மொழிநடை. கல்கி ஏற்படுத்தி விட்டுப் போன மிகப் பெரிய வாசகர் வட்டத்துக்குத் தன்னளவில் நின்று தீனி போட்டவர். பெரும்பாலும் இவ்வாறு நிறைய எழுதுபவர்கள் மீது கலைத் தன்மையை இழந்து விட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு எழும்பும். ஆனால் பாலகுமாரன் மீது மட்டும் அத்தகைய குற்றச்சாட்டு எழும்பவே வாய்ப்பில்லாமல் போனது. அந்தளவிற்கு நிறைய எழுதும்போதும் தன்னுடைய தனித்துவத்தையும் கலையம் சத்தையும் இழந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டவர்.

பெரும்பாலும் இவருடைய எழுத்துக்களில் மத்தியத்தர மக்களின் ஆசை, அபிலாஷைகள் பதிவாகியிருக்கும். கதையின் மையம் முழுவதும் தோற்றுப் போன ஒருவனோ, ஒருத்தியோ இவ்வாழ்க்கையிலிருந்து மீண்டு வெற்றி பெறுவது என்பதாகயிருக்கும். படிப்பவர் களையும் அவ்வெற்றியை நோக்கி உந்தித் தள்ளுவதாக இருப்பதே அவரின் வெற்றி ரகசியம். காதல் கதைகள் அனைத்தும் ரொமாண்டிசத்தின் உச்சம் எனலாம். காதலர் களின் மனதில் ஊசலாடும் ரகசியக் கதவுகளை வக்கிரம் மீறாமல் மெல்லத் திறந்து காட்டியவர் பாலகுமாரன். பொதுவாகக் காதல் கதை என்றிராமல் இலட்சியக் காதலை முன்னிறுத் தியதாக அமைவது இவரின் தனிச் சிறப்பு.

இவருடைய நாவல்கள் பலவற்றில் பெண் களுடைய பிரச்சனைகளைத் தொட்டுக் காட்டி யுள்ளார். அதிலும் குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் சந்திக்கும் துயர்கள் பற்றி இவருடைய பேனா உண்மையான ஆதங்கத்துடன் தொட்டுக் காட்டியிருக்கிறது. இவரின் மாதநாவல்கள் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்றளவும் வேலைக்குப் போகும் ஆண்கள், பெண்கள் இவர்களின் பைகளில் சாப்பாடு இருக்குமோ இல்லையோ கண்டிப் பாகப் பாலகுமாரனின் நாவல் இருக்கும். வாசிப்பதில் உள்ள சிரமத்தைப் போக்கி, எளிமையாக வாசகர்களைப் போய்ச் சேர்ந்தவர் களுள் இவரும் குறிப்பிடத்தகுந்தவர்.
இவரின் குறிப்பிடத் தகுந்த பிற நாவல்களாக, 'கொம்புத்தேன்', 'சேவல் பண்ணை', 'அகல்யா', 'பச்சை வயல் மனது', 'உள்ளம் கவர் கள்வன்', 'ஆனந்த வயல்', 'பனி விழும் மலர்வனம்', 'செந்தூரச் சொந்தம்', 'சுகஜீவனம்', 'முதல் யுத்தம்', 'கண்ணாடி கோபுரங்கள்', 'சிநேகமுள்ள சிங்கம்', 'உயிர்ச்சுருள்', 'நெல்லுச்சோறு', 'என்றென்றும் அன்புடன்', 'கைவீசம்மா கைவீசு', 'தலையணைப் பூக்கள்', 'மேய்ச்சல் மைதானம்', 'இனி என்முறை', 'நிலாக் கால மேகம்', 'கடற்பாலம்', 'போராடும் பெண்மணிகள்', 'இரண்டாவது சூரியன்', 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' போன்ற நாவல்களைக் குறிப்பிடலாம். இது போக ஏராளமான பத்திரிகைகளில் சிறந்த தொடர்கதைகள் பலவும் எழுதியுள்ளார். மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள் ளார். தொடர் கட்டுரைகள் பலவும் எழுதியிருக் கிறார். தற்போது ஆனந்த விகடன் பத்திரி கையில் இவர் எழுதிவரும் 'அப்பம் வடை தயிர்ச்சாதம்' தொடர்கதைக்கு மிகுந்த வாசக வரவேற்பு இருக்கிறது.

வெறும் நாவலாசிரியராக மட்டும் பாலகுமார னின் பணிகளைச் சுருக்கிவிட முடியாது. திரைப்படத் துறையிலும் பல வெற்றிகளைக் குவித்துள்ளார். 'ராஜபார்வை' படத்தின் மூலக்கதை இவருடையதுதான். இதுதான் அவரின் முதல் சினிமா பிரவேசமும்கூட. 'காதலன்', 'பாட்ஷா', 'குணா', 'ஜென்டில்மேன்', 'நாயகன்' 'முகவரி' போன்ற படங்களுக்கு வசனகர்த்தா பாலகுமாரன்தான். மேற்குறிப்பிடப் பட்ட படங்கள் அனைத்தும் வெள்ளிவிழா படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'சிந்து பைரவி', 'புன்னகை மன்னன்' ஆகிய இரண்டு படங்களுக்கும் அஷோசியட் டைரக்டராகப் பணியாற்றினார். 'இது நம்ம ஆளு' படத்தை பாக்யராஜ் மேற்பார்வை செய்ய பாலகுமாரன் இயக்கினார். இது போக இளம் இயக்குனர்கள் பலரின் கதை விவாதங்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டு ஊக்குவித்து வருகிறார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவரின் தோற்றமும் கிட்டத்தட்ட சித்தர்கள் போலானது தான்.

ஏகப்பட்ட தனி நாவல்கள், தொடர்கதைகள், திரைக்கதை வசனங்கள் எனத் தொடர்ந்து எழுதியும் தன்னுடைய தனித்துவத்தை இழந்துவிடாமல் காப்பாற்றி வருகிறார் பாலகுமாரன். தன்னுடைய கற்பனைத் திறன் வற்றிவிடாமல் தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டே வரும் இவர் இப்போதும் எழுதிக் கொண்டேயிருக்கிறார். முழுநேர எழுத்துப் பணியையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்.

சரவணன்
Share: 




© Copyright 2020 Tamilonline