Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நிதி அறிவோம்
நண்பர்களே, நடிகர்களே, முதலீட்டாளர்களே
- சிவா மற்றும் பிரியா|ஜூன் 2007|
Share:
Click Here Enlargeநண்பர்களே, நடிகர்களே, முதலீட்டாளர்களே!' என்று தொடங்கினார் ஷேக்ஸ்பியர். 'அவ்வப்போது சில பங்குகளை நல்ல விலைக்கு நான் வாங்கியதுண்டு; நிபுணர்களின் பரிந்துரையின் பேரில்தான். அவற்றின் விலை மேலே போகுமென்று எதிர்பார்த்தேன். அப்படி நடக்கவில்லை என்பதால் நிறைய இழப்பு ஏற்பட்டது. எங்கே நான் தவறு செய்திருப்பேன்?' என்று சொல்லி முடித்தார்.

அதற்கு வெனிஸ் நகர வியாபாரி பதிலளித்தார் 'வில்லியம், நான் கூடத்தான் என் கப்பல் திரும்பியதும் ஷைலாக்கின் கடனைத் தீர்த்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. முதலீட்டைப் பொறுத்த வரையிலும், ஒரு பங்கை வாங்கியதும் அது விலையேறிவிடும் என்று நினைப்பது தவறு. அப்படி ஒரு முதலீட்டாளர் வாங்கும் எல்லாப் பங்குகளின் விலையும் ஏறினால், எல்லோருமே கோடீஸ்வரர்களாகி விடுவார்களே.

'நடப்பது அப்படியல்ல. 1000 மைக்ரோசாப்ட் பங்குகளை 27 டாலருக்கு வாங்கிய உடனே அதன் விலை ஏற வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். ஒரே ஒரு ஆள் 1000 பங்குகள் வாங்கியதால் மட்டுமே விலை ஏறிவிடுவதில்லை. ஆயிரக்கணக்கான பேர் வாங்க முன்வர வேண்டும்; சிலரே விற்க முன்வர வேண்டும். அப்போதுதான் விலை ஏறும். 300 பில்லியர் டாலர் நிறுவனமான மைக்ரோசாப்டின் பங்கு விலை 1 டாலராவது ஏற வேண்டுமானால், 10 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஒருவர் பங்குகளை வாங்கவேண்டும்.'

'வில்லியம், 'உலகமே ஒரு நாடக மேடை' என்று நீதான் கூறினாய்' இப்போது பேசியது ஹேம்லட். 'முதலீடு செய்வதையும் ஒரு நாடகத்துக்கு ஒப்பிடலாம். கதாநாயகன் பிரபலமானவனாக இருந்தால் போதாது. மக்கள் அதைத் திரும்பத் திரும்பப் பார்க்க வர வேண்டும், அப்போதுதான் லாபம் ஈட்டலாம். அதுபோல, ஒரு சில பேர் மட்டுமே சிறிய அளவில் பங்குகளை வாங்கினால் அதன் விலை உயராது. அதை வாங்க நிறையப் பேர் தயாராக இருக்க வேண்டும். முதலீட்டு நிறுவனங்கள்தாம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். வேன்கார்ட், ஃபிடலிடி போன்ற பெரிய நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பங்குகளை அவ்வப்போது வாங்கிக் குவிக்கின்றன. அப்போது விலைகள் உயரும். அவர்கள் பெருமளவில் பங்குகளை விற்றால் சந்தை சரிகிறது.

'முதலீட்டு நிறுவனங்கள் வாங்கத் தொடங்குவதற்குச் சற்றுமுன் வாங்கி, அவை விற்பதற்குச் சற்றுமுன் விற்கும் முதலீட்டாளர் நல்ல லாபம் பெறலாம்.'

'நான் கூடக் கொஞ்சம் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்' ரோமியோ வருத்தப்பட்டான். 'ஜூலியட்டின் புலம்பலைக் கேட்டுக் கொண்டிருக்காமல், வில்லன்கள் வருவதற்கு முன்னால் நான் அவளை மேல்தளத்திலிருந்து தூக்கிக் கொண்டு போயிருக்கவேண்டும்.'

ரோமியோவை ஒரு முறை முறைத்தார் ஷேக்ஸ்பியர். ரோமியோ விஷயத்தை மாற்றினார் 'அத்தனை நாள் அசையாமல் கிடந்த மைக்ரோசாப்ட் பங்கு விலை, ஜூலை 27, 2005லிருந்து மெல்லமெல்ல ஏறத் தொடங்கியது. 25 டாலராக இருந்தது. சில பெரிய நிறுவனங்கள் அதை வாங்கத் தொடங்கின. ஒரே வாரத்தில் 3 டாலர் ஏறியது. ஒரு வாரத்துக்குள் 12 சதவிகித லாபம்.'

'ஷைலாக்தான் பண விஷயத்தில் கெட்டிக்காரர்னு நெனச்சேன். நீ கூட நிறையத் தெரிஞ்சு வச்சிருக்கியே' என்றார் ஷேக்ஸ்பியர் ரோமியோவிடம். 'சரி, அது கிடக்கட்டும். நிபுணர்களின் கருத்து எப்படிப் பொய்த்தது, அதைச் சொல்' என்றார்.

'யாரையும் நம்பாதீர் கவிஞரே!' என்றார் ஜூலியஸ் சீஸர். 'எல்லோருமே புரூடஸ் என்று சொல்ல வரவில்லை. NASDAQ, NYSE இரண்டிலும் ஆயிரக் கணக்கான குழுமங்கள் பதிவு பெற்றுள்ளன. அவற்றைச் சில நிபுணர்களே ஆய்வு செய்கிறார்கள். மெரில் லின்ச், UBS போன்ற நிதி நிறுவனங்களில் பணிபுரியும் நிபுணர்களின் கருத்துப்படி ஒரு பங்கை முதலீடு செய்ய உகந்ததா அல்லவா என்று நிர்ணயிக்கிறார்கள்.

'ஆனால் ஒரு பங்கின் விலை உயருமா இல்லையா என்று ஒரு நிபுணரால் கூடச் சொல்ல முடியாது. ஜூலை 13 அன்று மெரில் லின்ச் நிபுணர் சிமன்டெக் பங்குகளைப் பரிந்துரைத்தார். அப்போது அதன் விலை 24 டாலர். 29 டாலராகும் என்றார். இரண்டு வார காலத்துக்குள் 10 சதவிகித லாபம் கிடைக்கும் என்று அதை நீ வாங்கியிருக்கலாம். அதுதான் இல்லை! ஆகஸ்டு முதல் வாரத்தில் அது 21.50 டாலரைத் தொட்டது.

'ஒரு கம்பெனியின் எதிர்காலத்தை அறிவிப்பதுதான் ஒரு நிபுணரின் வேலை. ஒரு பங்கு அதன் உச்ச விலையை அடைந்ததும் அதை உயர்த்தி நிர்ணயிக்கிறார். அதன் விலை விழுந்ததும், அதைத் தாழ்த்தி நிர்ணயிக்கிறார். பரஸ்பர நிதி நிர்வாகிகள் ஒரு பங்கில் பணைத்தைக் கொட்டும் முன்பு, அதன் பல அம்சங்களையும் ஆராய்கிறார்கள். அதில் ஒரு அம்சம்தான் நிபுணர்களின் பரிந்துரை. பல நிபுணர்கள் வெவ்வேறு பங்குகளை ஆராய்கிறார்கள், அவை எல்லாவற்றையும் ஒரு தனி நபர் கவனத்தில் கொண்டு முதலீடு செய்வது நடவாத காரியம்.'
இப்போது விவாதத்தில் லியர் மன்னர் கலந்துகொண்டார். 'இதில இன்னொரு பெரிய மாயை என்னவென்றால், பலவிதப் பங்குகளை வாங்கினால் நஷ்டப்படும் அபாயத்தைக் குறைக்கலாம் என்று நினைப்பதுதான். ஒரே நிறுவனப் பங்குகளில் போட்டாலும், பலவகைப் பங்குகளில் போட்டாலும் அபாயத்தின் அளவு ஒன்றுதான். யாராவது டாட்காம் குமிழி வெடிச்சப்ப பங்குச் சந்தை சரியும்னு எதிர்பார்த்தாங்களா? எல்லாமே கூரையைப் பிச்சுக்கிட்டுப் போச்சு. DOW 30,000ஐயும், NASDAQ 10,000ஐயும் 2005ல தாண்டும்னுதான் எதிர்பார்த்தாங்க.

'5 வருஷத்துக்கு முன்னால, அதாவது ஆகஸ்ட் 2005ல நாம 10,000 டாலரை மைக்ரோசாப்டில போட்டிருந்தா, அதன் இன்றைய மதிப்பு 9,000 டாலராக இருக்கும்; 1,000 டாலர் நஷ்டம். அதையே 'டைவர்ஸிஃபைட் S&P நிதி' ஒன்றில போட்டிருந்தா அதன் இன்றைய மதிப்பு 8,000 டாலராகத்தான் இருக்கும்; அதாவது 2,000 டாலர் நஷ்டம்.

'அதே பத்தாயிரத்தை பெட், பாத் அண்ட் பியாண்ட்-ல 2000 ஆண்டில் போட்டிருந்தால், அது இன்றைக்கு 24,500 டாலர் ஆகியிருக்கும்; 150 சதவிகிதத்துக்கு மேலே வருமானம். அதையே ஸ்டார்பக்ஸ்-ல போட்டிருந்தா 27,800 டாலர் ஆகியிருக்கும்; ஐந்து வருட லாபம் 176 சதவிகிதம். eBay-ல முதலீடு பண்ணியிருந்தா 28,000 ஆகியிருக்கும், 180 சதவிகித லாபம்.'

லியர் மன்னர் சொல்லிக் கொண்டிருந்த போது ஷேக்ஸ்பியர் குறுக்கிட்டார் 'ம்... சந்தை விழும்போது நீ சொல்றது சரிதான். தனிப் பங்கோ, இல்லை பலவிதப் பங்கோ, எல்லாமே சரியும்தான். ஆனால், சரியாகத் தேர்ந் தெடுத்து முதலீடு செய்தால், நிச்சயம் சொத்து மதிப்பு உயரத்தானே செய்யும்.

'ஒரு தனி முதலீட்டாளர் எளிதாக 20 சதவிகித லாபம் பார்க்கலாம். அதற்கு எப்படிப் பங்குகள் நகர்கின்றன, எப்படிச் சரியான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது என்பவற்றைப் புரிந்துகொண்டால் போதும். எல்லாப் பங்குகளையும் பின் தொடர நினைக்காமல், ஒரு சில பங்குகளில் கவனம் செலுத்துவதே நல்லது.'

'ஆமாம்' என்றார் லியர் மன்னர். 'தொழில்நுட்பத் துறையைவிட, சில்லறை வணிகத் துறையைப் புரிந்துகொள்வது ஒருவருக்கு எளிதாக இருக்கலாம். அவர் டார்கெட் அல்லது வால் மார்ட்டைக் கூர்ந்து நோக்கினாலே லாபம் ஈட்டலாம். ஏராளமான நிறுவனங்களில் முதலீடு செய்வது பயனளிக்காது. 'இன்வெஸ்ட்மென்ட் குரு' எனப்படும் வாரன் பஃபெட் ஆர அமற யோசித்துத்தான் தனது முதலீட்டுக்கான கம்பெனியைத் தேர்ந்தெடுக்கிறார். சென்ற இருபது வருடங்களில் அவர் 20 சதத்துக்கும் மேலான வருமானத்தைத் தவறாமல் ஈட்டி வருகிறார்.

அவருடைய பில்லியன் டாலர் பங்குத் தொகுதியில் கணக்கற்ற பங்குகளை வைத்துக் கொள்ளவில்லை. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், கோக், ஜில்லட், வாஷிங்டன் போஸ்ட், சமீப காலத்தில் சில ஆற்றல் துறைப் பங்குகள்--இவற்றைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறார். பணக்காரனாவது எளிது. இந்த சூட்சுமங்களயும் ரகசியங்களையும் புரிந்துகொண்டால் போதும்.'

'என்னுடைய அடுத்த நாடகத்துக்குத் தலைப்புக் கிடைத்துவிட்டது: தி மெர்ரி ஸ்டாக்ஸ் ஆஃப் வில்லியம்!' ஷேக்ஸ்பியர் உற்சாகமாக அறிவித்தார்.

ஆங்கிலமூலம்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ் வடிவம்: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline