Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
உதயசங்கர்
- அப்பணசாமி|ஜனவரி 2007|
Share:
Click Here Enlarge1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி(!) தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம். ஆனால், இப்படியொரு கருத்து உருவாவதற் குக் காரணமாக இருந்தவர்களில் உதயசங்கர் ஒருவர். கால் நூற்றாண்டாக இன்னமும் எழுதிக் கொண்டிருப்பவர். கவிதை, குறுநாவல்கள் போன்றவற்றிலும் இவர் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தபோதும் சிறுகதைகளே இவரது வெளிப்பாட்டு ஊடகமாகப் பரிமளித்து வந்திருக்கிறது. சிகரங்களைத் தொட்ட தமிழ்ச் சிறுகதைகளில் இவரது சிறுகதைகளுக்கு நிச்சயம் இடம் உண்டு. சிறுகதை வடிவத்துக் கான வடிவ அமைதி இவரிடம் அபூர்வமாகக் கைகூடி வந்துள்ளது.

சிறுகதைத் தொகுப்புகளான 'யாவர்வீட்டிலும்', 'நீலக்கனவு', 'உதயசங்கர் கதைகள்' ஆகிய தொகுப்புகளும், இரு குறுநாவல் தொகுப்பு களும் வெளிவந்துள்ளன. தவிர, மூன்று கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். சுமார் 75க்கும் குறைவான சிறுகதைகளும், 10-க்கும் அதிகமான குறுநாவல்களும் எழுதி யுள்ளார். இவற்றில் இவர் செதுக்கிச் சேர்த்துள்ள உலகம் மிகவும் சிறியது. ஆனால் ஆழமானது. வட்டார வழக்கு இலக்கியத்தில் வலிந்துகட்டிச் சேர்க்கப்படும் அலங்காரச் சொற்களை எங்கும் காண முடியாது. இக் கதைகளின் அசாதாரணமான எளிமையும், கலை அழகும் நேர்த்தியான நெசவாளியின் கைத்திறன் போன்று இழையோடுபவை.

இவரது படைப்புகள் புற உலக யதார்த்த நடை கொண்டிருப்பவை. ஆனால் அக உலக நுட்பங்களை மிக நுட்பமான பாவங்கள் மூலம் வெளிப்படுத்துபவை. ஒரே குறிப்பிட்ட பிரதேசம், ஒரே குறிப்பிட்ட நகரம், ஒரே குறிப்பிட்ட தெரு, ஒரே குறிப்பிட்ட சமுதாயப் பிரிவு, ஒரே குறிப்பிட்ட வருமானப் பிரிவு, ஒரே குறிப்பிட்ட தொழில் என்று தேர்வு செய்துகொண்டு அதன் சகலவிதமான வாழ்வியல் அம்சங்களையும் துல்லியமாக வெளிப்படுத்த முயன்றதன் மூலமே மேற்கூறிய அசாதாரணமான எளிமையும், கலை அழகும் கைகூடியுள்ளன.

எந்த நேரத்திலும் இற்று விழுந்து விடக்கூடிய அகால நிலையைக் கொண்டிருக்கிற ஒரே வாழ்க்கைதான் உதயசங்கர் கதைகள். இந்த வாழ்க்கையை வாழும் வேலையில்லா இளைஞன், திருமணத்திற்காக நீண்ட காலமாகக் காத்திருக்கும் பெண், தம் மக்களின் பிரியத்திற்காகக் காத்திருக்கும் வயோதிகம், இருண்ட அடுக்களைப் புகைமூட்டத்தின் ஊடே நம்பிக்கையைத் தேடும் அம்மா, அக்கா, ஒருவேளை வயிற்றை நிரப்ப இரண்டு இட்டிலிகளைப் பெற அவமானத்தைச் சகித்துக் கொள்ளும் கலை உள்ளம், இரண்டு இட்டிலியோ, இரண்டு சவரன் நகையோ அதுவே வாழ்வின் பிடிமானம் என்றால் அதைத் தக்க வைத்துக்கொள்ள உயிரையும் பணயம் வைத்துப் போராடி மானத்தைக் காத்துக் கொள்ளத் தயாராக இருப்பவர்கள் இவர்கள்.

தீப்பெட்டித் தொழிலை பிரதானமாகக் கொண்ட கோவில்பட்டி நகரமோ அல்லது கோவில்பட்டி நகரைத் தொடர்புபடுத்தியோ உதயசங்கர் படைப்புலகம் சுழல்கிறது. ஆனால், தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள் பற்றி இல்லாமல், பெரும்பாலும் வீடுகளில் இருந்து கொண்டே தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடும் மக்களே உதயசங்கர் கதைகளில் அதிகம் உலவுகிறார்கள். அதுவும் இவர்கள் அனை வருமே ஒரே தெருவாசிகளைப் போலவோ, ஒரு குடும்பத்தின் உறவினர்கள் போலவோ, உற்ற நண்பர்களைப் போலவோ காணப் படுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் அனை வரும் ஒருவரே போல் தோன்றுகிறார்கள்.
கோவில்பட்டி போன்ற சிறிய நகரங்களுக்கு சுதந்திரம் எதுவுமே தரப்படவில்லை. 1970 -களில் உருவான நவீனத்தன்மை 1980 -களில் இந்த மக்களின் அடையாளங்கள் மீதே கைவைத்தது. இன்றைய உலகமயமாக்கலில் இந்த அடையாளத்தின் கடைசி இழை வரை இற்றுப் போயுள்ளது. மிச்சமிருக்கும் இந்த அடையாளங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களே இந்த மக்கள். உதயசங்கர் படைப்புலகம் பொதுவில் இதையே மையப்படுத்துகிறது. இந்த மனிதர்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்விலும், ஒவ்வொரு இழையிலும் மாறி மாறித் தோன்றும் உண்மையும், போலியுமே இவரது கதைகள்.

வறண்ட கந்தக நிலமான கரிசல் நிலத்தின் கலாச்சாரமும், நதிப்பாசன தாமிரபணியின் தீரவாசத்துக் கலாச்சாரமும் இவரது கதைகளில் பின்னிப் பிணந்துள்ளன என்கிறார் கி.ராஜநாராயணன். 'திருநெல் வேலிப் பிள்ளைமார்கள் சமூகத்தின் கடைக்கோடி வரிசையில் நிற்கும் மக்கள் கோவில்பட்டியில் வாழ நேர்ந்துள்ளது. அவர்கள் தீப்பெட்டி ஒட்டியும், இட்லி வடை சுட்டு விற்றும், பலசரக்குக் கடைகளில் சம்பளத்துக்கு வேலை பார்த்தும், தூரத்துப் பட்டணங்களில் 'நாடாக்கமார்' கடைகளில் சிப்பந்திகளாக வேலை பார்த்தும், ஆனால் தங்கள் கவுரவம் பறிபோய் விடாமல் தன்மானத்துடன் வாழ போராட்டம் நடத்து பவர்கள் என்கிறார் தமிழ்ச்செல்வன். இதனோடு வாழ்க்கை முழுவதும் நிறைவேறாத காதலின் மெல்லிய சோகமும், ஒரு கலை மனமும் இம்மக்களுடன் கலந்துள்ளன.
1980-களின் தொடக்கத்தில் கோவில்பட்டியி லிருந்து ஏககாலத்தில் எழுதத் தொடங்கியவர் கள் கோணங்கி, தமிழ்ச்செல்வன், உதயசங்கர். இவர்களோடு புறப்பட்ட இன்னும் பலருண்டு. இவர்கள் அனைவரது கதைகளிலும் காணும் அபூர்வ ஒற்றுமை நம்ப முடியாத எளிமை. (மதினிமார்கள் கதை தொகுதிக்குப் பின்னர் கோணங்கி எழுத்து வேறு கலை ஆளுமையை நோக்கித் திரும்பியது தவிர.) உண்மையில் தமிழின் நவீன இலக்கிய வரலாற்றில் வேறு எக்காலகட்டத்திலும் இது போன்ற கலை அழகுள்ள எளிமையைக் காண முடியவில்லை.

உதயசங்கர் பன்முகப்பட்ட கலைச் செயல் பாடுகள் கொண்டவர். 1970களின் இறுதியில் தனது கல்லூரி நாட்களிலும், பின்னரும் நவீன நாடக முயற்சியில் ஈடுபட்டவர். இவரது கவனம் நகரம் சார்ந்து செயல்படாததால் கவனிப்புப் பெறவில்லை. கவிதைகள் தொடர்ந்து எழுதுகிறார். சமீப ஆண்டுகளில் இவரது கவனம் மொழிபெயர்ப்புகளில் குவிந்துள்ளது. மலையாளத்திலிருந்து வைக்கம் முகமது பஷீரின் 'சப்தங்ஙள்', குறுநாவலை 'சப்தங்கள்' என்ற பெயரிலேயே தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எம்.டி.வாசு தேவன் நாயரின் 'தயா என்றொரு பெண் குட்டி' என்ற குழந்தைகள் நாவலை மலையாளத்தில் இருந்து தமிழில் சசிதரனு டன் இணைந்து 'தயா' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். தொடர்ந்து அபிமன்யு என்ற கேரளச் சிறுவனின் அற்புதமான படைப்புகளை மொழிபெயர்த் தார். குழந்தைகள் பாடல்களும் எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ்நாடு அளவிலான முன்னணி செயல்பாட்டாளராக உள்ளார்.

அப்பணசாமி
Share: 




© Copyright 2020 Tamilonline