Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
Tamil Unicode / English Search
முன்னோடி
சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதன்
- கீதா பென்னெட்|நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeசிலருக்கு நல்ல தகப்பனார் கிடைப்பார். மேலும் சிலருக்கு நல்ல குரு கிடைப்பார். ரொம்ப ரொம்ப அதிருஷ்டம் பண்ணின சிலருக்கு உயர்ந்த தகப்பனாரே மிக சிறந்த குருவாகவும் அமைவார். டாக்டர் எஸ். இராமனாதன், கௌரி தம்பதிகளுக்குப் பிறந்த நாங்கள் ஒன்பது சகோதர சகோதரிகளும் மிகவும் அதிருஷ்டசாலிகள். அவரிடம் கற்று இன்று பிரபலமாக முன்னணியில் நிறைய பேர் இருக்கிறார்கள். சாவித்ரி சத்யமூர்த்தி, எஸ்.சௌம்யா, உன்னிக்கிருஷ்னன், அசோக் ரமணி, சீதா நாராயணன், டி.வி.சுந்தரவல்லி, டொராண்டோ வில் இருக்கும் வசுமதி நாகராஜன் என்று ஒரு பெரிய லிஸ்டே கொடுக்கலாம். குரு ஸ்தானத்தில் அவரைப் பற்றி மிக உயர்வாக பேசுகிறார்கள். அப்பாவின் பெருமை என்ன என்றால் அவருடைய குழந்தைகள் நாங்கள் அவரை எப்படி எங்கோ உசரத்தில் வைத்து இருக்கிறோமோ அதே மாதிரி தான் அவருடன் பழகியவர்களும் அது ஒரு சில மணி நேரங்களேயானாலும் கூட நினைக்கிறார்கள் என்பது உண்மை. அப்பா ஒரு மஹா வித்துவான் மட்டுமல்ல, ஒரு உயர்ந்த மனிதர் என்றும் பெயர் வாங்கி வாழ்ந்து காட்டியவர்.

அப்பா பிறந்தது 1917-இல். பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும் வளவனூர் என்ற கிராமத்தில். அவருடைய பெற்றோருக்கு நல்ல இசை ஞானம் இருந்தது. ஆனால் இசையை தொழிலாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்பா தன்னுடைய முதல் இசை அனுபவமாக நினைத்தது கோயிலில் நாதஸ்வரம் கச்சேரியைத் தான். கோடை காலத்தில் கோயிலை சுற்றி இரவு பத்திலிருந்து விடியற்காலை வரை நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு வரும் போது அவரும் பின்னாலேயே போய் கேட்பாராம். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது திருக்கோயிலூருக்குப் போனார்கள். பாடவும், ராகம் கண்டு பிடிப்பது போன்றவற்றை அவருடைய அப்பாவே சொல்லி தந்திருக்கிறார். எட்டு வயதில் தன் தம்பி நடராஜனுடன் (பின்னால் இவர் ஆலந்தூர் நடராஜன் என்று வயலினில் பிரபலமானார்.) முதல் கச்சேரி செய்தார். 'இன்ஸ்பெக்ஷன்' செய்ய வந்த அதிகாரி இவர் பாடியதைக் கேட்டு விட்டு ஸ்காலர்ஷிப் கொடுத்து உதவ வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தவரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். பதினேழு வயதில் பள்ளி முடித்த பிறகு மேலே சங்கீதம் கற்கும் ஆசையில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் சேர்ந்து 'சங்கீத பூஷணம்' பட்டம் பெற்றார்.

அண்ணாமலையில் படித்த காலம் தான் தன் வாழ்க்கையின் மிக சந்தோஷமான பொற்காலம் என்று அப்பா பல முறை சொல்லியிருக்கிறார். வாய்ப்பாட்டுடன், வீணை, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளையும் பாடமாக எடுத்துக் கொண்டார். பொன்னையா பிள்ளை, டைகர் வரதாச்ச்சாரி, சபேசய்யர் போன்ற மகா வித்துவான்களிடம் கற்றார். (இந்த மூன்று ஆசிரியர்களும் கர்னாடக சங்கீத மும்மூர்த்தி களான தியாகையர், தீட்சிதர், சியாமா சாஸ்திரி வழியில் வந்தவர்கள். அதனால் அப்பாவின் பாடாந்திரம் மிகவும் சுத்தமானது என்று கருதப் படுகிறது.) 1938-இல் சங்கீத பூஷணம் பட்டம் வாங்கிய பின் புதுக் கோட்டைக்குச் சென்று அங்கே இசைப் பள்ளியை ஆரம்பித்தார். அங்கே வீணை, பாட்டு இரண்டும் சொல்லிக் கொடுத்தத்தில் நிறையவே வருமானம் வந்தது. இருந்தாலும் அதில் திருப்தியில்லாமல் மறுபடி சென்னை வந்து நிரந்தரமாக குடியேறினார்.

1956-இல் அவர் இரண்டாவது நூற்றாண்டு காவியமான சிலப்பதிகாரத்தில் வரும் இசைப் பற்றி எழுதிய முதல் கட்டுரை மற்ற இசையாளர்களைத் திரும்பி பார்க்க வைத்தது. 'சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்' என்று தமிழில் விரிவாக புத்தகமாகவும் அதை வெளியிட்டார். இந்த முதல் கட்டுரை அவருக்கு அரசாங்கத்தில் உத்தியோகம் வாங்கி கொடுக்க தமிழ் நாட்டின் பல மூலை முடுக்குகளுக்குச் சென்று அவர் பல கிருதிகளை சேகரித்தார். அதன் பலனாக தியாகராஜரின் 'ப்ரஹ்லாத பக்தி விஜயம்' என்ற ஆபெரா, மற்றும் உத்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், திவ்ய நாம கீர்த்த்னைகள், கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம் போன்றவை பக்கா நொடேஷனுடன் புத்தகங்களாக வெளி வந்து அந்த பாட்டுக்கள் பிரபலமாகின.

அமெரிக்க பல்கலை கழகத்திற்கு கர்னாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்க வந்த முதல் இரண்டு பேர் அப்பாவும் மிருதங்க வித்துவான் டி.ரங்கனாதனும். வெஸ்லியனில் இன்றும் கர்னாடக சங்கீதம் தொடர்வதற்குப் பிள்ளையார் சுழி போட்டது இவர்கள் தான். பின்னால் அதே வெஸ்லியன் பல்கலை கழகம் சிலப்பதிகாரத்தில் வரும் இசை ஆராய்ச்சிக்கு அப்பாவிற்கு டாக்டர் பட்டம் அளித்தது. எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்து பி.ஏ., எம்.ஏ. பட்டம் இல்லாமல் நேரே டாக்டரேட் வாங்கினார் என்பதும் ஆச்சரியம் தான்.

அப்பாவை அவருடைய இளமை காலத்தில் 'வீணை இராமனாதன்' என்று தான் அழைப்பர். அவருடன் சேர்ந்து டூயட்டாக என் எட்டு வயதிலிருந்து நிறைய கச்சேரிகள் செய்திருக்கிறேன். அப்போது சின்னப் பெண் என்றாலும் எனக்கும் முக்கியத்துவம் கொடுத்து துக்கடா வரும்போது சின்னஞ்சிறு கிளியே போன்ற பாட்டுக்களை என்னைத் தனியே வாசிக்க சொல்லுவார். அப்பா விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து வீணையில் சரளி, ஜண்டை, இரண்டு காலம் வர்ணம் என்று சாதகம் பண்ணும் போது சிறுமியாக இருந்த காலத்தில் என்னையும் எழுப்பி கூட வாசிக்க சொல்லுவார். அதன் பலனை இன்றும் ஒரு வீணை விதூஷியாக அனுபவிக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்கள் குடும்பத்தில் யாரையுமே அப்பா கட்டாயம் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திய தில்லை. அதனால் தானோ என்னவோ நாங்கள் அனைவருமே வாய்ப்பாட்டு, வீணை அல்லது வயலின் வாசிக்கிறோம். சகோதரிகள் வித்யா, பானு, லதா, வானதி ஆகியோர் கர்னாடக சங்கீதத்தில் எம்.ஏ., எம்.ஃபில் பட்டம் பெற்றவர்கள்.

அதிக வருமானம், வசதிகள் இல்லாத பெரிய குடும்பமாக இருந்தாலும் எங்கள் இள வயதில் சந்தோஷத்திற்கு மட்டும் குறைவேயில்லை. அப்போது திருவல்லிக்கேணி சைடோ ஜி தெருவில் குடியிருந்தோம். அதனால் வாரத்திற்கு மூன்று நாட்களாவது அப்பா எங்களை விடியற்காலையில் மெரினாவுக்கு நடத்தி அழைத்துப் போவார். அங்கே எங்களுக்கு தமிழில் பாரதியார், கம்பர் என்று பாடம் புகட்டுவார். ஆங்கிலம் பேசவும் பயிற்சி கொடுப்பார். அப்பாவுக்கு தமிழில் கரைக் கடந்த ஆர்வம். சுத்த தமிழில் பேச வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுபவர். அப்படி ஆங்கிலம் கலந்து விட்டால் ஒரு வார்த்தைக்கு ஐந்து பைசா தண்டனை என்று வேடிக்கையாக சொல்லுவார். சமீபத்தில் கூட திருவல்லிக்கேணியில் அப்பாவின் வீட்டில் குடியிருக்கும் என் தம்பி ராஜுவின் வீட்டுக்கு சென்றிருந்த போது ஒரு வயதான ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் 'உன் அப்பா என்னை அன்புடன் 'ஐயா' என்று அழைப்பார். படிப்பறிவில்லாத எனக்கு கூட அவ்வளவு மரியாதை கொடுத்து அவர் பேசுவது ஆச்சரியமாக இருக்கும்.' என்று கண் கலங்கினார். அதே சமயம் ஆங்கிலத்தில் அவரது புலமை பிரமிக்க வைக்கும். எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் அதற்கு பொருள் மட்டும் அல்ல, அது எங்கிருந்து வந்தது? அதாவது அதன் 'ரூட்' என்ன என்றும் சொல்லுவார். அவர் பைபிளிலிருந்து வரிகளை எடுத்து சொல்லும் போது என் கணவர் பென்னெட்டுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
Click Here Enlargeஅப்பாவின் 'ஸர்வலகு' கல்பனை ஸ்வரம் மிகவும் பிரசித்தம். கொக்கி கொக்கியாய் ஸ்வரங்கள் குபுகுபு என்று வரும். என் சின்ன வயதில் நடந்த ஒரு விஷயம் இன்னும் பசுமையாக என் மனதில் இருக்கிறது. திருவல்லிக்கேணிக்கு வர பஸ்ஸூக்காக ஒரு பஸ் நிறுத்தத்தில் அவரும் நானும் நின்றிருந்தோம். அப்பா கையில் கண்டச் சாபு போட்டுக் கொண்டு மெல்லிய குரலில் ஸ்வரம் போட்டுக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. நான் சின்னவள் தானே! பொறுமை இழந்து 'எந்த பஸ்ஸூக்காக காத்திருக்கிறோம்பா?' என்று கேட்டேன். 'பதிமூன்றாம் எண்' என்றார். நாங்கள் வந்து நின்றதிலிருந்து பத்துக்கும் மேல் பதிமூன்று எண் வந்து போய் விட்டது. அவர் அதை கவனிக்கவே இல்லை. இப்போது நினைத்தாலும் அவருடைய 'concentration level' பிரமிக்க வைக்கும். அதே மாதிரி என் சகோதரன் ராஜு தன்னுடைய அனுபவம் ஒன்றை அடிக்கடி சொல்லி ஆச்சரியப் படுவான். அப்பா ரயிலில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்து இசை சம்பந்தமான புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டு இருந்தாராம். படித்து முடித்து விட்டு நிமிர்ந்த போது முதுகு பக்கத்தில் தொப்பமாக நனைந்திருந்தது. பலத்த மழை அடித்து அவர் உடை ஈரமானதை கூட உணராமல் அவ்வளவு முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த இயலுமா என்றூ பிரமிப்பாக இருந்தது என்பான்.

அப்பாவை 'ஏகசிந்தாகிரஹி' என்றும் சொல்வார்கள். அதாவது ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டால், ஒரு முறை படித்தால் போதும் அப்படியே அதை முழுதும் மனதில் வாங்கிக் கொண்டு விடுவார். தமிழ் நாடு அரசாங்கம் அவரை ஊர் ஊராக சென்று வெளிவராத பாட்டுக்களைத் தேடி கண்டு பிடித்து வர அனுப்பியது. அப்போது ஒரு சிலர் அவரை தான் பாடும்போது டேப் பண்ணக் கூடாது, நொடேஷன் எழுதக் கூடாது என்று கட்டளைப் போடுவார்களாம். அதனால் அவர்கள் பாடுவதை மனதில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் அப்படியே நொடேஷன் எழுதி விடுவாராம்.

முதல் முறை அமெரிக்கா சென்று வந்த போது அன்றைய பாப் பாடல்களை இசைத் தட்டு வடிவில் வாங்கி வந்ததோடு 'It Happened One Night', ஹிட்ச்காக்கின் 'Rebecca' போன்ற அன்றைய ஹிட் ஹாலிவுட் படங்களின் வசனங்களை புத்தக வடிவில் கொண்டு வந்து கொடுத்தார். சென்னை மவுண்ட் ரோடில் 'எலிஃபண்ட்ஸ்டைன்' என்று ஒரு தியேட்டர் இருந்தது. அதில் 'My Fair Lady' 'African Lion' போன்ற படங்களுக்கும் எங்களை சிறுவயதாக இருக்கும் போது அழைத்துப் போனது நன்றாக நினைவில் இருக்கிறது. அவற்றை ஆர்வமாக படித்ததும், பார்த்ததும் தான் பின்னால் என்னை எழுத தூண்டியதோ என்று எனக்குள் கேள்வி உண்டு.

அப்பா அமைதியானவர். எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டார். கடமை, உழைப்பு, அறிவு விருத்தி இவை தான் அவருடைய தாரக மந்திரம். அவருடைய அறுபது வயதில் தான் அவர் பிரபலமானார். மட்ராஸ் ம்யூஸிக் அகாடமி டிசம்பர் சீசன் ஒன்றில் ஒரு மாலையில் திரு செம்மங்குடி ஸ்ரீனிவாஸய்யர் பாட வேண்டும். அவருக்கு உடல் நலம் சரியாக இல்லை. 'இராமநாதன் என்று ஒருத்தர் அத்புதமாக பாடுகிறார். என்னிடத்தில் அவரைப் பாட வையுங்கள்.' என்று சொல்ல அன்று செம்மங்குடிக்குப் போட்டிருந்த பிரபல பக்க வாத்தியங்களுடன் அப்பா பாடினார். 'இது யார்? சர்வ லகு ஸ்வரங்களுடன், இத்தனை அழுத்தமான பாட்டு பாடுபவர்?' என்று ரசிகர்களை ஏறெடுத்துப் பார்க்க வைத்தார். அதன் பின் அவருக்குக் கிடைத்த பட்டங்கள் ம்யூஸிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி', தமிழ் இசை சங்கத்தின் 'இசைப் பேரறிஞர்', மதுரை சமாஜம் அளித்த 'கான கலா ப்ரவீனா', தமிழ் நாட்டு அரசாங்கம் அளித்த 'கலைமாமணி', திருவனந்தபுரம் ஸ்வாதி திருநாள் சங்கீத சபாவின் 'ஸ்வாதி திலகம்'. இவற்றுடன் இந்திய அரசாங்கம் சங்கீத நாடக அகாடமி ஃபெலோஷிப் அன்றைய துணை ஜனாதிபதி கையால் அப்பாவிற்கு அளிக்கப் பட்டது.

நான் எந்த ஊருக்குப் போனாலும், நாட்டுக்குப் போனாலும் கட்டாயம் 'நான் உன் அப்பாவின் ஸ்டூடண்ட்' என்று ஒரு சிலராவது அறிமுகம் செய்துக் கொள்வார்கள். நான் சில வருடங்களுக்கு முன் முழு நேர வேலையும் பார்த்து வந்ததால் யாருக்கும் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. அப்பா அதை அறிந்த போது 'நம் வித்தையை இன்னொருவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நீ என்ன செய்கிறாய் என்பதை விட அடுத்த தலைமுறைக்கு நீ என்ன விட்டு விட்டுப் போகிறாய் என்பது ரொம்ப முக்கியம்' என்று வலியுறுத்தியதால் இன்று எனக்கு தென் கலிஃபோர்னியாவில் நிறைய மாணவ மாணவிகள். ஒரு முறை ஒரு சிறு பெண் அப்பாவிடம் வந்தாள். ஒரு வித்துவான் பெயரை சொல்லி 'அவர் எனக்கு சுட்டுப் போட்டாலும் சங்கீதம் வராது என்று சொல்லி விட்டார்.' என்று அழுதாள். அப்பா அந்த நிமிடமே அவளை உட்கார வைத்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார். 'சங்கீதம் வராது என்று யாருமே இல்லை.' என்பது அப்பாவுடைய தீர்க்கமான அபிப்ராயம். அத்தோடு ஒரு சின்னஞ்சிறுசு பாடினால் கூட எதிரில் அமர்ந்து முழுவதுமாக கேட்டு அதில் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் போக மாட்டார். இன்று அவருடைய மாணவ மாணவிகள் உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கிறார்கள். என் சகோதரி பானுமதி சிங்கப்பூரில் 'ஆலாபனா' என்ற மிகப் பெரிய இசைப் பள்ளி நடத்துகிறாள். ஒரு சகோதரி வித்யா ஹரிஹரன் திருவண்ணாமலையில் அரசாங்க இசைப் பள்ளியின் தலைமை யாசிரியை. வானதி ரகுராமன் உலகமெங்கும் பறந்து நாட்டியங்களுக்குப் பாடுகிறாள். அவருடைய பேரக் குழந்தைகள் ஆனந்த் பென்னெட், சுசரித்ரா, கல்பனா என்ற பவித்ரா, லாவண்யா என்று அனைவரும் இன்று இசையை முன்னதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யேல் பல்கலை கழகத்தில் மாஸ்டர்ஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு அமெரிக்கர் நியூ ஹேவனில் இருந்து அப்பாவிடம் கற்க வெஸ்லியன் (Wesleyan University) இருக்கும் மிடில் டவுனுக்கு (Middle Town) அடிக்கடி வருவார். அவருடைய வீணை வாசிப்பு மிகவும் நுட்பமாக இருக்கும். 'இவனை சாதாரணமாக நினைத்து விடாதே. வெஸ்டர்ன் ம்யூஸிக்கில் பெரிய ஆள். டிரம்ஸ் வாசிப்பவன். ரத்தத்திலேயே லயம் ஊறியிருக்கிறது. ஆனால் வீணையை கையாளும்போது எவ்வளவு அமைதியாக, நுட்பமாக இருக்கிறது என்று கவனி.. இவன் முதலில் வீணையில் கற்றுக் கொண்டதே தோடி வர்ணம் தான் என்றால் பார்த்துக் கொள்..' என்று அப்பா அந்த அமெரிக்கனைப் பற்றி சொன்னார். அடுத்த முறை அப்பா என்னைத் தம்பூரா மீட்ட சொல்லி தியாகையரின் சாரமதி ராகத்தில் 'மோட்சமு கலதா' கிருதியைப் பாடிய போது அவர் எதிரில் அமர்ந்திருந்த அந்த அமெரிக்கன் பொருள் விளங்காவிட்டாலும் அப்பாவின் இசையில் மனமிளகி கண்ணில் நீருடன் அதை கேட்டுக் கொண்டிருந்த கணம் தான் நானும் அவரை மனதால் வரித்துக் கொண்டேன். பின்னாளில் அந்த அமெரிக்கன் அப்பாவின் பிரியத்துக்குரிய மாப்பிள்ளையும் ஆனார். என் பெயருக்குப் பின்னால் 'பென்னெட்'டும் சேர்ந்துக் கொண்டது.

அப்பாவுக்கு மிகவும் ராசியான கை. அவர் ஆரம்பித்து வைத்த பல விஷயங்கள் இன்னும் தொடர்ந்து நடக்கின்றன. இன்று க்ளீவ்லாண்டில் வருடா வருடம் நடக்கும் தியாகராஜா உத்சவத்தில் அப்பா தான் முதல் கச்சேரி. அது போல் மதுரை ராகப்ரியா இன்றும் அப்பாவை வருடா வருடம் நினைவுக் கொள்கிறது. சென்னையிலிருந்து வெளியாகி மிக பிரபலமான 'சங்கீதா காசட்டு'களிலும் முதல் முதலாக அப்பா தான் பாடினார். பின்னால் சங்கீதா காசெட்டில் பாடாதவர்களே கிடையாது.

'போர் அடிக்கிறது' என்று யார் சொன்னாலும் பிடிக்காது. அப்படி சொன்னால் 'புதிதாக ஒரு வாத்யம் வாசிக்கக் கற்றுக் கொள். புதியதாக ஒரு மொழி கற்றுப் பழகு. உலகில் புதியதாக கற்க எத்தனை விஷயங்கள் இருக்கின்றன?' என்பார். 'போர்' என்ற வார்த்தையையே அகராதியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்பார். அப்பாவிற்கு மிகப் பரந்த அளவில் எல்லா சப்ஜெக்ட்களிலுமே ஆர்வம் உண்டு. நான் சிறுகதை எழுதுகின்றேன் என்ற காரணத்தினால் மொழி பெயர்க்கப் பட்ட அயல் நாட்டு சிறுகதைகளிலிருந்து எதையும் விடாமல் கூர்ந்து படிப்பார். ஒரு சகோதரி டாக்டர் பத்மா 'நம்பர் தியரி' பற்றி ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த போது அதைப் பற்றி அவளிடம் கேட்டு தெரிந்துக் கொள்வார். இசை சம்பந்தமாக எந்த கேள்வி கேட்டாலும் உடனே ஒரு என்சைக்ளோபிடியோ மாதிரி பதில் சொல்ல அவரால் தான் முடியும். அதே சமயத்தில் கர்னாடக சங்கீதம் அதிகம் பரிச்சயம் இல்லாத என்னுடைய சகோதரி லதாவின் கணவர் ராதாகிருஷ்ணனுடன் மணிக் கணக்கில் இசையைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் உரையாடல் நடத்தியதை அவர் இன்றும் ஆச்சரியமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்பாவிடம் ஒரு தடவை 'உங்கள் வெற்றிக்கு என்ன காரணம்?' என்று கேட்டேன். ஒரு புன்சிரிப்புடன் 'உன் சப்ஜெக்டில் உனக்குத் தெரியாததே இருக்கக் கூடாது.' என்று பதில் சொன்னதை மறக்க முடியுமா?

எங்கள் குடும்பத்தினர் ஒன்று சேரும் போது எப்போதும் அப்பாவைப் பற்றி பேச்சு வந்து விடும். அவரைப் போல ஒரு நாளாவது வாழ முடியுமா? என்று எங்கள் எல்லோருக்கும் சந்தேகம் தான். யாரைப் பற்றியும் எந்த விதமான குறையும் சொல்லாமல், ஆழமாக கடல் மாதிரி அறிவு பெற்றும் நிறைகுடமாக, அடக்கமாக, அமைதியாக இருக்க முடியுமா? அவருடைய வாழ்க்கையை எதிர் கொண்ட விதத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால் திருவள்ளுவரின் 'வேண்டுதல் வேண்டாமை'-யோடு இருக்க வேண்டும் என்பது தான். அதாவது விருப்பு, வெறுப்பு இன்றி எதையும் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி ஒட்டாமல் தள்ளி நிற்க தெரிந்துக் கொண்டவர். அப்படி அவரை இருக்க விட்ட எங்கள் தாயார் கௌரி ராமனாதனையும் நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம்.

அப்பாவுடன் தோழமைக் கொண்ட திருவையாறு கிருஷ்ணன் இப்போது ஃபுல்லர்டினில் (Fullerton) வசிக்கிறார். அவர் அருமையாக ஒரே வரியில் அப்பாவைப் பற்றி சொன்னது. 'எத்தனை எத்தனையோ ஆலம் விதைகள் விழுந்து ஆலமரமாக உருவாகின்றன. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அடையாறு ஆலமரம் உருவாக முடியும். டாக்டர் எஸ். ராமநாதன் அப்படிப் பட்ட அடையாறு ஆலமரம்.'

'தமிழிசை இருக்கும் வரை எஸ். ராமனாதனின் பெயரும் சரித்திரத்தில் இருக்கும்' என்று அப்பா இறந்த உடன் ஒரு கட்டுரையில் இசை உலகம் மிகவும் மதிக்கின்ற சமீபத்தில் மறைந்த திரு டி.எஸ். பார்த்தசாரதி எழுதியிருக்கிறார். இது நூறு சதவீதம் உண்மை தான் என்று டாக்டர் எஸ். இராமநாதனையும் அவருடைய இசை உலகத் தொண்டையும் அறிந்தவர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.

கீதா பென்னெட்
Share: 




© Copyright 2020 Tamilonline