Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
இலக்கியம்
தந்தைதாய் இருந்தால்....
- பெரியண்ணன் சந்திரசேகரன்|மே 2005|
Share:
Click Here Enlargeசிவனை மும்மூர்த்திகளுள் மிகப் பெரியவனென்றும் ஆக்குவான் காப்பான் அழிப்பான் என்றும் பூதப்படை சூழ இருப்பவனென்றும் நள்ளிருளிலே சுடுகாட்டில் நாட்டியம் ஆடுபவனென்றும் பாம்பைக் கச்சையாக அணிந்தவன் என்றும் பாற்கடலில் தோன்றிய நஞ்சைத் தான் ஒருவனே உண்டு தாங்கியவனென்றும் கேட்டு அவன் அளப்பரும் வலிமையையும் கோலத்தையும் எண்ணி வியப்புற்று அவனிடம் தம்மைக் காக்க வேண்டுவது சைவ நெறியாளர் இயல்பு. ஆனால் எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு உண்டே...

பெச்சமாதேவி என்று ஒரு பெண்மணி இருந்தார். அவர் சிவபிரான் மேல் தாய்போலும் மிகுந்த அன்புடையவர். அந்த அம்மையார் அவ்வாறு சிவபெருமானை அன்போடு வழிபட்டு வருகையிலே “சிவனைப் பாம்பை அணிந்தவனென்றும் நஞ்சை உண்டதால் கழுத்து நீலநிறம் பாய்ந்தவனென்றும் சொல்கிறார்களே. என்ன கொடுமை! இந்தப் பொன்மேனி உடைய அந்தச் சிவனுக்கு என்னைப் போல் தாய் இருந்தால் அவனை இப்படிப் பாம்பை அணியாகப் பூணவும் நஞ்சை உண்ணவும் விட்டிருப்பார்களா?” என்ற எண்ணம் தோன்றியது. “பாவம் இரங்கத்தக்கவன் அந்தத் தாயிலி!” என்று உருகினார்.

மேலும் நாயன்மார்களுள் சிலரும் மற்றவரும் சிவனை நடத்திய முறைகளையும் கேட்டிருப்பார். அதனால் கோபாலகிருட்டிண பாரதியார் (1850) பாடியதுபோல் பாடியிருப்பார்:

இராகம்: சண்முகப்பிரியா தாளம்: ஆதி

பல்லவி

தந்தைதாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்தத்
தாழ்வெல்லாம் வருமோய்யா - பெற்ற (தந்தைதாய்)

அனுபல்லவி

அந்தம் மிகுந்த சீர் அம்பலவாணரே!
அருமையுடனே பெற்றுப்
பெருமையுடனே வளர்த்த (தந்தைதாய்)

சரணம்

கல்லால் ஒருவன் அடிக்க - உடல் சிலிர்க்கக்
காலில் செருப்பால் ஒருவேடன் அங்கே உதைக்க
வில்லால் ஒருவன் அடிக்க - காண்டீபம் என்னும்
வில்லால் ஒருவன் அடிக்கக்
கூசாமல் ஒருவன் கைக்கோடாரியால் வெட்டக்
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா எனத்திட்ட
வீசி மதுரைமாறன் பிரம்பால் அடிக்க - அந்த
வேளை யாரை நினைந்தீரோ, ஐயா! - பெற்ற (தந்தைதாய்)

என்று பாடியிருப்பார்.

ஆமாம். சாக்கிய நாயனார் புத்தமதக் குழுவில் இருந்துகொண்டு தம் குழுவினர் தாம் சிவனை வழிபடுவதை அறியாமல் இருக்கத் தூரத்திலிருந்தே சிவ இலிங்கத்தின்மேல் கல்லைப் பூவாக நினைந்து வீசியடித்தார் நாடோறும்!

கண்ணப்பன் என்னும் வேடன் திருப்பதிக்கு அருகில் உள்ள காளத்தி மலையில் சிவ இலிங்கத்தின் கண் இரத்தம் வார்வது கண்டு தன் ஒருகண்ணைப் பிடுங்கி இட்டான்; மறுகண்ணும் குருதி ஒழுகுவது கண்டு அடையாளத்திற்குத் தன் காலைச் செருப்போடு இலிங்கத்தின் மேல் உதைத்து நின்றவாறு தன் மறுகண்ணைப் பிடுங்க முயன்றான்!

பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் பாசுபதம் என்னும் அம்பைச் சிவனிடம் தவமிருந்து பெற முயலும்பொழுது சிவன் உமையோடு அங்கே வேடனாகத் தோன்றினான்; அருச்சுனன் வேட்டையாடும் காட்டுப்பன்றியைத் தானும் வேட்டையாட முயன்று அவனோடு வம்பு வளர்த்தான்; அப்பொழுது ஏற்பட்ட போட்டியில் அருச்சுனன் தனது காண்டீபம் என்னும் வில்லால் சிவனை அடித்தான்!

சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தில் இடையில் கிழவனாகப் புகுந்து நிறுத்தித் தனக்கு அவர் பரம்பரை அடிமையென்று உரிமைகொண்டாடிய பொழுது சுந்தரர் கிழவனைப் பித்தா என்று திட்டினார்!

மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்த பாண்டியன் மதுரையில் வெள்ளம் புகுவித்த சிவன் அணைகட்டக் கூனனாகக் கூலிக்குச் சேர்ந்து வேலை செய்யாத பொழுது அவனை முதுகிலே பிரம்பால் அடித்தான் பாண்டியன்!
குழந்தை கண்டெடுத்தது

இப்படியாகப் பெச்சமாதேவியார் உள்ளம் நெக்குருகிச் சிவனை நினைந்திருக்கையிலே காப்போரில்லாத குழந்தையொன்றைக் கண்டெடுத்தார்கள். அக்குழந்தையைச் சீராட்டி வளர்க்கையில் அது மிகுந்த நோய்வாய்ப் பட்டது. நோய் முற்றிக் குழந்தை பிழைப்பது கடினம் என்னும் தருணத்தை அடைந்தது.

அதுகண்டு மனம்பொறாத பெச்சமாதேவியார் குழந்தைக்கு முன் தாம் சாகவேண்டும் என்று உறுதிபூண்டார். சாக முயலுமுன் சிவனிடம் திருநாவுக்கரசர் போலவே வேண்டியிருப்பார்:

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்;இம் மூவுலகுக்கு
அன்னையும் அத்தனும் வாய், அழல்வண்ணா, நீஅலையோ?
உன்னை நினைந்தே கழியும்என் ஆவி! கழிந்ததன்பின்
என்னை மறக்கப் பெறாய்!எம் பிரான் உன்னைநான் வேண்டியதே (தேவாரம்)

[முகமன் = முகப்புகழ்ச்சி; அத்தன் = அப்பன்; அலையோ = அல்லாயோ?]

தம் எண்ணப்படித் தம் ஊட்டியை (தொண்டையை) வாளால் அறுக்க முயன்றார்...

அப்பொழுது சிவபிரான் பெச்சமாதேவியார் முன் தோன்றி “அம்மையே! நும் அன்பை வெளியிடவே இவ்வண்ணம் யாம் குழந்தையாத் தோன்றினோம்! உமக்கு வேண்டிய வரத்தைக் கேளும்!” என்றார்.

பெச்சமாதேவியோ “ஐயனே! உமது திருமேனி சுகத்துடன் இருக்க வேண்டும்!” என்றார்!

சிவனும் “அங்ஙனமே ஆகுக!” என்று சொல்லி “இனி நுமக்கு அம்மவ்வை என்ற பெயர் வழங்கட்டும்!” என்று கூறி மறைந்தார்.

அம்(மை) அவ்வை என்ற இரண்டும் சேர்ந்த இந்தக் கேட்டிராத ஆனால் மிக இனிய பெயரைக் கவனிக்கவும். அதை நம் குழந்தைகளுக்கு இடுவது சாலச் சிறந்தது.

குறிப்பு: மேற்சொன்ன “தந்தைதாய் இருந்தால்” என்ற பாட்டை S. சௌமியா அவர்கள் இனிமையாகப் பாடியுள்ளதை அமுதம் (Amutham Inc.) வெளியிட்டுள்ள சண்முகப்பிரியா (“Shanmukapriya”) என்ற தொகுப்பில் கேட்டு உருகலாம்.

தகவல் உதவி: “அபிதானசிந்தாமணி -The Encyclopedia of Tamil Literature”, சிங்காரவேலு முதலியார் (1899), Asian Educational Services, Reprint 1983

பெரியண்ணன் சந்திரசேகரன்
அட்லாண்டா
Share: 




© Copyright 2020 Tamilonline