Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஐந்தாவது குளிர்காலம்
அம்மா பேசினாள்
- ஜெயந்தி சங்கர்|மார்ச் 2005|
Share:
Click Here Enlargeஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. "எங்கபாட்டி சொல்லுவா, ஒருதடவ தட்டிப்போச்சுன்னா தொடர்ந்து நாலு வருஷம் தட்டும்னு, சரியாத்தான் இருக்கு. பாரேன், நாலு வருஷமா நம்மாத்துல தீபாவளியே கொண்டாடல்ல. இந்தவிச எல்லாருமே கூடியிருக்கறதே மனசுக்கு ரொம்ப நெறவா இருக்கு இல்ல" அமெரிக்காவிலிருந்து நேற்று வந்திருந்த அண்ணாவுக்குப் பிடித்த அசோகா அல்வாவைக் கிளறிக்கொண்டே அம்மா ஹரிணியிடம் சொல்லிக்கொண்டிருந்தது கிரியின் காதில் விழுந்தது. தீபாவளி மருந்து, வெந்நீர், எண்ணைக்குளியல், கோடித்துணி, மத்தாப்பு என்று அம்மாவின் பேச்சு பலதிக்கிலும் விரிந்தது. பட்டாசு கொளுத்தமுடியாத சிங்கப்பூரின் சட்டத்தை விமரிசித்தாள் தன் பெண்வயிற்றுப் பேரனுக்காக. அந்த ஏழு வயது வாண்டு கையில் மத்தாப்புடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. கிரி வீடு திரும்பியதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி தான். இருந்தும், அவனிடம் மட்டும் ஏனோ இன்னமும் சரியாக முகம் கொடுத்துப் பேசவேயில்லை. கிரி ஜெயிலுக்குப் போனதிலிருந்தே அப்படித்தான்.

மூவரில் கிரிதான் படிப்பில் புலி. அப்போது அவனுக்கு ஒன்பது வயது. பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த மூத்த அண்ணாவை இந்தியாவிலேயே விட்டுவிட்டு ஹரிணி யையும் கிரியையும் மட்டும் சிங்கப்பூருக்கு அழைத்து வந்திருந்தனர். இரண்டரை வருடங்கள் தேசியசேவையில் போய்விடும் என்று அப்பாவும், பிள்ளை முகாமில் கஷ்டப்படக்கூடாது என்று அம்மாவும் நினைக்கவே கிரிக்கு நிரந்தரவாசத் தகுதிக்கு விண்ணப்பிக்கவில்லை. உயர்தரத் தனியார் பள்ளியில் மாதமாதம் நூற்றுக்கணக்கில் வெள்ளிகள் செலவு செய்து படிக்க வைத்தனர்.

கடைக்குட்டி என்பதால் மூன்றுபேரில் அம்மாவின் செல்லத்தை அதிகம் பெற்றவன் கிரி. அவனுள் இருந்த போர்க்குணம் மற்ற இருவரையும்விட நன்றாகப் படிக்க அவனுக்கு உதவியது. ஒரே ஒரு மார்க் குறைந்தாலும் கொளுத்திப் போட்ட பட்டாசாக வீட்டில் வந்து வெடிப்பதும், அவனை முந்திக்கொண்டுவிட்ட மாணவனைக்கண்டு பொறாமைப்படுவதும் வயது கூடக் கூட அதிகமானது. அம்மா அவனது முன்னேற்றதுக்கு உதவுவதாக நினைத்து அவனது வேகத்தை வளர்க்க உதவினாள். கிரியின் அந்தக்குணங்கள் பேராசையில் போய் முடியுமென்று அந்நாளில் அவளே நினைத்திருக்கமாட்டாள். நல்லவேலையிலும் அமர்ந்து நான்கு வருடங்கள் ஆனது. கிரியின் பேராசையே உச்சியை எட்டக் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியிருந்தது.

“ம், சொல்லு கிரி, அடுத்து என்ன பண்லாம்னு இருக்க?” என்றபடி கிரியின் அருகே சோபாவில் உட்கார்ந்துகொண்டான் அண்ணா. பத்தே நாளைக்குக் குடும்பத்தை விட்டுவிட்டு அம்மாவின் பிடுங்கலுக்காக வந்திருந்தான். "என்னோட நியூஜெர்ஸிக்கு வந்துடுடா" என்னும் வழக்கமான அவனின் வாஞ்சை காணாமல் போயிருந்தது. "ம், ·ப்ரெண்டோட நேத்திக்குப் பேசிண்டிருந்தேண்ணா, ஒரு 'ட்ராவல் ஏஜென்ஸி' ஐடியா வச்சிருக்கான். ஆக்சுவலி டோங்க் ஹ¤வா" என்று முடிக்கும் முன்பே "யாரு? ஆறுமாச முன்னாடி வெளில வந்தான்னு அப்பா சொல்லிண்டிருந்தாரே, அவனா?" பட் டென்று எழுந்துகொண்டே பேச்சை வெட்டினான். நிச்சயமின்றித் தலையசைத்த கிரியை முறைப்பின் மூலமே சுட்டெறிக்காத குறையாகப் பார்த்துவிட்டு மளமளவென்று மாடிக்குப்போய் விட்டான்.

டோங்க் ஹ¤வாவும் அட்னனும் இல்லா விட்டால் இன்றைய கிரியில்லை என்று அண்ணாவுக்கு எங்கே புரியப்போகிறது. அவனே தம்பியைப்பற்றித் தாழ்வாக நினைக்கும்போது மன்னிமட்டும் புரிந்து கொண்டு சிங்கப்பூருக்கு வந்து மச்சினனை வாழ்த்திவிடவா போகிறாள்?

அண்ணாவின் பேச்சைக் கேட்கவென்று சில நிமிடங்கள் தன் வாய்க்கு ஓய்வு கொடுத்திருந்த அம்மா "ஹரிணி, யாருடி அது டொங்க் ஹ¤வா?" என்று குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டது கிரியின் காதில் விழவே செய்தது. "அவனோட ஜெயில்ல இருந்த 'செல்மேட்'மா" என்றதுமே பேச்சை மாற்ற நினைத்தோ என்னவோ "இத நான் பாத்துக்கறேன். நீ அந்த ஏலக்காய உறிச்சு, ரெண்டு ஸ்பூன் சக்கரசேத்து மிக்ஸில பொடி” என்று ஏவினாள் அம்மா பெண்ணை.

மிக்ஸியின் ஓசையில் சமையலறைப் பேச்சும் தடைபட, கையிலிருந்த 'த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்'ஸை மேசையின் மீது வைத்துவிட்டு ஜன்னலையடைந்தான். தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த மிகவும் உயர்ரகத் தனியார் அடுக்குமாடி வீடு. அப்பாவின் சொந்த வீடாய் இருந்து கிரியின் வழக்கு, அபராதம், வங்கிக்குக் கொடுக்கப்பட்ட ஈட்டுத்தொகை என்ற காரணங்களுக்காக அவசரமாய் நட்டத்திற்கு விற்கப்பட்டு, அதே வீட்டில் வாடகைக்கு இருக்கும் நிலை. பதினைந்தாவது மாடி யிலிருந்து தூரத்தே தெரிந்தது சாங்கி சிறைச்சாலை, இருள்திரையில் ஒளிப் புள்ளிகளால் ஆன ஓவியமாய். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு யார் நினைத் திருப்பார், அதனுள் அவனின் வாழ்வின் நான்கு வருடங்கள் கழியப் போகிறதென்று.

தண்டனை விதிக்கப்பட்டு 'வொய்ட் காலர் க்ரைம்' என்ற முத்திரையோடு கிரி உள்ளே போனதிலிருந்து அவனை டோங்க் ஹ¤வா முதலில் விலக்கியே வைத்திருந்தான். அட்னன் தான் லொடலொடவென்று பேசித்தள்ளினான். அவனுடைய பேச்சு ஆரம்பத்தில் எரிச்சலைக்கொடுத்தாலும் கிரிக்கு நாளடைவில் வேண்டித்தானிருந்தது. மூன்றாவதாக வியாபாரத்தில் கூட்டுச் சேர்ந்தவனின் சூழ்ச்சியால் சிறைக்கு வந்திருந்தனர் இருவருமே. தன்னைவிட அவர்களது நிலை பரிதாபத்திற்குரியதென்று கிரி உணர்ந்தான். பழக்கமேயில்லாத உடலுழைப்பு அவனுக்கு மிகுந்த ஆயாசத்தைக் கொடுத்தது.

குழையாமல் பதமாக மல்லிகைப்பூவாய் வடித்தெடுத்த அம்மாவின் பச்சரிசிச் சாதத்திற்கு நேர் எதிராய், கால்வாசி வெந்த அரிசியைச் சாதமென்று பரிமாறினர். சைவ உணவென்று கேட்டதால் வெந்நீரில் போட்டெடுக்கப்பட்ட பெரிய இலைகள் கீரையென்று கொடுக்கப்பட்டன. அவனின் ஜீரணக்குழாய் 'வன்முறை' என்று முதல் சிலநாட்களுக்கு அலறலாய் அலறிப்பிறகு வேலை நிறுத்தமும் செய்து பார்த்தது. ஒரு மாதத்திற்குப் பிறகே வேறுவழியில்லாமல் பழகத் தொடங்கியது.

அம்மாவின் சமையல் அருமை அப்போது தான் கிரிக்குத் தெரிந்தது. மோர்க் குழம்பென்றால் உடன் பருப்புசிலியென்றும், வெங்காய சாம்பார் என்றால் உருளைக் கிழங்கு ரோஸ்ட் என்றும் கிரி ஆசைப் பட்டதையெல்லாம் இடுப்பொடியச் சமைத்து அவன் நாக்கைச் செழுமையாக அம்மா வளர்த்திருந்தாள். சீரக ரசத்துக்குப் பருப்புத்துவையல் செய்யவில்லையென்று அடம்பிடித்து, அவன் டேபிளில் சாப்பிட உட்கார்ந்தபிறகு விறுவிறுவென்று பருப்பை வறுத்து அரைத்துப் பரிமாறிய அம்மாவின் துவையலுக்கு நாக்கு ஏங்கியது. தொடர்ந்து, "இப்பிடிப் பண்ணிப்போட்டே அவனக் கெடுக்கற விசாலம் நீ" என்ற அப்பாவின் குரலும் காதுகளில் எதிரொலித்தது.

வீட்டு அறையில் துடைத்துப்போட்ட துண்டிலிருந்து அவிழ்த்த ஜட்டி முதற் கொண்டு எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுப் பள்ளிக்கும் கல்லூரிக்கும் போய்ப் பழக்கப்பட்டவனுக்குத் துணி துவைப்பது என்பது நினைத்து பார்க்க முடியாததாய் இருந்தது. ஆண்டியான அரசன் பிச்சையெடுக்கத் தெரியாமல் தவித்த தவிப்பு. "ஏம்மா, இந்தத் தடியனுக்கு விழுத்துப்போட்ட துணியக்கொண்டு வாஷிங் மெஷின்ல போடக்கூட முடியல்லியா? இவன நீ பேசாம என்எஸ்ஸ¤க்கே (தேசியசேவை) அனுப்பியிருக்கலாம்மா. டிசிப்ளினாவது வந்திருக்கும்" என்று எப்போதும் படபடக்கும் ஹரிணிக்கு "ஒன்னால முடிஞ்சா செய், ஒடனே கெடச்சது சாக்குன்னு அவனக் கரிக்காத" என்றுதான் பதில் கொடுப்பாள். அம்மாவாச்சு, பிள்ளையாச்சு என்று முணுமுணுத்துக் கொண்டே ஹரிணி கிளம்பிப் போய்விடுவாள்.

சிறையில் துளியும் பழக்கமேயில்லாத 'லாண்டிரி' செக்ஷனில் முதலில் வேலை கொடுக்கப்பட கிரி முழித்தான். அப்போது டோங்க் ஹ¤வாதான் தன் வேலையை முடித்துவிட்டு கிரியின் வேலையைப் பகிர்ந்து கொண்டான். ஒரே மாதத்தில் லாண்டிரி பழகியதும் சமையலறை வேலை கொடுக்கப்படவே, அங்கு மறுபடியும் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவ னாய்த் தவித்து அட்னனின் உதவியால் மெதுவாகப் பழகினான். அங்கு சமைக்கப் பட்ட அசைவ பதார்த்தங்களின் நாற்றத்தைச் சகிக்கத்தான் அதிகமாகச் சிரமப்பட்டான்.

கம்பிகளின் பின்னே யோசிக்க நிறையவே நேரம் கிடைத்தது. இருந்தும் கிரி ஆரம்பத் தில் தன்னிரக்கத்தில் தன்னைத்தவிர மற்ற எல்லாரையும் எல்லாவற்றையும் குற்றவாளி யாக்கிக்கொண்டே யோசித்தான். இதனால், கழிவிரக்கம் மிகுந்தது கண்ணீர் வரும்வரை. பெற்றவள் முதல் எல்லோரையும் மனதிற்குள் தன் நிலைக்கான காரணமாகக் கற்பித்துக் கொண்டு மற்றவர் மீது காழ்ப்புணர்ச்சியை வளர்த்துக்கொண்டான். அம்மாவின் செல்லம் கொடுத்த மகிழ்ச்சி மறைந்து அது அவள் தன்னைச் சரியாக வளர்க்காமல் காட்டிய அலட்சியமென்றே நினைக்கத் தலைப்பட்டான்.

ஒவ்வொரு மாதமும் ஹரிணி மட்டுமோ அல்லது அப்பாவும் ஹரிணியுமோ வந்தனர். அம்மா மட்டும் வரவேயில்லை. ஹரிணி தன் புக்ககத்திலிருந்து நேராக வந்துவிட்டு திரும்பும்போது பிறந்தவீட்டுக்குப்போய் அம்மாவிடம் விவரம் சொல்வாள். கிரிக்கு அப்போது இருந்து வந்த எண்ணத்திற்கு இசைவாய் அவளின் 'குற்றவுணர்வு' என்றே தோன்றியது. உண்மையில் செல்லப் பிள்ளையான அவனை அந்த நிலையில் காண அவளுக்குத் துணிவில்லை என்று விளக்கிக்கூறியதே அட்னன் தான். டோங்க் ஹ¤வாவும் அவனுமாகப் பேசிப்பேசிக் கரைத்தனர் கிரியின் மனதை.

கவனமாகவும் நேர்மையாகவும் இருக்கும் ஒருவனைச் சூழ்நிலையும் சுற்றமும் உற்றாரும் சிறைக்குள் தள்ள முடியாது என்னும் ஞானம் பிறக்க கிரிக்குப் பல மாதங்கள் எடுத்தன. முழுக்காரணமும் 'தானே' என்று உணர்ந்து, அம்மாவைக்காணத் தனக்கிருந்த விருப்பத்தையும் எழுதி ஹரிணியிடம் கொடுக்கச் சொன்னது அட்னன் தான். விடுதலையானபிறகு வாழ்வேயில்லை என்றிருந்தவனின் எண்ணைத்தை மாற்றி யதும் அவனும் டோங்க் ஹ¤வாவும்தான்.

அதுமட்டுமல்ல, வெளியேறியபின் இருக்கக் கூடிய சவால்களைப் பற்றியும் நிறையவே பேசினார்கள். அவர்களைச் சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளாத சாத்தியங்களை அவர்கள் அதிகம் அலசினர்.

ஒருமுறை ஹரிணி வந்த அன்று சிவராத்திரி. ஒவ்வொரு முறையும் சிவன் கோவிலுக்குச் சென்று நான்கு ஜாமப் பூஜையையும் பார்த்துவிட்டு வீடு திரும்பும் அம்மா கோவிலுக்கே போகவில்லை. கிரி வீட்டிற்கு வரும் வரை இனிப்பைத்தன் கையால் தொடுவதில்லை என்றும் அதுவரை கோபுர தரிசனம் மட்டுமே என்றும் அம்மா வேண்டிக் கொண்டிருந்தாக ஹரிணி சொன்னாள். கிரிக்கு உணர்ச்சித் தவிப்பில் தொண்டையடைத்தது.

அடுத்த மாதம் ஹரிணி வந்தபோது உடன் அம்மாவும் வந்தாள். ஒரு வார்த்தை பேசவில்லை. கிரியைப்பார்த்ததுமே கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர். கைகள் தன்னிச்சையாகக்கூடக் கண்ணீரைத் துடைக்கவில்லை. அம்மாவைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றிவிட்டது கிரிக்கு அன்று. அவன் பேசியதாவது அம்மாவின் காதுகளில் விழுந்ததா என்றும் அனுமானிக்க முடியவில்லை. அடுத்தமுறை கேவிக்கேவி அழுதுவிட்டுச்சென்றாள். பிறகு ஒவ்வொரு மாதமும் வந்ததில் லேசான கண்ணீர்வரை தேய்ந்தது. அப்போதும் ஒரு வார்த்தை பேசமாட்டாள். ஒருவருடம் ஆனதும்தான் ஹரிணி முகத்தைப்பார்த்துக் கொண்டு கிரிக்குச்சொல்ல வேண்டியதைச் சொல்ல ஆரம்பித்தாள். கடைசியாகக் கிளம்பும் போது மறக்காமல் அவனுக்குப் பிடித்த உணவுப் பொட்டலத்தையும், ஒரு புத்தகத்தையும் கொடுக்கச் சொல்வாள். புத்தகத்துக்குள் தனக்கு ஏதும் செய்தி இருக்குமா என்று ஒவ்வொரு முறையும் ஆராய்ந்து விடுதலைவரை ஏமார்ந்தான். தான் சொல்ல நினைப்பதையே புத்தகமாகக் கொடுத்து வந்தாள்.

“விடிஞ்சா தீபாவளி, சீக்கிரமே படுத்துண்டாதானே கார்த்தால ஸ்நானம் பண்ண ஏந்துக்கமுடியும், சிவன் கோவிலுக்குத்தான் போகணும். அப்பாகிட்டயும் சொல்லியிருக்கேன்". அண்ணாவிடம் சொல்வதைப் போல அம்மா கிரிக்குத்தான் சொன்னாள். சீக்கிரம் எழுவதென்றால் இன்னும் அவன் அழுவான் என்றே நினைத்திருந்தாள் போலும். எப்போது படுத்தாலும் விடியற்காலை நாலரை மணிக்கு எழுந்துவிடும் நல்ல பழக்கமும் அவனுக்கு வந்துவிட்டிருந்ததை பாவம் அவள் மகிழ்ச்சியில் மறந்துவிட்டாள்.

கிரி பேசாமல் தன் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டான். அவன் வீட்டிற்குத் திரும்பியதையே அம்மா தீபாவளியாகக் கொண்டாடுகிறாள். இருந்தும், நேருக்குநேர் மட்டும் பார்த்துப் பேசவே மாட்டேனென் கிறாள். பத்துநாட்களுக்கு முன்பு ஜெயிலுக்குக் கூட அப்பா மட்டுமே வந்திருந்தார், முகத்தில் அபரிமிதமான பூரிப்புடன். பார்த்ததும், கட்டித் தழுவிக்கொண்டு கிரியின் மனதைப் படித்ததைப்போல “உனக்குப் பிடிச்சதெல்லாம் சமச்சுண்டி ருக்கா. மொதல்ல வரதாதான் இருந்தா. கமான் கிரி, லெட்ஸ் கோ ஹோம்" என்று கையைப் பிடித்துக்கொண்டே காருக்கு வந்தார். தன் டீஷர்ட்டில் குத்திக்கொண்டு வந்திருந்த மஞ்சள் ரிப்பனையும்* நான் பார்க்கத் தவறி விடுவேனோவென்று ஒருமுறை சரியாகக் குத்தியிருக்கிறதாவென்று சரி செய்துகொள்வதைப்போல பாவனை செய்தார். அப்பாவின் குழந்தைபோன்ற குதூகலத்தை நினைத்து கிரிக்குக் கண்கள் பனித்தன.

சற்றும் எதிர்பார்க்கவில்லை. அம்மா மெள்ள பூனையைப்போல அறைக்குள் நுழைந்தாள். கிரி தன் கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் இருந்தான். போர் வையை நன்றாக இழுத்துப் போர்த்திவிட்டு, அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்துவிட்டு அறையை விட்டுச் சென்றாள். பொங்கிய உணர்ச்சியைக் கட்டுப்படுத்த எச்சிலைக்கூட்டி விழுங்கிக் கொண்டது அரையிருட்டிலும் தெரிந்தது. சட்டென்று கையை நீட்டி அம்மாவின் கையைப் பிடித்துவிட எழுந்த உத்வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைத்துப்பார்த்தான் கிரி. விடாமல் அடித்த போனை அம்மாதான் சமையலறை யிலிருந்து ஓடி வந்து எடுத்தாள். "ஹலோ, யாரு ரகுவா? எப்பிடிப்பா இருக்க? அங்கிள் கிட்ட பேசணுமா, இதோ கூப்டறேன்", அப்பா கையில் போனைத் திணித்துவிட்டுச் சமையலைத் தொடரப் போய்விட்டாள். ஏதோ வேலை விஷயமாக ரகுவின் அப்பா சொல்லச்சொன்னதை அப்பாவிடம் சொன் னான். அப்பாவும் ஒற்றைச் சொல்லை இடையிடயே உதிர்த்தபடித் தீவிரமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். போனை வைக்கு முன்னர் "கிரிகிட்ட பேசறையா ரகு?" என்று சொல்லிவிட்டு கிரியைக் கையசைத்துக் கூப்பிடவே வேறு வழியில்லாமல் போனை வாங்கினான். "ஹலோ..." பதில் சொல்ல எதிர்புறத்தில் ஆள் இருக்கவில்லை. கிரியின் முகத்தில் பரவிய அவமானத்தையும் ஏமாற்றத்தையும் அப்பா உணர்ந்து கொண் டது அவர் முகத்திலேயே தெரிந்தது. "சியர் அப் கிரி. இதுக்கெல்லாம் சோர்ந்து போகதடா" என்று தோளில் தட்டிக் கொடுத்தார் போகிறபோக்கில்.
நான்கு வருடங்களுக்கு முன்பு பத்து நிமிடத்திற்கு ஒரு போன் செய்து குழைந்தவன் ரகு. தன் வேலை ஆகவென்றும் அரட்டையடிக்கவென்றும் நூறுமுறை பேசுவான். அவன் இருந்த வேலையே கிரியின் முயற்சியில் கிடைத்ததுதான். லேப்டாப் வாங்கவென்று ஒரு நாள் லீவெடுத்துக் கொண்டு அவனோடு போய்வந்தான் கிரி. இன்று தன்னோடு பேசுவதைக் கேவலமாய் நினைக்கிறான். சுற்றிச்சுற்றி வந்த நட்பில் எத்தனை இனிமேல் தன்னை மதிக்கக் கூடும் என்று கிரியின் மனம் கணக்கிட்டது.

விடிந்ததுமே ஸ்டீரியோவில் நாமகிரிப் பேட்டையின் நாதஸ்வரம். எல்லோரையும் எழுப்ப அம்மாவின் இனிய வன்முறை அது. பின்னிரவில் வந்த ஹரிணியின் கணவன் வந்து மனைவியையும் மகனையும் தீபாவளியன்று மாலையில் மீண்டும் வருவதாகச் சொல்லிக் கூட்டிக்கொண்டு போய்விட்டிருந்தான். மங்கல ஸ்நானம் செய்து புத்தாடையுடுத்திக் கொண்டு காரில் கோவிலுக்குக் கிளம்பினார்கள். அம்மா வாங்கியிருந்த நேரு-குர்த்தா கிரிக்கு மிகவும் பாந்தமாக இருப்பதாக அண்ணா சொன்னதும் அம்மா திரும்பி ஒருமுறை ஏறயிறங்க அவனைப் பார்த்துக் கொண்டாள்.

கோவிலில் தெரிந்தமுகங்கள் நிறைய கண்ணில் பட்டன. பெரும்பாலும் கவனமாகப் பேசுவதைத் தவிர்த்தன. கிரி எதிர்பார்த்ததே. பேப்பர்களில் போட்டோவைப் போட்டு மிகவும் பிரபலமாகியிருந்தார்கள் கிரியை. ஆகவே, புன்னகைத்தவர்களும் முகமன் தெரிவித்தவர்களும் ஒன்றும் விவரம் அறியாதவர்களில்லை. அவர்கள் யதார்த்தவாதிகள் என்றே அவனுக்குத் தோன்றியது.

வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது காரில் அம்மா "கவனிச்சேளா, அந்த நாடகசபா செக்ரடரியும் ஆத்துக்காரியும் சட்டுன்னு பாக்காதமாதிரி போறா. அவா பொண்ணுக்குப் போன மாசம்தான் சீமந்தம் நடந்திருக்கு. நம்மளக் கூப்டவேயில்ல..." என்று சர வெடியாகப் படபடக்க, பேசாமல் அப்பா 'உம்' கொட்டியபடியே வந்தார். இதே பெரிய மனிதர் தன் ஒரே பெண்ணிற்கு கிரியைக் கேட்டு நான்கு வருடங்களுக்கு முன்பு வந்தவர். அலுக்காமல் போனில் அம்மாவிடம் கேட்டவர். "உங்க கிரிதான் எங்காத்து மாப்ளன்னு நாங்க தீர்மானிச்சுட்டோம். எங்காத்து மாமாக்கு கிரிமேல ரொம்ப நல்ல அபிப்பிராயம். பெரிய ஆளா வருவான்னு அடிச்சு சொல்றார்" என்று அவரின் மனைவியும் அம்மாவை அவ்வப் போது ஐஸ்வைத்து வந்தார்.

"கிரி, இதையெல்லாம் நீ மறந்துடு. போனதெல்லாம் போகட்டும். வேணா ஒரு ப்ரேக் எடுத்துக்கோ. இல்ல, மேல எம்பிஏ படி. எதுவேணாச் செய். டோண்ட் கேர் அபௌட் தீஸ் பீப்பிள்" என்று அக்கறை யோடு சொன்னார். "அப்பா, நான் தெளிவா இருக்கேன். நான் டோங்க் ஹ¤வா ஏஜென்ஸிலயே இருக்கேன். தப்புசெஞ்சு திருந்தின வா, தப்பேசெய்யாம சிக்கிண்டவான்னு ஜெயில்ல நிறைய நல்லவாளும் இருக்காப்பா. அவாளுக்கெல்லாம் கூட நாங்க வெளில வந்ததும் வேல போட்டுத்தரப்போறோம். எங்களுக்கு முழு நம்பிக்கையிருக்கு. இனிமே நான் யாருக்கும் மனக்கஷ்டத்தைக் கொண்டு வரமாட்டேம்பா. நீங்க பேங்குக்குக் கட்டினதையெல்லாம் கூட சீக்கிரமே திருப்பிக் கொடுத்துடுவேன்" என்றான் கிரி காரை ஓட்டிக்கொண்டே.

அம்மாவின் கண்கள் புது ஒளியுடன் பளபளவென்று மின்னின காலைவெயிலில்.

ஒவ்வொருவராக இறங்கி லி·ப்டை அடைந்தனர். கடைசியாக இறங்கிய அம்மா கிரியின் கையை அழுத்தினாள். அந்த அழுத்தம் அதுவரை பேசாத ஆயிரம் வார்த்தைகளைப் பேசியது. கண்கள் பனிக்க கிரி அம்மாவைப் பார்த்தான். "எனக்கு நம்பிக்கையிருக்கு கிரி ஓம்மேல" கண்களை தீர்க்கமாகப் பார்த்து அம்மா சொன்னதும் உடலில் புது ரத்தம் பாய்ந்ததைப்போலத் தோன்றியது.

*****


*மஞ்சள் ரிப்பன் -சிறையிலிருந்து விடுதலையாகும் குற்றவாளிகளைச் சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் விடுதலையாகும் குற்றவாளிகளை அழைத்துப் போக வரும் உற்றார் உறவினருக்கு மஞ்சள் ரிப்பன்களைக் கொடுத்துக் குத்திக்கொள்ள ஊக்குவிக்கிறது. இது விடுதலையாகும் நபருக்குத்தான் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வைக் கொடுக்கும் ஒரு சமிக்ஞை.

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்
More

ஐந்தாவது குளிர்காலம்
Share: 




© Copyright 2020 Tamilonline