Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சிறுகதை | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | பொது
Tamil Unicode / English Search
ஆசிரியர் பக்கம்
குஜராத் சொல்லும் செய்திகள்
- அசோக் சுப்ரமணியம்|மார்ச் 2001|
Share:
Click Here Enlargeகுஜராத்தில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பெரிய இழப்புகளிலிருந்து அம்மாநிலம் மிகவும் உறுதியோடு மீண்டு கொண்டிருக்கிறது. ஓர் அவசரகால வேகத்தில். இந்திய அரசும், குஜராத் மாநில அரசும், கூடியவரை பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களை மீண்டும் சுயமாக இயங்கும் நிலைக்குக் கொண்டுவர பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.. தவிர உலகெங்கும் உள்ள பல்வேறு சமூக சேவை நிறுவனங்கள், இந்தியாவின் மற்ற மாநில அரசுகள், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இந்தியர்கள், வம்சாவழிகள், எல்லோருமாகச் சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு பண, மற்றும் அத்தியாவசியமான தேவைகளுக்கான உதவிகளையும் செய்ய முன்வந்திருப்பதைக் காணும் போது, உலகில் மனித நேயம் ஒட்டு மொத்தமாகத் தேய்ந்துவிடவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதுவும் எல்லைகள், இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, நெஞ்சின் ஓரத்தில் ஈரம் கசிகிறது.

அதே சமயம் நாட்டில் பல் வேறு மாநில அரசுகளுக்கான தேர்தல்கள் நெருங்கி வரும் சமயத்தில், இந்த பயங்கரம் நம்மையெல்லாம் வேறு விதமாக சிந்திக்க வைக்கவும் வேண்டும். ஒரு குடியரசின் முக்கிய நோக்கம், இருக்கும் நல்ல கட்சிகளில்(?) எதை 'ஆள முற்றிலும் தகுதியுள்ளது' என்று தேர்வு செய்ய, குடிமக்களைத் திக்குமுக்காட வைப்பதுதான்! வாணலியா, நெருப்பா என்று தடுமாற வைப்பது அல்ல..! நாளை என்ற ஒன்று, இல்லை என்று, இன்றைக்கே, வயிறு வீங்க சாப்பிடுபவர்கள் போல, மக்களை எப்படியெல்லாம் சுரண்டலாம், எவற்றையெல்லாம் செய்து தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று சிந்திக்கும் அரசியல் கட்சிகளுக்கு, காந்திமகான் பிறந்த மண்ணில் ஏற்பட்ட இப்பூகம்பம் தெரிவிக்கும் செய்தி ஒன்று உண்டு. இயற்கையின் சீற்றத்துக்கு முன்பு நாமெல்லாரும், மிகவும் சாதாரணர்கள். நேற்றைய கோடீஸ்வரர்கள், இன்று 'ரோட்'டீஸ்வரர்களாகி இருக்கும் அவலங்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அடுத்த வேளை உணவுக்குக் கூட வகையில்லாத அடிமட்ட மக்களும் பெருமளவில் முன்வந்து, உதவியிருப்பதை எண்ணும் போது, இந்தியாவின், அடிப்படை தர்மசிந்தனைகளும், செயல்களும் மிஞ்சியிருப்பதால்தான், நாட்டின் உயிரோட்டம் நல்லமுறையில் இயங்கிவருகிறது.

ஒரு பத்திரிகையாளன் என்னும் முறையில், நல்லதைப் பாராட்டவும், அல்லதை கண்டிக்கவும், மன உறுதியும், திண்மையும் வேண்டும். எங்கே மதச்சார்பு சாயம் வந்து விடுமோ, என்று, பாராட்ட தயங்குபவர்களிடையே, விஸ்வ இந்து பரீக்ஷித், ஆர்.எஸ்.எஸ், போன்ற இயக்கங்கள் செய்திருக்கிற மகத்தான மகேசன் சேவையை (குஜராத்தில், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்திருக்கும் சேவையைத்தான் சொல்லுகிறேன்!), இந்திய மண்ணில் பிறந்த பெருமையுடன் பாராட்டுவோம்.
வரப்போகும் தேர்தல்களாவது, வன்முறையில்லாது, அநாகரீக அரசியல் சாடல்கள் இல்லாது, அமைதியாக நடக்குமா..? முன்னேற்றப் பாதையில் நாட்டை நடத்திச் செல்லவேண்டும் என்னும் சிந்தை நம் அரசியல் கட்சிகளிடமும், அரசியல்வாதிகளிடமும், உருவாகுமா..? நடக்கவேண்டும், உருவாகும், என்று வேண்டுவோம், நம்புவோம்.

இந்த இதழில் 'சாவி' அவர்களைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து எழுதத்தொடங்கும்போதே, 'சாவி' அமரரானார் என்னும் செய்தி வந்தது. உண்மையிலேயே தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. இயல்பான நகைச்சுவைக்குப் பிரசித்தமான, தேவன், பேராசிரியர் கல்கி இவர்களின் வரிசையில் நீங்காத இடம் பெற்றவர், திரு. சாவி அவர்கள். தன் வாழ்நாளில் எழுத்தாளர்களுக்கு, மிகப்பெரிய அங்கீகாரத்தையும், கவுரவத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். இவரது மோதிரக்கையினால் குட்டுபட்டு, முன்னுக்கு வந்த எழுத்தாளர்கள் ஏராளம். கடுகளவும் பிறரைச் சுடு சொல்லால் நோகச் சொல்லத்தெரியாத மாமனிதர். அன்னாரது மறைவுக்கு, தமிழ்ப் பத்திரிகை உலகின் அங்கத்தினர் என்னும் வகையில், தென்றல் குழு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.

மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம்,

அஷோக் சுப்பிரமணியம்,
கலிபோர்னியா,
மார்ச், 2001
Share: 




© Copyright 2020 Tamilonline