Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி
Tamil Unicode / English Search
நேர்காணல்
மருத்துவர் கு. சிவராமன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2016|
Share:
சித்தமருத்துவர், ஆராய்ச்சியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், சமூகச் செயல்பாட்டாளர் எனச் சுறுசுறுப்பாக இயங்கிவருபவர் மரு. கு. சிவராமன். தமிழர் பாரம்பரியச் சிறுதானிய உணவுகள்மீது மக்களின் கவனத்தைத் திருப்பியவர். நாம் மறந்துபோன அஞ்சறைப் பெட்டியை மீண்டும் அடுக்களைக்குக் கொண்டுவந்தவர். உலகின் பல நாடுகளுக்கும் சென்று சித்தமருத்துவம், மூலிகைகள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியிருக்கிறார். 'வாங்க வாழலாம்' (தமிழக அரசின் விருது பெற்றது), 'ஆறாம்திணை', 'நலம் 360', 'ஆறுசுவையும் அஞ்சறைப்பெட்டியும்', 'ஏழாம் சுவை', 'உயிர் பிழை' போன்ற இவரது நூல்கள் சூடாக விற்றவை. தமிழர் பாரம்பரிய உணவுகள், நோய்தீர்க்கும் மூலிகைகள் குறித்துப் பேசியும் எழுதியும் வருகிறார். 'பூவுலகின் நண்பர்கள்' என்னும் சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் சமூகப்பணிகளைச் செய்துவருகிறார். சென்னையில் இயங்கிவரும் அவரது 'ஆரோக்கியா சித்த மருத்துவமனை'யில், மதிய உணவு இடைவேளையில் உரையாடினோம். அந்தச் சந்திப்பிலிருந்து...

*****


கே: நீங்கள் சித்தமருத்துவர் ஆனது எப்படி?
ப: 1987ல் +2 முடித்தேன். மருத்துவர் ஆகவேண்டும் என்பது என் கனவு. எம்.பி.பி.எஸ்.ஸில் இடம் கிடைக்கவில்லை. பாளையங்கோட்டை அரசினர் சித்தமருத்துவக் கல்லூரியில் படிப்போம், அரசுப்பணி கிடைக்கும் என்று நினைத்துச் சேர்ந்தேன். குடும்பத்தில் யாரும் சித்தமருத்துவர் கிடையாது. தொழில்சார்ந்த கல்வியாகத்தான் அதைப் படித்தேன். எனக்குத் தமிழார்வம் இருந்ததாலும், அந்தப் படிப்பு முழுவதுமே தமிழர் வாழ்வு, பண்பாடு சார்ந்த விஷயங்களாக இருந்ததாலும் அது மிகவும் பிடித்திருந்தது. முழுமையான ஈடுபாட்டுடன் பயின்று மருத்துவப் பட்டம் பெற்றேன். பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்தமருத்துவத்துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன். நெறியாளராகப் பேரா. ஜகதீசனும், துணைநெறியாளராக பேரா. தெய்வநாயகமும் இருந்தனர். எப்படி முசுமுசுக்கை இலையும், வில்வ மிளகும் இரைப்பு நோயை (ஆஸ்த்மா) கட்டுப்படுத்துகின்றன என்பதை நவீன அறிவியல் பார்வையிலும், சித்தமருத்துவப் பார்வையிலும் செய்திருந்தேன். அதை முடித்தபின்னர் ஓர் உணவு நிறுவனத்தில் ரிசர்ச் அசோசியேட் வேலை கிடைத்தது. மாலை நேரத்தில் என் ஆய்வுகள் தொடர்ந்தன.

கே: சித்தமருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்றெல்லாம் பல மருத்துவமுறைகள் உள்ளன. எல்லாம் ஒன்றா, வெவ்வேறா?
ப: இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். தமிழர் நிலம் பெரும் பண்பாடும் தத்துவங்களும் அடங்கிய பூமி. உலகத்தின் பல பகுதிகளில் நோய்கள் எல்லாம் பேய், பிசாசுகளால் வருகின்றன; பாவ, புண்ணியத்தால் வருகின்றன என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசிவகம் போன்றவை உடலுக்கும், பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடல் என்பது பஞ்சபூதங்களினால் ஆனது என்ற உண்மையை அறிவித்தன. பஞ்சபூதத்தில் ஏற்படும் மாற்றங்களையும், அதையொட்டி நம் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் விளக்கி, அதனை இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை, மிகத்தெளிவாகச் சொன்னது தமிழர் மருத்துவம்தான். அது பண்பாட்டுக் கூறுகளாக வரும்போது நாட்டு வைத்தியமாகவும், பாட்டி வைத்தியமாகவும், மரபுசார்ந்த சித்தவைத்தியமாகவும், உணவுசார்ந்த மருத்துவமாகவும், பண்பாடுசார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது. சித்தமருத்துவத்தின் சில கூறுகள் ஆயுர்வேதத்தில் இருக்கின்றன. ஆயுர்வேதத்தில் உள்ளது சித்தமருத்துவத்தில் இருக்கின்றது. அதே போன்று அரபி மருத்துவமான யுனானி மருத்துவத்திலும், சௌபாரிக்பா என்னும் திபெத்திய மருத்துவத்திலும் இதன் கூறுகள் இருக்கின்றன.

இது எப்படிச் சாத்தியம் என்றால் அன்றைய அறிவுசார்ந்த மக்கள் தம்முள் கருத்துப் பரிமாறி, நல்ல விஷயங்களை எல்லா இடங்களுக்கும் பரப்பினர். இது ஒரு வியப்பான விஷயம்தான்.

கே: அப்படி உயர்வாக இருந்த மருத்துவமுறை பின்னர் பின்தங்கிப் போனதன் காரணம் என்ன?
ப: நிறைய காரணங்களைச் சொல்லலாம். சித்தமருத்துவம் ஒருநாளில் தோன்றியதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவந்த மருத்துவமுறை. நம்மீது நிகழ்ந்த படையெடுப்புகள், அரசுரிமைப் போர்கள், வல்லரசுகள் போன்றவற்றால் அவரவர் வாழ்வியலுடனும், தத்துவங்களுடனும் பிணைந்துதான் இது வந்து கொண்டிருந்தது. சமணர் காலம், பௌத்தர் காலத்தில் அந்தந்த மதத்தின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன. பிறகு சைவம் ஓங்கியபோது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் கலந்தன. இறுதியில் ஆங்கிலேயர்கள் வந்தனர். ஐரோப்பிய அறிவியல் தளம் உயர்ந்தது. அவர்களுடைய நவீன அறிவியல் பார்வை நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனடி நிவாரணம் என்கிற ஒரு விஷயத்தாலும், அரசாங்கத்தின் பேராதரவு பெற்ற மருத்துவ அமைப்பாக நவீன மருத்துவம் மாறியதாலும், சித்தமருத்துவம் என்பது மரபுவழி விஷயமாகவும், நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது; கொஞ்சம் வழக்கொழிந்தும் போனது; ஒடுக்கப்படுதலும் நிகழ்ந்தது. இறுதியில் கிராமம்சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது. அதனால் நவீன மருத்துவமுறைதான் சிறந்த ஒரே மருத்துவமுறை, மற்ற மருத்துவமெல்லாம் வெறும் பண்பாட்டுப் பழக்கங்கள்தான் என்பதுபோன்ற ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பின்னால்தான் பாரம்பரிய விஷயங்கள் மிகப்பெரிய அனுபவத்தின் நீட்சி என்பதும், ஒரு பெரிய அனுபவத்தில் ஒரு பெரிய அறிவியல் கண்டிப்பாக ஒளிந்திருக்கும் என்ற பார்வையும் புரிய ஆரம்பித்தது. அதன் பிறகுதான் உலகெங்கிலும் எல்லா நாடுகளிலும் இருக்கும் பாரம்பரிய மருத்துவத்தின்மேல் நவீன அறிவியல் பார்வை வர ஆரம்பித்தது. அதனால் சித்தமருத்துவத்தின் தொன்மை, தமிழர்களின் தொன்மை புரிய ஆரம்பித்தது. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்பட்ட பல நோய்களுக்கு, தொற்றுநோய் மாதிரியான சவால்களுக்கு இது சிறந்த மாற்றாக இருப்பது தெரியவந்தது. இன்றைக்குப் பெருவாரியாக இது மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கிறது.



கே: எல்லாருடைய உடல்நலனுக்கும், உடல் அமைப்பிற்கும் சித்த மருத்துவம் ஏற்றதாக இருக்குமா?
ப: நிச்சயமாக. சித்தவைத்தியம் என்பதைப் பொதுமைப்படுத்த முடியாது. இது தனித்துவமானது. 60 கிலோ எடைகொண்ட ஒருவர் நியூசிலாந்தில் இருக்கிறார், இந்தோனேஷியாவில் இருக்கிறார், இந்தியாவில் இருக்கிறார் என்றால் நவீன மருத்துவம் அவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே அளவு மில்லிகிராமில் அவரது நோய்க்கான மருந்தைக் கொடுக்கும். ஆனால், சித்தமருத்துவம் அப்படிக் கொடுக்காது. அவர் எந்தவகை மனிதர், எப்படியான வாழ்வியலில் இருக்கிறார், என்னமாதிரி சமூகச் சிக்கலில் வாழ்கிறார், என்னமாதிரி எண்ணப்போக்கு உடையவர், அவருடைய உணவுமுறை என்ன, அவர் மரபுவழி எப்படிப்பட்டது என்றெல்லாம் ஆராய்ந்துதான் சிகிச்சை கொடுக்கும். இவை எல்லாவற்றையுமே அவருக்கிருக்கும் நோயுடன் பொருத்திப் பார்க்கும் தன்மைசித்தமருத்துவத்தில் உண்டு. அந்த வகையில் சித்தமருத்துவம் தனித்துவமிக்கது. இதுதான் இதன் பலம். இதன் பலவீனமும் இதுதான். பொதுமைப்படுத்த முடியாததால் பெரிய அளவில் வணிகப்படுத்தவும் இயலவில்லை. மற்ற மருத்துவங்களைப்போல் அல்லாமல் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஆராய்ந்து மருந்தளிப்பதால், இது வேரோடு நோயைக் களைகிறது. இது பலம்.

கே: சித்தமருத்துவம் பக்கவிளைவுகள் இல்லாததென்று சொல்லலாமா?
ப: சொல்லலாம். ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும், பக்கவிளைவும் இருக்கும். சித்தமருத்துவத்தைப் பொருத்தவரை பெருவாரியாகப் பக்கவிளைவுகள் இல்லாததற்குக் காரணம், மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருப்பதால்தான். ஒரு இட்லியை உடல் எப்படி எடுத்துக் கொள்கிறதோ அப்படியேதான் சித்த மருத்துவத்தின் லேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும். இட்லி எவ்வாறு உடலுக்குள் சென்று பிரிந்து என்னென்ன சேர்மானங்களை உடலுக்கு அளிக்கிறதோ அவ்வாறேதான் இந்த மருந்தும் கொடுக்கும். அதனால் உணவு எப்படி பக்கவிளைவுகளைத் தருவதில்லையோ அதே போல சித்தமருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், சிலவகை வீரியமிக்க மருந்துகளைச் சரியான முறையில் எடுத்துக் கொள்ளாவிட்டால், சரியாகத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்படாவிட்டால் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், அந்த மருந்தின் நச்சுத்தன்மையை முறிப்பதற்கான துணைமருந்துகளைக் கொடுத்தால் முழுமையாகக் குணமாகிவிடும். மற்றபடி சித்த மருந்துகள் பெரிய அளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

கே: சித்த மருத்துவத்தின் சிறப்பு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: தனித்துவமான பார்வை இதன் முதல் சிறப்பு; இரண்டாவது, சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. சுற்றுசூழலை மாசுபடுத்தாது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. மிகமுக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது. அதாவது "நோய்நாடி நோய் முதல்நாடி" என்ற குறளின்படி நோயை மட்டுமின்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குவதுடன், அவருடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்தி, உணவைச் சீர்படுத்தி, சிந்தனையை மேம்படுத்தி, அவரை அறம்மிக்க மனிதனாக்குவது, பிரச்சனைகளையும் அதற்குக் காரணமான விஷயங்களையும் சரிப்படுத்துவது என்றெல்லாம் செயல்படுகிறது. இப்படி ஒருங்கிணைந்த பார்வையை அடித்தளமாகக் கொண்டது சித்தமருத்துவம். அதுதான் இதன் தனிச்சிறப்பு.
கே: இன்றைக்கு நோய்கள் பெருகியிருக்கக் காரணம் என்ன?
ப: மனிதன் இயற்கையைவிட்டு விலகி வந்ததுதான் முக்கியக் காரணம். இயற்கையை வெல்ல நினைத்தது மனிதனின் வெற்றி. ஆனால், இயற்கையைப் புறந்தள்ள நினைத்தது மனிதனின் தோல்வி. நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக நாம் பகுத்தறிவை வளர்த்தோம். அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம். விலங்குகளுக்கு இருக்கும் நுண்ணறிவை, இயற்கைக்கு இருக்கும் நுண்ணறிவை, இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம்; மறக்கடித்து விட்டோம்; தொலைத்து விட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிகமுக்கியமான காரணம். ஒருசெல் க்ளாமிடோமானஸிற்கு இருக்கும் அறிவிற்கும், பல மில்லியன், ட்ரில்லியன் கோடி செல்கள் கொண்ட மனிதனுக்கும் ஒரேவகையான மூளைதான். அது மிகச்சின்னது, ஒன்றும் தெரியாது என்று ஒதுக்குகிற மனோபாவம்தான் நம்மிடையே இருக்கிறது. நாம்தான் இந்தப் பூவுலகின் ராஜா; மற்றவர்களை எல்லாம் அடித்து விரட்டிவிட்டு நாம்மட்டும் இருக்கவேண்டும் என்கிற மனோபாவத்தில் மொத்த மனிதஇனமும் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கையில் எடுத்துக்கொண்டுவிட்டது. இதனால் எல்லா ஜீவராசிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் மனோபாவம் வந்துவிட்டது. இதுதான் மிக அடிப்படையான காரணம்.

அடுத்து, சுற்றுச்சூழல் மாசு; தான்மட்டும் வாழவேண்டும் என்ற மனிதனின் சுயநல எண்ணம்; தன் உணவுக்காக வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான, வன்முறையான மனோபாவம், மன அழுத்தம், எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாத ஒருவித manic மனோபாவம், இவற்றால் மனம் சிதைந்த மனிதர்களின் செயல்பாடுகள் என பல விஷயங்களை கூடுதல் காரணங்களாகச் சொல்லலாம். உணவு, சுற்றுச்சூழல், மனம் இவற்றின்மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் வன்முறை, இவற்றில் வணிகம் செலுத்தும் ஆதிக்கம் இவையெல்லாம் சேர்ந்துதான் இன்றைக்குப் பெரும் நோய்க்கூட்டத்தை உண்டாக்கியிருக்கிறது.

கே: உடல் எடை குறைப்பதற்கு பல்வேறு உணவுமுறைகள் சொல்லப்படுகின்றன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: உடல் எடைக்குறைப்பில் நிறைய அரசியல் இருக்கின்றது. மெலிந்த உடல்தான் அழகு; six pack இருப்பதுதான் சிறந்தது; Zero size இடுப்பு இருக்கவேண்டும் என்பதெல்லாம் வணிகம் கொண்டுவந்த விஷயம். மெல்லிடைதான் அழகு; வெள்ளையாக இருப்பதுதான் அழகு என்று சொல்வதில் எப்படிப் பெரிய கார்ப்பரேட் சூழ்ச்சி, வணிகத் தந்திரம் இருக்கிறதோ அதுபோலத்தான் இதுவும். இதற்குப் பின்னாலும் மிகப்பெரிய வணிகம் இருக்கிறது. இந்தச் சிந்தனைப்போக்கு தவறானது. அழகு சமூக ஏற்றத்தாழ்வைக் கொண்டுவந்துவிடக் கூடும். பணம் படைத்தவருக்குச் சாத்தியமாவது, ஏழைக்குச் சாத்தியமில்லாமல் போகலாம். ஆகவே இதை நுட்பமாகப் பார்க்கவேண்டும். ஆரோக்கியத்துக்காக உடல் எடையைக் குறைப்பது சரியே ஒழிய அழகை முன்னிறுத்திக் குறைப்பது சரியல்ல. எடைகுறைப்பு என்பது அழகியல்ரீதியாக இல்லாமல், மருத்துவப் பார்வையில் இருக்கவேண்டும். சரியான வழிகாட்டுதலின்படி செய்யவேண்டும். எடைகூடியது தைராய்டினாலா, கொழுப்பினாலா, ஊட்ட உணவுகளினாலா, சோம்பேறித்தனத்தினாலா என்பதைப் பார்த்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

மரபுரீதியாக ஒருவர் உடல் எடை அதிகமாக இருக்கிறது; ஆனால் அவருக்கு எந்த நோயும் இல்லை, ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் அவர் எடையைக் குறைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு வர வாய்ப்புள்ளது என்றால் அவர் குறைத்துத்தான் ஆகவேண்டும். இன்றைக்குப் பல டயட் முறைகள் உள்ளன. எல்லாம் நல்ல முயற்சிகள்தாம். ஆனால் அவற்றைப் பின்பற்றுவதற்குத் தன் உடல் தயாராக இருக்கிறதா என்பதைக் குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைக்குப் பலரும் இணையத்தைப் பார்த்து அம்முறைகளுக்குச் செல்கிறார்கள். சிலருக்கு அது ஆபத்தை விளைவிக்கக்கூடும். தடாலடியாக எடையைக் குறைப்பது அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒன்று, ஒன்றரை வருடத்தில் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.



கே: சித்தமருந்துகளில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன, பாதரசம் கலந்திருக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து...
ப: உலோகங்களையும், பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எப்படி மூலிகைகளை மருந்தாகப் பார்த்தார்களோ அப்படியேதாதுப்பொருட்களையும், உலோகத்தையும் பார்த்தார்கள். அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது. சிலர் நினைப்பதுபோல உலோகங்களைத் துண்டுதுண்டாக்கி அதைக் கஷாயம் காய்ச்சிக் குடிப்பதோ அல்லது அப்படியே தூளாக்கி லேகியத்தில் சேர்த்துப் பயன்படுத்துவதோ கிடையாது. உலோகத்தை மருந்தாக ஆக்குவதற்கு பலமுறைகளில் பக்குவம் செய்வார்கள். உலோகம் ஒரு மூலப்பொருள். அதனை உப்பாக மாற்றும்போது அது மிகநுண்ணிய நேனோ துகள்களாக, பிக்கா துகள்களாக மாறி, உடலுக்குத் தீங்கு செய்யாததாக, பெரும்பணியை ஆற்றும் வல்லமை கொண்டதாக அமைகின்றது. இப்படி உலோகத்தை ஸ்புடம் போட்டு உப்பாக, மருந்தாக மாற்றும் வல்லமை முன்னோர்களிடம் இருந்தது. இன்றைக்கு ஒரு உலோகத்தில் நேனோ துகள்களை உருவாக்க வேண்டுமென்றால் பெரிய இயந்திரங்களை வைத்து, பலகோடி ரூபாய் செலவில்தான் செய்யமுடியும். அந்தச் சூழல்தான் மேற்கத்திய உலகில் இருக்கின்றது. ஆனால் எளியமுறையில் நூறு சாணி வறட்டிகளை வைத்து நமது முன்னோர்கள் நேனோ, பிக்கா துகள்களை உருவாக்கினர். அப்படி மாற்றப்பட்ட உலோகங்கள் ஒருக்காலும் தீங்கு தராது.

வேர் பாரு தழை பாரு
மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல
பற்ப செந்தூரம் பாரே


என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். நோயுள்ள எல்லாருக்கும் உலோக மருந்துகளைக் கொடுப்பதில்லை. நோய் மிகத்தீவிரமான நிலையில் கஷாயம், லேகியம், சூரணம் மற்றும் பிற மருந்துகள் எதுவும் பயன் தராதபோது, இந்த உப்புக்களைக் கொடுப்பார்கள். அது உடனடியாக மிகச்சிறந்த பலனைத் தரும்.

கே: போலி சித்த மருத்துவர்கள் இன்றைக்குப் பெருகியுள்ளனர். அதைத் தடுப்பது எப்படி?
ப: எப்படி எல்லாத் துறைகளிலும் தவறானவர்கள், போலியானவர்கள் இருக்கின்றார்களோ அதுபோல சித்தமருத்துவத் துறையிலும் போலிகள் இருக்கின்றனர். அதற்கு அரசும், எம்போன்ற மருத்துவர்களும், பிற அமைப்பினரும் இணைந்து அவர்களைக் களைய முற்படவேண்டும். மருத்துவத் துறையில் போலியாக இயங்குபவர்களை மன்னிக்கவே கூடாது. இவர்கள் விலைமதிப்பற்ற மனித உயிருடன் விளையாடுகிறார்கள். மக்கள் பெரும் நம்பிக்கையோடு வரும்போது, அந்தப் போர்வையில் போலியாக இயங்குபவர்கள் கண்டிப்பாக அரசால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு பாரம்பரிய மருத்துவரை, மிகச்சிறந்த தொழில்நுட்பத்துடன் மக்களுக்குப் பணி செய்பவரை நாம் நம்பலாம். படித்து, பட்டம் பெற்று, முழுமையாக, ஆளுமையோடு இதில் ஈடுபடுபவர்களை நம்பலாம். இதெல்லாம் இல்லாமல், எங்கேயாவது போய், எதையாவது தெரிந்துகொண்டு, 'நான் ஒரு பெரிய மருத்துவன், என்னால் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும்' என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் போலி மருத்துவர்களை ஒதுக்கவேண்டும். நோயாளியிடம் நோய்தீர்க்கும் வழிமுறையைப் பேசாமல், 10000 கொடுத்தால் இந்த மருந்தைத் தருகிறேன், 25000 கொடுத்தால் சூப்பர் ஸ்பெஷல் மருந்தைத் தருகிறேன் என்று பேரம் பேசுபவர்கள் தவறானவர்களாகவே இருப்பர்.

கே: சித்தர்கள் கூறியிருக்கும் காயத்தைக் கல்ப காலத்திற்கு நீட்டிக்கும் காயகல்பம், இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதம் போன்றவை எல்லாம் சாத்தியமா?
ப: நிச்சயமாகச் சாத்தியம்தான். சித்தர்கள் இன்றைக்கு நாம் கணிக்க முடியாத பல விஷயங்களைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். செய்துமிருக்கிறார்கள். இன்றைய அறிவியலுக்கு, தொழில்நுட்பத்திற்குப் புலப்படாத பல விஷயங்களை அவர்கள் கையில் வைத்திருந்தார்கள். 'காயகல்பம்' என்பதை உடலுறவுக்கான ஆண்மைபெருக்கி மருந்துகளாக தவறாகப் பேசுகிறார்கள். காயத்தை (உடலை) அழியாமல் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும், அதாவது உடலின் வேகமான அழிவிற்கான வேதி மாற்றங்களைத் தற்காலிமாக நிறுத்திவைக்கும் முறை அது. அந்த மருந்துகளை இன்றைக்குப் பலவகைகளிலும், பல நோய்களுக்குப் பயன்படுத்தலாம். இன்றைக்கு எங்கள் ஆய்வுகள் அதை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கின்றன.

ரசவாதம் என்பது தாழ்நிலையில் இருக்கும் உலோகத்தை உயர்நிலைக்கு மாற்றக்கூடிய ரசாயன முறை. மூலிகைகளை வைத்து, முப்பூ மாதிரியான பெரும்விஷயங்களை வைத்து அதனைச் செய்திருக்கிறார்கள். அதெல்லாம் ஓர் அறம்சார்ந்த சமூக எண்ணத்தோடு செய்த விஷயம். இடைக்காலத்தில் அதைக்கொண்டு பொருளீட்டும் நோக்கத்தில் வித்தையாகக் கருதிச் செய்தார்கள். என்றைக்கு அது மனிதனுக்கான ஓர் அறமாகப் பார்க்கப்படுகிறதோ அன்றைக்கு அது மேலோங்கி வரும். சித்தர்களின் ஆசியில் அது நடக்கும் என்றே நான் நம்புகிறேன்.

கே: FeTNA விழாவில் பங்கேற்கிறீர்கள். அது குறித்து...
ப: மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நான் கடந்த ஆண்டே கலந்துகொள்ள வேண்டியது. சில காரணங்களால் முடியவில்லை. இந்த ஆண்டு என்னை அழைத்திருக்கிறார்கள். நான் மூன்று, நான்கு முறை அமெரிக்கா சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களின் தமிழ்சார்ந்த ஆர்வங்களை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அமெரிக்கா, கனடா என்று பல நாடுகளில் தமிழ்மக்களைப் பார்த்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் தமிழின்மீதான அக்கறை, தமிழ்நிலத்தில் வாழ்பவர்களைவிட எப்போதுமே சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. கல்விக்காகவும், வேலைக்காகவும் புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்கத் தமிழர்களின் ஒருங்கிணைவான FeTNA விழாக்களை நான் முன்பே யூடியூபில் கண்டு பிரமித்திருக்கிறேன். அதுபோல சிறுதானியத் திருவிழாவை நியூ யார்க்கில் நடத்தியிருக்கிறார்கள். சங்க இலக்கியம் முழுதையும் ஆங்கிலத்தில் திருமதி. வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்த்திருப்பதைக் கேட்டுப் பிரமிப்பாக இருந்தது. அதுபோல எல்லா ஊர்களிலும், வீடுகளிலும் தமிழர் விழாக்களை விமரிசையாகக் கொண்டாடுவது, தமிழர் ஆடைகளை அணிந்து மகிழ்வது, தமிழர் பாரம்பரியக் கலைகளைக் கற்று, அதில் முன்னணியில் இருப்பது என்று அமெரிக்காவாழ் தமிழர்களின் ஆர்வத்தைக் கண்டு பிரமிப்பாகவும், மகிழ்வாகவும், நிறைவாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு திருவிழாவில் நானும் கலந்துகொள்வதை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவே கருதுகிறேன்.

உணவுசார்ந்து, சித்தமருத்துவம் சார்ந்து, வாழ்வியல் சார்ந்து பல செய்திகளை நான் அவர்களுடன் பகிர்ந்துகொள்வேன். நன்கு படித்த சமூகத்திடம், உயர்ந்த இடத்தில் இருக்கும் சமூகத்திடம் இவை செல்லும்போது, அது, ஒட்டுமொத்த உலகத்திற்கும் நல்லதொரு விஷயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

"தமிழரின் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்; தமிழர்களின் மரபுசார் உணவுகளை மீட்டுக் கொண்டுவர வேண்டும்; தமிழர் மருத்துவ ஆய்வுகளை மேம்படுத்தி அது உலகமக்கள் அனைவருக்கும் பயன்படுவதாகச் செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆவல்" என்கிறார் சிவராமன். அவரது முயற்சிகள் பலனளிக்கத் தென்றல் சார்பில் வாழ்த்தி நாம் விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


எனது ஆசான்
எனது வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர் எனது ஆசான் திரு. செ.நெ. தெய்வநாயகம் அவர்கள். அவர் நுரையீரல்-நெஞ்சகத் துறையில் இங்கிலாந்தில் நவீனமருத்துவம் பயின்றவர். உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய கன்சல்டன்டாக இருந்தவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர், பின்னர் தாம்பரம் நெஞ்சகநோய் மருத்துவமனையின் தலைவராகவும் இருந்தார். தமிழ் மருத்துவத்தையும், நவீன மருத்துவத்தையும் இணைக்கும் பாலமாகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். பெரும் தமிழறிஞர். என்னில் தமிழ்சார்ந்த ஆர்வத்தையும் சமூக அக்கறையையும் உருவாக்கியவர். நவீன மருத்துவத்தை வணிகம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொன்னவர். அதை மீட்பதற்காகத் தன் காலம் முழுதையும் செலவிட்டவர். வெறும் மருத்துவராக அல்லாமல், சமூக அக்கறையாளனாகவும் இருக்கவேண்டும் என்று அவர் கற்றுக்கொடுத்த பாடந்தான் இன்றைக்கு நான் நலமாக இருப்பதற்கு மிகமுக்கியக் காரணம்.

- மருத்துவர் கு.சிவராமன்

*****


லவ் பேர்ட்ஸுக்கான உணவு!
நாங்கள் ஆரம்பத்தில், சிறுதானியம் என்பது மண்ணுக்கு நல்லது; அதற்கு உரம் தேவையில்லை; பூச்சிக்கொல்லி தேவையில்லை. மற்ற உயிரினங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றெல்லாம் சொன்னபோது அது பெரிய அளவில் சென்று சேரவில்லை. ஆனால், "இதைச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது, உடல் எடை குறையும், புற்றுநோய்களைத் தடுக்கமுடியும், நோயெதிர்ப்புச் சக்தி வளரும்" என்று சொல்ல ஆரம்பித்தவுடன் வரவேற்பு பெருகியது. சிறுதானிய உணவுபற்றிய விழிப்புணர்வை நம்மாழ்வார், புளியங்குடியில் இருக்கும் 80 வயதான கோமதிநாயகம், 85 வயதான அந்தோணிசாமி, காரைக்காலில் இருக்கும் ஜெயராமன் எனப் பல வேளாண் ஆர்வலர்கள், இயற்கையை நேசிப்பவர்கள் தொடர்ந்து மக்களிடம் பேசி வந்திருக்கிறார்கள். அரிசி, கோதுமை போன்றவற்றிலிருக்கும் அரசியல் லாபம், வணிகம் போன்றவற்றால் சிறுதானியங்களுக்கு வரவேற்பில்லாமல் போனது. அவை விளிம்புநிலை மக்களுக்கான உணவாகின. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது.

2002-03ல் நான் தினையியல் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, அது சென்னை பெரம்பூரில் ஒரே ஒரு கடையில்தான் கிடைக்கும். ஒருசமயம் அங்குச் சென்றபோது அதை எடுத்துத்தரும் ஊழியர் கடையில் இல்லை. மற்ற ஊழியர்களுக்கோ தினை எது என்பதே தெரியவில்லை. பிறகு கல்லாவில் இருந்தவர், "இந்த லவ் பேர்ட்ஸுக்குப் போடுவாங்களே அதைத்தான் கேட்கிறாங்க, கொடு" என்றார். "தினை சாப்பிட்டால் காதல் வளரும்" என்று சொல்லியிருந்தால் ஒருவேளை எல்லாரும் அதைச் சாப்பிட ஆரம்பித்திருப்பார்களோ!" என்று ஒரு கட்டுரையில் நான் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு எல்லா ஊர்களிலும், கடைகளில் "இவ்விடம் தினை கிடைக்கும்" என்று எழுதி வைக்கும் நிலை வந்துவிட்டது.

- மருத்துவர் கு.சிவராமன்

*****


மருத்துவ முறைகள் கைகோக்க வேண்டும்
உலகத்தின் அத்தனை பாரம்பரிய மருத்துவமுறைகளுக்கும் ஏதோ ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அவை மேலோங்கி வந்ததே மனிதநேயம் என்ற அடிப்படையில்தான். சீன மருத்துவம், கொரியாவின் சஜோக், ஜப்பானிய கம்போ, அல்லது இந்தியாவின் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவங்கள் எல்லாமே, சிலரால் தமது சகபயணிகளான மக்களின் நல்வாழ்வுக்காக அக்கறையோடு உருவாக்கப்பட்டதுதான். ஒவ்வொரு மருத்துவமுறைக்கும் பலமும் இருக்கிறது, பலவீனமும் இருக்கிறது. அதேபோல நவீன மருத்துவத்தையும் குறைசொல்ல முடியாது. தொற்றுநோய் வராமல் காப்பதிலும், அவசரகால சிகிச்சையிலும், மருத்துவ ஆராய்ச்சியிலும் நவீன மருத்துவம் முன்னணியில் உள்ளது. பாரம்பரிய மருந்து வேலைசெய்யும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கு நவீன அறிவியல் பயன்படுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் க்ளீவ்லாந்தில் Society for Integrative Oncology என்ற அமைப்பு என்னை ஒரு கருத்தரங்கத்திற்கு அழைத்திருந்தது. கருத்தரங்கில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன். உலகெங்கிலுமிருந்து பாரம்பரிய மருத்துவர்கள் அதில் பங்கேற்றனர். சீனப் புற்றுநோய் மருத்துவர், அமெரிக்கப் புற்றுநோய் மருத்துவர், அமெரிக்க அறுவை சிகிச்சையாளர், சீனாவின் தாய்ச்சி யோக முறையாளர்கள் போன்றோர் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு தத்தம் நாட்டில் சிகிச்சை செய்வதை அங்கு அறிந்தேன். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பாரம்பரியம் கொண்ட நம்நாட்டில் அம்மாதிரியான முயற்சிகள் ஏன் நடக்கவில்லை என்றெண்ணி அதற்கான பணியில் ஈடுபட்டேன்.

நான் சமீபத்தில் ஆனந்தவிகடனில் 'உயிர் பிழை' என்ற தொடரை எழுதினேன். அத்தொடர் நிறைய நவீன மருத்துவர்களுடன் ஓர் உரையாடலைத் துவங்கியிருக்கிறது. அதன் வெளியீட்டு விழாவில் ஒரு புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவர் "நாம் ஏன் சேர்ந்து வேலை செய்யக்கூடாது?" என்று கேட்டார். அதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறோம். எங்களுடைய ஆரோக்கியா சித்த மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோய் ஆராய்ச்சியைத் தற்போது செய்துவருகிறோம்.

- மருத்துவர் கு.சிவராமன்

*****


யோகா அளிக்கும் ஆஹா மெமரி!
தினசரி 20 முதல் 40 நிமிடம் யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமம் செய்தால், முதியோருக்கு மறதியைப் போக்கும், இளைஞர்களுக்கு ஞாபகசக்தி பெருகும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவை, வார்த்தைகளைத் தேடும் மறதியை, உருவ மறதியை, கவனச்சிதறலால் ஏற்படும் மறதியை, வார்த்தைகளைச் சரளமாக உச்சரிப்பதை நிர்வகிக்கும் ஆற்றல் குறைவு, பணியில் மந்தம் போன்றவற்றைத் தீர்ப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. யோகாசனப் பயிற்சியில் தேர்ந்த ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!

- மருத்துவர் கு. சிவராமன் எழுதிய 'நலம் 360' நூலிலிருந்து...
Share: 




© Copyright 2020 Tamilonline