Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
- மீனா சுபி|ஜூலை 2016|
Share:
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் (Thamizh Schools USA Inc.) இல்லினாய்ஸ் மாநிலத்தில் இன்று ஏழு நகரங்களில் இரு வாரத்திற்கு ஒருநாள் என வார இறுதி நாட்களில் இயங்கிவருகின்றன. இவை டேரியன், டெஸ்பிளெய்ன்ஸ், கெர்ணி, மில்வாக்கி, மன்ஸ்டர், நேப்பர்வில், ஷாம்பர்க் ஆகிய இடங்களில் நடக்கின்றன. லாபநோக்கற்ற இப்பள்ளிகள் அமெரிக்காவில் வளரும் சிறாருக்குத் தமது தாய்மொழியை அன்போடு கற்பிக்கும் அற்புதப்பணியைச் சற்றேறக்குறைய 20 ஆண்டுகளாகச் செய்துவருகின்றன.

இவை தொடங்கி வளர்ந்த விதத்தை விரைவாகப் பார்க்கலாம்.
1987 டிசம்பர் 9ம் நாளன்று வடமேற்குப் பல்கலைகழகத்தில் முதல் தமிழ்ப்பள்ளி, திரு. இராம்மோகன், திருமதி. கண்ணகி, கலைச்செல்வி, திரு. பாபு மேற்பார்வையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வகுப்பு என ஆரம்பித்தது.

அடுத்து 1988ல் ல கிரேஞ்சு (Y.M.C.A.) திரு. இளங்கோவன், பாபு, திருமதி. கிரேஸ் (மலேசியா), கலைச்செல்வி மேற்பார்வையில் இரண்டாவது தமிழ்ப்பள்ளி இரு ஞாயிறுக்கு ஒருமுறை வகுப்புகளை நடத்தத் தொடங்கியது. 1990ல் இடத்தேவை அதிகமானதால் இன்சுடேல் சமூகக்கூடத்திற்கும், 1992ல் டேரியனுக்கும் மாறியது. 2000 ஆண்டு திருமதி. அருள் மேற்பார்வையில் தொடங்கிய கெனோசா தமிழ்ப்பள்ளி 2003ல் கெர்ணிக்கு இடம்மாறி, அங்கே நடந்துவருகிறது.

2003 செப்டம்பரில் திரு. வெங்கடசாமி, முரளி, பாபு, திருமதி. மீனாட்சி, ரம்யா மேற்பார்வையில் ஷாம்பர்கிலும், திரு. சாக்ரடீஸ், பாபு மேற்பார்வையில் நேப்பர்வில்லிலும் தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பித்தன.

மில்வாக்கியில் 2004 ஃபிப்ரவரி மாதம் திருமதியர். கண்ணம்மாள், விசாலாட்சி, அபிராமி மேற்பார்வையில் தொடங்கப்பட்டது.



டெஸ்ப்ளெயின்ஸ் பள்ளி 2004 செப்டம்பரில் திரு. பாபு மேற்பார்வையில் ஆரம்பமானது. அதே ஆண்டில் திருமதி. கலைச்செல்வி மேற்பார்வையில் மன்ஸ்டரில் தொடங்கியது.

2006 மார்ச்முதல் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் இல்லியனாய்ஸ் மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பானது. அவ்வாண்டு திரு. பாலகுரு பரமசிவம் மேற்பார்வையில் புளூமிங்டனிலும், திருமதி. பிரியா பாலசந்தர் திரு. கல்யாணசுப்பு மேற்பார்வையில் சாம்பெய்ன்சிலும் பள்ளிகள் ஆரம்பமாயின.

2010ம் ஆண்டு பியோரியாவில் தமிழ்ச்சங்கத் தலைவர் இராம்மோகன் தலைமையிலும், திருமதி. செயாசுப்பு மேற்பார்வையிலும் தமிழ்ப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 2011 இந்தியானாபொலீஸ் திரு. சாத்தப்பன், திரு. முருகேசன் ஒத்துழைப்பில் அங்கொரு தமிழ்ப்பள்ளி தொடங்கியது.

2013 அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் இல்லியனாய்ஸ் மாநிலக்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்றது.

2007 மே பதிவுசெய்த நாள்முதல் (2006 மார்ச்சு) அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் அமெரிக்க வரித்துறையின் வரி விலக்குப்பெற்ற அமைப்பானது.
மதிப்பீட்டுமுறை
ஆண்டுத்தேர்வு (35%), அரையாண்டுத்தேர்வு (25%) என்பதுடன் வீட்டுப்பாடம் (20%), கோடைப்பயிற்சி (20%) ஆகியவை இணக்கப்பட்டுள்ளன. இனிவரும் ஆண்டுகளில் மாணாக்கரின் தொடர்ந்த வருகையும், பங்கேற்பும் தேர்வில் கணிசமான மதிப்பைப் பெற்றுத்தரும்.

இல்லியனாய்ஸ் கல்வித்துறையின் அயல்நாட்டு மொழி கற்றுத்தரும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஈடான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையைப் பெற்றுவிட்டமையால், தமிழ்ப்பள்ளிகளின் கல்விமுறையில் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படும்.

தமிழ்ப்பள்ளிகளின் முதல் 20 ஆண்டுளில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டு மாணாக்கர் ஏழாண்டுகளையாவது தமிழ்ப்பள்ளியில் முடித்து உயர்நிலைப்பள்ளிப் படிப்பின் சுமையால் விட்டுச்சென்றனர். அன்றைய நிலையைப் போலல்லாமல் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் புதிதாய்ச் சேரும் மாணாக்கர் எண்ணிக்கை நூறுக்கு மேலும் வளர்ந்துள்ளது.

ஐந்து வயதில் சேரும் மாணவர் உயர்நிலைப்பள்ளி செல்லுமுன்னர் 10 வருடங்களையாவது தமிழ்ப்பள்ளியில் முடித்துவிட வாய்ப்புள்ளது. அயல்மொழி கற்பிக்கும் அங்கீகாரம் உள்ளமையால், அதன்வழி கிடைக்கும் மதிப்பீடு உதவும் என்பதால் தமிழ்ப்பள்ளிகளில் அதிக ஆண்டுகள் படிக்கக்கூடிய மாணாக்கர் எண்ணிக்கை 40 - 80 விழுக்காட்டைத் தாண்டக்கூடும். "தாய்மொழிக்கல்வி அவசியம்" எனப் பெற்றோர் கருதுவதும் இதற்கு உதவும்.

"தமிழ்ப்பள்ளிகள் பள்ளியாகவே நின்றுவிடாமல் பல்கலைக்கழகம் ஆகவேண்டும். காலம் கனியட்டும், செயலாகும். தூய்மையான தமிழாக, மொழிக் கலப்பின்றித் தூயதமிழ் கற்பிக்கும் கல்விச்சாலையாகவே நமது தமிழ்ப்பள்ளிகளைக் காணுகிறோம்" என்று நம்பிக்கையோடு கூறுகிறார் தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் திரு. வ.ச. பாபு.

மேற்கண்ட தகவல்களைத் தென்றல் வாசகர்களுக்காக நம்மோடு பகிர்ந்துகொண்ட பாபு அவர்கள், "எந்த மண்ணில் இருந்தாலும், வாழ்ந்தாலும் தாய்மொழி உங்களின் கவசமாகட்டும். அது உங்கள் வாழ்க்கையின் வழியாகட்டும். உங்கள் வாழ்வு ஏற்றமுடன் அமையப் போற்றிவளர்த்த தாயோடு தாய்மொழியையும் போற்றி வாழுங்கள்" என்பதையே தமது செய்தியாக இளந்தலைமுறையினருக்குக் கூறுகிறார்.

மீனா சுபி,
சிகாகோ, இல்லினாய்ஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline