Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
முன்னோடி
கோ. முத்துப்பிள்ளை
- கரந்தை சு. பாலசுப்பிரமணியன்|டிசம்பர் 2015|
Share:
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கீ. இராமலிங்கம் ஆகியோர் வழியில் நின்று தமிழில் ஆட்சிமொழிச் சொற்களை உருவாக்கி அளித்தவர் கோ. முத்துப்பிள்ளை. இவர், தஞ்சையை அடுத்த மானாங்கோரையில் செப்டம்பர் 15, 1919 நாளன்று கோபால்சாமிப் பிள்ளை - கமலாம்பாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தஞ்சையில் பள்ளிக்கல்வியும், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இளங்கலை பட்டமும் நிறைவு செய்தார். அரசுப் பணியாளர்களுக்கான போட்டித்தேர்வு எழுதி முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றார். 1942ல் சென்னை தலைமைச் செயலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிசேர்ந்தார்.

மிகுந்த தமிழார்வம் கொண்டிருந்த இவர், கோப்புகளில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதும் வழக்கத்தை மாற்றித் தமிழில் குறிப்புகளையும் கடிதங்களையும் எழுத ஆரம்பித்தார். சகபணியாளர்களையும் தமிழில் எழுத ஊக்குவித்தார். அக்காலகட்டத்தில் சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி ம.பொ.சி. உள்ளிட்டோர் போராடிவந்தனர். தான் தலைவராக இருந்த 'சென்னை மாகாணத் தலைமைச் செயலகப் பணியாளர்கள் மன்றம்' என்பதை 'தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகப் பணியாளர்கள் மன்றம்' என்று பெயர் மாற்றினார். துணிச்சலான இந்தச் செயலுக்காக அண்ணா, நெடுஞ்செழியன், மு. கருணாநிதி உள்ளிட்டோரின் பாராட்டுதலைப் பெற்றார். (1968ல்தான் மதராஸ் மாநிலம் என்பது தமிழ்நாடு என்ற பெயர்மாற்றம் நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது.)

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையை அமைத்தபோது அத்துறையின் முதல் உதவிச்செயலாளராகப் பொறுப்பேற்றுத் திறம்படப் பணிபுரிந்தார். தமிழில் புதிதாக பல ஆட்சிமொழிச் சொற்கள் உருவாக உழைத்தார். அரிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் பலவும் பண்டைய இலக்கியங்களில் நம்மிடையே பழக்கத்தில் இருந்ததைச் சுட்டிக்காட்டி நிறுவினார். குறிப்பாக திருக்குறளில் பொருட்பால் முழுவதிலும் ஆட்சிச் சொற்கள் ஏராளமாக உள்ளன என்பது இவரது கருத்து. வானவூர்தி, அங்காடி, வலவன் (Pilot), புறனடை (Exception), உழைச்செல்வார் (Nurse) என ஆங்கிலத்துக்கு இணையான பல சொற்கள் தமிழிலக்கியத்தில் இருப்பதை நிறுவினார். Efficiency - திறப்பாடு, Instruction - அறிவுறுத்தம், Profession - செய்தொழில், Proposal - கருத்துரு, Active Service - செயற்படு பணி, Initial - சுருக்கொப்பம், Zero - சுழியம், Armour - கவசம் -- என்பன இவர் உருவாக்கிய ஆட்சிமொழிச் சொற்களில் சில. 'இதர' என்பது வடசொல் அல்ல; 'இது தவிர' என்னும் தமிழ்ச் சொல்லே மருவி 'இதர' என்று ஆகியிருக்கிறது என்பது இவரது கருத்தாகும். சூப்பர் மார்க்கெட் என்பதை பேரங்காடி என்று குறிக்கலாம் என்றும் வலியுறுத்துகிறார்.

1973ல் தலைமைச் செயலகத்தில் 'முத்தமிழ் மன்றம்' உருவானபோது அதன் தலைவராகப் பொறுப்பேற்று சீரிய பணியாற்றினார். இவரது தமிழ்ச் சேவைக்காக இம்மன்றம் இவருக்கு 'தமிழ்த்தொண்டர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. சென்னை வானொலியின் 'சான்றோர் சிந்தனை', 'தமிழறிவோம்' போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் மக்களிடையே தமிழறிவை வளர்த்தார். தமிழகத்தில் நடைபெற்ற மூன்று உலகத்தமிழ் மாநாடுகளிலும் இவர் பேராளராகப் பங்கு பெற்றுள்ளார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவர் எழுதிய 'அரியணையில் அழகுதமிழ்' என்ற கட்டுரை இடம்பெற்றது. மதுரையில் நடந்த ஐந்தாம் மாநாட்டு மலரில் 'அன்னை மொழியும் ஆட்சித் துறையும்' என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். தஞ்சையில் நடந்த எட்டாவது மாநாட்டிலும் 'ஆட்சிமொழிச் சொல்லாக்கம்' என்ற கட்டுரையை வாசித்துப் பாராட்டுப் பெற்றார். நீதியரசர் எஸ். மகராசன் தலைமையில் இயங்கிய ஆட்சிமொழி ஆணையத்தில் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றினார்.
எம்.ஜி.ஆர். அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற இவர், சிறந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருதை முதன்முதலில் பெற்றவரும்கூட. பணி ஓய்வுக்குப் பின்னரும் சிறார் மற்றும் இளைஞர்களிடையே தமிழை ஊக்குவிக்கும் பொருட்டு 'முத்தமிழ் மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கினார். அதன்மூலம் திருக்குறள் வகுப்பு, மொழிபெயர்ப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆற்றினார். பாரத ஸ்டேட் வங்கி அமைத்திருந்த 'வங்கி கலைச்சொற்கள் ஆய்வுக்குழு'வில் பங்கேற்று அழகு தமிழ்ச் சொற்களை அமைத்துக் கொடுத்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலையின் திட்டக்குழு உறுப்பினர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

'அரியணையில் அழகு தமிழ்', 'அன்னை மொழியும் ஆட்சித்துறையும்', 'ஆட்சிமொழிச் சிந்தனைகள்', 'ஆட்சிமொழி அருஞ்சொற்கள்', 'மொழிபெயர்ப்பு வேடிக்கைகள்', 'தமிழறிவோம்', 'கவினார்ந்த கலைச்சொற்கள்', 'முத்தமிழ் ஆய்வுமன்ற முழுமணிச் சொற்கள்' போன்றவை இவர் எழுதிய முக்கியமான நூல்களாகும். இறுதிக்காலம்வரை தமிழ் வளர்ச்சிக்காக உழைத்து வந்த இவர், இதற்கெனப் பல்வேறு கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்கிறார். அவற்றில் பல இன்னமும் அச்சேறாத நிலையிலையே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமது 90ம் வயதில் இவர் காலமானார். ஆட்சிமொழித் துறை வளர்ச்சிக்கு கோ. முத்துப்பிள்ளை ஆற்றியிருக்கும் சேவை என்றும் நினைக்கத்தக்கது.

கரந்தை சு. பாலசுப்பிரமணியன்

(தகவல் உதவி: கோ.முத்துப்பிள்ளையின் மகள் - திருமதி தங்கம் தேவராசன்)
Share: 




© Copyright 2020 Tamilonline