Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்
அஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்
- ஹரி கிருஷ்ணன்|அக்டோபர் 2015||(4 Comments)
Share:
கோடைக்காலத்து மடு

அரக்குமாளிகைக்குத் தீ வைத்தவன் பீமன். அவன் தனியனாகத்தான் இதைச் செய்திருக்கிறான். எரிந்துகொண்டிருந்த அரக்குமாளிகையிலிருந்து வெளியேறியபோது, குந்தியாலும் மற்ற பாண்டவ சகோதரர்களாலும் பீமனுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதை, "அந்தப் பாண்டவர்கள் அனைவரும் தாயாருடன்கூட மிகத் துயரமுற்றவர்களாகி அந்தச் சுரங்கத்தின் வழியாக வெளிப்பட்டு யாருக்கும் தெரியாமல் விரைவாகச் சென்றனர். அவ்வாறு தூக்கமில்லாததனாலும் பயத்தினாலும் அந்த வீரர்களான பாண்டவர்கள் தாயாருடன்கூடச் சீக்கிரம் நடப்பதற்குச் சக்தியில்லாதவர்களா இருந்தனர்" என்று கும்பகோணம் பதிப்பு சொல்கிறது. (ஆதிபர்வம், ஜதுக்ருஹபர்வம், அத். 160)

இப்போது 'தூக்கமின்மையாலும்' என்ற சொல்லைப் பார்த்தால், பாண்டவர்கள் பீமசேனன் வீட்டைக் கொளுத்தியபோது விழித்துக் கொண்டிருந்தார்களா, அல்லது கொளுத்தப்படும் சமயத்திலோ அதற்குச் சற்று முன்னதாகவோ எழுப்பப்பட்டார்களா என்பதில் தெளிவுவரவில்லை. எனவே ஆங்கில மொழிபெயர்ப்பையும் பார்த்தால், The Pandavas, however, accompanied by their mother coming out of the subterranean passage, fled in haste unnoticed. But those chastisers of foes, for sleepiness and fear, could not with their mother proceed in haste என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது தூக்கக் கலக்கத்திலிருந்தனர். பற்றியெரியும் தீ அவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கலாம். இப்படி ஒரு நிலையைக் கவனித்த பீமன், உடனே அனைவரையும் தூக்கிக் கொண்டான். "அரசர்க்கரசரே! அச்சப்படத்தக்க வேகபராக்ரமங்களையுடைய பீமஸேனன் ஒருவனே தன் ஸஹோதரர்களையும் தாயாரையும் எடுத்துக்கொண்டு சென்றான். மிகச்சிறந்த தேகபலமும் பராக்ரமுமுள்ள வீரனான அந்த பீமஸேனன் தாயாரைத் தோளிலும் நகுலஸஹதேவர்களை இடுப்பிலும் எடுத்துக்கொண்டும் யுதிஷ்டிரரையும் அர்ச்சுனனையும் இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டும் மரங்களை மார்பினால் முறித்துக் கொண்டும், பூமியைக் கால்களினால் நிரவிக்கொண்டும் வாயுவேகமாக விரைவிற் சென்றான்." யுதிஷ்டிரனையும் அர்ச்சுனனையும் 'கைகளாற் பிடித்துக்கொண்டும்' என்றால், கையைப் பற்றியபடியா அல்லது தூக்கிக்கொண்டா என்பது தெரியவில்லை. Placing his mother on his shoulder, the twins on his sides, and Yudhishthira and Arjuna on both his arms, Vrikodara of great energy and strength and endued with the speed of the wind, commenced his march, breaking the trees with his breast and pressing deep the earth with his stamp. என்கிறது ஆங்கில மொழிபெயர்ப்பு. Placing... on both arms. எனவே கைகளால் தூக்கிக் கொண்டிருந்தான் என்பது தெளிவாகிறது.

இப்படி வழிமுழுதும் தூக்கிக்கொண்டு செல்லவில்லை. சுரங்கத்திலிருந்து வெளியேறும்வரையில்தான். ஏனெனில் அவர்கள் சுரங்கப்பாதையிலிருந்து வெளியேறினதும் ஒரு வனத்தில் தங்குகிறார்கள். விதுரர், நம்பிக்கைக்குரிய ஒருவனை அந்த வனத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். இங்கே நடக்கிற ஒவ்வொரு செய்தியையும் அவர் சாரர்கள் (ஒற்றர்கள்) மூலமாக சதா அறிந்தவண்ணம் இருந்திருக்கிறார். அவரால் அப்படியனுப்பப்ட்ட அந்த 'நம்பிக்கைக்குரியவன்' பாண்டவர்கள் தங்கியிருந்த வனத்திலே அவர்களைச் சந்தித்து சில அடையாளச் சொற்களையும் குறிப்புகளையும் அவர்களுக்குச் சொல்லி, அவர்களை கங்கைக்கரைக்கு அழைத்துச் சென்று அங்கே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'யந்திரம் பூட்டப்பட்ட, கொடிகளுடன் கூடிய கப்பலில் (a boat with engines and flags, constructed by trusted artificers--ஆங்கில மொழிபெயர்ப்பு) அவர்களை ஏற்றிக் கங்கையின் அக்கரைக்கு அனுப்பி வைக்கிறான்.
பீமன் மாளிகையைக் கொளுத்துகிற சமயத்தில் இத்தனை ஏற்பாடுகளும் தயாராக இருந்திருக்கின்றன என்பதால், இவை அனைத்துமே மிக ரகசியமாகவும் நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டும் நடந்திருக்கின்றன என்பதையும்; வெளியேறினதும் அவர்கள் எந்த இடத்தில் தங்கவேண்டும் என்பதையும்; அவர்களைச் சந்திக்க வேண்டிய நபர் சரியான தருணம்வரை அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் அவர்களுக்கருகேயே எங்கேயோ இருந்திருக்கிறார் என்பதையும் ஊகிக்கமுடிகிறது. இந்தப் படகு, அங்கே கங்கைக்கரையில் இருந்த செம்படவர் தலைவன் வசம் இருந்திருக்கிறது. அவன்தான் இவர்களை கங்கைக் கரைக்குத் தேடிக்கொண்டு வருகிறான். அப்படியானால், பாண்டவர்கள் இந்த நேரத்தில் தப்பித்துக் கொண்டு கங்கைக்கரையை அடைந்திருக்கிறார்கள், அவர்களை அக்கரைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற செய்தி இந்த செம்படவத் தலைவனுக்குப் போயிருக்கிறது என்பதும் தெளிவு. அவனுக்குப் பலகாலத்துக்கு முன்னாலேயே விதுரர் உரிய ஏற்பாடுகளை விவரமாகச் சொல்லி, எப்போதும் கங்கைக்கரைக்கு அருகிலேயே வசித்துவருமாறும் ஏற்பாடு செய்திருக்கறார் என்பதை அவனே பாண்டவர்களிடம் சொல்கிறான். குறிப்பாக சதுர்த்தசி தினங்களில் இவனும் இவனுடைய ஆட்களும் விழிப்பாக இருந்திருக்கிறார்கள். விவரங்களைத் தெரிவிக்கும்போது அவன் சொல்கிறான்: "அவ்வாறு கட்டளையிடப்பட்ட நான், சதுர்த்தசியாகிய இன்றைத்தினம் கங்கையின் சமீபத்தில் மான்கூட்டங்களோடு கூடிய இந்த வனத்தில் தூதர்களை அனுப்பித் தேடிக்கொண்டிருக்கிறேன்." (மேற்படி, அத். 161). விதுரர் எப்படிப்பட்ட ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி, சரியான சமயத்தில் பாண்டவர்களுக்கு உதவ விரிவான திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அவர்கள் தப்பிப்பதற்காக 'யந்திரம் பூட்டப்பட்ட' படகு ஒன்று செய்யப்பட்டிருக்கிறது என்பதும் வியப்பான குறிப்பு. யந்திரங்களைப் பற்றிய பல குறிப்புகள் பாரதம் நெடுகிலும் காணப்படுகின்றன. கம்பராமாயணத்திலும் இதுபோன்ற பல குறிப்புகள் உண்டு. இவை எப்படிப்பட்ட யந்திரங்கள் என்பதுபற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒருவகையான மேம்பட்ட தொழில்நுட்பம் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

கங்கையின் மறுபக்கத்தை அடைந்த பிறகும் பீமன் அனைவரையும் தூக்கிக்கொண்டுதான் நடக்கிறான். அவனுடைய நடைவேகத்துக்கு மற்றவர்களால் ஈடுகொடுக்க முடியாமலிருந்திருக்க வேண்டும். இப்படியாக அவர்கள் செல்லும்வழியில்தான் ஹிடிம்பியைச் சந்திக்கிறார்கள்; கடோத்கசன் பிறக்கிறான். இவை ஒருபுறமிருக்கட்டும்.

அங்கே, மாளிகை தீப்பற்றியெரிந்த செய்தி திருதிராஷ்டிரனுக்குச் சொல்லப்படுகிறது. இங்கே திருதிராஷ்டிரனுடைய மனநிலையைக் காட்ட ஒரு அருமையான உவமையை பாரதம் சொல்கிறது: "ராஜாவாகிய திருதராஷ்டிரன் மிகப்பெரிய துக்கமான பாண்டுபுத்ரர்களுடைய அந்த மரணத்தைக் கேட்டுத் துன்பமுற்றான். ஆழமான மடு, கோடைக்காலத்தில் அடியில் குளிர்ச்சியும் மேலே உஷ்ணமுமாய் இருப்பதுபோல் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியும், வெளியில் துக்கமுமுள்ளவனாக இருந்தான்". (மேற்படி, அத். 162).

கோடைகாலத்து நீர்நிலைகள் மேற்பரப்பில் சூரிய உஷ்ணத்தால் சூடாகவும், கீழ்ப்பரப்பில் குளிர்ந்தும் இருக்கும். அதுபோல அவனுடைய அடிமனத்தில் குளிர்ச்சியான மகிழ்ச்சியும், வெளித்தோற்றத்தில் துயரம்நிறைந்த உஷ்ணமுமாகக் காணப்பட்டான். இவனுடைய உள்ளத்துக்குள் இருந்த உண்மையான மனோபாவம் வெளிப்படுகிறதல்லவா?

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline