Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 17)
- சந்திரமௌலி|செப்டம்பர் 2015|
Share:
Click Here Enlargeவள்ளியம்மாளைத் தேடி....

இதுவரை: திருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல் கல்வியில் தேர்ச்சி இல்லாததால், சட்டப்படிப்பை எப்படியோ முடித்து ஒரு குமாஸ்தா வேலைக்கு முயற்சிக்கிறான். அதிர்ஷ்டவசத்தால் "கேந்திரா மோட்டார்ஸ்" நிறுவனர் விஷ்வனாத்தின் மகள் கேந்திராவுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்து, அவள் மனதில் இடம்பிடிக்கிறான். உலகைப் புரட்டிப்போடும் எரிபொருள் தேவையில்லா வாகன எஞ்சின் தயாரிக்கும் ப்ராஜெக்டைத் துவங்கிய விஷ்வனாத், தன் குழுவில் பரத்தை இணைத்துக்கொள்கிறார். கேந்திரா மோட்டார்ஸின் போட்டிக்கம்பெனியான வெளிநாட்டு நிறுவனம் கே.டி.கே. மோட்டார்ஸ் உரிமையாளர்கள் விஷ்வனாத்தின் முயற்சியைக் குலைக்கும் சதியில் பல வழிகளில் ஈடுபடுகிறார்கள். அவற்றுள் ஒன்று பரத்தை தீர்த்துக்கட்டிவிட்டு, அவன் இடத்தில் தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை அமர்த்தி, விஷ்வனாத்தின் ரகசியங்களைத் திருடுவது. இந்தச் சதியில் தற்செயலாக பரத்தின் நண்பன் மனோகரின் தந்தை கனகராஜ் உயிரிழக்கிறார். விடுப்புமுடித்து அலுவலகம் திரும்பும் பரத்தைத் தன் குழுவிலிருந்து நீக்கிவிட்டதாக விஷ்வனாத் கூறுகிறார். அதற்கான உண்மைக்காரணம் அறியாத பரத் வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தன் பாட்டி வள்ளியம்மாளை சந்திக்கச் செல்கிறான். இனி…

*****


மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்து இரு வாரங்களில் காதும்காதும் வைத்தாற்போல் வினய், கேந்திராவின் நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்தது. கோபால் ரத்னத்தையும், விஷ்வனாத்தையும் பிரித்து, மொத்த கேந்திரா மோட்டார்ஸையும் பங்குசந்தைச் சதுரங்கத்தில் வீழ்த்திக் கையகப்படுத்தும் சக்கரவர்த்தியின் திட்டம், கச்சா எண்ணையின் விலைபோல ஒரேயடியாகச் சரிந்தது. ஆனாலும் கேந்திரா மோட்டார்ஸின் நிதிநெருக்கடியும், இதனால் அதில் வேலை பார்ப்பவர் மற்றும் பங்குதாரர்களின் சலசலப்பும் சக்கரவர்த்திக்கு இன்னும் நம்பிக்கையை அளித்தது. அந்த நம்பிக்கை அளித்த தெம்போடும், பிற நிர்வாகிகளின் மனதை அசைத்த துணிவோடும் அன்று நிர்வாகிகள் கூட்டத்தில் தைரியமாக விஷ்வனாத்தைச் சவாலோடு சந்தித்தார். "முதலில் எல்லா நிர்வாகிகள் சார்பாகவும் வினய், கேந்திராவுக்கு இனிய மணவாழ்க்கை அமைய எங்கள் வாழ்த்துக்கள். ரொம்பநாள் கழிச்சு கேந்திரா மோட்டார்ஸ் நிர்வாகக்குழு மகிழ்ச்சி தெரிவிக்க இதுமட்டும்தான் ஒரு வாய்ப்பா அமைஞ்சது." வழக்கம்போல, பாராட்டும் பாவனையில் பட்டாக்கத்தியை சொருகினார் சக்கரவர்த்தி.

"சக்கி, உங்க வாழ்த்துக்கு நன்றி. ஆனா ஏதோ கேந்திரா மோட்டார்ஸ் நொடிச்சு போயிட்டமாதிரி இருக்கு உங்க பேச்சு. உங்களுக்கு மறுபடி நினைவுபடுத்தறேன். ஒரு மிகப்பெரிய சாதனை, பிரேக் த்ரூவை நோக்கி நாம போய்க்கிட்டிருக்கோம். எடிசன் எலக்ட்ரிக் பல்ப் கண்டுபிடிச்சது, பெல் டெலிஃபோனை கண்டுபிடிச்சது, பென்ஸ் ஆட்டோமொபைல் கண்டுபிடிச்சது எல்லாம் எப்படி உலகத்தைத் திருப்பிப்போட்டதோ, அதுபோல எரிபொருள் இல்லாம ஓடப்போற நம்ம கார் இந்த நூற்றாண்டை திருப்பிபோடப்போகுது."

"இதை நாங்க ரொம்பநாளா கேட்டுக்கிட்டிருக்கோம். ஆனா இந்த ப்ராஜக்டோட எந்த விவரத்தையும் இந்த நிர்வாகிகள்கிட்டகூட நீங்க பகிர்ந்துக்கிட்டது கிடையாது. எரிபொருள் விலை அடியோட சரிஞ்சிருக்கிற இந்த வேளைல, இந்த கண்டுபிடிப்புல நீங்க வெற்றி அடைஞ்சாலும் நமக்கு அது லாபமா இருக்குமா, மக்கள் ஏத்துப்பாங்களான்னு தெரியலை. யாரும் எந்தக் கேள்வியும் கேக்கக்கூடாது, ஆனா கேக்கற பணத்தை இந்த ஆராய்ச்சிக்குக் குடுக்கணும்கிறது என்ன நியாயம்?" சக்கரவர்த்தி இதைச் சொல்லி முடித்ததும், கோபால், கேந்திரா, வினய், விஷ்வனாத்தைத் தவிர மற்ற நிர்வாகிகள் ஆமோதிப்பதுபோல தலையசைத்தனர்.

இதற்குச் சரியான பதில் தராவிட்டால், மற்ற நிர்வாகிகளுக்கு நம்பிக்கை போய்விடும் என்று உணர்ந்த விஷ்வனாத், "சரியான கேள்வி. ஆனா உங்க கேள்வியிலயே விடை இருக்கு" என்று சொல்லி, தன் சிந்தனைப் பார்வையை அந்த அறையின் மழுப்பப்பட்ட கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தூரச் செலுத்தினார். கோடையை வியர்வைபோல உதறிவிட்டு மாரிக்கால மேகங்களை கருப்புக் கம்பளம்போல் போர்த்தியிருந்த வானம், எந்த நேரத்திலும் பூமியை நனைக்கத் தயாராயிருந்ததைக் கவனித்தார். ஒரு பெருமூச்சோடு, "உயர்ந்துகிட்டேயிருந்த கச்சா எண்ணை விலை, நாம இந்த ஆராய்ச்சில எறங்கின நாள்லேருந்து திடீர்னு சரிஞ்சதே, அதுலயே உங்களுக்குத் தெரியலையா இந்தக் கண்டுபிடிப்பு வெளிவந்தா என்ன நடக்கும்னு தெரிஞ்ச ஒரு பன்னாட்டு சக்தி இதைத் தடுக்க எல்லா முயற்சியும் எடுக்குதுன்னு? இதனாலேயே இந்த ஆராய்ச்சி சம்பந்தமான எந்த விவரத்தையும் ரொம்ப ரகசியமா வெச்சிருக்க வேண்டியிருக்கு. எனக்கு ஆராய்ச்சியில உதவிட்டிருந்த பரத்தைக் கொல்ல முயற்சி நடந்தது."

"இதெல்லாம் உங்க கற்பனை. அப்படி இதைத் தடுக்கணும்னா உங்களை ஏன் அவங்க கொன்னுருக்கக்கூடாது? உங்க டீம்ல இருக்கிறவனை ஏன் கொல்லப் பாக்கணும்?"

"இங்கதான் அவங்க நோக்கத்தை நீங்க புரிஞ்சுக்கலை. அவங்களுக்கு இந்த ஆராய்ச்சி நடக்கணும். ஆனா அதோட வெற்றி அவங்க கைக்குக் கிடைக்கணும். என்னை தீத்துக்கட்டிட்டா அது நடக்காது. அதேநேரம் கேந்திரா மோட்டார்ஸுக்கு இன்னும் நிதி நெருக்கடி குடுத்தா, இந்த ஆராய்ச்சி முடிவடையும் போது மொத்த கம்பெனியோட நிர்வாகத்தையும் டேக் ஓவர் பண்ணி, பின்வாசல் வழியா இந்த கண்டுபிடிப்பை அடைஞ்சுடலாம்னு திட்டம் போட்டிருக்காங்க."

'அடப்பாவி, அப்படியே கூட இருந்து கேட்டமாதிரி நம்ம திட்டத்தையெல்லாம் விவரிக்கிறானே. இந்த விஷ்வனாத் பலே கைகாரன். இவன்கிட்ட இன்னும் எச்சரிக்கையா இருக்கணும்' என்று நினைத்துக்கொண்ட சக்கரவர்த்தி, தன் கிடுக்கிப்பிடியை இன்னும் நெருக்கினார். "அதெல்லாம் உங்க ஊகம்தானே. சப்போஸ், உங்க ஊகமே பொய்யாயிருந்தா, இந்தக் கம்பெனி இன்னும் ரெண்டே மாசத்துல திவால் ஆகிடுமே. அதை நிறுத்தணும்னா, ஒண்ணு உங்க ஆராய்ச்சியை நிறுத்துங்க. இதுவரை என்ன ப்ராக்ரஸ் பண்ணியிருக்கீங்களோ அதை எங்களோட பகிர்ந்துக்கங்க. ஏதாவது இதுவரை செலவு பண்ணின தொகையை மீட்க யாருக்காவது அதை விக்கமுடியுமானு பாக்கலாம். இந்த ஆராய்ச்சி, இந்தக் கம்பெனியோட நிதிநிலையை மீறின விஷயம்னு ரியலைஸ் பண்ணுங்க. "
"கண்டிப்பா முடியாது."

"அப்ப ஒரே வழிதான் பாக்கி இருக்கு" – சக்கரவர்த்தி என்ன சொல்லப்போகிறார் என்று விஷ்வனாத் உட்பட எல்லாரும் அவர் முகத்தையே பார்த்தனர்.
"உங்க ஆராய்ச்சியோட ரிசல்ட்டை இன்னும் ஒரே மாசத்துல நீங்க காட்டணும். அது வெற்றிகரமானதா இருந்தா, நம்ம நிதிநிலையைச் சரிபண்ணி நிமிர்ந்துடலாம். அது தோல்வியாமுடிஞ்சா மொத்த கேந்திரா மோட்டார்ஸும் சரியறதைத் தவிர வேற வழியில்லை. இந்தச் சவாலை நீங்க ஏத்துக்கறதா இருந்தால், உங்க ஆராய்ச்சிக்குத் தேவையான பணத்தை அடுத்த 30 நாளைக்கு இந்த நிர்வாகிகள் குழு ரிலீஸ் பண்றதுல எந்தத் தடையுமில்லை" என்று சொல்லி "ஜெண்டில்மென் எனி அப்ஜெக்‌ஷன்?" என்று வினவினார். மீண்டும் அனைவரும் ஆமோதிக்க, "விஷ்வனாத் நவ் தி பால் இஸ் இன் யுவர் கோர்ட்" என்று சொல்லி உட்கார்ந்தார்.

சக்கரவர்த்தி தன்னை ஒரு கஷ்டமான சவாலுக்குள் சிக்க வைக்கிறார் என்று விஷ்வனாத்துக்குப் புரிந்தாலும், அவர் குறிப்பிட்ட நிதிநிலைமையின் நிதர்சனத்தையும் புரிந்துகொண்டு, தொண்டையைக் கனைத்து, மூச்சை ஒருமுறை தீர்க்கமாக இழுத்துவிட்டு, அந்த அறையில் இருந்த நிர்வாகிகளை சுற்றி ஒருமுறை பார்த்தார். அவரது மேனரிசங்கள் அங்கிருந்தவர்களுக்கெல்லாம் அத்துப்படி என்பதால், அவர் ஒரு முக்கியமான முடிவைத் தெரிவிக்கப்போகிறார் என்று புரிந்துகொண்டு, எல்லாரும் உட்கார்ந்திருந்த இருக்கையின் நுனிக்குத் தம்மையறியாமல் நகர்ந்தனர். கேந்திரா தான் உட்கார்ந்திருந்த இருக்கையின் கைப்பிடிகளை இறுக்கப்பற்றி விஷ்வனாத் சொல்லப்போவதைக் கேட்கத் தயாரானாள்.

"சக்கி, நீங்க எந்த நோக்கத்துல இந்தச் சவாலை என்மேல வீசினீங்கனு எனக்குத் தெரியலை. தெரிஞ்சுக்கவும் விரும்பலை. ஆனா, இதை நான் பாசிடிவா எடுத்துக்கறேன். யெஸ், ஐ அக்சப்ட் தி சேலஞ்ச்" இந்த வார்த்தைகளை விஷ்வனாத் சொன்னவுடன் வெளியே கண்ணாடி ஜன்னல் வழியாக வந்த வெளிச்சம் இன்னும் மங்கிக் கம்பளிமூட்டை போல மேகங்கள் திரண்டன. சூரிய ஒளி அறைக்குள் மங்கியதும், உள்ளே குழல்விளக்குகள் தன்னிச்சையாக ஒளிர்ந்து அந்த அறைக்குள் ஒளிவெள்ளம் பாய்ச்சின. கேந்திரா, வினய் முகத்தில் இப்போது மகிழ்ச்சி தென்பட்டது. பளீரென்ற மின்னல் ஒன்று பளபளத்த வாள் போல கருமேகக் கம்பளிமூட்டையைக் கிழிக்க, சேமித்துவைத்த வெள்ளிக் கம்பிகளை மழையாகக் கொட்டத் தொடங்கிது.
"இன்னும் 30 நாளைக்குள்ள எரிபொருள் இல்லாம, புது டெக்னாலஜில, இயங்கற நம்ம புது எஞ்சின், கார் வெள்ளோட்டத்துக்குத் தயார் ஆகுங்க. கோபால் இதை நீ ப்ரெஸ்ஸுக்கு இன்னிக்கே அறிவிக்கலாம். ஐ டோண்ட் வாண்ட் டு வேஸ்ட் எனி மோர் ஆஃப் மை டைம் வித் ப்ரெஸ். விஷ் மீ குட் லக்" என்றார். மழை வலுவாக பலத்த காற்றோடு கலந்து அடிக்கத் தொடங்கியது.

*****


நிர்வாகிகள் கூட்டத்தில் 30 நாள் சவாலை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல், மீடியாக்களிலும் அறிவிப்பை வெளிட்ட வேகத்தோடு வெள்ளோட்டத்துக்கான திட்டத்தைத் தயார்படுத்தினார் விஷ்வனாத். அப்போதுதான் அவருக்கு பரத் தன் ஆராய்ச்சியிலிருந்து விலக்கப்பட்டது உறைத்தது. இந்த 30 நாள் சவாலை செயல்படுத்த பரத்தை மீண்டும் ஆராய்ச்சிக்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்து அவனைத் தேடியபோதுதான், வாணி அவன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டதைத் தெரிவித்தாள். இது விஷ்வனாத்துக்கு மட்டுமல்ல, கேந்திராவுக்கும் பெரும் இடியாக இறங்கியது. அவசர அவசரமாக அவன் வீட்டுக்கு ஃபோன் செய்தும், அவன் செல்ஃபோனுக்கு தொடர்பு கொள்ளவும் பார்த்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. "பரத் எங்கே?" என்ற கேள்விக்கு பதில் இல்லாமலும், 30 நாள் சவாலை எப்படி வெற்றிகரமாக முடிப்பது என்றும் விஷ்வனாத் முதல்முறையாக வாழ்க்கையில் சளைத்துப்போய்க் கவலையோடு சரிந்தார்.

அதேநேரம் பரத் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்ட விஷயத்தை மகளிடமிருந்து தெரிந்துகொண்ட கதிரேசன் வேறு கவலையில் சரிந்தார். 'ஏதோ, கூடமாட ஒண்ணா வேலை செய்யிறாங்க. பாக்கவும் வாணியும், பரத்தும் நல்ல ஜோடியா இருக்காங்க. இந்த ஆராய்ச்சியெல்லாம் முடிஞ்சதும், ரெண்டுபேருக்கும் எப்படியாவது கல்யாணத்தை முடிச்சிரலாம்னு நெனச்சா அந்த எண்ணத்துல எள்ளு மொளச்சிருச்சே?' என்று மனதுக்குள் அங்கலாய்த்தார். இனியும், வாணிக்கு யார் கிடைப்பாரோ என்று வாசலைப் பார்ப்பதைவிட, கிராமத்துக்குப் போய் வள்ளியம்மாளைப் பார்த்து இந்த பொறுப்பை அவரிடம் விட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்தார். இந்த முடிவை உடனே செயல்படுத்த, ஒரு வாரம் லீவ் சொல்லிவிட்டு, சொந்த கிராமமான வலவனூருக்கு அன்று இரவே ரயில் ஏறினார் கதிரேசன்.

*****


இவையெல்லாம் நடந்த அதேநாளில் வலவனூர் போய்ச்சேர்ந்த பரத்துக்கு வள்ளியம்மாளின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் இல்லை. ஊர் என்றால் ஒரு 20 தெருக்கள் அடங்கிய சின்ன கிராமம். ஊருக்குள் நுழையும்போதே அது வித்தியாசமான ஊர் என்று பரத்துக்குக் கண்ணில்பட்ட காட்சிகளில் அறிவித்தன. அளவெடுத்துக் கச்சிதமாக போடப்பட்ட சுண்ணாம்பு, கருப்பட்டி சாந்து இருநூறடி வெண்சாலைகள். தாரோ, சிமிண்ட் கலவையோ எங்கும் இல்லை. இருபக்கமும் தழையத்தழைய நிழலும், வாசமும் தரும் வேம்பு, மா, புளி, அரச மரங்கள். யாரையும் எதற்கும் கேட்க அவசியம் தராமல் ஊர் எல்லையிலேயே, ஊரின் வரைபடம், சத்திரம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பஞ்சாயத்து ஆபீஸ், வேளாண்மையம் எல்லாம் தனித்தனி வண்ணத்தில் குறிக்கப்பட்டிருந்தன. ஊருக்குள் சாராயக்கடையோ, சோம்பேறித் திண்ணையோ இல்லை. தெருவில் எந்தக் குப்பையையும் காணவில்லை. நூறடிக்கு ஒரு கழிப்பிடம், பத்தடிக்கு ஒரு குப்பைத்தொட்டி என்று எல்லாம் நேர்த்தியாக இருந்தன. சினிமா போஸ்டர்களும், அறிவிப்பு போஸ்டர்களும் அவற்றுக்கென இருந்த இரண்டு அறிவிப்புப் பலகைகளில் சீராக ஒட்டப்பட்டிருந்தன. வயல்களில் கரும்பும், நெல்லும் உறவாடின. எப்போதும் தண்ணீருக்கு ஆலாய்ப் பறக்கும் சென்னைவாசியான பரத்துக்கு கரைமுட்டி நின்ற குளங்களும், அவற்றையொட்டி மழைநீரைச் சேகரிப்போம், மண்வளம் காப்போம் என்ற பலகையும் ஏக்கத்தைக் கிளப்பிவிட்டன. வள்ளியம்மாள் வீட்டுவாசலில் ஒரு வயதானவர் நெல் அளைந்து கொண்டிருந்தார்.

"பெரியவரே, வள்ளியம்மாள் வீடு இதுதானங்க?"

உச்சிவெயில் கண்கூச, ஒரு கையால் பார்வைக்கு நிழல்கொடுத்து, "ஆமா, உள்ளதான் இருக்காங்க. வாங்க. உங்க பேரு?" என்றவாறு, பரத்தின் கையில் இருந்த பெட்டியை வாங்கப்போனார்.

"இருக்கட்டும், நானெ எடுத்துட்டு வரேன். என் பேர் பரத், நான் சென்னைலேருந்து வரேன்."

இதற்குள் வாசலில் நிழலாடியது. ஒரு வயதான மூதாட்டியின் உருவம், தலையிலிருந்து, கால்வரை வெண்மை போர்த்தி, "யார் வந்துருக்காங்க?" என்று கேட்க, "ஆத்தா, உங்களைத் தேடிக்கிட்டு சென்னைலேருந்து வந்திருக்காங்க, பேரு பரத்தாம். தம்பி, இவங்கதான் ஆத்தா, வள்ளியம்மா. போங்க."

ஒருகணம் பரத்தின் உடலில் ஆயிரமாயிரம் சிலிர்ப்புகள். வேகமாக வள்ளியம்மாளை நோக்கிப்போனவனை, அருகில் வந்ததும் பார்த்த வள்ளியம்மாள் இப்போது திடுக்கிட்டுப் போனாள். 'சாமி.. சாமீ நீங்க உயிரோட திரும்ப வந்துட்டீங்களா? என்ன அனாதையா அன்னிய தேசத்துல விட்டுப்பிட்டு போனீகளே. இப்ப…' மனதுக்குள் ஓடிய இந்த ஓட்டங்கள் அரைநொடியில் ஆவியாக, உண்மை உறைத்தது. "இது சாமியோட பேரன். என் பேரன்." முகத்தில் பெரும் மலர்ச்சியோடு, "வா ராசா, உள்ளார வா" என்றவளுக்குத் தான் செய்துகொடுத்த சத்தியம் நினைவுக்கு வரவே, மலர்ச்சியைச் சுருக்கிக்கொண்டு, "யாரு ராசா நீ, சென்னைலேருந்து இந்த பட்டிக்காட்டுக்கு அதுவும் இந்த வயசானவளை எதுக்குத் தேடி வந்த?" என்று கேட்டாள்.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline