Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஜெ. சந்திரசேகரன்
- அரவிந்த் சுவாமிநாதன்|நவம்பர் 2014|
Share:
"சந்திரா" என்று அன்போடு அழைக்கப்படும் ஜெ. சந்திரசேகரன் ஒரு கவிஞர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், சமூக ஆர்வலர். உலகின் முதல் Bisphenol A (BPA) இல்லாத ஃபீடிங் பாட்டிலை உருவாக்கியவர். அதற்காக இந்திய அரசின் பெட்ரோகெமிகல்ஸ் அமைச்சகத்திடமிருந்து தேசிய விருது பெற்றவர். உலகிலேயே மிகக் குறைந்த விலையுள்ள வாட்டர் ஃபில்டரை உருவாக்கியவர். சி.கே. பிரஹலாத் நினைவாக வழங்கப்படும் PARK Shared Value Award உட்படப் பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் பெற்றவர். Business world இவரை 2013ன் சிறந்த இளம் தொழிலதிபர்களில் ஒருவராகப் பட்டியலிட்டது. விபத்தில் காயம்ப்பட்டவர்களுக்கு வலியில்லாமல் முதலுதவி சிகிச்சை செய்ய உதவும் மருத்துவக் கருவி ஒன்றையும் சமீபத்தில் உருவாக்கியிருக்கிறார் சினிமா, கர்நாடக இசைப்பாடல்களை விசிலில் பாடுவது இவரது பொழுதுபோக்கு. சென்னையில் விடாது மழை கொட்டிய ஒரு முற்பகல் நேரத்தில் சந்திராவைச் சந்தித்தோம். அதிலிருந்து....

தென்றல்: புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு உங்களுக்கு தூண்டுகோல் எது?
சந்திரா: முதல் தூண்டுதல் எனது குடும்பச்சூழல். எங்களுடையது பெரிய குடும்பம். ஐந்து குழந்தைகள். ஏழாவது மாதத்திலேயே நான் பிறந்தபோது காஞ்சி மகாபெரியவர் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக விசாகப்பட்டினம் வந்திருந்தார். அவருடைய பக்தையான என் அம்மா, அவரை வேண்டிக்கொண்டு அவர் பெயரை எனக்கு வைத்தார். அவருடைய ஆசிதான் எப்போதும் என்னை வழி நடத்துகிறது. சிறுவயதிலேயே எந்தப் பொருளையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மாற்றியமைத்துப் பார்ப்பேன். எஞ்சினியரிங் படிக்க ஆர்வம் இருந்தாலும் BSc கெமிஸ்ட்ரிதான் படிக்க முடிந்தது. பின்னர் Central Institute of Plastics & Engineering Technology-யில் (CIPET) முதுகலை படித்தேன். 1989 முதல் 2005 வரை மும்பை, பரோடா என்று இந்தியாவின் பல பகுதிகளில் உற்பத்தி, தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட சவாலான பல வேலைகளைச் செய்தேன். இ-மெஷின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திற்காக ப்ராஜெக்ட்கள் செய்தேன். பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்தேன். அதையுங்கூட வருவாய் ஈட்டும் ஒன்றாகச் செய்யாமல் நமது ஆலோசனைகள், கண்டுபிடிப்புகள், சிந்தனைகள் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற கவனத்தோடு செய்தேன். அதன்மூலம் இந்தியா முழுமையும் நல்ல பல நட்புகள் எனக்கு வாய்த்தன.

அதே சமயம் எனது படிப்பும் அனுபவமும் கிராம மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்தேன். ஓரளவு வருவாய் உள்ள நாமே அந்தக் காலத்தில் அவ்வளவு கஷ்டப்பட்டபோது அதிக வருமானம் இல்லாத ஏழைகள், கிராமவாசிகள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று யோசித்தேன். தமிழகம் புறப்பட்டு வந்தேன். கிராமங்களின் மீது எனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். அதற்கு அடிப்படையாக எங்களது ரீச் ஃபவுண்டேஷன் அமைந்தது.



கே: ஓ! ரீச் ஃபவுண்டேஷன் பற்றிச் சொல்லுங்கள்..
ப: அது ஒரு சுவையான கதை. ஒருமுறை நண்பர்கள் சேர்ந்து தஞ்சாவூருக்குப் போயிருந்தோம். தஞ்சைப் பெரியகோயில் பெயர்பெற்று விளங்குகிறது. ஆனால் தஞ்சையைச் சுற்றிப் பல கோயில்கள் வழிபாடில்லாமல் பாழடைந்து கிடக்கின்றன. நாடெங்கிலும் இப்படிப்பட்ட ஆலயங்களை நாம் பார்க்கலாம். இதுமாதிரியான கோயில்களைக் கண்டறிந்து அவற்றை மக்களின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்தால் என்ன என்று எங்களுக்குத் தோன்றியது. அதுதான் ரீச் ஃபவுண்டேஷன் உருவாக அடிப்படை. கலைப் பொக்கிஷங்களான நமது ஆலயங்களைப் பேண வேண்டும். அவற்றை மீட்டுப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டது ரீச் (Rural Education And Conservation of Heritage). ஐடி துறையினர், பொறியாளர்கள், இளைஞர்கள் சிலரோடு ஒருங்கிணைத்து இதைத் தொடங்கினோம்.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறைத் தலைவராகப் பணியாற்றிய தியாக. சத்தியமூர்த்தி (இவருடன் நேர்காணல் பார்க்க) இதன் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டது எங்கள் அதிர்ஷ்டம். அவரோடு வரலாற்று ஆர்வம் கொண்ட பொறியாளர் சுந்தர் பரத்வாஜும் இணைந்தார். வரலாறு டாட் காம் கமலக்கண்ணன், லாவண்யா, பொயட்ரி விஜயகுமார் போன்றவர்களை ஊக்குவித்தவர் சுந்தர். ஆடிட்டர் H. தியாகராஜன், ஆடிட்டர் ஸ்ரீதரன் சந்தானம், ஹரிஹரன் எனப் பலர் இணைந்தனர். நாங்கள் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் அங்குள்ள பழங்காலக் கோயில்களும், கலைச் சின்னங்களும் வரலாற்று ரீதியாக எவ்வளவு முக்கியமானவை, பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதை எடுத்துரைக்கிறோம்.

ஆலயங்கள் துப்புரவு, நலிந்த ஆலயங்களைச் சீர் செய்வது, பாதுகாப்பது என்றுதான் தொடங்கினோம். அது நல்ல பலனைக் கொடுத்தது என்றாலும் சில கிராமங்களில் நேர்மாறாக ஆனது. ஊர்க்காரர்களிடையே ஒற்றுமை இல்லை என்றாலோ, அந்த ஆலயத்தில் அவர்களது பங்களிப்பு ஏதும் இல்லை என்றாலோ சுத்தம் செய்யப்பட்ட ஆலயங்களைக் குடிக்கவும், சூதாடவும், பிற தீயசெயல்களுக்கும் சிலர் பயன்படுத்தினர். ஆகவே மக்களை ஒருங்கிணைத்து அவர்களே பாதுகாக்க வேண்டும் என எடுத்துரைத்தோம். அது நல்ல பலனைக் கொடுத்தது. கிராம மக்களின் உதவியோடு ஆலயங்களை எடுத்துக் கட்டுவது, மேம்படுத்துவது, அவற்றின் வரலாற்றைக் கண்டறிந்து ஆவணப்படுத்துவது போன்றவற்றைச் செய்தோம். அப்படிக் கிராமங்களில் சுற்றியபோதுதான் அவற்றின் மிக முக்கிய அடிப்படைத் தேவைகள் என்ன, அதற்கு நாம் எப்படி உதவலாம் என்ற எண்ணம் தோன்றியது. அப்படி உருவானவைதாம் எனது கண்டுபிடிப்புகள்.

கே: அவை என்னவென்று சொல்லுங்கள்...
ப: கிராம மக்கள் சுகாதாரமான குடிநீருக்குக் கஷ்டப்படுவதைப் பார்த்தேன். அவர்கள் அந்த நீரைக் குடிப்பார்கள். ஆனால் எங்களுக்கு பிஸ்லெரி வாட்டர் பாட்டிலைத் தருவார்கள். "இது நல்ல தண்ணீர் இல்லை. நீங்கள் குடித்தால் நோய் வந்துவிடும்" என்பார்கள். ரசாயனங்களும் கழிவுகளும் கலந்ததாக அந்தத் தண்ணீர் இருந்தது. அங்கே சரியான கழிவறை வசதி இருக்காது. நாங்கள் கிராமங்களில் தங்க விரும்பினால் விடமாட்டார்கள். "பக்கத்தில் உள்ள டவுனில் ரூம் போட்டு விடுகிறோம் சார்" என்பார்கள். இந்த நிலைமையை மாற்ற வேண்டும். தண்ணீர், கழிவறை என்ற இவை இரண்டையும், அவர்களும் பயன்படுத்துவதற்கு ஏற்ப மிகக் குறைந்த விலையில் தர நினைத்தேன். முயற்சிகளில் ஈடுபட்டேன். அப்படி உருவானதுதான் World's most economical water filter என்னும் எனது கண்டுபிடிப்பும் Toilet for all என்னும் திட்டமும். (பார்க்க: www.watsan.in)



கே: உங்கள் வாட்டர் ஃபில்டர் பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்.
ப: இந்தியாவில் இன்று water filter/Purifier வியாபாரம் மிக முக்கியமானது. பிரபலமான பல நிறுவனங்கள் கோடிக்கணக்கான பணத்தை இவற்றில் முதலீடு செய்துள்ளன. UV, RO போன்ற பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவருகின்றன. அவற்றின் விலையும் மிக அதிகம். ஆனால் நான் கண்டுபிடித்திருக்கும் ஃபில்டர் மிக எளியது. சுகாதாரமானது. மிகக் குறைந்த விலை கொண்டது. மட்டுமல்ல; வருடா வருடம் ஃபில்டர் மாற்ற வேண்டும் என்பது போன்ற பல பிரச்சனைகள் இன்றி நீடித்து இயங்குவதும் கூட.

Council of Scientific & Industrial Research (CSIR) Nano Candle அதாவது களிமண்ணால் Candle செய்வதற்கான தொழில்நுட்பத்தை வைத்திருந்தனர். (பார்க்க: terafilwater.in/page19.php) அவர்களிடம் நான் லைசென்ஸ் வாங்கினேன். 120 பேர்வரை அதன் உரிமம் வாங்கி வைத்திருந்தார்கள். ஆனால் பெரிய அளவில் செய்தபோது அது வெற்றி தரவில்லை. காரணம் சிற்றளவு அல்லது பேரளவில் ஒன்றைச் செய்து விடலாம். ஆனால் அதையே பெருமளவில் (mass scale) செய்யும்போது தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. ஏன் அந்தத் தவறுகள் நிகழ்கின்றன, அதைச் சரி செய்வது எப்படி என்பதை ஆராய்ந்து பார்த்து நான் புதிதாக ஃபில்டரை உருவாக்கினேன். களிமண், மரத்தூள், மண் போன்றவற்றைக் கலந்துதான் நேனோ கேண்டில் உருவாக்கப்படுகிறது. Micro filtration process இதில் பயன்படுகிறது. மின்சாரம் தேவையில்லை. ரசாயனம் தேவையில்லை. வைரஸ், பாக்டீரியா என எல்லாவற்றையும் இது அகற்றி விடும்.

எதிர்ச் சவ்வூடு பாய்தல் (RO) முறையில் தூய்மை செய்யும்போது உப்புக்கள் போன்றவை பிரிக்கப்பட்டு விடுகின்றன. பிரித்ததை நாம் பூமியில் கொட்டுகிறோம். அந்த உப்பு நிலத்தடி நீரில் கலந்து, மீண்டும் நமக்கே வந்து சேருகிறது. நாளடைவில் உப்புக்களின் அடர்த்தி அதிகரித்து, ஆறு மாதம்வரை வந்த மெம்ப்ரேன் மூன்று மாதம்வரை மட்டுமே வரும். நாளடைவில் தண்ணீர் முற்றிலுமாக மாசு கொண்டதாகிவிடும். அதை நாம் குடித்து, நோயாளிகளாக மாறுகிறோம்.
கே: உங்கள் ஃபில்டர் எப்படிச் செயல்படுகிறது?
ப: IMMT-CSIR அங்கீகரித்த ஃபில்டர் இது. நமது உடம்பிற்குக் கெடுதலானதை மட்டுமே இது வடிகட்டும். அதாவது பேக்டீரியா, வைரஸ், இரும்பு போன்றவற்றை. மற்ற வடிகட்டும் முறைகளில் உப்புகளெல்லாம் போய்விடும் என்று பெருமையாகச் சொல்வார்கள். இவற்றில் நமது உடம்பிற்குத் தேவையானது எது, தேவையற்றது எது என்று எப்படி உங்களால் சொல்லமுடியும்? உடம்பிற்குக் கெடுதல் செய்பவை இரண்டு தான். ஒன்று ஃப்ளூரைடு மற்றது ஆர்செனிக். கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் ஃப்ளூரைடு காணப்படுகிறது. ஆர்செனிக் எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் அதிகம் இல்லை.

எஞ்சியவற்றில் நோய் தடுக்கும், எலும்பை வலுப்படுத்தும் தாதுக்கள் உள்ளன. அவை உடம்புக்கு அவசியம். பொட்டாசியம் குளோரைடு, மக்னீசியம் போன்றவற்றை இட்லி-சாம்பாருடன், சோறுடன் கலந்து சாப்பிடமுடியாது. அவை நீர் மூலம்தான் உடலுக்குள் சென்றாக வேண்டும். ஆனால் இந்த உப்புக்களையும் நாம் வடிகட்டி விடுவதால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களாக, நோயாளிகளாக ஆகிறோம்.

முன்பெல்லாம் ஊற்று நீர், ஊருணி நீர், ஆற்று நீர் குடித்து வளர்ந்தவர்கள் கூட இன்றைக்கு இந்த RO நீரைத் தவிர வேறு நீரைக் குடித்தால் உடல் நலமில்லாது போய்விடுகின்றனர். இதுபோன்ற ரசாயன மற்றும் செயற்கைத் தயாரிப்பு வடிகட்டிகள் செய்யும் வேலை இது. உங்கள் ஆயுளுக்கும் நீங்கள் அந்தத் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும் என்பதுதான் இவ்வகை வணிகத்தின் நோக்கம். மூன்றாம் உலகப் போர் என்பதே தண்ணீரால்தான் வரப்போகிறது என்கிறார்கள். அது உண்மை. இந்த வாட்டர் வாரில் 1,780,000 கோடி பிஸினஸ் இருப்பதால்தான் பெரிய பெரிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்து தொழில் நடத்துகின்றன. ஆனால் அவை மெட்ரோக்களில் மட்டுமே தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனவே தவிர கிராமப்புறங்களில் இல்லை.

இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மை கிராமம் அல்லது கிராமம் சார்ந்த நகர்ப்பகுதியில் வாழ்கின்றனர். அவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு நல்ல குடிநீர் இல்லை. இந்த வடிகட்டிகள் அவர்களுக்குத்தான் அதிகம் தேவை. அதனால் நமது கண்டுபிடிப்புகள் அவர்களுக்குச் சென்று சேரவேண்டும் என்று முனைப்புடன் நான் செயல்பட்டு வருகிறேன். (பார்க்க: www.terafilwater.in)



கே: சந்தையில் இருக்கும் பிற வடிகட்டிகளுடன் உங்கள் ஃபில்டர் எந்த வகையில் மாறுபடுகிறது?
ப: எனது ஃபில்டர் ஆறு வருடமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. இதுவரை எந்தப் புகாரும் இல்லை. சுத்தம் செய்வதும் எளிது. ஃபில்டரை கழற்றி நீர் விட்டுக் கழுவி, தேங்காய் நார் போன்றவற்றைக் கொண்டு நன்றாகச் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். இன்னும் பல வருடங்கள் வரும் என்றே நான் நம்புகிறேன். பயன்படுத்த மிக எளிதானது. பாமர மக்களும் எளிதாக இதைக் கழற்றிச் சுத்தம் செய்து மாட்டிவிடலாம். தரமான மூலப் பொருள்களைக் கொண்டு இதைத் தயாரித்தளிக்கிறோம்.

ஒரு அங்கன்வாடியில் பணியாற்றும் அதிகப் படிப்பறிவற்ற ஆயா ஒருவர் எனது ஃபில்டரைப் பற்றித் தொலைக்காட்சியில் தெளிவாக, விரிவாக, விளக்கிக் கூற முடிகிறது என்றால் அதைவிடப் பெரிதாக என்ன பாராட்டு எனக்கு வேண்டும்! இதுவரை 40,000 கிராமங்களுக்கு வாட்டர் ஃபில்டர் கொடுத்திருக்கிறேன். ஒன்றின் விலை 750 ரூபாய்தான். 15 லி. திறன் கொண்ட, வீடுகளுக்கான ஃபில்டர்களையும், 300 லி. திறன்கொண்ட இளநீர் வடிவ ஃபில்டரையும் (பார்க்க படம்), 2500 லி. திறன் கொண்ட டேங்க் வடிவ ஃபில்டரையும், தேவைக்கேற்ப உருவாக்கித் தருகிறோம் (பார்க்க: cleanwater.co.in/gallery/). அதேசமயம் எனது வடிகட்டிகள் ஃப்ளூரைடை நீக்குவதில்லை. ஃப்ளூரைடு அதிகமுள்ள பகுதிகளிலிருந்து வருபவர்களிடம் நான் இதைச் சொல்லிவிடுகிறேன்.

கே: நீங்கள் இதை ஏன் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க முனையவில்லை?
ப: செய்யலாம். அதற்கென வணிக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு செயல்பட வேண்டிவரும். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு எனது கண்டுபிடிப்பு பயன்பட வேண்டும் என்பதுதான் என் அடிப்படை நோக்கம். ஆகவே கிராமம் சார்ந்து அங்குள்ள என்.ஜி.ஓ.க்கள் மூலம்தான் நான் விற்பனை செய்துவருகிறேன். வணிக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து விற்க ஆரம்பித்தால், ஒரே நாளில் இதே மாடலில் ஆயிரக்கணக்கில் டூப்ளிகேட்கள் உருவாகிச் சந்தைக்கு வந்துவிடும். எனது நோக்கம் பாதிக்கப்படும்.

There is a big difference between Enterprises and Social Enterprises. They are business oriented. We are society oriented. எங்களுக்கு இவை யாரைப் போய்ச் சேருகிறது, எப்படிப் போய்ச் சேருகிறது என்பதெல்லாம் ரொம்ப முக்கியம். நான் அதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். இதைப் பயன்படுத்தி லட்சக்கணக்காகச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் இல்லை. பணத்தின் பின்னால் அலைவது என் நோக்கமல்ல.

கே: உங்களுடைய கண்டுபிடிப்புகளுக்கு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் வரவேற்பு எப்படி உள்ளது?
ப: கஸ்டம்ஸ் பார்ட்ஸ் ஆன்லைன் (custompartsonline.com) என்ற நிறுவனத்தின் மூலம் நாங்கள் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசுசாரா அமைப்புகள் மூலம் மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்பப் பொருட்களை விற்பனை செய்கிறேன். தமிழ்நாட்டின் திருவள்ளூரில் அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு 2300 ஃபில்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல அஸ்ஸாமின் பிரைமரி ஹெல்த் சென்டர்கள், ஒரிஸாவின் புவனேஷ்வர், கர்நாடகா என இந்தியாவின் பல பகுதிகளிலும் இவற்றை விற்பனை செய்திருக்கிறோம். மக்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் அரசின் ஆதரவு இல்லை. அரசு அதிகாரிகளும் இதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் என்ன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. எனது மிஷன்: Make Science reach villages. விஷன்: Affordable Water and sanitation for all. அவற்றை நோக்கியே நான் சென்று கொண்டிருக்கிறேன்.



கே: உங்களது தொழிற்சாலை எங்குள்ளது?
ப: செங்கல்பட்டில் உள்ளது. அது ஒரு பழைய அரிசி மில். ஓடாத அதனை வாடகைக்கு எடுத்து, சரிசெய்து அங்கு எனது தொழிற்சாலையை நடத்தி வருகிறேன். அந்த ரைஸ்மில் முதலாளி ஒரு விவசாயி. தற்போது வானம் பொய்த்ததால் விவசாயம் செய்ய இயலாமல் நலிந்து போய்விட்டார். அவர் தொழிற்சாலையை பொறுப்பாகப் பார்த்து வருகிறார். என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என அவருக்கும், அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் நான் பயிற்சி அளித்திருக்கிறேன். நான் அவ்வப்போது சென்று வேண்டியவற்றைச் செய்து வருகிறேன். நேனோ கேண்டில் ஃபில்டர் அங்கே தயாராகிறது. தேவையான மற்ற பொருட்களை நான் டிசைன் செய்து உருவாக்குகிறேன். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளியை நான் சூபர்வைசர் ஆக நியமித்திருக்கிறேன்.

ஃபில்டர் தயாரிக்கப்படும் வீடியோவைக் காண


கே: யாவர்க்கும் கழிவறை (Toilet for all) பற்றிச் சொல்லுங்கள்...
ப : சில ஆண்டுகளுக்கு முன்னால் திருச்சியில் டாய்லெட் பற்றி ஒரு அகில இந்தியக் கருத்தரங்கம் நடந்தது. அதில் எனது டிசைன் இடம்பெற்றது. செங்கல், மணல், சிமெண்ட் என்று எதுவும் தேவைப்படாத எனது டாய்லெட் மாடலுக்கு நல்ல வரவேற்பு. ஆனால் அரசின் வரவேற்பு இதற்குக் கிடைக்கவில்லை. அவர்கள் டாய்லெட் கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடி மானியத்தை அதிகாரிகள் மூலம் வழங்குகின்றனர். அதற்கு பல்வேறு சட்டதிட்டங்கள். இதன்மூலம் பணம்தான் மக்களுக்குச் சென்று சேர்கிறதே தவிர, டாய்லெட்கள் கட்டப்படும் சதவிகிதம் மிகமிகக் குறைவுதான்.

இன்றைக்கு இந்தியாவுக்கு 17.5 கோடி டாய்லெட்கள் தேவை என்பது. சப்ளை-டிமாண்ட் என்ற வகையில் பார்த்தால், டிமாண்ட் அளவுக்கு சப்ளை இல்லை. தற்போதைய நிலையில் 1.75 கோடி டாய்லெட்களைக் கூட நிறுவ முடியாது. செங்கல், மணல், ஜல்லி, சிமெண்ட், லேபர் என்று பல காரணிகள் இதனைத் தீர்மானிக்கின்றன. ரெடிமேட் டாய்லெட்களை நிறுவுவதாக இருந்தால் படிப்படியாக இந்த இலக்கைச் சீக்கிரத்தில் எட்டிவிட முடியும்.

இந்தியாவில் உருவாக்கப்படும் செயற்கை டாய்லெட் மாடல்களில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அவை வெயில் காலத்தில் சூடு தாக்கும். மழைக் காலத்தில் குளிர் உள்ளே வரும். காரணம், மூலப்பொருட்களின் தரம்தான். இந்தக் குறைகள் இல்லாமல் எளிமையானதாக, சுகாதாரமிக்கதாக, வெயில், மழை, குளிர் என்று எந்தக் காலத்திலும் பயன்படுத்தக் கூடியதாக ஒரு மாதிரியை உருவாக்க நினைத்தேன். உழைத்தேன். அப்படி உருவானதுதான் எனது மாடல். இதை நிறுவ செங்கல், சிமெண்ட் தேவையில்லை. அதிக நாட்களோ, அதிக உழைப்போ தேவைப்படாது. எங்கு வேண்டாமான்லும் கொண்டு செல்லமுடியும். அதிகபட்சம் இரண்டே நாட்களில் ரெடி செய்துவிடலாம். விலையும் அதிகம் என்று சொல்லிவிட முடியாது. மக்கள் வசிக்கும் இடத்தின் தன்மைக்கேற்ப இதனைப் பயன்படுத்தலாம். வெயில், மழை, புயல், சூறாவளி என எதனாலும் பாதிக்கப்படாது நிலைத்து நிற்கும்.

கே: ஓ. எப்படி?
ப: காரணம், இதன் மூலப்பொருள். இதை ஃபைபர் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கிறோம். ஏர் இன்சுலேஷனோடு அமைக்கப்படுபவை அவை. ஆர்.சி.சி. சுவர் என்ன வலிமையோ அதே வலிமை கொண்டவை. நீடித்து உழைக்கும். ஒரு கான்க்ரீட் டாய்லெட் அதிகபட்சம் 60 ஆண்டுகள் பயன்படும். அதன்பின் சிதிலமடையும். ஆனால் இது எத்தனை ஆண்டுக் காலம் வேண்டுமானாலும் நீடித்திருக்கும். இதில் இரண்டு பகுதிகள். ஒன்று டாய்லெட். மற்றொன்று டிரெய்னேஜ். கழிவுநீருக்கு வட்டமாகக் குழி தோண்டி, வட்ட வடிவ சிமெண்ட் உறைகளை இறக்கி, மேலே சிமெண்ட் ஸ்லாப் கொண்டு மூடினால் போதும். இடத்திற்குத் தகுந்தவாறு சிறு, சிறு மாறுதல்களோடு இதனைச் செய்ய வேண்டும்.

கே: இதற்கு என்ன செலவு ஆகும்?
ப: அது அந்தந்த மாடலையும் இடத்தையும் பொறுத்து மாறுபடும். இதை நிறுவ 30-40 ஆயிரம் வரை செலவாகும். இதன் மூலப்பொருள், தயாரிப்பு, விற்பனை என விதிக்கப்படும் பல்வேறு வரிகளைக் குறைத்தால், கடன் வசதிகளை எளிமையாக்கினால் இன்னமும் குறைவான விலையில் தர முடியும்.

கே: ரீச் ஃபவுண்டேஷன் மூலம் நீங்கள் செய்துவரும் ஆலயத் திருப்பணிகள் பற்றிச் சொல்லுங்கள்.
ப: ஆலயங்கள் மக்களின் சொத்து. அவர்களின் அனுமதி இல்லாமல் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் சீர் செய்கிறேன் என்று sand blasting செய்வது, வர்ணம் பூசுவது என்று சிற்பங்களைப் பாழ்படுத்துகிறார்கள். நமது வரலாற்றுப் பொக்கிஷங்களைச் சீர்குலைக்கிறார்கள். நமது பழமை வாய்ந்த சிற்பங்கள் பலவும் சேதமாகிவிட்டன. பல பழமையான ஓவியங்கள் அழிந்து போய்விட்டன. பழங்கால ஓவியங்களை அழித்துவிட்டு அதன்மேல் புதிதாக ஓவியங்களை வரைகிறார்கள். யாருக்கும் இதன் அருமை தெரியவில்லை. இதுபற்றி மக்கள் அறிய வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகிறோம்.

ரீச் ஆரம்பித்து எட்டு வருடங்கள் ஆகின இந்த கிட்டத்தட்ட 73 ஆலயத் திருப்பணிகளைச் செய்துள்ளோம். அதுவும் அரசாங்கத்தாலேயே 'இனி ஒன்றும் செய்வதற்கில்லை' என முற்றிலுமாகக் கைவிடப்பட்ட உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் ஆலயத்தைச் சீரமைத்ததை முக்கியமாகச் சொல்லலாம். மரங்கள் வளர்ந்து கோயில் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. அதன் அருகே செல்லவே பலரும் அஞ்சினர். அது பல்லவர்கள் கட்டிய ஆலயம். பின்னர் சோழர்கள் விரிவாக்கிக் கட்டினார்கள். கருங்கல் அஸ்திவாரத்தில் செங்கல் வைத்துக் கட்டியிருக்கிறார்கள். மூன்று பக்கமும் மூன்றடிக்கு மேல் பிளந்து விட்டது. பின்னர் நாங்கள் ஐ.ஐ.டி.யுடன் இணைந்து சீர் செய்தோம்.

அதுபோல வேப்பத்தூர் ஆலயத்தைச் சீரமைத்ததும் முக்கியமானது. மூன்றுநிலை கட்டுமானம் கொண்ட மிகப்பெரிய கோயில். பல்லவர் காலத்துக்கும் முற்பட்டது. சோழ மண்டலத்தில் கிடைத்த முழுக்க முழுக்கச் செங்கல்லில் கட்டப்பட்ட பல்லவர் காலக் கோயில் இதுதான். இதனை நமது பண்டைய தொழில் நுட்பத்தின் அதிசயம் எனலாம். உச்சிவரைக்கும் சுமார் 13 விதமான செங்கல் வகைகளை அவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர். சுவரின் கனமே இரண்டு மீட்டர். ஒழுங்கான, நீள்சதுர வடிவச் செங்கல்களை அவர்கள் உபயோகித்துள்ளனர். நான் பிரபல செங்கல் தயாரிப்பாளர்களை அணுகி அந்தத் தொழில்நுட்பம் பற்றிச் சொல்லி அந்த மாடலில் செங்கல்லைத் தயாரிக்கச் சொன்னேன். யாவருமே சாத்தியமில்லை என்று சொல்லி விட்டார்கள். அந்த அளவுக்கு தொன்மையும் நுட்பமும் கொண்ட ஆலயம் அது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் நூற்றுக்கால் மண்டபத்தைச் செப்பனிட்டதும் முக்கியம். அங்குள்ள சிற்பங்களை ஒழுங்கு செய்து, மேல்பூச்சுக்களை அகற்றி, தூண்களைச் சரிப்படுத்தி சீரமைத்தோம். ஆலயச் சீரமைப்பை வேறு யாரோ செய்தனர். இரண்டையும் பார்த்த பொதுமக்கள், மண்டப வேலை செய்தவர்களையே ஆலயச் சீரமைப்புப் பணியையும் செய்யச் சொல்லியிருக்கலாமே என்றனர். இது எங்களுக்குக் கிடைத்த பாராட்டு.

தமிழகத்தின் 600 உழவாரப் பணி அமைப்பினர் எங்களுடன் இருக்கின்றனர். அவர்கள் மூலம் எங்கெங்கெல்லாம் சிதிலமடைந்த ஆலயங்கள் உள்ளன என்பதை அறிந்து அப்பணியில் ஈடுபடுகிறோம். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற அமைப்பை ஆரம்பிக்க எங்களை அழைக்கின்றனர்.

கே: கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாள்ர் என்று பல தளங்களிலும் செயல்பட்டு வருகிறீர்கள், தமிழார்வத்துக்குக் காரணம் என்ன?
ப: கவியோகி சுத்தானந்த பாரதியார் என் அம்மாவின் சொந்த சித்தப்பா. எனக்குத் தாத்தா. அந்த வகையில் மரபுவழி வந்ததாக இருக்கலாம். இளம்வயதிலேயே எனக்குக் கலைகளில் ஆர்வம் உண்டு. கற்பனை உண்டு. வாய்ப்பமைந்திருந்தால் நான் ஒரு ஓவியனாகவோ, புகைப்படக் கலைஞனாகவோ ஆகியிருப்பேன். இணையமும் என் படைப்பார்வத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

கே: உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பற்றி...
ப: ஒரு ஆணிண் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். எனது வெற்றிகளுக்குப் பின்னால் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். ஒருவர் எனது தாய். மற்றொருவர் எனது மனைவி. இருவருமே என்னைப் புரிந்துகொண்டு அனுசரணையாக இருப்பதால் பலவற்றைச் செய்ய முடிகிறது. நான் அதிகம் சம்பாதிக்கவில்லை. இருப்பதும் வாடகை வீடுதான் என்றாலும் அதுபற்றித் தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்தாமல் எனக்கு உதவி வருவகிறார்கள். அதுபோல பத்திரிகை மற்றும் மீடியாவும் என்னை ஊக்குவித்து வருகிறது. "கண்ணே களிமண்ணே" என்ற தலைப்பில் முதன்முதலில் எனது கண்டுபிடிப்புகளைப் பற்றி புதிய தலைமுறையில் விரிவாக எழுதியிருந்தார்கள். பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்து, பிசினஸ் இந்தியா என்று நிறையப் பத்திரிகைகளில் எழுதி மக்களிடம் கொண்டு சென்றார்கள். எனக்கு மார்க்கெடிங் யார் என்று பார்த்தால் பத்திரிகைகளும் எனது வாடிக்கையாளரும் தான்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: எளிய மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பலவற்றைச் செய்யவேண்டும் என்பதுதான். குறிப்பாக விவசாயம். விவசாயிகளை ஒன்றிணைத்து, mass organic revolution ஒன்றை ஏற்படுத்தி, அனைத்துப் பயனையும் விவசாயிகளே, உழைப்பாளிகளை அடைவதற்கு ஆவன செய்ய வேண்டும். Organic பொருட்களை பெரும் பணக்காரர்கள்தான் வாங்கிச் சாப்பிட வேண்டுமா என்ன, ஏழைகளும் சாப்பிட வேண்டும்; விளைவிக்கும் அவர்களுக்கும் அது கிடைக்கவேண்டும் என்பது எனது லட்சியங்களுள் ஒன்று. நிச்சயம் எனது எண்ணம் ஈடேறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனென்றால், நாம் ஒரு கருவிதானே! நமது ஆர்வமும் லட்சியமும் உண்மையாகவும், உறுதியாகவும் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இறைவன் அதனை நிறைவேற்றி வைப்பான்.

விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தபோதும் கூடச் சளைக்காமல் நமது கேள்விகளுக்குப் பதில் சொன்ன சந்திரசேகரனுக்கு நன்றி கூறி, மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


உலகின் மலிவு விலை ஃபில்டர்
சிங்கப்பூரில் ஃபில்டர்களுக்கான கண்காட்சி நடந்தது. அந்த எக்ஸ்போவில் நானும் பங்கேற்றேன். அதில் மிகக் குறைவான விலையில் ஃபில்டர் தயாரித்திருப்பதாகச் சொன்னார்கள். விலை 65 டாலர். அது செராமிக் கேண்டில் கொண்டது. செராமிக் கேண்டிலில் நிறைய பூசணம் (fungus) பிடிக்கும் என்பதால் அது தோல்வியுற்ற தயாரிப்பு. அதைத்தான் மிக விலை குறைந்தது என்று சொன்னார்கள். ஆனால் நான் தயாரிக்கும் ஃபில்டரின் விலை வெறும் 750 ரூபாய்தான். உலகிலேயே மிகமிக விலை குறைவானது எனது தயாரிப்புதான். ஆனால் அந்த எக்ஸ்போவில் வெற்றியாளர்களை பொருட்களின் தரம், விலை, பயன் இவற்றினால் அல்லாது ஓட்டுக்களின் மூலம் தேர்ந்தெடுத்தார்கள். அது எனக்குத் தெரியாது. 300 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நான் தோல்வியுற்றேன். ஆனாலும் அது எனக்கு மிகுந்த உத்வேகத்தைத் தந்தது.

- ஜெ. சந்திரசேகரன்

*****


காஷ்மீர்க்காரரின் தந்திரம்
ஒரு தடவை காஷ்மீர்க்காரர் வந்தார். 10 ஃபில்டர்களை வாங்கினார். நானும் "அட, காஷ்மீருக்கே நமது ஃபில்டர் போகப் போகிறது" என்று ரொம்ப ஆவலாக இருந்தேன். ஆனால், போனவர் போனவர்தான். பதிலேதும் இல்லை. ஒரு வருடம் கழித்து ஒருநாள் செய்தித்தாளில் சென்னை ஐ.ஐ.டி.யின் ஒரு விளம்பரம் பார்த்தேன். மின்சாரம் இல்லாத, ஆர்செனிக் இல்லாத நீர் வடிகட்டி பற்றிய விளம்பரம் அது. ஆர்வத்துடன் அங்கு சென்றேன். அவர்கள் இரும்பு ஆக்ஸைடால் உருவான, ஆர்செனிக்கை உறிஞ்சும் கலவையை அதில் வைத்திருந்தார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் டெமோவுக்கு என்னுடைய வாட்டர் ஃபில்டரைத்தான் வைத்திருந்தனர். அதில் ட்யூப் போட்டு கனெக்ட் செய்து இந்த ஆர்செனிக் அகற்றும் கருவியை இணைத்திருந்தனர். கேட்டதற்கு, இந்த ஃபில்டர் எல்லாவற்றையுமே வடிகட்டுகிறது, ஆனால் ஆர்செனிக்கை அகற்றுவதில்லை. அதை அடிப்படையாக வைத்து ஆர்செனிக் ஃபில்டரைக் நாம் கண்டுபிடித்தால் போதுமே என்று உருவாக்கியதாகச் சொன்னார்கள்.

என்னிடம் 10 பில்டர்களை வாங்கிச் சென்ற காஷ்மீர்க்காரர், தனது தயாரிப்பாக இதைக் காண்பித்து, விற்றுவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதன் பின் ஐ.ஐ.டி.யோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த ஆர்செனிக் ஃபில்டரை சிறிய வடிவில் உருவாக்கினேன். அதை டெமோ பார்த்தபோது சிறப்பாகச் செயல்பட்டது. ஐ.ஐ.டியும் அதை அங்கீகரித்தது. பின் அதையும் உள்ளடக்கி, ஐ.ஐ.டி மூலமும் எனது ஃபில்டர்கள் விற்பனையாகத் துவங்கின. அடுத்தடுத்த வருடங்களில் ஃப்ளூரைடை அகற்றும் ஃபில்டரையும் உருவாக்கலாம் என்று ஐ.ஐ.டி.யில் சொல்லியிருக்கிறார்கள்.

- ஜெ. சந்திரசேகரன்

*****


கிடங்கரை
செங்கல்பட்டு அருகே இடமச்சி என்று ஒரு ஊர். அங்கு ஒரு பெண் தனது திருமணத்திற்கான நகைகளையெல்லாம் விற்று சிவாலயத் திருப்பணி செய்கிறார் என்று சொன்னார்கள். ஊர்க்காரர்கள் உதவியுமில்லாமல், சொந்தப் பணத்தைக் கொண்டும், நன்கொடை வாங்கியும் அந்தப் புனிதப் பணியை அவர் செய்துவந்தது தெரிந்தது. எனக்கு மிகவும் ஆச்சரியம். அவரோடு ஒப்பிட்டால் நாம் செய்வது ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. செங்கல், சிமெண்ட், மணல், ஜல்லி என்று ஒவ்வொன்றயும் அவர் நன்கொடையாகக் கேட்டுக் கோயில் பணிகளைச் செய்ய, அவரையும் ஒரு ஸ்தபதி ஏமாற்றிவிட்டார். அஸ்திவாரம் சரியில்லாமல் போய்விட்டது. பின் நான் எனது ரீச் ஃபவுண்டேஷன் நண்பர்கள் மூலம் அஸ்திவாரத்தை பலப்படுத்தச் செய்தேன். 'டெம்பிள் விசிட்' ராஜு அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டார்.

பக்கத்துக் கிராமத்தில் ஒரு புளியமர சிவன் இருக்கிறார். அவரை எட்டாம் வகுப்பு படிக்கும் திலகவதி என்ற பெண் பூஜை செய்துவருகிறாள் என்று சொன்னார்கள். ஆச்சரியத்துடன் சென்று பார்த்தேன். கிடங்கரை என்பது பழங்காலப் பல்லவர் கோயில். சிதிலமடைந்து மரங்கள் சூழ்ந்து கிடந்தது. அந்த லிங்கம் சுயம்புத் திருமேனி. இரண்டு பெரிய மரங்களுக்கிடையே அந்த லிங்கேசர் ஒடுங்கிக் கிடந்தார். 'ருணஹர ஈஸ்வரர்' என்பது அவர் பெயர். ருணம் என்றால் கடன். கடனைத் தீர்க்கும் வல்லமையுள்ளவர் அவர் என்பதும் தெரிய வந்தது. தனாகர்ஷணம் உடைய ஈசன் அவர். அது தவிர அந்த ஊரின் பெயர் கிடங்கரை அல்ல. கடன்கரை. கடனைக் கரைக்கும் ஈசனைக் கொண்ட ஊர் என்பதால் அந்தப் பெயர். அந்த ஊர் மக்களுடன் பேசி, ஆலய நிர்மாணப் பணிகளைச் செய்தது மறக்க முடியாத அனுபவம்.

- ஜெ. சந்திரசேகரன்
Share: 




© Copyright 2020 Tamilonline