Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
அயோத்தி
இதோ ஒரு இந்தியா
சொல்லாயோ, வாய் திறந்து...
- T.D. ராஜேஸ்வரன்|ஆகஸ்டு 2014||(1 Comment)
Share:
தென்றல் சிறுகதைப் போட்டி – சிறப்புத் தேர்வு

நான் காரை ஓட்டிக்கொண்டே ரியர்வியூ மிரரில் பார்த்தேன். மங்கையும் அவளின் அம்மாவும் நன்றாக சாய்ந்து உட்கார்ந்த வண்ணம் வெளியில் மதில் சுவர்களில் ஓட்டப்பட்டிருந்த 'தலைவ'ரின் புதுப்படப் போஸ்டர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்கள். அவர்களின் முகத்தில் ஒரு ஆர்வமும் டென்ஷனும். டாக்டரான எனக்கே மங்கை என்ன சொல்லுவாளோ என்ற படபடப்பு இருந்தது உண்மைதான்! என் நிம்மதி, அப்பாவின் கடைசிக்கால அமைதி எல்லாம் மங்கை வாய் திறந்து சொல்லப்போகும் வார்த்தைகளில்தான் இருக்கின்றன.

காரை வேளச்சேரியில் இருந்த என் தென்னத்தோப்பின் நடுவே இருந்த பங்களா முன்னால் நிறுத்தினேன். வாட்ச்மேன் வந்து கதவைத் திறந்து விட்டான். மூவரும் இறங்கினோம். வெளி வராண்டாவில் சேரில் நர்ஸ் தனபாக்கியம் உட்கார்ந்து ஏதோ நாவலை படித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றாள். "அப்பா நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கிறார். விழிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். இரவு முழுவதும் நிம்மதியாகத் தூங்கினார்" என்றாள்.

"நீ உட்கார், நாங்கள் சப்தம் போடாமல் உள்ளே போய்ப் பார்க்கிறோம்" என்று சொல்லி மங்கையையும் அவள் அம்மாவையும் உள்ளே அழைத்துச் சென்றேன். ஹாலில் ஒரு கட்டிலில் அப்பா படுத்திருந்தார். காலை சூரிய வெளிச்சம் பரவி ஹால் முழுவதும் பளிச்சென்று தெரிந்தது.

கட்டிலில் வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்து படுத்திருந்த அப்பாவின் முகத்தில் திட்டுத்திட்டாகச் சதை வளர்ந்து காய்த்துப் போயிருந்தன. மூக்கு விரிந்து சப்பையாகி இருந்தது. காதுகள் இயற்கையான அழகிய வடிவை இழந்து தடித்துக் காய்த்துப் போயிருந்தன. கட்டிலின் மேலே இருந்த அவரது கைவிரல்கள் மடங்கி சுருங்கி இருந்தன. சில விரல்களின் நகமே இல்லாமல் விரல் நுனிகள் காணாமல் போயிருந்தன. இரண்டு கால்களிலும் சாக்ஸ் போட்டுப் பாதங்கள் மூடப்பட்டு இருந்தன.

வேறு எதையோ எதிர்பார்த்து என்னுடன் வந்த மங்கையின் முகத்தில் ஆச்சரியம், வியப்பு. அவளது அம்மா முகத்திலோ சகிக்கமுடியாத அருவருப்பு. திகைத்துப்போய் நின்றிருந்த இருவரில் முதலில் மங்கைதான் பேசினாள். "டாக்டர், இவருக்கு என்ன ஆச்சு?"

"மங்கை, நான் சொல்லுவதை நடுவில் பேசாமல் கேள். இவர்தான் பெற்று, வளர்த்து, டாக்டருக்கு படிக்க வைத்து என்னை ஆளாக்கியவர். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அதே கவலையில் என் அம்மாவும் இறந்து போய்விட்டார்கள். ஆறுமாதம் முன்புதான் இவர் விழுப்புரத்திற்கு அருகே 32 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மழவந்தாங்கல் கிராமத்தில் இருக்கும் கஸ்தூர்பா குஷ்ட நிவாரண நிலையத்தில் இருப்பதாகத் தெரிந்து போய் பார்த்தேன்.

"என்னைப் பார்த்து அழுத அவர் தனக்கு இந்த நோய் இருப்பதைக் கண்டுபிடித்ததும், குடும்பத்திற்குக் கெட்ட பேர் வரக்கூடாது என்று அந்த நிவாரண நிலையத்தில் பணம் கொடுத்துச் சேர்ந்துவிட்டதாகச் சொன்னார். தொழுநோய் ஆரம்பத்தில் தொற்றும் தன்மையானதாக இருந்தாலும் சரியான மருந்தைச் சாப்பிட ஆரம்பித்த உடன் தொற்றும் வீரியத்தை இழந்துவிடும். இப்போது மருந்துக் கட்டுப்பாட்டினால் முழுவதும் குணமாகிவிட்டது என்று சொன்னார். ஆனாலும் உடலில் ஏற்பட்ட மாறுதல்களை மறைக்க முடியாததால் அங்கேயே தங்கி இருப்பதாகவும் சொன்னார். நான் அதற்கு இப்போதெல்லாம் வைத்தியம் மிகவும் முன்னேறிவிட்டது, அறுவை சிகிச்சை செய்து மாற்றலாம் என்பதை விளக்கிச் சொன்னேன். அத்தகைய ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னேன்.

"அப்போதும் தான் அங்கு இருப்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார். ஆனால் போன மாதம் நிலையத்தின் டாக்டர்கள் என்னைக் கூப்பிட்டு "உங்களின் அப்பாவுக்கு வயிற்றில் புற்றுநோய் வந்துவிட்டது. இதைக் குணப்படுத்துவது முடியாத காரியம். மிஞ்சிப்போனால் இன்னும் ஒரு வருடம் உயிருடன் இருப்பார். உங்களுக்கு வசதி இருக்கிறது. இவரைக் கொண்டுபோய் வாழ்க்கையின் கடைசி வருடத்தை நிம்மதியாக கழிக்க ஏற்பாடு பண்ணுங்கள்" என்று சொல்லி விட்டார்கள்.

"இவர் உரிய மருந்தைச் சாப்பிட்டு தொழுநோயில் இருந்து பரிபூரணமாக குணமாகி விட்டதால் இவரால் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தொற்றும் ஆபத்து இல்லை. ஆனாலும் என் நாகரீக மனைவிக்கு இதில் விருப்பம் இல்லை. அசிங்கம், மானக்கேடு என்று ஃபீல் பண்ணுகிறாள், என்னோடு சண்டை போடுகிறாள். அதனால்தான் எனக்குச் சொந்தமான இந்த பங்களாவில் ரகசியமாக கொண்டுவந்து வைத்து மூன்று ஷிஃப்ட் நர்ஸுகளை வைத்து பார்த்துக் கொள்கிறேன். ஆனாலும் அதில் அப்பாவுக்குத் திருப்தி இல்லை. அவர்கள் கடனே என்றுதான் செய்கிறார்களே தவிர அதில் ஒரு நேச உணர்ச்சி இல்லை என்பது அவரின் எண்ணம்.
"உன்னைப்பற்றி அனைத்தும் அறிந்துதான் இங்கே அழைத்து வந்தேன். இப்போது கேட்கிறேன் மங்கை, அவர் எதிர்பார்க்கும் அந்த அக்கரையுடன் கூடிய நேசம் அவரின் கடைசிக் காலத்தில் உன்னிடம் இருந்து கிடைக்குமா? நான் கேட்கவில்லை, கெஞ்சுகிறேன். அவருடைய கடைசிக் காலத்தில் நிம்மதியாக இருக்க உதவி செய், பதிலாக உனக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன்" என்று சொல்லி முடித்தேன். ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன்.

மங்கையின் அம்மா அவளுடைய கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள். நானும் அவர்களின் பின்னால் வெளியே வந்தேன். ஹாலில் வந்ததும் அவள் மகளிடம் ஆத்திரமாகப் பேச ஆரம்பித்தார்கள். "என்னடி மங்கை, இது அநியாயம். குஷ்டம் பிடிச்சு இருக்கும் ஒரு கிழவனை 24 மணி நேரமும் பார்த்துக்கறதுன்னா, அய்யய்யோ, என்னால் நினைச்சுக்கூட பாக்க முடியலையே! இதெல்லாம் நமக்கு வேண்டாம். ஒரு வேளை சாப்பிட்டாலும் நிம்மதியாக சாப்பிடலாம். வா வா, நாம் போயிடலாம்" என்றவள் மகளின் கையைப் பிடித்திழுத்து வெளியே போக முயன்றாள்.

"அம்மா, கொஞ்சம் இரு. என்னை இழுக்காதே. என்ன ஆயிற்று என்று நீ இப்போது இப்படி குதிக்கிறாய்?"

"என்னடி சொல்ற நீ. இந்தக் குஷ்டரோகியை நீ கவனித்துக் கொண்டால், உனக்கும் அந்த நோய் ஒட்டிக் கொண்டால், உன் அழகான உடம்பும், முகமும் அழுகிப் போய், அய்யோ அம்மா.... அதை எல்லாம் என்னால் நினைச்சுக்கூடப் பார்க்க முடியவில்லையே. சொன்னாக் கேளுடி, நமக்கு வேண்டாம் இதெல்லாம். அவரிடம் பணம் இருக்கிறது. நல்ல நர்ஸுகளை வைத்துப் பார்த்துக்கொள்ளட்டும்."

நான் பேசாமல் மங்கை என்ன பதில் சொல்லப்போகிறாள் என்பதைக் கேட்க ஆவலுடன் இருந்தேன். அங்கிருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு கவனித்தேன்.

"என்னம்மா அவர் இவ்வளவு நேரமும் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு இப்படிப் பேசுகிறாய்? அவரே ஒரு டாக்டர். அவர்தான் சொல்லிவிட்டாரே, நோய் பரிபூரணமாக குணமாகி விட்டது என்று. இனி மேலும் பரவாது, மற்றவர்களுக்குத் தொத்தாது என்று. அப்புறம் என்ன? உடல் அங்கங்கள் கொஞ்சம் பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது, அதனால் என்ன?

"இப்போது அதுவா பிரச்சனை? பெரியவர் இன்னும் ஒரு வருடத்தில் இறக்கப் போவது உறுதி. அவருடைய கடைசி காலத்தில் அவர் நிம்மதியாகச் சாக வேண்டும் என்று அவர் மகன் நினைக்கிறார். அதற்கு நம்முடைய உதவியைக் கேட்கிறார். அதற்கான எல்லா வசதிகளையும் தருகிறேன் என்கிறார். எத்தனை பேர்கள் இப்படி நினைப்பார்கள், செய்வார்கள்?

"தொழுநோயாளிகளுக்குத் தோள் தந்து, அனாதைகளுக்கு அன்பு தந்து, பிறருக்காகவே வாழ்ந்து மடிந்த மனித தெய்வம் அன்னை தெரசாவைப் பற்றி நீ கேள்விப்பட்டது இல்லையா? ஒரு வெள்ளைக்காரியான அவர்கள் கல்கத்தாவில் தொழுநோயாளிகளைத் தொட்டு அணைத்து சேவை செய்ததை உலகமே பாராட்டியதே! அவர்களே இதைத் தொண்டு என்று நினைக்கும்போது, நான் ஏன் அம்மா இந்தப் பெரியவருக்கு சேவை செய்யக்கூடாது? எனக்கு இந்த நோய் வந்து விட்டால் என் உடல் அழகு எல்லாம் போய் விகாரமாக ஆகிவிடும் என்று நீ சொல்லுகிறாய். எனக்குச் சிரிப்புதான் வருகிறது.

"இப்போது நான் செய்யும் இந்த விபசாரத் தொழிலில் கடைசியில் கிடைக்கக்கூடிய கூலி இப்படிப்பட்ட ஒரு நோய்தான் என்று உனக்குத் தெரியாதா? தெரிந்துதானே என்னை இந்தக் குழியில் தள்ளினாய். இப்போது நான் ஒரு மனிதருக்குச் சேவை செய்யப்போகிறேன் என்று சொல்லும்போது இப்படிப் பேசுகிறாய். உதவி செய்யும்போதுதான், மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போதுதான் நம்முடைய உள்ளம் உயர்ந்து நிற்கிறது, நாம் இறைவனை நெருங்குகிறோம் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். படித்து நர்ஸாக வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு அது முடியாமல் போய்விட்டது. இப்போது ஆண்டவனே அப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

"ஒருவேளை ஆண்டவன் இவருக்கு நான் செய்யும் சேவைக்குக் கூலியாக எனக்கு இந்த நோயையே கொடுத்தாலும் நான் அதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன். இதுதான் என் இறுதியான முடிவு. சார் நீங்கள் நிம்மதியாகப் போங்கள். இன்று முதல் இவருக்கு நான்தான் தாய், நான்தான் சினேகிதி, நான்தான் மகள். கவலையை விடுங்கள். அப்புறம் என்ன ஆகப்போகிறது என்ற முடிவை அந்த ஆண்டவனிடம் ஒப்படைத்து விடுவோம்" என்றாள்.

வயதில் சிறிய இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு விசாலமான, தெளிவான மனசு. என் கண்களில் நீர் வழிந்தது. வேறென்ன செய்வது, வாயில் வார்த்தைகள் வரவில்லையே!

T.D. ராஜேஸ்வரன்,
கொடுங்கையூர், சென்னை
More

அயோத்தி
இதோ ஒரு இந்தியா
Share: 




© Copyright 2020 Tamilonline