Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அன்பு காட்டுங்கள்!
- சித்ரா வைத்தீஸ்வரன்|ஜனவரி 2012|
Share:
அன்புள்ள சிநேகிதியே,

Motivation இல்லாத ஒருவருடன் எப்படிக் குடும்பம் நடத்துவது? எல்லோரும் சந்தோஷமாக பார்ட்டி, ஊர்சுற்றுதல் என்று போய்க் கொண்டிருக்கும் போது சுரத்தே இல்லாமல் என் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. என் இரண்டு வயதுவந்த பையன்களும் போரடித்துக் கொண்டு இருக்கிறார்கள். வசதி இல்லாததுதான் முக்கியக் காரணம். இரண்டாவது காரணம் என் கணவரின் போக்கு. அவர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. 10 வருடங்களுக்கு முன்பு நல்ல வேலையில் இருந்தார். Lay-Off செய்து விட்டார்கள். அப்புறம் சரியான பதவி எதுவும் கிடைக்கவில்லை. தற்காலிக வேலைகள், அங்கே-இங்கே என்று, நிரந்தர வருமானம் இல்லை. கம்ப்யூடர் கோர்ஸ் சிலவற்றைப் படிக்கச் சொன்னேன். அவர் அதைச் செய்யவில்லை.

இந்தியாவில் படித்த டிகிரிதான். இங்கே மேல்படிப்பு ஒன்றும் இல்லை. இவருக்கு நாற்பது வயதுக்கு மேல் என்னவோ படிக்கப் போக ஒரு வெட்கம். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். நான் இங்கே ஒரு community collegeல் சில கோர்ஸ்கள் முடித்ததால் எனக்கு ஒரு சுமாரான வேலை கிடைத்துவிட்டது. ஆனால் இவருக்கு வேலை வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் வருடத்திற்கு எட்டு, ஒன்பது மாதங்களாவது வேலை இருக்கும். இப்போது பாதி நேரம் வேலை இல்லை. வீட்டில் தூங்குகிறார். இல்லாவிட்டால் வெளியே எங்காவது சென்று விடுகிறார். எங்கே போகிறார் என்பது தெரியாது. நான் ஏதாவது கேட்டால் எரிச்சல் அடைகிறார். சமீபத்தில் ஏதோ இண்டர்வியூ போய்விட்டு வந்திருக்கிறார் போலிருக்கிறது. அதைக்கூட என்னிடம் சொல்லவில்லை. என் பையன்களிடம் இருந்துதான் தெரிந்து கொண்டேன்.

எங்களுக்குள் எந்த கம்யூனிகேஷனும் இல்லை. எனக்கு இருப்பதோ ஒரே ஒரு சகோதரி. அவளும் மிட்வெஸ்டில் இருக்கிறாள். நண்பர்கள் யாரும் அதிகம் இல்லை. இவரும் யாருடனும் பழக விரும்புவதில்லை. நாங்களும் எந்தப் பார்ட்டிக்கும் போவதில்லை. சமீபத்தில் நாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்கள். மன நிம்மதிக்கு அடிக்கடி அங்கு போய்விட்டு வரலாம் என்றால் போக வர 70 மைல் ஆகிறது. கேஸ் போட்டு கட்டுப்படி ஆகவில்லை. திருப்பித் திருப்பி வேலை, சமையல், பத்து தேய்த்தல், சாமான் வாங்குதல் - உடம்பு, மனசு இரண்டுமே சோர்ந்து போய்விட்டது. சரியான உத்தியோகம் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் நான் சொல்வதன் நியாயத்தைப் புரிந்து கொண்டு, என் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து குழந்தைகளுடன் வெகேஷன் திட்டம் போட்டு எங்காவது வெளியில் போய்விட்டு வரக்கூடாதா என்று என் மனதில் எவ்வளவோ ஆசைகள். இவர் குடும்பத்திற்கு எவ்வளவு உழைத்திருக்கிறேன். இந்தியாவில் நாங்கள் கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தோம். இரண்டு மச்சினர், ஒரு நாத்தனார், மாமியார், மாமனார் இவர்கள் எல்லோரையும் செட்டில் செய்து விட்டுத்தான் இங்கே வந்தோம். ஒரு மெஷின்போல் வாழ்க்கை அங்கே என்று நினைத்தால், இங்கே இன்னும் மோசமாக இருக்கிறது. ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது என்கிறார். உன் நச்சரிப்பு என்னால் தாங்க முடியவில்லை என்கிறார். எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்று கேட்கக்கூட ஒரு மனைவிக்கு உரிமை கிடையாதா? பணம் காசு இல்லாவிட்டாலும், ஒரு அந்நியோன்னியம் கூட இல்லை என்றால் என்ன செய்வது? நான் எங்கே தவறு செய்கிறேன் என்றே தெரியவில்லை. எப்படி அவர் மனதைத் திறந்து பேச வைப்பது என்பதும் புரியவில்லை. வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறது.

இப்படிக்கு
-------
அன்புள்ள சிநேகிதியே

உங்கள் பிரச்சனைக்கு என்னுடைய கருத்தைத் தெரிவிக்க இன்னும் கொஞ்சம் தகவல் தேவையாக இருக்கிறது. நீங்கள் எழுதியதை வைத்து நான் சில அனுமானங்கள் செய்கிறேன்.

* உங்கள் கணவர் எப்போதுமே reserved type ஆக இருப்பவரா அல்லது சில வருடங்களாகத் தான் இப்படி இருக்கிறாரா என்பது புரிபடவில்லை. எப்படி இருந்தாலும் உங்களுக்கு இந்த communication problem is one of miscommunications. 10 வருடங்களாக சரியான வேலை இல்லாத மனிதருக்கு இங்கு ஏற்படும் மன உளைச்சல்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாத கூச்ச சுபாவம் இருந்தால், அது உள்ளுக்குள்ளேயே அவருக்கு ஏற்படுத்தும் வேதனையை மனைவியாக இருக்கும் நீங்கள் புரிந்து கொண்டு அனுதாபப்படுகிறீர்கள். அந்த அனுதாபம் கேள்வியாக மாறும் போதுதான் there is a communication problem. அனுதாபத்தை அவர் அதிகாரமாக நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர் இன்னும் தனது கூட்டுக்குள் அமிழ்ந்து விடுகிறார். வார்த்தைகளுக்குப் பதிலாக நடத்தையில், பார்வையில் உங்கள் ஆதரவைக் காட்டினால் உங்களிடம் சிறிது மனம் திறந்து பேச வாய்ப்பிருக்கிறது. வேலை வாய்ப்பில் தோல்வியைக் காணும்போதெல்லாம் உங்களுக்கு பதில் சொல்லும்போது ஒரு குற்றவாளிக் கூண்டில் இருப்பதுபோல்தான் அவருக்குத் தோன்றும். ஏனென்றால் you are the bread-winner of the family. அவருடைய இயலாமை அவருடைய குற்ற உணர்ச்சியைத் அதிகப்படுத்தி நத்தையைப் போல் ஒடுங்கி விடுவார்.

* தன்னம்பிக்கை குறையும்போது motivationம் குறைந்து போய்விடுகிறது. வாழ்க்கையில் எல்லோருக்குமே தோல்விகளை 'லகான்'களாகப் பயன்படுத்தி முன்னேறத் தெரிவதில்லை. உங்கள் மேல் அவர் நம்பிக்கை வைத்து தன்னுடைய சுமைகளை இறக்கி வைத்தால்தான் முன்னேற்ற முயற்சியில் அவர் இறங்க முடியும். அதற்கு நீங்கள் அவரைப் புரிந்துகொண்டு அனுசரனையான கேள்விகள் மட்டும் கேட்டு அவரை மனதால் நெருங்க விடுங்கள். உதாரணமாக, அவர் இண்டர்வியூ போய்விட்டு தாமதமாக வந்தால், ஏன் இவ்வளவு லேட்? நான் உங்கள் மனைவிதானே, என்னிடம் சொல்லி விட்டுப் போகக் கூடாதா? - என்றெல்லாம் நீங்கள் கேட்பது நியாயம்தான். ஆனால் அந்த நியாயம் இங்கே வேலை செய்யாது. அதற்கு பதிலாக சாப்பிட்டீர்களா, காப்பி தரட்டுமா போன்ற அக்கறையான கேள்விகள் கேட்டுவிட்டு வேறு எதையும் ஆராய முயலாதீர்கள். அவரே கொஞ்சநேரம் கழித்து தான் சென்ற விஷயத்தைப் பற்றி மெல்லப் பேசுவார். ஒருவேளை ஏதும் சொல்லாமலும் இருக்கலாம். அதனால் நீங்கள் உடனே உங்கள் செய்கைக்கு பலனை எதிர்பார்க்க முடியாது. கொஞ்ச நாட்கள் தேவை அவர் உங்களைப் புரிந்து கொள்ள.

* இயந்திர வாழ்க்கை என்று நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் இயக்குவது நீங்கள்தான். You are financially and socialy independent. உங்கள் நேரத்தை எப்படி செலவு செய்வது, எப்படி சின்னச் சின்ன வெகேஷன் குழந்தைகளுடன் செல்வது என்பதெல்லாம் உங்கள் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் பொறுத்தது.

*
மனிதர்களின் சுபாவத்தை மாற்றுவது கடினம். நம் மனது சொல்வதை நாமே கேட்பதில்லை. அப்படியிருக்க, எப்படிப் பிறரை மாற்ற முடியும்? 'Accept the person' என்று சுலபமாக யாருக்கும் அறிவுரை வழங்க முடிகிறது. ஆனால் கடைப்பிடிப்பது மிகவும் கஷ்டம். எல்லாமே முயற்சிதான். பிறரை அவர்களாகவே நாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டால் நமக்கு அதிக டென்ஷன் இருக்காது. அதற்குத்தான் இந்த முயற்சி. வருத்தப்படாதீர்கள். வாழ்க்கை நலமாகத்தான் இருக்கும். எத்தனையோ குடும்பங்களில் ஒருவர்தான் குடும்ப வருவாய்க்கு ஆதாரமாக இருக்கிறார்கள். அது ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? எப்படி வாழ்க்கை முறையை எடுத்துக் கொள்கிறோம் என்ற பார்வைதானே முக்கியம்.

வாழ்த்துக்கள்.
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline