Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
செலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு
மடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு
உயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு
- இரத்தினம் சூரியகுமாரன்|டிசம்பர் 2011||(1 Comment)
Share:
நான் வேலை செய்யும் கம்பியூட்டர் கம்பனியும் கொலம்பியா பல்கலைக் கழகமும் சேர்ந்து செய்யும் ஆராய்ச்சி தொடர்பான சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள நியூ யோர்க் சென்றிருந்தேன். மன்ஹாட்டனில் நான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஒரு வாடகைக் காரில் பல்கலைக்கழக வாசலை அடைந்தபோது நேரம் காலை 8:25. கூட்டம் 8:30க்கு ஆரம்பிக்க இருந்ததால் விரைந்து உள்ளே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மாணவிகள் கூட்டத்தில் பரிச்சயமான முகமொன்று தெரிந்தது. கமலினி! இங்கே என்ன செய்கிறாள்? கவனிக்காத மாதிரிப் போய்விடலாமா என்று ஒருகணம் யோசித்தேன். ஆனாலும் முடியவில்லை.

"கமலினி, என்ன இங்கே?" என்றேன்.

"இப்ப இங்கேதான் நான் படிக்கிறேன்."

"அப்ப சிவா இப்போது எங்கே?"

அவள் முகம் சட்டென்று வாடியது. "அவர் இப்பவும் நியூ ஜேர்சியில்தான் இருக்கிறார். ஆனால் நாங்கள் பிரிந்துவிட்டோம்" என்றாள்.

"எனக்குத் தெரியும் இது நடக்குமென்று" என்று சட்டென்று சொல்லிவிட்டேன். சொன்ன பிறகுதான் எனது பதில் அவளை எவ்வளவு புண்படுத்தக் கூடியது என்பதை உணர ஆரம்பித்தேன். அவள் பதிலும் சற்று சூடாகவே வந்தது.

"இல்லை, இல்லை. உங்களுக்கு எதுவும் தெரியாது" என்றாள்.

நேரம் 8:30 ஆகிவிட்டது. இனியும் தாமதிக்க நேரமில்லை. "எனக்கு நேரம் ஆகிறது. உங்களோடு பிறகு கதைக்கிறேன்" என்று சொன்னபடியே அங்கிருந்து நகர்ந்தேன்.

எனது வேலை முடிந்து வெளியே வந்தபோது நண்பகல் நேரம். கமலினியைக் காணவில்லை. ஹோட்டல் போய்ச் சேர்ந்த பின்னரும் காலையில் நடந்த சம்பவம் மனதை விட்டு நீங்கவில்லை.

சிவாவும் நானும் நல்ல நண்பர்கள். இருபது வருடங்களுக்கு முன்னர், நான் முதல் வேலையை ஏற்றுக்கொண்டு சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வந்தபோது அறிமுகமான நண்பர்களில் அவனும் ஒருவன். எமது முதல் சந்திப்பு இடம்பெற்றது தமிழ்ச் சங்கத்தின் ஒரு நிகழ்ச்சியில். அவன் தனது மனைவி ஜாஸ்மினை ஒரு வீல் சேயரில் தள்ளிக்கொண்டு வந்திருந்தான். அவளுக்குக் கால்கள் இரண்டும் வழங்காது என்று சொன்னான். அந்த இளவயதில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கஷ்டம் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு மிஷன் பாடசாலையில் படிக்கும்போது சிவாவுக்கும் ஜாஸ்மினுக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் ஒன்றாக கொழும்புப் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் அந்த உறவு பிரிக்கமுடியாத அளவிற்கு வலுப்பெற்றது. சிவா மேல்படிப்புக்காக அமெரிக்கா புறப்பட்டபோது, உறவினர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு, அவளோடு நியூ யோர்க் வந்து சேர்ந்தான்.

1979ல் நியூ யோர்க்கிலுள்ள சிட்டி யூனிவர்சிட்டியில் கணினித் துறையில் படிப்பை ஆரம்பித்தான். ஜாஸ்மினுக்கும் மேலே படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அதனை உள்ளே புதைத்துவிட்டு, அவனுக்கு ஒத்தாசையாக ஒரு பலசரக்குக் கடையில் வேலையொன்றில் சேர்ந்து கொண்டாள். அவனுக்குக் கிடைத்த உதவிப் பணத்தோடு, அவளின் வருமானமும் சேர்ந்து அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குப் போதுமானதாக இருந்தது. அந்த இளம் தம்பதியரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

சிவா மாஸ்டர்ஸ் பட்டம் பெற்ற கையோடு அவனுக்கு வளைகுடாப் பகுதியிலுள்ள ஒரு கம்பனியில் வேலையும் கிடைத்துவிட்டது. கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்வதற்கு முன்னர், நியூ யோர்க் பகுதியிலுள்ள முக்கியமான இடங்களுக்கு ஜாஸ்மினை அழைத்துச் சென்றான்.

ஒரு சனிக்கிழமை பிற்ஸ்பேக்கிலுள்ள வெங்கடேஸ்வரர் கோவிலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது அவர்களின் வண்டி ஒரு பெரிய விபத்திற்குள்ளானது. ஜாஸ்மினின் முதுகெலும்பில் ஏற்பட்ட உடைவினால் அவள் கால்கள் செயலிழந்தன. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துக்ககரமான சம்பவம் அவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளை நிர்மூலம் ஆக்கியது.

சிவாவும் ஜாஸ்மினும் 1982ல் வளைகுடாப் பகுதியில் குடியேறினார்கள். அவன் அவளைப் பராமரித்த விதம் எமது நண்பர்கள் மத்தியில் அவனுக்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இளம் வயதில் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கசப்புணர்வு ஏதுமின்றி சிவா ஜாஸ்மினுக்கு சேவகம் செய்தான். அவன் காட்டிய அன்பினால் அவளும் தனக்கு ஏற்பட்டுவிட்ட பெரும் இழப்பை மறந்து வாழ்ந்தாள்.

நீண்ட அமைதியான வாழ்க்கைக்குப் பிறகு, 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் ஜாஸ்மின் திடீரென்று மாரடைப்பால் இறந்துபோனாள். சில மாதங்களுக்கு முன்னர்தான் அவர்கள் தமது முப்பதாவது திருமண நாளைக் கொண்டாடியிருந்தார்கள். சிவா மனமுடைந்துபோனான். ஓரிரு மாதங்களில் தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு, சில காலம் தனது நண்பர்கள், உறவினர்களோடு கழிப்பதற்காக இலங்கைக்குப் புறப்பட்டான்.

2010 ஜூனில் சிவா திரும்பி வந்தபோது கமலினி என்ற ஒரு இளம்பெண்ணை மணமுடித்து அழைத்து வந்திருந்தான். அவளுக்கு வயசு இருபத்தைந்துக்குக் குறைவாகவே இருந்திருக்கும். பலரின் மனதில் இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்பு அவனைப்பற்றி உயர்வாகப் பேசியவர்கள் இப்போது "இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா" என்று முகத்தைச் சுளிக்கத் தொடங்கினார்கள். வாழ்க்கையில் இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டவன் இனியாவது சுகமாக வாழட்டும் என்று நினைத்த என்போன்ற சிலரின் மனதில்கூட, சிவாவும் ஒரு சராசரி மனிதன்தான் என்ற எண்ணம் மட்டும் தோன்றாமல் இல்லை. இவற்றை சிவாவும் அறிவான். கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்திலிருந்து ஒதுங்கத் தொடங்கினான். சில மாதங்களில் வீட்டையும் விற்றுக்கொண்டு நியூ ஜேர்சிக்கு கமலினியுடன் சென்றுவிட்டான்.

இன்று காலை, "உங்களுக்கு எதுவும் தெரியாது" என்று கமலினி கூறியது மனதை உறுத்தியது. என்ன நடந்தது என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது. அடுத்த நாள் காலை கமலினியைத் தேடிப் புறப்பட்டேன். கமலினியும், நடந்ததை யாருக்காவது சொல்லவேண்டும் என்ற அங்கலாய்ப்போடு இருப்பதுபோல் தெரிந்தது. இருவரும் கொலம்பியா யூனிவர்சிட்டிக்கு அருகிலிருந்த காஃபி கடையொன்றினுள் சென்று அமர்ந்துகொண்டோம்.
***
1995ம் ஆண்டின் பிற்பகுதி. யாழ்ப்பாணப் போர் உக்கிரமடைந்து அரசப் படைகளின் கைகள் ஓங்கியிருந்த நேரம். ஐந்து லட்சம் வரையிலான யாழ்ப்பாணவாசிகள் வன்னி நோக்கி இடம்பெயர்ந்த காலம். கமலினியின் குடும்பமும் அதில் அடங்கும். அப்போது கமலினிக்கு 9 வயது. அண்ணன் செல்வனுக்கு 11. தமது உடைமைகளை இரண்டு பெட்டிகளில் அடைத்துக் கொண்டு கால்நடையாக ஆரம்பித்த அவர்கள் பயணம் பல நாட்கள் தொடர்ந்தது. இடையிடையே லாரிகளிலும், படகுகளிலும் பயணம் செய்தும், சில சமயங்களில் இடுப்பளவு தண்ணீரினூடாக நடந்தும், பசியோடும் தாகத்தோடும் கிளிநொச்சியை சென்றடைந்தது கமலினியின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஓரு சிறிய குடிசையில் குடியேறி, கடும் உழைப்பாலும், வெளிநாடுகளில் வாழ்ந்த உறவினர்களின் உதவியோடும் ஒரு சராசரி வாழ்க்கையை அவர்கள் அங்கே அமைத்துக் கொண்டார்கள். செல்வனும், கமலினியும் பள்ளிக்குப் போகத் தொடங்கினார்கள். இருவருமே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். படித்து ஒரு டாக்டராக வரவேண்டும் என்ற கமலினியின் முந்தைய கனவு மீண்டும் புத்துயிர் பெற்றது.

2003ல், போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலத்தில், செல்வன் 12ம் வகுப்புப் பரீட்சையில் சித்திபெற்று பேராதனை பல்கலைக் கழகத்தின் பொறியியல் துறைக்கு அனுமதியும் பெற்றான். வகுப்புகள் ஆரம்பிக்கும் நாளுக்காக அவன் ஆவலோடு காத்திருந்தான். ஆனால் படிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் திடீரென்று ஒருநாள் தான் போராளிகளோடு இணையப் போவதாகச் சொன்னான். ஏன் இந்த திடீர் மனமாற்றம் என்று யாருக்குமே புரியவில்லை. அவனை யாராவது நிர்ப்பந்தித்தார்களா? எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் தனது முடிவை மாற்ற மறுத்துவிட்டான். அப்பாவும், அம்மாவும், கமலினியும் சோகத்தில் ஆழ்ந்தனர். அதன் பிறகு, எப்போதாவதுதான் செல்வனைப் பார்க்க முடிந்தது.

கமலினியின் பெற்றோர் இப்போது அவளின் படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அவளாவது இந்தப் போர்ச் சூழலிலிருந்து தப்பி ஒரு அமைதியான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் விரும்பியது போலவே கமலினிக்கு கொழும்பிலுள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதியும் கிடைத்தது. ஆனால் 2006ன் முற்பகுதியில் போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்து போயிற்று. சண்டை சிறிது சிறிதாக ஆரம்பித்துவிட்டது. அதன் பின்னர் வன்னியிலிருந்து வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அத்தோடு அந்தச் சூழ்நிலையில் கமலினியின் பெற்றோர் அவளைத் தனியே வன்னிக்கு வெளியே அனுப்ப விரும்பவில்லை. தனது துரதிருஷ்டத்தை நினைத்து கமலினி மிகவும் வருத்தமுற்றாள். சில மாதங்களின் பின்னர் மனதைத் தேற்றிக்கோண்டு போராளிகளின் மருத்துவப் பிரிவில் சேர்ந்து கொண்டாள். அங்கு அவளுக்குத் தரமான பயிற்சி அளிக்கப்பட்டது.
2008ம் ஆண்டின் ஆரம்பத்தில் போர் உக்கிரமடைந்தது. மன்னாரில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் செல்வன் இறந்துபோனான் என்ற செய்தி கமலினியின் குடும்பத்தை நிலைகுலைய வைத்துவிட்டது. அதுவும் அப்பாவை அது மிகவும் பாதித்தது. அவர் சிறிது சிறிதாகப் பலவீனமுற்று 2008ம் ஆண்டு இறுதியில் இறந்துபோனார்.

2009ம் ஆண்டின் தொடக்கத்தில் போர் உச்சகட்டத்தை அடைந்தது. அது படைவீரர்கள், போராளிகள், பொதுமக்கள் என்ற வேறுபாடின்றி எல்லோரையும் பெருமளவில் காவு கொண்டது. கமலினியோ இரவு பகல் என்று பாராமல் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தாள்.

அரசபடைகளின் கைகள் ஓங்க ஓங்க வன்னி மக்கள் போராளிகளோடு சேர்ந்து முல்லைத்தீவுக் கரையை நோக்கிப் பின்வாங்கினார்கள். அரசாங்கம் அறிவித்திருந்த 'போரற்ற பிரதேசங்கள்' உண்மையில் பொதுமக்களைப் பெருமளவில் சிக்கவைத்த பொறிகள் ஆயின. படைகளின் சரமாரியான பீரங்கித் தாக்குதல் அந்தப் பிரதேசங்களில் ஏற்படுத்திய பெரும் அழிவை விபரிக்க வார்த்தைகள் கிடையாது. கமலினி மே மாதம் 18ம் திகதிவரை தனது உயிருக்கு இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்தாள்.

இனி மீள்விற்கு இடமேயில்லை என்று ஆனபின்னர், மக்களோடு சேர்ந்து கமலினியும் அம்மாவும் அரச படைகளிடம் சரணடைந்தனர். ஆண்கள், பெண்கள், போராளிகளோடு தொடர்புடையவர்கள் என்று பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கமலினியும் அம்மாவும் செட்டிகுளத்திலுள்ள ஒரு முகாமில் விடப்பட்டார்கள். முகாம் முள்ளுக் கம்பிகளால் சூழப்பட்டு, அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இரவுகளில் சில இளைஞர்களும் யுவதிகளும் படைகளின் உளவுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டு வேறு ரகசிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெண்களில் சிலர் பாலியல் வதைக்கு உட்படுத்தப்படுவதாக வதந்திகள் பரவின.

ஒருநாள் இரவு கமலினியைத் தேடி வந்திருந்தார்கள். கமலினியின் அம்மா அழுது புலம்பியும் எந்தப் பயனும் கிட்டவில்லை. ஒரு ஜீப் வண்டியில் கமலினியும் இன்னும் மூன்று பெண்களும் கூட்டிச் செல்லப்பட்டனர். ஓட்டுனருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த கமலினிக்கு, அந்த ஓட்டுனரின் முகம் மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றியது. ஆனாலும் அவள் ஒன்றும் பேசவில்லை. விரைந்து சென்ற அந்த ஜீப் ஒரு ஆர்மி கேம்ப் அருகே நின்று மற்ற மூன்று பெண்களையும் இறக்கிவிட்டு, கமலினியோடு மிக வேகமாக அங்கிருந்து புறப்பட்டது. கமலினியின் நெஞ்சு பயத்தினால் வேகமாக அடிக்கத் தொடங்கியது.

இவவளவு நேரமும் சிங்களத்தில் மட்டுமே பேசிய அந்த டிரைவர் இப்போது தமிழில் "என்னை யாரென்று தெரிகிறதா" என்றான். கமலினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். இப்போது அவளுக்கு நினைவு வந்துவிட்டது. முன்னர் ஒருமுறை காயமுற்றிருந்த அவனுக்கு வன்னியில் அவள் சிகிச்சை அளித்திருக்கிறாள். அவனே மீண்டும் சொன்னான் "நானும் இயக்கத்தில்தான் இருந்தேன். எனக்கு சிகிச்சை அளித்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால் சிறிது காலத்திற்கு முன்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக நான் இயக்கத்திலிருந்து விலகி இங்கு வந்துவிட்டேன்".

"துரோகி, உன்னைப் போன்றவர்களால்தான் எங்களுக்கு இந்த நிலைமை" என்று கத்தவேண்டும் போலிருந்தது கமலினிக்கு. ஆனால் முடியவில்லை. பயத்தினால் தொண்டை அடைத்துக்கொண்டது.

"சாதாரண போராளிகளோடு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கு வந்த பிறகு, போராளிகள் என்று சந்தேகப்படும் தமிழ் இளைஞர்களுக்கு இவர்கள் இழைக்கும் கொடுமைகளைப் பார்த்து எனது மனம் உடைந்து போகிறது" என்று தொடர்ந்தான் அவன்.

சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "நானும் இங்கு ஒரு அடிமைதான். என்னால் இதனை நிறுத்த முடியாது. இங்கிருந்து தப்பிப் போகவும் முடியாது. நான் செய்த தவறை நினைத்து வருந்தாத நாளே இல்லை" என்றான்.

இப்போது ஜீப் முழு சிங்களப் பிரதேசத்தினுள் நுழைந்துவிட்டது.

"ஆனால் இன்று உங்களை என்னால் காப்பாற்ற முடியும்" என்றபடியே அவளை ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டான். அவள் கையில் கொஞ்சப் பணத்தைக் கொடுத்து "இன்னும் சில நிமிடங்களில் கொழும்பு செல்லும் பஸ் வரும். அதில் கொழும்பு சென்றுவிடுங்கள்" என்றான்.

கமலினி கொழும்பில் ஒரு உறவினர் வீட்டில் தங்கினாள். இப்படிப் பலர் முகாம்களிலிருந்து தப்பித்து தென்னிலங்கைக்கு வந்துவிட்டார்கள். லஞ்சம் கொடுத்தோ அல்லது தெரிந்தவர்களூடாகவோ இது நடந்துகொண்டிருந்தது. மேலும் சிலர் வெளிநாடுகளுக்கே தப்பித்துச் சென்றுவிட்டார்கள். இந்தச் செய்தி பரவத் தொடங்கியதும், கொழும்பு போன்ற இடங்களில் படையினர் தேடுதல் நடத்தத் தொடங்கினர். அதனால் கமலினி தலைமறைவாகவே கொழும்பில் வாழ்ந்தாள்.

இது நடந்து சில வாரங்களில் சிவா கொழும்பு வந்து சேர்ந்தான். பரஸ்பர நண்பர்களின் வேண்டுதலில் கமலினியைச் சந்தித்தான். அவளுக்கு உதவி செய்ய சிவா விரும்பினான். அது அவன் இயற்கைக் குணம். சிவா தனது வெளிநாட்டு எம்பஸி தொடர்புகளைப் பயன்படுத்தி அவளை எப்படியாவது வெளிநாடொன்றிற்கு அனுப்ப பல முயற்சிகள் செய்தான். ஆனால் அவை பயனளிக்கவில்லை. கமலினியை மணந்து கொள்வதுதான் அவளை வெளியே கொண்டுசெல்ல ஒரே வழி என்று தெரிந்த பின்னர், மிகுந்த தயக்கத்தோடு அவளைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டான்.

இரத்தினம் சூரியகுமாரன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

*****


கமலியின் கதை உள்ளத்தை உருக்கியது. சிலரைக் கஷ்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கமலினி கண்களைத் துடைத்தபடி மீண்டும் பேசத் தொடங்கினாள். "அவர் என்னை வெளியே கொண்டுவந்து ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரவேண்டும் என்பதற்காகவே என்னை மணந்து கொண்டார். அவரோடு வாழ்ந்த ஆறு மாத காலத்தில் எங்களிடையே அன்னியோன்னிய உறவு எதுவும் இருந்ததில்லை. நான் அவரோடு வாழத் தயாராகத்தான் இருந்தேன். ஆனால் அவர் என்னை ஒரு மகளைப் போலவே நடத்தினார். 'எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் அவளுக்கு உன் வயதுதானே இருந்திருக்கும். உன்னை மணந்து உன் வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன்' என்று அடிக்கடி வருந்துவார். அதனால் வெளித் தொடர்புகளையும் குறைத்துக் கொண்டார். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் மனதைத் தேற்ற முடியவில்லை. அதனால்தான் இந்தப் பிரிவு" என்றாள். தொடர்ந்து சில நிமிடங்களுக்கு அவள் அழுது கொண்டிருந்தாள்.

எனக்கு அவளை எப்படித் தேற்றுவதென்றே தெரியவில்லை. அவள் அழுகையை நிறுத்தி அமைதி அடையும் வரை காத்திருந்தேன். முழு விபரமும் தெரியாமல் சிவாவைத் தவறாகப் புரிந்துகொண்டது எனது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது.

*****


இரத்தினம் சூரியகுமாரன்
இரத்தினம் சூரியகுமாரன் யாழ்ப்பாணத்திலுள்ள புலோலி எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். வளரும் காலத்தில் எழுத்தாளராக வரவேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆனாலும் வாழ்க்கைப் பாதை அவரை அறிவியல் துறைக்கு இட்டுச் சென்றது. கடந்த 25 வருடங்களாக விரிகுடாப் பகுதியிலுள்ள ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரிகின்றார். அவர் இப்பொது சான் ஹோசேயில் குடும்பத்தோடு வாழ்கின்றார். நீண்ட காலத்தின் பின்னர் எழுதவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது தென்றல் பத்திரிகைதான் என்கிறார்! அவருடைய முதல் சிறுகதை 'கடிதங்கள்' (தென்றல் ஜுன் 2005) இதழில் பிரசுரமானது. அவரது மற்றொரு குறிப்பிடத் தக்க சிறுகதை 'யாழினி' யாழினி (மே 2008). வாழ்க்கையின் சோகங்களை மெல்லிய குரலில் அழுந்தச் சொல்வது, அதிலும் காதலின் தங்கரேகையைப் பின்னணியில் வரைவது இவரது கதைகளின் சிறப்பு. "வாய்ப்புக் கிடைத்தால் எவனும் குற்றம் செய்வான்" என்று வலுவாகக் கூறப்படும் இந்தக் காலத்தில், காதலுக்காக அல்லாமல் உயிர்காக்க மணந்த ஒருத்தியை பண்பின் சிகரமான ஒருவன் எப்படி நடத்தினான் என்னும் உன்னதத்தைப் பேசும் அற்புதக் கதை இது.
More

செலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு
மடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு
Share: 




© Copyright 2020 Tamilonline