Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (மாற்றம்-4)
- சந்திரமௌலி|செப்டம்பர் 2011|
Share:
Click Here Enlargeமுன்கதைச் சுருக்கம்
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் தன் மற்றொரு அமெரிக்க இந்திய நண்பன் ராஜுக்கு வேலை கிடைக்க உதவுமாறு வேண்டுகிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் மேலும் ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தனக்கு வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்து கொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். அன்று இரவு தன்னைச் சந்திக்க தினேஷ் வீட்டுக்கு ராஜ் வரும்போது தன் நெடுநாள் காயத்துக்கு எப்படி மருந்து போட்டுக்கொள்வது என்று யோசித்து, தன் பள்ளி நாட்களை, ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அசை போடுகிறான். ஸ்ரீக்கு ஏற்பட்ட அந்தக் காயம் என்ன? ரங்கராஜுக்கு வேலை கிடைக்குமா? ரங்கராஜின் மறுபக்கம் என்ன?

*****


திடுக் என்று விழித்துக் கொண்ட ராஜ் கண்களைக் கசக்கிக் கொண்டு இடம், காலம் என்ன என்று சுதாரித்துக் கொள்வதற்குச் சில வினாடிகள் பிடித்தன. நியூ பர்ன்ஸ்விக்கில் ஞாயிற்றுக் கிழமை ஒரு மதிய நேரம். இரவெல்லாம் கண்விழித்துத் தூக்கம் வராமல் இருந்ததன் அசதி அவனை அடித்துப்போட, தேகம் தெரியாமல் சோபாவிலேயே ஒடுங்கித் தூங்கிவிட்டான்.

மணி…..சுவர் கடிகாரத்தைப் பார்த்தான். 10.10. தப்பு நேரம். பேட்டரி மாற்றாமல் நின்றுவிட்ட கடிகாரம். அருகில் மேசையிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 3.30. அபார்ட்மெண்ட் பால்கனிக்கு வெளியே பார்வையை ஓட்டினான். காலை கொஞ்சமே கொஞ்சம் பெய்த தூறல் மழையில் நனைந்த தலையை மதர்ப்பாக வளர்ந்திருந்த ஓக் மரங்கள் அந்த மதிய இளம் வெயிலில் நிதானமாக, சுகமாக ஆற்றிக் கொண்டிருந்தன. ஏனோ அம்மா ஞாபகம் வந்தது. வாராவாரம் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து, கண்ணில் எரிச்சல் வராமல் சீயக்காய் தேய்த்து, வாசனை சாம்பிராணியிலும், பூந்துவாலையிலும் தலை துவட்டும்போது இப்படித்தான் மதர்ப்பாக பூரிப்பாக உலகமே துச்சமாக இருந்தேன்.

கக்.. கக்.. குழந்தையின் இருமல் உள்ளிருந்து கேட்டது. ஓ.. என்ன பொறுப்பில்லாமல் தூங்கிவிட்டேன். குழந்தைக்கு மதியம் மருந்து கொடுக்கத் தவறிவிட்டது. நழுவிய பெர்முடாவை இழுத்துச் சரிசெய்து கொண்டே உள்ளே ஓடினான். மெத்தையில் குழந்தை இப்போது வாய்க்குள் விரலை விட்டு அத்தனை விரல்களையும் ஒரே நேரத்தில் தின்னப் பார்ப்பதுபோல் பல்லில்லாத பொக்கை வாயால் கடித்துக் கொண்டிருந்தது.

"நித்யா குட்டி, அப்பா சாரிடா செல்லம். பாப்பாக்கு பசிக்குதா?" குழந்தையின் முகத்தின் அருகே தன் முகத்தை வைத்துக் கொஞ்சல், ஆற்றாமை, வருத்தம், மகிழ்ச்சி எல்லாம் ஒரே நேரத்தில் ஊட்டினான். நித்யா என்று விளிக்கப்பட்ட அந்தக் குழந்தை இன்னும் எல்லா விரல்களையும் சப்பிக்கொண்டு, பால் ஊட்டினால் மட்டும் போதும் என்பதுபோல், வெறுமையாக ஒரே திசையில் பார்த்துக் கொண்டிருந்தது. மருந்துப் புட்டி சைல்ட் லாக் என்ற இரட்டைத் தாழ்ப்பாள் எரிச்சல் மூடியை சலிப்போடு திறந்து, மருந்தை சிரிஞ்சால் சரியான அளவு உறிஞ்சி, குழந்தையின் வாயில் ஊற்றினான். குழந்தை முகம் சுளித்து 'கக்.. கக்..' என்றுவிட்டு "வீல்" என்று அலறியது. பாலைக் கரைத்து ஃபீடிங்க் பாட்டிலில் குழந்தைக்குப் புகட்டி, ஈரமாயிருந்த டையாபரை மாற்றி, குழந்தையை கப்சிப் ஆக்கி… எல்லாம் மந்திரித்து விட்ட கதியில் செய்து முடித்தான். கொஞ்ச நாளாகவே பழகிவிட்டது. சுய நினைவோடு இருந்தால் – 'குழந்தைக்கு மருந்து இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் வரும். அப்புறம் வாங்க இன்ஸூரன்ஸ் கவரேஜ் இல்லை. கையில் காசும் இல்லை. பால் பவுடர், டையாபர், மளிகை சாமான் எல்லாம் இதே உயிர்விடும் தறுவாய்தான்' – என்பதெல்லாம் உறைக்கும். இப்படி மூளையை "சைலண்ட் மோடில்" போடுவதும், அவ்வப்போது பழைய ராஜ வாழ்க்கை நினைவுகளை "ரீவைண்ட்" செய்வதும் நிகழ்கால நிஜம் என்ற பேய் முகத்தில் அறையாமல் காப்பாற்றி வருகிறது.

குழந்தையின் பால் பவுடரிலேயே கொஞ்சமாகக் காபிப் பொடி போட்டு, மகா இன்ஸ்டண்ட் காபியோடு சோபாவில் உட்கார்ந்து விளிம்பு தெரித்திருந்த எனாமல் கோப்பையில் உறிஞ்சினான். அவன் வாழ்க்கை போலவே மகா கசப்பு. அடுத்து குடிக்க முடியாமல் ஓரமாக அந்த "இன்ஸல்ட் காபியை" மேசைமேல் வைத்தான். கரண்ட், கேபில், கார் லைசன்ஸ், ரெண்ட் நோட்டீஸ்.. முதல் நினைவூட்டல் கடிதங்கள் மேசையில் தங்கள் வேலையைச் செய்தன. நினைவிருக்கிறது. மறக்கவில்லை. வெறுப்பாக அவற்றை மேசையின் அடியில் பார்வைபடாமல் தள்ளிவிட்டு, டிவியை ஆன் செய்து சோபாவில் உட்கார்ந்தான். மெத்து மெத்து நீர்த்துப் போய் கடைசிக் காலத்தில் இருக்கும் அந்த சோபாவின் உள்ளிருந்து ஆணி சுருக்கென்று குத்தியது.

நிஜம்… நிஜம்... நிகழ்கால நிஜம்… குழந்தைக்கு மருந்து, பால் பவுடர், மளிகை சாமான், மின்சாரம், வாடகை… எப்படி சமாளிக்கப் போகிறேன்? ஒரு மாதமாக வேலை இல்லை. சம்பாத்தியமும், சேமிப்பும் இல்லை. இந்த ஊரில் பணமும், வேலையும் மட்டும் இல்லை என்றால் கோமா நிலைதான். உயிரிருந்தும் செத்த நிலை. உயிர் போய் விட்டாலும் பரவாயில்லை, செலவு கிடையாது. இது கோமா நிலை. வரவில்லாமல் செலவு… வேலை..வருமானம்...இன்ஸூரன்ஸ்...க்ரெடிட் ஸ்கோர்..க்ரெடிட் கார்ட்..செலவு..வாழ்க்கை என்ற சீட்டுக்கட்டு மாளிகையில் வேலை என்ற அடிச்சீட்டை உருவிவிட்டால் ஒரு நொடியில் நிலைமை தலைகீழ். இழுத்துப் பிடித்தாலும் இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. எப்படி சமாளிப்பது?

இந்தப் பொருளாதார நெருக்கடியில், இறங்குமுக வேலைச் சந்தையில் என் சரக்கை கூவிக்கூவி விற்கப் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். கொள்வாரில்லையே. ஆண்டவா.. எனக்கு நல்ல வழி காட்ட மாட்டாயா? என்ன பாவம் செய்தேன். கோவில்காளை போல கண்ணனூரின் ராஜாபோல வாழ்ந்தேனே. பத்தாம் வகுப்பில் ரேங்க் வாங்கினேனே..அப்புறம் தானே எல்லாம் தலைகீழானது.. அப்பா அகாலமாக மாரடைப்பில் போய்ச் சேர்ந்தார், வெளி விவரம் ஒன்றும் தெரியாத அம்மா, அப்பாவின் பங்காளிகளை நம்பி நீட்டின இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டு நடுத்தெருவுக்கு என்னோடு வந்தாள். வக்கீலுக்கும், வழக்குக்கும் தெம்பில்லாமல் கோலோச்சி வாழ்ந்த ஊரில் நொடித்துப் போய் வாழவிரும்பாமல் சென்னைக்கு வந்தோம். டாக்டராகவோ, எஞ்சினியராகவோ ஆக ஆசைப்பட்ட நான் நன்றாகப் படித்தும் குடும்பச் சூழல் காரணமாக அவசர அவசரமாகப் பட்டப்படிப்பு முடித்து அஞ்சுக்கும் பத்துக்கும் முட்டி மோதி வைலை பார்த்தேன். கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்து மூச்சு விடும் சமயத்தில் அம்மா மூச்சை விட்டுவிட்டாள். ஜாவா உபயத்தில் அமெரிக்கா வந்து, பென்ச், பார்ட் டைம் என்று படிப்படியாக சீனியர் கன்சல்டன்ட் என்று எல்லாம் எச்.ஒன்.பியிலேயே காலம் ஓட்டியாகி விட்டது. வயதாகிக்கொண்டே போனதால் கவிதாவை கல்யாணம் பண்ணி நித்தியாவுக்கு இரண்டு வயது ஆகப் போகிறது. கொஞ்சம் லேட் மேரேஜ். நித்யா அதனால் பிரச்னையோடு பிறந்த குழந்தை.

எங்கே தப்பாச்சு? என்ன பாவம் எங்கு செய்தேன்? – மீண்டும் எழுந்து கவனத்தைத் திசை திருப்ப, பால்கனியில் சற்று நேரம் நின்றான். கீழே, மைக்கேல் ஜாக்சனின் திரில்லர் பாடலை இறைந்து வைத்துக் கொண்டு, சிறுவர்கள் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கவலையில்லாமல் சந்தோஷச் சிறகுகள் கட்டி முகமெங்கும் மகிழ்ச்சியோடு பறந்து கொண்டிருந்தார்கள். ஒரு ஆஃப்ரோ அமெரிக்கச் சிறுவன் பந்தைக் கூடையில் அமுக்கியதை ஆரவாரமாக கொண்டாடினார்கள். வெள்ளை, பழுப்பு, கறுப்பு என்ற தோலின் வெளிநிற பேதம் அந்த சிறுவர்களின் மனதில் துளியும் இல்லை. எனக்கு மட்டும் பேதம் எப்படி அந்த சிறு வயதிலேயே வந்தது. நாம் உசத்தி, மற்றவர்கள் நமக்கு ஒரு படி கீழே என்ற ஃப்யூடலிஸ மனோபாவம் என்னை அறியாமல் எனக்குள் சிறு வயதிலேயே ஊறிவிட்டது. இந்தச் சிறுவர்களைப் போலக் கவலையில்லாமல் எல்லாரோடும் சமமாக இல்லாமல், ஒரு படி மேலோங்க வழி பார்த்துக்கொண்டே இருந்ததுதான் நான் செய்த தவறா? பத்தாவது வகுப்பு படிக்கும் போது நான் சீனுவுக்குச் செய்தது எவ்வளவு பெரிய தவறு. ஓஓ அதற்குத்தான் எனக்கு இன்று இந்த தண்டனையா?

இருந்தாலும் இது அளவுக்கு அதிகம்தான். சிறு வயதில் நான் அறியாமல் செய்த அந்தத் தவறுக்கு நான் எவ்வளவு புழுங்கியிருக்கிறேன். சீனுவுக்கு அப்படி பாதிப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லையே. அவனிடம் மன்னிப்புக் கேட்பதற்குள் அவன் ஊரைவிட்டே போய் விட்டானே. கடவுளே போதும் இந்தத் தண்டனை. எனக்குக் கருணை காட்டு…

க்ளிங்க்.. க்ளிங்க் என்று மென்மையாக செல்போன் அடித்தது. யாராவது கட்ட வேண்டிய பாக்கியை நினைவுறுத்த அழைக்கிறார்கள் என்று பயந்துகொண்டே உள்ளே வந்து செல்போனை எடுத்தான். தினேஷ்…. உயிர்வந்தது.

ராஜ்.. என்ன சண்டே சியஸ்டாவா? அப்பலேருந்து கூப்பிடறேன்.

சாரி தினேஷ்.. நைட் எல்லாம் தூங்கலை. எப்ப சோபாவுல சுருண்டேனு தெரியலை. அலுப்பாயிருக்கு.

உனக்குதான் தெரியுமே. அதுக்காகதாம்பா அவசரமா கூப்பிட்டேன். என் ஃப்ரெண்ட் ஸ்ரீ அதான் அந்த ஃபார்மா கம்பெனில எக்ஸிகியூடிவ் டிரக்டரா இருக்கான், இங்க வரான்னு சொன்னனே. ஹீ இஸ் ஹியர். உன் ரெஸூமேவைக் குடுத்து, எல்லாம் ஓகே பண்ணியாச்சு. எல்லாம் பாஸிடிவ். நீ இன்னிக்கு சாயங்காலம் ஒரு ஆறு, ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வா. அவனை இண்ட்ரட்யூஸ் பண்ணி அவன் கம்பெனில ப்ராஜக்ட் மேனேஜர் வேலைக்கு உன்ன ரெகமண்ட் பண்றேன். ஐ ஹோப் எல்லாம் நல்லா முடியும்னு..

.....

ஹலோ… ராஜ்.. என்ன பதிலே காணும்.
ஹ.. ஹலோ…ஒரு நிமிஷம் பேச்சே வரலை. இப்பதான் என்ன பண்ணப் போறேனோனு மலைச்சுப் போய் உக்காந்திருந்தேன். இதைவிடத் தெம்பு தர மாதிரி யாரும், எதுவும் எனக்கு இப்ப செய்திருக்க முடியாது. தாங்க்ஸ் எ லாட் தினேஷ். எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை.

ஹே கமான். இதெல்லாம் ஒண்ணுமேயில்லை. சியர் அப். ஒழுங்கா இன்னும் ரெண்டு, மூணு மணி நேரத்துக்குள்ள இங்க வா. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதும். நல்ல வீட்டு சாப்பாடா, நம்ம ஊர் சாப்பாடா கவிதாவைப் பண்ணச் சொல்லு. ஒரு பிடி பிடிக்கறேன். நன்றியெல்லாம் தனியா வேண்டாம்.

தாங்க்யூ.. தாங்க்யூ. – செல்போனை கீழே வைக்கும் போது ஒரு படபடப்பு, கைகளின் உதறலில் தெரிந்தது.

கடைசிச் சந்தர்ப்பம். நன்றி நண்பனே. இதை எப்படியும் விடக்கூடாது.. என் எதிர்காலம், என் கவிதா, என் நித்யா எல்லாமே இதை நம்பி. ஸ்ரீ.... நீ கருப்பா சிவப்பா தெரியாது. ஆனால் என் குடும்பத்துக்கு நீதான் இப்போது படியளக்கப் போகும் தெய்வம்.

டிவியில் அமெரிக்கப் பொருளாதாரம், வேலை வாய்ப்பு கடந்த ஆறு மாதங்களில் புள்ளி ஏழு சதவீதம் முன்னேறியிருக்கிறது என்று இரண்டு பேரும், எப்படி மோசமாயிருக்கிறது என்று இரண்டு பேரும், மத்தியஸ்தத்துக்கு நடுவில் முழு மேக்கப்போடு ஒரு பெண்மணியும் கைகளை கத்தி மாதிரி வீசிக்கொண்டு ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாருமே பளபளப்பாக, புஷ்டியாக, வறுமைக்கோ, வேலையின்மைக்கோ சம்பந்தமில்லாதவர்கள்.

புது உற்சாகத்தோடு டிவியின் மென்னியை முறித்துவிட்டு, பரபரவென தினேஷ் வீட்டுக்குக் கிளம்பத் தயாரானான். கவிதா இன்னும் வீட்டுக்கு வரவில்லை, எப்படிக் கிளம்புவது. செல்ஃபோனில் கூப்பிடலாமா என்று நினைத்தபோது, வாசல் கதவு தட்டப்பட்டது. கவிதா..... களைப்பாக இருந்தாலும், களையாக எப்போதும் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையோடு.. "சாப்பிட்டீங்களா, ப்ரிட்ஜ்ல வெச்சிருந்தேனே. நித்யா மருந்து, பால் எல்லாம் குடுத்தீங்களா? யாராவது கால் பண்ணினாங்களா?" உறுத்தாத கேள்விகள்.

அக்கறையும், தாய்மையும் நிறைந்தவள். இவள்மட்டும் என் வாழ்க்கையில் வரவில்லையென்றால் சந்தோஷம் என்றால் என்ன என்றே எனக்குத் தெரிந்திருக்காது. என் கஷ்டங்களுக்கும், பரிதவிப்புக்கும் ஈடு கொடுத்து, அரவணைத்துச் செல்பவள். பூவிலிருந்து வண்டு தேன் எடுப்பதுபோல இல்லாமல், கரும்பிலிருந்து சாறு பிழிவது போல இவளை இப்போது கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு வேலை போனதிலிருந்து இவள் பார்ட் டைம் ஹோம் நர்ஸ் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். சொற்ப வருமானம், கண்ட நேரத்துக்கும் வேலை. கல்யாணம் ஆகி ஐந்து வருஷத்தில் பெரிய சுகத்தை இவளுக்குக் கொடுத்ததில்லை, குழந்தை நித்யா வேறு இப்படி நோயாளி. அதற்கு வைத்தியம் பார்க்கவாவது இங்கே அமெரிக்காவிலேயே காலம் தள்ளியாக வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக என் கவிதாவை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறேன்.

கவி.. நான் இப்ப வெளியில கிளம்பணும். கார் வேணும். அந்த ஃபார்மா கம்பெனி ஒண்ணுல என் ப்ரெண்ட் தினேஷ்மூலமா முயற்சி பண்றேன்னு சொன்னேன் இல்லை. இன்னிக்கு அந்த ஹயரிங்க் மேனேஜரை மீட் பண்ணப் போறேன். இது கிளிக் ஆகும்போல இருக்கு. குழந்தையை உச்சி மோந்துவிட்டு, கீழே கிடந்த தபால்களை மீண்டும் மேஜைமேல் வைத்துவிட்டு, நான் பாதி குடித்து வைத்திருந்த காபி கோப்பையை அப்புறப்படுத்திக் கொண்டே ஒரு நிமிடம் நிதானித்து…

ஓ.. குட் நியூஸ். உடனே கிளம்புங்க. அந்த வெள்ளை ஷர்ட், டார்க் ப்ரவுன் பேண்ட் போடுங்க. நல்லா இருக்கும். ஆனா, எனக்கு இன்னிக்கு சாயங்காலமும் டூட்டி இருக்கு. ஓவர்டைம். என்னை விட்டுட்டு, நீங்க உங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு போங்க. நைட் என்னை மறுபடி பிக் அப் பண்ணுங்க, ஓகேவா..

ம்ம்… ஓகே. ரெஸ்ட் இல்லாம ஏன் இப்படி எல்லாத்துக்கும் ஒத்துக்கற. இன்னிக்குப் போகாம இருக்க முடியாதா?

இல்லங்க.. போய்த்தான் ஆகணும். உங்களுக்கு வேலை கிடைக்கற வரைக்கும் இதெல்லாம் சமாளிச்சுதான் ஆகணும்.

காயப்பட்ட பார்வையை கவிதாவின் மேல் வீசுவதைத் தவிர்த்து, தலை கவிழ்ந்தவனின் தலையை இதமாகத் தடவி அணைத்து - ராஜ்.. ரங்கராஜ்.. ரங்கு.. கமான். நம்பிக்கையா இருப்பா.

ம்ம்… ம்ம்.

இப்போது அவனும் அவளை அணைத்துக் கொண்டு, ஆனால் இன்னும் வருத்தத்திலிருந்து மீளாத குரலில் முனகினான். சமயத்துக்குத் தகுந்தாற்போல் நீங்க வாங்க, நீ, வா, போ என்று மாறும். அன்னியோன்யமும் அதிகரிக்கும். தகிக்கும் கோடை வெயிலின் நடுவே ஒரு குளிர் தென்றல் கணம். பெட்டிப் பாம்பாய் சுருண்டான். கவிதாவுக்கு இவனது சோம்பலும், துவண்டு போகும் குணமும் அத்துப்படி.. விரட்டினாள்.

அப்புறம் அப்படிக் கூப்ட்ருவேன். எழுந்திரு……எழுந்திரு.. கு….ர…..ங்…..கு.. ..கூப்டுட்டேன்.

ஏய்…ஏய்.. செல்லமாக அவளை அடிப்பது போல் கை ஓங்கினான்.

சுறுசுறுப்பா வேலை பாருப்பா. அதான் உனக்கு ரொம்பப் பிடிச்ச நிக் நேம்ல கூப்பிட்டேன். இப்ப சார்ஜ் ஏத்தியாச்சா. ரெடியாகு போ.

அப்படிப் பாத்தா நீகூடத்தான் குரங்கு தெரியுமா. 'கவி'ன்னா தமிழ்ல குரங்குனு அர்த்தம். எங்க வாத்யார் முருகேசன் சொல்லிக் குடுத்தது.

ஆமாம், குரங்குக்கு குரங்க கல்யாணம் பண்ணாம தேவதையவா பண்ணி வெப்பாங்க, உனக்கு இந்தக் கவி குரங்கு போதும்.

கோச்சுக்கிட்டயா. சொன்னாலும் சொல்லாட்டாலும் எனக்கு கிடைச்சது தேவதைதான் – மீண்டும் அணைக்க முனைந்தவனை புறம் தள்ளி, கண்டிப்பாக அங்க வேலை போயிடும். தேவதை எங்கியும் போகாது. இப்ப நீ தாவித்தாவிப் போய் ரெடியாகு, போ.." என்றாள்.

எல்லாம் தயாராகி, குழந்தை நித்யாவை ப்ராமில் வைத்துத் தள்ளிக்கொண்டு வெளியே வரும்போதுதான் அந்தக் கேள்வி எழுந்தது. நித்யாவை என்ன பண்றது?

ராஜ். என்னால பேஷண்ட் வீட்டுக்குக் குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போக முடியாது. நீ உன் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தானே போறே. இவளை ஒரு ஓரமா ப்ராமிலேயே வெச்சுக்கோ. அவ தூங்கிடுவா. உனக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்காது.

இல்ல.. அது ரொம்ப ப்ரொபஷனலா இருக்காதுனு பாக்கறேன். சரி, வேற வழியில்ல. ஓகே.

கவிதாவை எடிஸனில் இறக்கிவிட்டான்.

யூ லுக் வெரி ஸ்மார்ட். குட்லக் ராஜ், ஆல் தி பெஸ்ட். தைரியமா பண்ணு. இந்த வேலை உனக்கு கண்டிப்பா கிடைக்கும் – நம்பிக்கை என்ற உறையில் போட்டு, புன்னகை என்ற தபால் தலை ஒட்டிக் கொடுத்தாள். தெம்பாக இருந்தது.

காரை சீராக தினேஷ் வீட்டை நோக்கிச் செலுத்தினான். காரின் முன்பக்கக் கண்ணாடியில் தொங்க விடப்பட்ட சிறிய குரங்கு பொம்மை ஆடிக் கொண்டிருந்தது. கவிதா, இவன் ஞாபகமாக மாட்டி வைத்தது. கு..ர..ங்..கு. இப்போது எனக்குப் பிடித்த செல்லப் பெயர். என் கவிதா அப்படிக் கூப்பிட்டால் பிடிக்கிறது. சிறு வயதில் இது கெட்ட வார்த்தை. எனக்குள் பெரும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய வார்த்தை. இந்த வார்த்தையை தனலஷ்மியும், சீனுவும் பள்ளிச் சுற்றுலாவின் போது சொன்னதால்தானே நான் அவமானத்தில் சீனுவுக்கு அத்தனை பெரிய தீங்கை ஏற்படுத்தினேன். இன்று இவ்வளவு உறுத்தலைச் சுமந்து கொண்டிருக்கிறேன். சீனுவை அதற்குப் பின் பார்க்கவேயில்லை. அவன் வாழ்க்கையில் நல்லபடியாக வந்திருப்பானா? இல்லை என் செயலால் ஏற்பட்ட காயத்தால் நொடித்துப் போயிருப்பானா?

சரி, இப்போது அதை நினைக்க வேண்டாம். இந்த வேலையைப் பற்றி நினைப்போம். அதுதான் முக்கியம். கம்பெனியின் சரித்திரம், போட்டியாளர் விவரம், முக்கியமான ப்ராடக்ட் விவரம், வருமான விவரம் எல்லாம் மனதில் ஒருமுறை ஓட்டி சரி பார்த்துக் கொண்டான். மனதுக்குள் "ஹாய்.. ஐயம் ராஜ். ரங்கராஜ்.. நைஸ் டு மீட் யூ" என்று வேறுவேறு பாவங்களில் சொல்லிப் பார்த்துக்கொண்டு, கண்ணாடியில் தன் தலை கலையாமல் இருக்கிறதா என்று ஓரக்கண்ணால் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டான். எல்லா விதத்திலும் தயார். நிச்சயம் எனக்கு இந்த வேலை கிடைக்கும்.

சூரியன் மெல்ல மறையத் தொடங்கும் போது அவன் நம்பிக்கை மெல்ல உதயமானது. அவன் மன ஓட்டத்துக்கு ஏற்பக் கார் நிதானமாக, சீராகப் போய்க் கொண்டிருந்தது

ஸ்ரீ இன்னும் தன் பழைய நினைவுகளிலிருந்து வெளி வரவில்லை. தினேஷ், இரண்டு முறை இவன் விழித்துக் கொண்டு விட்டானா என்று பார்க்க வந்தது தெரிந்தும், எழுந்திருக்க மனமில்லாமல் கண்களை மூடிப் பாசாங்கு செய்து யோசனையைத் தொடர்ந்தான். என் எதிரியை நான் இன்று நிச்சயம் சந்திக்கப் போகிறேன். எனக்கு இந்த நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த நண்பனே உனக்கு என் நன்றி. இருபத்து ஐந்து வருஷ வடு மறையப் போகிறது. தினேஷ் சொன்னதை வைத்துப் பார்த்தால் ரங்கராஜுக்கு இந்த வேலை கிடைக்காவிட்டால் நடுத்தெருவில் நிற்கும் நிலைமை. பழிக்குப் பழி. நிச்சயம் அவனுக்கு இந்த வேலை கிடைக்கவிடப் போவதில்லை. எத்தனை அவமானம், எத்தனை துன்பம் நான் அனுபவித்தேன் அவன் செய்த அந்த ஒரு காரியத்தால். அவனும் அனுபவிக்கட்டும்.

மறுபடி அந்த நிகழ்ச்சியை மனதில் ஓட்டி, பழி வாங்கும் எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான் ஸ்ரீ.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline