Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
முன்னோடி
பி.யூ.சின்னப்பா
- பா.சு. ரமணன்|ஏப்ரல் 2011|
Share:
"எந்தச் சுய விளம்பரமும் இல்லாமல் தன் பாட்டாலும், பேச்சாலும், சிறந்த நடிப்பாற்றலாலும் நட்சத்திரமானவர் பி.யூ.சின்னப்பா" - சொன்னவர் கல்கி. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தனது உழைப்பாலும், திறமையாலும் 'நடிக மன்னன்' என்று போற்றப்படும் நிலைக்கு உயர்ந்து, தமிழ்த் திரையுலகில் சாதனை படைத்தவர் புதுக்கோட்டை உலகநாதம் பிள்ளை சின்னப்பா. புதுக்கோட்டையில், மே 05, 1916 அன்று உலகநாதம் பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் சின்னப்பா. இயற்பெயர் சின்னச்சாமி. தந்தை ஒரு நாடக நடிகர். நன்கு பாடுவார். சின்னப்பாவுக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. அருகில் உள்ள பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார் என்றாலும் அவருக்குப் படிப்பைவிட நடிப்பிலும் பாட்டிலுமே ஆர்வம் அதிகம் இருந்தது. இதைப் புரிந்துகொண்ட தந்தையார், மகனுக்கு நாடக நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 'சதாரம்' நாடகத்தில், 'கள்ளபார்ட்' வேடத்தில் நடித்த தந்தையுடன் இணைந்து குட்டித் திருடனாக சின்னப்பா நாடக மேடையில் அறிமுகமானார்.

"பின்னாளில் கதாநாயகனாக நடித்துச் சாதனை படைத்த எம்.ஜி.ஆர். சின்னப்பாவுடன் ஸ்த்ரீ பார்ட் வேடங்களில் நடித்தார்."
பள்ளியில் படித்துக்கொண்டே நாடகங்களிலும் நடித்தார். ஒரு சமயம் பள்ளிக்குச் செல்லாமல் தென்னந்தோப்பில் தேங்காய் பறித்து விளையாடிக் கொண்டிருந்த சின்னப்பாவைப் பார்த்த ஆசிரியர், அடித்துக் கண்டிக்க, அத்துடன் பள்ளிப் படிப்பு நின்று போனது. சிறிது காலம் கயிறு திரிக்கும் கடையில் வேலை பார்த்தார். பின்னர் டி.கே.எஸ். சகோதரர்கள் பொறுப்பில் இருந்த 'தத்துவ மீனலோசனி வித்வபால சபா'வில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 9. சிறுவன் என்பதால் முக்கியமான வேஷம் எதுவும் தரப்படவில்லை. அதன்மூலம் கிடைத்த வருமானமும் போதுமானதாக இல்லை. இந்நிலையில் புதுக்கோட்டையில் நாடகம் நடத்த வந்திருந்த குழுவினருடன் மதுரைக்குப் போனார். அங்கே ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். மூன்று வருட ஒப்பந்தம். ஆனால் அங்கும் அவரது நடிப்பாற்றலுக்கும், பாட்டுத் திறமைக்கும் தீனி போடும் விதமான வேடம் எதுவும் கிடைக்கவில்லை.

ஒருமுறை அவர் 'சதி அனுசூயா' நாடகப் பாடல்களை ஓய்வு நேரத்தில் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்ட முதலாளி சச்சினதாந்த பிள்ளை, சின்னப்பாவின் திறமையை உணர்ந்தார். அவரது ஊதியத்தை 75 ரூபாயாக உயர்த்தியதுடன், முக்கிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்பைத் தந்தார். அதுமுதல் கதாநாயகன், ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது குரலுக்கும் நடிப்புக்கும் நல்ல வரவேற்பிருந்தது. சக நடிகர்களான காளி என்.ரத்தினம், எம்.ஜி.சக்ரபாணி போன்றவர்களும் அவரை ஊக்குவித்தனர். பின்னாளில் கதாநாயகனாக நடித்துச் சாதனை படைத்த எம்.ஜி.ஆர். சின்னப்பாவுடன் ஸ்த்ரீ பார்ட் வேடங்களில் நடித்தார். பல ஊர்களில் நாடகத்தை நடத்திய பாய்ஸ் குழு சென்னைக்கு வந்தது. தங்களது புகழ்பெற்ற நாடகமான 'பாதுகா பட்டாபிஷேக'த்தைச் சேர்ந்தாற்போல ஒரு வருட காலம் நடத்தியது. அதில் பரதன் வேடத்தில் தோன்றி மிகச் சிறப்பாக நடித்தார் சின்னப்பா.

இக்கால கட்டத்தில் பருவ வயதில் ஏற்படும் மகரக் கட்டினால் அவர் குரல் பழுதடைந்தது. அதனால் தனக்கு வாய்ப்புக் குறையும், கம்பெனியிலும் பல சிக்கல்கள் நேரிடும் என்பதை உணர்ந்த அவர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகிப் புதுக்கோட்டைக்குச் சென்றார். குரல் உடைந்ததால் நாடக வாய்ப்பு எதுவும் வரவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து சாதகம் செய்து குரலைச் சரி செய்து கொண்டார். இசைமீது கொண்ட ஆர்வத்தால் திருவையாறு சுந்தரேச நாயனக்காரரிடமும் காரைநகர் வேதாசல பாகவதரிடமும் சங்கீதம் பயின்றார். இயல்பாகவே இருந்த ஆர்வத்தினாலும், நாடகப் பாடல்களை விரைவாக மனப்பாடம் செய்யும் திறன் பெற்றிருந்ததாலும் சில மாதங்களிலேயே ஐநூறுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை மனனம் செய்துவிட்டார். நாடக மேடையை மறந்து சங்கீத வித்வானாகவே ஆகிவிட வேண்டும் என்றுகூட அவர் நினைத்தார். ஆனால் அதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. மேலும் சரியான வருமானம் இல்லாததால் தொடர்ந்து இசைத்துறையில் ஈடுபட முடியவில்லை. கிடைத்த ஓய்வு நேரத்தில் சிலம்பம், கம்பு சுற்றுதல், வாள் வீச்சு, சுருள் கத்தி வீச்சு, குஸ்தி, மல்யுத்தம் எனப் பல தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். காரைக்குடியில் தேகப்பயிற்சிக் கழகத்தை நடத்தி வந்த சாண்டோ சோமசுந்தரம் செட்டியாரிடமும், சத்தியா பிள்ளை என்ற வாத்தியாரிடம் குஸ்தி பயின்றார்.

ஒரு திரைப்பட நடிகராக வேண்டும் என்ற கனவெல்லாம் சின்னப்பாவுக்கு இல்லை. நாடகமே அவரது உலகம். இந்நிலையில் ஸ்பெஷல் நாடகங்கள் சிலவற்றில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஸ்டார் தியேட்டர்ஸ் என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து ரங்கூனுக்குச் சென்று நடித்தார். பின் வேறொரு நாடகக் குழுவுடன் இணைந்து இலங்கை சென்றவர், அக்காலத்தில் புகழ்பெற்ற நாடக நடிகை எம்.ஆர். ஜானகியுடன் இணைந்து நடித்துப் புகழ்பெற்றார். அவர்கள் நடித்த 'ராஜாம்பாள்' போன்ற சமூக நாடகங்கள் பொதுமக்களால் விரும்பப்பட்டன. முதன்முதலில் கொட்டை எழுத்தில் சின்னப்பாவின் பெயர் (புதுக்கோட்டை சின்னச்சாமி என்று) பொறித்து நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டன. மீண்டும் நாடக உலகில் தனது திறமையை அழுத்தமாக நிரூபித்தார் சின்னப்பா.
"ஒரு திரைப்பட நடிகராக வேண்டும் என்ற கனவெல்லாம் சின்னப்பாவுக்கு இல்லை. நாடகமே அவரது உலகம்."
"பி.யூ. சின்னப்பா, சங்கரதாஸ் சுவாமிகளின் கம்பெனியில் வந்து சேர்ந்தார். அவருடைய சாரீரம் கணீர் என்றிருந்தது. அவருக்கு 'ராஜாம்பாள்' நாடகத்தில் துப்பறியும் கோவிந்தனை அடிக்கும் ரௌடிகளில் ஒருவனான 'அமாவாசை' என்ற வேடம். 'சாவித்திரி' நாடகத்தில் புண்ணிய புருஷனாக வந்து அருமையாகப் பாடினார்." என்று கூறியிருக்கிறார் அவ்வை சண்முகம், 'எனது நாடக வாழ்க்கை' என்ற நூலில். எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய நாவலான சந்திரகாந்தா மேடை நாடகமாக்கப்பட்ட போது, சுண்டூர் இளவரசன் என்ற பாத்திரத்தில் நடித்தார் சின்னப்பா. அவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. ரசிகர்களின் ஆதரவு பெருகியது. அவரது நடிப்பும் பாட்டும் பெரிதும் பேசப்பட்டன. இதையறிந்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் 'சந்திரகாந்தா' நாடகத்தைத் திரைப்படமாக்க முன்வந்தனர். அதே சுண்டூர் இளவரசன் வேடத்தைத் திரைப்படத்திலும் ஏற்று மிகச் சிறப்பாக நடித்தார் சின்னப்பா. அதுவரை நாடக உலகில் புதுக்கோட்டை சின்னச்சாமியாக அறியப்பட்டவர் சந்திரகாந்தா திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் பி.யூ. சின்னப்பா ஆனார்.

அதைத் தொடர்ந்து சின்னப்பாவுக்கு நிறையத் திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ராஜ் மோஹன், பஞ்சாப் கேசரி, அநாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். என்றாலும் அவை வெற்றிப் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் 1939ம் ஆண்டில், பாபநாசம் சிவன் வசனத்தில், சின்னப்பா நடித்து 'மாத்ரு பூமி' திரைப்படம் வெளியானது. தேசபக்தியை வலியுறுத்திய அது மகத்தான வெற்றி பெற்றது. சரிந்து கொண்டிருந்த சின்னப்பாவின் புகழை நிலைநிறுத்தியது. தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் தனது படத்தில் கதாநாயகனாக நடிக்கச் சின்னப்பாவை ஒப்பந்தம் செய்தார். அந்தப் படம் அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அதுதான் உத்தம புத்திரன். தமிழில் வெளியான முதல் இரட்டை வேடப் படம் அதுதான். அப்படத்தில் அண்ணன், தம்பி என இரு மாறுபட்ட வேடங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சின்னப்பா. முதன்முதலில் அந்தப் படத்தில்தான் பாரதியாரின் பாடல் இடம் பெற்றது. ('செந்தமிழ் நாடெனும் போதிலே') முதன்முதலில் திரைப்படத்தில் பாரதியின் பாடலைப் பாடி நடித்தவர் என்ற பெருமையும் சின்னப்பாவுக்குக் கிடைத்தது.

1941ல் வெளியான 'ஆர்யமாலா' சின்னப்பாவை 'சூப்பர் ஸ்டார்' ஆக்கியது. பத்து மாறுபட்ட வேடங்களில் அவர் அதில் நடித்திருந்தார். தொடர்ந்து வெளியான 'கண்ணகி' அவருக்கு மட்டுமல்லாமல் கண்ணாம்பாவின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்தது. சிறப்பான வசனங்களுக்காகவும் பாடல்களுக்காகவும் அப்படம் பேசப்பட்டது. வசனத்தை இளங்கோவன் எழுதியிருக்க, எஸ்.வி. வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். வீர வசனங்களைப் பேசி நடித்து அப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் சின்னப்பா. அன்பில் விளைந்த அமுதமே, சந்திரோதயம் இதிலே போன்ற பாடல்கள் தமிழ்நாடெங்கும் ஒலித்தன. சமமான புகழ் பெற்றிருந்த பாகவதர் பாடலுக்காகவும், அழகிய தோற்றத்துக்காவும் ரசிக்கப்பட, நடிப்புக்கவும், கம்பீரமான குரலுக்காகவும், பிருகாக்களோடு பாடும் நயத்துக்காகவும் ரசிக்கப்பட்டார் சின்னப்பா.

"ஆரம்ப காலத்தில் சினிமாப் படங்கள் ஏகப்பட்ட பாட்டுக்களைக் கொண்டதாக இருக்கும். 50 பாட்டுக்கள், 60 பாட்டுக்கள் என்று ஹீரோ, ஹீரோயின், காமெடியன்கள் பாடுவார்கள். இதை மாற்றி, நல்ல கதைகளை எடுத்துக் கொண்டு அருமையான வசனமெழுதி, அவற்றைப் பேச வைத்து, படத்துறையில் வசனத்துக்குப் பெருமை சேர்த்த ஆரம்ப கால எழுத்தாளர்கள் இளங்கோவனும், டி.வி. சாரியும்தான். அவர்கள் இருவர் படங்களிலும் நடித்து வசனத்தைச் சுத்தமாகப் பேசி மக்களின் கவனத்தைப் பாட்டிலிருந்து சற்றுத் திருப்பி விட்டவர் பி.யூ.சின்னப்பாதான்" என்கிறார் முக்தா சீனிவாசன் தனது இணையற்ற சாதனையாளர்கள் நூலில். 1942ல் பிருத்விராஜ் படம் வெளியானது. அதில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த ஏ.சகுந்தலாவையே தனது இல்வாழ்க்கைத் துணையாகவும் ஏற்றுக் கொண்டார் சின்னப்பா. மனோன்மணி படத்தைத் தொடர்ந்து 'குபேர குசேலா' வெளியானது. அதில் பாபநாசம் சிவன் குசேலராகவும், சின்னப்பா குபேரனாகவும் நடித்திருந்தனர். அதில் இடம் பெற்றிருந்த நடையலங்காரம் கண்டேன்..., செல்வமே சுக ஜீவாதாரம் போன்ற பாடல்கள் ரசிகர்களால் போற்றப் பட்டன.

சின்னப்பாவின் மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுவது ஜகதலப்பிரதாபன் படம். இப்படத்தில் சின்னப்பாவின் முழுத் திறமையும் வெளிப்பட்டது. ஒரே பாடலில் பாட்டு, வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல் வாசிப்பவர் என ஐந்து சின்னப்பாக்கள் தோன்றி மக்களை அதிசயிக்க வைத்தனர். படத்தின் மற்றுமொரு சிறப்பு, சின்னப்பா பாடிய 'நமக்கினி பயமேது' பாடல். அவரது முழுத்திறமையையும் வெளிப்படுத்திய அப்பாடல், இன்றளவும் மூத்தவர்களால் கொண்டாடப்படும் ஒன்று. தொடர்ந்து ஹரிச்சந்திரா, மகாமாயா, துளசி ஜலந்தர், கிருஷ்ண பக்தி போன்ற பல படங்களில் நடித்தார். அடுத்து மானகிரி லேனா செட்டியாரின் தயாரிப்பில் வெளியான 'கிருஷ்ண பக்தி' அற்புதமான கதையமைப்பும், பாடல்களையும் கொண்டிருந்தது. சாரசம், எல்லோரும் நல்லவரே போன்ற பாடலகள் பிரபலமாயின. பின்னர் தாத்தா-அப்பா-மகன் (மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன்) என மூன்று வேடங்களில் சின்னப்பா நடித்த மங்கையர்க்கரசி படம் அக்காலத்து சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றானது. தியாகராஜரின் கீர்த்தனையான 'நாத தனுமனிஷம்' பாடலை அடியொற்றி 'காதல் கனிரசமே...' என்ற பாடலைப் பாடி அசத்தியிருந்தார் அவர். அதுபோல அப்படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பாடலான 'பார்த்தால் பசி தீரும்' பாடலும் அக்கால வெற்றிப் பாடல்களுள் ஒன்று. "கர்நாடக இசைச் சார்புடைய திரைப்பாடல்களை, இசையின் இலக்கணத்திற்குக் குந்தகம் இல்லாமல் பாடிய சின்னப்பா, பக்தி, சிருங்காரம், சோகம், சாந்தம் என்று பலவிதமான ரசங்களை வெளிப்படுத்தினார்" என்கிறார் பல்துறை வித்தகர் வாமனன் தனது 'திரை இசை அலைகள்' என்ற நூலில்.

சின்னப்பாவுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதனால் அவ்வப்போது படப்பிடிப்பிலும் குடும்ப வாழ்விலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அதிக முன்கோபம் கொண்டவராகவும் அவர் இருந்தார். அதுவே அவரது வாழ்க்கைச் சிக்கல்கள் பலவற்றிற்குக் காரணமாயிற்று. 1951ம் ஆண்டில் டி.ஆர்.ராஜகுமாரியுடன் இணைந்து 'வன சுந்தரி' படத்தில் நடித்தார். அதே ஆண்டில் சுதர்ஸன் என்ற படத்திலும் நடித்தார். கண்ணீரை வரவழைக்கும்படி உருக்கமாக அதில் அவர் நடித்திருந்தார். அதில் அவர் பாடியிருந்த தாமோதரா, உன்னடியில் அன்பு வைத்தேன் போன்ற பாடல்கள் உள்ளத்தை உருக்குவன. 'என்ன செய்தாய் அப்பா...' பாடலை பக்தி மேலிட்டு மிகவும் மனம் உருகிப் பாடியிருந்தார் அவர். அதுவே அவரது இறுதிப் படம். செப்டம்பர் 23 அன்று புதுக்கோட்டையின் பிரபல பிரகதாம்பாள் திரையரங்கத்துக்கு நண்பர்களுடன் 'மணமகள்' படம் பார்க்கச் சென்றார் சின்னப்பா. படம் முடிந்து வந்தவர் சென்னைக்குப் புறப்பட ஆயத்தமானார். திடீரென மயக்கம் வருவதாகச் சொன்னவர் ரத்த வாந்தி எடுத்தார். மயக்கமுற்றுக் கீழே விழுந்தார். விழுந்தவர் உயிருடன் திரும்ப எழவில்லை. மர்மமான முறையில் மரணமடைந்த அவருக்கு அப்போது வயது 35. வெற்றிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்த பி.யூ. சின்னப்பாவின் திடீர் மரணம் ரசிகர்களைக் கலங்கடித்தது. அவரது மரணத்துக்குப் பின் வெளியான 'சுதர்ஸன்' திரைப்படம் பார்த்தவர்களைச் சோகக் கடலில் ஆழ்த்தியது.

"மாட்சிமை தாங்கிய எமது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் யாரும் வீடு, இடம் விற்பனை செய்வதாக இருந்தால் சமஸ்தானத்தின் முன் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும். குறிப்பாக, நடிகர் பி.யூ. சின்னப்பாவிற்கு வீடு, நிலம், மனைகளை விற்பனை செய்யவே கூடாது. இது அரச உத்தரவு" என்று அறிவித்திருந்தார் அக்கால புதுக்கோட்டை சமஸ்தான மன்னர். அப்படி வாழ்ந்து பொருளீட்டினார் சின்னப்பா. ஆனால் அவரது மறைவுக்குப் பின் அவரது கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்களை பலர் அபகரித்துக் கொண்டனர். அவரது குடும்பம் வறுமையில் வாடியது. சின்னப்பாவின் சகோதரியும், மனைவியும் ஆதரிப்பாரின்றித் தவிக்கும் அவல நிலை நேரிட்டது. சின்னப்பாவின் மகன் பி.யூ.சி. ராஜா பகதூர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்தார். அவரும் மாரடைப்பால் இளவயதிலேயே காலமானார்.

இருபத்தாறே படங்களில் நடித்து நூறு படங்களில் நடித்த தாக்கத்தை ஏற்படுத்திய 'தவ நடிக பூபதி' பி.யூ.சின்னப்பாவின் வாழ்க்கை, ஒரு நாடகம் போலவே தொடங்கி திடீரென முற்றுப்பெற்று விட்டது. என்றாலும் தமிழ் திரையுலகில் சாதனைகள் பல படைத்த முக்கியமான முன்னோடிகளுள் சின்னப்பா முக்கியமானவர்.

(தகவல் உதவி: 'தவ நடிக பூபதி பி.யூ.சின்னப்பா', காவ்யா சண்முகசுந்தரம்)

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline