Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
எதையோ பேசினார்
- டாக்டர் மு. வரதராசன்|டிசம்பர் 2014|
Share:
வேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். 'இன்று சமய உலகிலேயே ஒரு தெளிவை ஏற்படுத்திவிட முடியும்' என்ற நம்பிக்கையோடு தெருவில் நடந்தேன். என் பேச்சைக் கேட்க நல்ல கூட்டம் வந்திருக்கும் என்றும் தற்பெருமையாக எண்ணிக் கொண்டே பஸ் நிலையத்தை அடைந்தேன்.

"உனக்கு வாழ்க்கைப்பட்டு" என்று தொடங்கி விம்மிய குரலைக் கேட்டுத் திரும்பினேன். குழிந்த கன்னங்களையும் அழுக்கேறிய ஆடையையும் கண்டேன். பளபள என்று மின்னும் கற்களோ உலோகமோ காதிலும் இல்லை; கழுத்திலும் இல்லை, கையிலும் இல்லை. அந்தப் பெண்ணுருவைப் பார்த்ததும் பார்க்காததுமாய் நின்றிருந்த ஒருவர் காக்கி உடை உடுத்திருந்தார். அவருடைய கண்களிலும் வறுமை இருந்தது; பேச்சிலும் அந்த வறுமை இருந்தது.

பேச்சில் வறுமை என்றால் குறைந்த அளவான பேச்சு என்று எண்ண வேண்டா. வறுமையால் தாழ்வுற்றுப் பிறரையும் தாழ்வுறச் செய்யும் போக்கு அந்தப் பேச்சில் இருந்தது; அநாகரிகம் அந்தப் பேச்சில் இருந்தது; ஒருவகைப் போக்கிரித்தன்மை அந்தப் பேச்சில் இருந்தது; இவை எல்லாம் வறுமையின் விளைவுகள் அல்லவா? இப்படிப்பட்ட வறுமை அவருடைய பேச்சில் இருந்தது.

ஐந்து வயதுள்ள பையன் அந்தத் தாயின் முந்தானையைப் பற்றிக்கொண்டே நின்றான்; அவனுடைய பார்வை தாயின் முகத்துக்கும் தந்தையின் முகத்துக்கும் தாவிப் பறந்து கொண்டிருந்தது. தாய்க்கும் தந்தைக்கும் இடையே மூன்று வயது உள்ள பெண் குழந்தை இங்கும் அங்கும் திரும்பிக் கொண்டிருந்தது.

"இங்கே யார் உன்னை வரச் சொன்னது?"

"எனக்கு வருவதற்கு வழி தெரியும்."

"உன் துன்பம் உனக்கு. என் தொல்லை எனக்கு. நான் நூறு நூறாகச் சம்பாதிக்கிறேனா? நானே வேலைக்குக் காப்பி இல்லாமல், காப்பிக்குக் காசு இல்லாமல் அலைகிறேன்."

"என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?"

"இங்கெல்லாம் வரக்கூடாது வாய்திறக்கவும் கூடாது" - இந்த வாக்கியங்களே நான் அவருடைய பேச்சிலிருந்து நாகரிகமாகப் பொறுக்கி எடுக்கக்கூடிய வாக்கியங்கள்.

இவற்றைத் தொலைவிலிருந்து கேட்டபோதே என் மனம் இளகிவிட்டது. கசிந்து உருகத் தொடங்கிவிட்டது.

இவர்களின் பேச்சைக் கேட்டு நின்றால், மானம் என்ற ஒன்று இவர்களின் நெஞ்சைப் பிளக்குமே என்று அஞ்சி அப்பால் நகர்ந்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தேன். அவர்கள் இருந்த இடத்தை எட்டிப் பார்த்தேன். இருவரும் பேசியது கேட்கவில்லை. கை நீட்டி நீட்டி அசைத்த அசைவிலிருந்து பேச்சில் வேகம் மிகுந்துவிட்டதோ என்று எண்ணினேன்.

பஸ் புறப்படுவதற்கான வீளை ஊதப்பட்டது. அதைக் கேட்டதும், அந்த ஆள் அங்கிருந்து மடமட என்று நடந்து வரத் தொடங்கினார். தலை மட்டும் குனிந்தபடியே நடந்து வந்தார்.

"அப்பா அப்பா" என்ற குரல் என் காதுவரை எட்டியது. பையனோ பெண்ணோ என்று உற்றுக் கேட்டேன். பையன் சிறிது தூரம் பின்தொடர்ந்து வந்து திரும்பிவிட்டான். தாயை நெருங்கி முந்தானையைப் பிடிக்க முயன்றான்; ஆனால் என்ன காரணத்தாலோ அந்தத் தாய் அவனுடைய கன்னத்தில் இடித்தாள்; தலையைத் தட்டினாள். பையன் அழுதுகொண்டே நின்றான்.

அந்த ஆளோ பஸ்ஸை நெருங்கி வந்துவிட்டார். அந்தச் சிறு பெண் குறுகுறு என்று தொடர்ந்து ஓடி வந்துகொண்டே இருந்தாள். "போ, வராதே. அம்மா கிட்டே போ, அடிப்பேன். போ" என்றார் அவர். அந்த இளம்பெண்ணோ, "அப்பா காலணா... அப்பா, காலணா..." என்று விடாமல் கேட்டுக் கெஞ்சினாள். அவர் தயங்காமல் பஸ்ஸின் முன்புறக் கதவைத் திறந்தபோதுதான், நான் ஏறிய வண்டியின் டிரைவரே அவர் என்பதை அறிந்தேன்.

சிறுமி - மூன்று வயதுள்ள குழந்தை - இளங்கைகளை நீட்டிக் கேட்டுக்கொண்டே நின்றாள். பஸ் புறப்படுவதற்கு முன்னே அவளுடைய கையில் ஒரு காலணா விழுந்தது. அதைப் பெற்றுக் கொண்டதும் அவள் துள்ளித் துள்ளி அசைந்து ஓடுவதைக் கண்டேன்.

பஸ் புறப்பட்டது. இந்த இளங்குழந்தையையும் அந்தத் தாயின் கை தாக்குமோ என்று அஞ்சினேன். டிரைவராக முன்னே இருந்த ஆளையும் பார்த்தேன். ஆனால் என் மனம் மட்டும் கந்தல் பாவாடையோடு ஓடிய அந்தப் பெண்ணையும் மறக்கவில்லை; தாயின் கையினால் தட்டும் இடிப்பும் பெற்று அவளுடைய முகத்தையே பார்த்து அழுத அந்தப் பையனையும் மறக்கவில்லை.

என் பின்புறத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர், "மூன்று நான்கு வயதுள்ள குழந்தைகள் பஸ் நிலையத்துக்கு வந்து காலணா கேட்டுப் பிச்சை எடுக்கலாமா? மற்ற நாட்டில் இப்படி நடக்குமா?" என்று பக்கத்தில் உள்ளவரிடம் சொன்னார்.

இதைக் கேட்டவர், "ரயிலிலும் இதே தொந்தரவு. ஐந்தாறு வயதுப் பையன்கள் எல்லாம் பாட்டுப் பாடிக் காசு கேட்கிறார்கள்" என்றார்.

"சின்ன வயசிலேயே பீடி பிடிக்கக் கற்றுக் கொண்டார்கள்; அதற்குக் காசு வேண்டாவா?" என்றார் மற்றொருவர்.

"பீடிக்குக் காசு வேண்டுமானால் மூட்டை தூக்கிக் கூலி வாங்குவதுதானே? அதற்குப் பதில் பிச்சை எடுக்கலாமா?" என்றார் பருமனாக இருந்த இன்னொருவர்.
"சின்னப் பையன்களை மூட்டை தூக்க விடலாமா? அதைக் கண்ணால் பார்க்கலாமா? அப்படி ரஷ்யாவில் விடுவார்களா?" என்றார் கல்லூரி மாணவர் ஒருவர்.

இந்தச் சொற்கள் டிரைவர் காதில் விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பஸ் ஒலி அதற்கு இடம் தருமா?

அந்தப் பெண்குழந்தை பிச்சை எடுப்பதாக எண்ணிவிட்டார்களே என்று வருந்தினேன். யாரை நோவது? வீட்டில் கண்டு கொஞ்சி மகிழாமல், வழியில் கண்டு கெஞ்சி அழவைத்த தந்தையை நோவதா? மானத்தோடு வீட்டில் அடங்கி மடியாமல் கணவனைத் தேடி வெளியே வந்து போராடிய தாயை நோவதா? மனம் வரவில்லை.

அந்தப் பையனையும் நினைந்தேன். ரயிலில் பாடுவது, பீடி பிடித்துத் திரிவது, மூட்டை தூக்குவது என்றெல்லாம் உடன் இருந்தவர்கள் சொன்னபோது, அந்தப் பையனுடைய எதிர்காலத்தைச் சோதிட முறையாகக் கூறுவதுபோல் தோன்றியது.

அந்தத் தாய் டிரைவருடைய மனைவிதானா, மனைவியானால் அவரைத் தேடி வரவேண்டிய காரணம் இல்லையே! ஒருவேளை வைப்பாட்டியோ? வைப்பாட்டியானால் முதலில் இருந்த அன்பு பிறகு குறைந்த காரணம் என்னவோ என்று பலவாறு எண்ணலானேன். அவர் வேறு இடத்தில் புது வைப்புத் தேடி அன்பு மாறிவிட்டாரோ, அல்லது அவளது ஒழுக்கத்தில் ஏதேனும் குறை இருக்குமோ, திருமணம் செய்த தொடக்கத்திலேயே அன்பு இருந்திருக்காதோ என்றும் பலவாறு எண்ணிக் கலங்கினேன்.

தொடக்கத்தில் அன்பு இல்லாமல் திருமணம் செய்தும் படிப்படியாக அன்பு வளரவில்லையா? தொடக்கத்தில் அன்பு நிறைந்திருந்தும் பிறகு வாழ்க்கை கெடவில்லையா? செல்வர்களின் வீட்டில் அன்பு வளர்வதற்குப் பட்டும் பொன்னும் காரணமாக இருப்பதுபோல், ஏழைகளின் வீட்டில் அன்பு வளர்வதற்குக் காரணம் ஒன்றும் இல்லையா? கந்தல் உடுத்து அழுக்குப் படிந்திருந்தாலும் அழகும் கவர்ச்சியும் குன்றாத அந்த இரண்டு குழந்தைகளால் அன்பு வளர முடியாதா? இந்தக் கேள்விகளும் என் உள்ளத்தில் எழுந்தெழுந்து கலக்கின.

இந்தக் கலக்கத்திற்கு இடையே பஸ்ஸை விட்டு இறங்கி அந்தச் சங்கத்திற்குச் சென்று சேர்ந்தேன். கலக்கத்திற்கு இடையில்தான் மேடை ஏறிப் பேசினேன். நினைத்து வந்ததுபோல் அவ்வளவு தெளிவாகப் பேசமுடியவில்லை. ஆனால் பேச்சின் முடிவில் தெளிவும் இருந்தது; துணிவும் இருந்தது.

"உலகத்தில் உள்ளவை எல்லாம் என் பரிணாமம் என்று உணர்பவனே ஞானி. உலகத்தில் உள்ள குறைகளை அவரவர்களின் தலைமேல் சுமத்திவிட்டு, தான் தூயவனாக எண்ணுகிறவன் நாத்திகன். மற்றவர்களின் குறைகளை எல்லாம் தன்மேல் சுமத்தி எண்ணி, அவற்றைத் திருத்தும் பொறுப்பும் தானே மேற்கொள்கின்றவன் ஆத்திகன். அன்பற்ற கணவன், அன்பற்ற மனைவி, அறிவற்ற தந்தை, அறிவற்ற தாய், திக்கற்ற பையன், திக்கற்ற பெண், பொறுப்பற்ற குடும்பம், சமுதாயம் என்னும் இந்தக் கொடுமைகள் இல்லாத நல்ல நாளை எதிர்பார்த்துத் தொண்டு செய்கிறவனே வீரன். அதற்கு ஏற்றபடி எண்ணக் கற்றுக் கொள்கிறவனே அறிஞன். அந்த நாள் வர நெடுங்காலம் செல்லலாம். ஆனால் எண்ணுவதற்கு நெடுங்காலம் வேண்டியதில்லை. இன்றே எண்ண முடியும் அல்லவா? இப்போதே எண்ணவேண்டும் அல்லவா? எண்ணுவதற்கு ஒரு துணிவு - வீரம் - வேண்டும். அந்தத் துணிவு உடைய வீரன்தான் ஞானி. அவன் என்ன எண்ண வேண்டும்? அன்பற்ற, அறிவற்ற, திக்கற்ற, பொறுப்பற்ற நிலைகளுக்கெல்லாம் காரணம் சமுதாயத்தில் உள்ள பொருள்வேட்கைதான் என்று எண்ணவேண்டும். அங்கங்கே காண்கின்ற குறைகளுக்கெல்லாம் அவரவர்களின் மேல் குறை இல்லை என்று எண்ணவேண்டும். குறையுடைய சமூக அரசியல் அமைப்பே காரணம் என்று எண்ணவேண்டும். பொருள்வேட்கையற்ற சமுதாயத்தை அமைப்பதே கடமை என்று எண்ணவேண்டும். முரடர்களைக் கண்டாலும், ஒழுக்கம் கெட்டவர்களைக் கண்டாலும் அன்பற்றவர்களைக் கண்டாலும் அறிவற்றவர்களைக் கண்டாலும் திக்கற்றவர்களைக் கண்டாலும் எவன் இப்படி எண்ணுகிறானோ, அவன்தான் மெய்யுணர்வு பெற்றவன். அவன்தான் உண்மை உணர்ந்த ஞானி. மற்றவர்கள் எல்லோரும் திண்ணை வேதாந்தம் பேசுகிறவர்களே" என்று பேசி முடித்தேன்.

தலைவர் மோதிரத்தையும் சரிகை மேலாடையையும் மெல்ல ஒழுங்குபடுத்திக் கொண்டார். ஒரு கனைப்புக் கனைத்தார். முடிவுரை சொல்லத் தொடங்கினார். அப்போது அவருடைய உறவினர் ஒருவர் அவசரமாக அவரைத் தேடிக்கொண்டு வந்தார். தலைவருடைய தமக்கை மகள் திடீரென்று ஆபத்தான நிலை அடைந்து மருத்துவ நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டதாகச் செய்தி வந்தது. தலைவர் விரைந்து கூட்டத்தை முடித்தார். கவலையோடு சுருக்கமாக, "சொற்பொழிவாளர் எடுத்த பொருளை விட்டுவிட்டு எதை எதையோ பேசினார்" என்று ஒரு வாக்கியம் குத்தலாகச் சொல்லி முடித்தார்.

கூட்டம் முடிந்து நான் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, வழியில் ஒரு தெருவின் மூலையில் சிறு கூட்டம் இருந்தது. நின்றேன். காரணம் தெரிந்துகொள்ள விரும்பினேன். யாரோ ஒருத்தி நஞ்சு குடித்துக் குற்றுயிராய் மருத்துவ நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகச் சொன்னார்கள். அங்கிருந்து நடக்கத் தொடங்கியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர், "ஆமாம், அந்த டிரைவர்க்கு இன்னும் யாரும் தெரிவிக்கவில்லையா?" என்று கேட்டார். "அவனைப் போலீசார் விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்களாம்" என்றார் மற்றொருவர்.

"அவன் பாவி. அந்தப் பெண்மேல் குற்றம் சொன்னால் கண் அவிந்துபோகும். கணவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல் இப்படிச் செய்து கொண்டிருப்பாள். அவளுடைய தாய்மாமன் ஒருவர் இருக்கிறார்; நல்ல பணக்காரர், படித்தவர், வேதாந்தி" என ஒருவர் சொல்லிக்கொண்டே நடந்தார்.

டாக்டர் மு. வரதராசன்
Share: 




© Copyright 2020 Tamilonline