Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
தேவைகள்
விஜயா டீச்சர்
வீட்டுக்கு வந்த இசைக்குழு
- லக்ஷ்மி சங்கர்|நவம்பர் 2014|
Share:
மாதவனும் நானும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்தோம். அப்பொழுதே அவன் ஓர் இசைக்குழு வைத்திருந்தான். கல்லூரி விழாக்களில் பாடுவான். இருவரும் கம்ப்யூடர் சயன்ஸ் எடுத்திருந்ததால் வகுப்பில் பார்க்கும்பொழுது ஓரிரு வார்த்தைகள் பேசும்வரைதான் எங்கள் நட்பு.

நான் கல்கத்தாவிற்கு நிர்வாகம் படிக்கப்போய் அதன் பின்னர் அமெரிக்கா வந்து சேர்ந்தேன். வாஷிங்டனில் முதலில் வேலையாயிருந்தேன். போன வருடம் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்தேன்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் பார்க்கிங் லாட்டில் மாதவனைப் பார்த்தேன். "ஹலோ" சொன்னேன். அவனுக்கும் என்னை அடையாளம் தெரிந்தது. அவனும் நான் வேலை பார்க்கும் கம்பெனியில்தான் வேலையாயிருந்தான். அவர்கள் வீட்டிற்குக் கூப்பிட்டான். நானும் மனைவியும் போனோம். அதன் பின்னர் அவர்கள் குடும்பம் எங்கள் வீட்டுக்கு வந்தது.

மாதவன், "சங்கீதத்தில் ஆர்வம் உள்ள சிலரும் நானும் சேர்ந்து ஓர் இசைக்குழு வைத்திருக்கிறோம். இந்தியாவிலிருந்து இசைக் கலைஞர்களை வரவழைத்து மாதமொரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். வெள்ளி, சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்களில்தான் கச்சேரிகள் இருக்கும். கலைஞர்கள் யார் வீட்டிலாவது தங்கிக்கொள்வார்கள். அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ஏர்போர்ட்டிலிருந்து அழைத்து வந்து, கொண்டுபோய் விடவேண்டும். கச்சேரிக்கும் அழைத்துப்போய், அழைத்து வரவேண்டும். நானொருவனே செய்வதில்லை. எங்கள் குரூப்பில் இருப்பவர்கள் முறை வைத்துக்கொண்டு ஹோஸ்ட் பண்ணுவோம். என் மனைவி ராதாவுக்கும் இதில் ஈடுபாடு அதிகம். அவள் இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவள். வேலைக்குப் போகவில்லை. இங்கே பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறாள். வார இறுதிகளில் அவள் படு பிஸி" என்றான்.

எனக்கோ என் மனைவிக்கோ பாடத் தெரியாது. நாங்கள் வீக்கெண்டுகளில் பெண், பிள்ளையை ஸாக்கர், நடனம், தமிழ் வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது, பார்ட்டிக்குப் போவது, ஸ்கூல் ப்ராஜெக்ட்டுக்குச் சாமான் வாங்குவது என்று கழித்தோம். மாதவன் குடும்பத்துடன் தொடர்பும் விட்டுப்போனது.

திடீரென்று ஒருநாள் மாதவன் என்னைத் தேடி வந்தான். "ராதாவுக்குப் போன வாரம் ஒரு கார் ஆக்ஸிடெண்ட். வலதுகால் எலும்பு முறிவு. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த வாரம் கச்சேரிக்கு ஒரு குரூப் இங்க வராங்க. ஹோஸ்ட் பண்ணவேண்டியது என்னோட முறை. வீட்டு நிலமையில என்னால முடியாது. என் மியூஸிக் குரூப்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. அவங்களாலயும் முடியல. கச்சேரியக் கேன்சல் பண்ணவும் முடியாது. நிறய விளம்பரம் பண்ணி டிக்கெட் வித்தாச்சு. ஒங்க வீட்ல தங்க வெச்சுக்க முடியுமா? நம்மூர்ல வெள்ளிக்கிழம சாயந்திரம் மட்டுந்தான் கச்சேரி. சனிக்கிழம கார்த்தாலயே அவங்க கெளம்பி சிகாகோ போகணும். அங்க சாயந்திரம் கச்சேரி. அவங்க நியூயார்க்ல வர ஞாயிறு சாயந்திரம் கச்சேரிய முடிச்சுட்டுத் திங்கக்கிழம காலம்பற நம்மூருக்கு வருவாங்க" என்றான்.

எனக்குப் பாவமாக இருந்தது. "சரி. நான் பாத்துக்கறேன். கவலய விடு. பத்மினியும் நானும் ராதாவ வந்து பாக்கறோம்" என்றேன்.

"நான் வீட்லேர்ந்துதான் இப்ப வேல பண்றேன். ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குனு வந்தேன். முடிச்சுட்டுப் போகணும்" என்றவன் வேகமாகப் போய்விட்டான். சாயந்திரம் வீட்டுக்கு வந்து பத்மினியிடம் விஷயத்தைச் சொன்னேன். உச்சுக் கொட்டியவள் அவசர அவசரமாகச் சிலவற்றைச் சமைத்தாள். மாதவன் வீட்டிற்குக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தோம். அவன் சங்கீத ட்ரூப் பற்றிய விவரம் கொடுத்தான். பாடகி கர்நாடிக், ஹிந்துஸ்தானி, திரையிசை என்று எல்லாவற்றையும் ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருப்பவர். அவருடன் ஒரு வயலினிஸ்ட், ஒரு மிருதங்க வித்துவான் வருவதாயிருந்தார்கள்.

நானும், பத்மினியும் மாஸ்டர் பெட்ரூமில் தூங்குவோம். என் பெண்ணும் பிள்ளையும் அவரவர் பெட்ரூமில் தூங்குவார்கள். இதைத் தவிர ஒரு கெஸ்ட் பெட்ரூம் இருந்தது. அதில் இரண்டு ட்வின் பெட்கள் இருந்தன. என் பெண் கீதாவையும், பிள்ளை மணியையும் கூப்பிட்டேன். "கீதா! நீ மியூசிக் டீம் வரும்போது அம்மாகூட மாஸ்டர் பெட்ரூம்ல தூங்கு. உன் ரூம்ல பாடற லேடி தங்கிக்குவாங்க. நான் கீழ லிவிங் ரூம்ல, சோஃபா - புல் அவுட் பெட்ல தூங்கறேன். வயலினிஸ்ட், மிருதங்கிஸ்ட் ரெண்டுபேரும் கெஸ்ட் பெட்ரும்ல தூங்கட்டும்."

"ஏன்? மணி பெட்ரூம்ல அந்த அம்மா தங்கலாமே. நாந்தா எப்பவும் அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கணுமா?"

"இல்ல, ஒன் பெட்ரூம்லதான் எல்லாம் பிங்க்ல இருக்கு. அவங்க அங்கதான் தங்க பிரியப்படுவாங்க" என்று ஏதோ சொல்லிச் சமாளித்தேன்.

சொல்லப்பட்ட திங்கட்கிழமையும் வந்தது. காலையில் சீக்கிரம் எழுந்து ஏர்போர்ட்டுக்குப் போனேன். சங்கீத கோஷ்டியை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

மனைவி காஃபி கலந்து கொடுத்தாள். நாங்கள் சீக்கிரமே எழுந்து ஏர்போர்ட் போனோம். வந்தவர்கள் களைப்பாக இருக்கிறது பிரேக்ஃபாஸ்ட் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓய்வெடுக்கப் போய்விட்டார்கள். என் மனைவி வீட்டிலிருந்து வேலை பார்ப்பவள். நான் வேலைக்குப் போய்விட்டேன்.

மாதவன் மனைவி ராதா சொல்லியிருந்தாள் "பத்மினி! இந்த ஆர்ட்டிஸ்ட்கள ஹோஸ்ட் பண்றதப் பத்திக் கவலயே படாதீங்க. அவங்க எல்லாருக்குமே தெரியும் நாமல்லாம் இந்த அமெரிக்கால நாய் படாதபாடு படறது. சிரியல், சேண்ட்விச், புளியஞ்சாதம், தயிர் சாதம், கடையில வாங்கின சப்பாத்தி, உருளைக்கிழங்கு பொரியல் இதத்தான் எல்லார் வீட்லயும் அவங்களுக்குக் கொடுப்பாங்க. ஏனா எல்லாரும் வேலைக்குப் போறவங்க. விதவிதமா சமச்சுப்போட நேரம் கிடையாது. வீட்டுக்காரங்க வேலைக்குப் போய்ட்டா அவங்களே எடுத்துப் போட்டுக்கிட்டும் சாப்பிடுவாங்க. சிலபேரு டிஷ்வாஷர் லோட் பண்ணக்கூட ஹெல்ப் பண்ணுவாங்க."

முதல்நாள் பத்மினி இட்லிக்கு அரைத்துவைத்திருந்தாள். லஞ்ச் ப்ரேக் சமயம் இட்லி வார்த்து, சட்னி அரைத்துக் கொடுத்தாளாம். என்னைக் கூப்பிட்டு ஃபோனில் சொன்னாள் இட்லி பஞ்சு மாதிரி இருக்கிறது என்று அவர்கள் சொன்னதில் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

காலையில் நேரங்கழித்து வேலைக்குப் போனதால் அலுவலகத்தில் கொஞ்சநேரம் கூட இருந்து வேலை பார்த்தேன். சாயந்திரம் வீட்டிற்கு வரும்போது நேரமாகிவிட்டது. பத்மினி வடை, பாயசம் என்று தடபுடலாகச் சமைத்து வைத்திருந்தாள். சாப்பிட்டவுடன் வழக்கம்போல நான் கிச்சனை ஒழிக்க உதவி செய்தேன். பாடகி தொலைக்காட்சி பார்க்கப் போய்விட்டார். மற்ற இருவரும் வாக்கிங் கிளம்பி விட்டார்கள். பத்மினிக்கு ஒருமாதிரியாக இருந்தது.
"பத்மினி! சாப்பாடு அருமை. சிம்பிளா ஒரு சாம்பார், ஒரு பொரியல் என்று நிறுத்திக்கொண்டிருக்கலாமே? ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்?"

"இல்ல. வராதவங்க வந்திருக்காங்க. ஒருவேளையாவது நன்றாகச் சமைக்கலாமேன்னு பார்த்தேன். அவங்களுக்கு வேல செஞ்சு பழக்கம் இல்லாம இருக்கலாம். ஆனா, ஒரு வார்த்த ஹெல்ப் பண்றேன்னு கூடச் சொல்லலியே!"

"சரி. விடு. இன்னும் 4 நாள்தான்."

செவ்வாய்க்கிழமையன்று பாடகி சொன்னார் "நா இன்னிக்கிப் பகல் ஒருபொழுதுதான் சாப்பிடுவேன். பூஜ விக்ரஹமெல்லாம் எடுத்துண்டு வந்திருக்கேன். பூஜய முடிச்சுட்டு 2 மணி வாக்குல சாப்பிடறேன். பழசு எதுவும் தொடமாட்டேன்."

பத்மினி கம்ப்யூடரில் லாக் இன் பண்ணி அரைநாள் லீவு சொல்லிவிட்டுச் சமைக்கப் போகிறேன் என்றாள். நான் வேலைக்குப் போய்விட்டேன்.

சாயந்திரம் நான் வேலையிலிருந்து திரும்பியபொழுது புதிதாக ஒரு கார் வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்தது. லிவிங் ரூமில் வயலினிஸ்ட்டுடன் 4 பேர் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

"இவர் சுந்தர். என் அக்காவின் நாத்தனார் மகன். அது அவர் மனைவி காயத்திரி. நான் இந்த ஊருக்கு வரப்போவதாக என் அக்கா சொல்லியுள்ளார். பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தாராம். பாபுவும் அவர் மனைவி உமாவும் அவர்களுடைய நண்பர்கள்" என்று எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவர்கள் அருகில் காலியாகக் கிடந்த காஃபிக் கப்புகளையும் தட்டில் இருந்த பிஸ்கெட்டுகளையும் பார்த்து என் மனைவி அவர்களைக் கவனித்திருக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டேன்.

சுந்தர், "மாதவன் சார் சொன்னார் இவர் இங்க இருக்கறதா. பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார்.

ஐந்து நிமிடம் அவர்களுடன் பேசிவிட்டுப் பத்மினியைத் தேடி உள்ளே போனேன். லேப்டாப்பும் கையுமாக இருந்த அவள் "முக்கியமான இப்ளிமெண்டேஷன் போய்க் கொண்டிருக்கிறது. பேச நேரமில்லை. அரை நாள் லீவ் போட்டதுதான் போட்டோம்னு நாளைக்காகவும் சேர்த்து சாம்பார், ரசம், எக்ஸ்ட்ரா பொரியல்னு பன்ணி வெச்சிருக்கேன். மத்தியானந்தான் சாப்டாச்சு. மாவு பாக்கி இருக்கு. ஒரு எட்டரை மணிவாக்குல எறங்கி வந்து இட்லியும் சட்னியும் பண்றேன்" என்றாள்.

பாடகி அவர் அறையிலிருந்தார். மிருதங்கிஸ்ட், மணியுடன் கம்ப்யூடர் கேம் விளையாடிக்கொண்டிருந்தார்.

வந்திருந்தவர்கள் போவதாகத் தெரியவில்லை. சொன்னபடி பத்மினி இறங்கி வந்து இட்லி வார்த்துச் சட்னியும் செய்தாள். வயலினிஸ்ட் வந்திருந்தவர்களிடம் "பத்மினி மாமி அருமையாகச் சமைப்பாள். நீங்களும் இங்கேயே சாப்பிடுங்கள்" என்றார். எனக்குக் கோபமாக வந்தது. இது என் வீடு, நானல்லவா சாப்பிடக் கூப்பிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வந்தவர்களும் சாப்பிட உட்கார, இட்லியுடன் மறு நாளைக்காகச் சமைத்து வைத்திருந்த எல்லா ஐடமும் காலியாயிற்று.

பத்மினி வேலை இருக்கிறது என்று போய்விட்டாள். நான் கிச்சனை ஒழித்துவிட்டுப் படுக்கும்போது மணி பதினொன்று. உடனே அயர்ந்து தூங்கிவிட்டேன்.

நடுராத்திரி யாரோ உலுக்குவதுபோல் தோன்ற, கஷ்டப்பட்டுக் கண்ணைத் திறந்தேன். பத்மினிதான் நின்று கொண்டிருந்தாள். எனக்குத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் கள்ளக்காதலர் நினைவு வந்தது. "வேல இன்னும் முடியல. ரா முழுக்கப் பண்ணவேண்டும் போல இருக்கு. நாளைக்கு நீங்க லீவ் போட்டுட்டு மியூசிக் டீம வெளில கூட்டிண்டு போய்டுங்கோ. லஞ்ச் வெளியில் சாப்பிடுங்கோ. ராத்திரி பீட்ஸா ஆர்டர் பண்ணிக்கலாம்" என்றாள்.

புதன் காலை எழுந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்ட பிறகு விருந்தினர்களை அழைத்துக்கொண்டு வெளியில் போனேன். லஞ்ச் உடுப்பி ஹோட்டலில் சாப்பிட்டோம். சாயந்திரமாக வீடு திரும்பினால் வீட்டு வாசலில் 5, 6 கார்கள் நின்று கொண்டிருந்தன. பத்மினி என்னைத் தனியே அழைத்து "என் வேல முடிய 4 மணி ஆய்டுத்து. ஒரு காபியக் கலந்து குடிச்சுட்டு அப்பாடா என்று உட்கார்ந்திருந்தேன். ராதா டீச்சரின் ஸ்டூடண்ட்ஸ் நாங்க என்று சொல்லிக்கொண்டுச் சில குழந்தைகளும் அவர்கள் பெற்றோர்களும் வந்திருக்கிறார்கள்" என்றாள்.

குழந்தைகள் எல்லாம் பாடகியின் காலில் விழுவதும் ஆசி வாங்குவதுமாக இருந்தார்கள். ஒரு பேட்ச் போவதும் இன்னொரு பேட்ச் வருவதுமாக இருந்தது. மணி எட்டரை ஆன பின்னாலும் ஆட்கள் வருவது குறையவில்லை. எனக்கு ஹேலோவீன் ஞாபகம் வந்தது. கடைசியாக ஹெட் கௌண்ட் எடுத்தபோது மொத்தம் 25 பேர் இருந்தார்கள். எல்லோருக்குமாகப் பீட்ஸா ஆர்டர் பண்ணினேன். ஒருவழியாக அனைவரும் கிளம்பிப்போய் நாங்கள் படுத்துக் கொள்ளும்பொழுது மணி பதினொன்றரை.

வியாழக்கிழமை நான் எழுந்து வருவதற்குள் பத்மினி எழுந்துவிட்டிருந்தாள். "லஞ்ச்சுக்கு வெண்பொங்கலும் சட்னியும் இப்பவே தயார் பண்ணிவெச்சுட்டேன். நீங்க ஆஃபீஸ்ல லஞ்ச் டயம்ல, படேல் பிரதர்ஸ் போய் ராத்திரிக்குக் கொஞ்சம் சப்பாத்தியும், நாளை மத்தியானத்துக்குப் பரோட்டாவும் வாங்கிண்டு வந்துடுங்க. நா இப்பவே லாகின் பண்ணி வேலய ஆரம்பிக்கப்போறேன். சாயந்திரம் சீக்கிரமா லாக் ஆஃப் பண்ணிட்டு உருளைக்கிழங்கு தயார் பண்ணிடறேன் என்றாள்.

சாயந்திரம் நான் வீட்டிற்கு வரும்பொழுது 2,3 கார்கள் இருந்தன. பத்மினியின் நண்பிகள் 4,5 பேர் லிவிங் ரூமில் இருந்தார்கள். பத்மினி என்னைப் பார்த்தவுடன் "வேதா, அவ பொண்ணு அரங்கேற்றம் பற்றிச் சொல்வதற்காக மத்தியானம் என்னைக் கூப்பிட்டாள். அப்ப நான் மியூசிக் டீம் நம்ப வீட்ல வந்து தங்கியிருப்பதைப் பற்றிச் சொன்னேன். உடனே இவங்கெல்லாரையும் கூட்டிண்டு மியூஸிக் டீமைப் பார்க்க வந்திருக்கா" என்றாள். இவர்கள் சாப்பாட்டிற்கு இருப்பார்களா என்ன என்று யோசித்தேன். அவர்களெல்லாரும் ட்ராஃபிக் குறைய வேண்டுமென்று வெயிட் பண்ணிக் கொண்டிருந்தோம்; இப்ப சரியாயிருக்கும் என்று அரைமணி நேரத்தில் கிளம்பிப் போய்விட்டார்கள். பத்மினி உருளை மசாலா தயார் செய்தாள்; அன்று சப்பாத்தி சாப்பிட்டுவிட்டுப் பத்து மணி வாக்கில் தூங்கிவிட்டோம்.

வெள்ளிக்கிழமையன்று மியூசிக் டீம் "எங்களுக்குப் பிரேக்ஃபாஸ்ட் வேண்டாம். ஒத்திகை பார்க்க வேண்டும்; பிரஞ்ச் ஒரு மணி வாக்கில் சாப்பிடுகிறோம்" என்றார்கள். நான் 4 மணியளவில் திரும்பி வந்து அவர்களைக் கச்சேரி நடக்குமிடத்திற்கு 5 மணிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சீக்கிரம் வேலைக்குப் போய்விட்டேன். பத்மினி அவர்களுக்குப் பரோட்டாவும், தாலும் கொடுக்கப்போவதாகச் சொன்னாள்.

சொன்னபடி நான் அலுவலகத்திலிருந்து வந்து அவர்களை அழைத்துப் போனேன். பத்மினியும் குழந்தைகளும் இன்னொரு காரில் வந்தார்கள். கச்சேரி அருமையாக இருந்தது. இசைக்கமிட்டியில் இருப்பவர்கள், வாலண்டியர்ஸ், ஹோஸ்ட் செய்தவர்கள் என்று ஒரு 50 பேருக்கு இரவு விருந்துக்கு அங்கேயே ஏற்பாடாகியிருந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடித்து வீட்டிற்கு வரும்பொழுது இரவு 1 மணிக்குமேல் ஆகிவிட்டது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு அவர்களுக்கு ஃப்ளைட். வீட்டைவிட்டு 7 மணிக்கே கிளம்பவேண்டும். ஒருவழியாக எழுந்து ஏர்போர்ட் போனோம். சிகாகோவில் வெதர் சரியாக இல்லை, ஃப்ளைட்கள் தாமதமாகும் என்றார்கள். அரை மணி நேரத்திற்குள் அவை கேன்ஸலாகிவிட்டன என்று அறிவித்தார்கள்.

சிகாகோவில் இவர்களை ஹோஸ்ட் பண்ண இருந்தவரைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னேன். அவர் "ஓ! நான் உடனே போய் சனி, ஞாயிறு கச்சேரிகளைக் கேன்ஸல் பண்ண வேண்டும். அவர்கள் திங்கட்கிழமை காலை இங்கேயிருந்து மினியாபோலிஸ் போவதாக இருந்தது. நீங்கள் உங்கள் ஊரிலிருந்தே அங்கே போக ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்.

டெல்டா கௌண்டருக்கு விரைந்தேன். போலார் வோர்டெக்ஸினால் ஆயிரக்கணக்கான ஃபிளைட்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன; ஒரு வாரத்திற்கு ஒரே திண்டாட்டமாயிருக்கும் என்றார்கள். தலையைச் சுற்றியது. கீழே விழாமலிருக்கக் கௌண்டரைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டேன்.

அம்பிகா ஷங்கர்,
ஜார்ஜியா, அட்லாண்டா
More

தேவைகள்
விஜயா டீச்சர்
Share: 




© Copyright 2020 Tamilonline