Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
சொல்லாயோ, வாய் திறந்து...
இதோ ஒரு இந்தியா
அயோத்தி
- சத்தியப்பிரியன்|ஆகஸ்டு 2014||(1 Comment)
Share:
சுமந்திரனிடமிருந்து வந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு கல்யாணராமன் கண்களை மூடிக்கொண்டார். சுமந்திரனைச் சின்னஞ்சிறு சிசுவாகத் திருமணிமுத்தாறு என்று பெயரில் மட்டும் நதியைத் தாங்கி நிற்கும் சாக்கடை ஆற்றின் கரையில் அனைமேடு அருகில் கண்டெடுத்தார். முதலிரண்டு வருடங்கள் அவனை ஒரு சராசரி மகவாக மாற்ற ஏறி இறங்கிய மருத்துவ மனையின் படிக்கட்டுக்கள், அதன்மூலம் கிடைத்த மருத்துவர் தசரதனின் நட்பு, சுமந்திரனோடு வளர்ந்த அயோத்தி காப்பகம் என்று ஒரு முழுச்சக்கரம் அவர் நினைவில் சுழன்று நின்றது.

"வீட்டுக்குக் கிளம்பலீங்களா?" என அருகில் வந்து நின்ற சபரி நினைவை மாற்றினாள். சபரி பிள்ளைகளால் தூக்கி எறியப்பட்டுக் காப்பகமே கதியென கிடப்பவள்.

"கிளம்பணும்" என்றார் கல்யாணராமன்.

நேரம் காலம் பார்த்திருந்தால் இப்படி ஒரு காப்பகம் உருவாகியிருக்குமா? அலுவலக அறையை மூடிச் சாவியை சபரியிடம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார். வலப்புறம் மூன்றாவது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஊர்மிளாவின் அறை. ஊர்மிளாவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் +2 தேர்வுகள் ஆரம்பம். மொத்தக் காப்பகமும் அவள் பெறப்போகும் வெற்றிக்காகக் காத்திருக்கிறது. ஊர்மிளா பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்தில் மூன்றாவதாகத் தேர்வு பெற்றாள். திருப்பிய சேனல்களில் எல்லாம் இவளுடைய பேட்டிதான். மற்ற இரண்டு மாணவர்களின் பின்னால் அவர்களது பெற்றோர். ஊர்மிளாவுக்கு இந்த அயோத்தி காப்பகம் மொத்தமும்.

"எனக்கு எட்டு அப்பா அம்மா. நாற்பது சகோதர சகோதரிகள்" என்ற அவளது வார்த்தைகள் கேட்ட அனைவரின் கன்னங்களையும் ஈரமாக்கின. இப்படி ஒரு கடிதம் எழுதிய பின்பு சுமந்திரனிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? உடன் குகன், பரத், லக்ஷ்மணன் மூவரின் நினைப்பும் எழுந்தன. போன வருடம் வரையில் தொடர்பில் இருந்த லக்ஷ்மணன் கூட இப்பொழுது மெயில் ஐடி, மொபைல் எண் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு சுத்தமாக அயோத்தியை மறந்துவிட்டான். அன்புள்ள அப்பா எனத் தொடங்கி எழுதிவைத்த கடிதங்கள் அலுவலக ஃபைல்களில் தூங்குகின்றன.

"ஏன் இப்படி?" வீட்டினுள் நுழைந்ததும் கேள்வியை சரயு பக்கம் திருப்பிவிட்டார்.

சரயு கல்யாணராமனின் தர்மபத்தினி. அயோத்தியைச் சரிந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் முக்கியத் தூண்களில் அவளும் ஒன்று. அவள் இவ்வளவு தூரம் உறுதுணையாக இல்லாமல் போயிருந்தால் இந்தக் காப்பகம் இப்படி ஒரு நிலையை அடைந்திருக்க வாய்ப்பில்லை.

முதன்முதலாய் ரகுராமனின் தொடர்பின்மை நால்வரையும் ஊமைக் காயத்துடன் அழ வைத்தது. ரகுராமன்தான் காப்பகத்தின் மூத்த பையன். குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட சிசு. அரசு தொட்டில்களோ, இதுபோன்ற காப்பகங்களோ சிறப்பாகச் செயல்படத் துவங்காத இருபத்தைந்து வருடத்திற்கு முந்தைய காலம். வீட்டில் சொந்தப் பிள்ளைகளுடன் சரயுதான் அந்த ஆறுமாத சிசுவுக்குப் பால் கொடுத்தாள். பீ, மூத்திரம் கழுவிவிட்டாள். ஏன் நாமே ஒரு காப்பகம் தொடங்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தது.

மிக உயர்ந்த கேள்வி. கல்வியை சரயு கமாவாக்கினாள். கல்யாணராமனுடன் வங்கியில் பணி புரிந்த மேகநாதன் கமாவை ஆச்சரியக்குறி ஆக்கினான். இருவரும் ஒரு சின்ன குடிலில்தான் அயோத்தி காப்பகத்தைத் துவக்கினார்கள். இன்று பெரிய விருக்ஷமாகி பல நிராதரவுப் பறவைகளுக்கு அடைக்கலமாக உள்ளது. மூன்றாவதாக இணைந்தது நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர் கௌதமன். நான்காவதாக இணைந்தவர் மருத்துவர் தசரதன். முதல் சிசுவிற்கு ரகுராமன் என்று பெயர் வைக்கப் போய்தான் காப்பகமும் தன் பெயரை அயோத்தி என்று மாற்றிக்கொண்டது. அப்படி வளர்ந்த ரகுராமனுடன் இணைந்து இலவசப் பள்ளிகளையும் புரவலர்களையும் தேடினார்கள்.

ரகுராமன் தகவல் தொழில்நுட்பப் படிப்பில் போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்று டெல்லியில் ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் அமர்ந்தவன், பின்னர் ஒரே தாவாக தாவி அமெரிக்கா போனவன், முற்றிலும் தன் தொடர்பை அயோத்தியிலிருந்துத் துண்டித்துக் கொண்டான்.

"நாளைக்கு சுமந்திரன் வர்றான்" என்றார் கல்யாணராமன்.

"தெரியும்" என்றாள் சரயு.

"தனியா வரலை. அவனோட புது மனைவியோட வர்றான்."

"அதுவும் தெரியும். அதுக்கென்ன?"

"சுமந்திரனின் கல்யாணம் நமக்கு அறிவிக்கப்படாமல் நடந்த கல்யாணம்."

"அதனால்?"

"சரயு! என் கேள்விகளுக்கே எனக்கு விடை கிடைக்கலை. நீ மேலும் என்னைக் கேள்விக் கணைகளால் துளைக்காதே. எனக்கு பயமா இருக்கு."

"எதுக்கு பயம்?"

"ரகு, பரத், குகன் மூவரோட தொடர்பின்மைக்கே நமக்குக் காரணம் புரியல. இப்போ சுமன். அவனோட அறிவிக்கப்படாத திருமணம்."

"அதுக்கு ஏன் பயப்படணும்?"

"எனக்குச் சொல்லத் தெரியல."

"சொல்ல விரும்பலைன்னு சொல்லுங்க."

"அப்படியும் வெச்சுக்கலாம். நீதான் மூஞ்சில அறைஞ்சா மாதிரி சொல்லுவியே"

"ஏன்னு கேட்டா என்ன சொல்றது? அடையாளச் சிக்கல்னு சொல்லலாம். நாம அவங்களோட எல்லாத் தேவைகளையும் அடிப்படைத் தேவையிலிருந்து விருப்பத் தேவைகள் வரை எல்லாத்தையும் தீர்த்து வைக்கலாம். ஆனா அயோத்தி மக்கள் என்ற அடையாளத்தை அவங்கிட்டேயிருந்து நீக்க முடியுமா? மனசு என்பது வயசுக்கு ஏற்ப மாறுபடுது இல்லியா? அதிலும் பதின்பருவம் முடிந்து இருபதுகளில் முளைக்கும் மனது கண்ணாடி போன்றது. பெற்றோரின்மை, நிராகரிப்புக் குழந்தை என்பதை அத்தனை பசங்களாலயும் தாங்கிக்க முடியுமா? பணி, பதவி, காதல், கல்யாணம் எனப் பல்வேறு காலங்களில் அயோத்தியின் நினைவைச் சுமக்கலாம். ஆனா அயோத்தியின் பிரஜை என்ற பெயரைச் சுமக்க முடியாது."

தெள்ளத்தெளிவான பதில். மட்டைக்கு ரெண்டு கீத்து.

"அப்போ இந்தக் காப்பகம்?"

ஒரே கேள்விதான். சுழன்று, மூழ்கி மீண்டும் எழுந்து டால்ஃபின் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. நிறுவனர்களாகிய எங்கள் நால்வர் இல்லங்களிலும் இதே கேள்விதான் சுழன்று கொண்டிருக்குமோ?

சுமந்திரன் புத்தம்புதிய காரில் புது மனைவியுடன் வந்து இறங்கும்பொழுது 25 வருடப் பாசம் கல்யாணராமனின் கண்களை உடைத்துக்கொண்டு கண்ணீராய் இறங்கியது. "கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப்" என்ற சரயுவின் எச்சரிக்கைக்குப் பயனில்லாமல் போனது.

"உன் மனைவியின் பெயர் என்ன?" என்றாள் சரயு.

"அகல்யா" என்றான் சுமன்.

"ஐ! இன்னொரு அயோத்தி பிரஜை" என்றாள் சபரி.

"இல்லை. அவளுக்குச் சொந்தமாக அப்பா அம்மா உண்டு" சுமந்திரன் எதேச்சையாகச் சொன்னது ஏதோ ஒரு விதத்தில் எல்லோருடைய நெஞ்சத்தையும் துளைத்தது. கல்யாணராமனுக்குத் தனது மருகலும், சரயுவின் தெளிவும் எதனால் என்று ஒரு நொடிப்பொழுதில் புரிந்துபோனது. வாழ்க்கை இப்படித்தான் நொடிப்பொழுது அவிழ்தலில் மலர்ந்துவிடுகிறது. ஒரு நொடிப்பொழுதில் வாழ்க்கை புரிய பலகோடி நொடிப்பொழுதுகள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அனைவருக்கும்.

சுமன் பெட்டி பெட்டியாக விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்திருந்தான். பந்து, பொம்மை, துப்பாக்கி, வாட்ச், தொப்பி, செஸ்போர்டு என்று தனித்தனியாக ஒவ்வொரு பிள்ளைக்கும் கொடுத்துக்கொண்டே வர, அவைகளும் அவன் காலைச் சுற்றிச்சுற்றி வந்து "அண்ணா, அண்ணா" என்று அரற்றின.

மைதிலியை மார்புக்கு மேலே தூக்கிக் கொஞ்சினான்.

"என்ன அழகா சிரிக்கிறா பாரு இவ? யாருக்காவது விட்டுட்டுப் போக மனசு வருமா? இவ அம்மா விட்டுட்டுப் போயிட்டா. ஒரு டவுன் பஸ்ஸில் ஒரு வயசுக் குழந்தையா இருக்கறச்சே. பெண் சிசு புறக்கணிப்பு. எனக்கு அப்ப கோபம் வந்தது. மூணு நாளா யாருடனும் பேசலை. சரியா சாப்பிடல. மூர்க்கத்தனமா நடந்துகிட்டேன். ஒவ்வொரு முறை அயோத்தியில் புதிய பிரஜை வரப்பவும் மத்தவங்களுக்கு ஒரு அதிர்வு ஏற்படும். சாதாரண அதிர்வு இல்லை. ஆயிரம் வோல்ட் அதிர்வு" என்றான்.

சுமந்திரன் மடல் விரியத் தொடங்கி இருக்கிறான். தான், சரயு, சுமந்திரன் மூவரும் ஒரே புள்ளியில் சந்திக்கவிருப்பது கல்யாணராமனுக்குப் புலப்படத் தொடங்கியது.

சுமனின் மனைவி அகல்யா சுமனின் முதுகு தடவி ஆறுதல் சொன்னதைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது.
"இவளுக்குச் சொந்த ஊரே சென்னைதான். ரெட்ஹில்ஸில் இவ அப்பாவுக்கு கல் குவாரியும், கிரானைட் தொழிற்சாலையும் இருக்கு. பெரிய எக்ஸ்போர்ட் புள்ளி. எம்.பி.ஏ. படிக்கிறப்ப அறிமுகம் ஆச்சு. என் புறக்கணிப்பு வாழ்க்கை, வளர்ப்பு, சூழல் இவற்றை மீறிய என் இயல்பான அறிவின்மேல் காதல் கொண்டாள். அவளுடைய அபரிமிதமான செல்வம்கூட அவளை இப்படி ஒரு முடிவை எடுக்கச் சொல்லியிருக்கலாம். பெரிய செல்வந்தர்கள் எல்லாம் வில்லன்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்னைப் பொறுத்தவரையில் தவறான தகவல். அகல்யாவோட அப்பா எந்த எதிர்ப்பும் சொல்லாம சம்மதித்தார். அவசர அவசரமாய்க் கல்யாணம். முன்கூட்டியே உங்களை எல்லாம் வரவழைச்சு உங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்கலாம்னு அகல்யா சொன்னாள். எனக்குதான் ஏனோ அது பிடிக்கலை" என்றான்.

ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்வி கல்யாணராமன் வாயில் நுனிவரை வந்துவிட்டது. சரயு பார்வையால் அடக்கிவிட்டாள்.

"பிடிக்கலைங்கிறான் பாரு" என்றார் கல்யாணராமன்.

"அவன் இன்னும் தன்னை முழுசா வெளிப்படுத்தலை. அரைகுறையாப் புரிஞ்சுகிட்டு வெடிச்சுடாதீங்க" என்றாள் சரயு.

"இப்படி ஒவ்வொருத்தரா சிறகு முளைச்சு பறந்து போய்ட்டா காப்பகத்தின் எதிர்காலம் என்னாகும்?"

"உங்களுக்கு.... வேணாம். இந்தக் காப்பகம் ஆரம்பிக்கும் முன்னால் ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு முன்னால், வீதியில் வீசியெறியப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு இப்படி ஒரு காப்பகம் வரும்னோ புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் இங்கே நல்லா வரும்னோ நினைச்சிருப்பீங்களா?"

கல்யாணராமன் பதில் சொல்லவில்லை.

"எத்தனயோ நிறுவனங்கள் மாதிரி லாபம் சம்பாதிக்கவா நீங்க அயோத்தியை நடத்தறீங்க?"

"இல்லை. நாங்க நாலுபேரும் சொத்தையெல்லாம் வித்துதான் இந்தக் காப்பகத்தை ஆரம்பிச்சோம்னு உனக்குத் தெரியும்."

"அப்புறம் ஏன் இந்தத் தடுமாற்றம்? ரொம்பக் கூர்மையாக் கேட்கிறேன்னு வருத்தப்படக் கூடாது. நிஜமாகவே நிராகரிப்புக் குழந்தைகள்மீது முழு அக்கறை இருந்தா உங்களுக்கு இந்தத் தடுமாற்றம் வந்திருக்காது. ஆனா உங்களுக்குக் காப்பகக் குழந்தைகளையும் மீறி இது நான் உருவாக்கின காப்பகம் என்ற நினைப்பு இருக்கு. அதுதான் உங்களை அலைக்கழிக்குது. இரக்கமும், கருணையும் பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கணும்."

தங்கியிருந்த இரண்டு நாட்களிலும் சுமந்திரன் வாடகைக் கார் ஒன்று ஏற்பாடு செய்து பிள்ளைகளுடன் சினிமா, ஏற்காடு என்று சுற்றினான்.

அவர்கள் இருவரும் கிளம்புவதற்கு முன்னால் பெரிய அளவில் விருந்து ஏற்பாடானது. தனிச் சமையற்கூடம்; தனிப் பரிசாரகர் என தசரதன்தான் .முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டார். இந்த நால்வரின் உழைப்பினால்தான் காப்பகத்தின் ஒவ்வொரு செங்கலும் எழுப்பப்பட்டிருக்கிறது.

"ஏன் நான் உங்களையெல்லாம் கல்யாணத்திற்குக் கூப்பிடலைன்னு நீங்க கேட்கவே இல்லை" என்றான் சுமன். விருந்து முடிந்து குழந்தைகளும், தன்னார்வப் பணியாளர்களும் கலைந்து சென்றுவிட்டனர். இவர்கள் நால்வர் மட்டும்தான் எஞ்சியிருந்தனர்.

"சொல்லு" என்றார் கௌதமன்.

"எல்லா விஷயங்களையும் வார்த்தைகளால் புரியவைக்க முடியாது" என்று அவனை அகல்யா தடுத்தாள்.

"பரவாயில்லை அகல்யா. அவன் சொல்லட்டும்" என்றார் மேகநாதன்.

"ஒரு பெரிய கல்யாண வைபவத்தில் இவங்க எல்லாரும் அயோத்தியின் பிரஜைகள் என்பதை மற்றவர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பவில்லை. இது எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் சுய ஆத்மபரிசோதனை. இப்படி ஒரு காப்பகம் இல்லாம போயிருந்தா நாங்க நடுத்தெருவில்தான் வளர்ந்திருப்போம். இப்படி ஒரு நல்ல வாழ்வு அமைந்திருக்காது என்பது நிஜம். ஆனா ஊரில் நடக்கும் திருவிழா, பண்டிகைகளின் பொழுது செயலாற்றாத பணத்தின் பொழிவு எங்கள்மீது உணவுப் பொருட்களாகவும், புத்தகங்களாகவும், ஆடைகளாகவும் விழும்பொழுது மீண்டும் அதே பழைய அதிர்வே ஏற்படுகிறது. பிரபலமானவர்கள் இந்தக் காப்பகத்துக்கு வந்து ஃபோட்டோ எடுத்துக் கொள்வதும், நன்கொடை வழங்குவதும், அதை முறைப்படுத்தும் உங்கள் செயல்களிலும் தவறில்லை. ஆனா பெறும் நிலையில் உள்ள எங்களுக்கு அதே அதிர்வுதான் மீண்டும். இந்த அதிர்வுதான் உள்ளே சொல்லத் தெரியாமல் உறைந்து போயிருக்க வேண்டும். அதனால்தான் நான் யாரையும் கூப்பிடவில்லை". இதை சொல்லும்பொழுது சுமந்திரன் முழுவதும் தலை குனிந்தபடியே இருந்தான்.

சரயு அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். ஏதோ ஓர் உடைப்புப் பீறிட அவன் சரயுவின் பரிவைத் தாங்க முடியாமல் விசும்பினான். அந்தச் சங்கமம் அடங்கும் முன்னர் வாசலில் குழப்படியாக கூச்சல் ஒன்று எழுந்தது கேட்டு அனைவரும் வாசல் பக்கம் விரைந்தனர்.

சபரி வாசலில் நின்றுகொண்டு தெருவில் யாரையோ பார்த்துக் கூவிக் கொண்டிருந்தாள். அவள் கைகளில் மூன்றே மாதங்கள் ஆன பெண் சிசு. அதன் முதுகிலும் பின் மண்டையிலும் படிந்திருந்த வீதி மணலைத் தட்டிவிட்டபடி ஏசிக் கொண்டிருந்தாள்.

"என்ன சபரிம்மா?" என்று கல்யாணராமன் காரணம் கேட்டார்.

"தள்ளிப் படுத்திருக்க வேண்டியதுதானே? இல்ல மருந்து மாத்திரையை முழுங்கி கலச்சிருக்க வேண்டியதுதானே. பொட்டப் புள்ளன்னா கேவலமா? வளக்க முடியலேன்னா உள்ள வந்து முறைப்படி கொடுத்துட்டுப் போயேன். ஏன் வீதில வீசி எறிஞ்சுட்டுப் போகணும்?" சபரி விடாமல் கூவிக் கொண்டிருந்தாள்.

பிஞ்சுச் சிசு அவள் கைகளில் மயங்கிக் கிடந்தது. கடைவாயில் அம்மாவின் முலைப்பலின் கடைசித் தீற்று. சரயு சபரியிடமிருந்து சிசுவைப் பெற்றுக்கொண்டாள். முறைப்படியான பதிவிற்கு அரசு அலுவலகத்திற்கு அலைய வேண்டும். என்ன தீட்சண்யமான கண்கள். குங்குமச் சிமிழ் போன்ற சின்ன இதழ்கள். கருப்பு ரோஜா. எப்படி வீசியெறிய அந்தத் தாய்க்கு மனசு வந்தது?

ஆரவாரம் அடங்கி அனைவரும் உள்ளே வந்தனர். சுமனின் மனைவி அகல்யா சிசுவைக் கைகளில் ஏந்திக் கொண்டாள். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

"நான் சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டேனே தவிர சொல்லிக்காம போக விரும்பல. நான் கொஞ்சம் முன்னால் சொன்னதுதான் ரகு, குகன், பரத் இவங்களோட செயல்களுக்குக் காரணமா இருக்கும். ஆனா எனக்கு அப்படிப் போக இஷ்டமில்லை. நாங்க இங்க வந்ததே மைதிலியை எங்களோடக் கூட்டிட்டுப் போகத்தான். இவளுக்குத் தனியா ஒரு வீடு. கூட அண்ணன், அண்ணியா நாங்கன்னு முடிவு பண்ணினோம். ஆனா இப்படி ஒரு பச்சிளம் சிசுவைப் பார்த்த உடனே அகல்யா தன் முடிவை மாத்திக்கிட்டா."

ஒரு சின்ன இடைவெளி விட்டான். ஒரு கணப்பொழுதில் மைதிலி தவறவிட்ட அதிர்ஷ்டம் அனைவரையும் பச்சாதாபப்பட வைத்தது.

"போறப்ப மைதிலியோட இந்தச் சின்னஞ்சிறு சிசுவையும் கூட்டிட்டுப் போகலாம்னு சொன்னா" என அவன் முடித்ததும் அனைவரும் பலமாகக் கரகோஷம் எழுப்பினர்.

சரயு அகல்யாவை அனைத்துக் கொண்டாள். சரயுவின் விம்மலை அகல்யா உணர்ந்தாள்.

"புதுப் பாப்பவுக்குப் பேரு வைங்க" என்றார் தசரதன்.

"சீதையின் பெயர் எல்லாம் வச்சாச்சு" என்றாள் ஊர்மிளா.

"கௌசல்யா, சுமித்திரை எல்லாம் வெச்சாச்சு. கைகேயி, மந்தரை வேண்டாம்" என்றார் கௌதமன்.

"நான் பெயர் வைக்கட்டுமா?" என்றாள் அகல்யா.

அனைவரும் அகல்யாவைப் பார்த்தனர்.

அகல்யா அந்தச் சின்னஞ்சிறு சிசுவை உச்சி முகர்ந்து "தாரா" என அழைத்தாள்.

கல்யாணராமன் மெல்ல அங்கிருந்து அகன்றார். ஒரு நொடிப்பொழுதில் வாழ்வின் அர்த்தம் அவருக்குப் புரிந்துவிட்டது.

சத்தியப்பிரியன்
More

சொல்லாயோ, வாய் திறந்து...
இதோ ஒரு இந்தியா
Share: