Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ்
பாம்பே கண்ணன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2014||(1 Comment)
Share:
நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று கலையுலகில் நீண்ட அனுபவம் கொண்டவர் பாம்பே கண்ணன். ஒய்.ஜி. பார்த்தசாரதியின் UAA குழுவின் மூலம் தனது கலையுலக வாழ்க்கையைத் துவக்கிய கண்ணன், இதுவரை 3000 தடவைக்கு மேல் மேடையேறியிருக்கிறார். 'நாடகக்காரன்' என்ற தனது குழுவின் மூலம் நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். சென்னை மட்டுமல்லாமல் ரெய்ப்பூர், பாம்பே, அகமதாபாத், ஹைதராபாத், போபால், ஜாம்ஷெட்பூர், பெங்களூர் என்று பல இடங்களில் நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். 'இருவீடு ஒருவாசல்', 'ஷெர்லாக் ஷர்மா', 'ஒரு வினாடி பொறு' போன்ற இவரது நாடகங்களைப் புத்தகமாக அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பல நாடகப் போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டு வரும் இவர், வானொலி, தொலைக்காட்சி, நாடகம், திரைப்படம், டெலிஃபிலிம், குறும்படம், டிவிடி, ஒலிப்புத்தகம் என ஒரு ஊடகத்தையும் விடவில்லை. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த நகைச்சுவை நாடக வசனகர்த்தா என பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரது சமீபத்திய சாதனை, கல்கியின் பொன்னியின் செல்வனை ஆடியோ சிடியாகத் தயாரித்திருப்பது. 'பார்த்திபன் கனவு' ஒலிவடிவில் நனவாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தென்றலுக்காக அவரைச் சந்தித்தோம். அதிலிருந்து....

*****


கே: பொன்னியின் செல்வனிலிருந்து ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் நாடக ஆர்வத்திற்கு அடித்தளம் எது என்று சொல்லுங்களேன்!
ப: நான் படித்தது நாகப்பட்டினம் நேஷனல் ஹைஸ்கூல். பள்ளிக் காலத்திலேயே நாடகங்களில் நடித்திருக்கிறேன். வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசி நடித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. விவேகானந்தா கல்லூரியில் படிக்கச் சென்னை வந்தேன். கல்லூரி நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. விடுவேனா! கதாநாயகி வேஷம். நான், ஆர்வத்தால் அதில் நடிக்கச் சம்மதித்தேன். கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் அந்த நாடகம் நடந்தது. நல்ல வரவேற்பு. நாடகம் முடிந்ததும் பெண்கள் ஓடி வந்து கை குலுக்கினர். மாணவர்கள் தயங்கினர். காரணம், அவர்கள் என்னைப் பெண்ணாகவே நினைத்ததுதான். அவர்களுக்கு முன்பு என் 'விக்'கைக் கழற்றிக் காண்பித்த பின்தான் உண்மை புரிந்தது. அந்த நாடகத்தைப் போட்ட எதிரொலி நாராயணசாமி அடுத்து 'கிருஷ்ண விஜயம்' நாடகத்திலும் ருக்மிணி வேஷத்தில் நடிக்க அழைத்தார். கொஞ்சம் தயங்கினாலும் ஒப்புக் கொண்டேன். திடீரென ஒருநாள் அவர், "உங்கள் கண் மிகவும் அழகாக இருக்கிறது. வசன உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. நீங்களே கிருஷ்ணனாக நடித்து விடுங்கள்" என்றார். எனக்கு 45 பக்க வசனம். நாடகம் பெரிய வெற்றி. அடுத்து நிகழ்ந்தது ஒரு முக்கியமான சம்பவம்.கே: என்ன அது?
ப: அடுத்து அதே நாடகத்தைப் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாயி பாபா முன்னிலையில் அவர் பிறந்த நாளன்று போட முடிவு செய்தார் நாராயணசாமி சார். எங்களையெல்லாம் பஸ்ஸில் அழைத்துச் சென்றார். எனக்கு அப்போது பாபாமீது பக்தி எல்லாம் பெரிதாக ஏதுமில்லை. நான் அவரைக் கிண்டல் செய்ததுதான் அதிகம். அதிலும் என் அறை நண்பன் பாபா பக்தன். எப்போதும் பூஜை, பஜனை செய்வான். நண்பர்களோடு சேர்ந்து அவனைக் கிண்டல் செய்வதுதான் என் வேலையே!

பஸ்ஸில் எல்லோரும் பாபா பஜன் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்க நான், நண்பன் ரகு (ஜுனியர் பாலையா), வாசு மூவரும் கிண்டலடித்துக் கொண்டே போனோம். அந்த வயது அப்படி. புட்டபர்த்தியில் பாபா தரிசனத்திற்காக எல்லோரும் காத்திருந்தார்கள். அவர் வந்தார். ஒவ்வொருவராக அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். ரகுவோ புசுபுசுவென்றிருந்த அவர் தலையைத் தொட்டான், அது 'விக்' ஆக இருக்குமோ என்று சந்தேகம். அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் பாபா. எல்லோருக்கும் கையிலிருந்து விபூதி வரவழைத்துக் கொடுத்தார்.

"இதோ, இவர்தான் கிருஷ்ணனாக நடிக்கப் போகிறவர்" என்று என்னை பாபாவிடம் அறிமுகம் செய்து வைத்தார் நாராயணசாமி. கனிவோடு பார்த்து எனக்கும் விபூதி கொடுத்தார் பாபா.

மறுநாள் நாடகம். பாபா முன்னிலையில் நாடகம். நான் வசனம் பேசப்பேச என் தலையில் இருந்த கிரீடம் கீழிறங்கி என் கண்களை மறைக்கத் தொடங்கியது. நான் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வசனம் பேசுவேன். மீண்டும் அது கீழிறங்கும். இப்படியே இடைவேளை வரை தொடர்ந்தது. இடைவேளையில் பாபா மேடைக்கு வந்தார். "என்ன கிருஷ்ணா, இந்த கிரீடம் உனக்கு ரொம்ப பிரச்சனை பண்ணுது இல்ல?" என்றார். நான், "ஆமாம்" என்று தலையை அசைத்தேன். "இனிமே படுத்தாது" என்று சொல்லிவிட்டுக் கீழிறங்கிச் சென்றுவிட்டார். இடைவேளைக்குப் பின் நாடகம் துவங்கியது. அதன் பின் கிரீடம் நாடகம் முடியும்வரை அப்படியே இருந்தது! எனக்கு ஒரே ஆச்சரியம். இவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று அப்போதுதான் நம்ப ஆரம்பித்தேன். நாராயாண சாமி சார், "உன்னுடைய தலைக்கனம் உன் கண்களை மறைத்திருந்தது. அதைத்தான் பாபா சரி செய்திருக்கிறார்" என்று சொன்னார். எனக்கும் அது உண்மை என்றே பட்டது.

மறுநாள் காலையில் பாபா குழுவாகச் சென்றிருந்த எங்களிலிருந்து ஒரு பதினைந்து பேரை மட்டும் உள்ளே அழைத்தார். அதில் அவரைக் கிண்டல் செய்த நாங்கள் மூன்று பேரும் அடக்கம். எங்களை அமரச் சொன்ன பாபா தன்னுடைய முற்பிறவி கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.கே: அட, ஆச்சரியமாக உள்ளதே, என்ன கதை அது?
ப: பாபா, தனது முற்பிறவிக் கதையான ஷீரடி பாபாவின் கதை
யைச் சொன்னார். இது வரையில் யாருமே சொல்லாத ஒரு கதையாக, எங்குமே புத்தகத்தில் வெளியாகாததாக அது இருந்தது. சிவபெருமானின் அவதாரமான ஷீரடி பாபா தேவகிரியம்மா என்ற ஹிந்துப் பெண்ணின் வயிற்றில் பிறந்தார். அவரும் அவர் கணவனும் காட்டில் சென்று கொண்டிருக்கையில் பிறந்த குழந்தையை, நடுக்காட்டில் விட்டுவிட்டு இருவரும் சன்யாச வாழ்க்கையை மேற்கொள்ளச் சென்று விடுகின்றனர். அந்த குழந்தையை ஒரு இஸ்லாமியர் எடுத்து வளர்க்கிறார். பின்னர் சிறுவனாக பாபா ஷீரடியை அடைவது வரையிலான அந்தக் கதையை சத்ய சாயிபாபா எங்களுக்குச் சொன்னார்.

பின் எல்லோருக்கும் மோதிரம், வெள்ளி டாலர் எல்லாம் தந்தவர், எனக்கு மட்டும் நிறைய விபூதிப் பொட்டலங்களை வரவழைத்துக் கொடுத்தார். "இதைத் தண்ணீரில் கரைத்துக் கொடு உன் அப்பாவிற்கு, உடம்பு சரியாகப் போய்விடும்" என்று சொன்னார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என் அப்பா அப்போது உடல் நலமில்லாமல் இருந்தார். பாபாமீது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை வந்து விட்டது. புட்டபர்த்திக்குப் போகும்போது அவர் மீது நம்பிக்கையில்லாமல் போன நான், வரும்போது நம்பிக்கை கொண்டவனாகத் திரும்பினேன். என் நண்பர்களிடமும் பெருமையாகச் சொன்னேன். அவர்களில் சிலர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

இது நடந்து ஒரு மாதம் கழிந்த பிறகு பாபா மீண்டும் சென்னைக்கு வந்தார். பாலவிகாஸில் ஒரு நாடகம். நான் அவரைத் தரிசித்தேன். அவர் என்னிடம், "இதோ பார், நான் தான் முன்பே எனக்காக உன் நண்பர்களிடம் எல்லாம் விவாதம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேனே!. எதற்காக அதை எல்லாம் செய்கிறாய்? என்னை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நீ எதுவும் போராட வேண்டாம். அதை எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன். அவர்கள் ஏதாவது சொன்னால் சொல்லிவிட்டுப் போகிறார்கள். நீ உன் வேலையைப் பார்" என்றார். அடுத்து அவர் சொன்னது ஒரு முக்கியமான வார்த்தை, "உன் அம்மாவைப் பற்றி யாராவது தப்பாகச் சொன்னால் சண்டைக்குப் போவாயா அல்லது அவர்களைப் புறக்கணித்துவிட்டு தள்ளிப் போவாயா?" என்று கேட்டார். நானும் உண்மையை உணர்ந்தேன். இந்தச் சம்பவம் என் வாழ்வில் மறக்கவே முடியாது. அதே சமயம், நான் பாபா சொன்ன அந்தக் கதையை இங்கே குறிப்பிடுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
கே: அப்படியா, என்ன அது?
ப: அதைப் பின்னால் சொல்கிறேன்.

கே: சரி, அடுத்தடுத்து என்னென்ன நாடகங்கள் எல்லாம் போட்டீர்கள்?
ப: சிறுசிறு வேடங்களில் பல நாடகங்களில் நடித்தேன். பின் ஒய்.ஜி.பி. குழுவில் இணைந்து நடித்தேன். தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆகஸ்ட் 1975ல் நான் நடித்திருக்கிறேன். 'வாலிபம் திரும்பினால்' என்ற ஒய்.ஜி.பி.யின் நாடகம் அது. ஏ.ஆர்.எஸ்., நான் எல்லோரும் அதில் நடித்தோம். பேர் சொல்லும்படியான முதல் நாடகம் என்றால் அது மௌலியின் 'ஃப்ளைட் 172' தான். 50 தடவைக்கு மேல் அதில் நடித்திருக்கிறேன். நிறைய விதவிதமான பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். அதன் வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கையால் நினைவுப் பரிசு பெற்றது மறக்க முடியாத விஷயம். (பார்க்க: படம்) தொடர்ந்து மௌலி, ஏ.ஆர்.எஸ்., ஒய்.ஜி. மகேந்திரா, எஸ்.வி.சேகர் என எல்லோருடனும் நடித்திருக்கிறேன்.

கே:சென்னை கண்ணன், 'பாம்பே' கண்ணன் ஆனது எப்படி?
ப: மைசூருக்கும் போண்டாவிற்கும் என்ன சம்பந்தமோ அதுமாதிரிதான் இதுவும். நான் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பதவி உயர்வு கிடைத்து பம்பாய்க்குப் போனேன். அங்கும் நண்பர்கள் தொடர்பு அமைந்தது. பல நாடகங்களை மேடையேற்றினோம். அவ்வப்போது லீவில் சென்னைக்கு வருவேன். நாடகத்தில் நடிப்பேன். இங்கே நிறைய கண்ணன்கள் இருந்ததால் அடையாளத்திற்காக என்னை 'பாம்பே கண்ணன்' என்று அழைத்தனர். அது அப்படியே நிலைத்து விட்டது.

கே: பம்பாய் நாடக வாழ்க்கை எப்படி இருந்தது?
ப: மஹாராஷ்டிரர்கள் நாடகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். அர்ப்பணிப்போடு நாடகம் போடுவார்கள். நாடக நூல்களைப் பதிப்பிக்க என்றே அங்கே அமைப்புகள் இருக்கின்றன. நாங்கள் நிறைய நாடகங்களை பம்பாயில் அரங்கேற்றியிருக்கிறோம். ஜெயகாந்தனின் 'பிரம்மோபதேசம்' நாடகத்தில் நடித்தது மறக்க முடியாதது. என்னால் மறக்கவே முடியாத ரோல். மீசை, தாடி வைத்துக்கொண்டு சாஸ்திரிகளாக நடித்தேன். இந்தியா டுடேவில் அதற்கு விமர்சனம் வந்திருந்தது.

கே: டிவிடி, டெலிஃபிலிம் என கவனம் திரும்பியது எப்போது?
ப: பம்பாயில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் சென்னைக்கு வந்தேன். மேடைக்கு மட்டுமல்லாமல் டி.வி. நாடகங்களையும் எழுதி, நடித்தேன். டிவியில் ஒளிபரப்பான எஸ்.வி. சேகரின் 'டாக்ஸி டாக்ஸி', 'கலாட்டா குடும்பம்', 'சின்ன மாப்ளே, பெரிய மாப்ளே' நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதில் நான் தான் பெரிய மாப்பிள்ளை. விஜய் டி.வி.க்காக நான் செய்த 'திங்கள் மின்னல்' (திகில் கதைகள்), 'காதல் செவ்வாய்' (காதல் கதைகள்) போன்ற தொடர்கள் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. அதேசமயம் புது முயற்சிகளில் ஈடுபட விரும்பினேன். அப்படி ஆரம்பித்ததுதான் டெலிஃபிலிம்.

அமெரிக்காவில் ஆர்தர் ஹெய்லி, சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் நேரடியாக ஹோம் வீடியோவாகத் தயாரிக்கின்றனர். அது தனி மீடியா. சினிமா வேறு. அதைத்தான் நான் இங்கே கொண்டு வந்தேன். சினிமா என்பது பெரிய திரை. டி.வி. சின்னத் திரை. சினிமாவை முழுக்கச் சாராமல் தனியாக வீடியோ படங்கள், டெலிஃபிலிம்கள், டிவிடி குறுந்திரைப்படங்கள் கொண்டுவர விரும்பி அதில் முழுமூச்சாக இயங்கினேன். மேடையில் நடத்தப்படுவதுதான் நாடகம். அது 'லைவ்'. டிவியில் வருவது நாடகம் அல்ல. என் 'இரு வீடு ஒரு வாசல்' நாடகத்தை டெலிஃபிலிம் ஆக, டிவிடியில் கொண்டுவந்தேன். 90 முறைக்குமேல் மேடையேறியது அது. தொடர்ந்து கோமல் சாமிநாதனின் 'ஆட்சி மாற்றம்', சுஜாதாவின் 'மாமா விஜயம்', பாக்கியம் ராமசாமியின் 'அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்' போன்றவற்றைக் கொண்டுவந்தேன். காத்தாடி ராமமூர்த்தி அப்புசாமியாக நடித்தார். கதை வசனத்தைவிட பாக்கியம் ராமசாமி அதைச் சொல்லியிருக்கும் விதம், வர்ணனைகள், காட்சியமைப்புகள் போன்றவற்றைக் காட்சியாகக் கொண்டு வருவது ரொம்பக் கஷ்டம். அதனால் பிற்காலத்தில் அவரது கதைகள் சிலவற்றை நான் ஆடியோ புக் ஆக்கினேன். சுஜாதா டிவிடி/விசிடிக்காக எழுதிய முதல் தொடர் 'மாமா விஜயம்'. தொடர்ந்தது என் ஒலிப்புத்தக ஆவல்.கே: என்னென்ன ஒலிப்புத்தகங்களைத் தயாரித்திருக்கிறீர்கள்?
ப: 'தமிழக இசை மகான்கள்' ஒரு முக்கியமான ஒலிநூல். டிவியில் 13 வாரத் தொடராக வந்த அதைத் தயாரித்த உஷா சுப்பிரமணியனிடம் கேட்டு வாங்கி, குறுந்தகடாகக் கொண்டு வந்தேன். அது ஒரு பெரிய கடல். பிரமித்துப் போய்விட்டேன். இசையைப் பற்றி குன்னக்குடி வைத்யநாதன், மஹாராஜபுரம் சந்தானம், சுஜாதா விஜயராகவன், வேதவல்லி எனப் பலர் அதில் பேசியிருப்பார்கள். தமிழகத்தில் வாழ்ந்த இசை மகான்கள் பற்றியது. மூன்றாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பாரதியார்வரை அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை இன்னமும் பெரிதாகக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போதும் எனக்கு உண்டு. ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை பற்றிய பாடல்களை 'பூக்களின் மொழி' என்னும் தலைப்பில் குறுந்தகடாகக் கொண்டு வந்தேன். அது தவிர எழுத்தாளர் பூரம் சத்தியமுர்த்தியின் 21 கதைகளை மூன்று ஒலிப்புத்தகங்கள் ஆக்கினேன். அடுத்த எனது குறுந்தகட்டுக்கும், முன்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா என்னிடம் சொன்ன அவரது முற்பிறவிக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறது.

கே: என்ன அது?
ப: பாபாவை தரிசித்து சுமார் நாற்பது ஆண்டுகள் சென்றிருக்கும். ஒருநாள் நாடக நடிகரும் எழுத்தாளருமான வாத்யார் ராமனைப் பார்க்கப் புறப்பட்டேன். அவர் வீட்டிற்கு பைக்கில் போகும்போதே ஷீரடி சாயி பாபாவின் கதையை ஏன் ஒலிப்புத்தகமாகக் கொண்டு வரக்கூடாது என்ற எண்ணம் திடீரென எனக்குத் தோன்றியது. ராமன் சாரிடம் பேசிவிட்டுப் புறப்படும்போது அவர், "உனக்கு ஒன்று தருகிறேன்" என்று சொல்லி ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது அவர் எழுதிய புத்தகம். தலைப்பு 'ஷீரடி சாய்பாபாவின் வாழ்கைச் சரித்திரம்'. எனக்கு ஒரே ஆச்சரியம். "என்னடா இப்போதுதான் மனதில் நினைத்தோம், இவர் புத்தகம் தருகிறாரே!" என்று! அதன் பக்கங்களைப் புரட்டினேன். என் கண்களையே நம்ப முடியவில்லை! பாபா நாற்பது வருடங்களுக்கு முன்னால் எதை எங்களுக்கு மட்டும் தனியாகச் சொன்னாரோ அதே கதையை, அப்படியே அதே வார்த்தைகளில் எழுதியிருந்தார் ராமன் சார். அந்த அத்தியாயத்தின் முடிவில், "இந்தச் சம்பவங்கள் கற்பனைபோலத் தோன்றினாலும் சத்ய சாயிபாபா போன்ற மகானின் வாயிலிருந்து வந்ததால் இதை புராணக் கருத்தாகக் கொண்டு நம்பலாம்" என்று எழுதி இருந்தார். "சார்... இதுதான் சார் என் அடுத்த ஒலிப்புத்தகம்" என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன். அதை ஆடியோ புத்தகமாகக் கொண்டுவந்தேன்.

கே: அடுத்தது பொன்னியின் செல்வனா?
ப: இல்லை. 'சிவகாமியின் சபதம்'. அதுதான் நான் கல்கியின் தொடரில் முதன்முதலாகச் செய்தது. நான் ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக கல்கியின் சிவகாமியின் சபதத்தைத் தொடராக எடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளைச் செய்தேன். திடீரென அந்தத் தொலைக்காட்சியில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால் அது முடியாமல் போய்விட்டது. 12 வருடம் கழித்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இதையே ஒலிப்புத்தகம் ஆக்கினால் என்ன என்று தோன்றியது. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.

கே: ஏன்?
ப: தமிழ் சரியாகப் பேசத் தெரிந்தவர்களைக் கண்டு பிடிப்பது மிகக்கடினமாக இருந்தது. அதிலும் ல, ள, ழ, ற, ர, ன, ண, ந-வைப் புரிந்துகொண்டு பேசக் கூடியவர்களைக் கண்டறிய மிகவும் சிரமப்பட்டேன். சிலரிடம் உச்சரிப்பு நன்றாக இருந்தது. ஆனால் குரலில் உணர்ச்சி இல்லை. குரலில் பாவம் காட்ட முடிந்தவர்களுக்கு உச்சரிப்பு சரியாக வரவில்லை. இப்படியாகப் பல்வேறு தடைகளைக் கடந்துதான் அது உருவானது.

கே: பொன்னியின் செல்வன் பற்றிச் சொல்லுங்கள்...
ப: 14 வயதில் விடுமுறையில் என் அத்தை ஊருக்குச் சென்றிருந்தபோது படித்த புத்தகம் 'பொன்னியின் செல்வன்'. சோழர் காலத்துக்கே போய்விட்ட பிரமை. அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாயிற்று. என்னுடைய 'சிவகாமியின் சபதம்' குறுந்தகட்டைக் கேட்டுவிட்டு பெங்களூரைச் சேர்ந்த சி.கே. வெங்கட்ராமன் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் கேட்ட முதல் கேள்வியே, "பொன்னியின் செல்வன் எப்பப் பண்ணப் போறீங்க?" என்பதுதான். அது கல்கியே கேட்டமாதிரி இருந்தது. நான் நடைமுறைச் சிக்கல்களையும், பொருளாதாரப் பிரச்சனைகளையும் பற்றி அவரிடம் சொன்னேன். "நீங்கள் கவலையே படாமல் வேலையை ஆரம்பியுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார். அப்படித்தான் உருவெடுத்தது பொன்னியின் செல்வன். அவர் ஊக்குவிக்காமல் இருந்திருந்தால் இம்முயற்சி நிறைவேறியிருக்குமா என்பது சந்தேகமே.

கே: பொன்னியின் செல்வனில் உங்களுக்கு சவாலாக இருந்த விஷயங்கள் என்னென்ன?
ப: பல விஷயங்கள். பலர் என்னை பயமுறுத்தினர். எம்ஜிஆர் ஆரம்பித்து கைவிட்ட விஷயம், கமல் துவங்கி முடிக்காத விஷயம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆர்வத்துடனும் அதே சமயம் சற்றே அச்சத்துடனும் முயற்சியைத் துவங்கினேன். கல்கியின் கதையமைப்பே ஒருவிதத்தில் சவாலானது. கதாநாயகன், கதாநாயகியான வந்தியத் தேவன்-குந்தவையின் சந்திப்பே மூன்று முறைதான் நிகழ்கிறது. ஆனால் அவர்கள் காலத்தால் மறக்க முடியாத ஒரு அமரகாவியக் கதாபாத்திரங்களாக இருக்கின்றார்கள். அதுதான் கல்கியின் எழுத்தின் வலிமை. பொன்னியின் செல்வனில் கல்கி நிறைய புதுமைகளைச் செய்திருக்கிறார். இசைக் குறிப்புகள், ஒலிக்குறிப்புகள் என்று நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார். புயல், வெள்ளம், காற்று, குதிரையின் குளம்படிச் சத்தம், வீரர்களின் ஆரவாரம் என்று பல விஷயங்களைப் பின்னணியில் கொடுத்திருக்கிறார். ஒலிப்புத்தகத்தில் அவற்றைக் கொண்டு வருவதே சவால்தானே!

என்னுடைய "ஒலிப்புத்தகம்" அப்படியே நூலை ஏற்ற, இறக்கங்களுடன் படித்துக் காண்பிப்பதல்ல. ஓரிரு நபர்களே எல்லா பாத்திரங்களுக்கும் மாறி மாறிக் குரல் கொடுக்கும் ஒலிநூல்கள் உண்டு. அதில் ஜீவனே இருக்காது. நான் அப்படியல்ல. ஒவ்வொரு கதாபாத்திரத்தை உருவாக்கும்போதும், அதில் ஜீவனாக இருப்பது அந்த எழுத்தாளர்தான். ஒரு படைப்பில் 60 பாத்திரங்கள் இருந்தாலும், அந்த 60ம் எழுத்தாளரின் வேறு வேறு அவதாரமே! அத்தனை பாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கவேண்டும் என்றால் தனித்தனி நபர்களை வைத்து ஒலிவடிவம் தர வேண்டும். இதுதான் நான் ஏற்ற சவால்.

ஆனால், கல்கியின் கேரக்டர்களை ஒலி வடிவில் கொண்டு வருவது மிகப்பெரிய சவால். வந்தியத் தேவனை எடுத்துக் கொண்டால் அவன் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவனாக, காதல், வீரம், நட்பு, அன்பு, கோழைத்தனம், பயம், நகைச்சுவை என்று வெவ்வேறு வகையில் நடப்பவனாக இருக்கிறான். படிக்கச் சுவைதான். குரலில் படைப்பதுதான் சவால். எனது நாடக அனுபவம் இதற்குக் கைகொடுத்தது. தோழிகள் பாடுவது, ஞானசம்பந்தர் பாடல்கள், பாசுரங்கள், குரவைக் கூத்து, தனிப்பாடல்கள் என்று கல்கி நிறையப் பயன்படுத்தியிருக்கிறார். அறிஞர்களோடு உரையாடி பொருளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு இசையமைத்துப் பயன்படுத்தினோம். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய சவால், மின்வெட்டு. அது தமிழகத்தில் மின்வெட்டு உச்சத்தில் இருந்த காலம். எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு ரெகார்டிங்கிற்குப் போனால் பவர் இருக்காது. கலைஞர்கள் காத்துக் கொண்டிருப்பர். எப்போது மின்சாரம் வருமோ அப்போதுதான் ரெகார்டிங். அதுவும் எப்போது வேண்டுமானாலும் போய்விடும். கிட்டத்தட்ட 20 மாதங்கள் உழைத்து, முப்பது பாடல்கள் மற்றும் பின்னணி இசையுடன் 78 மணி நேர ஒலித்தொகுப்பாக 'பொன்னியின் செல்வன்' வெளியாகியுள்ளது ஒரு பெரிய சாதனை.கே: அதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
ப: நல்ல வரவேற்பு. சிடி அறிமுக விழாவிற்கே ஆயிரக்கணக்கில் கூட்டம் வந்திருந்தது. விழாப் பொறுப்பை பிரம்ம கான சபா தாமாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டனர். எல்லாமே நல்ல முறையில் அமைந்தது கல்கியின் ஆசிர்வாதம் என்றே நம்புகிறேன்.

கே: 'பார்த்திபன் கனவு' நிறைவேறி விட்டதா?
ப: கிட்டத்தட்ட. சில வேலைகள் மட்டுமே பாக்கி. கதையின் சஸ்பென்சைக் குலைக்காதவாறு நரசிம்ம பல்லவர், சிவனடியார் என்று இரண்டு பாத்திரங்களுக்கும் தனித்தனி நபர்களைப் போட்டிருக்கிறேன். மிக நன்றாக வந்திருக்கிறது. எனது தயாரிப்பாளரான சி.கே. வெங்கட்ராமனுடன் நான் பார்ட்னராக இணைந்து இதைத் தயாரித்து வருகிறேன். அவர் பெங்களூரில் இருக்கிறார். மிகவும் சுதந்திரமாக என்னைச் செயல்பட விட்டிருக்கிறார். அவர் போன்ற மனிதர்களைக் காண்பது அரிது.

கே: உங்களைக் கவர்ந்த நாடக ஆசிரியர்கள் யார், யார்?
ப: மௌலி ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். முத்துராமனையும் சொல்லலாம். கதை, வசனம், இயக்கம் என்ற வகையில் ஏ.ஆர்.எஸ். நல்ல இன்ஸ்பிரேஷன். அதுபோல இந்த ஆடியோ சி.டி. விஷயத்தில் என்னை ஊக்குவித்தது எழுத்தாளர் திரு. பூரம் சத்தியமூர்த்தி. அவருக்குப் பார்வை கிடையாது. அவரது சிறுகதைகளை நான் ஆடியோ புக் ஆக்கியதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம். "நான் எழுதிய கதைகளை என்னால் படிக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறேன். அதை இப்படி இசையோடு கேட்கவும் வைத்து விட்டீர்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்றார். அவர்தான், "சார், இனிமேல் எழுத்துக்கு எதிர்காலம் ஆடியோ புக்தான். புத்தகங்களைப் படிக்க நேரமில்லாதவர்கள், பார்வையற்றவர்கள், முதியவர்கள் என்று எல்லோருக்கும் இது வரப்பிரசாதம்" என்றார். இந்த ஒலிப்புத்தகம் முயற்சிகளை நான் தொடர அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: தேவன், சாண்டில்யன் படைப்புகளைக் கொண்டுவரும் எண்ணமிருக்கிறது. குறிப்பாக தேவனின் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். நான் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட ஒரு வருடம் 'நடிப்பு ரொம்ப ஈசி' என்னும் தலைப்பில் நடிப்பு வகுப்புகள் எடுத்தேன். பல படங்களில் இருந்து பல காட்சிகளைக் காண்பித்து நடிப்பின் வகைகளை, தன்மைகளை, குரல் ஏற்ற இறக்கம், உச்சரிப்பு, உடல்மொழி என்பவற்றை விரிவாக விளக்கியிருந்தேன். அதேபோன்று மீண்டும் ஆர்வமுள்ளவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும்; அதைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணமுண்டு. 'சிவகாமியின் சபத'த்தை ஒரு ஏழுமணி நேர டெலிஃபிலிம் ஆகக் கொண்டு வருவது என் எதிர்கால லட்சியம். பொன்னியின் செல்வனை அப்படியே மேடை நாடகமாக்கி, எல்லா மக்களும் காணும்படிக் கொண்டு சேர்க்க ஆசைப்படுகிறேன்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


மறக்க முடியாத அனுபவங்கள்
ஒரே ஒரு பெண் பல பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நாடகத்தை பம்பாயில் நான் இயக்கியது மறக்க முடியாத விஷயம். அது பார்ப்பவர்களுக்கு சலிப்பைத் தரலாம். அப்படிச் சலிப்பு வராமல் இருக்க நான் ஒரு உத்தியைக் கையாண்டேன். நடிப்பவரிடம், "பார்க்கிறவர்களுக்கு மேடையிலே நிற்பது ஒருவர் அல்ல, பலர் என்னும் உணர்வு உண்டாகும்படி நீங்கள் நடிக்க வேண்டும்" என்று சொல்லி அந்த உத்தியைச் சொல்லிக் கொடுத்தேன். பத்து பேர் மேடையில் இருப்பதுபோல் பார்ப்பவருக்குத் தோன்ற வேண்டும். ஒரு கேரக்டருக்கும் அடுத்த கேரக்டருக்குமான ட்ரான்ஸ்ஃபர்மேஷன், மூவெம்ண்ட்ஸ், மியூசிக் என்று அதில் நிறைய இருக்கிறது. அவரும் அதேமாதிரி நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். அதில் ஒரு கதை தாகூரினுடைய 'பிக்காரே'. தமிழில் அதற்கு பிச்சைக்காரி. நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல சுஜாதாவின் 'கொலையுதிர் காலம்' தொலைக்காட்சித் தொடரில் குமார வியாசன் பாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாதது. இன்றைக்கும் அதை வைத்து என்னை நினைவு கூர்பவர்கள் இருக்கிறார்கள். கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் வாழ்க்கையை 48 மணி நேர சி.டி.யாகத் தந்ததும் ஒரு மறக்க முடியாத விஷயம்தான்.

பாம்பே கண்ணன்

*****


ஒலிப்புத்தகங்கள்
புத்தகங்கள் காலத்தால் அழியலாம். பல பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் அவர்களது வாரிசுகளிடம் கூட இல்லை. தொலைந்து போய்விட்டதாகச் சொல்கிறார்கள். யாருக்கும் பாதுகாக்கும் அக்கறை இல்லை. அவை சி.டி. வடிவில் வரும்போது நீடித்து நிலைக்க வாய்ப்பு உண்டு. ஒலிப்புத்தகம் அச்சுப் புத்தகத்துக்குப் போட்டியல்ல. புத்தகம் படிக்க முடியாதவர்களுக்கு வரம். மாற்று வழி. "என் பேரன், பேத்திகளுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது, ஆனால் பேசினால் புரிந்து கொள்வார்கள்" என்று சொல்பவர்கள் உண்டு. அவர்களைச் சென்றடைய ஒலிப்புத்தகங்கள் நிச்சயம் உதவும். வெளிநாடுகளில் வாழும் நம் குழந்தைகள் தமிழை இழந்துவிடாமல் இருக்க, நமது கலாசாரம், பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவை பற்றி அறிய ஆடியோ புத்தகங்கள் நிச்சயம் உதவும். காதால் கேட்டாவது தமிழ் கற்க இதன்மூலம் வாய்ப்புக் கிடைக்கிறது அல்லவா? படிக்க நேரமில்லாதவர்கள் காரில் செல்லும்போது, நீண்ட விமானப் பயணத்தில் அரிய நூல்களைக் கேட்கலாம்.

பாம்பே கண்ணன்

*****


ஒலிநூல்களை வாங்க
வலையகம்: nammabooks.com, kalakendra.com.
மின்னஞ்சல் முகவரி: bombaykannan@hotmail.com
செல்பேசி எண்: 9841153973.
More

பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ்
Share: 


© Copyright 2020 Tamilonline