Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
தென்றலுக்கு கமல்ஹாசனின் பிரத்தியேகக் கவிதை ...
நினைவுகள் - தபால்காரர் காப்பாற்றினார்
- சரோஜா விஸ்வநாதன்|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeஹியூஸ்டன் விமானநிலையத்தில் ட்யூஸான் போகும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த நேரம். நான்கு வயது கொண்ட ஒரு சிறுமி. பொன்னிறக் கூந்தல், நீலநிறக் கண்கள் கொண்டவள். என் அருகில் வந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கண்கள் கலங்கி கலவரப்பட ஆரம்பித்தாள். 'ஆர் யூ லுக்கிங் ·பார் யுவர் மாம்?' என்று கேட்டதும், தலையை மேலும் கீழும் அசைத்து வெள்ளமாகக் கண்ணீர் பெருக்கினாள். ஓரிரு நிமிடத்தில் அவளுடைய அம்மா பரபரப்பாக அவளைத் தேடி வந்துவிட்டாள். அணைத்து, கண்ணீரைத் துடைத்து, சமாதானம் சொல்லி ('சொல்லாமல் தனியாக எங்கே போனாய் சனியனே' என்று திட்டாமல்!) எனக்கு நன்றி சொல்லிவிட்டு, குழந்தையை அழைத்துப் போனாள்.

அந்தக் குழந்தையின் குளமாக நீர் நிறைந்த கண்களும், பயமும் துக்கமும் சேர்ந்த முகபாவமும் என் நினைவுகளை அறுபது வருஷம் பின்னோக்கி அழைத்துச் சென்றது.

1946-ம் வருஷம் ஆகஸ்ட் மாதம். எனக்கு வயது 7. புரசைவாக்கம் சுப்ரமணிய முதலித்தெருவில் வசித்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, குட்டித் தம்பி. மாம்பலத்தில் மாமாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு அருமையாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு மறுநாள் புண்யாவசனம், தொட்டில். முதல்நாளே அம்மா எனக்கு சங்கிலி, நெக்லஸ், வளையல்கள், தோடு, தொங்கட்டான், மோதிரங்கள் (எல்லாம் அசல் தங்க நகைகள்) அணிவித்து விட்டாள். மறுநாள் காலை பாட்டி, தாத்தாவுடன் அண்ணாவையும், என்னையும் வரச்சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு, தங்கை, குட்டித் தம்பியுடன் முதல்நாள் காலை புறப்பட்டு மாம்பலம் போய்விட்டாள்.

என் பள்ளிக்கூடம் அடுத்த தெருவில். அக்கம்பக்கத்தில் வசித்து வந்த தோழிகள் பேபி, அன்னம்மா, பங்கஜத்திடம் மறுநாள் மாம்பலம் போக இருப்பது பற்றியும், மாமா பெண் கமலாவுடன் கொட்டம் அடிக்கப் போவது பற்றியும் சந்தோஷமாக (பெருமை யாக!) அளந்து கொண்டு போயிருக்கிறேன்.

பின்னால் வந்த ஒரு 20 வயதுப் பெண் மணி நான் சொன்ன விவரங்களைக் கவனித்து கேட்டுக்கொண்டு என் நகை களையும் பார்த்துவிட்டு ஒரு திட்டம் தீட்டியது எனக்குத் தெரியாது.

மாலையில் கடைசி வகுப்பு கணிதம். வாய்ப்பாடு சரியாக சொல்லாததால் 12 வாய்ப்பாடுகளையும் எழுதி முடித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பது ஆசிரியரின் தண்டனை. மணி அடித்து எல்லாக் குழந்தைகளும் ஆசிரியர் உட்படப் போய்விட்டனர். பள்ளிக்கூடம் காலியாகிவிட்டது. ரொம்ப சிரத்தையாக எழுதி முடித்துவிட்டு நான் வெளியே வரும் போது மணி ஐந்து இருக்கலாம்.

காலை என் பேச்சையும் விவரங்களையும் கேட்டுக் கொண்டிருந்த பெண் பள்ளியின் வாசலில் தயாராகக் காத்துக் கொண்டு இருந்தாள்.

''பாப்பா, நான் உனக்காக ஒருமணி நேரமாகக் காத்துக்கிட்டு இருக்கேன். நான் மாம்பலத்தில் உன் மாமா வீட்டில் வேலை செய்யறேன். உன்னையும் கமலாவையும் அழைத்துச் வரச்சொல்லி என்னை அனுப்பி இருக்கிறாங்க'' என்றாள். கமலாவையுமா? சந்தோஷம் தாங்கவில்லை. மறுநாளைக்குப் பதில் முதல்நாளே மாம்பலம் போகச் சந்தர்ப்பம் கிடைத்த ஆனந்தம். குதித்துக் கொண்டு அவளுடன் கிளம்பி விட்டேன். ஐந்து நிமிட நடைக்குப் பிறகு சந்தேகம் வர ஆரம்பித்தது.

''பாட்டி, தாத்தா காத்துக்கொண்டு இருப்பார்களே?''

''அவர்கள் மத்யானமே காரில் போய்ட் டாங்க. வீட்டில் யாரும் இல்லை. பூட்டி இருக்கிறது.''

''அண்ணா...?''

''அவன் நாளைக்குத்தான் வருவான். ஸ்கூல் உண்டு இல்லே?''

''மாம்பலத்துக்கு காரிலோ பஸ்ஸிலோ தானே போவோம்... ரொம்ப தூரம் ஆச்சே.''

''ஒரு குறுக்கு வழி இருக்குது. வழியில் கமலா பள்ளிக்கூடமும் இருக்கிறது. நேரமாயிடுச்சு. கமலாவும் காத்துக்கிட்டு இருப்பாள். சீக்கிரம் நட...''
எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் நடந்தோம் என்று தெரியாது. கால் வலியும், துக்கமும் இன்னமும் நினைவு இருக்கிறது. ஒரு பெரிய திடலில் (கண்ணுக்கு எட்டிய வரை மனித நடமாட்டமே இல்லை) ஒரு தென்னை மரத்தடியில் உட்கார வைத்து விட்டு ''இருட்ட ஆரம்பித்து விட்டது. இங்கு திருடர் பயம் அதிகம். உன் நகையெல்லாம் கழற்றி பத்திரமாக புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டு, மாம்பலம் போனதும் உன் அம்மாவிடம் தந்து விடுகிறேன்" என்று என் பதிலுக்குக் காத்திராமல் சங்கிலி, வளையல், தோடு, தொங்கட்டான், மோதிரம் எல்லாவற்றையும் கழற்றிப் புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டாள்.

அந்த திடல் ஓட்டேரி சுடுகாடு என்று பின்னால் தெரிய வந்தது. தூரத்தில் தெரிந்த ஒரு கட்டிடத்தைக் காண்பித்து "அதுதான் கமலாவின் பள்ளிக்கூடம். நான் போய் கமலாவைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். உனக்குக் கால் வலிக்கும். இங்கேயே உட்கார்ந்து கொண்டு இரு" என்றாள். போனவள் போனவள்தான். நன்றாக இருட்டிவிட்டது. பசி, தாகம், பயம், துக்கம். நேரம் ஆக ஆகக் குரலெடுத்து அழ ஆரம்பித்தேன்.

அந்தச் சமயம் ஒரு கூட்டம் சடலத்துடனும், தாரை தம்பட்டத்துடனும் வந்தது. அழுது கொண்டு இருக்கும் என்னைப் பார்த்ததும் கூட்டத்தில் சலசலப்பு. அந்த கூட்டத்தில் எங்கள் வீட்டிற்குத் தபால் போடும் தபால்காரரும் இருந்திருக்கிறார். (அந்த நாளில் தபால்காரர்களுக்கு அவர்கள் தபால் கொடுக்கும் வீட்டினர் எல்லாரையும் தெரியும்) பார்த்ததும் புரிந்து கொண்டு விட்டார். நடக்கக்கூடாத ஏதோ நடந்து இருக்கிறதென்று.

ஒரு பையனை வீட்டிற்கு அனுப்பிச் சைக்கிளை எடுத்துவரச் சொல்லி, என்னை தனக்கு முன்னால் உட்கார வைத்து வீட்டில் கொண்டு விடும்போது இரவு மணி ஒன்பதைக் கடந்துவிட்டது.

வீட்டில் ஒரே அமளி. பாட்டி கதறி அழுதுகொண்டு, தெரிந்த தெரியாத கடவுளருக்கெல்லாம் மஞ்சள் துணியில் பணம் முடிந்துவைத்துவிட, தாத்தாவும் அண்ணாவும் ஊரெல்லாம் தேட, அப்பா புகார் கொடுக்கக் காவல்நிலையத்துக்குப் போக, தெருவே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டு இருந்தது.

தபால்காரருக்கு நன்றி சொல்லி நிறையப் பணம் கொடுத்து கடவுளே வந்தது போல வணங்கி வாழ்த்தி அனுப்பினார்கள்.

மறுநாள் காலை என் அப்பா நகைக் கடைக்கு அழைத்துப் போய் புது வளையல் கள், சங்கிலி, தோடு, தொங்கட்டான் வாங்கிக் கொடுத்து மாம்பலம் அழைத்துப் போனது மறக்கமுடியாத சந்தோஷ நினைவு.

மாம்பலத்தில் அம்மாவும் மற்ற உறவினர் களும் வாசலிலேயே காத்திருந்து அணைத்து, அழுது, சிரித்தது மற்றொரு நினைவு.

சரோஜா விஸ்வநாதன்
More

தென்றலுக்கு கமல்ஹாசனின் பிரத்தியேகக் கவிதை ...
Share: 




© Copyright 2020 Tamilonline